Jump to content

மீன் கறியும் Seaspiracy யும் - தெய்வீகன்


Recommended Posts

மீன் கறி என்ற வஸ்து சிம்ரன் போன்றது. யாரோடு சோடி சேர்ந்தாலும் நன்றாகத்தானிருக்கும். பிட்டின் மீது குழம்பை வார்த்துவிட்டு இரண்டு மீன் துண்டை தட்டின் ஓரத்தில் தட்டிவிட்டு, ஆறுதலாக உள்ளே அனுப்பினாலென்னா, சுடுசோற்றின் மீது தலையோடு கவிழ்த்து போட்டுவிட்டு ஆய்ந்து ஆய்ந்து ஒரு சிறுபோர் நடத்தினாலென்ன, பாண் - தோசை - இட்லி - இடியப்பம் என்றெல்லாம் களமாடி, கடைசியாக Mc Donlald's பேகரோடுகூட சாப்பிட்டுப்பார்த்திருக்கிறேன். மீனின் வம்ஸமே ஒரு தனி அம்ஸம்தான். இவ்வாறு நினைவிலேயே எப்போதும் நீந்துகின்ற கலாதியான கடற்கரும்பு எது என்று நாயிடம் கேட்டால்கூட, வாலை ஆட்டிக்கொண்டு சொல்லும் "மீன்தான்" என்று.
 
ஆனால், போன மாதம் Netflix வெளியிட்டிருக்கின்ற Seaspiracy என்ற ஆவணப்படத்தை பார்த்ததிலிருந்து 'மீன்....." - என்று உச்சரிக்கவே முள்ளுக்குத்தியது போல உதடெல்லாம் நடுங்குது.
 
அப்படியொரு அதிரவைக்கும் ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கிறார் பிரித்தானிய ஆசாமி Ali Tabrizi.
ஏகப்பட்ட தகவல்கள், பல கடல்களில் - கப்பல்களில் என்று ஓடித்திருந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகள், பொது அமைப்புக்கள் - அரச அமைப்புக்கள் என்று பலவற்றை நேரில் சென்று நாக்கை பிடுங்குவதுபோல கேட்ட செவ்விகள் என்று பரந்துபட்ட ஆதாரங்களை சேகரித்துவந்து, "இதோ பாருங்கள், இனியும் நீங்கள் இந்த மீனை சாப்பிடத்தான் போகிறீர்களா" - என்று, கோப்பைக்குள் வைத்த கையை பிடித்துவைத்து கேள்விகேட்பதுபோல இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்.
 
Seaspiracy ஆவணப்படத்தின் அடிநாதம், வர்த்தக மீன்பிடிக்காக (commercial fishing) கொள்ளையடிக்கப்படுகின்ற கடல் வளங்களும் மனித குலம் கடலின் காலனாக மாறியிருப்பதும் பற்றியது.
 
இது அநேகரால் காலத்துக்குக் காலம் ஓதப்படுகின்ற விடயம்தானே என்று பலர் எண்ணலாம். ஆனால், இந்த ஆவணப்படம் நடு உச்சியில் நச்சென்று அடித்திருக்கின்ற தகவலில் முக்கியமானது, தற்போதைய வர்த்தக மீன்பிடியானது, உலகளாவிய ரீதியில் இப்படியே போய்க்கொண்டிருந்தால், 2048 ஆம் ஆண்டுடன் உலகின் எந்தக்கடலிலும் ஒரு மீன்கூட மிஞ்சாது என்பது.
 
இது நம்பமுடியாத தகவல்தான். ஆனால், பல்வேற ஆதாரங்களுடனும் சேகரித்த தகவல்களுடனும் கடல்சார் நிபுணர்களின் துயரமான எதிர்கூறல்களுடனும் இந்த விடயங்களை மீன்கறி போல முன்வைக்கிறார் ஆவணப்பட இயக்குனர்.
 
வணிக ரீதியான மீன்பிடியில் வெறிகொண்டுள்ள தற்போதைய உலகம், இப்போது ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சத்து எழுபதினாயிரம் கோடி மீன்களை பிடித்துத் தின்கிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், நிமிடமொன்றுக்கு ஐம்பது லட்சம் மீன்கள் சட்டிக்குப்போகின்றன. உலகின் எந்தத்துறையிலும் இவ்வளவு கொடூரனமான எண்ணிக்கையில் எந்த உயிரினமும் கொலைசெய்யப்படுவதில்லை என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.
 
பிளாஸ்திக் மற்றும் ஏகப்பட்ட கழிவுப்பொருட்களால் கடலை சாக்கடையாக்கி, நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு, கடலுயிரிகளை அடியோடு அழிக்கின்ற மனிதன், பிளாஸ்திக்கினால் சூழல் மாசுபடுவதாகமாத்திரம் அழுகுணியாட்டம் போட்டுக்கொண்டிருந்தாலும், அதைவிட, வணிக ரீதியான மீன்பிடியினால்தான் அதிகம் கடலை அழித்துத்தொலைக்கிறான் என்று விம்முகிறார்கள் கடற்பாதுகாப்பின் மீது கரிசனை கொண்ட ஆராய்ச்சியாளர்கள்.
 
பெரிய பெரிய கப்பல்களிலும் ட்ரோலர் இயந்திரப் படகுகளிலும் சென்று கதற கதற கடலை சூறையாடுவதை முழுநேர திருட்டுத்தொழிலாகவே மேற்கொண்டுவருகிறார்கள் பல கோப்பரேட் நிறுவனங்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கிறது Seaspiracy. அதுமாத்திரமல்ல, கடற்பாதுகாப்பு என்று, பெயருக்கு வகை தொகையில்லாத சட்டங்களையும் அதனைப்பாதுகாப்பதற்கு ஏகப்பட்ட அமைப்புக்களையும் நிறுவிவைத்துள்ள எந்த அரசும் இதயசுத்தியுடன், கடலைப் பாதுகாப்பதில்லை என்றும் இவர்களின் ஆசீர்வாதத்துடன்தான் மொத்தக்கடலும் சாம்பராகிக்கொண்டிருக்கிறது என்றும் அம்பலாமாக்குகிறது Seaspiracy.
"மீன் சாப்பிட்டல் உடம்புக்கு நல்லது", "மீனெண்ணைக் குளிசை மூளைக்கு நல்லது" - என்று புலம்புகின்ற புரளிக் கதைகள் அனைத்துக்கும் பின்னாலுள்ள மொக்குத் தத்துவங்களை உரித்து, இவையெல்லாம் எவ்வளவு பெரிய பொய்கள் என்று, கடலின் அலை திறந்து காட்டுகிறார் இயக்குநர் Ali Tabrizi.
 
மீன்கள் மற்றும் கடலுயிரிகளின் மீதான மனிதனின் இன அழிப்பு இவ்வாறு இயந்திர வேகத்தில் தொடர்கிறது என்றால், மறுபுறத்தில் இந்தக் கடற்சமனிலை குலைவதால், நீருக்கு அடியில் உள்ள கடற்காடுகள் நடுங்கவைக்குமளவில் அழிந்துகொண்டுவருவதாக இன்னொரு தகவலை தருகிறார் Ali Tabrizi.
தரையில் மரங்கள், தாவரங்கள், காடுகள் ஆகியவை எவ்வாறு கரியமில வாயுவை (Co2) உள்ளெடுத்து, சுத்தமான ஒக்ஸிஜனை(O2) மானிட குலத்தின் தூய சுவாசத்திற்காக உவந்தளிக்கின்றனவோ, கடலும் இதேபோன்ற தொழிற்பாட்டினை பல மடங்குகளில் செய்துகொண்டிருக்கிறது. அதாவது, உலகின் 93 வீதமான கரியமில வாயு கடலடிக் காடுகளில்தான் கடற்தாவரங்களினாலும் பாசிப்படலங்களினாலும் பவளங்களினாலும் சேகரிக்கப்படுகிறது. இயந்திரங்களின் துணையோடு மூர்க்கமாக மேற்கொள்ளப்படுகின்ற மீன்கொள்ளையினால், கடற்தாவரங்கள் ஏக்கர் கணக்கில் அழிக்கப்பட்டு, கடலடியில் சேகரமாகியுள்ள கரியமிலவாயு, உமிழ்ந்து வெளித்தள்ளப்படுகின்ற பேரபாயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது என்று படம்போட்டு சொல்கிறது இந்த ஆவணப்படம்.
 
இதனை, மேலும் விளக்கமாக கூறும்போது, கடலடிக் காடுகளில் சேகரிக்கப்படுகின்ற இந்த 93 வீத கரியமிலவாயுச் சேகரத்திலிருந்து, ஒரு வீதம் இழக்கப்பட்டால்கூட, அது 970 லட்சம் கார்களிலிருந்து வெளியிடப்படுகின்ற புகைக்கு சமன் என்கிறார் Ali Tabrizi. தற்போது, இந்தக் கடலடிக் காடுகள், முரட்டுத்தனமான மீன்கொள்ளையினால், வருடமொன்றுக்கு 390 கோடி ஏக்கர் என்கின்ற ரீதியில் அழிந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கிறீன்லாந்து,, நோர்வே, பின்லாந்து, டென்மார்க், பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன், போர்த்துக்கள், இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மொத்த நிலப்பரப்பளவுக்கு ஈடானது என்று காலுக்குள்ளேயே வெடியை கொழுத்திப்போடுகின்ற தரவையும் சேர்த்தே சொல்கிறார் இயக்குனர் Ali Tabrizi.
இது மாத்திரமல்ல, உலகெங்கிலுமுள்ள அனைத்து கடல்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற மீன் பண்ணை என்ற புலுடா விளையாட்டு, பெருமுதலாளிகளால் வருடக்கணக்கில் கடலடிமைகளாக கொண்டுசெல்லப்படுகின்றவர்களின் உயிரை உறைய வைக்கும் கதைகள், இரத்தம் சிந்தும் கடலின் குரூர அனுபவங்கள் அத்தனையையும் இந்த ஆவணப்படம் சாட்சியங்களாக்குகிறது.
 
Seaspiracy பல அரசுகளுக்கு - பல அமைப்புக்களும் - பல வணிக முதலைகளைக்கு - பல கடலடி முதலாளிகளுக்கு - பிடரியைப் பொத்தி அடித்திருக்கும் அகோரமான ஆவணப்படமாகும்.
 
ஆர்வமுள்ளவர்கள் - ஆர்வமில்லாதவர்கள் அனைவரும் ஒன்றரை மணித்தியாலங்கள் நேரமொதுக்கி பார்க்கவேண்டிய மிக மிக முக்கியமான ஆவணம். இதைப் பார்த்துவிட்டு தூங்கப்போனால், இவ்வளவு காலமும் தின்ற மீன்கள், கணவாய், இறால் எல்லாம் பச்சை சேர்ட் போட்டுக்கொண்டு சிவப்பு - கறுப்பு சைக்கிளில் துரத்துவதுபோல கனவெல்லாம் வருது.
 
 • Like 4
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி நிழலி, நிச்சயம் இன்று பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நிழலி.

என்ன பிரச்சனை என்றால் மீன் மாத்திரமல்ல எல்லா உயிரினங்களுக்கும் இதே பிரச்சனை.

எதை உண்பது?எதை தவிர்ப்பது?இதை முடிவெடுக்க முதலே எமது வாழ்வு முடிந்துவிடும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் தமக்கு தாமே குழிதோண்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த வகை கட்டுரைகளை சந்தேகத்துடன் பார்க்கவேண்டும்.

மாமிசப்பக்கம் மக்களை திருப்ப, ஆலாபனை செய்து எழுதுவார்கள்.

மாமிசத்தில் இருந்து, திருப்ப, விலங்குகளை கொல்வது குறித்து பேசுவார்கள். மனிதர்கள் சேவல்களை சாப்பிடுவதில்லை, காரணம் அதனை வளர்த்து பயனில்லை என்பதால். கோழியை வளர்த்தால், வளரும் போது முட்டை, முட்டை இடும் காலம் முடிந்தால், சாப்பாடுக்கு என்று சொல்லி, ஆட்களை வீகன் பக்கம் திருப்பி விடுவார்கள். 

முக்கியமாக, ஒன்றை கவனியுங்கள். கோழிகள், பண்ணை முறையில் வளர்ப்பதால் தான், மனித உணவு தேவையினை பூர்த்தி செய்கின்றன.

அதேபோலவே கடல் உணவுகளும்: இவை பண்ணை முறைக்கு போய் நீண்ட காலம். றால், நண்டு, மீன்கள் எல்லாம் கடலில் இருந்து தான் வருகின்றன. ஆனால், கடலில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குள் இருந்து.

அந்த பண்ணைக்குள், வேறு பெரிய சுறா, திமிங்கலம் வகை மீன்கள், வர முடியாத வாறு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வகை பண்ணை மீன் வளர்ப்பில் பெரும் வெற்றி கண்டது நோர்வே. பின்னர் இது உலகம் முழுவதும் பரவி விட்டது.

இலங்கையில், சங்கக்காரா முதல், கருணா அம்மான் வரை றால் பண்ணை வைத்து உள்ளனர். சங்காவும், மஹேலவும் சேர்ந்து, ministry of crab என்று ரெஸ்டூரண்ட் வைத்து நடத்துகின்றனர். அதுக்கான நண்டுகள், கூண்டுகளில், ஆறுகளில் வளருகின்றன.

ஆகவே, கடல்வளம் முடிந்து விடும் என்று கவலைப்படாதீர்கள்.

தமிழகத்தில், அண்மையில், நெல் விளையக்கூடிய காணிகளை, மீன், றால் பண்ணையாக மாத்தி விட்டார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. எனினும், இது உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

முன்னர், நாம்பன் மாடுகள், சுமை வண்டிகளுக்கு பயன்பட்டன. இன்று அவை, மோட்டார் இயந்திரங்களின் வரவால், பெருமளவில், இறைச்சி உணவு ஏற்றுமதிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இந்தியாவின் முதன்மை ஏற்றுமதிப்பொருள் அதுதான்.

ஆகவே, மனிதனின் சுஜனல மூளை இருக்கும் வரை, பிட்டும் தப்பும், மீனும் தப்பும். 

Edited by Nathamuni
 • Like 1
 • Thanks 1
 • Haha 2
Link to comment
Share on other sites

வளர்த்த கோழிகளை கூட சமைக்கமாட்டோம் ஆனால் கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்பார் என் அம்மம்ப்பர் வளர்த்த கோழியை சமைத்தால் சாப்பிட மாட்டேன் ஆனால் அவரோ ஒரு துண்டை சாப்பிடு பிறகு தரமாட்டேன் என சொல்லி ஒரு துண்டை வாயில் வைத்து சுவைக்க வைத்து விட்டு மொத்தமாக சாப்பிட வைத்துவிடுவார்  அப்போது அந்த பாவம் என்ற சொலை நாக்கு மூளையும்  தூரம் வைத்துவிட்டு சாப்பிடு என்று சொல்லிவிடும்

சுனாமியின் பிரகு யாரும் மீன் சாப்பிடக்கூடாது என சபதம் எடுத்தார்கள்  காலப்போக்கில் மீன் இல்லாமல் சாப்பிட மறுக்கிறார்கள் இந்த சமுத்திரம் இருக்கும் வரைக்கும் மீன் அழியாது அதனால் மீன் சாப்பிடுங்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 19:47, Nathamuni said:

இந்த வகை கட்டுரைகளை சந்தேகத்துடன் பார்க்கவேண்டும்.

மாமிசப்பக்கம் மக்களை திருப்ப, ஆலாபனை செய்து எழுதுவார்கள்.

மாமிசத்தில் இருந்து, திருப்ப, விலங்குகளை கொல்வது குறித்து பேசுவார்கள். மனிதர்கள் சேவல்களை சாப்பிடுவதில்லை, காரணம் அதனை வளர்த்து பயனில்லை என்பதால். கோழியை வளர்த்தால், வளரும் போது முட்டை, முட்டை இடும் காலம் முடிந்தால், சாப்பாடுக்கு என்று சொல்லி, ஆட்களை வீகன் பக்கம் திருப்பி விடுவார்கள். 

முக்கியமாக, ஒன்றை கவனியுங்கள். கோழிகள், பண்ணை முறையில் வளர்ப்பதால் தான், மனித உணவு தேவையினை பூர்த்தி செய்கின்றன.

அதேபோலவே கடல் உணவுகளும்: இவை பண்ணை முறைக்கு போய் நீண்ட காலம். றால், நண்டு, மீன்கள் எல்லாம் கடலில் இருந்து தான் வருகின்றன. ஆனால், கடலில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குள் இருந்து.

அந்த பண்ணைக்குள், வேறு பெரிய சுறா, திமிங்கலம் வகை மீன்கள், வர முடியாத வாறு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வகை பண்ணை மீன் வளர்ப்பில் பெரும் வெற்றி கண்டது நோர்வே. பின்னர் இது உலகம் முழுவதும் பரவி விட்டது.

இலங்கையில், சங்கக்காரா முதல், கருணா அம்மான் வரை றால் பண்ணை வைத்து உள்ளனர். சங்காவும், மஹேலவும் சேர்ந்து, ministry of crab என்று ரெஸ்டூரண்ட் வைத்து நடத்துகின்றனர். அதுக்கான நண்டுகள், கூண்டுகளில், ஆறுகளில் வளருகின்றன.

ஆகவே, கடல்வளம் முடிந்து விடும் என்று கவலைப்படாதீர்கள்.

தமிழகத்தில், அண்மையில், நெல் விளையக்கூடிய காணிகளை, மீன், றால் பண்ணையாக மாத்தி விட்டார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. எனினும், இது உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

முன்னர், நாம்பன் மாடுகள், சுமை வண்டிகளுக்கு பயன்பட்டன. இன்று அவை, மோட்டார் இயந்திரங்களின் வரவால், பெருமளவில், இறைச்சி உணவு ஏற்றுமதிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இந்தியாவின் முதன்மை ஏற்றுமதிப்பொருள் அதுதான்.

ஆகவே, மனிதனின் சுஜனல மூளை இருக்கும் வரை, பிட்டும் தப்பும், மீனும் தப்பும். 

உலகின் கோழி, மாட்டிறைச்சி, பன்றி போன்றவற்றின்(உணவு) உற்பத்தி, விற்பனை, இலாபம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று பார்த்தால் மிகுதியை நாம் கற்பனைசெய்துகொள்ளலாம். வேறு மனிதர்களின் விளக்கம் தேவையே இல்லை. 

அவர்கள் சொல்ல வருவது Farmed Fish ஐ உண்ணுங்கள் என்று சொல்வதாக முடியும்.

ஒரு பருக்கை சோற்றைக் கூட நிம்மதியாக வாயில் வைக்க முடியாதவாறு செய்துவிட்டார்கள். ☹️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மீன் சாப்பிட்டால் கடல் அழியுமா?

சீஸ்பிரஸி’ (Seaspiracy)... சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உலகெங்கும் பரவலாக விவாதிக்கப்படும் ஆவணப்படம். வெளிவந்து சில நாள்களிலேயே அதிகம் விவாதிக்கப்பட்ட ஆவணப்படங்களில் ஒன்றாகிவிட்டது. சீஸ்பிரஸி என்ற தலைப்பு ‘கடலில் நடக்கும் சதி’ என்ற சொல்லாக்கத்தில் உருவானது. ஆவணப்படத்தின் மையப்புள்ளியே அதுதான்.

கடலின்மீது பெருங்காதல் கொண்டவரான இயக்குநர் அலி தப்ரீஸி, ‘இப்போது கடல் சூழலுக்கு ஏற்பட்டுவரும் எல்லா பாதிப்புகளுக்கும் மீன்பிடித் தொழில் மட்டுமே காரணம்’ என்ற மறைக்கப்பட்ட உண்மையைக் கண்டுபிடிக்கிறார். இதைக் கண்டுபிடிக்கவிடாமல் அவரைப் பலர் தடுக்கிறார்கள். ‘`உயிர்மேல் ஆசை இருந்தால் இதைத் தொடரவேண்டாம்’’ என்று ஒருவர் எச்சரிக்கிறார். போலீஸ் சைரன்கள் துரத்துகின்றன. ஒரு கட்டத்தில், உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பட்டன் கேமராக்கள் மூலம் படமெடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார் தப்ரீஸி.

மீன் சாப்பிட்டால் கடல் அழியுமா?
 

ஒரு த்ரில்லர் படம்போல எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தின் வெற்றிக்குத் திரைமொழி ஒரு முக்கியமான காரணம். மறைத்துவைக்கப்பட்ட ஒரு மாபெரும் உண்மையைக் கண்டறிவதாகப் பார்வையாளர்களை நம்பவைப்பதில் நிச்சயம் சீஸ்பிரஸி வெற்றி பெற்றிருக்கிறது. பால் பொருள்கள்கூட சாப்பிடாத தீவிர சைவர்களான வீகன்களும் இன்னும் பலரும், ‘`இந்த ஆவணப்படம் என் கண்களைத் திறந்துவிட்டது, இனி நான் ஏமாற மாட்டேன்’’ என்று சமூக வலை தளங்களில் சிலாகித்துக் கொண்டிருக்க, களத்தில் இயங்கிவரும் சூழலிய லாளர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.

சீஸ்பிரஸியின் அடிப்படை நோக்கம் என்ன என்பது ஆழமாகப் பார்த்தாலே தெரிந்துவிடும். பல்வேறு கோணங்களிலிருந்து பரபரப்பும் நெகிழ்ச்சியுமான கதைகளைப் பின்னி, ‘`மீன்பிடித் தொழில்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். கடலைக் காப்பாற்ற வேண்டுமானால், மீன் சாப்பிடாதீர்கள்’’ என்று சொல்லி முடிக்கிறார் தப்ரீஸி.

அலி தப்ரீஸி
 
அலி தப்ரீஸி

கடலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் பிரச்னை, டால்பின்கள் கொல்லப் படுவது, மீன் பண்ணைகளில் இருக்கும் நிர்வாகச் சிக்கல்கள், சுறா மீன் வர்த்தகம், மீன் காட்சியகங்கள் என்று எல்லாவற்றையும் அரைகுறையாக விவரித்துவிட்டு, மீன்பிடித் தொழிலை மட்டும் குற்றவாளியாக்கியிருக்கிறது இந்த ஆவணப்படம். இதற்காக இவர் முன்வைக்கும் பல புள்ளிவிவரங்கள் பிழையானவை. ‘ஆவணப்படம்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு படைப்பில் தகவல் பிழைகள் இருக்கும்போது, அதன் அடிப்படைக் கட்டமைப்பே குலைந்துவிடுகிறது. உதாரணமாக, ‘`கடலில் இருக்கும் மொத்த பிளாஸ்டிக்கில் 46%க்கு மேல் மீன்பிடித் தொழிலால் வருபவைதான்’’ என்று ஒரு பொய்யைச் சொல்கிறார். ஓரளவு சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள்கூட, மீன் சாப்பிடுவதைக் கைவிடும் எண்ணத்துக்கு வந்துசேர்வது இந்தப் புள்ளியில்தான். ‘`மீன் பண்ணைகளும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை’’ என்று சொல்லும் ஆவணப்படம், ‘தாவர உணவுகளிலிருந்தே நமக்கான ஊட்டச்சத்தைப் பெறமுடியும்’ என்றும் தெரிவிக்கிறது.

மீன்பிடித் தொழில் பற்றி அறியாதவர்களுக்கு, இந்த ஆவணப்படத்தின்மூலம் அதைப் பற்றிய தவறான தோற்றத்தை முன்வைத்திருக்கிறார் தப்ரீஸி. சென்னையை எடுத்துக்கொண்டாலே, காசிமேட்டில் இருக்கும் விசைப்படகுகள், ஊரூர்க் குப்பத்திலிருந்து இயங்கும் மோட்டார் படகுகள், ஆங்காங்கே காணப்படும் கட்டுமரங்கள் என்று மீன்பிடித்தொழிலில் பலவிதமான அடுக்குகளைப் பார்க்க முடியும். ஆனால், உள்நாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடுக்கடலில் இயங்கும் ராட்சத மீன்பிடிக் கலங்களை மட்டுமே வைத்து, ‘மீன்பிடித் தொழில் என்பதே இயற்கைக்கு எதிரானது’ என்று நிறுவுவது மோசமான அணுகுமுறை.

 

‘Zero Hunger’ என்பது ஒரு சர்வதேச இலக்கு. தொழில்நுட்ப உச்சம் தொட்ட இந்த 2021லும் பசியற்ற உலகை சாத்தியமாக்க முடியவில்லை. உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவருக்குக் கடல் உணவு மட்டுமே புரதச் சத்துக்கான ஆதாரமாக இருக்கிறது. உலக அளவில் குறைந்தது 12 கோடிப் பேருக்கு மீன்பிடித் தொழிலே வாழ்வாதாரம். அதில் 90% பேர் சிறு/குறு மீனவர்கள், பெரும் பான்மையானவர்கள் வறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் 3,200க்கும் அதிகமான மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 40 லட்சம் பேர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். மீன் உணவை உலகம் கைவிட்டால், மாற்று உணவு என்ன? இவர்களுக்கான மாற்று வாழ்வாதாரம் எது?

தவிர, ‘சுற்றுச்சூழலை பாதிக்காத, நீடிக்கக்கூடிய ஒரு மீன்பிடித்தொழில் (Sustainable fisheries) சாத்தியமே இல்லை’ என்கிற ஆவணப்படத்தின் கூற்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சிறு/குறு மீனவர்கள் எல்லாரும் இப்படிப்பட்ட மீன்பிடித்தலில்தான் ஈடுபட்டுவருகிறார்கள். காலத்துக்கும் கடல் சூழலுக்கும் ஏற்ற வலைகள் அவர்களுடையவை. மீன்பிடித் தொழில் மற்றும் கடல் சார்ந்த பல தொல் நம்பிக்கைகளை அவர்கள் இன்னமும் அதே கவனத்துடன் பின்பற்றிவருகிறார்கள். கடலுக்கு அருகில் ஒரு கழிவுநீர்க் குழாய் இறக்கப்படும்போது, முதலில் எதிர்ப்பவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். சர்வதேச அளவில் தொழில்முறை மீன்பிடிப் பகுதிகளாக இருந்தவற்றை, நீடிக்கக்கூடிய மீன்பிடி முறைக்கு மாற்றிய சில வருடங்களிலேயே மீன்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.

பிரிட்டனில் இருந்தபடி, ஒரு மேலைநாட்டு மத்தியதர வர்க்க வெள்ளை நிற ஆணின் பார்வையில் இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் தப்ரீஸி. ‘`படத்தில் கெட்டவர்களாக வருபவர்கள் எல்லாரும் ஆசியர்கள், பாதிக்கப்படுபவர்கள் எல்லாரும் ஆப்பிரிக்கர்கள், நல்லவர்கள் எல்லாரும் வெள்ளையர்கள், இது எப்படி நிதர்சனத்தைப் படம் பிடிப்பதாகும்?’’ என்று கேள்வி எழுப்புகிறார் சூழலியல் எழுத்தாளர் ஃப்ரான்ஸிஸ்கோ ப்ளாகா.

 

திமிங்கில வேட்டையில் முதல் இடத்தில் இருப்பது நார்வே. ஆனால், திமிங்கில வேட்டையின் குரூரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு தப்ரீஸி ஜப்பானுக்குத்தான் செல்கிறார். உலகிலேயே ஜப்பானியர்கள் மட்டுமே சூரை (Tuna) மீன்கள் சாப்பிடுவது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கு கிறார். ‘சுறாக்களைப் பாதுகாத்தல்’ என்ற பேச்சு வரும்போது உடனே சீனாவுக்குச் சென்றுவிடுகிறார்.

இந்த ஆவணப்படத்தில் சரியான தகவல்களே இல்லை என்று சொல்லிவிடமுடியாது. இழுவை வலைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு, பிளாஸ்டிக் பிரச்னை என்று சமகாலத்தில் கடல் சூழலுக்கு இருக்கும் முக்கியமான அச்சுறுத்தல் களை ஆவணப்படம் தொட்டி ருக்கிறது. ஆனால் பிரச்னை களை அணுகிய விதமும் ஆவணப் படம் முன்வைக்கும் தீர்வும் மிகவும் பாரபட்சமானதாக இருக்கிறது.

ஒரு சில மீன்களை மட்டுமே தொடர்ந்து சாப்பிடாமல் கடலுணவில் பல்வகைமையை ஊக்குவிப்பது (Diversification of seafood), சிறு/குறு மீனவர்களை ஊக்குவிக்கும்விதமாக அவர்களிடமிருந்து நேரடியாக மீன்களை வாங்குவது, கடல்சார் பிரச்னைகளில் விழிப்புணர்வுடன் இருப்பது, மீனவர்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது அவர்களுக்காகக் குரல் கொடுப்பது என்று எவ்வளவோ செய்யலாம்.

பொறுப்பான நுகர்வுதான் தீர்வே தவிர, மேட்டிமைவாதமும் வீகனிசமும் அல்ல.

https://cinema.vikatan.com/tamil-cinema/seaspiracy-netflix-movie-reivew

நன்றி: விகடன் 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.