Jump to content

மணிவண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் விடுவிக்கப்பட்டார்? - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் விடுவிக்கப்பட்டார்? - நிலாந்தன்

 

1FAB09B8-7083-43B8-B14E-881CB77B3B8F.jpe

நிலாந்தன்

“அனந்தி தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது ராணுவம் அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியது ஞாபகம் வருகிறது……”

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பவர் டாண் டிவியின் அதிபர் குகநாதன். முக்கியமான அரசியல் விவகாரங்களின்போது கொடுப்புக்குள் சிரித்தபடி அவர் இவ்வாறு தெரிவிக்கும் பூடகமான கருத்துக்களில் பல அர்த்தங்கள் மறைந்திருப்பதுண்டு. மேற்கண்டவாறு அவர் பதிவிட்டது மணிவண்ணன் கைது செய்யப்பட்ட அன்று. இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார்? மணிவண்ணனை கைது செய்ததன்மூலம் இலங்கை அரசாங்கம் அவருடைய இமேஜை உயர்த்தி இருக்கிறது. இது எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தலில் சில தரப்புக்கள் அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு தேவையான அடிப்படைகளை உருவாக்கிக் கொடுக்கும் என்ற பொருள்பட அவர் அவ்வாறு கூறி இருக்கிறாரா? அதாவது மணிவண்ணனின் பிம்பத்தை உயர்த்த அரசாங்கம் விரும்புகிறது என்று பொருள்.

 

இருக்கலாம் ஆனால் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை என்பது அரசாங்கம் வேண்டுமென்றே திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு நடவடிக்கையா? என்ற கேள்விக்கு விடை இங்கு முக்கியம்.

அது ஒரு நாடகம் என்று எடுத்துக் கொண்டால் அந்த நாடகத்துக்கு எதிர்வினை ஆற்றிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; எனைய சிங்கள கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் ; புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள்; மற்றும் வெள்ளைக்கார அரசியல்வாதிகள் ;அரசியல் செயற்பாட்டாளர்கள் ;அதிலும் குறிப்பாக அமெரிக்க கண்டத்தை சேர்ந்த சில மாநகர சபைகளின் வெள்ளைகார முதல்வர்கள்; இவர்களோடு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் உட்பட ராஜதந்திரிகள் போன்ற அனைவரும்
இதுவிடயத்தில் கருத்துக் கூறப்போய் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அல்லது மணிவண்ணனின் விவகாரத்தை அரசாங்கம் இலேசாக எடுத்துக் கொண்டு கைது செய்யப் போய் அதற்கு உலக அளவில் எதிர்வினை வந்ததும் இதற்குமேலும் அவரை உள்ளே வைத்திருந்தால் அது அவரின் இமேஜை உயர்த்தும் என்று கணித்து பிடித்த அன்றே அவரை விடுதலை செய்தது என்ற வாதம்தான் சரியா?

ஆனால் இந்த இடத்தில் மேலும் சில கேள்விகளை எழுப்ப வேண்டும். மணிவண்ணனின் இமேஜை உயர்த்துவதால் யார் யாருக்கு லாபம்? அரசாங்கத்துக்கு இதில் என்ன லாபம்? அவர் எதிர்காலத்தில் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதால் அரசாங்கம் என்ன நன்மை அடையும் ? அல்லது இக்கேள்வியை மறுவளமாகக் கேட்கலாம் அவரை அவ்வாறு முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்த எந்த தரப்பு தயார்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னை பேட்டி கண்ட கப்பிட்டல் டிவியின் ஊடகவியலாளர்கள் இதுதொடர்பில் ஒரு கேள்வி கேட்டார்கள். உத்தியோகப்பற்றற்ற தகவல்களை நம்பி ஆய்வுகளைச் செய்ய முடியாது என்று அவர்களுக்குச் சொன்னேன்.

மணிவண்ணனை அவ்வாறு முதலமைச்சர் வேட்பாளராக தெரிந்தெடுக்கப்போவதாக தாங்கள் எங்கேயும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்று விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் சுமந்திரன் அணியே அவரை அவ்வாறு முன்நிறுத்த முயற்சிகிறார் என்ற ஒரு ஊகம் யாழ்பாணத்திலும் கொழும்பிலும் பரவலாக உண்டு.

 

சுமந்திரனுக்கும் மாவைக்கும் இடையிலான பனிப்போரின் பின்னணியிலேயே இவ்வாறான ஊகங்கள் வெளிக் கிளம்புகின்றன. அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை நிற்பதை தடுக்கும் நோக்கத்தோடு சுமந்திரன் அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த முயற்சிப்பதாக ஊடகங்கள் ஊகிக்கின்றன. ஏற்கனவே சுமந்திரன் ஒரு ஓய்வு பெற்ற அரச அதிபரை அவ்வாறு முன்னிறுத்த யோசித்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் மாவை தோற்றதும் அவருடைய இடத்தை பிடிப்பதற்கு சுமந்திரனும் சிறிதரனும் முயற்சித்தார்கள். கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் விடயத்திலும் கலையரசனை தெரிவு செய்ததன்மூலம் சுமந்திரன் மாவையை மிகவும் சாதுரியமாக ஓரங்கட்டினார். அதற்கு பின்னரும் சுமந்திரன் மாவையை ஓரம் கட்டும் விதத்தில் நுட்பமாக காய்களை நகர்த்தினார். மாவை கூடும் கூட்டங்களில் சுமந்திரனும் போய்க் குந்திக்கொண்டிருந்தார். இதுவிடயத்தில் மாவையை விடவும் சுமந்திரனிடம் தந்திரங்களும் நெளிவு சுளிவுகளும் தலைமைத்துவப் பண்பும் ஒப்பீட்டளவில் அதிகம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆனாலும் சுமந்திரன் திட்டமிட்டது போல மாவையை முழுவதுமாக ஓரங்கட்ட முடியவில்லை. சுமந்திரனின் நகர்வுகளுக்கு பின்னரும் மாவை ஒப்பீட்டளவில் பலமாகவே காணப்படுகிறார். அதற்கு காரணம் மாவையின் தலைமைத்துவ பண்பு அல்ல.அவரிடம் அப்படி ஒன்றும் கிடையாது. மாவை தமிழரசுக் கட்சியின் தலைவராக நீடித்திருப்பது என்பது முதலாவதாக அக்கட்சியின் பாரம்பரியத்தின் பாற்பட்டது எனலாம். இரண்டாவதாக மாவையின் மூப்பின் அடிப்படையிலானது எனலாம். மூன்றாவதாக அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததும் ஒரு காரணம்.ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வியுற்றதும் அவருடைய பதவி ஆட்டம் காணத் தொடங்கியது. ஏனென்றால் மாவை என்றைக்குமே தனது தலைமைத்துவ பண்பை நிரூபித்திருக்கவில்லை. கடந்த வடமாகாண சபைத் தேர்தலின்போது மாவை இருக்கத்தக்கதாக சம்பந்தர் விக்னேஸ்வரனை உள்ளிறக்கியதும் அதனால்தான். தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த சம்பந்தர் அதிக நேரம் பாடுபட்டார். மாவையை ஓரங்கட்டி விக்னேஸ்வரன் உள்ளிறக்கப்பட்டமை என்பது மாவையின் சொந்தக் கட்சியே அவரிடம் தலைமைத்துவ பண்பு இல்லை என்று நம்புவதைக் காட்டவில்லையா?

அந்த நிலைமை இப்பொழுதும் உண்டு. ஆனாலும் எல்லாரையும் அரவணைத்துப் போகும் சுபாவம் மாவையை பாதுகாத்தது. சுமந்திரனை குறித்து கட்சிக்குள்ளேயே ஏற்பட்ட அதிருப்தி அவருக்கு அணியைத் திரட்டி கொடுத்தது. கட்சியின் தோல்விக்கு சுமந்திரன் காரணம் என்று கருதியவர்களும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர்களும் அவரோடு அணி சேர்ந்தார்கள். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தமிழரசுக்கட்சியின் மிகப் பலமான அடித்தளம்தான் மாவையின் பலம். பல தசாப்தகால பாரம்பரியத்தை கொண்ட ஒரு கட்சி என்ற அடிப்படையில் அதன் தலைவராக அவர் தொடர்ந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவரிடம் தலைமைத்துவப் பண்பு இல்லை என்ற போதிலும் கட்சியின் பலம் அவரை பாதுகாக்கின்றது. அதுதான் சுமந்திரனுக்கும் பிரச்சினை. சுமந்திரன் அவர் நினைத்தபடி பாவையை வெட்டி ஓட முடியாதிருக்கிறது .வரக்கூடிய மாகாணசபைத் தேர்தலிலும் சுமந்திரன் தனது விருப்பங்களை நிறைவேற்ற அதுதான் தடையும்.

அதனால்தான் சுமந்திரன் வெளியிலிருந்து பொது வேட்பாளர்களை கொண்டுவர முயற்சிப்பதாக ஒரு ஊகம் பரவலாக நிலவுகிறது. ஆனால் இது விடயத்தில் சுமந்திரனால் விக்னேஸ்வரனை கூட்டுச்சேர்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு முதலமைச்சராக வரும் தகுதி மாவைக்கிருப்பதாகக் விக்னேஸ்வரன் கருதவில்லை.ஆனால் அதற்காக சுமந்திரனின் பொது வேட்பாளரை அவர் ஏற்றுகொள்வார் என்று எங்கேயும் வெளிப்படையாகக் கூறியிருக்கவில்லை. கூட்டமைப்புக்கு உள்ளேயும் குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு வெளியிலிருந்து ஒரு வேட்பாளரை இறக்க ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. எனவே சுமந்திரன் திட்டமிடுவது போல கட்சிக்கு வெளியிலிருந்து ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக இறக்குவதற்கு தமிழரசுக் கட்சியோ அல்லது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளோ ஒத்துக்கொள்ளுமா என்பது சந்தேகமே.

எனவே மணிவண்ணனை கைது செய்த அன்றே அரசாங்கம் விடுவித்ததை வைத்தும் சுமந்திரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் அவரை பிணையில் விடுவித்தமை என்பதை வைத்தும் கூட்டிக் கழித்து ஒரு கணக்குப் போட்டு அடுத்த மாகாணசபை தேர்தலோடு அக்கணக்கின் முடிவை முடிச்சுப் போடுவது என்பது காலத்தால் முந்தியது பொருத்தமற்றது என்றே இப்பொழுது தோன்றுகிறது.

அரசாங்கம் தனது தனிச்சிங்கள வாக்காளர்களை திருப்திப்படுத்தும் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் மணிவண்ணனை கைது செய்தது. ஆனால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அதற்கு வந்த எதிர்ப்பை கண்டு அரசாங்கம் தன் முடிவை மாற்றியிருக்கலாம். மேலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு பலவீனமானது என்று அரசாங்கம் கருதியிருக்கலாம். எனவே இது விடயத்தில் மணிவண்ணனை விடுவிக்கக்கோரி நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வந்த கோரிக்கைகளை கூட்டிக் கழித்துப் பார்த்த அரசாங்கம் இதன்மூலம் மணிவண்ணனின் இமேஜ் மேலும் உயரலாம் என்று கருதி அவரை பிடித்த அன்றே விடுதலை செய்திருக்கலாம். அவரை விடுவிப்பது என்று தீர்மானித்ததின் அடிப்படையில் அவர்மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்காமலும் விட்டிருக்கலாம்.கடந்த 12 ஆண்டு கால தமிழ் மிதவாத அரசியல் பரப்பில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டமை இதுதான் முதற்தடவை. இதன்மூலம் மணிவண்ணனின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதே சரி. அவரை கைது செய்யப் போய் அரசாங்கம் அவரை பலப்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை. அதுதான் மற்றவர்கள் அதை வைத்து ஊகிப்பதற்கு அடிப்படையாகவும் காணப்படுகிறது.

 

https://www.meenagam.com/மணிவண்ணன்-ஏன்-கைது-செய்ய/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.