Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின்னர் கொழும்பை அடையும் வரையிலும் அவற்றின் பாதைகளை கண்டறிந்து தாக்குவதற்கு சிறீலங்கா வான்படையினால் முடியாது போனதும், பெரும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வான்புலிகளின் விமானங்கள் 300 அடி உயரத்திலும் குறைவான உயரத்தில் பறந்ததனால் வான்படை விமானங்களால் அவற்றை தாக்கமுடியவில்லை என படைத்தரப்பு கூறிவருகின்றது.

வான்புலிகளின் இந்த உத்திகளால் வான்படையினாரின் ராடார் திரைகளிலும் விமானங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு வான்பரப்பை அடைந்த விமானங்களில் ஒன்று வான்படை தலைமையகத்தையும், மற்றயது கட்டுநாயக்கா வான்படை தளத்தினையும் தாக்க முனைந்துள்ளன.

முன்னைய பறப்புக்களை போலல்லாது விமானங்கள் தமது இலக்கினை நோக்கி தாழ்வாக பறந்துள்ளன. இந்த பறப்புக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் எதிரியின் செறிவான பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடுகளில் அவை சிக்கி கொள்ளும் ஆபத்துக்கள் அதிகம்.சிறீலங்கா படையினர் கொழும்பின் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள பெரும்பாலான உயரமாக கட்டங்களில் எல்லாம் விமான எதிர்ப்பு பீரங்கிகளை நிறுவியுள்ளனர். ஹில்டன் ஆடம்பர விடுதியில் கூட அவர்களின் பீரங்கி நிலைகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று முன்னர் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேணல் றூபன் ஒட்டிச்சென்ற விமானம் வான்படை தலைமையகத்திற்கு எதிராக உள்ள உள்நாட்டு வரித்திணைக்களத்தின் 12 ஆவது மாடிக்கும் 13 ஆவது மாடிக்கும் இடையில் மோதி வெடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 210 கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்தின் தாக்கத்தினால் அந்த கட்டடத்தொகுதி பலத்த சேதமடைந்ததுடன், அருகில் இருந்த வான்படை தலைமையகம், ரான்ஸ் ஏசியா ஆடம்பர விடுதி என்பன உட்பட பல கட்டங்கள் சேதமைடந்துள்ளன. இருந்த போதும், வான்படை தலைமையகத்தை சூழவுள்ள அதியுயர் பாதுகப்பு வலையப்பகுதிக்குள் இருந்த நான்கு மாடி கட்டடம் ஒன்று முற்றாக தகர்ந்து போயுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் அரசின் இறுக்கமான ஊடகத்தடை காரணமாக இது தொடர்பான முழு தகவல்களையும் பெறமுடியவில்லை.

இதனிடையே லெப். கேணல் சிரித்திரன் ஒட்டிச்சென்ற 905 இலக்கமுடைய சிலின்-143 விமானம் கட்டுநாயக்கா வான்படை தனத்தினை அண்மித்த போது சிறீலங்கா படைத்தரப்பு விமானத்தை நோக்கி ஏவுகணையை ஏவியிருந்தது. ஆனால் ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பும் பொருட்டு விமானத்தின் இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வான்படை தளத்தினை நோக்கி விழ எத்தனித்த போது அருகில் இருந்த தென்னைமரம் ஒன்றில் விமானம் மோதியதனால் அது நிலை தடுமாறிய சமயம் துப்பாக்கி சூடுகளுக்கும் இலக்காகி உள்ளது.http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SaCppnNpP4I/AAAAAAAAE4Y/xRfnNemaFeQ/s400/abt.jpg

12.7 மி.மீ கனரக இயந்திர துப்பாக்கி சன்னங்கள் விமானியின் இடது கரம் மற்றும் இடது மார்பு பகுதிகளை தாக்கியுள்ளன. அந்த விமானம் பின்னர் வான்படை தளத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள வளவு ஒன்றில் வீழ்ந்துள்ளது. விமானத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை அருகில் இருந்த நீர்த்தொட்டியில் மோதி வெடித்ததாக படை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

விமானம் வீழந்த வேகத்தில் அதன் இயந்திரப்பகுதி முற்றாக சிதைந்த போதும் அதில் இருந்த வெடிமருந்துகள் வெடிக்கவில்லை. ஆனால் இந்த விமானம் வான்படை தளத்திற்குள் வீழ்ந்து வெடித்திருந்தால் பேரனர்த்தம் ஏற்பட்டிருந்கும் என வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

வான்புலிகளின் விமானங்கள் முன்னர் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குண்டுதுளைக்காத கவசதகடுகள் பொருத்தப்பட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதுடன், அவை 50 - 75 கிலோ குண்டுகளையும் சுமந்து வந்திருந்தன. ஆனால் தற்போது அதிக எடை கொண்ட குண்டுகளை கொண்டுவருவதற்கு ஏதுவாக அவர்கள் விமானத்தின் கவசத்தகடுகளை அகற்றியிருப்பதாக தாம் கருதுவதாக படைத்துறை தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 20 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர்கள் கடந்த ஊதாகதிர்களை குழம்பும் சாதனங்கள்,ராடார் கதிர்களை குழப்பும் சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்தவில்லை எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல்களில் இருந்து படைத்தரப்பு தப்பி பிழைத்து கொண்ட போதும், அரசிற்கு இது பலத்த பின்னடைவாகும். விடுதலைப்புலிகளின் கதை முடிந்து வருவதாக அரசு தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகையில் சிறீலங்காவின் தலைநகரத்தினை சில மணிநேரம் வான்புலிகள் செயலிழக்க செய்தது அரசின் பிரச்சாரத்திற்கு பலத்த அடி என்பது மட்டுமல்ல சிறீலங்காவின் பொருளாதாரதிற்கும் இது பலத்த பின்னடைவை ஏற்படுத்த வல்லது.

ஏற்கனவே வீழச்சி கண்டுள்ள உல்லாசப்பயணத்துறையை இது மேலும் பாதிப்பதுடன், முதலீட்டாளர்களையும் சிறீலங்காவை விட்டு விலகி நிற்கவே செய்யும். விடுதலைப்புலிகளுக்கு இருப்பதற்கே இடமில்லை என்ற தொனியில் அரசின் பிரச்சாரம் அமைந்திருந்த வேளையில் வான்புலிகள் எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று விடுதலைப்புலிகளின் கதை முடியும் தறுவாயில் உள்ளதாக அரசு தெரிவித்து வருகின்ற போது மேற்கொள்ளப்பட்ட வான்புலிகளின் தாக்குதலின் பரிமாணம் பெரிதாகும் என தெரிவித்துள்ளது. வான்புலிகளின் விமானங்கள் ஒவ்வொன்றும் 210 கிலோ எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த வெடிமருந்தை காவிச் செல்லும் ஏவுகணைகளைவே தற்போது கருதப்படுகின்றன.

அவை சிறீலங்காவின் தலைநகரத்தினை அடையும் வரை அரசினால் தடுக்க முடியாது போனது அரசிற்கும் பலத்த பின்னடைவு. தலைநகரத்தினை அடைந்த பின்னர் அவை எங்கு வீழந்தாலும் அரசிற்கு அது இழப்புத்தான். அவை படைத்துறை ரீதியாக இருக்கலாம், பொருளாதார ரீதியாக இருக்கலாம், அரசியல் ரீதியாக இருக்கலாம்.புதிதாக தோன்றியுள்ள இந்த அச்சுறுத்தல் தலைநகரத்திற்கு மட்டுமானது என அரசு நிம்மதி அடைந்துவிட முடியாது.

 

 

கட்டுரைக்காலம்:  February 28, 2009

- வேல்ஸிலிருந்து அருஸ்  

நன்றி: ஈழமுரசு

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.