Jump to content

விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்

இல்லுமினாட்டி சதி, தடுப்பு மருந்துகளே தேவையில்லை, இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்னும் வாட்ஸ்அப் வாயர்களின் உளறல்களை நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உங்கள் சுற்றத்தாரையும் பிள்ளைகளையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள் என்றுதான் பொருள்.

April 20, 2021

டுப்பூசி போட்டதால்தான் விவேக் போயிட்டாரு” என்பது இன்றைய சூடான விஷயம், சிலர் பரப்பும் விஷமம். அவருக்கு ஏற்கெனவே இதயத்தில் பிரச்சினை இருந்திருக்கலாம். தடுப்பூசிக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எல்லாம் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை. 

அவர்களைப் பொறுத்தவரை, தடுப்பூசி வேண்டாம், அதற்கு இன்னொரு சாக்கு இது. (நொண்டிச்சாக்கு என்று எழுதியிருந்தேன். அந்தச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று நண்பர் பாலபாரதி சொன்னதால் திருத்தியிருக்கிறேன்.)

“கோவிட் தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட் தொற்று ஏற்படுகிறதே…?” என்பதும் இப்போது புதிதாக எழுந்துள்ள கேள்வி. இந்தக் கேள்வியில் இரண்டு வகை.

  1. அறிவியல் ரீதியாக அறிந்துக் கொள்வதற்காகக் கேட்பது ஒருவகை.
  2. பாத்தியா… தடுப்பூசி எல்லாம் வேலைக்காகாதுன்னு சொன்னா கேட்டியா… அதுக்குதான் உணவே மருந்து, மருந்தே உணவுன்னு சொல்றோம் என்கிற கோஷ்டிகள் / கபசுர நீர் போதும், கோமியத்தைவிட சிறந்தது என்ன இருக்கு என்கிற கோஷ்டிகள்.

இந்த இரண்டாவது கோஷ்டி அரைவேக்காடுகள் தடுப்பு மருந்துகள் போட்டுக் கொள்ளாமலும் இருக்கக் கூடும் அல்லது வெளியே வீறாப்பு பேசிவிட்டு மறைமுகமாகப் போட்டுக் கொள்ளவும் கூடும். அப்படிப் போடாவிட்டால், கோவிட் தொற்றுக்கு ஆளாகி மற்றவர்களுக்கும் பரப்புவார்கள். ஆனாலும், மக்கள்திரள் நோயெதிர்ப்பு சக்தி ஏற்பட்ட பிறகு தடுப்பூசி போடப்படாவிட்டாலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்து விடுவார்கள், பாத்தியா எனக்கு எதுவும் ஆகலே என்று சொல்லித் திரிவார்கள். இவர்களுக்கு என்ன விளக்கம் சொல்லியும் பயனில்லை.

உண்மையிலேயே வேக்சின் குறித்து அறிய விரும்புவோருக்கு எனக்குத் தெரிந்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் மருத்துவனோ, மருத்துவத் துறை சார்ந்தவனோ அல்ல. ஆர்வத்தாலும் தொழில் ரீதியாகவும் விஷயங்களைக் கற்றுக் கொள்பவன். சுமார் ஒரு மாதத்துக்கு முன்னால் மொழியாக்க வேலை ஒன்று அமெரிக்காவில் இருந்து எனக்கு வந்தது.

இன்று இங்கே என்ன கேள்வி எழுப்பப்படுகிறதோ அதே கேள்வி அங்கே அப்போதே எழும்பி விட்டது போலிருக்கிறது. அதனால், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை (தமிழிலும்) அளித்து மக்களுக்குப் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்கள். அந்த மொழியாக்கத்தில் இருந்தும், இதர தகவல்களில் இருந்தும் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

000

கோவிட் வேக்சின் என்பது என்ன?

கோவிட் வேக்சினுக்கு நான்குவகை வேக்சின்கள் பரிசோதிக்கப்பட்டன.

1. Whole virus vaccine என்பது வைரசைக் கொண்டே தயாரிக்கப்படுவது.

2. Nucleic acid vaccine என்பது வைரசின் மரபணுவின் (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ) கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படுவது.

3. Protein subunit vaccine என்பது, வைரசின் புரதத்திலிருந்து பிரித்தெடுத்த புரோட்டீன்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது.

4. Viral vector-based vaccine என்பது, திருத்தப்பட்ட வைரஸைக் கொண்டு தயாரிக்கப்படுவது.

இப்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஸ்புட்னிக் வி ஆகிய இரண்டும் வைரல் வெக்டார் வேக்சின்கள். அதாவது, வேறொரு வைரசின் திருத்தப்பட்ட வடிவத்தைக் கொண்டு தயாரிக்கப்படுவது. கோவிஷீல்ட், சிம்பன்சி குரங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட அடினோவைரஸைப் பலவீனப்படுத்தி, கொரோனா வைரஸ் போலவே தோற்றமளிக்குமாறு தயாரிக்கப்பட்டது.

ஸ்புட்னிக் வி, நுரையீரல் சார்ந்த நோய்களை உருவாக்கும் மனித வைரஸ்களிலிருந்து உருவாக்கப்பட்டது. கோவாக்சின் முதல் வகையைச் சேர்ந்தது – கொல்லப்பட்ட கொரோனா வைரசிலிருந்து தயாரிக்கப்படுவது. (அமெரிக்காவில் போடப்படும் Pfizer மற்றும் Moderna வாக்சின்கள் மரபணுக் கூறுகளைக் கொண்டு (mRNA வாக்சின்) தயாரிக்கப்படுபவை.)

Corona-vaccine-800-400x276.jpg
 

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் AdV26 என்ற வேக்சினுக்கும் விரைவில் இந்திய அரசு அங்கீகாரம் அளிக்கும் எனக் கூறப்படுகிறது. இதுவும் சேர்ந்தால், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், AdV26 ஆகிய மூன்று வைரல் வெக்டர் வேக்சின்களாக இந்தியாவில் தரப்படும்.

000

கோவிட் வேக்சின்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

எளிமையாகச் சொல்வதானால் – கொரோனா வைரஸைப் போன்ற வலுவற்ற வைரசைக் கொண்டவைதான் வேக்சின்கள். (வைரத்தை வைரத்தால் அறுப்பது என்பார்களே, அதுபோல, கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கான வேக்சின்களும் அந்தந்த நோய்க் கிருமியைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.) இவை உடலில் நுழைந்ததும், உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி விழித்துக் கொண்டு இவற்றை எதிர்த்துப் போராடி அழிக்கின்றது.

ஒருமுறை அப்படி ஆகிவிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியில் உள்ள மெமரி செல்கள் இந்த வைரசை நினைவில் வைத்துக் கொள்கின்றன. அடுத்து எப்போது இந்த வைரஸ் தாக்கினாலும் உடனே எதிர்வினை காட்டி, வைரஸை எதிர்த்துப் போராடி அழிக்கும்.

இப்போது சாமானியர்களின் கேள்விகளுக்கு வருவோம்.

000

வேக்சின் போடப்பட்டவர்களுக்கு கோவிட் வருமா? ஏன் வருகிறது? அப்படியானால் வேக்சின் வேலை செய்யவில்லையா?

கோவிட் மட்டுமல்ல, எந்தவொரு தடுப்பு மருந்தும் உடனடி பலனைத் தராது. கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் தரப்பட்ட பிறகு, உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாக சில வாரங்கள் ஆகும். இரண்டாவது டோசும் தரப்பட்ட பிறகே முழுமையான தடுப்புத் திறன் கிடைக்கும். (இரண்டாவது டோசும் தரப்பட்ட பிறகு இரண்டு வாரங்கள் கழித்தேப் பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்கள். இதை விண்டோ பீரியட் என்கிறார்கள்.

ஒருவருக்கு ஏற்கெனவே தொற்று ஏற்பட்டிருந்து, வேக்சின் போடும்போது தெரியாமல் இருந்திருந்தால், அதன்பிறகு பரிசோதனை செய்யும்போது பாசிடிவ் காட்டும் சாத்தியங்கள் உண்டு. தடுப்பூசியின் காரணமாக கோவிட் ஏற்படுவதில்லை. முழுமையானப் பாதுகாப்புக் கிடைக்கும் வரை தொற்றுக் கண்டறியப்பட வாய்ப்பு உண்டு.

தடுப்பூசிகள் நோய்களைத்தான் தடுக்கும், தொற்றினைத் தடுக்காது. அதாவது, தொற்றுக்கு ஆளானாலும் நோயின் தீவிரம் ஏற்படாமல், உயிருக்கு ஆபத்தில்லாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

000

பக்க விளைவுகள் இல்லை என்றால் மருந்து வேலை செய்யவில்லை என்று அர்த்தமா?

நீங்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஏதேனுமொரு மருந்துக்கான பக்க விளைவுகளைத் தேடிப் படித்துப் பாருங்கள். அதன் பக்க விளைவுகளின் பட்டியலைப் படித்தால், அந்த மருந்தையே சாப்பிட மாட்டீர்கள்!. உதாரணமாக, மீதமுள்ள என் ஆயுள் முழுமைக்கும் தினமும் ஒரு மருந்தை இரண்டு வேளை எடுத்தாக வேண்டும். 

Mesahenz அல்லது mesalmine போன்ற அந்த மருந்தின் பக்க விளைவுகள் — Flatulence, Headache, Itching, Diarrhea, Nausea, Stomach pain/epigastric pain, Dizziness, Joint pain, Muscle pain, Vomiting. (வாயு பிரிதல், தலைவலி, அரிப்பு, வயிற்றுப் போக்கு, குமட்டல், வயிற்று வலி, தலைசுற்றல், மூட்டுவலி, தசை வலி, வாந்தி)! இந்தப் பக்க விளைவுகளுக்கா நான் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் பதிவு எழுத முடியுமா!

Shajahan-post-202x300.jpg
ஒரு மருந்தின் பக்க விளைவுகள் எனப் பட்டியல் இடப்படும் எல்லாம் எல்லாருக்கும் ஏற்படும் என்பதில்லை. கோவிட் வேக்சின் பொறுத்தவரை, ஊசி போட்ட இடத்தில் வலி அல்லது வீக்கமும், சிவத்தல், அரிப்பு, காய்ச்சல், குளிர் காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி போன்றவை பக்க விளைவுகளாக இருக்கலாம்.

இவை எல்லாம் ஏற்பட்டால்தான் நல்லது என்று நினைத்துவிட வேண்டாம். சிலருக்கு எல்லா பக்க விளைவுகளும் இருக்கலாம், சிலருக்கு எந்தப் பக்க விளைவும் இல்லாமலும் இருக்கலாம். பக்க விளைவுக்கும் மருந்து வேலை செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

000

வேக்சின்கள் எந்த அளவுக்கு பாதுகாப்புத் தரும்?

பல்வேறு நோய்களுக்கு உருவாக்கப்பட்ட பல தடுப்பு மருந்துகள் பல்வேறு அளவில் பலன் தந்துள்ளன. சில தடுப்பு மருந்துகள், சில நோய்களை முற்றிலும் ஒழித்து விட்டன (உதாரணம், சின்னம்மை, போலியோ போன்றவை). இந்தியாவில் கோவிட் வேக்சினைப் பொறுத்தவரை, இரண்டு டோஸ்களும் போட்டால் — கோவிஷீல்ட் திறன் 90% என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோவாக்சின் பொறுத்தவரை, மத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளின் காரணமாக, முழு பரிசோதனை முடியாமலே அங்கீகரிக்கப்பட்டது. இப்போது மூன்றாம் கட்டப் பரிசோதனையின் இடைக்கால அறிக்கை வந்துவிட்டது. இதன் திறன் 81% எனக் கூறப்படுகிறது

ஸ்புட்னிக் வி வேக்சின் திறன் 92% என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Pfizer மற்றும் Moderna வாக்சின்களின் திறன் 94% என மதிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியானால், எல்லாருக்குமே பயன் கிடைக்காதா என்று கேட்டால், ஒருவர் விடாமல் மக்கள் அனைவருக்குமே தடுப்பூசி போட்டாக வேண்டும் என்பதில்லை. போதுமான அளவுக்கு மக்கள் COVID-19-ல் இருந்து பாதுகாக்கப்பட்டு விட்டால், பிறகு மக்கள் திரளிடையே நோய் எளிதாகப் பரவ இயலாது.

இதுதான் “மக்கள் திரள் நோயெதிர்ப்பு சக்தி” (Herd immunity) என அழைக்கப்படுகிறது; இது ஏற்பட்டுவிட்டால், மருத்துவமனைகளின் மீது பாரம் குறையும், இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, யு.எஸ்.இல் மக்கள் திரள் நோயெதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டுமானால், குறைந்தது 70% பேருக்கு வாக்சின் போடப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

000

இப்போது இந்தியாவில் டபுள்-ம்யூடன்ட் (பிறழ்வுற்ற வைரஸ்) வைரஸ்கள் பரவி வருகிறதாமே? இப்போது போடப்படும் வேக்சின், புதிய வகை வைரசுக்கு எதிராகவும் வேலை செய்யுமா?

இந்தியாவில் மட்டுமல்ல, எட்டு நாடுகளில் பிறழ்வுற்ற வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரட்டைப் பிறழ்வு வைரஸ் எனப்படும் வைரசும் கூட 15 வகைகள் உள்ளன என்கிறார்கள். கொரோனா வைரசைப் பொறுத்தவரை இன்னும் பல வகை பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன, இன்னும் ஏற்பட்டிருக்கலாம், இன்னும் கண்டறியப்படாமலும் இருக்கலாம். இந்தியாவில் கோவிட் திடீரென அதிகரிப்பதற்கு இந்த பிறழ்வுற்ற வைரஸ்தான் காரணம் என்று கருத இடமிருக்கிறது. அறிவியலார் இதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலே கண்ட கேள்விக்கானப் பதிலைக் கண்டறிய முனைந்திருக்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி என்பது சிக்கலான ஒரு விஷயம். நமது உடல் பல்வேறு வகையான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பல்வேறு ஆன்டிபாடிகள் வைரசின் பல்வேறு பாகங்களைத் தாக்குகின்றன. எனவே, கோவிட் வேக்சின் வேலை செய்யுமா என்பது, கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டீன் மீது ஆன்டிபாடிகள் எந்த அளவுக்கு தாக்குதல் நடத்துகின்றன என்பதைப் பொறுத்து இருக்கிறது.

அதற்காக, இப்போதைய வேக்சின் புதிய பிறழ்வுற்ற வைரசிடமிருந்துப் பாதுகாப்புத் தராது என்றும் சொல்லிவிட முடியாது. எல்லா வேக்சின்களும் கொரோனா வைரசிலிருந்தே தயாரிக்கப்படுவதில்லை. முதலில் குறிப்பிட்டதுபோல, கொரோனா வைரஸ் என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ அதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்திய இதர வைரஸ்களையும் கலந்தே இந்த வேக்சின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, பிறழ்வுற்ற வைரசிலிருந்தும் இவை பாதுகாக்கும் என்று நம்பலாம்.

நம்மிடம் இருப்பது இப்போதைக்கு இந்த வேக்சின்தான். கண்டவர்களும் பரப்பும் வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் விட்டால், இன்னும் பரவல் அதிகரிக்கவே செய்யும். இன்னும் பல்லாயிரம் பேர் இறக்க நேரிடும். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வயது / வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுங்கள்.

000

தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு போன்ற பாதிப்புகள் நேர்கிறதா?

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதுபோல சிலர் கிளப்பி விட்டதால்தான் தடுப்பூசி விழிப்புணர்வுக்காக ஆரம்பத்தில் குறிப்பிட்ட மொழியாக்க வேலை எனக்கு வந்தது. தடுப்பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது, நோயெதிர்ப்பு சக்தி பாதிக்கிறது போன்ற வதந்திகள் அங்கே சுற்றுகின்றன.

heart-800-400x267.jpg
 

கொரோனா வைரசால் பல்வேறு சிக்கல்கள் வரலாம். நுரையீரலை, சுவாச மண்டலத்தைத் தாக்குவது தவிர, மற்ற சில நோய்கள் உள்ளவர்களும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

வைரஸ்தான் பிரச்சினைகளை ஏற்படுத்துமே தவிர, வைரசுக்கு எதிரான வேக்சின் பிரச்சினைகளை ஏற்படுத்தாது. ஏனென்றால், வேக்சினின் வேலை வைரசை அடையாளம் கண்டு தாக்குவதற்கான ஆன்டிபாடிகளை உருவாக்கச் செய்வதுதான். ஏற்கெனவே பார்த்தது போல சில வேக்சின்கள் வைரசின் ஸ்பைக் புரோட்டீனைத் தாக்கும். வேறு சில, மரபணு அமைப்பைத் தாக்கும்.

தடுப்பூசி போட்டதால் மாரடைப்பு வந்து விட்டது, தடுப்பூசி போட்டதால் கோவிட் வந்து விட்டது போன்ற பதிவுகளைக் கண்டால் கண்டித்துத் திருத்துங்கள், நீக்கச் சொல்லுங்கள். அவை மேலும் பரவாமல் தடுத்து நிறுத்துங்கள்.

000

தடுப்பூசி போட்டுக் கொண்டாயிற்று. பிறகு எதற்கு மாஸ்கும், இடைவெளியும்?

தடுப்பூசி போட்டுக் கொண்டது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள. மாஸ்க் அணிவது உங்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க. வாக்சின் போடப்பட்ட மக்களும் அறிகுறிகள் இல்லாமலே தொற்றுக்கு ஆளாகியிருக்கவும் கூடும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் தொற்றுக்கு ஆளாகக் கூடும் என்பதை மேலே பார்த்தீர்கள் அல்லவா? எனவே, மாஸ்க் அணிவதும் இடைவெளி பராமரிப்பதும் உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக.

ஒரு வாதத்துக்காக, இப்போதைய வாக்சின் புதிய வகை வைரஸ்களுக்கு வேலை செய்யாது என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் நமக்கு பாதுகாப்புதான் என்ன? இதற்கான தீர்வினை அறிவியலார் கண்டறியும் வரை மாஸ்க் அணிவதும், கூட்டங்களைத் தவிர்ப்பதும், இடைவெளி பராமரிப்பதும், சானிடைஸ் செய்வதும்தான்.

000

எச்சரிக்கை

மருத்துவமனைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இடம் கிடைக்க அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கோவிட் டெஸ்ட் எடுக்கவும் டிமாண்ட் கடுமையாக அதிகரித்து வருகிறது. சில லேப்களில், இன்று புக் செய்தால் அடுத்த வாரம்தாம் டெஸ்ட் எடுக்க வருவார்கள். (தில்லியில் அரசு நடத்தி வந்த சில பரிசோதனை மையங்களை மூடிவிட்டது.)

கோவிட் பாசிடிவ் எனக் கண்டறியப்பட்ட தமிழக நண்பர் ஒருவர், தான் தனியாக இருப்பதால் மருத்துவமனைக்குச் சென்று தங்கி விடலாம் என்று சத்தர்பூர் சென்றிருக்கிறார். அங்கே மருத்துவமனைக்கான அடையாளமே இல்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய கோவிட் சிறப்பு மருத்துவமனை என்று படம் காட்டப்பட்ட சில தற்காலிக மருத்துவமனைகள் பிரிக்கப்பட்டுவிட்டன. குஜராத் நிலைமை பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம்.

இன்னும் சில நாட்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு வரப்போகிறது. இரண்டாவது டோஸ் போட வேண்டியவர்களுக்காவது தட்டாமல் கிடைக்குமா என்ற கேள்வி பிரம்மாண்டமாக நிற்கிறது.

கொரோனாவாவது மயிராவது, எல்லாம் மாஃபியா, இல்லுமினாட்டி சதி, தடுப்பு மருந்துகளே தேவையில்லை, இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கிறது என்னும் வாட்ஸ்அப் வாயர்களின் உளறல்களை நம்பிக் கொண்டு இருந்தீர்கள் என்றால், உங்கள் சுற்றத்தாரையும் பிள்ளைகளையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள் என்றுதான் பொருள்.

பி.கு. – தடுப்பூசி போட்ட பிறகு விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தடுப்பூசியால்தான் ஏற்பட்டதா என்பதை மருத்துவ ஆய்வுகள்தான் காட்டும். அதற்குள், வதந்திகளைப் பரப்பக் கூடாது.

பக்க விளைவுகளைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். சிலருக்கு தீவிரமான சில பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆனால் அவை மிக மிக அரிது. மிகச் சிலருக்கு மிக அரிதாக ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பலகோடிப் பேருக்கு ஏற்படக் கூடிய பயனைப் புறக்கணித்துவிடக் கூடாது.

பதிவுக்கு உதவிய வலைதளங்கள்

1. Gavi
2. Outlook
3. BBC
4. NewYork Times

முகநூலில் : Shahjahan R
 

 

https://www.vinavu.com/2021/04/20/actor-vivek-death-and-covit19-vaccination/

Link to comment
Share on other sites

என் தெலுங்கு நண்பரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தியாவில் இந்த கோவாக்ஸ் தடுப்பூசி போட்டு 48 மணித்தியாலங்களுக்குள் திடீர் என்று இறந்து விட்டார். இந்த தடுப்பூசியில் எனக்கு சந்தேகம் இல்லை, ஆனால் இவர்களது தரக் கட்டுப்பாடும் தடுப்பூசியை store பண்ணி வைத்திருக்கும் விதத்திலும் தான் சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

என் தெலுங்கு நண்பரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தியாவில் இந்த கோவாக்ஸ் தடுப்பூசி போட்டு 48 மணித்தியாலங்களுக்குள் திடீர் என்று இறந்து விட்டார். இந்த தடுப்பூசியில் எனக்கு சந்தேகம் இல்லை, ஆனால் இவர்களது தரக் கட்டுப்பாடும் தடுப்பூசியை store பண்ணி வைத்திருக்கும் விதத்திலும் தான் சந்தேகம்.

இந்தியாவின் கொரோனா கொடூரம், அந்த நாட்டுக்கு மட்டுமானது அல்ல, உலக நாடுகள் அனைத்துக்கும் என்ற நிலைப்பாடு எடுத்திருக்கும், பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் தேவையான பிராணவாயு, கொரோனா தடுப்பு மருந்து, மருந்து தயாரிப்பதற்குரிய மூல பொருட்கள் மீதான ஏற்றுமதி தடை நீக்கி, உதவ முன்வந்துள்ளன. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.