Jump to content

T.அசுவத்தாமன்


Recommended Posts

 

சுப்பவைசர் அசுவத்தாமனை சிலர் காட்டேரி என்றும் வேறு பலர் சாமக்கோடாங்கி என்றும் பட்டப்பெயரிட்டு அழைத்த போதிலும் அநேகரை கேட்டால் கடுமையான நேர்மையான உழைப்பாளி என்றே சொல்லுவார்கள். சிங்கபுரியில் இரவு பகலாக 24 மணித்தியாலமும் வேலை நடக்கும் இந்த கட்டுமான தளத்தில் தொழிலாளர்கள் இரண்டு சிப்டுகளில் மாறி வேலை செய்த போதிலும் அசுவத்தாமன் இரண்டு சிப்டுகளையும் தனி ஆளாக பார்த்துக்கொள்வான். காலை நேரத்தில் வலது கண்ணாலும் இரவு வேளையில் இடது கண்ணால் தூங்குவதாலேயே இப்படி முழுநாளும் வேலை செய்ய முடிகிறது என வேலையாட்கள் தமக்குள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கிறேன். புறஜெக்ட் மனேச்சராக பெயருக்கு நான் இருந்த போதிலும் அசுவத்தாமன்தான் சைட்டை தனியாளாக ஓட்டுகிறான் என்பது எல்லோருக்குமே தெரியும். எனது சம்பளத்தை விட அவனின் சம்பளம் பல மடங்கு அதிகம். இது குறித்து நான் சில சமயங்களில் வருத்தப்பட்ட போதிலும் அவனது திறமைக்கு சரியான சன்மானத்தை பெறுவதாக கருதி மனதை ஆறுதல்ப்படுத்தியிருக்கிறேன்.

அசுவத்தாமன் ஆறரை அடி உயரம் இருப்பான். அவன் நடக்கும் போது அரபுபுரவி போலிருக்கும். பரந்து விரிந்த மார்பும் ஒடுங்கிய வயிறுமாக அவன் தோற்றம் இதிகாசநாயகர்களை நினைவு படுத்தும். அவனது திமிறிய தசைகளையும் கூரிய நாசியையும் நேரிய புருவங்களையும் பார்க்கும் எந்தப்பெண்ணுமே தடுமாறித்தான் போவாள். அப்படித்தான் கருப்பு சரும தென்னாசியர்கள் என்றாலே இளக்காரத்தோடு பார்க்கும் ஒப்பிரேசன் மனேச்சர் "லிடியா இங்" க்கும் அசுவத்தாமனிடம் நிலைகுலைந்து போனாள். லிடியா திருமணமானவள். ஐந்து வயதில் பிள்ளை வேறு உண்டு. ஆனாலும் கட்டுக்குலையாத காரிகை அவள். சூழல் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம், போக்குவரத்து துறை போண்ற அரசாங்க நிர்வாக பிரிவுகள் பாயும் போதெல்லாம் சமாளிப்பது அவள் தான். எங்களைக்கண்டால் பொங்கியெழும் அரச அலுவலர்கள் லிடியாவை கண்டதும் வாயெல்லாம் பல்லாகி அடங்கி விடுகிறார்கள். 

நடப்பாண்டில் எமது நிறுவனம் 5 வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. அவற்றில் பெரியது இந்த புறஜெக்ட் தான். 100 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள திட்டம் இது. 3 km நீளமான நிலத்தடி புவியீர்ப்பு கழிவுநீர்கற்றல் தொகுதியை 18 மாதங்களில் நிர்மாணித்தாக வேண்டும்.  அதிகமான பாறைகளை கொண்ட தரைப்பகுதியில் அதிகமான ஆழத்தில் மைக்ரோ டனல் இயந்திரத்தை இயக்குவது சிக்கலாக இருக்கும் என்று அநேக நிறுவனங்கள் பின்வாங்க எங்கள் முதலாளி மட்டும் விடாப்படியா நின்று டென்டர் போட்டு இந்த வேலையை கைப்பற்றினார். அவரது ஒரே நம்பிக்கை அசுவத்தாமன். அவன் கடந்த 20 வருடமாக செய்த வேலைத்திட்டம் எதிலும் துளையிடும் இயந்திரம் இடைநடுவே சிக்கியதாக வரலாறில்லை. இது வழமைக்கு மாறானது. சிங்கப்பூரில் இயந்திரம் சிக்காமல் முடிந்த புரஜெக்ட்களை விரல் விட்டு எண்ணலாம்.முதலாளி அனுமாசிய சக்திகளில் நம்பிக்கை கொண்டவர். பேய்க்கு படையல் வைத்து அடிக்கடி பீதியை கிளப்புவார். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் அவர் அசுவத்தாமனோடு உரையாடும் வேளையில் மட்டும் தனி மரியாதை தொனிப்பதை கண்டிருக்கிறேன்.

அசுவத்தாமனின் அள்ளைக்கை என்று கருதக்கூடிய ஒரு வேலையாள் இருக்கிறான். அவன் ஓரு தடவை போதையில் சொன்ன தகவல்கள் முதுகெலும்பை சில்லிட வைத்தன. Tuasல் வேலை செய்த போது துளையிட்டபடி சென்ற இயந்திரம் இடைநடுவே பழுதாகிவிட்டதாம். அசுவத்தாமன் நள்ளிரவில் தன்னை Manhole வாசலில் நிற்கச்செல்லிவிட்டு பிராணவாயுவே இல்லாத குழாய் வழியாக தவன்று சென்று இயந்திரத்தை சரி செய்து விட்டு திரும்பினானாம். இன்னொரு நாள் பாரம் தூக்கி பழுதாகிய போது வேலையாட்களை மதிய உணவுக்கு அனுப்பி விட்டு வெறும் கைகளால் பல தொன் நிறையுள்ள I-Beamகளை தூக்கி அடுக்கிக் கொண்டிருந்தானாம். விடிகாலையில் மழைநீர் தேங்கிய வெட்டப்பட்ட குழிகளில் இறங்கி அரையளவு நீரில் நின்று சூரிய வணக்கம் செய்வதுமுண்டாம். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு அசுவத்தாமனோடு மிகுந்த எச்சரிக்கையோடு பழக ஆரம்பித்தேன்.

 

 

சிங்கப்பூர் சீனர்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை கொண்ட லிடியா அசுவத்தாமனிடம் ஈர்ப்பு கொண்டதன் பின்னணியில் சுவாரசியமான சம்பவம் இருக்கிறது. லிடியா வேலைத்தலத்தில் உலாப்போய்க்கொண்டிருந்த போது தற்காலிக மண்வீதி மழை ஈரத்தில் பொறிய வாகனம் பள்ளத்தில் சாய்ந்தது. வேகமாக ஓடிப்போன அசுவத்தாமன் வெறும் கரங்களால் பிரண்டு போயிருந்த லாண்ட் ரோவரை நிமிர்த்தி லிடியாவை தூக்கிக்கொண்டு வந்தான். அன்று தான் லிடியா அவனை வெகு அண்மையில் பார்த்திருக்க வேண்டும். அடுத்து கழிந்த நாழிகை முழுவதும் அடிக்கடி அசுவத்தாமனை பார்த்து புன்னகைப்பதும் நன்றி கூறுவதுமாக இருந்தாள். வெகு நேரத்திற்கு இது நீடிக்காது என்று நான் எண்ணியதற்கு மாறாக மறுநாள் இருவரும் ஒன்றாய் மதிய உணவுக்கு புறப்பட்டு போனார்கள். லிடியா அவனை "அஸ்வன்" என்று செல்லப்பேர் வேறு வைத்து அழைக்கத்தொடங்கியிருந்தாள். எனது மற்றும் நிறுவனத்திலிருக்கும் அநேகரின் வயிற்றெரிச்சலையும் மீறி வளர்ந்த இந்த காதல் லிடியா கர்ப்பமாவதில் போய் முடிந்தது.
 
"சுகன்! நான் இப்போ மூன்று மாசம். அஸ்வன் கருவை கலைக்கச்சொல்லி வற்புறுத்துகிறார். உங்களால் அவரோடு பேசி சமாதானப்படுத்த முடியுமா?"
 
பூட்டிய மீட்டிங் அறையில் லிடியா வெடிகுண்டை வீசினாள்.
 
"உங்களுக்கு திருமணமாகி விட்டதே லிடியா?"
 
"அதனாலென்ன விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறேன். குழந்தை பிறந்தவுடன் அஸ்வனை மறுமணம் செய்வதாக இருக்கிறேன்."
 
"சரி உங்களுக்காக அவனோடு பேசுகிறேன்"
 
 
 
நான் அழைத்து சில நிமிடங்களில் உடலை வில்லாக வளைத்து குனிந்தபடி தலை மேலே கொள்கல அலுவலக கூரையில் இடிக்காதவாறு  உள்ளே வந்தான் அசுவத்தாமன்.
 
""வரச்சொன்னீர்களாமே! என்ன விடயம்?" 
 
"நடிக்காதே! நீ செய்த ஈனச்செயல் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்"
 
இருவருக்குமிடையே நிலவிய சில நொடி மௌனத்தை உரத்த குரலில் அசுவத்தாமன் கலைத்தான்.
 
"எது ஈனச்செயல்? நான் செய்தது ஒரு இரவு நேர வலிந்த தாக்குதல். Night raid என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நீதியை மீறி யுத்தம் செய்தவர்களை இரவில் தாக்குவது தவறாகாது. அப்படிப்பார்த்தால் உங்களது ஊரில் நடைபெற்ற எல்லாளனும் போர்தர்மங்களை மீறியது தான்"
 
"நாம் கர்ப்பத்தைப்பற்றி பேசுகிறேன் நீ ஏன் தொடர்பே இல்லாமல் எல்லாளனை இழுக்கிறாய்?"
 
"ஓ கர்ப்பமா? அது அபிமன்யுவின் மனைவி உத்தாராவினுடையது. அப்பா இல்லாத அந்த குழந்தை பிறந்திருந்தால் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கும்?. நான் அதன் வேதனையை போக்கியிருக்கிறேன். அதைப்பற்றி நீ யோசித்ததுண்டா?"
 
"குழப்புகிறாயே? . முதல்ல ஹெல்மெட்டை கழட்டு. ஒபிசுக்குள்ள எதுக்கு சேப்டி ஹெல்மெட்?"
 
அசுவத்தாமன் ஹெல்மெட்டை கழற்ற மேல்நெற்றியில் நீண்ட ஆழமான வடு தென்பட்டது. தலைமயிரை முன்னே இழுத்து வடுவை மறைக்க முயற்சித்தான்.
 
"இது கிருஸ்ணன் செய்த சதியால் உருவான வடு இது. 22ம் திகதி மார்கழி மாதம் கிறிஸ்துவுக்கு முன் 3067ம் ஆண்டு தொடங்கின சண்டை 18 நாளா நடந்து தை மாசம் 10 திகதி முடிந்தது.11 திகதி நான் பிரமாஸ்திரம் அடிச்சனான். அண்டைக்குத்தான் இந்த காயமும் வந்தது"
 
காயத்தை மறைத்த படி அசுவத்தாமன் சொல்லிக்கொண்டு போக எனக்கு உடம்பெல்லாம் உதறல் எடுக்க தொடங்கியது.
 
"இரவு நேர தாக்குதல், பிரம்மாஸ்திரம் , நெற்றியில் வடு இதெல்லாத்தையும் வச்சுப்பார்த்தால் நீ துரோணர் மாஸ்டர்ட மகன் அசுவத்தாமன் தானே? அடப்பாவி கிருஸ்ணர் உன்னை காட்டுக்கை அலையோணும் எண்டெல்லோ சாபம் போட்டவர். எப்படி நாட்டுக்கை வந்தனி?"
 
""காடு என்று சாபம் போட்ட பார்த்தன் எந்தக்காடு என்பதை வரையறுக்காம விட்டுட்டான். சிங்கப்பூரும் ஒரு கொங்கிறீட்டு காடு தானே?. அவன்ட சாபத்திலை இருக்கிற ஓட்டையை பயன்படுத்தி இங்கு வந்து விட்டேன்"
 
"வந்ததும் பத்தாமல் ஒரு வேற்றின குடும்ப பெண்ணை கர்ப்பமாக்கி விட்டாயே படுபாவி!"
 
நான் கோபத்தோடு கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பிக்க என்னை சற்றும் பொருட்படுத்தாத அசுவத்தாமன் மேசையில் இருந்த பேனை மூடியை எடுத்து விரலிடுக்கில் வைத்தபடி கண்களை மூடி மந்திரம் உச்சரிக்கலானான். சில நொடிகளில் கண்ணைப்பறிக்கும் ஒளியோடு கிளம்பிய அந்த பேனா அஸ்திரம் தடித்த தகரத்திலான அலுவலக கூரையை பிளந்து கொண்டு லிடியா வயிற்றில் வளரும் கருவை நோக்கி பறக்கலானது.
 
 
பிற்குறிப்பு : பாரதப்போரின் முடிவில் பஞ்ச பாண்டவர்களின் புதல்வர்களை இரவில் தாக்கி கொண்ற பின்னர் உத்தரையின் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த அபிமன்யுவின் குழந்தையை நோக்கி பிரம்மகணையை பிரயோகம் செய்த  பாவத்துக்காக கிருட்டினனின் சாபத்துக்கு ஆளான அசுவத்தாமன் இன்று வரை காடுகளில் அலைந்து திரிகிறான். ஆறாத நெற்றிக்காயத்தோடு அவனை கண்டதாகவும் உரையாடியதாகவும் பல கதைகள் உண்டு. மரணத்தை தழுவ முடியாமல் யாருடைய அன்பையும் பெற முடியாமல்  சிரஞ்சீவியாக வாழும் அவன் கலியுக முடிவிலே மூப்படைவான் என்கிறது மகாபாரதம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கற்பனை ......இப்பொழுது அசுவத்தாமன் எங்கிருப்பான், எந்த வடிவத்தில் இருப்பான்......!  😂

Link to comment
Share on other sites

11 hours ago, suvy said:

சிறப்பான கற்பனை ......இப்பொழுது அசுவத்தாமன் எங்கிருப்பான், எந்த வடிவத்தில் இருப்பான்......!  😂

மிக்க நன்றி சுவி. அஸ்வத்தாமனை கண்டதாக ஏராளமான காணொளிகளும், வட இந்திய தொலைக்காட்சி சனல் செய்திகளும் நீகுழாயில் உள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.