Jump to content

மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவுக்கு எப்படி உதவும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ஆழி செந்தில்நாதன்
  • மொழியுரிமை செயற்பாட்டாளர்

ஸ்டாலின்கிராடாக மாறிய சென்னையிலும் வாட்டர்லூவாக மாறிய கொல்கத்தாவிலும் நேற்று விடப்பட்ட பெருமூச்சு, மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் பல எதிர்க்கட்சிகளுக்கு ஆக்சிஜனாக உருமாறியிருக்கிறது. அநேகமாக இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் பிழைத்துக்கொள்ளும்போலிருக்கிறது!

2024 இல் நடைபெறவுள்ள அடுத்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் என்பது ஒரு இறுதிப் போட்டி என்றால், இப்போது நடந்து முடிந்திருப்பது கால் இறுதிப் போட்டி. இடையில் 2022 இலும் 2023லும் வேறுசில போட்டிகளும் பிறகு இந்தி மாநிலங்களில் அரை இறுதிப் போட்டியும் வரவுள்ளன. இந்த கால் இறுதிப் போட்டியில் பா.ஜ.கவின் எதிர்ப்பு அணி தீர்க்கமான முறையில் வெற்றி பெற்றுள்ளது.

எதிர் வியூகம் தரும் நம்பிக்கை

கோவிட் - 19 விவகாரத்தில் உலகெங்கும் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டிருக்கும் மோடி அரசுக்கு எதிரான உள்நாட்டுத் தீர்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது. இதைக் கவனியுங்கள்: கடந்த சில ஆண்டுகளாக மோடி-அமித்ஷாக்கள் உருவாக்கிவரும் தேர்தல் வியூகங்களைப் பற்றியே படித்துப் படித்துச் சலித்துபோன நமக்கு, முதன் முதலாக அவர்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வியூகங்கள் எப்படி உருவாகின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பு திடீரென உருவாகிவிட்டது. ஒரு எச்சரிக்கை உணர்வுடனேயே இதைச் சொல்கிறேன்.

திமுக தொண்டர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பா.ஜ.க. எந்தத் தேர்தலையும் தேர்தலாக மட்டுமே எதிர்கொள்வதில்லை. எனவே இந்தத் தேர்தலில் அவர்கள் அடைந்திருக்கும் தோல்வியை தேர்தல் தோல்வியாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளமுடியுமே ஒழிய அவர்களின் ஒட்டுமொத்தத் தோல்வியாக எடுத்துக்கொள்ளமுடியாது.

இந்த எச்சரிக்கை உணர்வுடன்தான் பாஜக எதிர்ப்பாளர்கள் இந்த முடிவுகளை அலசவேண்டும். ஆனால் அதீத எச்சரிக்கை உணர்வு, காலம் தரும் பொன்னான வாய்ப்புகளை தவறவிடுவதில் முடிந்துவிடக்கூடாது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் அரசியலை ஒழித்துக்கட்டுவதற்கான போரை பாஜக நடத்திக்கொண்டிருக்கிறது.

ஒரே சாரம்சாரத்தில் மூன்று போர்கள்

பினராயி விஜயன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அ.இ.அ.தி.மு.க. என்கிற ஒரு போலி திராவிடக் கட்சியின் முதுகில் ஏறிக்கொண்டே பா.ஜ.க. தேர்தல் களம் கண்டது. கேரளத்தில் உள்ளே நுழைவதுதான் பா.ஜ.கவின் மிகப்பெரிய நோக்கமாக இருந்துவருகிறது. ஆனால் உண்மையான பெரும்போர் நடந்தது மேற்கு வங்காளத்தில்.

மகா யுத்தம் என்றுதான் பா.ஜ.க. ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் அதை வர்ணித்தார்கள். இந்த மூன்று போர்க்களங்களும் வெவ்வேறு போலத் தோன்றினாலும் சாராம்சத்தில் அவை ஒரே களம்தான். ஸ்டாலினும் மமதாவும் விஜயனும் சரியாக எதிர்த்துப் போராடினார்கள்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் தில்லியின் அடாவடித்தனத்துக்கு எதிராக மலையாளிகள் மாநில உரிமைகளைத் தூக்கிப்பிடிக்கும் விஜயனுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.கவின் அரசியலைக் கண்டு நொந்துபோன கேரள மக்கள், அதற்கான பதிலைத் தந்திருக்கிறார்கள்.

மாநில உரிமை, மொழி உரிமை, இட ஒதுக்கீடு, மக்கள் நலப் பொருளாதாரம் என தாங்கள் பார்த்து பார்த்துக் கட்டிய வீட்டை இடிக்க வந்த வடக்குத் தெருக்காரனையும் அவரது லோக்கல் புரோக்கரையும் தமிழ்நாடு புறந்தள்ளியது. குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக வங்காளிகளின் மத்தியில் பா.ஜ.க. எழுப்பிய மிகப்பெரிய கேள்விக்கு இன்று மம்தா மூலம் வங்க மக்கள் பதில் கொடுத்திருக்கிறார்கள். தில்லியிலிருந்தும் குஜராத்திலிருந்தும் வந்த பா.ஜ.கவினரை மேற்கு வங்க மக்கள் ஒரு படையெடுப்பு ராணுவத்தினராகவே பார்த்தார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது.

மம்தா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாதாரண வங்காளி இப்போது மம்தாவின் மூலம் தன் வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறான். மக்களின் விருப்பங்களைத் தேர்தல் வெற்றிகளாக மாற்றுவதற்கு வெற்றிகரமான தலைவர்கள் தேவை. இந்தியாவின் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரசால் அப்படிப்பட்ட தலைவர்களை இனம் காட்ட முடியவில்லை. ஆனால் ஸ்டாலினும் விஜயனும் மம்தாவும் அப்படிப்பட்ட தலைவர்களாக எழுந்து நின்றார்கள். அண்மைக் காலத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக துணிச்சலாக எழுந்து நின்று இன்றுவரை நிலைத்திருக்கும் தலைவர்கள் வெகுசிலரே..

மகாராஷ்டிரத்தில் அதிசயமாக தலையெடுத்த உத்தவ் தாக்கரே ஓர் எடுத்துக்காட்டு. மற்றபடி முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், தேவகெளடா போன்றோரின் அரசியல் காலம் முடிவடைந்த நிலையில், மாயாவதி போன்றோரின் தவறான பாதையாலும் சந்திர பாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் போன்றோரின் தடுமாற்றங்களாலும் இந்தியாவில் பா.ஜ.க. எதிர்ப்பணி பலவீனமடைந்திருக்கிறது.

பாஜகவுக்கு எதிரான அனைத்திந்தியக் கட்டமைப்புக்கு

பா.ஜ.கவுக்கு எதிராக ஒரு அனைத்திந்திய கட்டமைப்பை உருவாக்கும் அமைப்புசார் வலைப்பின்னல் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்குமே உண்டு. ஆனால் வங்கத்தில் சிபிஎம்மும் கேரளத்தில் காங்கிரசும் எதிர்கொண்டிருக்கும் இந்திய அரசியலின் அசலான உள்முரண் காரணமாக (மாநிலத்துக்கு மாநிலம் தனித்தனியே நிலவும் முரண்கள்), அவர்களால் அப்படிப்பட்ட அனைத்திந்தியக் கூட்டமைப்பை உருவாக்க முடியாது. பா.ஜ.வுக்கு எதிரான அனைத்திந்தியக் கூட்டமைப்பை மாநிலக் கட்சிகளால்தான் இனி உருவாக்கமுடியும் என்பதுதான் உண்மை.

பாஜகவுக்கு எதிரான பாதையை காட்டியவர்

மேற்கு வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதில் 'கேரள' கம்யூனிஸ்ட் கட்சியும் 'மேற்கு வங்காள' காங்கிரஸ் கட்சியும் சேர்ந்துகொள்ளலாம்! ஒரு ஸ்டாலினால்தான் காங்கிரசையும் கம்யூனிஸ்ட்களையும் வழிநடத்தமுடிகிறது. ஏனென்றால் யார் பூனைக்கு மணி கட்டுவது என்று நின்ற சமயத்தில், 2019 இல், ஸ்டாலின்தான் முதன்முதலில் இந்தியாவில் பா.ஜ.கவுக்கு எதிரான பாதையைக் காட்டினார். இதை யாரும் மறைத்துவிடமுடியாது.

மதச்சார்பின்மை, சமூகநீதி, மாநில உரிமை என்று மும்முனை ஆயுதமொன்றை பாஜகவின் இந்தி-இந்து-இந்துஸ்தான் என்கிற திரிசூலத்துக்கு எதிராகப் பயன்படுத்தினார். வென்றார்.

அதன் தொடர்ச்சிதான் மே 2.

இது மிக முக்கியமான நாள். தமிழ்நாட்டுக்கும் மேற்குவங்கத்துக்கும் கேரளாவுக்கும் இது மற்றுமொரு 1967. அறிஞர் அண்ணாவும் அஜய் முகர்ஜியும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் 1967ல் பெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகளால் உருவாக்கிய அரசியல் அடித்தளங்கள்தான் இன்று இந்த மாநிலங்களைக் காப்பாற்றியிருக்கின்றன. இந்தியாவையும் காப்பாற்றிவருகின்றன.

மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலங்காணா, ஆந்திரா, காஷ்மீர், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், பிஹார் ஆகிய மாநிலங்களில்தான் பா.ஜ.க. எதிர்ப்பரசியல் காலூன்றி நிற்கப்போகிறது.

இதற்கு இவர்களை ஒருங்கிணைக்கும் வாய்ப்பை மே 2 தந்திருக்கிறது.

ஆனால் இந்தக் காரியம் நடைபெற வேறு ஒரு பாமரனின் உதவியும் தேவை. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பரிதாபத்துக்குரிய இந்துக் குடிமகன் ஒருவன்தான் வெறுப்பரசியலுக்கு இறுதியில் கொள்ளிவைக்கப்போகிறான். அவன் இப்போது எங்கே ஒரு முலையில் நேற்று எரித்த தன் தாயின் சிதைத்தீயை மனத்தில் சினத்தீயாக ஏற்றிக்கொண்டவாறு உறுமிக்கொண்டிருக்கிறான். நம்பி கழுத்தறுத்தவர்களின்மீது அதீத கோபத்தில் இருக்கிறான். யோகிகளின் சினத்தைவிட ஏழைகளின் சினம் பெரிது. இவனை அணியில் சேர்த்துக்கொண்ட பிறகுதான், 2024ல் களத்துக்கே போகவேண்டும்.

மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவுக்கு எப்படி உதவும்? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.