Jump to content

முன்னையோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும்,...மாவீரன் இராவணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் எடுத்து தவங்கள் செய்தவன், முக்கடவுள்களில் முதல் கடவுளாகிய பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலானவர்கள் யாராலும் வெல்லப்படாத வரத்தை வாங்கியவன், உலகையே அடக்கி வைத்த வலிமையுடைவன் என்ற பெருமைகளையெல்லாம்


(“முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள்
எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும்”)



உடையவனாக இருந்தவன் இராவணன். அவன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன். பல கலைகளில் வல்லமை பெற்றவன். நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது
அவனது வீரமே.


மாரீசன் ஆரம்பித்து, இந்திரசித்து, கும்பகர்ணன் போன்ற பலரும் அவனுக்கு அறிவுரை சொல்லியும் அவன் கேட்காத போது வேறு வழியில்லாமல் அவன்
பக்கம் இருந்து தங்கள் அழிவைத் தேடிக் கொண்டார்கள். ஆனால் அத்தனை பேரைப் பழி கொடுத்த போதும் அவன் வருந்தினானே ஒழிய மனம் மாறவில்லை. அறிவுரைகளைக் கேட்ட பின்பும் என்ன நடந்தாலும் பின் வாங்க மாட்டேன் என்ற வீரத்துடனே தான் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இருந்தான்.


உதாரணத்திற்கு அவனுடைய மகன் இந்திரசித்து எதிரிகள் சாதாரண மானிடர்கள் அல்ல என்ற உண்மையைப் போரின் போது அறிந்து சொல்லி இராமனுடன் போர்
புரிவதைத் தவிர்க்க முயற்சித்த போது அவன் மகனிடம் சொல்லும் சொற்கள் வீரமும், கர்வமும் நிரம்பிய சொற்கள். மிக மிக அழகாக கம்பன் இராவணன் வார்த்தைகளாகச் சொல்வதைக் கேளுங்கள்.



முன்பு இராமனுடன் போரிட்டு இறந்தவர்கள் எல்லாம் இந்தப் பகையை முடிவுகட்டுவார்கள் என்றோ, இறக்காமல் இருப்பவர்கள் எல்லாம் இராமனை வெற்றி கொள்வார்கள் என்றோ, ஏன் நீயே அவனை வென்று வருவாய் என்ற நம்பிக்கையிலோ நான் இந்தப் பகையை வளர்க்கவில்லை. என் ஒருவனையே நம்பி தான் இந்த நெடும்பகையை நான் தேடிக் கொண்டேன்”.

(முன்னையோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும்
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர்ப் பெயர்வர் என்றும்
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால்
என்னையே நோக்கி நான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன்.)


நான் வெற்றி பெறா விட்டாலும் கூட வேதம் உள்ளளவும் இராமன் பெயர் நிலைத்து நின்றால் என் பெயரும் நிலைத்து தானல்லவா ஆக வேண்டும். இறப்பை எக்காலத்திலும் தவிர்க்க முடியுமா? அது பொதுவானதேயல்லவா?
இன்றிருப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பார்கள். புகழுக்கு இறப்புண்டோ


(வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ?
இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ?)


அவன் கூறியது போல் இராமனை அறிந்தவர் யாரும் இராவணனை
அறியாமல் இருக்க முடியுமா? யுகங்கள் கழிந்த பின்னும் இராமன் புகழுடன் இராவணன் பெயரும் சேர்ந்தல்லவா நிலைத்து நிற்கிறது.


போர் வருகிறது என்று முடிவானதும் அவன் மனம் பூரித்ததை கம்பன் சொல்கிறான். “சீதையின் எழிலால் மயங்கி, தினமும் ஏங்கியதால் தோள்கள்
மெலிந்து போன இராவணன் போர் என்றதும் உற்சாகமான மனத்துடன் வடமேரு மலையை விட தோள்கள் உயர பூரித்தான்
என்கிறான்.

(பொலிந்தது ஆங்குமிகு போர் எனலோடும்
நலிந்த நங்கை எழிலால், வலி நாளும்
மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும்
வலிந்து செல்ல, மிசைச் செல்லும் மனத்தான்.)


அப்படிப் போருக்குச் சென்றவன் இராமனின் வில் செய்த அற்புதங்களைக் கண்டு வியக்கிறான். முன்னாளில் தவம் செய்து பிரம்மாவிடம் வரம் வாங்கும் போது மனிதர்களாலும் கொல்லப்படக் கூடாது என்று வரம் வாங்க அவசியம் இருப்பதாக அவன் நினைக்கவில்லை. அவனைப் பொருத்த வரை
மனிதர்கள் பலவீனமானவர்கள். அப்படி நினைத்திருந்தவனுக்கு இராமனின் வில் திறத்தைக் காண நேர்ந்த போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் உண்மையான ஒரு வீரனால் தான் இன்னொரு வீரனை ரசிக்க முடியும், பாராட்ட முடியும். ஒரு காலத்தில் மானிடன் என்று இகழ்ந்த இராமனை போரின் போது கண்ட இராவணன் வியந்து மனதுக்குள் பாராட்டுகிறான்.

“வேதங்கள் தப்பினாலும் இவனது தனுசில் இருந்து கிளம்பும் விற்கள் தங்கள் இலக்கை சென்று சேராமல் தப்புவதில்லை


(“வேதம் தப்பின போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா)

ஒரு கட்டத்தில் தனக்கு அழிவு நிச்சயம் என்று இராவணன் உணர்கிறான். அப்போது வீடணன் முன்பு இராமனை வேத முதல் நாயகன் என்று சொல்லியிருந்தது நினைவு வருகிறது. ‘அப்படியும் இருக்குமோஎன்ற சந்தேகம் அவனுக்குள் பலமாக எழுகிறது. அப்போதும் “இராமன் யாரானாலும்
சரி. என் தனித்தன்மையான வீரம் மிகுந்த ஆண்மை வழி தான் நடப்பேன்
என்று துணிந்து போரைத் தொடர்கிறான்.

இறுதியில் “நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்என்று இராவணன் இராமனைப் போன்ற ஒரு வீரனைப் பகைவனாகப் பெற்றதற்காகப் பெருமை கொண்டு தனி ஒருவனாகவே போரிட்டு இறக்கிறான்.

கொடிய சிங்கத்தின் கோபம் போன்ற அவனது சினம் அடங்க, மனம் அடங்க, வஞ்சகம் போய் விட, பகைவர்களைத் தோற்றோடச் செய்த அவனுடைய கைகள் செயல் இழக்க, ஆசைகள் எல்லாம் அடங்க இராவணன் சாய்ந்த போது அவனுடைய ஒவ்வொரு முகமும் மும்மடங்கு பொலிந்ததாக கம்பன்
வர்ணிக்கிறான்


(வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க
மனம் அடங்க, வினையம் வீயத் தெம்மடங்கப்
பொருதடக்கைச் செயல் அடங்க

மயல் அடங்க, ஆற்றல் தேயத்
தம்மடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்ந்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன, அம்முறை துறந்தான்
உயிர் துறந்த முகங்கள் அம்மா!)


கம்பனின் யுத்த காண்டத்தை முழுமையாகப் படித்தவர்களுக்கு இறுதியில் இராவணன் வீழும் போது ஒருவித மரியாதையையும், பச்சாதாபத்தையும்
ஏற்படுத்தி விடுகிறான் கம்பன். இராவணனுடைய குறைகள் ஆயிரம் இருந்தாலும் அவனுடைய வீரம் ஒன்றே கடைசியில் நினைவில் நிற்பதே இராவணன் என்ற கதாபாத்திரத்தின் வெற்றி.





நன்றி:ஈழநேசன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.