Jump to content

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

by vithaiMay 3, 2021068
180843523_370310807655647_83973486558779

அவருக்கு கிட்டத்தட்ட 70 வயது இருக்கும். நான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்பவர். அவ்வப்பொழுது காணும்போதெல்லாம் நலம் விசாரிப்புகளுடனும், காலநிலை குறித்து முறைப்பாடுகளுடனும் அண்மைக்காலமாக கொரனா குறித்த ஏதாவது ஒரு சில வார்த்தைகளுடனும் கடந்துபோவார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைக் கண்டபோது அவர் உற்சாகமான மனநிலையுடனும் மலர்ந்த முகத்துடனும் இருக்கின்றார் என்பதை கொரனா காலத்துக்காக அணிந்திருக்கின்ற முகவுறையூடாகவும் கண்டுகொண்டேன். தம்பி, எங்களுக்கு ஒரு விடிவு வந்திட்டுதுபோல இருக்கு என்றார்; என்ன கொரனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சோ என்றேன். பேப்பர் பார்க்கேலேயோ, மோடி மகிந்தவுக்கு கடுமையாச் சொல்லிட்டாராம், தமிழாட்களுக்கு ஒரு சரியான தீர்வை உடனடியாக் கொடுக்கச் சொல்லி. மோடி மற்ற ஆட்கள் மாதிரி இல்லைத் தம்பி, இவை சரியா மாட்டுப்பட்டுப் போய் நிற்கினம் என்றார். உண்மையில் ஏமாற்றமாகவும் சலிப்பாகவும் இருந்தது. அவர் அரசியலை மிக மிக எளிமையான சூத்திரங்களால் புரிந்துகொள்பவர், மோடி இந்து, இலங்கைத் தமிழரென்றால் சைவம், சைவமும் இந்துவும் ஒன்று, அப்ப நாங்களும் மோடியும் ஒன்று, எங்களுக்கு ஒன்றென்றால் மோடி பொங்கி எழுந்துவிடுவார், இந்தியா சும்மா பார்த்துக்கொண்டிராது என்கிற வகையில் அவரது அரசியல் புரிதல் அமைவன.

கொரனாக் காலத்தின் பின்னர் நண்பர் ஒருவர் இணைத்துவிட்ட வட்சப் குழுமத்தின் ஊடாக ஈழத்திலிருந்து வெளிவருகின்ற தமிழ், ஆங்கில பத்திரிகைகள் பலவற்றின் எண்ணிம பிரதிகளைப் பார்க்கின்ற வாய்ப்புக்கிட்டியிருக்கின்றது. அவற்றில் “தமிழாட்களுக்குக்குச் சரியான தீர்வைக் கொடுக்கச் சொல்லி மோடி கடுமையாகச் சொன்ன” விடயம் தொடர்பாக பார்த்த சில செய்திகள்: செப்ரம்பர் 26, 2020 அன்று மகிந்த ராஜபக்சேவிற்கும் மோடிக்கும் காணொலி மூலம் நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் இரண்டு நாடுகளும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் இது குறித்துக் குறிப்பிடப்பட்டேயிருக்கின்றது. பின்னர் சிங்களத்தில், இலங்கை அரசு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல அதை மறுத்தும் இருந்தார். செப்ரம்பர் 29 மாலைமுரசில், “இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவேண்டும், 13வது சட்டத்திருத்தத்தை செம்மையாக அமுலாக்கவேண்டும் என்று மகிந்த ராஜபக்சேவிடம் மோடி வற்புறுத்தினார். எனவே இலங்கை அரசால் இதை மீறமுடியாது” என்று சுமந்திரன் உறுதியாகத் தெரிவித்ததாக செய்திவெளியிடப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் செப்ரம்பர் 29 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகிந்த, மோடி தம்மிடம் ”கோரிக்கை வைத்திருந்தார்” (அதாவது வலியுறுத்தவில்லை) என்று தெரிவித்திருந்தார் என்பதாக செப்ரம்பர் 30 வெளியான ஈழநாடு தெரிவித்திருக்கின்றது. ஒரே பிராந்தியத்தியத்தில் இருக்கின்ற இரண்டு நாடுகளின் முக்கிய தலைவர்களின் சந்திப்பிற்கு அந்நாட்டுப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுப்பதில் எந்தத் தவறுமில்லை, ஆனால் வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் செய்திகளைத் தருவதில் இருக்கின்ற பூரிப்பினையும் பார்க்கின்றபோது இவர்கள் எல்லாம் எப்படி இவ்வளவுக்கு அப்பாவித்தனமாக எல்லாவற்றையுமே நேர்மறையான மனநிலையுடன் பார்ப்பவர்களாக இருக்கின்றார்கள் என்று வியக்கவே தோன்றியது.

தனது நலன்களுக்காகவும் பிராந்தியத்தில் அதிகாரம் செலுத்துவதற்காகவும் இந்தியா ஈழத்தமிழர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தியதே ஈழத்தமிழர்களின் வரலாறு மீளமீள சலிக்காமல் சொல்லும் பாடம். ஈழத்தில் நடந்த அழிவுகளில் யாருக்குப் பங்கிருக்கின்றதோ இல்லையோ, கணிசமான பங்கு இந்தியாவிற்கு இருக்கின்றது. முன்னர் நான் குறிப்பிட்ட, சாதாரண மனிதரான எனது சக ஊழியராக இருக்கட்டும், சட்ட நுணுக்கங்களைக் கற்றறிந்தவர்களும் அரசியல்வாதிகளாகவும் இருக்கட்டும், இந்தியா தான் எமக்கான காவலன், இந்தியா தான் எமக்குக் கைகொடுக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புவதற்கு என்ன காரணம்? உண்மையிலே இவர்கள் இப்படி நம்புகின்றார்களா அல்லது வெகுளித்தனமாக நம்புகின்ற ஒரு தரப்பினரும், அந்த ஒரு தரப்பினரின் அறியாமையை வைத்து தமது அரசியல் லாபங்களுக்காக அவர்களைத் தொடர்ந்து ஏமாற்றுகின்ற நோக்குடன் இன்னொரு தரப்பினர் அளந்துவிடுகின்ற கதைகளுமாக இந்தப் போக்கு வளர்கின்றதா என்பது குறித்தே நாம் கவனமாக ஆராயவேண்டும்.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்தியாவுடன் மிக நீண்டகாலமாக தொடர்புகளைக் கொண்டவர்கள். குறிப்பாக ஈழத்திற்கு அண்மித்ததாக இருக்கின்ற தமிழ்நாட்டுடனான தொடர்பினை தாய் சேய் உறவாகக் கொள்கின்றதான போக்கு நீண்டகாலமாகத் தொடர்ந்துவந்திருக்கின்றது. ஆயினும், காலனிய காலத்துக்குப் பின்னரான ”நவீன இந்தியா”வுக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் இடையிலான உறவென்பது தனது சுயநலன்களுக்காகவும் அதிகார வேட்கைக்காகவும் இலங்கையைச் சுரண்டுவதாகவும் பெரியண்ணன் மனோபாவம் நிறைந்ததாகவுமே இருக்கின்றது.

இலங்கையின் மீதான இந்தியாவின் ஆதிக்கமானது அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆயினும், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது அடிமனதில் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இந்தியாவே எமக்கு துணை என்கிற கற்பிதம் அல்லது இந்திய அடிமை மனோபாவமும் அரசியல் பிரக்ஞையின்மையும் சேர்த்து அவர்களை இந்த ஆதிக்கங்களால் தமக்கு நிகழுகின்ற பாதிப்புகளை உணராதவர்களாகவே வைத்திருக்கின்றது.

ஈழத்தமிழர்களின் இனவிடுதலைக்கான போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்தியாவின் நடவடிக்கைகளையும் அதன் தவறான வழிநடத்துகையில் ஈழ விடுதலை இயக்கங்கள் செல்வதைக் குறித்தும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டியவர்கள் இருந்திருக்கின்றார்கள். ஈழ விடுதலை இயக்கங்கள் ராணுவ ரீதியிலான போராட்டங்களை நோக்கி நகரத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில், பங்களாதேஷ் 1971 இல் சுதந்திரமடைந்ததுவும், அதில் இந்தியா பங்களாதேஷிற்கு ஆதரவாகச் செயற்பட்டது என்பதுவும் விடுதலை இயக்கங்களுக்கு நம்பிக்கையூட்டிய அம்சங்களாக அமைந்தன. அதுவும் அந்தப் போர் வெறும் 13 நாட்களில் முடிந்தது என்பதுவும் அவர்களுக்கு உற்சாகமூட்டியதாக இருக்கக்கூடும். அதேபோல, ஈழத்தமிழர் விடுதலைக்கும் இந்தியா உதவும், தனிநாடு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை விடுதலை இயக்கங்களுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆயினும், பங்களாதேஷ் விடுதலை என்பதை இந்தியா எவ்விதம் அணுகியது என்பதிலிருந்தே ஈழத்தவர்கள் பாடம்பெற்றிருக்கவேண்டும். புளொட் இயக்கத்தினர் ஆரம்பகாலத்திலேயே வங்கம் தந்த பாடம் என்கிற சிறிய, ஆனால் மிக முக்கியமான ஒரு பிரசுரத்தினை வெளியிட்டனர். வங்கம் தந்த பாடத்திலிருந்து நாம் கற்றிருந்தாலே நிறைய அழிவுகளைத் தவிர்த்திருக்கலாம்; நம் அரசியல் தலைமைகள் அதனைக் கற்று, உள்வாங்கி அரசியல் பிரக்ஞையுடனான உரையாடலை மக்களுடன் மேற்கொண்டிருந்தால் அரசியல் பிரக்ஞை கொண்டதோர் சமூகத்தை, அரசியல் பிரக்ஞையுடன் முடிவெடுக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவது நோக்கி நகர்ந்திருக்கலாம். எண்பதுகளில் இருந்த அரசியல் தலைமை எப்படி நோக்கம், வழிமுறை, அரசியல் தெளிவு என்பன இல்லாமல் அன்றையை இளைஞர்களை வழிநடத்தினார்களோ இன்றும் அதுவே தொடர்கின்றது. துரதிஸ்ரவசமாக அன்று இளைஞர்களாக இருந்து இன்று அரசியல் தலைமைகளாகவும், ஆய்வாளர்களாகவும் இருப்பவர்களும் இன்றைய இளைஞர்களை அரசியல் மயப்படுத்தாமல், வெறும் கற்பனாவாத நம்பிக்கைகளையும் உணர்ச்சி அரசியல்களையுமே விதைத்தே வளர்த்துவருகின்றார்கள் என்பதை ஒரு அபாய சமிக்ஞையாகவே பார்க்கமுடிகின்றது.

மோடி முதல்முறையாக இந்தியப் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டபோது புலம்பெயர்நாடுகளிலும் ஈழத்திலும் இருக்கின்ற ஈழத்தவர்களில் பலர் அதனை ஆதரித்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோரின் வாதம் இந்துத்துவக் கட்சியான பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் – ஈழத்தமிழர்கள் சைவர்கள், எனவே இந்துக்கள், எனவே பாரதிய ஜனதாவின் ஆதரவு கிடைக்கும் என்கிற புரிதலின் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்கள் எவருக்கும் பாரதிய ஜனதா என்பது மதவாதக் கட்சி என்பதோ பாசிசக் கட்சி என்பதோ பிரச்சனையே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக சிவசேனை போன்ற மதவாத அமைப்புகள் வெளிப்படையாக ஈழத்தில் மாவட்டங்கள் தோறும் இயங்கத்தொடங்கியிருப்பதும் அவற்றை பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான அசைவியக்கம் என்று நியாயப்படுத்துவதும் ஆபத்தானவை. ஈழத்தைப் பொறுத்தவரை பௌத்த சிங்கள பேரினவாதத்தின் மதவாத நடவடிக்கைகளுக்கும் இஸ்லாமிய மதவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பொறிமுறையாகவே சைவ / இந்து மதவாத நடவடிக்கைகளை அவற்றை ஆதரிப்பவர்கள் பார்க்கின்றார்கள். உண்மையில் எந்த மதவாதமாக இருந்தாலும் அது ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டது, சமூகநீதிக்கு எதிரானது. ஒரு மதவாதம் ஒருபோதும் இன்னொரு மதவாதத்துக்கு எதிர்ப்பொறிமுறையாகாது, மாறாக இன்னொரு மதவாதத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் தன்னை வளர்த்துக்கொள்வதையும் நிலைநிறுத்திக்கொள்வதையும் அதேபோல தன்னை வளர்த்துக்கொள்வதன் மூலம் இன்னொரு மதவாதத்தை வளர்த்துக்கொள்வதையும் நிலைநிறுத்திக்கொள்வதையும் அடிப்படை உத்தியாகக் கொண்டியங்குவது.

ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு என்று ஓகஸ்ட் 2020 தாய்வீட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், பண்பாட்டுப் படையெடுப்பின் மூலம் எப்படியாக ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தவர்கள் பண்பாட்டு அடிமைகளாக்கப்படுகின்றார்கள் என்று விபரித்திருந்தேன். அந்தப் பண்பாட்டுப் படையெடுப்புகளின் நீட்சியாகவே இப்போது இந்தியாவில் இருந்து இறக்குமதியாகிக் கொண்டிருக்கும் மதவாதப் போக்குகள் இருக்கின்றன. அண்மைக்காலமாக பெருமளவான இளைஞர்களின் செயல்களிலும் இப்படியான வெளிப்பாடுகள் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பெரியாரையும், அம்பேத்காரையும் ஈழத்தில் பேச முடியுமென்றால் ஏன் இந்துத்துவத்தைப் பேசமுடியாது என்பதாகவே அவர்களது கேள்வி அமைகின்றது. ஒடுக்குமுறைகள் இல்லாத சமத்துவமான உலகொன்றைக் கனவுகண்டவர்கள் பற்றி நீங்கள் பேசினால் நாங்கள் ஒடுக்குமுறையைப் பேசுகின்ற மானுடவிரோதக் கருத்தியல்களைப் பேசுவோம் என்று அவர்கள் சொல்வதாகவே அதனைப் புரிந்துகொள்ளமுடியும். எம்மீது நிகழ்த்தப்படும் பண்பாட்டுப் படையெடுப்புக் குறித்தும் வளர்ந்துவரும் மதவாதச் சக்திகளின் செல்வாக்குக் குறித்தும் நாம் பிரக்ஞைபூர்வமாக உரையாடுவதன் மூலமும் செயற்படுவதன் மூலமுமே சமூகவிடுதலை நோக்கிய உறுதியான அடிகளை எடுத்துவைக்கலாம். இல்லாவிட்டால் மறுபடியும் மறுபடியும் முதலில இருந்துதான் ஆரம்பிக்கவேண்டிவரும்!

-அருண்மொழிவர்மன்

 

https://vithaikulumam.com/2021/05/03/20210503/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுடைய மதவாதம் என்பது தன்னுள் உள்ள சிறுபான்மையினரைத்தான்(மத்ததினர்) எதிரியாகக் கொள்ள முடியும். 

பெளத்தத்துடனோ  முகமதியத்துடனோ முரண்படுவதற்கு ஏற்ற சக்தி அதனிடம் இல்லை. 

ஆகவே 

தமிழர் தங்களுக்குள் அடிபடுவதாகவே முடியும். சிங்களத்திற்கும் இது ஏற்புடையதுதானே. . ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.