Jump to content

Recommended Posts

லகத்தமிழ் உள்ளங்களே!

இதோ தமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்!

இத்தனை ஆண்டுகள் போலில்லை. இந்த நினைவேந்தல் கொஞ்சம் சிறப்பானது. இந்தாண்டு நாம் ஏற்றும் மெழுகுத்திரிகள் நம் நெஞ்சில் எரியும் வேதனைக் கனலாக மட்டுமில்லை எதிர்காலத்துக்கான நம்பிக்கைச் சுடராகவும் ஒளிர்கின்றன.

அதற்குக் காரணமாகத் திகழ்பவர் அன்னை அம்பிகை செல்வகுமார்!

ஐ.நா-வில் மனித உரிமை ஆணையம் கூடும்பொழுதெல்லாம் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரத் தமிழர்கள் நாம் வலியுறுத்துவோம்.

ஐ.நா-வும் வல்லரசு நாடுகளின் செல்லப்பிள்ளையான இலங்கையைப் பகைத்துக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பெயருக்கு ஒரு தீர்மானத்தை முன்மொழியும். இலங்கையே வரவேற்கும் அளவுக்கு அந்தத் தீர்மானம் நீர்த்துப் போனதாக இருக்கும்.

பின்னர் அந்த அரைகுறைத் தீர்மானத்தின் பரிந்துரைகளைக் கூட நிறைவேற்ற மாட்டோம் என இலங்கை திமிராக அறிவிக்கும்; அதையும் இந்த உலக நாடுகளும் ஐ.நா-வும் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும்.

இந்தக் காட்சிகளைத்தாம் பன்னிரண்டு ஆண்டுகளாக நாம் பார்த்து வந்தோம்.

இதன் உச்சக்கட்டமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட இருந்த தீர்மானத்தின் வரைவில் “இனப்படுகொலை குறித்த ஆதாரங்களைத் திரட்டவும் புலனாய்வு செய்யவும் மனித உரிமை ஆணையர் அலுவலகம் மூலம் சார்பற்ற பன்னாட்டுப் புலனாய்வு அமைப்பை (International Independent Investigative Mechanism) ஏற்படுத்த வேண்டும்” என்ற அடிப்படையான ஒரே ஒரு பரிந்துரை கூட நீக்கப்பட இருக்கிற செய்தி கேட்டுக் கொதித்தெழுந்தார் இங்கிலாந்து வாழ் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் அவர்கள்.

இங்கிலாந்தின் முன்னாள் குடிமையியல் சேவகரும் பன்னாட்டு இனப்படுகொலைத் தடுப்பு மையத்தின் (ICPPG) இயக்குநர்களில் ஒருவரும் இங்கிலாந்து அரசில் முக்கியப் பொறுப்புக்களில் இருந்தவருமான இவர் இந்தாண்டு பிப்பிரவரி மாதம் 27 அன்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் சார்பில் நீதி வேண்டி இலண்டனில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்ந்தார்.

ஏற்கெனவே ஈழத் தமிழர்களுக்காக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தித் தங்கள் இன்னுயிரை ஈந்த ஈகைச்சுடர் திலீபன் – அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் போராட்டத்தைத் தொடங்கியபொழுது மீண்டும் நம் கண்ணெதிரே ஒருவர் சிறுகச் சிறுக உயிர் விடுவதைக் காணப் போகிறாமா என்றுதான் உலகெங்கும் உள்ள தமிழ்ப்பற்று கொண்ட நெஞ்சங்கள் பெருங்கவலையில் ஆழ்ந்தன.

ஆனால் அன்னை அம்பிகை வரலாற்றை மாற்றி எழுதினார்!

உண்ணாநிலையில் இறங்கும் முன்பு இலண்டன் சாலையில் இறங்கினார். மக்கள் பார்க்க ஈழ விடுதலைப் போராட்டம் பற்றித் தெள்ளத் தெளிவாக ஓர் உரையை வழங்கினார். இந்த விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது? இதன் பின்னால் உள்ள நயன்மைகள் (rightness) என்ன? தாங்கள் பட்ட கொடுமைகள் என்ன? கடைசியில் எவ்வளவு கொடூரமான இனப்படுகொலையில் தங்கள் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது? இவற்றையெல்லாம் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தார். அடுத்து,

1. இலங்கை அரசைப் பன்னாட்டுக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்

2. நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் என அனைத்துக்குமான ஆதாரங்களைத் திரட்டக் காலவரையறையுள்ள சார்பற்ற பன்னாட்டுப் புலனாய்வு அமைப்பை (IIIM) ஏற்படுத்த வேண்டும்

3. மனித உரிமை உயர்நிலை ஆணையரின் அலுவலகச் (Office of the High Commissioner for Human Rights) சார்பில் இலங்கையைக் கண்காணிக்கச் சிறப்பு அறிக்கையாளரைப் பணியமர்த்த வேண்டும்

4. தமிழர்களின் தாய்நிலத்தையும் ஆட்சியுரிமையையும் நிலைநிறுத்தும் அடிப்படையில் ஐ.நா., மூலம் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

என மொத்தம் நான்கு கோரிக்கைகளை இங்கிலாந்து அரசிடம் முன்வைத்தார்.

இவற்றையெல்லாம் ஏன் இங்கிலாந்திடம் முன்வைக்க வேண்டியிருக்கிறது என்பதற்கும் காரணங்களைப் பட்டியலிட்டு, தன்னுடைய இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டிய கடமை இங்கிலாந்துக்கு இருக்கிறது என்பதை ஆணித்தரமாக நிறுவிப் போராட்டத்தில் அமர்ந்தார்.


‘உண்மைக்கும் நீதிக்குமான உணவு தவிர்ப்புப் போராட்டம்’ (Hunger Strike for Truth and Justice) எனும் பெயரில் தன் போராட்டத்தைத் தொடங்கியவர் யூடியூபில் அதற்கெனத் தனி வலைக்காட்சி (YouTube channel) துவங்கினார். ஒவ்வொரு நாளும் உண்ணாநிலைப் போராட்டக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இணைய இதழ்கள் இதைப் பற்றி எழுதின. சமுக ஊடகங்களிலும் தமிழ்ப் பற்றாளர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மொத்த உலகத்திடமும் நீதி வேண்டி ஒற்றைப் பெண்மணி போராடும் செய்தி உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களிடம் பரவியது.

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலான ஈழ ஆதரவுத் தமிழர் தலைவர்கள் இணைய வழிக் காணொளி அழைப்புகள் வாயிலாக அவருடன் நாள்தோறும் உரையாடி ஆதரவளித்தார்கள். கமலகாசன், சத்தியராசு போன்ற திரைக்கலைஞர்கள் அவருக்காகக் குரல் கொடுத்தார்கள். இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கத் தாங்களும் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்தார்கள். பிரான்சு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் போராட்டத்துக்கு ஆதரவாக ஊர்வலங்கள் புறப்பட்டன.

ம.தி.மு.க., தலைவர் வைகோ, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தி.மு.க., தலைவர் தாலின் முதலானோர் அன்னையின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும்படி இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தினர். தொடர்ந்து ஆத்திரேலியா, கனடா எனப் பிற நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் போராட்டத்துக்கு ஆதரவுகள் குவிந்தன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களே இதற்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினர். அதுவும் இங்கிலாந்துத் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி இப்போராட்டத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவாகக் காணொளியே வெளியிட்டதோடு இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தான் எழுதவிருப்பதாகவும் தெரிவிக்க விவகாரம் தீப்பிடித்தது.

நெருக்கடியைச் சமாளிப்பதற்காக உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தக் காவல்துறையை அனுப்பியது இங்கிலாந்து அரசு. ஆனால் இப்பேர்ப்பட்ட அறவழிப் போராட்டத்தை ஒடுக்குவதா என இலண்டன் மாநகர்ச் சாலைகளில் புலிக்கொடி ஏந்தித் திரண்டார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச் செல்வங்கள்! காவல்துறை அவர்களை அடக்க முயல, தமிழர்கள் திமிறி எழ, சிறு கைக்கலப்புக்கும் காவல்துறைத் தாக்குதல்களுக்கும் பின்னர் குறைந்தது ஒருவரைக் கைது செய்ததோடு அரசின் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

மக்கள் ஆதரவு முதல் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு வரை பெற்று விட்ட இந்தப் போராட்டத்தை இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து இறங்கி வந்தது இங்கிலாந்து அரசு.

அன்னையின் ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இங்கிலாந்து அரசு உறுதியளித்ததன் பேரில் தன் போராட்டத்தை உரிய இடத்துக்கு எடுத்துச் சென்ற அனைவருக்கும் அதன் வெற்றியைக் காணிக்கையாக்கி 17.03.2021 அன்று உண்ணாநிலையை நிறைவு செய்தார் அம்பிகை செல்வகுமார் அவர்கள்.

மறுநாளே நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்தார்கள் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஒரு மணி நேர விவாதத்தில் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கைக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை தேவை என ஒப்புக் கொண்டார்கள்.

இதையடுத்து கனடா, செருமனி என மொத்தம் ஐந்து நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 46ஆவது கூட்டத்தொடரில் 23.03.2021 அன்று இலங்கைக்கு எதிரான அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த தடயங்களைத் ‘திரட்டுவதோடு’ அவற்றைத் ‘தொகுத்து’, ‘பகுப்பாய்வு செய்து’, எதிர்காலப் போர்க்குற்ற வழக்குகளில் பயன்படுத்த உதவும் வகையில் ‘பாதுகாக்கவும்’ செய்யுமாறு மனித உரிமை உயர்நிலை ஆணையரின் அலுவலகத்துக்குப் பரிந்துரைத்தது தீர்மானம்.

அன்னை அம்பிகை அவர்கள் வேண்டுகோளுக்கு மாறாக இந்தியா இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்து வழக்கம் போல் ஈழத் தமிழர்களுக்கு இரண்டகம் (betrayal) இழைத்தது.

ஆனாலும் மனிதநேயம் கொண்ட 22 நாடுகளின் பேராதரவில் வெற்றி பெற்றது தீர்மானம்!

 

Result of the resolution against Srilanka for promoting reconciliation, accountability and human rights
 

ஒற்றைப் பெண்மணியாகத் தன் உயிரையே துச்சமாக மதித்துப் போராடி, உலகையே தமிழர்களின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து, இலங்கையும் அதற்கு ஆதரவான வல்லரசு நாடுகளும் செய்த உலகளாவிய காய்நகர்த்தல்களையெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே தவிடுபொடியாக்கி, பன்னாட்டு சமுகத்தின் தீர்மான வரைவையே திருத்தி எழுதிய அன்னை அம்பிகை செல்வகுமார் அவர்கள் ஈடு இணையற்ற ஈகத்தமிழ் மாவீராங்கனையாக என்றென்றும் வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறார்.

அதே நேரம், இந்தத் தீர்மானம் உண்மையிலேயே பலன் அளிக்குமா இல்லையா எனவெல்லாம் பல்வேறு மாற்றுக் கருத்துக்களும் நிலவுகின்றன. இலங்கை வாழ் ஈழ ஆதரவுத் தலைவர்கள், அமைப்பினர் போன்றோருடன் பி.பி.சி., தமிழ் மேற்கொண்ட செவ்வியில் அவர்கள் யாரும் இது குறித்துப் பெரிய அளவில் வரவேற்பு தெரிவிக்கவில்லை.

ஈழச் சிக்கல் பற்றி அவர்கள் அளவுக்கெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் இனப்படுகொலைக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் பன்னாட்டுச் சமுகம் இலங்கைக்கு எதிராக எடுத்துள்ள உருப்படியான ஒரே நடவடிக்கை இதுதான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்களெனவே நம்புகிறேன்.

இனி பன்னாட்டு அவைகளில் இனப்படுகொலை தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாய் எந்த ஒரு நடவடிக்கை முன்மொழியப்பட்டாலும் அதற்கு மிகப் பெரிய தடையாக இந்தத் தீர்மானம் இருந்தே தீரும்.

இலங்கையில் தமிழர்கள் தனி நாடு கோருவதே ஒரே நாட்டில் இணக்கமாய் வாழ முடியாத அளவுக்கு சிங்களர்கள் தங்களை அங்கே கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதால்தான். அந்தக் கொடுமைகளின் உச்சம்தான் 2009-இல் நடந்த தமிழினப்படுகொலை. இதோ இப்பொழுது கூட இந்தப் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தலைக் கூட நடத்த விடாமல் இலங்கை அரசு இனப்படுகொலை நினைவுத்தூணை இடிப்பதையும், மகுடை (Corona) பரவலைக் காரணம் காட்டி நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றத் தடை பெற முனைவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

Another Mullivaikkal Monument damaged in Srilanka

எனவே தனி ஈழம் மலர வேண்டுமானால் தங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாத சூழல் அந்நாட்டில் நிலவுவதைத் தமிழர்கள் முதலில் உறுதிப்படுத்தியாக வேண்டும்.

அதை உறுதிப்படுத்த, நடந்தது இனப்படுகொலைதான், அதை நடத்தியது இலங்கை அரசுதான் என்கிற உண்மையை நிறுவ வேண்டும்.

அதை நிறுவத் தேவை பாகுபாடற்ற ஒரு பன்னாட்டு உசாவல் (inquiry) அமைப்பு.

அப்படி உசாவல் அமைப்பு ஏற்படுத்தப்படத் தேவையானது இனப்படுகொலை நடந்திருக்கக்கூடும் எனச் சொல்லும் முறையான அறிக்கை.

அப்படி ஓர் அறிக்கை வெளிவர அதற்கு ஆதாரமாக அடிப்படைச் சான்றுகள், தடயங்கள் போன்றவை முறையான அமைப்பால் திரட்டப்படுவது இன்றியமையாதது.

அதற்கான வழிவகையைத்தான் இந்தத் தீர்மானம் ஏற்படுத்தியுள்ளது.

ஆக, கடக்க வேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவோ இருப்பினும் அதற்கான முதல் அடியை இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழர்கள் நாம் எடுத்து வைத்துள்ளோம் என்பதுதான் ஐயம் திரிபற்ற உண்மை.

எனவே இத்தனை ஆண்டுகளும் இழந்த உயிர்களையும் உறவுகளையும் எண்ணித் துயரத்துடன் மட்டுமே நினைவேந்திய நாம் இந்த முறை அவர்களுக்கான நீதியையும் அவர்களுடைய தனி ஈழ வேட்கையையும் நோக்கி ஓரடியாவது முன்னேறியிருக்கிறோம் எனும் பெருமையுடனும் நினைவேந்தலாம் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

ஒளிர்ந்திடும் நினைவேந்தல் சுடர்கள் – அதில்
ஒழிந்திடும் தமிழினத்தின் இடர்கள்!
தொடர்ந்திடும் நம் நீதிக்கான புறப்பாடு – கட்டாயம்
மலர்ந்திடும் நம் தமிழீழத் திருநாடு! 
 
12th year remembrance of Genocide in Tamil Eelam
 (நான் ‘கீற்று’ இதழில் 17.05.2021 அன்று எழுதியது)

தரவுகள்: நன்றி ஐ.பி.சி தமிழ், உண்மைக்கும் நீதிக்குமான உணவு தவிர்ப்புப் போராட்டம் வலைக்காட்சி, தமிழ் கார்டியன்.

படங்கள்: நன்றி மனித உரிமை ஆணையம், குமணன், மே பதினேழு இயக்கம்.

காணொளி: நன்றி ஐ.பி.சி தமிழ்.  

தொடர்புடைய பதிவுகள்: 📂 நினைவேந்தல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.