Jump to content

“போரே என்னைச் செதுக்கியது” - நேர்காணல்-நிலாந்தன்: நேர்கண்டவர்-கோமகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

“போரே என்னைச் செதுக்கியது”-நேர்காணல்-நிலாந்தன்

அண்மைக்கலங்களில் நீங்கள் அதிகமாக அரசியல் ஆய்வாளராகவே இனம் காணப்பட்டுவருகின்றீர்கள். ஓவியரும் கவிஞரும் இலக்கியவாதியுமான நிலாந்தன் படிப்படியாக மறைந்துகொண்டிருப்பதாக உணருகின்றேன் ?

அப்படி மறையவில்லை. நானுமுட்பட பல ஓவியர்களின் தொகுப்பு ஒன்று அச்சிடப்பட்டு விட்டது.

சில வேளைகளில் கவிதை பெருகும். சில வேளைகளில் ஓவியம் பெருகும். சில வேளைகளில் மௌனம் பெருகும். ஆனால் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் பெருகும். கடந்த பத்தாண்டுகளாக அரசியல் விமர்சன கட்டுரைகளே அதிகம் பெருகின. ஏனெனில் இது கருத்துருவாக்கக் காலம்.

மண்சுமந்த மேனியர் நாடகம், இந்த மண்ணும் எங்கள் நாட்களும் என்ற கவிதா நிகழ்வு, ஏராளமான வீதி நாடகங்கள், கவியரங்குகள், ஓவியக் காட்சிகள் என்றிருந்த நிலை இன்று இல்லையே ! ஆகையால் ,இந்தப் போக்கைக் கலைத்துறையின் வீழ்ச்சிக் காலம் என்று எடுத்துக்கொள்ளலாமா ?

அது யுத்த காலம். இது ஆயுத மோதல்களுக்குப் பின்னரான காலம். ஒரு பொருத்தமான அரசியல் இயக்கம் அல்லது கட்சி, தமிழ் அரசியலை வீச்சாக  முன்னெடுத்தால் இந்தக் காலமும் அதற்குரிய பாடல்களையும் கவிதைகளையும் ஓவியங்களையும் வெளிக்கொண்டு வரும். தமிழ் அரசியல் சோர்ந்து விட்டது. தேங்கி நிற்கிறது .

நீங்கள் பன்முகப்படுத்தப்பட்ட ஓர் செயற்பாட்டாளராக எம்மிடையே இனம் காணப்படுகின்றீர்கள். எத்தகைய பின்புலம் உங்களை இதனுள் கொண்டுவந்தது ?

போர் என்னைச் செதுக்கியது.

நீங்கள் போருக்கு முன்னரே இந்தத் துறைகளில் இயங்கியிருக்கிறீர்களே ! அப்படியிருக்க போர்எப்படி உங்களைச் செதுக்கியிருக்கிறது? அதே போர் ஏன் இந்தத் தமிழ்ச்சமூகத்தைச் செதுக்கியிருக்கவில்லை ?

இல்லை. போருக்குட்  தான் நான் செதுக்கப்பட்டேன். எனது முதல் கவிதையான கடலம்மாவும் தெருவெளி நாடகமான விடுதலைக் காளியும் போரின் குழந்தைகளே.

உங்களுடைய அரசியல் தொடர்பான கட்டுரைகளும் சரி ஏனைய சமூகரீதியிலான கட்டுரைகளும்சரி யாழ்ப்பாணத்தை மையமிட்டு வருகின்றனவே ? தமிழ்த்தேசியம் என்பது யாழ்ப்பாணத்தை  மட்டும் உள்ளடக்கியதா என்ன  

இல்லை. எனது தேசியம் சம்பந்தமான கட்டுரைகளில் எது யாழ் மையமானது ? காட்டுங்கள்.

முள்ளிவாய்க்கால்  பேரவலத்திற்குப் பின்னரான காலங்களில்  தமிழ் மக்களுக்கு மேய்ப்பர்கள் என்று யாரைக் கருதுகின்றீர்கள்  

நவீன அரசியலில் மேய்ப்பர்கள் கிடையாது.

வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பேணுவது ஒரு பண்பாட்டியல் மரபாகும். ஆனால் காத்தன்குடிப் பள்ளிவாயில் நினைவுச்சின்னத்தை முஸ்லீம்கள் தொடர்ந்தும் பேணிவருகின்றார்கள் அவர்கள் நேசக்கரங்களைத் தட்டிச்செல்கின்றார்கள் என்ற விமர்சனம் எதற்காக ?

ஒரு மக்கள் கூட்டம் தனது மாறாக்  காயங்களை  நினைவு கூர்வதிற் தவறில்லை. நினைவு கூர்வது என்பது இறந்த காலதிலிருந்து கற்றுக் கொள்வது. இறந்த காலத்திற்குப் பொறுப்புக் கூறுவது.

தமிழ் தலைமைகளும் சரி விடுதலை அமைப்புகளும் சரி  என்றுமே முஸ்லீம் தரப்பை தமக்குச் சமாந்தரமாகப் பேணி இருக்கவில்லையென்றும் தம்மை ஒரு சிறுபான்மைகுழுமமாகவே மதித்து வந்ததாக மிஹாத் எனக்கு வழங்கியிருந்த நேர்காணலில் குறிப்பிட்டார். இந்த விமர்சனம் ஏற்புடையதா ?

ஓரளவுக்குச் சரி.

மூன்றாம் கட்ட ஈழபோருக்கு முன்வரை முஸ்லிம்கள் தமிழ் தேசியத்தின் ஒரு கிளையாக கலாசார உப  தேசிய இனமாக  பார்க்கப்பட்டார்கள். அப்பொழுது மிகாத் கூறியது பொருத்தமாயிருக்கலாம்.

ஆனால் மூன்றாம் கட்ட ஈழப் போருக்குப் பின் முஸ்லிம்கள் தங்களை தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்று அழைக்க விரும்பவில்லை. எனவே தமிழ் மக்கள் அவர்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் அந்த அடிப்படையில் யாரோடு சேர்ந்து நின்று இறுதித்  தீர்வை வென்றெடுக்கலாம் என்பதைத் தாமே  முடிவெடுக்கட்டும்.

கடந்த கிழக்கு மாகான சபை ஆட்சியை முஸ்லிகள் தொடர்பில் கூட்டமைப்பு எவ்வாறு கையாண்டது என்பதையும்  இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசுக்கு தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. வரவேற்கப்படவேண்டிய விடயம், மாற்றுக்கருத்து இல்லை . அனால், எமது தமிழ்தேசிய விடுதலைப்போரில் போரை முன்னெடுத்த பங்காளிகளான விடுதலைப்புலிகளால் பல்லாயிரக்கணக்கான இளையவர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பில் உங்கள் புரிதல்தான் என்ன?

ஓம்.

எல்லா இயக்கங்களும் அப்படிச் செய்திருக்கின்றன. இறந்த காலத்திற்கு எல்லாரும் பொறுப்புக் கூற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு  நீதி கிடைக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு நினைவஞ்சலி செய்கின்ற சமூகம், போராட்டத்திற்காக புறப்பட்டு தமது உயிர்களை கொடுத்த அனைத்துப் போராளிகளுக்கும் ஒரேநாளில் மாவீரர்தினம் அனுஷ்டிக்க மறுப்பதேன் ?

நினைவு கூர்தலில் பல்வைகைமையை ஏற்றுக் கொள்ளவேண்டும். அவரவர் தத்தமது தியாகிகளை நினைவு கூரலாம். அதேசமயம் இனப்படுகொலை நினைவுநாளை எல்லாருக்கும் பொதுவாக அனுஷ்டிக்கலாம்.

போர் நடைபெற்று முடிந்து 11 வருடங்களைக் கடந்து விட்டோம். இன்றும் கூட இடர்காலங்களில் மட்டும் நிவாரணங்கள் என்ற முகமூடியினுள் எனது விளிம்பு நிலை சனங்கள் நிற்கின்றார்கள். இந்த சனங்களுக்குரிய உறுதியான நீண்டகாலப் பயன்தரும் பொருண்மியத் திட்டங்களைக் கொண்டுவருவதில் உங்கிருக்கின்ற சமூக அக்கறை உள்ளவர்களுக்கும் சரிஅமைப்புகளுக்கும் சரி  இருக்கின்ற சிக்கல்கள் தான் என்ன?

ஒரு பொருத்தமான ஒருங்கிணைத்த பொறிமுறை இல்லை.

ஏன் அப்படியொரு ஒருங்கிணைந்த பொறிமுறையை கட்டியெழுப்ப முடியவில்லை ? ‘இதற்கும்யாராவது தேவர்கள் வருவார்கள் எம்மை வளப்படுத்துவர்கள் என்ற சமூக உளவியல் சிக்கலாக எடுத்துக்கொள்ளலாமா ?

தவறு தாயகத்தில்தான் உண்டு. இதுதான் மையம். இங்கே தான் ஒரு கட்சி அல்லது மக்கள் இயக்கம் அப்படியொரு பொறிமுறையை உருவாக்கி நிர்வகிக்க வேண்டும். ஆனால் தாயகத்தில் அப்படியொரு அமைப்பு இல்லை. பொருத்தமான தரிசனங்களைக் கொண்ட தலைமைகள் இல்லை.

போரினால் துவண்ட ஒரு சமூகத்தை கட்டி எழுப்பவேண்டும் என்ற நோக்கில் அனுப்ப பட்ட பலமில்லியன் பெறுமதியான பணத்தினால் ஒரு சோம்பேறி சமூகத்தை உருவாக்கிய கைங்கரியத்தை புலம்பெயர் தமிழர்கள் செய்திருக்கின்றார்கள். இதனை அண்மையில் வெளியாகியிருந்த பரீட்சை முடிவுகளில் அவதானிக்க முடிந்தது. இது தொடர்பாக ………?

ஒரு பொருத்தமான பொறிமுறை இல்லை என்பதே காரணம். தவிர,

பரீட்சை முடிவுகளை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மதிப்பிடலாமா ?

ஜெர்மனிய இனபடுகொலையிலிருந்து  தப்பிப் பிழைத்த குழந்தை உளநல மருத்துவரான டொக்டர் ஹெய்ம் கினோற் -Haim Ginott  பின்வருமாறு கூறுகிறார்….. :

நான் வதை முகாம்களிலிருந்து தப்பியவன். ஒரு நபர் பார்க்கக் கூடாதவற்றை எனது கண்கள்பார்த்தன. படித்த பொறியியலாளர்களால் கட்டப்பட்ட விஷவாயுக்கூடங்கள்; படித்த மருத்துவநிபுணர்களால் நஞ்சூட்டப்பட்ட சிறுவர்கள் ; பயிற்றப்பட்ட தாதிகளால் கொல்லப்படட குழந்தைகள் ; உயர்நிலைப் பள்ளிகளில் படித்துருவாகிய பட்டதாரிகளால் கொல்லப்பட்ட பெண்கள் ; சிறுகுழந்தைகள்……என்று  எல்லாவற்றையும் பார்த்தேன். எனக்கு கல்வியில் சந்தேகமாக இருக்கிறது

இது எமக்கும் பொருந்தாதா……?

இந்தக் கல்விமுறைதானே இனப்பிரச்சினையை தீர்க்க முடியாதிருக்கிறது ?இந்தக் கல்வி முறைதானே இனப்படுகொலயாளிகளை உருவாக்கியது? இந்தக் கல்விமுறைதானே ஒரு இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியது? போர்களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அனைத்து குரூரங்களுக்கும் இந்த கல்விமுறை  காரணமில்லையா?

பரீட்சை முடிவுகளை மட்டும் வைத்து ஒரு சமூகத்தை மதிப்பிடலாமா 

 

 வடபுல சமூகத்தின்மையப்புள்ளியே கல்வியை வைத்துத்தானே கட்டியெழுப்பப் பட்டது. நான் போரின் பின்னரானகாலத்தை மட்டுமே சுட்டிட விரும்புகின்றேன்.

அதுதான்.

எந்தக் கல்விமுறை என்பதுதானே கேள்வி?

தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படுவதற்கு  இந்த கல்விமுறை  காரணமில்லையா? 

 

நான் அவ்வாறாகஎண்ணவில்லை. ஏனெனில் அறிவுசார் குழாம் இதே கல்விமுறையினால் தான் புலம்பெயர்ந்தவர்கள். அந்தந்த நாடுகளில் தமது கல்வியறிவிற்கேற்பத் தம்மை தகவமைத்துக்கொண்டார்கள். ஆனால் அதே கல்விமுறையினால் தீவின் இறுதிப்பட்டியலில் வடபுலம் இருக்கின்றது. இதன் காரணகர்த்தாக்கள் யார் ?   

மூளைசாலிகள் நாட்டைவிட்டு மட்டுமல்ல போராட்டத்தை விட்டு ஓடவும் இந்தக் கல்வி முறைதான் காரணம். இயக்கங்களில் ஓர்கானிக் இன்ரலெக்சுவல்களாக இருந்த  அறிஞர்கள் எத்தனை பேர்? அவர்களில் கடைசிவரை நின்று பிடித்தவர்கள் எத்தனை பேர்? அல்லது கொல்லபட்டவர்கள் எத்தனை பேர்? பொதுவாக ஆயுதப் போராட்டத்தில் புத்திஜீவிகளைக் “கதைகாரர்” என்று கருதும் ஒரு போக்கு என் ஏற்பட்டது? தமிழ் அறிவுக்கும் செயலுக்கும் இடையில் காணபட்ட இடைவெளி எதனால் ஏற்பட்டது?

இந்தக் கல்வி முறை தொடர்பாகவும் தொழில் தேர்வுகள் தொடர்பாகவும் தமிழ் சமூகம் வைத்திருக்கு விழுமிய அளவுகோல்களின் தோல்வியே தமிழ் அரசியலின் தோல்வியும் என்று எடுத்துக் கொள்ளலாமா?

தாயக விடுதலைப் போராட்டத்தின் தோல்விகளுக்கு மிக முக்கிய காரணிகள் என்று எதைக்கருதுகின்றீர்கள் ?

அகக் காரணிகளும் உண்டு. புறக் காரணிகளும் உண்டு.

அந்த அகக்காரணிகள் எப்படியாக இருந்தன ? புறக்காரணிகள்தான் என்ன ? இவைகள் எப்படியாக இந்தப் போராட்டத்தைப் பாதித்தன என்பதைப் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்?

அகக்  காரணிகளில் முதன்மையானது அக ஜனநாயக்கமின்மை. இதை இன்னும் கோட்பாட்டு ரீதியாகச் சொன்னால் தேசியத்தின் ஜனநாய உள்ளடக்கத்திலிருந்த போதாமை.

இதன்விளைவே  படைத்துறை மைய நோக்குநிலை மேலோங்கியமை இது இரண்டாவது.

மூன்றாவது -உள் முரண்பாடுகள். இயக்க முரண்பாடுகள். குறிப்பாக நாலாம் கட்ட ஈழப்போரில் கிழக்கில் ஏற்பட்ட உடைவு.

நாலாவது –பொருத்தமான வெளியுறவுத் தரிசனமோ வெளியுறவுக் கொள்கையோ ;கடடமைப்போ இல்லாதிருந்தமை

புறக்காரணிகள் என்று பாத்தால் :

முதலாவது-அரை நூற்றாண்டுக்கும் மேலான பகைப் பிராந்திய சூழல்

இரண்டாவது கையாளக் கடினமாயிருந்த வெளியுறவுச் சூழல்

மூன்றாவது செப்டெம்பர் பதினொன்றுக்குப் பின்னரான உலகச் சூழல்

நாலாவது- தகவல்   தொழில் நுட்ப வளர்ச்சி அதிகம் அரசுகளுக்கு சேவகம் செய்வதாக அமைந்தமை. அதாவது தொழில் நுட்பம் அதிகம் கோலியாத்துக்களின் கையில் இருப்பது.

எமது போரிலக்கியப் பிதாமகர்கள் ஆய்வாளர்கள் எல்லோருமே தங்கள் சொல்லுக்கு விசுவாசமாக இருக்காது தங்கள் சொல்லுகளை அநாதரவாக கைவிட்டவர்கள் என்ற கடுமையான விமர்சனம் ஒன்று யோ கர்ணனால் எனக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வைக்கப்பட்டது. இவ்வளவு காலம் கடந்த பின்னரும் நீங்கள் எப்படியாக இந்தக் கருத்தை உள்வாங்குகின்றீர்கள் 

யார் அந்த பிதாமகர்கள்?

அவர்களிடம் கேளுங்கள்.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறை ஓர் தஞ்சமடையும் இடம் என்ற ஓர் விமர்சனம் உண்டு. இதுபற்றி உங்கள் கருத்து என்ன ?

அப்படியல்ல. அங்கே நிறைய வாசிப்பவர்களும் ஆளுமைமிக்கவர்களும் படைப்பாளிகளும் நல்ல ரசிகர்களும் இருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பார்வையிலும் தமிழீழப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த முறையிலும் அவர்களின் அரசியல்துறையானது எந்தவிதமான பாத்திரத்தைசெய்தது?

அரசியல்துறையை விட  படைத்துறைக்கே அதிகம் மேலாண்மை இருந்தது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் அதன் பின்னரான விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்ற நிலைப்பாட்டை புலம் பெயர் தமிழர்களால் ஜீரணிக்கமுடியவில்லை………?

பத்தாண்டுகளின் பின் இப்பொழுதுமா?

மற்றது ,புலம்பெயர்ந்த தமிழர்கள் என்பது தட்டையான ஒரு அடுக்கு மட்டும் அல்ல. அதில் பல அடுக்குகள் உண்டு. எல்லா அடுக்குகளும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவையல்ல.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசியம் உண்மையிலேயே உயிர்ப்புடன்இருக்கின்றதா ? இல்லை நந்திக்கடலுடன் மௌனமாகிவிட்டதா ?

ஒரு இயக்கத்தின் வீழ்ச்சியே தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சியுமாகாது.

எந்த வகையில் தமிழ்த்தேசியமானது உயிர்ப்புடன் இருப்பதாக கருதுகின்றீர்கள் ?

தேசியமென்று எதைக்  கருதுகிறீர்கள்? அது ஒரு பெரிய மக்கள் திரள். அந்தத் திரளைச் சிதைக்கும் சக்திகள் தீவிரமாக செயற்படும் வரை  அக்கூட்டுணர்வும் முனைப்பாக இருக்கும்.

தமிழ்த்தேசியம் என்பது தனியே தமிழ் மக்களை மட்டும்தான் உள்ளடக்கிக் கொண்டதா ? நான்பார்த்தவகையில் தமிழ்த்தேசியமானது அவ்வாறு தானே பிரயோகப்படுத்தப்படுகிறது. அதுமலையகத்தில் வாழும் தமிழ் மக்களையோ இல்லை இலங்கையில் வாழ்கின்ற தமிழைத்தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களையோ உள்ளடக்கியதாக இல்லையே. இதுஒருவகையில் குறுந்தேசியவாதம் அல்லவா?

முஸ்லிம்கள் ஒரு தனித் தேசிய இனம்.

மலையகமும் ஒரு தனித் தேசிய இனம்

அப்போ இவர்கள் மூவருக்கும் தனித்தனியே நிர்வாக அலகுகள் வேண்டும் என்றுசொல்கின்றீர்களா? போரின் முன்னரான காலப்பகுதியில் 87 களில் வடக்குகிழக்கு என்ற ஒருபெரிய அகண்ட நிலப்பரப்பு தமிழர்கைவசம் இருந்ததே

தவிர்க்கேலாது.

தேசிய இனங்கள் என்று வரையறுப்பதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்று அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வின் பருமனை மனதில் வைத்துத்தான். இலங்கைத்தீவு ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.

தமிழகத்து அரசியலில் ஈழம் தொடர்பான அணுகுமுறை எப்பொழுதும் சோற்றிற்கும்ஊறுகாய்க்கும் இடையிலான தொடர்பைப் போன்றே இருந்து வந்துள்ளது. இப்படியானவர்களால்தாயகத்து மக்கள் வாழ்வில் மாற்றங்கள் வந்துவிடும் என்று நம்புகின்றீர்களா ?

தமிழகத்தை கருவியாகக் கையாண்டு இந்திய மத்திய அரசை அசைக்க முடிந்தால் மாற்றங்கள் வரலாம்.

இது வெறும் கற்பனை என்று சொல்லப்படுகிறதே ? தமிழகத்தின் தலையானபிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கே இந்திய மத்திய அரசைக் கையாளத்தெரியாமல்,அல்லதுகையாள முடியாமல் இருக்கும் தமிழகத்தை நாங்கள் இன்னும் எதிர்பார்த்திருக்கலாமா? இதுஎப்படியென்றால் குளம் வற்றும்வரை காத்திருக்கும் கொக்கின் கதையைப்போல இருக்காதா ?

தமிழகத்தை எப்படிக் கையாளவேண்டும் என்பது தொடர்பில் இயக்கங்களிடமும் பொருத்தமான தரிசனம் இருக்கவில்லை. மிதவாதிகளிடமும் இல்லை. இந்த வெற்றிடம்தான் நீங்கள் இப்படிக் கேட்கக் காரணம்

பாரிய அளவிலான இனப்படுகொலைகளுக்கு ஆட்பட்ட எமக்கு ஓர் நீதியைப் பெற்றுத்தரும்தகுதியை  நா சபை இழந்துவிட்டது என்று என்ணுகின்றீர்களா ?

இனப்படுகொலை என்பதே ஐ.நா. தோல்வியுற்றதால்தான் நடந்தது.

ஜப்பானியர்கள், இஸ்ரேலியர்கள் (யுதர்கள்) யாழ்ப்பாணத்து தமிழர்கள் ஆகியோரிடையே ஒருஒற்றுமை உண்டு என்றும் இவர்கள் மிகக் கூர்மையும் மதி நுட்பமும் தோல்வியடையாதமனப்பாங்கைக் கொண்டவர்கள் என்றும் நீங்களே எழுதியிருக்கிறீர்கள் ? ஆனால், ஏனையஇனத்தவர்களுடன் ஒப்பிடும்போது தமிழர்கள் தரப்பானது மிகவும் பலவீனர்களாகவல்லவாஇருக்கின்றார்கள் ?

ஓம்.பலவீனமாகதான் உள்ளோம்.

அந்தப்பலவீனத்தை உடைத்தெறிய ஏதாவது நடைமுறைப்பொறிமுறைகள் உள்ளனவா?

கனவாகத்தான் உண்டு. நடைமுறையில் இல்லை. கனவை நோக்கி யதார்தத்தை வளைக்க வேண்டும்.

ஆனால், அதே . நா தானே போர்க்குற்ற விசாரணைக்கு உதவ வேண்டும் என்றும்புலம்பெயர்ந்தவர்களாலும் உங்குள்ளவர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில்இன்னும் பல விடயங்களுக்காகவும் .நா வை எமது மக்களும் அரசியல் தலைவர்களும்நம்பியிருக்கிறார்களே.. இது முரண்நகையாக உங்களுக்குத் தெரியவில்லையா ?

தனிய ஐநாவை நம்புவது என்பது 1987இற்கு முன்பு வரை எல்லாவற்றிற்கும் இந்தியாவை நம்பியது போலத்தான். கலாநிதி சண்முகதாசன் கூறியது போல எல்லா முட்டைகளையும் ஒரே கூடைக்குள் வைக்கக் கூடாது.

ஐநா ஓர் அரசுகளின் அரங்கம். ஆனால் இந்த உலகம் அரசுகளால் மட்டும் ஆனதல்ல. அரசுகளுக்கு வெளியே இருக்கும்  எல்லாத் தரப்புகளையும் கையாள வேண்டும்.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் சுவர்களில் ஓவியங்கள் தீட்டுகின்ற காட்சிகள் தொடர்பாகவும்எந்தவகையான ஓவியங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் பலசர்ச்சைகளை சமூகவலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது. ஒரு போர்க்கால ஓவியங்களைமுன்னெடுத்தவர் என்றவகையில் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்படுவதை எப்படியாகப்பார்க்கின்றீர்கள் ?

சுவர் ஓவியங்கள் ஒரு சமூகத்தின் பொது வெளி ஓவியங்கள். எனவே அவை அச் சமூகத்தின் சுய உருவப் படங்களாக  அல்லது கூட்டு உளவியலின் நிலக் காட்சிகளாக இருக்க வேண்டும்.

சரி அரசியலைப் பற்றி பேசி இருவருக்கும் இருதய அழுத்தங்கள் வரமல் இருக்க கொஞ்சம்இலக்கியப்பக்கத்தில்  கவனத்தை திருப்பலாம் என எண்ணுகின்றேன். அத்துடன் அதுதானேஎம்மிருவருக்கும் பிடித்தமான பகுதி ……….

விடுதலைப்புலிகளின் காலகட்டத்து இலக்கியச் சூழலைப் பற்றி குறிப்பாக சொல்லுங்கள்?

அங்கு இலக்கியம் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது. ஆனாலும் கலை ஒரு பிரச்சாரச் சாதனம் மட்டும் அல்ல என்று நம்புவோரும் அங்கே வசித்தார்கள்.

யுத்தகாலத்துக்குப் பின்னரான தமிழ் இலக்கியச்சூழல் உங்களுக்கு உவப்பானதாக உள்ளதா ?

ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியம் அவ்வக்காலகட்டத்தை பிரதிபலிக்கிறது. உண்மைக்குச் சாட்சியாக இருக்கும் எல்லாப் படைப்புக்களும் எனக்குக் உவப்பானவைதான்.

ஈழத்து இலக்கிய வெளியில் புலம் பெயர் இலக்கியம் எப்படியான தாக்கத்தை உருவாக்கியுள்ளது?

தமிழ் இலக்கியப் பரப்பில் அது ஒரு தனிப்பிரிவு. ஒரு புதிய பரிமாணம்.

எந்த வகையில் அத்தகைய பரிமாணம் உருவாகியிருக்கிறது ? நீங்கள் அதை எப்படியாக இனம்காண்கின்றீர்கள்?

புலப் பெயற்சி என்பது ஈழத் தமிழ் கூட்டு உளவியலில் ஒரு புதிய அகட்சி. அப்புதிய பரிமாணம் புதிய இலக்கியப் பரப்பையும் திறக்கும்.

இதில் பிரதானமாக இரண்டு வகையுண்டு :

ஒன்று- இப்பொழுதும்  தாயகத்தைப்  பற்றிய பிரிவேக்கத்தோடு அதன் நினைவுகளிலேலேயே உழல்வது.

இன்னொன்று : புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களை தமிழ் நோக்கு  நிலையிலிருந்து எழுதுவது. இதில் இரண்டாவது வகை முழுத் தமிழ் இலக்கியத்துக்கும் புதிய தரிசனங்களைத் தரும்.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தமது ஆவிகளை ஈழத்தில் அலைய விட்டிருக்கின்றார்கள் என்ற றியாஸ் குரானா மற்றும் மிஹாத் ஆகியோரது குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரையில் யாரும்எதிர்வினையாற்றவில்லை. புலம்பெயர் எழுத்தாளர்கள் ஈழத்துக் கதைக்களங்களை மையப்படுத்திஎழுதுவதற்கு எந்தவிதத்திலும் தகுதி இல்லாதவர்களா என்ன ?

உண்மை. முதலாம் தலைமுறைப் புலம்பெயரிகளில் அநேகரின் ஆவிகள் தாயகத்தில் அலைபவைதான். அதுதான் யதார்த்தம். அவர்களில் பலர் விரும்பிப் புலம்பெயரவில்லை. புலம்பெயர வேண்டிய நிர்பந்தம் இருந்தது. எனவே அவர்களுடைய படைப்பாக்க உந்து விசைகளில் பிரிவேக்கத்துக்கு ஒரு இடமிருக்கும்.

மற்றது, ஒரு எழுத்தாளர் இதைதான் எழுதவேண்டும் எழுதக் கூடாது என்று யாரும் கட்டைளையிட முடியாது.

ஓர் கவிதையோ இல்லை கதையோ எப்படியான உச்சத்தைக் கொடுக்கவேண்டும் என்றுகருதுகின்றீர்கள் ?

சொற்களால் சொற்கடந்த அனுபவத்தைத் தரவேண்டும். உன்னதமான கலை மனிதர்களை மனத்தால் கூர்ப்படையச் செய்யும்.

நிலாந்தனுக்கான இலக்கிய அரசியல்தான் என்ன ?

உண்மைக்குச் சாட்சியாகவிருப்பது.

நடந்து முடிந்த இந்த யுத்தம் என்ன வகையான படிப்பினைகளை சனத்துக்கு / உங்களுக்குதந்திருக்கின்றது? இந்த யுத்தம் உங்களை / சனங்களை செப்பனிட்டு இருக்கின்றதா?

செதுக்கியிருக்கிறது.

சமூகக் கூர்ப்புடன் தொடர்புடைய  திரட்டப்பட்ட விளைவுகளை அனுபவிக்கப் பொறுத்திருக்க வேண்டும்.

இந்த நிலையும் ஒருநாள் மாறும்.

நிலாந்தன் பற்றிய சிறுகுறிப்பு :   

நிலாந்தன்

 

வடபுலத்தின் யாழ்நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட நிலாந்தன் ஓர் சிறந்த கவிஞராகவும், அரசியல் ஆய்வாளராகவும், ஓவியராகவும் பன்முகப்பட்ட இலக்கிய ஆழுமையாக எம்மிடையே இனம் காணப்படுகின்றார். ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் நிலாந்தனது பங்களிப்பு முக்கியமானது. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ….எனது யாழ்ப்பாணமே இனி எனது நாட்களே வரும் ,யுகபுராணம் என்று இதுவரையில் மூன்று கவிதை நூல்கள் வெளியாகி இருக்கின்றன. அத்துடன் ‘பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர்கால ஓவியங்களின் தொகுப்பை எம்மிடையே காட்சிப்படுத்தியிருக்கின்றார். இவரது பல்துறைசார் படைப்புகள் தாயகத்து சஞ்சிகைகளிலும்,பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கின்றது. தன்னுடைய பெருமளவான படைப்புக்களை யுத்த இடப்பெயர்வுகளின்போது இழந்துவிட்டதாக என்னுடன் பேசும் பொழுது மிகுந்த கவலையுடன் குறிப்பிட்ட நிலாந்தன், தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் சமாந்தரப்பயணிகளில் முக்கியமானவர். தமிழ் இலக்கியம் நடைமுறை அரசியல் என்று பல்துறைசார் விடயங்களையும்,தனது உணர்வுகளையும் இந்த நேர்காணல் மூலம் நறுக்குத் தெறித்தால் போல் வெளிப்படுத்துகின்றார்.

கோமகன் கோமகன்

07 சித்திரை 2020

கோமகன்-பிரான்ஸ்

 

https://naduweb.com/?p=16959

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் எதைச் செய்வது என்று விவஸ்தையை இல்லாமல் போய்ச்சு. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

யார் யார் எதைச் செய்வது என்று விவஸ்தையை இல்லாமல் போய்ச்சு. 😡

நிலாந்தன் நீட்டி முழக்காமல் சுருக்கமான பதில்களைக் கொடுத்ததைச் சொல்கின்றீர்களா?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நிலாந்தன் நீட்டி முழக்காமல் சுருக்கமான பதில்களைக் கொடுத்ததைச் சொல்கின்றீர்களா?🤔

நீட்டி முழங்க முயற்சித்ததை ஏற்றதற்கு நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.