Jump to content

முள்ளிவாய்க்காலும் காசாவும் கற்றுத்தரும் பாடங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலும் காசாவும் கற்றுத்தரும் பாடங்கள்

புருஜோத்தமன் தங்கமயில்   

இஸ்‌ரேலும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும், கடந்த சில நாள்களாக ஆயுத முனையில் மீண்டும் பொருதிக் கொண்டிருக்கின்றன.   

இஸ்‌ரேலை நோக்கி, ஹமாஸ் இயக்கம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தின் காசாப் பகுதியை இடைவிடாது இஸ்‌ரேல் தாக்கி வருகின்றது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல்களில் இதுவரை 10 இஸ்‌ரேலியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இஸ்‌ரேலிய தாக்குதல்களில் காசாப் பகுதியில், 200க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.  

இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்குமான இந்த மோதல்களின் ஆரம்பம், மேற்குக் கரையின் ஜெருசலேமிலுள்ள பலஸ்தீனியர்களின் பிரதான பள்ளிவாசலில், நோன்புக் கால தொழுகைக்கு இஸ்‌ரேல் கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடர்ந்து எழுந்தது.   

அத்தோடு, மேற்குக் கரையின் பாதுகாப்பு, இஸ்‌ரேலிய அரசிடம் இருக்கின்ற நிலையில், அங்கு இனமுறுகல்களுக்கான ஏற்பாடுகள் குண்டர்கள், கூலிப்படைகளைக் கொண்டு திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டதாக நடுநிலை நோக்கர்கள் கூறுகிறார்கள்.   

இந்தப் பின்னணியில்தான், ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதப் பிரிவு காசாவில் இருந்து இஸ்‌ரேலின் ரெல்அவீவ் உள்ளிட்ட நகரங்களை நோக்கி, ஏறிகணைத் தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதல்களை, ஏறிகணை எதிர்ப்புப் பீரங்கிகளைக் கொண்டு, இஸ்‌ரேல் பெருமளவு தடுத்துவிட்டது. ஆனாலும், பத்து இஸ்‌ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள்.  

இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இலக்கு வைத்த தாக்குதல்களை, இஸ்‌ரேல் தொடர்ந்து நடத்தி வருகின்றது. சர்வதேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்த கட்டடத் தொகுதியை, ஒரு மணித்தியால முன் அறிவுப்புடன் தாக்கி அழித்திருக்கின்றது. அதற்கு, அந்தக் கட்டடத் தொகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதங்கள் இருந்ததாக இஸ்‌ரேல் கூறியிருக்கின்றது.   

இஸ்‌ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள 200க்கும் அதிகமான பலஸ்தீனியர்களில் 100க்கும் அதிகமானவர்கள் பெண்கள்; 60க்கும் அதிகமானவர்கள் குழந்தைகள். ஆனால், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியஸ்தர்களையே இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக இஸ்‌ரேல் கூறுகின்றது.  

இஸ்‌ரேல் - பலஸ்தீனத்தின் காசாப் பகுதியில் நடைபெற்றுவரும் ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில், உறுப்பு நாடுகளுக்கு இடையில் உரையாடல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.   

ஆனால், அந்த உரையாடல்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்குத் தடையாக, அமெரிக்கா இருந்தது. குறிப்பாக, போர் நிறுத்தமொன்றை வலியுறுத்தும் தீர்மானத்தைப் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றும் நோக்கத்தை, அமெரிக்க ஆரம்பத்திலேயே நிராகரித்தது; கிட்டத்தட்ட இஸ்‌ரேலின் தாக்குதல்களை வெளிப்படையாக ஆதரித்தது. இதனால், பாதுகாப்புச் சபையில், இஸ்‌ரேல்- காசா போர் நிறுத்தம் தொடர்பிலான தீர்மானம் கைவிடப்பட்டது.  

அரபு நாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்னுடைய ஏவலாளியாகவே, இஸ்‌ரேலின் உருவாக்கத்துக்கு அமெரிக்கா ஒத்தாசைகளை வழங்கியிருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில், அமெரிக்காவின் ஏவலாளி எனும் கட்டத்தில் இருந்து இஸ்‌ரேல் விலகி, இஸ்‌ரேல் தனது சர்வதேச ஏவலாளியாக, அமெரிக்காவை மாற்றிவிட்டது.   

இன்றைக்கு இஸ்‌ரேலின் நில ஆக்கிரமிப்புகள் தொடங்கி, ஜனநாயகத்துக்கு முரணான அனைத்துச் செயற்பாடுகளையும் நியாயப்படுத்துவதுதான் அமெரிக்காவின் வேலையாகி விட்டது.   

குறிப்பாக, ஐக்கிய நாடுகளில் இஸ்‌ரேலுக்கு எதிராக, எந்தத் தீர்மானங்கள் வந்தாலும், அதற்கு எதிராக ‘வீற்றோ’ அதிகாரத்தை, அமெரிக்கா பயன்படுத்த வேண்டும் எனும் அளவுக்கான ஏவலாளியாகி விட்டது.  

காசாப் பகுதியில் பெண்களும் குழந்தைகளும் அதிகமாகக் கொல்லப்படுகிறார்கள் என்று சர்வதேச ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் ஆதாரங்களுடன் அறிக்கையிடுகின்றன.   

ஆனாலும், இஸ்‌ரேலின் நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்தும் வேலைகளை அமெரிக்கா செய்கின்றது. குறிப்பாக, ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களும் ஆயுதக் கிடங்குகளும் அழிக்கப்படும் வரையில், இஸ்‌ரேலின் தாக்குதல்கள் தொடரப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்புகின்றது. அதற்காக, எந்தவித போர்க்குற்றங்களையும் நியாயப்படுத்தும் வேலைகளையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.  

இன்று இஸ்‌ரேல் - பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இடையிலான ஆயுத மோதல்களையும் அதனை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை எப்படிக் கையாள்கின்றது என்பதையும் காணும் போது, 12 ஆண்டுகளுக்கு முன்னர், ஈழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலுக்குள் வைத்துப் பலிவாங்கப்பட்ட நாள்களும் அதன் சர்வதேச அரசியல் பின்னணியும் ஞாபகத்துக்கு வருகின்றன.  

இறுதி மோதல்கள், முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்த்து கொண்டிருந்த போது, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது அந்த மக்களைப் போர் நிறுத்தம் ஒன்றின் ஊடாக, போர் வலயத்துக்குள் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்தும் எழுப்பப்பட்டன.   

அந்தத் தருணத்திலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில், போர் நிறுத்தத்தின் ஊடாக மக்களை வெளியேற்றும் தீர்மானம் பற்றிப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக சீனாவும் ரஷ்யாவும் தங்களுடைய ‘வீற்றோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாக மிரட்டின. அதனால், போர் நிறுத்தம் பற்றிய தீர்மானம், 2009களின் ஆரம்ப நாள்களிலேயே பேச்சளவிலேயே கைவிடப்பட்டது.   

அங்கும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக, எவ்வளவு விலை கொடுக்கப்பட்டாலும் அதனை ஏற்கும் சர்வதேச,  பிராந்திய அரசியலே கோலோச்சி நின்றது. அங்கு மனித உரிமைகளும் போர்க் குற்றங்களும் கண்டும் காணாமல் விடப்பட்டன. புலிகளை அழிப்பதில், இலங்கைக்கு சீனா, ரஷ்யா மாத்திரமல்ல, அமெரிக்காவும் கணிசமான உதவிகளை வழங்கியது.   

பாதிக்கப்பட்டவர்களாக, சர்வதேசத்திடம் நீதி கோருவது என்பது நியாயமானதுதான். ஆனால், அந்த நீதியைத் தார்மிக அடிப்படைகளோடு சர்வதேசமும் ஐக்கிய நாடுகளும் வழங்கிவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.   

ஏனெனில், ஒவ்வொரு பிராந்தியத்தினதும் அரசியல், இராஜதந்திர முக்கியத்துவம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தித்தான், நீதியும் வழங்கப்படுகின்றது.  

ஆயுத மோதல்களோடு தொடர்புபடாத பெண்களையும் குழந்தைகளையும் இலக்கு வைத்துத் தாக்குதவது என்பது, மனித அறத்துக்கு எதிரானது. அது போர்க்குற்றங்களில் சேர்வது.   

ஆனால், அவ்வாறான நிகழ்வுகளைத் தங்களது ஆதரவு - எதிர்ப்பு நிலைப்பாடுகளின் போக்கில்தான், சர்வதேச நாடுகள் கையாளுகின்றன. தங்களுக்கு எதிரான நாடொன்று, அவ்வாறான குற்றங்களை நிகழ்த்தினால், அதற்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று கூச்சலிடுவதும், தன் ஆதரவு நாடு அவ்வாறான குற்றங்களை இழைத்தால், அதனை நியாயப்படுத்துவதும் வழக்கமானது. இதுதான், சர்வதேசம் போதிக்கும் நீதியாகும்.  

அவ்வாறான கட்டத்தில்தான், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைத் தேடுவது என்பது, தார்மிக அடிப்படைகளையும் தாண்டி, இராஜதந்திர கட்டங்களில் நின்றும் அணுகப்பட வேண்டி இருக்கின்றது. ஈழத்தமிழர்களும் அதன் இணக்க சக்திகளும் அவ்வாறான நிலையொன்றை நோக்கி, தம்மைக் கட்டமைத்து, வளர்த்துக் கொள்ள வேண்டும்.   

மாறாக, வாய்ச் சொல் வீரர்களாக மாத்திரம் இருப்பதால், யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏனெனில், ஈழத்தமிழ் மக்கள், இப்போது அரசுகளின் அங்கம் அல்ல. அவர்கள் அதிக தருணங்களில், அரசுகளுக்கு எதிரான அங்கமாகவே இருக்கிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் அதுதான் நிலை.  

அழுது புரண்டு விட்டால், சர்வதேசம் நீதி வழங்கிவிடும் என்றில்லை. ஏனெனில், எம்மிடம் நீதிவான்களாகக் காட்டிக் கொள்ளும் பல தரப்புகள், இன்னொரு பாதிக்கப்பட்ட சமூகத்திடம் எதிரிகளாக முகம் காட்டும் நிலைமையே காணப்படுகின்றது.  

ஏனெனில், ஒவ்வொரு தரப்புகளும் தம்முடைய தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியே இயங்கும். அப்படியான நிலையில், இவ்வாறான தரப்புகளை, அதாவது சர்வதேசத்தைக் கையாள்வது என்பது, தார்மிக அடிப்படைகளுக்குள் சுருங்கிவிடக் கூடாது.   

மாறாக, அந்தத் தரப்புகளின் விடயங்களிலும் தலையீடு செய்யும் அளவுக்கு ஆளுமை செலுத்தும் நிலையொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது, அரசியல் இராஜதந்திர ரீதியில் நிகழ்ந்தாலே, ஈழத் தமிழர்களுக்கான நீதி கிடைக்கும். இல்லையென்றால், ஒப்பாரி வைத்து ஓய்வதோடு, எல்லாமும் கடந்துவிடும்.    

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முள்ளிவாய்க்காலும்-காசாவும்-கற்றுத்தரும்-பாடங்கள்/91-272206

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

முள்ளிவாய்க்காலும் காசாவும் கற்றுத்தரும் பாடங்கள்

புருஜோத்தமன் தங்கமயில்   

......

ஏனெனில், ஒவ்வொரு தரப்புகளும் தம்முடைய தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியே இயங்கும். அப்படியான நிலையில், இவ்வாறான தரப்புகளை, அதாவது சர்வதேசத்தைக் கையாள்வது என்பது, தார்மிக அடிப்படைகளுக்குள் சுருங்கிவிடக் கூடாது.   

மாறாக, அந்தத் தரப்புகளின் விடயங்களிலும் தலையீடு செய்யும் அளவுக்கு ஆளுமை செலுத்தும் நிலையொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது, அரசியல் இராஜதந்திர ரீதியில் நிகழ்ந்தாலே, ஈழத் தமிழர்களுக்கான நீதி கிடைக்கும். இல்லையென்றால், ஒப்பாரி வைத்து ஓய்வதோடு, எல்லாமும் கடந்துவிடும்.    

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முள்ளிவாய்க்காலும்-காசாவும்-கற்றுத்தரும்-பாடங்கள்/91-272206

உண்மைதான்..

ஆனால் உள்ளுக்குள்ளேயே அடிபட்டு நண்டுகளாக இருக்கும் இனம், எப்போது, எப்படி முன்னேறுவது..? 🤔

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.