Jump to content

இந்தியாவின் மாற்றமடைந்த கொரனா வைரஸ்: கேள்விகளும் பதில்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மாற்றமடைந்த கொரனா வைரஸ்:  கேள்விகளும் பதில்களும்

முன்கதை

விகாரமடைந்த நவீன கொரனா வைரசுகள் பற்றி ஒரு கட்டுரையை முதலில் எழுதிய போது உலகில் மூன்று பிரதான நவீன கொரனா வைரஸ் விகாரிகள் காணப்பட்டன. பிரிட்டன் விகாரி (B.1.1.7), பிரேசில் விகாரி (P1), தென்னாபிரிக்க விகாரி (B1.351) ஆகிய அந்த ஒவ்வொரு வைரசு வகைக்கும் ஒவ்வொரு சிறப்பியல்பு இருந்தது. பிரேசில், பிரிட்டன் வைரசுகள் ஆரம்பத்தில் பரவிய கொரனா வைரசை விட வேகமாகத் தொற்றுதலை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன நேரடியாக இது நோய்த்தீவிரத்தை அதிகரிக்கா விட்டாலும், மருத்துவ சேவைகள் மீது அதிக சுமைகளை ஏற்படுத்துவதன் மூலம் அதிக மரணங்களை ஏற்படுத்தியிருந்தன. தென்னாபிரிக்க விகாரிக்கு, தடுப்பூசிகளினால் உருவாகும் நோய்ப்பாதுகாப்பில் இருந்து தப்பும் இயலுமை இருப்பதால் "தப்பும் வைரஸ்" (escape mutant) என்று அழைத்தார்கள். ஆனாலும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பயன்படுத்தப் படும் தடுப்பூசிகள், இந்த வைரசுகள் எல்லாவற்றிலும் இருந்து தீவிர நோயோ, மரணமோ ஏற்படாமல் தடுக்கக் கூடியவை எனச் சில ஆய்வுகள் சுட்டிக் காட்டின.  

இந்தியாவின் விகாரி வைரஸ்

இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய அலையோடு கண்டறியப் பட்ட B 1.617 என்பது தான் இந்தியாவின்  விகாரி வைரஸ். தற்போது இந்த விகாரியில் மூன்று வகையான உப வகைகள் - B1.617.1, B1.617.2, B1.617.3- இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இவற்றுள் சில விகாரங்கள் பொதுவாகவும், சில விகாரங்கள் தனித்துவமாகவும் இருக்கின்றன. ஆனால், மூன்றுமே பிரிட்டனின் விகாரி வைரசின் ஒரு மாற்றத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. முன்னைய விகாரிகள் போலன்றி - இது இந்தியாவில் தோன்றியதாலோ என்னவோ- இந்த விகாரி பற்றிய ஆய்வுகள் மெதுவாகவே நடைபெறுகின்றன. தற்போது 12 நாடுகளுக்குப் பரவி விட்டதால் சில தகவல்கள் ஆய்வுகள் மூலம் வெளிவந்திருக்கின்றன.

 கேள்வி 1: இந்திய விகாரி வைரஸ்  வேகமாகப் பரவக் கூடியதா?

இதற்கான பதில் தற்போதைக்கு இந்த வைரஸ் பரவி வரும் பிரதேசங்களில் ஏற்படும் பரவலின் தீவிரத்தை ஆய்வு செய்வதன் மூலம் ஊகிக்கப் படலாம். இந்தியாவின் நிலை, பிரிட்டனின் ஒரு பிரதேசத்தில் இந்த விகாரியின் பரவல், ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், இது பிரிட்டன் விகாரியை விட 50% வேகமாகப் பரவக் கூடியது என்ற பதில் கிடைக்கிறது.  சரியான எண்ணிக்கை இன்னும் தெரியா விட்டாலும், வேகமாகப் பரவக் கூடிய இயலுமையை உருவாக்கக் கூடிய விகாரங்கள் இந்த இந்திய வைரசில் காணப்படுகின்றன. இந்தத் தகவல்கள் இரண்டையும் இணைத்துப் பார்த்தால், இது ஒரு வேகமாகப் பரவும் வைரஸ் விகாரி என்றே நம்பப் படுகிறது. 

கேள்வி 2: இந்திய விகாரி வைரஸ் தீவிரமான நோயை ஏற்படுத்துமா?

இந்திய வைரசின் விகாரங்களை வைத்துப் பார்க்கும் போது வைரசினால் ஏற்படும் நோய் ஏனைய விகாரிகளை விட தீவிரமாக இருக்கும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், பிரிட்டன், பிரேசில் விகாரிகள் விடயத்தில் நடந்தது போல, அதிகரித்த பரவல் என்பது அதிகரித்த நோயாளர்களை மருத்துவ மனை நோக்கித் தள்ளி, மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

கேள்வி 3: தடுப்பூசிகள் இந்திய விகாரி வைரசைக் கட்டுப் படுத்துமா?

இதைக் கண்டறிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நல்ல செய்தி பிரிட்டனில் இருந்து வந்திருக்கிறது: பிரிட்டனில் இந்திய விகாரியின் ஒரு வகையான B1.617.2 இனால் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதோர் என்று ஒரு சிறு ஆய்வு கணக்கிட்டிருக்கிறது. ஆனால், இதே பாதுகாப்பு இன்னொரு வகையான B1.617.1 இற்கு எதிராகவும் கிடைக்குமா என்பது இன்னும் தெளிவில்லை - ஏனெனில் தடுப்பூசிகளின் பாதுகாப்பில் இருந்து தப்ப கூடிய வகையிலான ஒரு விகாரம் இந்த B1.617.1 இல் இருக்கிறது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி மூலம் பெருமளவு நோயெதிர்ப்பை உருவாக்கி விட்ட பிரிட்டனில், இந்திய விகாரி வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னரும், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை பெரிதாக அதிகரிக்கவோ, புதிய அலையை ஏற்படுத்தவோ இல்லை. எனவே, தடுப்பூசி இந்திய விகாரிகளில் இருந்தும் பாதுகாக்கிறது என்றே தோன்றுகிறது.

கேள்வி 4: இந்திய விகாரிக்கெதிராக பொதுச் சுகாதார நடைமுறைகள் விசேடமாக  எடுத்துக் கொள்ள வேண்டுமா?

இல்லை என்பதே பதில். பெருந்தொற்று ஆரம்ப காலத்திலிருந்து பின்பற்றி வரும், முகக் கவசம், சவர்க்காரம்/அல்கஹோல் தொற்று நீக்கி, சமூக இடைவெளி பேணல் இவையே இந்த வைரசுக்கெதிராகவும் தடுப்பு முறைகள். ஆனால், தெரியாத சில விடயங்கள் குறித்து அவதானம் தேவை: சில நாடுகளில், தடுப்பூசி எடுத்துக் கொண்டோர் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என அறிவித்திருக்கின்றனர். இந்த இந்திய விகாரி தடுப்பூசி பெற்றுக் கொண்ட பெரும்பாலானோரில் நோயை ஏற்படுத்தவில்லையானாலும், அவர்களது சுவாசக் குழாயில் நோயின்றித் தங்கி, ஏனையோருக்குப் பரவுமா என்பது இன்னும் தெரியாது. எனவே, பெரும்பாலானோர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வரை, தடுப்பூசி எடுத்துக் கொண்டோரும் முகக் கவசத்தை அணிவது தற்போதைக்கு புத்திசாலித்தனமான செயல்.

இந்திய விகாரி பற்றிய புதிய ஆய்வுத் தகவல்களை தொடர்ந்து இந்தத் திரியில் உடனுக்குடன் பகிர்கிறேன். 

தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் - முகக்கவசம் தேவையான இடங்களில் அணிந்து கொள்ளுங்கள்!

 

-ஜஸ்ரின்

மேலதிக தகவல் மூலம்: https://www.nature.com/articles/d41586-021-01390-4  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை, ஜஸ்ரின்..!
நன்றி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கும்  நேரத்துக்கும் நன்றி  சகோ...

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய டெல்ரா விகாரி பற்றிய புதிய தகவல்கள் சில..

ஆச்சரியமான விடயம்/எனது அவதானிப்பு: இந்தியாவில் உருவான டெல்ரா விகாரி பற்றிய ஆய்வுத் தகவல்கள் இந்திய ஆய்வுகூடங்களிலிருந்து அவ்வளவாக வெளிவரவில்லை. நவீன கொரனா வைரஸ் மூன்றாம் நிலை பாதுகாப்புடைய BSL-3 ஆய்வுகூடங்களில் தான் ஆய்வுக்குட்படுத்தப் பட முடியும். இந்தியாவில் பல ஆய்வு நிறுவனங்களில் இந்த BLS-3 வசதி இருக்கின்றது. அத்துடன் இதன் அடுத்த நிலையான அதியுயர் BSL-4 கூட குறைந்தது இரண்டு இந்திய ஆய்வகங்களில் இருக்கின்றது. இதை விட வைரசின் பரம்பரை மூலக்கூறை ஆராயக் கூடிய sequencing வசதிகளும் இந்தியாவில் கிடைக்கின்றன. இவ்வளவு இருந்தும், இது வரை தங்கள் நாட்டில் உருவாகிய டெல்ரா விகாரி பற்றி இந்தியா கண்டறிந்த வெளியிட்ட தகவல்கள் மிகவும் குறைவு. இந்த ஒளித்தல் மறைத்தல் என்பது சீனப் பிரச்சினை மட்டுமல்ல - ஒரு ஆசிய மனோபாவம் என நினைக்கிறேன்😎.

டெல்ராவின் தொற்றும் திறன்..

இதை பிரிட்டனின் ஆய்வுகள் கணித்திருக்கின்றன. இந்திய டெல்ரா விகாரி இப்போது பிரிட்டனில் 90% ஆன தொற்றுக்களுக்குக் காராணமாக இருக்கின்றது. இந்திய விகாரி வருவதற்கு முன்னர் பிரிட்டனில் பிரபலமாக இருந்தது அல்பா விகாரி (பழைய பெயர்: பிரிட்டன்/கென்ற் வைரஸ், B.1.1.7). தற்போதைய கணிப்பின் படி அல்பா வைரசை விட  இந்திய டெல்ரா வைரஸ் 40- 50 % அதிக தொற்றும் திறனுள்ளதாக இருக்கிறது. கடந்த வருடம் முதன் முதலில் சீனாவில் கண்டறியப் பட்ட ஒரிஜினல் கொரனா வைரஸை விட பிரிட்டன் வைரஸ் 50% அதிக தொற்றும் திறன் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

டெல்ராவின் நோயேற்படுத்தும் திறன்..

ஒரு வைரஸ் வேகமாகப் பரவினால், அது தீவிர நோயை ஏற்படுத்தும் என்று அர்த்தமில்லை. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப் படும் நோயாளிகளின் எண்ணிக்கை டெல்ரா வைரசின் தொற்றினால் அதிகரித்திருக்கிறது (இதுவும் பிரிட்டன் ஆய்வு கண்டு பிடித்துச் சொன்னது, இந்தியா தங்கள் கொரனா நோயாளிகளில் 25% வரை பிரிட்டன் விகாரியினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டது!). டெல்ரா வைரஸ் நோயின் தீவிரத்தைக் கூட்டுகிறதா என்பதை நேரடியாக உறுதி செய்ய இன்னும் சில காலம் எடுக்கலாம்.

தடுப்பூசிகளினால் டெல்ராவிடமிருந்து பாதுகாப்பு..

அஸ்ட்ரா செனக்கா, பைசர் ஆகிய இரு தடுப்பூசிகளினால் கிடைக்கும் பாதுகாப்பு இந்திய டெல்ரா வைரசுக்கெதிராக சிறிது வீழ்ச்சி கண்டிருக்கிறது. இப்படி தடுப்பூசி பெற்றுக் கொண்டோரில் உருவாகும் தொற்றை breakout infections என்பார்கள். இந்த breakout infections இன் அளவு டெல்ரா வைரஸ் தொற்றினால் அதிகரித்திருக்கின்றது - ஆனாலும், தீவிர நோய், மரணம் என்பன ஏற்படுவதை இந்த இரு தடுப்பூசிகளும் வெற்றிகரமாகத் தடுக்கின்றன.

ஏனைய தடுப்பூசிகளின் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வுகள் நடைபெறுகின்றன.

டெல்ரா வைரஸ் - வித்தியாசமான குணங்குறிகள்..

ஒரு  பிரிட்டன் ஆய்வின் படி, ஏனைய கொரனா வைரஸ் விகாரிகளை விடவும் ஒரு வித்தியாசமான நோய் அறிகுறி டெல்ரா வைரஸ் தொற்றுடைய நோயாளிகளில் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. மூக்கொழுகல் (runny nose) அல்லது மூக்குச் சளி என்பது முன்னர் கோவிட்டின் பிரதான அறிகுறியாக இருக்கவில்லை. தற்போது டெல்ரா வைரஸ் தொற்றுடையோரில் இந்த அறிகுறி (ஏனைய வழமையான கோவிட் அறிகுறிகளுடன் சேர்ந்து) காணப்படுவதாக இந்த பிரிட்டன் ஆய்வு சொல்கிறது.

மூக்கொழுகல் இருப்பதால் இந்த டெல்ரா வைரஸ் பரவுவதிலும் வித்தியாசம் இருக்குமா என்பது ஆராயப்படவில்லை. ஆனால், சாதாரணமாக அதிக சுவாசச் சுரப்புகள் ஒரு தொற்றில் உருவாகும் போது , அந்தச் சுரப்புகளால் நாங்கள் புளங்கும் பொருட்களின் மேற்பரப்புகள் மாசடைந்து தொற்றுக்களைக் கடத்தும்  ஊடகங்களாக (fomites) மாறும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என நான் கருதுகிறேன். எனவே, overkill ஆக இருந்தாலும், இந்த டெல்ரா வைரஸ் அதிகரிக்கும் நாடுகளில் வாழ்வோர், இனி நீங்கள் தொடும் மேற்பரப்புகளையும் கவனமாகத் தொற்று நீக்கம் செய்வது நல்லது என நினைக்கிறேன்.

-மேலும் தகவல்கள் வெளிவரும் போது பகிர்கிறேன்.

-ஜஸ்ரின்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

டெல்ரா வைரஸ்: புதிய தகவல்களும் எச்சரிக்கைகளும்

நேற்றைய தினம் வரை டெல்ரா வகை கொரனா வைரஸ் பற்றி வெளி வந்த தகவல்கள், கீழேயுள்ள இணைப்பின் தழுவலாகத் தருகிறேன்:

ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் நிலையும் சவாலும்: இந்த டெல்ரா வைரஸ் முன்னர் பரவலாக இருந்த பிரிட்டனின் கென்ற் வைரசை விட 60% வீதம் வேகமாகப் பரவக் கூடியது. கென்ற் வைரஸ் தொற்றியவரை விட, டெல்ரா வைரஸ் தொற்றிய ஒருவர் இரண்டு மடங்குகள் அதிகமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் படும் வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது இந்த டெல்ரா வைரஸ் பற்றிய கண்காணிப்புகளை மூன்று மேற்கு நாடுகள் தான் கிரமமாகச் செய்து வருகின்றன: பிரிட்டன், டென்மார்க், அமெரிக்கா. இந்த மூன்று நாடுகளிலும் இருந்து வரும் ஒரு தகவல், டெல்ரா வைரசின் பரவலை தடுப்பூசிகளால் மட்டுப் படுத்த முடிகிறது: இதன் முக்கியத்துவம், தடுப்பூசிகள் பரவலாகக் கிடைக்காத ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் டெல்ரா வைரசின் பரவல் அதிக தீவிர நோயையும், மரணங்களையும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மேற்கு நாடுகளில் இருப்போருக்கான எச்சரிக்கைச் செய்தி: டெல்ரா வைரசுக்கெதிராக பாவனையில் இருக்கும் தடுப்பூசிகள் சிறிதளவு செயலிழந்தாலும், திருப்திகரமான பாதுகாப்பை வழங்கின்றன. சுவாரசியமான ஒரு அவதானிப்பு: பிரிட்டன் ஆய்வின் படி, இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் எடுத்துக் கொள்ளாதோரில், இந்த டெல்ரா வைரசுக்கெதிரான பாதுகாப்பு மிகக் குறைவாக இருக்கிறது (கிட்டத்தட்ட 33%) - இதனால் ஒரு டோசோடு தடுப்பூசியை நிறுத்திக் கொண்டோர் டெல்ரா வைரசினால் பாதிக்கப் படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

உலகளாவிய ரீதியில், டெல்ரா வைரசே பிரதான கோவிட் வைரசாக இருக்கப் போகிறது - எனவே இரண்டு டோஸ்கள் உடைய தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வோர், இரண்டு டோஸ்களையும் பூர்த்தி செய்தால் மட்டுமே கோவிட் 19 பாதிப்பில் இருந்து பாதுகாப்பை எதிர்பார்க்கலாம்! (இந்த அறிவுறுத்தல், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (J&J) தடுப்பூசிக்கு மட்டும் பொருந்தாது, ஏனெனில் அது ஒரு டோஸ் மட்டும் கொண்டது).

தகவல் மூலம், நன்றியுடன்: https://www.nature.com/articles/d41586-021-01696-3

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.