Jump to content

உலக அரசியலும் உள்ளூர் அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியலும் உள்ளூர் அரசியலும்

என்.கே. அஷோக்பரன் 

உலகின் மிகப் பலம்பொருந்திய பல நாடுகள், ஏனைய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது, எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளது.   

பெரும் வணிகமும் அதனால் குவிந்த செல்வமும், அந்தச் செல்வத்தால் அந்தச் செல்வத்தைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும், விரிவடைந்த ஆயுத மற்றும் படைபலம், இந்த நாடுகளின் வல்லமைக்கு அடிப்படையாக இருந்திருக்கின்றன.  

முழு உலகையும் தனது சாம்ராஜ்யமாக்குவது, அலெக்ஸாண்டர், ஹிட்லர் போன்ற பலரினது கனவு. ஆனால், அந்தக் கனவை எவராலும் அடைந்து கொள்ள முடியவில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. உலக நாடுகளைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், உலக நாடுகள் மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதில், வல்லரசுகள் இப்போதும் குறியாக இருக்கின்றன.   

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உலகின் இரு துருவ வல்லரசுகளாகின. அமெரிக்க ஆதரவு, சோவியத் ஒன்றிய ஆதரவு என்ற இருபிரி நிலையை, உலகம் எதிர்கொண்டது.   
இந்த நிலையில்தான் இந்தியா, எகிப்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள்: ‘அணிசேரா நாடுகள்’  என்ற இயக்கத்தை ஆரம்பித்திருந்தன. கிட்டத்தட்ட 120 நாடுகள், இதில் அங்கம் வகித்தன. ஆனால், அணிசேரா நாடுகளாக அவை அறிவித்துக்கொண்டாலும், ஏதோ ஒரு வகையில், சோவியத் ஒன்றியம், அமெரிக்க சார்புகளைப் பெரும்பாலான நாடுகள் கொண்டிருந்தன.   

உதாரணமாக, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி காலத்தில் கூட இந்தியா, சோவியத் ஒன்றியத்துடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது. 1962 இந்தோ-சீன யுத்தத்தின் போது, சோவியத் ஒன்றியம் நடுநிலைமை வகித்தது. 

1960களில் சீனாவை விட, இந்தியாவுக்கு சோவியத் அதிக உதவிகளை வழங்கியிருந்தது.  ஆகவே, அணிசேரா நாடுகளாக இருந்தாலும், அவற்றில் பல ஏதோவொரு வகையில் அமெரிக்க, சோவியத் ஒன்றியம் என்ற இருதுருவங்களில், ஒரு துருவத்தைவிட மற்றையதற்கு நெருக்கமாகவே இருந்தார்கள்.    

இலங்கையில், 1970இல் ஆட்சியேறிய சிறிமாவோவும் அவரது இடதுசாரித் தோழர்களும் ‘ஐக்கிய கூட்டணி’ என்ற பெயரில் அரசாங்கம் அமைத்தார்கள். அந்த அரசாங்கத்தில், மேம்பட்டு நின்ற முதலாளித்துவப் பொருளாதார எதிர்ப்பின் விளைவாக, இயல்பாகவே சோவியத் ஒன்றிய சார்பு நிலையைக் கொண்டதாக தன்னை உருவாக்கிக் கொண்டது.   

சிறிமாவோ அரசாங்கம், சோவியத் ஒன்றியம், சீனா, இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. சிறிமாவோவின் அந்தத் துர்ப்பாக்கியம் மிக்க ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர்கள், பாண் வாங்க வரிசையில் காத்துக்கிடந்த வரலாற்றைச் சொல்லக் கேட்கலாம்.   

சோறும் கறியும் உண்டு வாழ்ந்த வளமான நாட்டு மக்கள், மரவள்ளிக்கிழங்கு தின்று உயிர்வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை, சிறிமாவோவினதும் அவரது இடதுசாரித் தோழர்களினதும் கிட்டத்தட்ட ஏழு வருட ஆட்சி உருவாக்கியது.   

இந்நாட்டின் சிறுபான்மையினருக்கு, அவர்கள் செய்த துரோகம் குறிப்பிடத்தக்கது. ஆனால், சிறுபான்மையினருக்கு எதிராக, இலங்கையை ஆண்ட அனைத்துப் பெருந்தேசியத் தரப்புகளும் செயற்பட்டுள்ளன என்பதால், அது சிறிமாவோவுக்கு மட்டும் உரிய ‘சிறப்பு’ அல்ல!   

சிறிமாவோவின் ஆட்சியை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக முயன்றுகொண்டிருந்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன, அமெரிக்க சார்புடையவராக இருந்தார்.   

ஜே.ஆரின் அமெரிக்க சார்பு, எவ்வளவு வௌிப்படையானது என்றால், அது அவருக்கு ‘யங்கி டிக்கி’ என்ற பட்டப்பெயரை பெற்றுத்தருமளவுக்கு அமைந்திருந்தது. பாணுக்காகவும் காற்சட்டை தைப்பதற்கான துணிக்காகவும் என வரிசையில் காத்துக்கிடந்த மக்களுக்கு, மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று ஜே.ஆர் உறுதியளித்தார்.   

இலங்கையின் பொருளாதாரக் கொள்கையை மாற்றுவேன் என்பது ஜே.ஆரின் உறுதிமொழியாக இருந்தது. ஆனால், வெறுமனே சொல்லிவிட்டு ஜே.ஆர் அமைதியாக இருக்கவில்லை; அல்லது, வனஜீவராசிகளைப் படம் பிடிக்கப் போகவில்லை; அல்லது, பியானோ வாசித்துக்கொண்டிருக்கவில்லை. ஜே.ஆர் வீதிக்கிறங்கினார்; ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.   சிறிமாவோ அரசாங்கத்துக்கு  எதிரான மக்களின் மனநிலையை, தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள ஜே.ஆர் களத்தில் இறங்கினார். அதற்காக முதலில் தனது கட்சியை ஒற்றுமைப்படுத்தினார்.   

ஜே.ஆரும் பிரேமதாஸவும் நண்பர்கள் அல்ல. அவர்களிடையே பொதுவானவைகள் என்று அடையாளப்படுத்துவதற்குக் கூட எதுவுமில்லை. அவர்கள் இருவேறுபட்ட ஆளுமைகள். ஆனால், ஜே.ஆர், பிரேமதாஸவின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். இந்த நாட்டின் அடித்தட்டு மக்களிடையே பிரேமதாஸ கொண்டிருந்த செல்வாக்கை அவர் உணர்ந்திருந்தார்.   

பிரேமதாஸவுக்கு அவருக்குரிய இடத்தை வழங்கி, அவரையும் அரவணைத்து, சிறிமாவோவின் ஆட்சியை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு ஜே.ஆர் செயற்பட்டார். இங்கு, ‘செயற்பட்டார்’  என்பது கவனிக்க வேண்டிய சொல்.   

அந்த விடாமுயற்சி, 1977இல், ஜே.ஆருக்கு விஸ்வரூப வெற்றியைப் பெற்றுத்தந்தது. 5/6 பெரும்பான்மையுடன், ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தார். இலங்கையின் பொருளாதாரக் கொள்கை மட்டுமல்ல, வௌிநாட்டுக் கொள்கையும் மாறிய சந்தர்ப்பம் அது. திறந்த பொருளாதாரத்தின் விளைவாக, இலங்கையில் பெரும் உற்பத்தித்துறை உருவாகத் தொடங்கியது. இலங்கையர்கள் வீடுகளில் தொலைக்காட்சிகள் வந்தன.   உற்பத்தி, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் என பொருளாதார ரீதியில் இலங்கை குறிப்பிட்டளவு முன்னேற்றத்தைச் சந்தித்தது. இனப்பிரச்சினைதான் ஜே.ஆர் சறுக்கிய இடம். அதையும் ஜே.ஆர் சிறப்பாகக் கையாண்டிருந்தால், வரலாறு வேறாக இருந்திருக்கும்.   

ஆனால், இலங்கையின் பெருந்தேசியவாதிகளைத் தொற்றிக்கொண்டுள்ள நோய், ‘இனவாத அரசியல்’. அதற்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஆகவேதான், அதைத் தடுப்பதும் குணப்படுத்துவதும் இன்னும்கூட, முடியாத காரியமாக இருக்கிறது. நிற்க!   

இன்று, உலக அரசியல் பரப்பு மாறியிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு, பனிப்போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், உலகின் தனித்த செல்வாக்கு மிக்க நாடாக, ‘உலக பொலிஸ்’காரனாக அமெரிக்கா உருவானது. 

இந்தியாவும் திறந்த பொருளாதாரத்தை அரவணைத்தக்கொண்டதைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்காவின் நண்பனானது. 1947இல் பாகிஸ்தான் என்று ஒரு நாடு தெற்காசியாவில் உருவாகியதிலிருந்து, அமெரிக்காவும் பாகிஸ்தானும் மிக நெருங்கிய உறவைக் கொண்ட நாடுகளாக இருந்துள்ளன.   

பாகிஸ்தான் என்ற நாட்டின் உருவாக்கமே இந்தியாவுக்கு எதிரானதாக, அல்லது மாற்றானதாக அமைந்திருந்தது. இந்தியாவின் அமெரிக்க விரோதப் போக்கு, அமெரிக்கா, பாகிஸ்தானுடன் நெருக்கமாவதற்குக் காரணமாகியது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா, இராணுவம், பொருளாதாரம் போன்ற உதவிகளை வாரி வழங்கியது.   

பூகோள அரசியலில், தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை நிலைகொள்ள வைக்க அமெரிக்கா, பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதிக்கம் கொண்ட போது, அதனை வீழ்த்த, அமெரிக்கா முஜாஹிதீன்களுக்கு உதவியது, இதில் பாகிஸ்தானின் பங்கும் குறிப்பிடத்தக்கது.   

ஆப்கானிஸ்தானை சோவியத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்க, அமெரிக்காவுடன், பாகிஸ்தான் இணைந்து செயற்பட்டது. இங்கு அமெரிக்கா, முஜாஹிதீன்களாக வளர்த்துவிட்ட பயங்கரவாதம்தான், 2001இல் அமெரிக்காவையே ஆட்டிப்போட்டது.   

1990களில் பாகிஸ்தான் இரகசிய அணுவாயுத அபிவிருத்தி, அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அது சரிசெய்யப்பட்டாலும், பாகிஸ்தான், குறிப்பான பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் அளித்து வந்த ஆதரவு, அமெரிக்க-பாகிஸ்தான் உறவில் தொடர்ந்து விரிசலை ஏற்படுத்தியது.   

9/11இற்குப் பிறகு, இது அமெரிக்காவுக்குப் பெருந்தலையிடியாக மாறியது. ஒரு தசாப்த காலமாக, அமெரிக்கா தேடிவந்த பின் லேடன், பாகிஸ்தானில் இருந்தமையும், அமெரிக்கா பாகிஸ்தானுக்கே தெரியாமல், பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பின் லேடனைக் கொன்றமையும் அமெரிக்க-பாகிஸ்தான் உறவை இன்னும் பலவீனமாக்கியது.   

இதேவேளை, சமகாலத்தில், இந்தியா திறந்த பொருளாதாரத்தை அரவணைத்ததும், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத்துறையின் அதீத வளர்ச்சியும், அதன் மூளையாகவும், உற்பத்திச் சாலையாகவும் இந்தியா அமைந்தது, இந்திய - அமெரிக்க உறவை பலப்படுத்தியது. இதில் மன்மோகன் சிங் என்ற ஆளுமையின் பங்கு, இந்திய வரலாற்றில் மறக்கமுடியாதது.   

மறுபுறத்தில், அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாடு, குறிப்பாக இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான தீவிர நடவடிக்கை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இன்னொரு பொது அரங்கைத் தோற்றுவித்தது.   

இந்தியாவோடு அமெரிக்காவின் உறவு வலுவடைந்த அதேவேளை, பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு வலுவிழக்கத்தொடங்கியது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் முன்னாள் காதலி என்ற நிலையிலிருந்து, பாகிஸ்தானை மீட்க ஒரு புதிய காதலன் வந்தான். 

ஆனால், அந்தப் புதிய காதலனின் நிகழ்ச்சிநிரல், உலக அரசியல் ஒழுங்கை மாற்றியமைப்பதாக இருந்தது.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலக-அரசியலும்-உள்ளூர்-அரசியலும்/91-272994

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீது சீனாவுக்கு பொருளாதாரப் பிடி; இந்தியாவுக்கு அரசியல் பிடி

உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் - 02: 

என்.கே. அஷோக்பரன்  

(கடந்த வாரத் தொடர்ச்சி)

பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான காதலுக்கான ஊக்கி, ஒருவகையில் இந்தியாதான். இருநாடுகளும் இந்தியாவுடன் கொண்டுள்ள மோதல் நிலைதான், ‘எதிரியின் எதிரி நண்பன்’ என, இந்தக் காதலின் தொடக்கமாக அமைந்திருக்கிறது.   

ஆனால், இது சமபலமுள்ள இரண்டு நாடுகளின் இணைவு அல்ல. இரண்டு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், சீனா என்ற பொருளாதார இராட்சதனோடு, பாகிஸ்தானை ஒப்பிட முடியாது. இந்தப் பலச்சமன் இன்மையின் காரணமாக, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு, ‘கடன் பொறி’க்குள் பாகிஸ்தானை சிக்கவைத்துள்ளதாகப் பல ஆய்வாளர்களும் கருத்துரைக்கிறார்கள்.   

எது எவ்வாறாயினும், பாகிஸ்தான் - சீனா உறவு என்பது, இலங்கைக்கான பொருத்தமான முன்னுதாரணம் அல்ல. இதற்கான அடிப்படைக் காரணம், இலங்கையும் இந்தியாவும் எதிரி நாடுகளோ, வைரி நாடுகளோ அல்ல. மாறாக, இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள் என்பதோடு, இந்த உறவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு உண்டு.   

1947க்கு முன்னர், பாகிஸ்தான் என்ற ஒரு நாடோ, அத்தகைய தேச அடையாளமோ, மக்கள் கூட்டமோ இருக்கவில்லை. பாகிஸ்தானின் உருவாக்கம் என்பது, இந்தியாவுக்கு மாற்றான முஸ்லிம் தேசம் என்பதுதான். ஆகவே, இந்திய எதிர்ப்பு என்பது, பாகிஸ்தானின் பெருந்திரள்வாத அரசியலுக்கு அத்தியாவசியமானதொன்று.   

ஆனால், இலங்கையின் நிலை அவ்வாறானதல்ல. ஆகவே, பாகிஸ்தானைப் போன்று இந்திய எதிர்ப்பு, முழுமையான சீனச் சார்பு நிலைப்பாட்டை இலங்கை எடுத்துக்கொள்வது, இலங்கையின் நலன்களுக்கு ஏற்புடையதல்ல.   

இன்றைய சூழலில், இலங்கைக்கு சீனா அவசியம். இலங்கைக்கு, சீனா இராணுவ உதவிகள், உட்கட்டமைப்பு உதவிகள் என நிறைய உதவிகளைக் கடந்த காலத்தில் வழங்கியிருக்கிறது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், இலங்கையின் உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதி என்பன சீனாவின் கொடைகளே ஆகும்.  

ஆனால், அன்றைய சீனாவிலிருந்து, இன்றைய சீனா, அதன் நோக்கத்தில் வேறுபட்டது. இன்று, சீனா தன்னை உலகின் முதல்நிலை வல்லரசாக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.   

இந்தப் பயணத்தில், சீனாவிடம் உள்ள பெரும் ஆயுதம், அதன் பொருளாதார பலம் ஆகும். அதைப் பயன்படுத்தி, நாடுகளைத் தன்வசமாக்கிக் கொண்டு, தனது இலட்சிய பயணத்தைப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், இதுவரை வெற்றிகரமாகவே சீனா நடத்திக்கொண்டிருக்கிறது.  

ஆனால், இலங்கைக்கு இந்தியாவும் அவசியம். தெற்காசியாவில் இந்தியாவின் முக்கியத்துவத்தைக் குறைத்துமதிப்பிட்ட ஒவ்வொரு தெற்காசிய அரசியல் தலைமையும் அதன் பிரதிபலனை மிக மோசமாக அனுபவித்திருக்கிறது.   

இந்தியா, உலக வல்லரசாக விரும்புகிறதோ இல்லையோ, தெற்காசியாவின் ‘பெரியண்ணன்’ ஸ்தானத்தை அது ஒரு போதும் இழக்காது. அதற்காக இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும் என்பது, வரலாறு தெரிந்தவர்களுக்குப் புரியும்.   
இலங்கையில் சீனாவுக்குப் பொருளாதாரப் பிடியொன்று இருக்கிறதென்றால், இலங்கையில் இந்தியாவுக்கு அரசியல் பிடி ஒன்று இருக்கிறது. அந்த அரசியல் பிடியின் அடிப்படை, இலங்கையின் வாழும் தமிழ் மக்கள் ஆவார்.   

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள இணங்கிய உறவும், இந்தியாவும் மேற்கு நாடுகளும் சீனாவுடன் கொண்டுள்ள முரண்பாடுகளும், இலங்கையின் அரசியலை இனப்பிரச்சினை என்ற அடிப்படையைக் கொண்டு, ஸ்திரமிழக்கச் செய்யும் வல்லமையை அவற்றுக்கு வழங்குகின்றன. இந்தத் துருப்புச் சீட்டு, இந்தியாவின் கையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.   

சில தமிழ் அரசியல் தலைமைகள், இந்தியாவை விமர்சிப்பதும் இதனால்தான். இந்தியா, இலங்கை தமிழர்களின் வேதனையைத் தனது துருப்புச் சீட்டாக, தன்னுடைய நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் அது.   
இதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. அதனால்தான், இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி, சீனா பேசுவது இல்லை. இலங்கையின் தமிழ்த் தரப்போடு, சிறுபான்மையினரோடு சீனா நேரடி உறவுகளைப் பேணுவதும் இல்லை. இலங்கையில், சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்கு, அது தேவையில்லாத ஒன்று என்று, சீனா கருதுகிறது.   

ஆனால், இலங்கையின் சிறுபான்மையினரை, சீனா கண்டுகொள்ளாததைப் போல, இலங்கை அரசாங்கம் உதாசீனம் செய்துவிட முடியாது. இனப்பிரச்சினை என்ற துருப்புச் சீட்டு, ஒரு கத்தியைப் போல, இலங்கைக்கு மேல் தொங்கிக் கொண்டே இருக்கும்.   

இலங்கையின் சில தலைமைகள், சீனா ஏனைய பல நாடுகள் மீது கொண்டுள்ள செல்வாக்கும், சீனாவின் வீட்டோ அதிகாரமும் தம்மை மேற்கினதும், இந்தியாவினதும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாதுகாக்கும் என்று எண்ணலாம். ஆனால், அந்த எண்ணம் எவ்வளவு தூரம் யதார்த்தத்தில் சாத்தியமாகும் என்பது கேள்விக்குரியதே.   

இலங்கை, தன்னைச் சீனாவின் இஸ்‌ரேலாகக் கருதுவது, இலங்கையின் ‘ஈகோ’வுக்குப் பால்வார்க்கலாம், ஆனால், அது யதார்த்தமல்ல; இஸ்‌ரேலின் இராணுவ, பொருளாதாரப் பலத்துக்கு அருகில் கூட இலங்கை இல்லை.   

கென்யாவைப் போல, ட்ஜிபூட்டியைப் போல, எகிப்தைப் போல சீனா கடன்வழங்கியுள்ள, முதலிட்டுள்ள பல்வேறு நாடுகளில் ஒன்று இலங்கை. இலங்கைக்கு என்று குறிப்பிட்ட பூகோள தந்திரோபாய முக்கியத்துவம் உண்டு; ஆனால், உலகின் ஏனைய வல்லரசுகளோடு போர் புரியும் அளவுக்கு இலங்கையின் பூகோள தந்திரோபாய முக்கியத்துவம், சீனாவுக்குப் பெறுமதிமிக்கதொன்று அல்ல.   

சீனாவின் இராஜதந்திரத்தில், போர் என்பது கடைசி அஸ்திரமாகவே இருக்கிறது. அதனை, இலங்கைக்காக சீனா பயன்படுத்தாது என்ற உண்மை, இலங்கை தலைமைகளுக்குப் புரிய வேண்டும். 

இந்தியாவையும், மேற்கையும் பகைத்துக்கொண்டு அல்லது, உதாசீனம் செய்துகொண்டு, இலங்கை தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடரமுடியாது. 

உண்மையில் இலங்கையின் அரசியல் தலைமைகள் அறிவுபூர்வமாகச் சிந்தித்தால், அவர்கள் முதலில் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள். இது இந்தியா உள்ளிட்ட மேற்கு நாடுகள், தமது கையில் வைத்திருக்கும் துருப்புச் சீட்டின் வலுவைக் குறைக்கும். 

மறுபுறத்தில், தனது பொருளாதாரத் தேவைகளுக்காக தொடர்ந்தும் சீனாவில் மட்டும் தங்கியிராது, கடன்களைத் தாண்டி, சர்வதேச முதலீட்டை இலங்கைக்கு வரவழைக்கும் தந்திரோபாய நடவடிக்கைகளைக் கையாண்டு, இலங்கையின் பொருளாதாரத்தை நீண்டகாலத்தில் கடன்பொறியிலிருந்து மீட்டெடுக்கும் தூரநோக்கு நடவடிக்கைகளை, இலங்கை மேற்கோள்ள வேண்டும். 

இது இலங்கையின் மீது சீனா கொண்டுள்ள பிடியின் இறுக்கத்தைக் குறைக்கும். ஆனால், இவற்றைச் செய்யாது, சர்வதேச அரசியல் ஊடாட்டங்களை உதாசீனம் செய்துகொண்டு, சுயலாப தேர்தல் அரசியலுக்காக, இனவாதத்தையும் பெருந்தேசியவாதத்தையும் முன்னெடுத்துக்கொண்டு, இலங்கையை சீனாவின் கடன்பொறியில் இன்னும் இன்னும் அழுத்திக்கொண்டே செல்லும் அரசியலை, இலங்கையின் அரசியல் தலைமைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பார்களேயானால், அது இலங்கையின் சவப்பெட்டியில் அடிக்கும் கடைசி ஆணியாக அமைந்துவிடும்.   
சர்வதேச அரசியலில் சீனா நல்லது, இந்தியாவும் அமெரிக்காவும் கெட்டவை; இந்தியாவும் அமெரிக்காவும் நல்லவை, சீனா கெட்டது என்ற கறுப்பு - வௌ்ளை, இரு எதிர்நிலை வகைப்படுத்தலுக்குள் அடக்கிவிடுவது சிறுபிள்ளைத்தனமானது. 

மனித உறவுகள் எப்படிச் சிக்கலானதோ, அதுபோலவே நாடுகளிடையேயான உறவுகளும் சிக்கலானவை. அதுவும், பெருமளவுக்குப் பலச் சமமின்மை கொண்டுள்ள நாடுகளிடையேயான உறவு மிகக் கடினமானது. அதனை முறையாகக் கையாள்வதில்தான் வெற்றி தங்கியிருக்கிறது. 

ஆனால், இதனைச் சாதிக்க அறிவும் ஆற்றலும் முறையான ஆலோசகர்களைக் கொண்டதும், ஆலோசகர்களின் ஆலோசனைகளுக்கு செவிமடுக்கும் இயல்பும் கொண்ட தலைமைகள் இலங்கைக்குத் தேவை. தமது சுயலாபத்தையும் தேர்தல் வெற்றியையும் மட்டும் இலக்காகக் கொண்டு இயங்கும் தலைமைகளால், இலங்கைக்கு ஒருபோதும் உய்வில்லை.    

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கை-மீது-சீனாவுக்கு-பொருளாதாரப்-பிடி-இந்தியாவுக்கு-அரசியல்-பிடி/91-273565

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.