Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: சீமான் அரசியலின் அபாயங்கள், அபத்தங்கள்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்


 

தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: சீமான் அரசியலின் அபாயங்கள், அபத்தங்கள்!

spacer.png

ராஜன் குறை 

சென்ற வாரம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சந்தித்த படுதோல்வியிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெற முடியும் என்று பரிசீலித்தோம். இந்த வாரம் சீமானின் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் தோல்வி குறித்தும், அதன் அரசியல் எத்தன்மையது என்பது குறித்தும் ஆராய்வோம். அரசியல் சிந்தனை என்பது விமர்சனபூர்வமாக இருப்பதுடன் கண்டிக்க வேண்டியதை கண்டிக்க தயங்கக் கூடாது. கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி இரண்டுமே தனிநபர்களை மையப்படுத்தியது. அவர்களைத் தவிர அந்தக் கட்சியில் உள்ள யாருமே முகமற்றவர்கள்; அடையாளமற்றவர்கள் என்ற நிலையிலேயே இந்தக் கட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையை விமர்சிப்பதில் ஒரு மிகப்பெரிய குழப்பம் பலர் மனதில் இருக்கிறது. எல்லா கட்சிகளுமே ஒரு தலைவரை, முதலமைச்சர் வேட்பாளரை, பிரதமர் வேட்பாளரை மையப்படுத்திதானே நடக்கிறது, அதுபோலத்தானே இந்தக் கட்சிகளும் என்று பலரும் எண்ணத் தலைப்படுகிறார்கள். குறிப்பாக தொலைக்காட்சி ஊடகம் இந்தத் தலைமையேற்கும் தனிநபர் மட்டுமே வெற்றி தோல்விக்கு காரணம் என்ற மனப்போக்கை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகவே ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைந்ததும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக ஓர் அபத்தமான கற்பிதத்தைத் தொடர்ந்து அனுமதித்தார்கள்.

ஒரு கட்சியின் தலமட்ட தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் எனப் பலரையும் குறித்து அச்சு ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்கின்றன. ஆனாலும் அவர்களது முக்கியத்துவத்தைக் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து பேசுவதில்லை. பல நேரங்களில் வெற்றி தோல்விக்கு அவர்களது செயலாற்றும் திறமையும், மக்களிடையே அவர்களுக்கு உள்ள தொடர்புகளும் முக்கிய காரணம் என்றாலும் அது முழுமையாக உள்வாங்கப்படுவதில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளுமே பலமுறை ஆட்சிப்பொறுப்பில் இருந்தவை. அந்தக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்தவர்கள். மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர்கள். அதனால்தான் இந்த இரண்டு கட்சிகளும் சமூகப்பரப்பில் முழுமையாக வேரூன்றியுள்ளன. இந்தக் கட்சிகளைக் கடந்து இன்னொரு கட்சி வளர வேண்டும் என்றால் சமூகப் பரப்பில் அந்தக் கட்சி வேரூன்ற வேண்டும். அதற்கு தல மட்டத்தில் மக்கள் நம்பிக்கையை ஈட்டும் வண்ணம் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் தல மட்ட தலைவர்கள் உருவாக வேண்டும். இவர்கள் கட்சியின் செயல்பாட்டை தீர்மானிப்பவர்களாக, கட்சியின் தலைமைக்கு உரம் சேர்ப்பவர்களாக இருக்க வேண்டும். இப்படி ஒரு வலுவான கட்சி அமைப்பு உருவான பின் ஒரு தலைவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யலாம். ஆயிரக்கணக்கானவர்கள் தேரை இழுக்கும்போது தேர் நகர்கிறது. ஆனால், அது தானாக நகர்வதில்லை. இழுப்பவர்களின் உடலாற்றலால்தான் நகர்கிறது. அது போல கட்சி தானூர்தி வாகனமில்லை. தலைவர்கள் மட்டுமே அதை நகர்த்திவிட முடியாது. தொண்டர்களை உற்சாகப்படுத்தி இயக்கும், மக்களை கவரும் ஆற்றல் தலைவர்களுக்கு இருக்க வேண்டும். அதே நேரம் அப்படி உற்சாகப்படுத்த தொண்டர்களைக் கொண்ட கட்சி அமைப்பு முதலில் இருக்க வேண்டும்.

 

சீமானின் கட்சி அவருடைய உணர்ச்சிகரமான பேச்சை மட்டுமே நம்பியிருக்கிறது. ஆவேசமாக, நகைச்சுவையாக, உணர்ச்சி தெறிக்க அவர் ஏற்ற இறக்கங்களுடன் பேசுகிறார். அது கேட்பதற்கு நாடகீயமாக, சுவாரஸ்யமாக இருப்பதால் மக்கள் கூடுகிறார்கள். அதை ஆதாரமாகக் கொண்டு பலர் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாகி கட்சியை வளர்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். சீமானையே ஆதாரமாகக் கொண்டிருப்பதால் கட்சியின் தலமட்ட அமைப்புகள் வலுப்பெறுவதில்லை. அவற்றுக்கென செயல்பாடுகள் என சில காரியங்கள் நடந்தாலும், வெகுஜன அமைப்பாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், சீமானே கட்சியின் ஆதாரம் என்ற நிலைதான்.

தேர்தலில் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி தேர்தலைத் தனித்து நின்று சந்திக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு நாலரை லட்சம் வாக்குகளைப் பெற்றது. அடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்டு பதினாறு லட்சம் வாக்குகளை பெற்றது. நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு முப்பத்திரண்டு லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இது மொத்த வாக்குகளில் ஆறு சதவிகித வாக்குகள் ஆகும். இந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போது கட்சி மெள்ள வளர்வதாகத் தோன்றலாம். ஆனால், நாம் கவனிக்க வேண்டியது இரண்டு முக்கிய கட்சிகளும், அவர்கள் அமைக்கும் கூட்டணிகளும் தொடர்ந்து எண்பது சதவிகித வாக்குகளைப் பெறுகின்றன என்பதைத்தான். சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியிலேகூட அவர் மூன்றாவது இடம்தான் பெற முடிந்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு திரைப்பட இயக்குநராக, தமிழ் ஈழ ஆதரவாளராக, தமிழ் அடையாளவாத அரசியல் செய்பவராக ஊடக கவனத்தைத் தொடர்ந்து பெற்றுவரும் அவரால் அவர் போட்டியிடும் தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை என்பது சிந்தனைக்குரியது.

spacer.png

தமிழகத்தில் நிலைபெற்றுவிட்ட இரு கட்சி ஆட்சி முறை மீது பலருக்கு அதிருப்தி இருக்கிறது. தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி பிற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பாகவே இருந்தாலும், இன்னும் மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படவில்லை என்பது உண்மைதான். அதனால் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மூன்றாவதாக ஒரு மாற்று சக்தி வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இவர்கள் மொத்த வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட இருபது சதவிகித வாக்குகளாக இருந்து வருகிறது. அதாவது திமுக, அஇஅதிமுக கூட்டணிகள் பகிர்ந்துகொண்ட எண்பது சதவிகித வாக்குகளைத் தவிர்த்த, இரு துருவ அரசியல் அதிருப்தியாளர்களின் இருபது சதவிகித வாக்குகளைத் தனித்து நிற்கும் சிறிய கட்சிகள், சுயேட்சைகள், நோட்டா எனப் பலரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். விஜய்காந்த் கட்சி தொடங்கி 2006 தேர்தலில் போட்டியிட்டபோது இந்த உதிரி அதிருப்தி வாக்குகளில் எட்டு சதவிகித வாக்குகளை ஒரே ஆண்டில் பெற்றார். பின்னர் அவர் 2011 தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மூன்றாவது மாற்று என்ற தகுதியை இழந்தார். அதனால் 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டாலும் மொத்தமாகவே அந்த கூட்டணி ஐந்து சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. அதே 2016 தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு சதவிகித வாக்கினைப் பெற்றது. அடுத்து நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் நலக் கூட்டணியின் பிரதான கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டதால் இருபது சதவிகித அதிருப்தி வாக்குகளில் நாம் தமிழருக்கு கணிசமாக ஆறு சதவிகித வாக்குகள் வரை கிடைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த வளர்ச்சி என்பது ஒருபோதும் இரண்டு பெரிய கட்சிகளையும் வெல்லும் சாத்தியத்தைக் காட்டும் வளர்ச்சி கிடையாது. அந்தக் கட்சிகள் ஈர்க்கும் வாக்குகளைச் சிறிதளவும் குறைப்பதற்கு நாம் தமிழர் கட்சியால் இயலவில்லை. இனி வரும் காலத்திலும் இயலாது என்பதுதான் உண்மை. ஏனெனில் அதன் அரசியல் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்குப் பொருத்தமற்ற, உள்ளீடற்ற ஓர் உணர்ச்சி அரசியல் என்பதுதான்.

சீமானின் சாகசவாதம், கற்பனாவாதம், புனைவுரைகள்

ஆரோக்கியமான அரசியல் செயல்பாடு என்பது மக்களைச் சிந்திக்க தூண்டுவது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் பகுத்தறிவை முன்வைத்து அரசியல் செய்தன. அவை மக்களாட்சியின் அடிப்படைகள் என்ன, அதன் மூலம் எப்படி சமூக நீதியை நிலைநாட்டுவது, சமத்துவ மனப்போக்கை வளர்ப்பது என்பதையெல்லாம் மிக விரிவாக பிரச்சாரம் செய்தன. வெறும் அடையாளவாதமாகவோ, உணர்ச்சி அரசியலாகவோ அவை இருக்கவில்லை. மொழிப்பற்று, திராவிட இனம் என்றெல்லாம் பேசினாலும் அவற்றின் உள்ளார்ந்த உள்ளடக்கம் சாமானியர்கள் ஆட்சி, சமூக மறுமலர்ச்சி, சாதி இழிவு நீக்கம், முற்போக்கு சிந்தனை என்பதாகவே இருந்தது. இருபதாண்டுகள் நிகழ்ந்த மகத்தான பிரச்சாரத்தினால் பெரும் மக்கள் இயக்கமாக உருப்பெற்றதை உடைத்து தன் கதாநாயக ஆளுமை மூலம் பாதியைப் பிரித்துக் கொண்டார் எம்ஜிஆர். அதிலிருந்து திமுக, அஇஅதிமுக என்ற இருமுனை அரசியல் நிலைபெற்றது.

சீமானின் அரசியல் என்பது ஈழத்தில் விடுதலைப் புலிகள் போரில் அழித்தொழிக்கப்பட்ட தருணத்தில் தொடங்கியது. சீமான் விடுதலைப் புலிகள் போரில் வென்றுவிடுவார்கள் என்று கடைசி வரை உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார். போர் நிறுத்தம் கோருவது சிங்கள வீரர்களை அழிவிலிருந்து காப்பாற்றத்தான் என்று சூளுரைத்தார். தமிழகத்தில் இலங்கை பிரச்சினை குறித்தும், அங்கு நடந்த உள்நாட்டுப் போர் குறித்தும் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறைதான் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கிறதே தவிர, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை இருந்தது குறைவு. விடுதலைப் புலிகள் குறித்து உலக அரங்கில் அரசியல் சிந்தனையாளர்கள் என்ன கூறுகிறார்கள், அதன் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் தமிழில் யாரும் விவாதிப்பதில்லை. சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் அமைப்பு இரண்டுமே வன்முறையைத் தீர்வாக முன்னெடுத்ததை உலக அளவிலான மனித உரிமை அமைப்புகளும், அரசியல் சிந்தனையாளர்களும் கண்டிக்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் சிங்கள அரசை மட்டுமே கண்டிக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் எல்லா ராணுவ நடவடிக்கைகளும், அரசியல் படுகொலைகளும் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இலங்கை உள்நாட்டுப் போரின் வரலாறு குறித்த தகவல்களே பலருக்கும் தெரியாது. விடுதலைப் புலிகள் மரணத்துக்கு அஞ்சாமல் போரிட்டார்கள், பிரபாகரன் இறுதிவரை போரிட்டு உயிர் நீத்தார் என்று அவர்கள் வீரம், தியாகம் ஆகியவற்றை போற்றுவதுடன் தமிழ்நாட்டு அரசியல் சிந்தனை நின்றுவிடுகிறது. அந்த வீரம், தியாகத்தால் விளைந்த அரசியல் நன்மை, தீமைகள் என்ன என்பதை குறித்து விவாதிப்பதில்லை. எப்படி சே குவாராவின் சாகச வாதம், கொச்சையான ராணுவ வாதம், வீரமாக, தியாகமாக விமர்சனமின்றி கொண்டாடப்படுகிறதோ அதேபோலத்தான் பிரபாகரன் விஷயத்திலும் நடக்கிறது.

 

இதற்கு மாறாக இந்திய விடுதலைப் போரில் முளைவிட்ட தீவிரவாதப் போக்கை காந்தி தன் மகத்தான அரசியல் தரிசனத்தால் முறியடித்தார். சுபாஷ் சந்திர போஸின் ராணுவ வாதம் அவரை ஹிட்லரின், ஜப்பானின் கூட்டாளியாக மாற்றியது. ஆனால் காந்தியும், காங்கிரஸும் உறுதியாக மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை வைத்து வெகுஜன அரசியலை முன்னெடுத்ததால் இந்தியாவின் அரசியல் விளைநிலம் பண்பட்டது. காந்தியை, காங்கிரஸை கடுமையாக விமர்சித்தவர்கள் அனைவரும் தொடர்ந்து இந்தியாவில் அரசியலை முன்னெடுக்க முடிந்தது. இன்று வரை அந்த அரசியல் முரண்கள் தேர்தல் களத்தில் மோதிக்கொள்கின்றன. வாக்குச் சீட்டு என்ற ஆயுதத்தின் மூலமே தீர்வுகளைக் காண்கின்றன.

spacer.png

காந்திக்கும், காங்கிரஸுக்கும் இணையாக பெரியாரும், அண்ணாவும் முழுக்க முழுக்க மக்கள் மனமாற்றத்தை நோக்கியே அரசியல் செய்தார்கள். வன்முறையை அறவே தவிர்த்தார்கள். அருவருத்தார்கள். மக்கள் கூட்டம் தன்னெழுச்சியாக வன்முறையில் ஈடுபட நேர்ந்தாலும் அதைக் கண்டித்தார்கள். பாராட்ட மறுத்தார்கள். தாங்கள் அறிவிக்கும் போராட்டங்களால் தொண்டர்கள் அளவுக்குமீறி இன்னல்களை அனுபவித்துவிடக் கூடாது என கவனமாக இருந்தார்கள். மனமாற்றத்துக்காகப் போராடினார்களே தவிர, தாங்கள் நினைத்ததை வன்முறையால் சாதிக்க நினைக்கவில்லை. இந்த மரபில் நின்று ஐம்பதாண்டுக் காலம் மக்களாட்சி விழுமியங்களைக் கட்டி எழுப்பினார் கலைஞர்.

ஆனால், இலங்கையில் தமிழர் உரிமைக்கான அரசியலை முழுக்க, முழுக்க ராணுவமயப்படுத்தினார் பிரபாகரன். இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்தாயகம் மட்டுமே ஒரே தீர்வு என்ற அதிகபட்ச தீர்வே முன்னிலைப்படுத்தப்பட்டது. மாற்று தீர்வுகளை முன்வைத்த பலர் துரோகிகளாகக் கருதி கொல்லப்பட்டனர். நீலம் திருச்செல்வன், ரஜினி திரணகம என்று சர்வதேச குடிமைச் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரசியல் கொலைகள் பல நிகழ்ந்தன. இவற்றை குறித்தெல்லாம் விமர்சனபூர்வமான சிந்தனை தமிழ் உணர்வாளர்களால் மேற்கொள்ளப் படுவதில்லை.

 

இந்த நிலையில் தனக்கும் பிரபாகரனுக்கும் உள்ள உறவைக் குறித்து பல கற்பனை கதைகளைப் பேசுபவராக சீமான் அறியப்படுகிறார். அதெல்லாம் ஊடகங்களில் நகைச்சுவைக்கான கச்சாப் பொருளாக மாறியுள்ளன. ஆமைக்கறி என்பன போன்றவை கேலிக்கான குழூஉக்குறியாக மாறியுள்ளன. ஆனாலும் இவை சீமானுக்கு விளம்பரமாகவும் மாறிவிடுகின்றன. நாம் தமிழர் கட்சியிலிருந்து கணிசமான பேர் தொடர்ந்து விலகுகிறார்கள். அவர்கள் பொதுக்களத்தில் வைக்கும் குற்றச்சாட்டுகள் பலவும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. சமீபத்தில்கூட சீமான் நட்சத்திர விடுதிகளில் அறை எடுக்கச்சொல்லி வற்புறுத்துவது குறித்து சில குற்றச்சாட்டுகள் வலம் வந்தன. இவையெல்லாம் உண்மையா, இல்லையா என்று யாரும் ஆராய்வதில்லை என்றாலும், குற்றம் சாட்டுபவர்கள் பகிரங்கமாக தங்கள் சொந்தப் பொறுப்பில்தான் கூறுகிறார்கள் என்பதையும் புறக்கணிக்க முடியாது. தனது பொருளாதாரப் பார்வை எனவும், திட்டங்கள் எனவும் மனம்போன போக்கில் சீமான் கூறுபவை அதிர்ச்சியளிக்கின்றன. கொச்சையான தமிழ் அடையாளவாதம், மீட்புவாதம் ஆகியவற்றுடன் இணைந்த நடைமுறைக்கு உதவாத நேட்டிவிசம் என்று சொல்லக்கூடிய கிராமிய வாழ்க்கைக் கற்பனைகளைச் சிறிதும் தயக்கமின்றி நாம் தமிழர் கட்சி வெளிப்படுத்துகிறது.

ஒருபுறம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், நாம் தமிழர் கட்சியின் மனோநிலை பாசிச கூறுகளைக் கொண்டது. திராவிட அரசியலுக்கு எதிராக இயங்கும் சனாதன சக்திகளின் கைப்பாவையாக மாறும் வாய்ப்புகளைக் கொண்டது. அதனால் அந்தக் கட்சியின் செயல்பாடுகள், அதன் உச்சரிப்புகள் ஆகியவை தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது அவசியம்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

 

https://minnambalam.com/politics/2021/06/14/14/Tamil-Nadu-election-2021-and-Seeman

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள கட்டுரையில் தடித்த எழுத்துக்களில் உள்ளவை கட்டுரையின் தலைப்பு, உபதலைப்பு, கட்டுரையாளரின் பெயர்கள் மட்டுமே. 

கீழே சில மேற்கோள்கள் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

14 minutes ago, கிருபன் said:

சீமானின் கட்சி அவருடைய உணர்ச்சிகரமான பேச்சை மட்டுமே நம்பியிருக்கிறது. ஆவேசமாக, நகைச்சுவையாக, உணர்ச்சி தெறிக்க அவர் ஏற்ற இறக்கங்களுடன் பேசுகிறார். அது கேட்பதற்கு நாடகீயமாக, சுவாரஸ்யமாக இருப்பதால் மக்கள் கூடுகிறார்கள். அதை ஆதாரமாகக் கொண்டு பலர் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாகி கட்சியை வளர்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். சீமானையே ஆதாரமாகக் கொண்டிருப்பதால் கட்சியின் தலமட்ட அமைப்புகள் வலுப்பெறுவதில்லை. அவற்றுக்கென செயல்பாடுகள் என சில காரியங்கள் நடந்தாலும், வெகுஜன அமைப்பாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், சீமானே கட்சியின் ஆதாரம் என்ற நிலைதான்.

 

15 minutes ago, கிருபன் said:

நாம் தமிழருக்கு கணிசமாக ஆறு சதவிகித வாக்குகள் வரை கிடைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த வளர்ச்சி என்பது ஒருபோதும் இரண்டு பெரிய கட்சிகளையும் வெல்லும் சாத்தியத்தைக் காட்டும் வளர்ச்சி கிடையாது. அந்தக் கட்சிகள் ஈர்க்கும் வாக்குகளைச் சிறிதளவும் குறைப்பதற்கு நாம் தமிழர் கட்சியால் இயலவில்லை. இனி வரும் காலத்திலும் இயலாது என்பதுதான் உண்மை. ஏனெனில் அதன் அரசியல் தமிழகத்தின் கள யதார்த்தத்துக்குப் பொருத்தமற்ற, உள்ளீடற்ற ஓர் உணர்ச்சி அரசியல் என்பதுதான்.

 

16 minutes ago, கிருபன் said:

சீமானின் அரசியல் என்பது ஈழத்தில் விடுதலைப் புலிகள் போரில் அழித்தொழிக்கப்பட்ட தருணத்தில் தொடங்கியது. சீமான் விடுதலைப் புலிகள் போரில் வென்றுவிடுவார்கள் என்று கடைசி வரை உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார். போர் நிறுத்தம் கோருவது சிங்கள வீரர்களை அழிவிலிருந்து காப்பாற்றத்தான் என்று சூளுரைத்தார். தமிழகத்தில் இலங்கை பிரச்சினை குறித்தும், அங்கு நடந்த உள்நாட்டுப் போர் குறித்தும் உணர்ச்சிவசப்பட்ட அணுகுமுறைதான் எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கிறதே தவிர, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை இருந்தது குறைவு.

 

16 minutes ago, கிருபன் said:

ஒருபுறம் நகைச்சுவையாகத் தோன்றினாலும், நாம் தமிழர் கட்சியின் மனோநிலை பாசிச கூறுகளைக் கொண்டது. திராவிட அரசியலுக்கு எதிராக இயங்கும் சனாதன சக்திகளின் கைப்பாவையாக மாறும் வாய்ப்புகளைக் கொண்டது. அதனால் அந்தக் கட்சியின் செயல்பாடுகள், அதன் உச்சரிப்புகள் ஆகியவை தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது அவசியம்.

 

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா?
   மின்னம்பலம்2021-11-08 ராஜன் குறை 

   சென்ற வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று ஜெய் பீம் என்ற திரைப்படம் ஓடிடி எனப்படும் வலைதளத் திரைப்பட சேவையில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களைப் பார்வையாளர்களின் உணர்வு பொங்கும் எதிர்வினைகளால் மூழ்கடித்தது. நவம்பர் ஒன்றாம் தேதி ஓடிடியில் வெளியாகும் முன்பே இந்த படத்தின் பிரிவியூ காட்சிகள் அக்டோபர் இறுதியில் சென்னையில் திரையிடப்பட்டன. இருளர் பழங்குடி சமூகத்தினர் காவல் துறை அத்துமீறல்களால் பாதிக்கப்படுவதையும், பொய் குற்றச்சாட்டில் லாக் அப்பில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒருவர் கொலையுண்டதை காவல் துறை மறைத்ததையும், இடதுசாரி இயக்கங்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், வழக்கறிஞர் சந்துருவும் இணைந்து உண்மையை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடும் பெற்றுத்தந்த உண்மை சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
   இதற்கு இணையாக நிஜ உலகில் ஒரு சம்பவம் இதே நாட்களில் நடைபெற்றது. அஸ்வினி என்ற நரிக்குறவப் பெண் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர். அவருக்கு அருகேயுள்ள தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனது வருத்தத்தையும், கோபத்தையும் காணொலிக் காட்சி ஒன்றில் பதிவு செய்ய அது சமூக ஊடகங்களில் பரவலாகியது. அதைக் கண்ட அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலசயன பெருமாள் கோயிலுக்குச் சென்று அந்தப் பெண்ணுடன் அன்னதான பந்தியில் அமர்ந்து உணவு உட்கொண்டார். இந்தக் காட்சியும் ஊடகங்களில் பரவலாகி வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த நேரத்தில் அந்தப் பெண் தங்களது நெடுநாள் பிரச்சினையான பட்டா வழங்கப்படாமை, வசிப்பிட, வாழ்வாதார பிரச்சினைகள் போன்றவற்றை குறித்து முறையிட்டார். அமைச்சர் மூலம் இதை அறிந்த முதலமைச்சர், அரசுத் துறைகளை இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க சொல்ல, துரித கதியில் அரசு இயந்திரம் அந்தக் கிராமத்தின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்றது. நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அங்கு சென்ற முதல்வர் அஸ்வினி உட்பட நரிக்குறவர், இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். வேறு பல நல உதவிகளையும் வழங்கினார். அஸ்வினி தன் வீட்டுக்கு முதல்வரை அழைத்தபோது அவர் இல்லத்துக்கும் சென்றமர்ந்து உரையாடினார். இவையெல்லாமே ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மிகுந்த கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது.

   சமூக மாற்றம் என்பது ஒரே நாளில் நடந்துவிடுவதில்லை. நரிக்குறவர் பெண் அஸ்வினி எப்படி அவரது தாத்தா காலத்திலிருந்து அவரது இனக்குழு வாழ்க்கை மாறி வந்துள்ளது என்பதை அழகாகப் பேசுகிறார். இனி வரும் தலைமுறை பிற சமூகங்களைப் போல கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் உரிய இடம்பெற வேண்டும் என்பதே அவர் கோரிக்கையாக இருக்கிறது. இதுவே கடந்த நூறாண்டுக் கால சமூக நீதி அரசியலின் கதையாடல்; திராவிட அரசியலின் கதையாடல். கதையாடல் என்றால் ஆங்கிலத்தில் நேரடிவ் (Narrative) எனப்படும் கலைச்சொல். தமிழகத்தின் வெகுஜன அரசியலின் கதையாடல் சமூக மாற்றம் குறித்த, முற்போக்கு இயக்கம் குறித்த கதையாடல். சினிமாவிலும் இதே போல முற்போக்கு சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றன. மரபுவழிப்பட்ட பார்வைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், முற்போக்கு சிந்தனைகளுக்கும், சமூக மாற்ற சிந்தனைகளுக்குமான உரையாடல் களமாக தமிழ்த் திரைப்படம் விளங்கியது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் திரைப்படத் துறையுடன் நெருக்கமான உறவு கொள்ளும் தளமாக அமைந்தது. அதன் பக்கவிளைவாக உருவான எம்.ஜி.ஆர். நாயக பிம்பம் எதிர்ப்புரட்சி (Counter-revolution – புரட்சிக்கு எதிராக இருப்பதுதான் எதிர்ப்புரட்சி) அரசியலுக்குப் பின்னாளில் துணைபோனாலும் அவரது பிம்பமும் முற்போக்கு வரலாற்று கதையாடலில் உருவானதே. அடித்தட்டு மக்களின் உரிமைக்குரலுக்கு வடிவம் கொடுப்பதில் உருவானதே. தமிழகத்தின் இந்த வெகுஜன அரசியல் மற்றும் சினிமாவின் முற்போக்கு சமூக நீதி கதையாடலைப் பார்க்க முடியாத ஒரு தன்மை பாப்பனீய மனோபாவத்துக்கு இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
   பார்ப்பனீயம் என்பது என்ன? 
   தமிழ் இலக்கியத்தில் பிராமணர்களுக்கு அந்தணர்கள், பார்ப்பர்கள் அல்லது பார்ப்பனர்கள் ஆகிய பெயர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஒரு பெயர் விளக்கம் என்னவென்றால் குறி பார்ப்பவர்கள், ஆரூடம் பார்ப்பவர்கள் என்பதால் பார்ப்பனர்கள் என்ற பெயர் வழங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பார்ப்பது என்பது அறிதலுடன் பிணைத்துக் காணப்படலாம் என்பதால் அவர்கள் அறிவார்கள் என்பதும் பொருள். பிராமணர் என்ற வர்ண அடையாளம் அவர்கள் பிரம்மனின் அம்சம் என்று அவர்களை உயர் பிறப்பாளர்கள் ஆக்குவதால், வர்ண முறைப்படி பிறர் சூத்திரர் என்பதை ஏற்பதாக முடியும் என்பதால், அவர்களை பார்ப்பனர் என்று தமிழ் சொல்லால் குறிப்பிடுகின்றோம். இதில் இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது. அப்படி ஜாதீய மனோபாவத்துடன் ஏற்றத்தாழ்வு பார்ப்பதை பார்ப்பனீயம் என்று குறிப்பிடுகின்றோம்.
   பார்ப்பனீய மனோபாவம் கொண்டவர்கள் பார்ப்பனர்கள் மட்டும் கிடையாது. ஜாதீய அடையாளத்தில் சிக்குபவர்கள், ஏற்றத்தாழ்வு பேணுதலை அனுசரிப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனீய மனோபாவத்தை ஏற்பவர்களே. அதே சமயம் பார்ப்பனர்கள் அனைவரும் பார்ப்பனீய மனோபாவம் கொண்டவர்கள் இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. பல முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக நீதி நடைமுறை கொண்டவர்கள், முற்போக்கு உணர்வினை கொண்டவர்கள் பார்ப்பனர்களிடையே எப்போதும் இருந்து வந்துள்ளார்கள்.

   இப்படி நாம் கவனமாக பிரித்துப் பார்க்கும்போதும், கணிசமான பார்ப்பனர்கள் பார்ப்பனீய மனோபாவத்தை சுமந்துகொண்டு இருப்பதைக் காணலாம். பார்ப்பனீயத்தின் பார்வைக் குறைபாட்டுக்கு அவர்களது பிளவுண்ட சுயம் ஒரு காரணம். உதாரணமாக ஒரு பார்ப்பனரை கேட்டால் அவர் நான் நவீனமானவன்; ஜாதி வேற்றுமை பார்க்க மாட்டேன். அந்த காலமெல்லாம் மாறிவிட்டது என்பார். என் முன்னோர்கள் செய்ததற்கு நான் பொறுப்பல்ல என்பார். ஆனால் பெரியார் பார்ப்பனர்களைத் திட்டுகிறார் என்பதால் அவரை பிடிக்கவில்லை என்பார். பெரியார் ஜாதி வேற்றுமை பார்த்த உன் முன்னோர்களைத் தானே திட்டுகிறார், அதை ஏன் நீ உன்னை திட்டுவதாக எடுத்துக்கொள்கிறாய் என்று கேட்டால் பதில் கூற வகையில்லாமல் திணறுவார்.
   பார்ப்பனர்களெல்லாம் கூடி சமஸ்கிருதத்தில் ஒரு புதிய தர்மசாஸ்திரம் எழுதி இரு பிறப்பாளன் என்று யாரும் கிடையாது; எல்லோருக்கும் ஒரே பிறப்புதான், சமம்தான் என்று எழுதி அறிவித்தால் பிறகு எதற்கு பார்ப்பனர்களை திட்டப் போகிறார்கள். ஒருபுறம் ஆகமம், சாஸ்திரம், சம்பிரதாயம், மரபு என்ற பெயரில் சமத்துவத்திற்கு எதிரான அமைப்புகளைப் பாதுகாப்பது, இன்னொருபுறம் நாங்கள் நவீனமானவர்கள் எங்களை திட்டுவதால் திராவிட இயக்கத்தை ஏற்க மாட்டோம் என்பது என பிளவுண்ட சுயமாக இருப்பதுதான் சிக்கல். ரகசியமாக தங்களை உயர் பிறப்பாளர்களாக, பிறரை சுரண்டி உருவாக்கிக்கொண்ட தங்களுடைய கலாச்சார மூலதனத்தை தங்களுக்கு இயற்கையே வழங்கிய திறன் என்று இனவாத மனமயக்கம் கொள்வதும் இந்த மனோபாவத்தில் அடங்கும்.

   அதற்கு அடுத்த பிரச்சினை என்னவென்றால் இவர்கள் முற்போக்கு, முன்னேற்றம் என்பதையெல்லாம் ஆங்கிலக் கல்வி, நவீனமாதல் ஆகியவற்றுடன் இணைத்துப் புரிந்துகொள்வதால் அதற்கேற்ற ஒரு ரசனை, அழகியலை உருவாக்கிக்கொள்கின்றனர். தமிழ் வெகுஜன இயக்கத்தில் கலையோ, அரசியலோ எடுக்கும் வடிவங்களை அருவருக்கின்றனர். இது ஒரு பிரச்சினையாகக் கூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை.
   உதாரணமாக ஜெய் பீம் படத்தைப் பார்த்துவிட்டு பரத்வாஜ் ரங்கன் என்ற விமர்சகர் அவரது யூடியூப் சானலில் ஒரு விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழில் வாசிப்பவர்கள், பொதுமக்கள் பரத்வாஜ் ரங்கனின் ஆங்கில விமர்சனத்தை அதிகம் பொருட்படுத்த மாட்டார்கள். புளூ சட்டை மாறனை அறிந்த அளவு அவர்கள் ரங்கனை அறிய மாட்டார்கள். என்னைப்போல திரைப்படக் கோட்பாட்டை ஆழமாகப் பயில்பவர்களும், லக்கான், தெல்யூஸ் போன்ற தத்துவ மேதைகளை பயில்பவர்களும் பரத்வாஜ் ரங்கனை பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் ஆங்கிலமே அறிவு என்று நினைக்கும் அரைவேக்காட்டு படிப்பாளிகளுக்கு அவர் முக்கிய விமர்சகராக இருக்கலாம். அப்படி பெரியதொரு மத்தியதர வர்க்கம் இந்தியாவில் உள்ளதல்லவா. “தி நேஷன் வாண்ட்ஸ் டு க்னோ” என்று அடித்தொண்டையில் கத்தி அலறவிடும் அர்னாப் கோஸ்வாமியை நினைவில் கொள்ளுங்கள். அவரையும் பார்க்கிறார்களல்லவா... அந்த வகை மாதிரி.

   பரத்வாஜ் ரங்கனுக்கு அவர் ரசனையைப் பொறுத்து ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்ய எல்லா உரிமையும் இருக்கிறது. அவர் எதை செயற்கையான திணிப்பு என்று பார்க்கிறார், எதை மேலோ டிராமா என்று நினைக்கிறார் என்பதெல்லாம் அவர் சுதந்திரம். ஆனால் அவரால் ஜெய் பீம் திரைப்படம் தமிழகத்தில் எழுப்பியுள்ள தார்மீக மன எழுச்சியைச் சிறிதும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் வியப்பிற்குரியது.
   ஜெய் பீம் படம் அப்படி ஒன்றும் புரிந்துகொள்ள கடினமான படம் அல்ல. அதில் பலவீனமான, எளிய, அப்பாவியான பழங்குடி மக்களின் வாழ்வியல் காட்டப்படுகிறது. அவர்களை மனிதர்களாகவே மதிக்காத ஜாதி சமூகத்தின் உளவியல் காட்டப்படுகிறது. அதன் காரணமாக காவல்துறை நிராதரவான பழங்குடி மக்களை இரக்கமே இல்லாமல் நடத்துவதைக் காண்பிக்கிறது. ஆனால் ஜாதி சமூகத்தில் மனசாட்சியுள்ள மனிதர்கள் சிலர், முற்போக்கு அரசியல் மனோபாவம் கொண்டவர்கள் அந்த எளிய மனிதர்களுக்காகப் போராடுகிறார்கள். காவல் துறை அரசின் துணையுடன் மூடி மறைக்கும் குற்றச்செயலை நீதி மன்றத்தின் துணையுடன் முறியடிக்கிறார்கள். வேலைக்காரி, பராசக்தி முதல் இன்றுவரை தமிழ் வெகுஜன சினிமாவின் முற்போக்கு சிந்தனைக்கு வடிவம் கொடுப்பதில் நீதிமன்றம் முக்கிய களமாக இருந்து வந்துள்ளது. ஜெய் பீம் படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், முன்னைவிட அதிக யதார்த்தத் தன்மையுடன் எடுக்கப்பட்டிருப்பதால் அது அனைவர் மனதையும் தொட்டுவிட்டது. தமிழக முதல்வர் படத்தைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அவர் படம் பார்த்து உறக்கம் வரவில்லை என்று சொன்னதே பரவலாக மக்கள் பலரின் அனுபவமாகவும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

   ஆனால் பரத்வாஜ் ரங்கன் ஆங்கிலத்தில் படத்தை எள்ளி நகையாடுகிறார். அழுவாச்சி படம் என்கிறார். மனித உரிமை பேசுவதால் மட்டுமே ஒரு திரைப்படம் நல்ல படமாகிவிட முடியாது என்கிறார். வெற்றி மாறனின் விசாரணை யதார்த்தமான படம் என்று கூறுகிறார். ஆனால், ஜெய் பீம் செயற்கையாகப் புனையப்பட்டுள்ளது என்கிறார். மிகவும் வியப்பாக இருக்கிறது. ஒருவேளை ஜெய் பீம் என்ற தலைப்புதான் பிரச்சினையோ என்றெல்லாம் தோன்றத்தான் செய்கிறது. அதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார்கள். அதெல்லாம் தவறான போக்கு என்பதில் ஐயமில்லை. என்னைப் பொறுத்தவரை தனிநபர் தாக்குதலைக் கண்டிப்பதில் முன் நிற்பவன். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் ஏன் பரத்வாஜ் ரங்கனின் உணர்வு நிலை இப்படி முற்றிலும் முரண்பட்டு நிற்கிறது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
   அதை வைத்து யோசிக்கும்போதுதான் பெரியாரைப் புரிந்துகொள்வதிலும், அண்ணாவை, கலைஞரைப் புரிந்துகொள்வதிலும் பார்ப்பனீய மனோபாவம் எவ்வளவு பின் தங்கியுள்ளது என்பது நினைவுக்கு வருகிறது. இடது சாரிகளையும் இவர்களில் பலர் ஏற்றவர்களல்ல. நல்ல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்கூட பெரியாரையோ, அண்ணாவையோ படிக்கவே முடியாதவர்களாக, அணுகவே முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை படித்தால்தானே அடுத்து கலைஞரைப் படிக்க முடியும். இதையெல்லாம் ஒரு காலத்திலும் செய்யாமல், சமூக நீதி அரசியலில் வெகுஜன இயக்கத்தின் மாபெரும் வரலாற்று தடத்தை உணராமல் இவர்கள் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்று வாழப் போகிறார்கள். அவர்களுடன் நானும் பண்புடனும், பொறுமையுடனும் உரையாட வேண்டும் என்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.
   அவர்கள் ரசனைக்கேற்றபடி இல்லையென்பதால் ஒரு சாரார் பராசக்தி படத்தை கலையென்று ஏற்கவில்லை. பேசாமொழியான சினிமா பக்கம் பக்கமாக வசனம் பேசலாமா என்று கேட்டார்கள். மூன்று தலைமுறையினர் பராசக்தியில் சிவாஜி கணேசன் நீதிமன்றத்தில் பேசிய வசனத்தைப் பேசியே வளர்ந்தார்கள் என்பதும், அந்த மக்களின் சமூக நீதி அரிச்சுவடியே அதுதான் என்பதையும் ஒரு நாளும் புரிந்துகொள்ள மாட்டார்கள். இன்று அப்படி வசனமெல்லாம் பக்கம் பக்கமாக பேசாமல் காட்சி அழகியலாகவே படம் வந்தாலும், தேவைக்கதிகமாக அழுவாச்சி காட்சி இருப்பதால் இது மோசமான படம் என்கிறார்கள். ரசனையின் எல்லைக்கோடுகளை அவர்கள் நகர்த்திக்கொண்டே செல்கிறார்கள். அந்தக் கோட்டுக்குக் கீழே பேரலையாய் உருக்கொள்ளும் ஒரு மாபெரும் சமூக இயக்கம், அதன் தார்மீகம் அவர்கள் கண்களுக்குப் புலனாவதேயில்லை.
   அதனால்தான் நாம் கேட்கவேண்டியுள்ளது: பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா?
   கட்டுரையாளர் குறிப்பு:
   ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.
    
   https://minnambalam.com/politics/2021/11/08/5/what-is-brahmanism
  • By கிருபன்
   இரண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்காலம்
   மின்னம்பலம்2021-10-18   ராஜன் குறை 
   சில மாநிலங்களில் ஆட்சி செய்தாலும், தேசிய அளவில் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும், தமிழ்நாட்டில் முதன்மை எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவுக்கும் கடந்த சனிக்கிழமை - 2021அக்டோபர் 16 - முக்கியமான நாள். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட செயற்குழு, அதிருப்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று அன்று கூடியது. அ.இ.அ.தி.மு.க கட்சி தொடங்கப்பட்டு பொன்விழா காணும் நேரம் அதன் முன்னாள் (தற்காலிக) பொதுச்செயலாளர் சசிகலா, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி அந்தக் கட்சியின் மீது உரிமைகோரும் தன் அரசியல் செயல்பாட்டை தொடங்கினார்.
   காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலைவர் யாரென்று தெரியும்; அது நடைமுறையில் ராகுல் காந்திதான். ஆனால், அவர் பதவி விலகி அவருடைய அன்னை சோனியா காந்தி தற்காலிக பொறுப்பேற்றுள்ளார். கட்சியின் கட்டமைப்பு பெரிதும் பலவீனமடைந்துள்ளது என்பதால் உட்கட்சி தேர்தல்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டில் கட்சியின் அனைத்து மட்டத்திலான அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

   அ.இ.அ.தி.மு.கவைப் பொறுத்தவரை கட்சியின் கட்டமைப்பு நன்றாகத்தான் உள்ளது. சட்ட மன்றத்தில் அறுபத்தாறு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், தலைமைதான் ஜெயலலிதாவுக்குப் பின் தொடர்ச்சி அறுபட்ட குழப்பத்தில் இருக்கிறது.
   சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸில் தலைவர் கட்சியைத் தேடுகிறார் அல்லது புதிதாகக் கட்டமைக்க விரும்புகிறார். அ.இ.அ.தி.மு.கவில் கட்சித் தலைவரைத் தேடுகிறது அல்லது புதிதாக உருவாக்க விரும்புகிறது.
   இந்த நிலை இந்தக் கட்சிகளுக்கு எப்படி உருவானது, அதன் ஆழ்ந்த அரசியல் சித்தாந்த உட்பொருள் என்ன என்பதைப் பரிசீலிப்போம்.

   காங்கிரஸ் தலைமையும் கட்சியும்
   காங்கிரஸ் இந்தியாவின் பழம்பெரும் அரசியல் கட்சி. இந்தியாவில் மக்களாட்சி வேரூன்ற வழிவகை செய்த கட்சி. அது தொடக்கத்தில் வலுவான மாநில அமைப்புகள், அவற்றில் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள், அவர்கள் தேர்வு செய்யும் மத்திய தலைமை என்றெல்லாம் உட்கட்சி ஜனநாயகத்துடன் செயல்பட்டது. காந்தி ஆதரித்த பட்டாபி சீதாராமையாவே கட்சித் தேர்தலில் தோற்று சுபாஷ் சந்திர போஸ் தலைவரானது வரலாறு. “பட்டாபியின் தோல்வி என்னுடைய தோல்வி” என்று காந்தி கூறியது பிரபலமானது. பல்வேறு கருத்தியல் போக்குகளும் காங்கிரஸினுள் முரண்பட்டு விவாதித்து வந்தன. பெரியார் போன்ற பலர் வெளியேறி தனி அமைப்பு கண்டார்கள் என்றாலும், கட்சிக்குள்ளேயே கருத்து மாறுபாடுகளுடன் பலர் தொடரவும் செய்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு நேரு காலத்தில் கூட, அவர் கட்சித் தலைவர்களின் கருத்துகளை அனுசரித்தே நடக்க வேண்டியிருந்தது. ஆனால் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெறும்போது மக்களிடம் வாக்குகளைப் பெற வேண்டியது முக்கிய பணியாகியது. அப்போது தலமட்ட கட்சி அமைப்பு மட்டுமின்றி, வசீகரமான மக்கள் செல்வாக்குள்ள தலைமையும் அவசியம் தேவையென்றானது. நேரு மக்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரமிக்க வெகுஜன தலைவராக இருந்தது காங்கிரஸ் ஆட்சி வலுவாக நடைபெற உதவியாக இருந்தது. அவரால் இந்தியாவின் ஒற்றுமை, கலப்பு பொருளாதாரம், அறிவியல் வளர்ச்சி என்று கருத்தியல் ரீதியாகவும் வலுவான லட்சியங்களை வடிவமைக்க முடிந்தது. ஒரு கட்சியின் முக்கிய தேவைகள் இந்த மூன்றும்தான்:
   1. வலுவான வேர்மட்ட கட்சி அமைப்பு
   2. வசீகரமான தலைமை
   3. கருத்தியல் வலிமை
   இவை மூன்றுக்கிடையே சில உள்முரண்களும் உண்டு. வசீகரமான தலைமை மற்ற இரண்டையும் புறமொதுக்கும் சாத்தியம் உண்டு. வெகுஜன ஈர்ப்புமிக்க தலைவர்கள் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தினாலும், உட்கட்சி ஜனநாயகத்தை மதிக்க வேண்டியது கிடையாது. மேலிட முடிவுக்கு அனைவரும் கேள்வி கேட்காமல் கட்டுப்படும் மேலிட கலாச்சாரம் (ஹை கமாண்ட் கல்ச்சர்) வலுவாகிவிடும். கருத்தியலும் முக்கியத்துவம் இழந்துவிடும்.

   காங்கிரஸ் கட்சி நேருவுக்குப் பின் அவர் மகள் இந்திரா காந்தி என்ற வாரிசு தலைமை முறைக்கு மாறியது இந்த வெகுஜன ஈர்ப்பினை கருதித்தான். இதை வெகுஜன இறையாண்மை (Popular Sovereignty) என்று அழைக்கிறோம். இந்திரா காலத்தில் மூத்த தலைவர்கள் அவரது சோஷலிஸ போக்கினை எதிர்த்து கட்சியைப் பிளந்தார்கள். இந்திராவே தேர்தல் களத்தில் வென்றார். அதன் பிறகு காங்கிரஸில் மேலிட கலாச்சாரம் வலுவானதாக மாறியது. இந்திரா கொலையுண்ட தருணத்தில், அவர் மகன் ராஜீவ் காந்தி உடனே பிரதமரானதும் காங்கிரஸ் திட்டவட்டமாக வெகுஜன இறையாண்மை, வாரிசு தலைமை என்ற மாதிரியைப் பின்பற்றியது தெளிவானது. அப்போதும் காங்கிரஸில் கருத்தியல் ரீதியான விவாதமும், தெளிவும் இருந்தது. மெள்ள, மெள்ள அது குழம்பத் தொடங்கியது. சோஷலிஸ பாதையா, சந்தைப் பொருளாதாரமா என்ற கேள்வி வலுப்பெற தொடங்கியது. இந்த நிலையில்தான் ராஜீவ் காந்தியும் கொலையுண்டார். அந்த அனுதாப அலையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது வெகுஜன ஆதரவில்லாத நரசிம்ம ராவ் பிரதமரானார். அந்த நேரத்தில் தாராளவாதமும், உலகமயமாக்கலும் இன்றியமையாத தேவையாகியது; அதை நரசிம்ம ராவ் முன்னின்று நடத்தினார். வெகுஜன கவர்ச்சியில்லாத தலைமை, கருத்தியல் பாதை மாற்றம் / தடுமாற்றம் இரண்டும் சேர்ந்து காங்கிரஸைப் பெரிதும் பலவீனப்படுத்தியது.
   ஒருபுறம் மண்டல் கமிஷன் தாக்கத்தில் உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற முக்கிய மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் நலன் - சோஷலிஸ நோக்குகொண்ட லோஹியாவத கட்சிகள் வலுப்பெற்றன. மற்றொருபுறம் அதற்கு எதிராக இந்துத்துவ மீட்புவாத நோக்கும், பனியா பெருமுதலீட்டு ஆதரவும் கொண்ட பாரதீய ஜனதா கட்சி வலுவடைந்தது. காங்கிரஸுக்கு சோனியா தலைமையேற்று அது மீண்டும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்தாலும், சோனியா பிரதமராகாமல், மன்மோகன் சிங் என்ற பொருளாதார நிபுணரைப் பிரதமராக்கியதில் கட்சித் தலைமையின் வெகுஜன இறையாண்மை பிம்பம் சிதைவடைந்தது. இது காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து பலவீனப்படுத்தியது. தி.மு.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஆதரவுடன் பத்தாண்டுகள் கூட்டணி ஆட்சி செய்தது காங்கிரஸ். ஆனால், எதிர்முனையில் நரேந்திர மோடி என்ற வெகுஜன பிம்பத்தை கட்டமைத்த பாரதீய ஜனதா கட்சி, தனது பாசிச பெரும்பான்மைவாத கருத்தியலின் அடிப்படையில் ஆட்சியைப் பிடித்துவிட்டது.

   இப்போது காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் மாறும் சாத்தியம் இருக்கிறது. மீண்டும் மக்கள்நல கொள்கைகள், கூட்டாட்சி தத்துவம் என முற்போக்கான கருத்தியலை ராகுல் ஆதரிக்கிறார். ஆனால், பத்தாண்டுகளில் பல மாநிலங்களிலும் பலவீனமடைந்துவிட்ட கட்சி அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கும், ராகுல் காந்திக்கும் பிற இளைய தலைவர்களுக்கும் உள்ள தலைமுறை இடைவெளியைச் சரிசெய்ய வேண்டியுள்ளது. இந்தச் சவால்களைச் சந்தித்து, மாநிலக் கட்சிகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்கினால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும்.

   அ.இ.அ.தி.மு.க சந்திக்கும் நெருக்கடி - தலைமையே கட்சி
   அண்ணாவின் பெயரில் கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவுடன் பெரிய கொள்கை வேறுபாடெல்லாம் கிடையாது. தி.மு.க விலக்கிய “தெய்வீகம், தேசியம்” போன்ற புனித குறியீடுகளை எம்.ஜி.ஆர் சேர்த்துக் கொண்டார். அதன் மூலம் திராவிட அடையாளத்துக்குள் சற்றே மீட்புவாத நோக்குகொண்ட ஜாதீய சக்திகளை இணைத்துக் கொண்டார். ஒன்றிய அரசுடன் சமரச நோக்கை மேற்கொண்டார். அவசர நிலையை ஆதரித்தார். தி.மு.க எதிர்ப்பையே மையப்படுத்தினார். வேர் மட்டத்திலிருந்து தி.மு.கவை எதிர்ப்பவர்கள், அ.இ.அ.தி.மு.கவில் இணைந்தனர். தி.மு.கவின் சிதைந்த ஆடிப் பிரதிபலிப்பாக (Distorted Mirror Image) அண்ணா தி.மு.க இருந்தது. வேர்மட்ட, தலமட்ட அமைப்புகள் உண்டு. ஆனால், உட்கட்சி ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எம்.ஜி.ஆர் ஒன்று என்றால் மற்றவர்களெல்லாம் பூஜ்யம் என்பதே சூத்திரம். முழுக்க முழுக்க வெகுஜன இறையாண்மையை நம்பிய கட்சி.

   எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியல் வாரிசு யார் என்பதை முற்றிலும் தெளிவாக அறிவிக்கவில்லையென்றாலும், குறியீட்டு ரீதியாக ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தியிருந்தார் எனலாம். மேலும் அவருடைய செல்வாக்கே திரைப் பிம்பமாகத்தான் என்பதால், திரையில் அவருடன் முக்கிய படங்களில் நடித்த ஜெயலலிதாவை அவருடைய வாரிசாக மக்கள் ஏற்பது சுலபமாக இருந்தது. அவர் மனைவி ஜானகியும் நடிகை என்றாலும் அது வெகுகாலம் முன்பு என்பதாலும், பொதுவெளியில் ஜானகி முன்னிறுத்தப்படாததாலும் ஜானகி அணியால் ஜெயலலிதா அணியுடன் போட்டியிட முடியவில்லை. கட்சி ஜெயலலிதா தலைமையில் ஒன்றுபட்டது. அப்போதும்கூட ஜெயலலிதாவால் கட்சியை வெற்றி பெறச் செய்திருக்க முடியுமா என்பது ஐயம்தான். அவர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்ததால், தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் இலங்கை தமிழர்களால் கொல்லப்பட்டது மிகப்பெரிய அனுதாப அலையையும், தி.மு.க எதிர்ப்பையும் உருவாக்கியதில் முதல்வரானார். அவருடைய 1991-96 ஆட்சிக்காலத்தில் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்து பொருளாதாரத் தாராளமய / உலகமயமாக்கலை நிகழ்த்தியதில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்தது அவரது ஆட்சிக்கும், கட்சிக்கும் உதவியது. எம்.ஜி.ஆரைவிட மோசமான எதேச்சதிகாரியாக மாறினார். அவர் முகத்துக்குத்தான் ஓட்டு என்று கட்சியினரே நம்பியதால் பொது மேடைகளில் மந்திரிகள், தலைவர்கள் அனைவரும் அவர் காலில் விழுவது விதியாகவே மாறியது.

   பாஜக கைப்பற்றிய கட்சி
   கட்சியினரெல்லாம் அடிமைகள், தி.மு.க எதிர்ப்பைத் தவிர கொள்கை, கருத்தியல் எதுவும் கிடையாது என்ற நிலையில் ஜெயலலிதா முதல்வராகவே மரணமடைந்தபோது யார் அவருக்கு வாரிசு என்ற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவுடன் இணைபிரியாமல் முப்பதாண்டுகள் வாழ்ந்து, உடன்பிறவா சகோதரி என்றழைக்கப்பட்டு, அவருடன் சேர்ந்து சதிசெய்து ஊழல் செய்ததாக குற்றமும் சாட்டப்பட்ட சசிகலா கட்சியிலும், ஆட்சியிலும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தவர். பொதுவெளியிலும் அவருடன் எப்போதுமே சேர்ந்து காணப்பட்டவர். எனவே, அவர் ஜெயலலிதாவின் வாரிசாக தலைவராவதும், முதல்வராவதும் இயல்பானதாகவே இருந்திருக்கும். பொதுக்குழுவும் அவரை தேர்வு செய்து அவர் காலில் விழுந்து அவரை தலைமைப்பொறுப்பு ஏற்கும்படி கெஞ்சியது காணொலிக் காட்சிகளாக காணக்கிடைக்கிறது.

   ஆனால் பாரதீய ஜனதா கட்சி அதை விரும்பவில்லை. அ.இ.அ.தி.மு.கவை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர மோடி விரும்பினார். குருமூர்த்தி போன்ற பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ் சக்திகளும் சசிகலா முதல்வராவதை விரும்பவில்லை. சசிகலாவை முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் ஆளுநர் வெளி மாநிலம் சென்றுவிட்டார். குருமூர்த்தியின் தூண்டுதலில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார். ஆனால் அவரால் போதுமான சட்டமன்ற உறுப்பினர்களை ஈர்க்க முடியவில்லை. சசிகலா அவர்களை கூவாத்தூர் என்ற இடத்தில் சொகுசு ஹோட்டலில் தங்க வைத்தார். அப்போதுதான் சொத்துக்குவிப்பு வழக்கில் உறங்கிக்கொண்டிருந்த தீர்ப்பு வெளிவந்து சசிகலா சிறைக்குச் சென்றார். அதற்கு முன்னால் தன் ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சென்றார். ஆனால் பாரதீய ஜனதா கட்சி எடப்பாடி பழனிசாமியையும் பகிரங்கமாக மிரட்டி தனக்கு பணிய வைத்தது. பாஜக கட்டளைப்படி அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்கினார். பொதுச்செயலாளர் பதவியையே அவர்கள் சட்ட விரோதமாக அகற்றி தங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று பொதுக்குழு மூலம் நியமித்துக்கொண்டனர்.

   மீண்டும் சசிகலா
   சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலையாகிவிட்டார். பாரதீய ஜனதாவுக்கு ஒரு குழப்பம். பழனிசாமி, பன்னீர்செல்வத்தால் தேர்தலை வெல்ல முடியாது, அவர்கள் வசீகரமான தலைவர்கள் இல்லை என்பது தெளிவாகியது. எதிர்தரப்பில் கலைஞரால் வெகுகாலம் அரசியலில், ஆட்சியில் பயிற்றுவிக்கப்பட்ட அவர் மகன் ஸ்டாலின் தலைவராகிவிட்டார். வலுவான கருத்தியல் அடிப்படை, கட்சி கட்டுமானம், வெகுஜன ஈர்ப்புமிக்க தலைமையாக மு.க.ஸ்டாலின். அவரை எதிர்த்து பாஜகவுக்கு கீழ்படிந்து நடக்கும், சசிகலாவுக்கு துரோகம் செய்த, தங்களுக்குள் முரண்பட்ட இருவர் எப்படி போட்டியிட முடியும் என்ற ஐயம் குருமூர்த்திக்கே எழுந்தது. அதனால் தி.மு.க நெருப்பை அணைக்க சசிகலா என்ற சாக்கடை ஜலத்தைப் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். ஆனால், எந்த நாடகத்துக்கும் ஒரு எல்லை உண்டு. பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் மீண்டும் சசிகலாவிடம் செல்ல துணிச்சல் கிடையாது. குருமூர்த்தியா போய் அவமானப்படப் போகிறார்?
   இந்த நிலையில் பாஜகவுக்கு இன்னொரு திட்டமும் இருந்திருக்கலாம். அது என்னவென்றால் அ.இ.அ.தி.மு.க தோல்வியடைந்து உடைந்து சிதறும்போது அந்த சிதறல்களை வைத்து பாரதீய ஜனதா கட்சியைத் தமிழகத்தில் தி.மு.கவுக்கு எதிர்க்கட்சியாக உருவாக்கிவிடலாம் என்பதுதான் அது. ஆனால், சட்டமன்றத் தேர்தலும் சரி, உள்ளாட்சித் தேர்தலும் சரி ஒன்றை தெளிவாக்கிவிட்டது. அது அ.இ.அ.தி.மு.கவே இல்லாமல் போனாலும் மக்கள் ஒருபோதும் பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் அது. திராவிட - தமிழ் அடையாளம் கொண்ட ஒரு கட்சிதான் என்றைக்கு இருந்தாலும் தமிழகத்தில் தி.மு.கவுக்கு மாற்றாக உருவாக முடியும் (இப்போதுள்ள நிலையில் பத்து, பதினைந்து ஆண்டுகள் ஆகலாம்).

   அதனால் ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இதை பாரதீய ஜனதாவாலும் தீர்க்க முடியுமா என்பது தெரியவில்லை. பழனிசாமி குழுவினரால் மீண்டும் சசிகலா காலில் விழ முடியாது; அவர் என்றைக்கு இருந்தாலும் பழிவாங்கி விடுவார் என்ற அச்சம் இருப்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான். அவர்கள் சிலரை விட்டுவிட்டு பிறரை தன் பக்கம் இழுக்கலாம் என்றால் அதற்கு சசிகலா தன் வெகுஜன செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். அதற்கு நகராட்சி தேர்தல்கள் உதவுமா என்று தெரியவில்லை. இரட்டை இலையை எதிர்த்துப் போட்டியிடக் கூடாது என்று சசிகலா நினைக்கலாம்.
   சட்டம் என்ன சொல்கிறது?
   சட்டரீதியாக வழக்கு இன்னும் நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராகப் பொதுக்குழு தேர்ந்தெடுத்தது சட்டப்படி செல்லுபடியாகும். ஆனால், கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவியையே நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்குக் கிடையாது.
   எனவே, அ.இ.அ.தி.மு.க கட்சி விதிமுறைகள்படி அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கும் தேர்தலை நடத்தி, பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே சட்டரீதியான தீர்வாக இருக்கமுடியும். ஆனால், அப்படி ஒரு தேர்தலை நடத்துவதில் ஏராளமான சிக்கல்கள் தோன்றும். உறுப்பினர் பட்டியலை எப்படிச் சரிபார்ப்பது? எந்த தேதியை அடிப்படையாகக் கொள்வது? ஓட்டளிக்க எத்தனை ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்? இவை போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டும். வழக்குகள் பெருகும். அதனால் பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாகத் தேர்வு செய்து, வேட்பாளரை அறிவித்து, போட்டியின்றி தேர்ந்தெடுப்பதுதான் சிறந்த வழி.
   அந்தப் பேச்சுவார்த்தையை யார் நடத்துவார்கள் என்பதே கேள்வி. சிக்கலைத் தொடங்கிய பாஜகதான் தீர்த்து வைக்க வேண்டும். அதற்கு முதற்படியாக நீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை முடக்கலாம். எடப்பாடி பழனிசாமி அணி, கே.சி.பழனிச்சாமி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி எல்லாம் தனித்தனி சின்னத்தில் நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடலாம். யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவரை அனைவரும் சேர்ந்து பொதுச்செயலாளர் ஆக்கலாம்.
   இரண்டாண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது தனக்கு எதிராக தேசிய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்குவதில் தி.மு.க முக்கிய பங்கு வகிக்கும் என்பது பாஜகவுக்குத் தெரியும். எனவே தமிழகத்தில் தி.மு.கவுக்கு ஒரு வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவது அதற்கு அவசியமானது. ஒருவேளை அவர்கள் கண்டெடுத்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான புதிய மாநில தலைவர் அண்ணாமலை பாரதீய ஜனதா கட்சியை வளர்த்து எடுத்துவிடுவார் என்று பாரதீய ஜனதா கட்சி நம்பலாம். அப்போது அ.இ.அ.தி.மு.க கட்சியின் நிலை கேள்விக்குறிதான். என்னைப் போன்ற அரசியல் ஆய்வாளர்களுக்கு சுவாரஸ்யமான ஒரு காலமாக இருக்கும்.
   கட்டுரையாளர் குறிப்பு:
   ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
    
    
   https://minnambalam.com/politics/2021/10/18/5/future-of-two-opposition-political-parties
  • By கிருபன்
   தேசியத்துக்கு அப்பால் அரசியல்: காந்தி, பெரியார், அண்ணா
   மின்னம்பலம்2021-09-27   ராஜன் குறை 
   இந்த வார இறுதியில் காந்தி ஜெயந்தி எனப்படும் காந்தியின் 152ஆவது பிறந்த தினம் வருகிறது. காந்தியை தேசப்பிதா என்று அழைத்துப் பழகியுள்ளோம். இந்திய தேசத்தை உருவாக்கியதில், அதன் விடுதலையை உறுதி செய்ததில், அதன் அரசியலை வடிவமைத்ததில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், காந்தியின் சிறப்பம்சம் அவர் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க நினைத்தார் என்பதல்ல. அந்த அரசியல் விடுதலை என்ற பரிமாணத்தைக் கடந்து அவர் வெகுமக்கள் வாழ்வை மேம்படுத்த நினைத்தார். எளிய மக்களை ஆதிக்கத்தின் நுகத்தடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அதை முரண் அரசியலாகச் செய்யாமல், அனைவரையும் அந்த லட்சியத்தை நோக்கி கூட்டு முயற்சியாகச் செயல்பட வைப்பதன் மூலம் செய்ய வேண்டும் எனக் கனவு கண்டார் எனலாம். காந்தியின் லட்சியவாத சிந்தனைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. அந்த விமர்சனங்கள் முக்கியமானவை. ஆனால், அவர் சிந்தனைகள் அவசியம் தொடர்ந்து பயிலப்பட வேண்டியவை. ஏனெனில் அவர் இந்திய தேசியம் என்ற எல்லைக்குள் மட்டும் சிந்திக்கவில்லை.
   காந்தி தொழிற்புரட்சி, முதலீட்டிய நவீன சமூகம், நுகர்வு கலாச்சாரம் போன்றவற்றை ஏற்கவில்லை. அந்த விதத்தில் அவர் முதலீட்டிய மறுப்பாளராக இருந்தார். அதே சமயம் அவர் பொதுவுடமை என்ற வடிவத்தையும் ஏற்கவில்லை. அது மொத்தத்துவ அரசை உருவாக்கும் என்பதால் அதுவும் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் கணிசமான சுயாட்சியுள்ள கிராம சமூகங்கள் என்பது போல லட்சியவாத நோக்கில் சிந்தித்தார். ஆனால், அதன் மையத்தில் அதிகார பரவலையும், சுயாட்சி என்ற கருத்தாக்கத்தையும் வைத்திருந்தார். அவர் மரபார்ந்த சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களே சமூகத்தை இயக்க உதவியாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் சனாதன நோக்கிலான பார்வையை அவர் மரபாக ஏற்கவில்லை. மரபின் ஆரோக்கியமான கூறுகளிலிருந்து பகிர்தலும், கருணையும், ஒத்திசைவும் மிக்க சமூகத்தை புனரமைக்கலாம் என்று நம்பினார்.
   அவருடைய மரபுவாத நோக்கின் காரணமாக அவர் ஜாதீய சமூகத்தை அம்பேத்கரைப் போலவும், பெரியாரைப் போலவும் கடுமையாக விமர்சிக்கவில்லை. ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை ஆகியவற்றை களைந்துவிட்டால் ஜாதி சமூகம், அதன் வேலைப்பிரிவினை தவறல்ல என்றெல்லாம்கூட சிந்தித்தார். அவருடைய சற்றேறக்குறைய ஐம்பதாண்டுக் கால அரசியல் வாழ்க்கையில் அவர் சிந்தனைகள் பல மாற்றம் பெற்றுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து ஆராய்ந்து பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக சிலவற்றைக் கூறலாம். அவர் சனாதன இந்துமத, பார்ப்பனீய பார்வைகளை முழுமையாக ஏற்கவில்லை. அதைவிட முக்கியமாக இந்துமத அடையாளவாத அரசியலை, தேசியத்தை ஏற்கவில்லை. மத நல்லிணக்கத்தை நம்பினார். “ஈஸ்வர் அல்லா தேரோ நாம்” என்ற பாடல் வரியை நாடெங்கும் கொண்டு சென்றார். அவர் முதலீட்டிய உற்பத்தி முறையை, நுகர்வு கலாச்சாரத்தை, அது ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்கவில்லை. சமூகத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தும் மொத்தத்துவ அரசு வடிவத்தையும் ஏற்கவில்லை. இதையெல்லாம் இணைத்து சிந்தித்தால் காந்தியின் அரசியல் என்பது பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து இறையாண்மையை இந்திய அதிகார வர்க்கத்துக்கு மாற்றும் தேசிய அரசியல் மட்டுமல்ல என்பதை உணரலாம். ஆனால், அவர் அத்தகைய அதிகார மாற்றத்தினால் உட்செரிக்கப்பட்டார். அது நிகழ்ந்த பின் பார்ப்பனீய இந்துத்துவ தேசியவாதிகளால் கொல்லப்பட்டார்.
   பெரியாரும் காந்தியும் 
   இரண்டாண்டுகளுக்கு முன்னால் பெரியாரும் காந்தியும் குறித்து மின்னம்பலத்தில் எழுதும்போது அந்தக் கட்டுரைக்கு “பெரியாரின் காந்தி தேசம்” எனப் பெயரிட்டிருந்தேன். காந்தி இறந்த பிறகு பெரியார், இந்தியாவுக்கு காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும் எனக் கூறியது புகழ்பெற்றது. காந்தியை மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தவர் பெரியார். புனே ஒப்பந்தத்தில் அம்பேத்கர், காந்தியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கூறியவர். அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு பார்வையையும், இந்து மத எதிர்ப்பின் அவசியத்தையும் முழுவதும் ஆதரித்தவர். முக்கியமாக, காந்தி கொண்டாடிய ராமர் என்ற லட்சிய உருவகத்தை பெரியார் தீவிரமாக மறுதலித்தவர். ராமாயணத்தையும், ராமர் படத்தையும் கொளுத்தும் போராட்டங்களை அறிவித்தவர். அப்படிப்பட்ட பெரியார் வெறும் உணர்ச்சிகளின் காரணமாக காந்தி மரணமடைந்ததும் அப்படிப் பேசினார் என்று எடுத்துக்கொள்ள முடியாது.
   அடிப்படையில் காந்தியும் சரி, பெரியாரும் சரி... மக்கள் விழிப்புணர்வு பெற்று சுயாட்சிக்கான ஆற்றலைப் பெறுவதைக் குறித்தே சிந்தித்தார்கள். இருவருமே அனைத்து மக்களுக்குமான தன்மானம், சுயமரியாதை என்று சிந்தித்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுதான் மிக முக்கியமானது. அதாவது அரசியலின் அச்சு என்பது ஒரு நபரின் சுய உருவாக்கத்தில், அதற்குக் கிடைக்கும் சமூகவெளி நீதியில், மரியாதையில் இருக்கிறது என்று எண்ணினார்கள். காந்தி அதை மரபுவாதியாகச் சிந்தித்தார். பெரியார் அதை புரட்சிவாதியாகச் சிந்தித்தார். இந்த வேறுபாடுகள் முக்கியமானவை. ஆனால், அவர்கள் இருவருமே தேசிய இறையாண்மையை மட்டுமே லட்சியமாகக் கொண்டு இயங்கவில்லை என்பதும் மிக முக்கியமானது.
   இன்றைய சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் இளைஞர்கள் தேசிய அடையாளவாதம், குறுகிய இனவாத இறையாண்மைக் கனவு ஆகியவற்றை நோக்கி ஈர்க்கும் முயற்சிகள் நடந்துவரும் நாளில் நாம் காந்தியையும் பெரியாரையும் இணைக்கும் புள்ளிகளை மறப்பது ஆபத்தானது. மக்களின் உரிமைகள், அவர்கள் வாழ்வு மேம்படுவதுதான் முக்கியமான அரசியலே தவிர, அடையாளவாதம் பேசுவதும், பிற அடையாளங்கள் மீது வெறுப்பை வளர்ப்பதும், வன்முறையைக் கொண்டாடுவதும் அல்ல. மக்களின் மனமாற்றமே அரசியல் என்பதை அறிந்த காந்தியும், பெரியாரும் வன்முறையை அறவே தவிர்த்தனர். பெரியார் பிம்பங்களையும், குறியீடுகளையும் எரித்தாரே தவிர, பொதுச் சொத்துகளை நாசம் செய்வதை காலித்தனமென்றே கண்டித்து வந்துள்ளார். அவர் என்றுமே அத்தகையை நடவடிக்கைகளை நம்பியதில்லை.
   பெரியார் பார்ப்பனர்களை வெறுத்தார், வெறுப்பைத் தூண்டினார் என்று நவபார்ப்பனீய விஷக்கொடுக்குகளும், இந்துத்துவர்களும் பொய்யைப் பரப்பி வரும் நேரத்தில் நேற்று அவருடைய அருமையான மேற்கோள் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதாக தெரிகிறது. பெரியாரிய ஆய்வாளரும், நண்பருமான சுபகுணராஜனும் அதைப் பகிர்ந்திருந்தார். சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவை பார்ப்பனர்களுக்கு சடங்குகளில் வரும் வைதீக வருமானத்தைக் குறைத்து வருவதால் அவர்கள் அந்த புரோகித தொழிலைக் கைவிட்டு கல்வி, வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டு பணக்காரர்களாக மாறி வருகிறார்களே என்று பெரியாரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு பெரியார் பார்ப்பனர்கள் பணக்காரர்களாக இருப்பதில் எனக்கு பிரச்சினையில்லை; அவர்கள் மேல் ஜாதியினராக, பிறப்பால் பிறரைவிட உயர்ந்தவர்கள் என்று இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறுகிறார். குடியரசு பத்திரிகையில் 1946 நவம்பர் 9 அன்று வெளியான கட்டுரையில் அவர் கூறுவது: “திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து - ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது. அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் சண்முகம் செட்டியார், சர் ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோடீஸ்வரனாகவும், லட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே. எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால். எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.”
   அண்ணாவும் காந்தியும்
   காந்தியின் அரசியல் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றிய, அவருடைய அரசியல் நோக்கை வெளிப்படுத்திய நூல் இந்து சுயராஜ்யம் என்ற நூலாகும். இதை 1909ஆம் ஆண்டு குஜராத்தி மொழியிலும், 1910ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் எழுதினார். காங்கிரஸில் பிரிட்டாஷுருடன் ஒத்துழைத்து அவர்களிடம் ஆட்சி செய்யும் அதிகாரங்களைக் கோரிப் பெற்று மெள்ள மெள்ள சுயாட்சி நோக்கி செல்லலாம் என்று நினைத்தவர்கள் மிதவாதிகள் எனப்பட்டார்கள். ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்து உடனே பூரண சுதந்திரத்தை அடைய வேண்டும் என்று நினைத்தவர்கள் தீவிரவாதிகள் எனப்பட்டார்கள். காந்தி இருவருக்கும் இடையே புகுந்து சுயராஜ்யம் என்றால் என்ன என்பதற்கு தனது புதிய வரையறையை முன்வைத்தார். அது என்னவென்றால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருப்பதோ, அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பதோகூட பிரச்சினையில்லை; ஆனால் இந்திய வாழ்க்கை முறையை ஆங்கிலேயர்களுடைய வாழ்க்கை முறையாக மாற்றக் கூடாது என்பதுதான் சுயராஜ்யம் என்ற கருத்தாகும். அதாவது சுயராஜ்யம் என்பதை ஒரு மக்கள் தொகுதி அவர்கள் பண்பாட்டுக்கேற்ப வாழ்வதுதான் என்பதே காந்தியின் கருத்தாகும். இதில் நம்மவர், அந்நியர் என்ற பேச்சுக்கு இடமில்லை. ஆங்கிலேயர்கள் அந்நியர்கள் என்பதோ, வேறு மதத்தவர்கள் என்பதோ பிரச்சினையில்லை. அவர்கள் வேறொரு வாழ்க்கை முறையை, பண்பாட்டை நம்மீது திணிக்கிறார்கள் என்பதுகூட பிரச்சினையில்லை; அப்படி அவர்கள் திணிக்கும் வாழ்க்கை முறை, பண்பாடு ஆரோக்கியமானதல்ல, மானுடத்துக்கே கெடுதி பயப்பது என்பதுதான் பிரச்சினை என்று வாதிட்டார் காந்தி. இந்த வாதத்தில் சுயாட்சி என்பது ஒரு மக்கள் தொகுதி அவர்கள் விரும்பும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதுதான் என்றாகிறது. யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதோ, இன, மொழி, மத அடையாளங்களோ பிரச்சினையில்லை.
   இது போன்ற ஒரு பார்வையை அண்ணாவின் ஆரிய மாயை நூலிலும் காணலாம். அவர் ஆரியர்கள் உருவாக்கியுள்ள வர்ண/ஜாதி தர்மம், அவர்களது தர்ம சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கை முறை அவையெல்லாம் தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். தமிழரிடையே ஜாதி ஏற்றத்தாழ்வை, பார்ப்பனீய கலாச்சாரத்தை புகுத்தியது ஆரியர்கள்தான்; தமிழ் மன்னர்கள் அவர்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள அதற்கு அனுமதித்தனர்; அதுதான் பிரச்சினை என்று கூறுகிறார். அதனால் ஆரியர்கள் என்று அடையாளப்படும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்பதோ, அவர்களும் பிறருக்கு உரிய அனைத்து உரிமைகளுடன் இருக்கக் கூடாது என்பதோ அல்ல. அவர்களும் திராவிடப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவசியம் என்று சுட்டிக்காட்டுகிறார் அண்ணா. ஆரிய மாயை என்பதே தமிழில், தமிழர்கள் வாழ்வில் கலந்துவிட்ட ஆரிய ஜாதீய பண்பாட்டுக்கூறுகள்தான். அதைத்தான் விலக்க வேண்டும் என்று கூறுகிறார் அண்ணா.
   திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை கட்சியை துவங்கும்போது திராவிடர் என்ற மக்கள் தொகுதியைக் குறிக்கும் வார்த்தையை திராவிட என்ற பிரதேசத்தைக் குறிக்கும் வார்த்தையாக மாற்றுகிறார். வட இந்தியா ஆரிய கருத்தியலையும், இந்தி மொழியையும் திணிப்பதால் திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியா ஒரு தனி கூட்டாட்சி குடியரசாக விளங்க வேண்டும் என்பதுதான் அந்தக் கட்சியின் இலக்கு. அதைகூட திராவிட விடுதலை கழகம் என்று கூறாமல் திராவிட முன்னேற்றக் கழகம் என்றுதான் பெயரிடுகிறார்கள். ஏனெனில் மக்கள் அனைவர் வாழ்வும் மேம்படுவதும், ஜாதி இழிவு நீங்குவதும், சமூகநீதி தழைப்பதும்தான் முக்கியமே தவிர, தேசிய சொல்லாடலை உருவாக்குவதோ, இறையாண்மையுள்ள தேசமே லட்சியம் என்று பேசுவதோ அல்ல. சுயாட்சி என்பது மக்களை மையப்படுத்தியதாக, அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் தளைகளிலிருந்து விடுபடுவதாக இருப்பதுதான் அரசியல். அதனால்தான் மக்களாட்சி அரசியலை மேம்படுத்த திராவிட நாடு கொள்கையை கைவிடவும் திமுக தயங்கவில்லை; அதை மாநில சுயாட்சி கொள்கையாக மறுவரையறை செய்துகொண்டு இன்றுவரை இந்திய ஒன்றியத்தில் கூட்டாட்சி தத்துவத்தின் குரலாக ஒலித்து வருகிறது. அதன் அரசியல் தெளிவு அதற்கு வரலாற்றில் வெற்றியையே ஈட்டித் தரும்.
   சுருங்கச்சொன்னால் தேசியம், தேசத்தின் விடுதலை என்பது அருவமான சொல்லாடல்; எப்போதுமே ஆதிக்க சக்திகளும் பிற்போக்கு சக்திகளும் இதைப் பேசும். மக்களின் விடுதலை, உரிமைகள், சமூகநீதி என்பதே தூலமான, உண்மையான சொல்லாடல். முற்போக்காளர்கள் இதைத்தான் பேசுவார்கள்.
   கட்டுரையாளர் குறிப்பு:
   ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
    
   https://minnambalam.com/politics/2021/09/27/13/Gandhi-Periyar-Anna-beyond-Nationalism
  • By கிருபன்
   தேசியவாதத்தின் பிரச்சினைகள் என்ன?
   மின்னம்பலம்2021-09-20 ராஜன் குறை 
   திராவிட இயக்கம் (திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்), அதிலும் குறிப்பாக பெரியாரும் அண்ணாவும் தமிழ் தேசியத்தை வளர விடாமல் செய்து விட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு மீண்டும், மீண்டும் எழுகிறது. திராவிட இயக்கம் ஜாதீய பண்பாட்டை ஆரிய பார்ப்பனீய பண்பாடாக வரையறுத்து, அதற்கு மாற்றாக திராவிட பண்பாட்டு அடையாளத்தை வலியுறுத்தியது. அது தமிழ்மொழி அடையாளத்தை மறுக்கவில்லை. திராவிட பண்பாட்டு அடையாளம், தமிழ் அடையாளம் இரண்டையும் இணைத்தது.
   வெறும் மொழி அடையாளம், அதன் அடிப்படையிலான தேசியத்தை அது கட்டமைக்க நினைக்கவில்லை. அது இந்திய தேசியத்தின் ஆரிய பண்பாட்டு, ஜாதீய அடிப்படையை எதிர்த்தது; ஆனால், ஒரு தேசியத்திற்கு மாற்றாக மற்றொரு தேசியத்தை உருவாக்காமல் சமூக நீதியை, மக்கள் தொகுதிகளின் உரிமைகளை. சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தியது. மக்கள் நலனை, சமத்துவத்தை, சமூக நீதியை முதன்மைப்படுத்திய திராவிட இயக்கம் வெறும் மொழி அடையாள தேசிய சொல்லாடலாக சுருங்க விரும்பவில்லை. காரணம் தமிழ் மொழியிலும் ஆரியம் கலந்துவிட்டதுதான். தமிழ் தேசியத்தில் பிரச்சினை தமிழ் அடையாளமல்ல; பிரச்சினை தேசியம் என்ற சொல்லாடல்தான்.

   தேசியத்தின் பிரச்சினை என்னவென்று புரிய ஒன்றைக் கவனித்தால் போதும். திராவிட இயக்க கருத்தியலாளர்கள் “திராவிடரா? தமிழரா?” என்று கருத்தரங்கம் நடத்தி ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க சொல்வதில்லை. அவர்கள் இரண்டு அடையாளங்களையும் சேர்த்தே பேசுகிறார்கள். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாளங்கள் இருப்பதை ஏற்கிறார்கள். ஆனால், தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள் தமிழ் அடையாளம் மட்டுமே ஒற்றை அடையாளமாக இருக்க வேண்டும், திராவிட அடையாளம் கூடவே கூடாது என்று வலியுறுத்துகிறார்கள். இதன் மூலம் பிற திராவிட மொழி பேசியவர்களின் தமிழ் பேசும் வம்சாவழியினர் தமிழர்கள் இல்லை என்ற பிறப்படையாள அரசியல் விஷ விதையை, பாசிச விஷச் செடியை நடுகிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் பேசும் பெண்ணுக்கும், ஜமைக்காவில் பிறந்த கறுப்பின ஆணுக்கும் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக விளங்கும் நாளில் இவர்களுடைய குறுகிய அடையாளவாதம் அதிர்ச்சியளிக்கிறது. அதுதான் உலகம் முழுவதும் தேசியம் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் சிக்கல். அமெரிக்க தேசியத்தையும் டொனால்டு டிரம்ப் நிறவெறி ஆதரவாளர்கள் கைப்பற்ற துடிக்கிறார்கள்.
   இப்படி கூறும்போது இளைஞர்கள் மனதில் திகைப்பு ஏற்படுகிறது. தேசியம் பேசி, சுதந்திரமான தேசிய அரசை, இறையாண்மையை வென்றால்தானே மக்கள் அவர்களுடைய வரலாற்றை அவர்களே தீர்மானிக்க முடியும், இதில் என்ன தவறு என்று நினைக்கிறார்கள். தேசிய விடுதலைக் கதைகளையெல்லாம் வீர விடுதலைக் கதைகளாகவே அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். பிரபுகளிடமிருந்தும், மன்னர்களிடமிருந்தும், மதகுருமார்களிடமிருந்தும் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பிய புதிய முதலீட்டிய சக்திகள் நிகழ்த்திய உலகளாவிய பொம்மலாட்டம்தான் தேசிய அரசுகளின் உருவாக்கம் என்றால் அதை புரிந்துகொள்ள கடினமாகத்தான் இருக்கும்.

   ஆனால், அந்தப் பொம்மலாட்டத்துக்கு மற்றொரு எதிர்பாராத பக்க விளைவு ஏற்பட்டது. அது என்னவென்றால் மக்கள் தொகுதிகள் அவர்கள் அரசியல் ஆற்றலை உணர்ந்ததும், அவர்களிடையே நிலவிய முரண்கள் குறித்து தன்னுணர்வு பெற்றதும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களை கனவாக சூல்கொண்டதும், பொதுவுடைமை, சோஷலிஸம் ஆகிய நடைமுறைகளை முயற்சி செய்ததும்தான் நல்விளைவுகள். பொதுவுடமை இயக்கம் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்றுதான் கூறியது. ஆனால் ரஷ்யாவிலும், சீனாவிலும் தேசிய அரசியலில் சிக்கிக்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றிலிருந்து பாடம் கற்காமல் நாம் எதிர்கால அரசியலைச் சிந்திக்க முடியாது. முற்போக்கு அரசியலின் முக்கிய கேள்வி மக்களிடம் எப்படி அதிகாரத்தைக் கொண்டு சேர்ப்பது என்பதாகத்தானே இருக்க முடியும். அதற்கான வழி நிச்சயம் தேசியம் அல்ல. அது மக்களை பிரித்தாளும் ஆதிக்க சக்திகளுக்கே துணைபுரியும்.
   தேசியத்தால் தேசங்களை கட்டமைக்க இயல்கிறதா? 
   தேசம் (Nation) என்ற ஒன்றை கட்டமைக்கும் சொல்லாடலை தேசியம் என்றோ தேசியவாதம் (Nationalism) என்றோ குறிப்பிடுகிறோம். அடிப்படையில் தேசியத்தின் பணி ஒரு மக்கள் தொகுதியை வரையறை செய்து இவர்கள் எல்லாம் ஒரு தேசம் என்பதற்கான பொதுப் பண்புகள் கொண்டவர்கள் என்று கூற வேண்டும் என்பதுதான். அதனுடன் ஒரு நிலப்பரப்பையும் அறுதியிட்டு அதன் எல்லைகளை உருவாக்கி அந்த நிலப்பகுதி தேசத்தின் பரப்பு (Territory) என்று கூற வேண்டும். இந்த தேசம் என்ற கருத்தாக்கமும், அதைக் கட்டமைக்கும் தேசியம் என்ற சொல்லாடலும் நவீன காலத்தில், அதாவது பதினேழாம் நூற்றாண்டு, பதினெட்டாம் நூற்றாண்டில் மெள்ள, மெள்ள உருவாகி பத்தொன்பதாம் நூற்றாண்டில், இருபதாம் நூற்றாண்டில் முழுமையடைந்தது.
   இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி நவீன காலத்தில் உருவான எல்லா தேசங்களும் தங்களுக்கு பண்டைய வரலாறு உண்டு என்றும், நாங்கள் தொன்மையான தேசம் என்றும் கூறிக்கொள்வதுதான். அதாவது தேசங்கள் என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டு சொல்லாடலில் உருவானாலும் அதற்கு முந்தைய அதன் எல்லைகளுக்கு உட்பட்ட எல்லா வரலாறும் தன்னுடைய வரலாறு என்று கூறிக்கொள்ளும்.

   இப்படி உருவான தேசிய சொல்லாடல்களும், தேசங்களும் தொடர்ந்து பலவிதமான சிக்கல்களுக்கும் உள்முரண்களுக்கும் ஆட்பட்டே வருகின்றன. அதற்கு ஒரு முக்கிய காரணம் இந்த தேசிய சொல்லாடல் சமூகத்தின் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்படுவதுதான். அது உழைக்கும் மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு சமத்துவத்தை வழங்காததால், அவர்களின் அதிருப்தி தொடர்ந்து தேசிய சொல்லாடலை கேள்விக்கு உள்ளாக்கியே வருகிறது.

   இதற்கு நல்ல உதாரணம் இத்தாலி. இத்தாலியின் இன்றைய மக்கள் தொகை தமிழகத்தைவிட குறைவானது; ஆறேகால் கோடி. இத்தாலியில் பண்டைய காலத்தில் ரோமப்பேரரசு உருவானது; உலக வரலாற்றில் அது முக்கிய பங்காற்றியது. ரோமப் பேரரசு வீழ்ந்த பிறகு, அதனருகே உருவான கிறிஸ்துவ மதத்தின் தலைமைப் பீடமான வாடிகன் ஐரோப்பிய அரசியலில் முக்கிய பங்காற்றி வந்தது. வாடிகனுக்கு வெளியே இத்தாலியில் நகர அரசுகளே வெகுகாலமாக கோலோச்சிவந்தன. இந்த நகர அரசுகளுக்குள் ஓயாத போர்கள் நிகழ்ந்து வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான், 1861ஆம் ஆண்டு, இத்தாலியின் அனைத்து பகுதிகளும் இணைக்கப்பட்டு இத்தாலி ஒரே தேசமென கட்டமைக்கப்பட்டது. இதை புத்தெழுச்சி (Risorgimento) என்று உணர்ச்சிகரமாக குறிப்பிடுவார்கள். மாஜினி, கரிபால்டி போன்றவர்கள் இதன் முக்கிய உந்துவிசையாக இருந்தவர்கள். அதனால் வரலாற்று நாயகர்களாக சித்திரிக்கப்படுபவர்கள். அப்படி இத்தாலி ஒன்றுபட்ட ஒரு நாடாக மாறினாலும் தொழிலும் வர்த்தகமும் செழித்த நகரங்களைக் கொண்ட வடக்கு இத்தாலியும், பண்டைய பெருமையும் விவசாய சமூகங்களும் கொண்ட தெற்கு இத்தாலியும் பல விதங்களிலும் வேறுபட்டு நின்றன. வர்க்க முரண்கள் கூர்மையாக இருந்தன.
   அப்படி பல உள் முரண்பாடுகளைக் கொண்ட தேசம் தவிர்க்கவியலாமல் முசோலினி தலைமையில் பாசிச அரசை உருவாக்கியது. பாசிசம் என்றால் கட்டுவது; Fasciare என்ற வினைச்சொல்லுக்கு “சேர்த்துக் கட்டு” என்று பொருள். உதிரியான பொருட்களை கயிற்றால் கட்டுவது போல எல்லா மக்களையும் சேர்த்துக் கட்டும் கண்கட்டு வித்தை. முசோலினியால் தொழிலாளர்களை அமைப்பாக்கும், வர்க்க முரண் பேசும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப் பட்டார்கள். அந்தோனியோ கிராம்சி சிறையிலடைக்கப்பட்டு அதில் நோயுற்று இறந்ததும், அவர் சிறையில் ரகசியமாக எழுதிய குறிப்புகள் இன்று நவமார்க்சீய மூலாதாரங்களாக விளங்குவதும் வரலாறு.

   இரண்டாம் உலகப் போரில் பாசிசம் வீழ்ந்த பிறகு இத்தாலியில் ஜனநாயகக் குடியரசு அமைந்தாலும், தொடர்ந்து அதன் பல்வேறு பிரதேச அடையாளங்கள் உயிர்பெற்ற வண்ணம்தான் இருந்தன. வடக்கு இத்தாலி தனி நாடாக வேண்டும், தெற்கு இத்தாலியின் சுமை அதற்கு தேவையில்லை என்று கூறும் Lega Nord என்ற வலதுசாரி அமைப்பு 1991ஆம் தோன்றியது. அது பல வடிவமெடுத்து இன்றும் கூட்டாட்சி அமைப்பை வலியுறுத்தும் பிரதேச அமைப்பு கட்சிகளுடன் சேர்ந்து இயங்கி வருகிறது. மற்றொருபுறம் இத்தாலி இப்போது, ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டாட்சி வடிவத்தின் பகுதியாகவும் இருக்கிறது. சுயாட்சி கோரும் பிரதேசங்கள், ஐரோப்பிய கூட்டாட்சி ஆகிய இரண்டுக்கு நடுவே இத்தாலிய தேசிய அரசு பெருமுதலீட்டிய கைப்பாவையாக இயங்கி வருகிறது.
   இத்தாலியின் இருநூறு ஆண்டு தேச உருவாக்க வரலாற்றை ஆழ்ந்து படித்தால், நாம் ஒன்றை புரிந்துகொள்ளலாம். தேசியம் பாசிசத்தை உருவாக்கும் என்பது மட்டும் பிரச்சினையல்ல. பாசிசத்தாலும் தேசியத்தை நிலைநிறுத்த முடியாது என்பதுதான் பிரச்சினை. இதற்கு காரணம் தேசியம் என்ற சொல்லாடலே உள்ளீடற்ற போலித்தனமான சொல்லாடல் என்பதுதான். சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி ஆகிய லட்சியங்கள் போல அல்லாமல் செயற்கையான, பகுத்தறிவற்ற ஓர் உணர்ச்சியை தேசப்பற்று என்ற பெயரில் தோற்றுவிப்பதால் அதனால் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க முடிவதில்லை. தேசிய சொல்லாடலின் சில முக்கிய பிரச்சினைகளைப் பார்ப்போம்.
   யாரை சேர்ப்பது, யாரை விலக்குவது? 
   தேசிய சொல்லாடலின் முக்கிய பணியே இவர் நம்மவர், இவர் நம்ம ஆளில்லை என்று விலக்குவதுதான். கிட்டத்தட்ட ஜாதீயம் போன்றதுதான் இது. பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. அப்படி செய்த பிறகு ஒரு லட்சிய தேசிய மாதிரியும் உருவாகும். அதற்கு யார் அதிகம் பொருந்திப் போகிறார்கள், யார் குறைவாகப் பொருந்திப் போகிறார்கள் என்பதன் அடிப்படையில் தர வேறுபாடு செய்யப்படும். இந்த தர வேறுபாட்டின் அடிப்படையில் ஆதிக்க சக்திகள் உருவாகும். ஜெர்மானீய புரொடெஸ்டண்ட் கிறிஸ்துவ தேசியம் ஹிட்லர் கையில் போன பிறகு அது ஆரிய இன தேசியமானது. மக்கள் உடற்கூற்றின் அடிப்படையில் அதிக ஆரிய அம்சம் கொண்டவர்களாக, குறைந்த ஆரிய அம்சம் கொண்டவர்களாகப் பிரிக்கப்பட்டார்கள். யூதர்கள் அந்நியர்களாக, எதிரிகளாக கட்டமைக்கப்பட்டு கும்பல், கும்பலாக கொன்றொழிக்கப்பட்டார்கள்.
   பெரும்பாலான தேசியங்கள் ஒற்றை அடையாள அடிப்படையிலேயே கட்டமைக்கப்படும். பிற அடையாளம் கொண்டவர்கள் ஒருவிதமான இரண்டாம் நிலையை ஏற்க வேண்டி வலியுறுத்தும்; அல்லது அவர்களை வெளியேற்றும். சிங்கள பேரினவாத தேசியம் ஈழத் தமிழர்களை இரண்டாம் நிலை குடிமக்கள் ஆக்கியது என்றால், ஈழத்தமிழ் தேசியம் இஸ்லாமியர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது. ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்படும் தேசியம் என எல்லா தேசியங்களுமே அடையாள விலக்கங்களைச் செய்வது உலகெங்கும் நிகழ்கிறது. பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகள் கண்ணில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கும். எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.

   இந்திய தேசியத்தின் கதை 
   இந்திய தேசியம் சற்றே வித்தியாசமானது. காலனீய ஆட்சியில் 1858ஆம் ஆண்டு முதன்முறையாக இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி ஒற்றை ஆட்சியின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் அரசி விக்டோரியா மகாராணியே அந்த புதிய ஒருங்கிணைந்த ஆட்சிப் பிரதேசத்தின் முதல் அரசியாவார். அப்போது உருவான இந்திய குடிமக்கள் என்ற புதிய கருத்தாக்கத்தின் அடிப்படையில், பல்வேறு பிரதேசங்களில் வாழும், பல மொழிகள் பேசும், பல பண்பாடுகளையும், வழிபாட்டு முறைகளையும் கொண்ட மக்கள் எல்லோரையும் உள்ளடக்கிய இந்திய தேசம் என்ற சொல்லாடல் உருவாகத் தொடங்கியது. இந்திய தேசியம் உலகின் பல தேசியங்களைப் போல மேட்டுக்குடியினரின், ஆதிக்க சக்திகளின் வன்முறை ஆற்றல், பேரம் செய்யும் ஆற்றல் ஆகியவற்றின் மூலமே இயங்கியிருந்தால் பெரிய வித்தியாசம் நிகழ்ந்திருக்காது. ஆனால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற ஓர் அதிசய மனிதர் இந்திய விடுதலை இயக்கத்தை வெகுமக்கள் இயக்கமாக மாற்றிக்காட்டினார். தேச விடுதலைப் போரில் மக்களின் பங்கேற்பு என்பது, சுதந்திரக் குடியரசின் மக்களாட்சியில் வெகுமக்கள் பங்கேற்புக்கு வழி வகுத்தது. சோஷலிசம், மதச்சார்பின்மை, பகுத்தறிவு ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றது மக்களாட்சி கால்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதை உறுதிப்படுத்தும் அரசியல் நிர்ணய சட்டத்தை அனைத்து முரண்பாடுகளையும் சமாளித்து பெருமளவு முற்போக்குத் தன்மை கொண்டதாக பாபா சாகேப் அம்பேத்கர் வடிவமைத்ததும் மிக முக்கியமான அடித்தளமாக மாறியது.
   ஆனாலும் மக்கள் நலனுக்கும், முதலீட்டிய நலனுக்குமான முரணை காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து சமன்செய்ய முடியவில்லை. சோவியத் யூனியன் 1991ஆம் ஆண்டு சிதறுண்டதும், ராஜீவ் காந்தி கொலையுண்டதும் சேர்ந்து, நரசிம்ம ராவின் ஆட்சியில் இந்தியா உலக முதலீட்டிய கட்டமைப்புக்கு ஆட்பட்டது. இதனால் காங்கிரஸ் பலவீனமடைந்தது. ஒருபுறம் சமூக நீதி அரசியலும், கூட்டாட்சி அரசியலும் வலுவடைந்தன. இதற்கு முரணாக இஸ்லாமியர்களை அந்நியர்களாக, எதிரிகளாகக் கட்டமைக்கும் இந்துத்துவ பாசிசம் வலுவடைந்தது. தங்களுக்கு சாதகமான முதலீட்டிய ஆதரவு தேசியம் வலுவிழக்கும்போது முதலீட்டிய சக்திகள் பாசிசத்தை ஆதரிப்பது என்பது பழைய சூத்திரம்தான். இதற்கு உலக அளவில் உருவான இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாதப் போக்குகளும் துணைபுரிந்தன. இந்துத்துவ பாசிசத்தின் பிடியிலிருந்து தப்பித்து உண்மையான கூட்டாட்சியை, மக்களாட்சியை, அதிகாரப் பரவலை இந்தியா கண்டடையுமா என்பதே இன்றைய நிலையில் முக்கிய கேள்வி.
   அரசியல் தீர்வு என்பது என்ன? 
   அனைவருக்குமான விடுதலை அரசியல்; சுதந்திரம், சமத்துவம், சகோரித்துவம் ஆகிய லட்சியங்கள் போன்றவற்றுக்கு மக்களைப் பயிற்றுவிப்பதுதான் தீர்வு. ஓர் அடையாளத்தை கட்டமைத்து அனைவரையும் திரட்டி, மாற்று அடையாளத்தை எதிரியாக்கி அதிகாரத்தைக் குவிப்பது என்பது விடுதலை அரசியல் அல்ல. திராவிட இயக்கம் பார்ப்பனீயத்தை எதிர்த்ததே தவிர, பார்ப்பன சமூகத்தின் ஏகபோக அதிகாரத்தை எதிர்த்ததே தவிர, பார்ப்பன அடையாளத்தை எதிர்க்கவில்லை. அதனால்தான் திராவிட இயக்கம் முற்போக்கான சமூக நீதி இயக்கமாக விளங்குகிறது. இரண்டு அற்புதமான தமிழ் வாக்கியங்களை அரசியலின் அடிப்படையாக திராவிட இயக்க சிந்தனை உலகுக்கு வழங்குகிறது. அது “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்புநெறியும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்புநெறியும் ஆகும்.
   கட்டுரையாளர் குறிப்பு:
   ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
    
   https://minnambalam.com/politics/2021/09/20/9/problems-in-nationalism
    
  • By கிருபன்
   பெரியார், அண்ணா உருவாக்கிய அரசியல் தத்துவ இரட்டைக் குழல் துப்பாக்கி!
   மின்னம்பலம்2021-09-15 ராஜன் குறை 
   ஆண்டுதோறும் தி.மு.க செப்டம்பர் 15, 17 ஆகிய இரு தினங்களை ஒட்டி முப்பெரும் விழா என விழா கொண்டாடுவது வழக்கம். அண்ணா பிறந்த தினம், பெரியார் பிறந்த தினம், தி.மு.க உருவான தினம் ஆகியவை இந்த தேதிகளில் அடங்குகின்றன. அண்ணா ஒருமுறை தி.க-வும், தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூறியது அனைவரும் அறிந்ததே. அந்தக் கூற்றினை அரசியல் தத்துவ அடிப்படையில் எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்பதை பரிசீலிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். திராவிட இயக்கம் என்று பொதுவாக அறியப்படும் அரசியல் இயக்கங்களின் நோக்கம் திராவிட - தமிழ் அடையாளம் கொண்ட ஒரு மக்கள் தொகுதியினை கட்டமைப்பதே. அந்த வரலாற்று நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியதன் அடையாளம்தான் ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தில் தொடரும் திராவிட கட்சிகளின் ஆட்சி.
   எம்.ஜி.ஆர் துவங்கிய அண்ணா தி.மு.க தனக்கு முன்னே “அகில இந்திய” என்ற அடைமொழியைச் சூட்டிக்கொண்டு அ.இ.அ.தி.மு.க-வாக மாறினாலும் திராவிட சிந்தனையினை தன் ஆட்சியிலும், செயல்களிலும் கைவிட முடியவில்லை. அதற்கு எதிர்க்கட்சியாக விளங்கிய தி.மு.க-வும், அதன் தலைவர் கலைஞரும் அனுமதிக்கவில்லை. அதனால் சமூக நீதி, மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளில் திராவிட அரசியலின் தாக்கம் அரசாட்சியில் தொடரவே செய்தது. அதனைத்தான் இன்று பொருளாதார வளர்ச்சியில் திராவிட மாடல் அதாவது திராவிட முன்மாதிரி என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்திய மாநிலங்களுள் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, மக்களின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய ஒரு பொருளாதார வளர்ச்சியை தமிழகம் சிறப்பாக உருவாக்கிக் காட்டியுள்ளது என்பதே வளர்ச்சி சார் பொருளாதார ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. அதற்கான அடித்தளம் பெரியாரும், அண்ணாவும் உருவாக்கிய அரசியல் சித்தாந்தமும், அதனை ஆட்சியில் நடைமுறைப்படுத்திய, தன் எதிர்க்கட்சியும் பின்தொடர வைத்த வரலாற்று நாயகர் கலைஞரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

   இதன் விளைவாக இரண்டு முக்கியமான வரலாற்று அம்சங்களை தமிழ்நாட்டில் காண முடிகிறது. 1) வரலாற்று தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதியாக திராவிட-தமிழ் சமூகம் உருவாகியுள்ளது; 2) வளர்ச்சிக்கான விழைவு கொண்ட சமூகமாக, பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சன் வார்த்தைகளில் Aspirational Society ஆக தமிழ் சமூகம் உள்ளது. இதனால் மக்களாட்சி முறையில் அரசும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுத்து செயல்படும் சூழலை உருவாக்குகிறது. தமிழக அரசியலின் விளைபொருளான மாநில அரசு அதனால் ஒன்றிய அரசிடமிருந்து அதிக உரிமைகளைப் பெறவேண்டிய சூழலும் தவிர்க்க முடியாததாகிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை பிற மாநிலங்கள் ஏற்றாலும் தமிழகம் ஏற்காது என்ற ஒரு வேறுபட்ட சூழ்நிலை தமிழக அரசியலில் சாத்தியமாகியுள்ளது எனலாம். இது இந்திய துணைக்கண்டத்தில் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் என்பதே வரலாறு காட்டும் திசை. இது உருவாக முக்கிய காரணம் பெரியாரும் அண்ணாவும் அரசியல் இயக்கத்தின் இருவேறு கூறுகளை தங்கள் செயல்பாட்டின் அடித்தளமாகக் கொண்டதுதான்.

   அரசியல் தத்துவத்தின் இரண்டு பரிமாணங்கள்!
   நீண்ட நெடுங்காலமாக அரசியலில் இரண்டு ஆதாரமான செயல்பாடுகள் நிகழ்கின்றன. ஒன்று ஒரு குறிப்பிட்ட அரசின் கீழ், இறைவனின் கீழ், மதகுருவின் கீழ் மக்களை ஒன்றுபடுத்தி, சமூக அமைப்பாக்கி, அரசாக, பேரரசாக உருவாக்குவது. இதை நாம் கருத்தொப்புமை அரசியல் என்று கூறலாம். அதாவது ஒரு சில கருத்துகளை, கருத்தியலை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்வது. அதனை வெளிப்படுத்தும் விதமாக ஒரு குறிப்பிட்ட குறியீட்டை, அடையாளத்தை அனைவரும் ஏற்பது. இவ்வாறு பேரரசு உருவாவது, சிதைவது, அவற்றுக்கிடையேயான போர்கள் ஆகியவை எல்லாம் வரலாறு என்று எழுதப்படுவதும், ஆராயப்படுவதும் உண்டு.
   இதற்கு இணையாக மற்றொரு அரசியல் செயல்பாடும் பலகாலமாக நிகழ்ந்தது உண்டு. அது ஆண்டான், அடிமை; மேலோர், கீழோர்; அதிகார வர்க்கம், உழைக்கும் வெகுமக்கள்; முதலாளிகள், தொழிலாளிகள் என்பதான ஏற்றத்தாழ்வான சமூக அங்கங்களுக்கிடையேயான முரண்கள், மோதல்களின் அரசியல். ரோமானிய அடிமைகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கிய ஸ்பார்ட்டகஸ் குறித்த கதையாடல்கள் பிரபலமானவை. ரோமப் பேரரசில் பாட்ரீஷியன்ஸ் என்ற அதிகாரம் படைத்த பிரபுக்களுக்கும், ப்ளீப்ஸ் (Plebes) என்ற வெகுமக்களுக்குமான பிறப்பின் அடிப்படையிலான பிரிவினையை ஒட்டியே பொது வாக்கெடுப்பை ஆங்கிலத்தில் பிளிபிசைட் (Plebiscite) என்று இன்றும் அழைக்கிறோம். அதாவது மக்கள் அனைவரும் வாக்களிப்பது. இப்படியான சமூக முரண்களிடையே ஒடுக்கப்படுவோரின் அரசியலை முன்னெடுப்பதை முரண் அரசியல் எனலாம். கார்ல் மார்க்ஸ் இதுவரையிலான வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று கூறியது இந்த முரண் அரசியல் பரிமாணத்தை வலியுறுத்துவது.

   இதில் முக்கியமான ஒரு சவால் என்னவென்றால் முரண் அரசியலை முன்னெடுக்கவும் ஒடுக்கப்பட்டோரின் கருத்தொருமிப்பு வேண்டும். அதனால் கருத்தொப்புமை அரசியலை முற்றிலும் கைவிட முடியாது. அப்படிக் கைவிட்டால் அது முடிவற்ற வன்முறைக்கும், சமூக வாழ்க்கை சிதைவுக்கும் வழி வகுக்கலாம்.
   கருத்தொப்புமை அரசியல் முரண் அரசியலை கைவிட்டால் அது எதேச்சதிகாரமாக, சர்வாதிகாரமாக, பாசிசமாக மாறிவிடும். அதில் அரசுக்கு கீழ் படிதல் மட்டுமே வலியுறுத்தப்படும் நிலை உருவாகிவிடும். அதனால் இந்த இரண்டு விதமான அரசியல் தத்துவங்களும் இணைந்து பயணிப்பதே முழுமையான பலன் தரும். சமகால அரசியலில் முரண் அரசியலை முற்றிலும் ஒதுக்கும் பாசிஸ்டுகள் வர்க்க முரண் அரசியலைப் பேசும் கம்யூனிஸ்டுகளை கடுமையாக வெறுப்பதன் காரணத்தை நாம் இந்த வேறுபாட்டின் மூலம் புரிந்துகொள்ளலாம். அதே சமயம் கம்யூனிஸ்டுகள் கருத்தொருமிப்பு அரசியலை சரியான அரசியல் தருணத்தில் புரிந்துகொண்டால்தான் வெகுஜன அரசியலில் இணைய முடியும்.

   தமிழக வரலாற்றில் உருவான அரசியல் பாதைகள்!
   தமிழக வரலாற்றில் முரண் அரசியல் ஒரு முக்கியமான வடிவத்தைக் கண்டது. அது பார்ப்பனீய கருத்தியலின் காரணமாக நிலவும் ஜாதி சார்ந்த ஏற்றத்தாழ்வு மற்றும் பார்ப்பன சமூகத்தினர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அடைந்த சமூக, அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றால் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதோருக்கும் ஏற்பட்ட முரண் அரசியல் என்ற வடிவாகும். பார்ப்பனர்கள் பயிலும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஜாதீய ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் தர்ம சாஸ்திரங்களை இந்துக்களின் சனாதன சட்டங்கள் என காலனீய ஆட்சியில் நீதிமன்றங்களும் பின்பற்றச் செய்தனர். அதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவு பார்ப்பனீய கருத்தியலை ஆதிக்க கருத்தியலாக மாற்றினர். அதற்கான சமஸ்கிருத, ஆங்கிலக் கல்வியும் அவர்கள் உருவாக்கிய அமைப்பில் அவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஏன் நவீன மருத்துவ படிப்பிற்குக்கூட சமஸ்கிருதப் பயிற்சி வேண்டும் என்று சொல்லி பார்ப்பனரல்லாதோரை விலக்கும் அளவு செல்வாக்கு பார்ப்பனீயத்துக்கு இருந்தது.
   இப்படி பார்ப்பன அடையாளம் என்பது சமஸ்கிருத மொழி சாத்திரங்களுடன், சனாதன தர்மத்துடன் பிணைக்கப்பட்டிருந்ததால் அது ஆரியப் பண்பாடு என்று அறியப்பட்டது. அதற்கு மாறாக தமிழ்மொழியை மூலாதாரமாகக் கொண்ட தென்னிந்திய திராவிட பண்பாடு பார்ப்பனரல்லாதோரால் தங்கள் அடையாளமாக முன்வைக்கப்பட்டது. இந்தப் பண்பாட்டு முரணை, ஜாதீய ஏற்றத்தாழ்வு என்ற சமூக முரணை, “சூத்திரர்கள்” என்று பார்ப்பனர்களால் இழிவுபடுத்தி ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் அணி சேர்க்கை உருவாக்கிய முரணையே திராவிட அரசியல் குறிப்பிடுகிறது. இந்தியாவின் பொதுமொழியாக இந்தி மொழியை உருவாக்க காங்கிரஸ் முனைந்தபோது இந்தி எதிர்ப்பின் தளத்தில் தமிழ் மொழி அடையாளம் என்பது கருத்தொருமிப்பின் சாத்தியத்தை உருவாக்கியது.

   பெரியாரின் முரண் அரசியல்!
   பெரியார் பார்ப்பனீயத்தை, ஜாதி படிநிலையை எதிர்ப்பதை முரண் அரசியலின் மையமாகக் கொண்டார். எல்லா ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல் கருவியாக அவர் சுயமரியாதை என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். பெண் விடுதலைக்கும் அவர் அதையே வழியாகச் சொன்னார். இதனை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலம், மக்கள் மனதில் பதியும்படி அமைதி வழியில் பல கிளர்ச்சிகளை செய்வதன் மூலம் மன மாற்றத்தை உருவாக்க முனைந்தார். அவர் வன்முறையை விரும்பவில்லை; வன்முறையால் நிலையான சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தார். அதே சமயம் அவர் தேர்தல் பங்கேற்பு, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றையும் தவிர்க்க விரும்பினார். ஏனெனில் தேர்தல் பங்கேற்பு என்பது மக்களாட்சியில் கருத்தொருமிப்பு அரசியலுக்கே கொண்டு செல்லும், முரண் அரசியலை கூர்மழுங்கச் செய்யும் என்று நினைத்தார்.
   முரண் அரசியல் பாதையில் பெரியார் சனாதன தர்மத்தை வீழ்த்த சாத்திரங்கள், வேத புராணங்கள் ஆகியவற்றை மட்டுமன்றி, இறை நம்பிக்கையையும் கேள்விக்கு உள்ளாக்குவது அவசியம் என்று நினைத்தார். அது காலப்போக்கில் தீவிரமான இறை மறுப்பாகவும் வடிவம் எடுத்தது. பொதுவாகவே எந்தக் குறியீட்டையும் புனிதப்படுத்துவதை அவர் ஏற்கவில்லை. தமிழ் மொழியை விமர்சனமின்றி கொண்டாடுவதையும் அவர் ஏற்க மறுத்தார். தமிழில், தமிழ் இலக்கியத்தில் புழங்கிய பிற்போக்கு கருத்துகளை விமர்சித்தார். சமரசமற்ற முரண் அரசியலை அவர் சுதந்திரவாத அரசியலுடன், சுயமரியாதை என்ற வகையில் தனியுரிமை கோட்பாட்டுடன் இணைத்து சட்டத்துக்கு உட்பட்ட தீவிரமான கிளர்ச்சி வடிவங்களை மேற்கொண்டார். சட்டம் அனுமதிக்காதபோது அமைதி வழியில் சிறை ஏகும் போராட்டங்களையும் நடத்தினார். தொடர்ந்து பார்ப்பனீய மேலாதிக்கம், அதனை அனுமதிக்கும் அரசியல் நிர்ணய சட்டம், இந்திய ஒன்றிய அரசின் மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வந்தார். அதே சமயம் காமராஜர் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களையும் ஆதரித்தார். தி.மு.க 1949ஆம் ஆண்டு தோன்றி 1967ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றும்வரை அவர் முரண் அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்து திராவிட கருத்தியலை தீவிரமாக நிலைகொள்ளச் செய்தார்.

   அண்ணாவின் கருத்தொப்புமை அரசியல்!
   பார்ப்பனரல்லாதோர், சாமானிய மக்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வரை ஆதிக்க கருத்தியலை முறியடிப்பது என்பது கடினமானது. அரசியல் அதிகாரத்தை வன்முறை வழியாக கைப்பற்றலாம் அல்லது மக்களாட்சியில் தேர்தல் பங்கேற்பின் மூலம் கைப்பற்றலாம். பெரியாரைப் போலவே அண்ணாவும் வன்முறையில் சிறிதும் நம்பிக்கையில்லாதவர். போராட்டங்களில் சிறை செல்வதுகூட கட்சியினரின், எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் யார் யார் சிறை செல்ல இயலும் என்பதை முன் கூட்டியே கேட்டறிந்து கிளர்ச்சிகளை அறிவித்தவர். அதனால் மக்களாட்சி சாத்தியமாக்கிய தேர்தல் பாதை மூலம் ஆட்சிக்கு வருவதே பார்ப்பனீய கருத்தியலின் பிடியைத் தளர்த்தி திராவிட கருத்தியலை வேரூன்றச் செய்ய அவசியமானது என்ற முடிவுக்கு வந்தார். அப்படித் தேர்தலில் பரவலான மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமானால் கருத்தொப்புமை அரசியலை உருவாக்குவது அவசியம் என்பதையும் உணர்ந்தார்.
   அதனை செயல்படுத்த அவர் திராவிட என்ற சொல் பண்பாட்டை, நிலப்பகுதியைச் சார்ந்த அனைவரையும் குறிப்பதாகவும் தமிழ் என்பதை அனைத்து தமிழ்நாட்டு மக்களை உள்ளடக்கிய மொழி அடையாளமாகவும் கொண்டு திராவிட-தமிழ் அடையாளத்துக்கான கருத்தொப்புமையை உருவாக்க முனைந்தார். உதாரணமாக கடவுள் மறுப்பு என்பதற்கு பதிலாக திருமூலரின் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற அனைத்து நம்பிக்கையாளர்களையும் உள்ளடக்கும் அருவமான பொதுமைக் குறியீட்டை முன்வைத்தார். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என இறைமைக்கு ஒரு புது வரையறை சொன்னார். இதற்கு இணையாக கலைஞர் “கோயில்கள் கூடாது என்பதல்ல; அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது” என்று பராசக்தி பட வசனத்தின் மூலம் கருத்தொருமிப்பு அரசியலை முன்னெடுத்ததாக பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

   தமிழ்மொழி மாண்பு, அதன் தொன்மை ஆகியவற்றை அண்ணாவும், கலைஞரும், பிற தி.மு.க தலைவர்களும் கருத்தொப்புமைக்கான சொல்லாடலாக மாற்றினர். அதனால் திராவிட - தமிழ் பண்பாட்டு அடையாளத்தை ஏற்பவர்களையெல்லாம் கருத்தொப்புமை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். அதே சமயம் திராவிட கருத்தியலையும், ஆரிய சனாதன எதிர்ப்பையும் மறவாமல் கைக்கொண்டு வந்தனர். இந்தி மொழியை இணைப்பு மொழியாக, ஒற்றை ஆட்சி மொழியாக மாற்றுவதையும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். அதன் காரணமாக 1965ஆம் ஆண்டு தன்னெழுச்சியாக வெடித்தெழுந்த இந்தி எதிர்ப்பு போர் பல மொழிப்போர் தியாகிகளையும், வரலாற்றுத் தன்னுணர்வையும் உருவாக்கியது. அது தமிழகப் பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தை முற்றிலும் அகற்றியது. தமிழகத்தைப் பொறுத்தவரை பிற இந்தியப் பகுதிகள், உலக நாடுகள் அனைத்துடனும் தொடர்பு மொழி என்பது ஆங்கிலம் மட்டுமே என்றானது.
   இதற்கெல்லாம் உச்சமாக 1967 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற பிறகு திருச்சிக்குச் சென்று அண்ணா வெற்றியை, பெரியாருக்கு காணிக்கையாக்கியது கருத்தொருப்புமை அரசியல் ஒருபோதும் முரண் அரசியலை, சமூக முரண்களை, சாமானியர்கள் நலன்களை, சமூக நீதி லட்சியத்தை மறக்கக் கூடாது என்பதை உணர்த்துவதாகவே அமைந்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்று பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி தினமாக மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்துள்ளது. சமூக நீதிக்காக, சமத்துவத்துக்காக இந்த அரசியல் தத்துவ இரட்டைக் குழல் துப்பாக்கி என்றும் போராடும் என்பது உறுதிப்பட்டுள்ளது.
   கட்டுரையாளர் குறிப்பு:
    
   ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
    
   https://minnambalam.com/politics/2021/09/15/7/Periyar-and-Anna-political-double-barrel-gun
    
 • Topics

 • Posts

  • புரிந்தால் சுவைப்பீர்! புரியாவிட்டால் ரசிப்பீர்!! 🤓🤓🤓 *அது எரிந்து விழுகிற போது* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 அது எரிந்து விழுகிற போது கண்ணாறக் கண்டேன்.  எனது மண்ணைக்கவர்ந்த கழுகுக்கும்பலின் ஓர் குறியீடாக அந்த எந்திரக்கழுகின் முதுகைக்கண்டேன் .  வலப்புறமாக சுழன்ற  இறக்கைச்சக்கரம்  வக்கிர எமப்படை போலவும்-அக் கொடிய கழுகின் கூர் அலகு  குத்திக் கூறாக எனது மண்ணைக் கிழிப்பதாகவும்;  அங்கே கொதித்து  எழுந்த வெப்பக்காற்றும் அதன் வேக வீச்சில்  சக்கரம் இடப் புறமுதுகு காட்டி ஓட..  காற்று... எறிந்ததொரு கணை  எரித்ததோ அதனை?!!  புற முதுகைத் தாக்குதல்... மரபு திரிந்த தாக்குதல் தான்!  மக்கள் திரியாமல் காக்குதல் தான்!!  அது எரிந்து விழுகிற போது கண்ணாரக்கண்டேன்.  பிறகு  பதினான்கு எலும்பையும்  அவற்றைப் போர்த்திய இருபத்தினாலு குறும்பையும் கூட கண்ணாறக் கண்டேன்.                          ...தமிழ்க்கோ
  • இப்ப இருக்கிற ஊடகங்களுக்கு வேறை வேலையள் எக்கச்சக்கம். மேலிடத்திலை சொல்லுறதை மட்டும் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லுவினமாம்.போனமாம் சாப்பிட்டமாம் வந்தமாம் இருக்கணும் எல்லோ?
  • யாழ்கள சின்ராசுகள்????? யார் அவர்கள்? அதாவது நீங்களும் உங்கள் அருவருடிகளும் மகா ராஜாக்கள் அப்படித்தானே? 1988 ஈழத்தில் பாடசாலை விட்டு நான் வரும் வழியில் நான்கு தமிழர்களின் கொல்லப்பட்ட உடலங்கள் வீதியில் சிதைந்து கிடந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்னார் தம்பி இப்போதுதான் இறந்த ஒருவரின் உடலை ட்ரக்கில் கட்டி இழுத்துப்போகிறார்கள் என்று. ..அந்த இந்திய இராணுவத்தின் தளபதிதான் இவர்..  
  • றோ உளவுப்பிரிவு தனது நலனுக்காக எதையும் செய்யும். விடுதலைப்புலியாக மாறும் கரும்புலியாக மாறும். சிங்கள அரசியல்வாதிகளை தற்கொலை போராளி கொண்டு கொலை செய்யும். விடுதலைப்புலிகளுக்குள்ளும் வேறு இயக்கங்கள் பெயரில் படு கொலைகளை நடத்தும். இன்னும் பற்பல......
  • இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார். துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான். கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான். சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.