Jump to content

உயர்சாதி அரசியல் - சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                   உயர்சாதி அரசியல்
                                                                                                                                                  - சுப. சோமசுந்தரம்

                    கருத்தியல் அடிப்படையில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி எனும் பாகுபாட்டிற்கு நாம் எதிரிகள் என்றாலும், சாதியில் ஊறிய சமூகம் தந்த இச்சொல்லாடல் இங்கு பயன்பாட்டிற்கு எளிதாகவும் இயல்பாகவும் தோன்றுவதால் இக்கட்டுரையில் 'உயர்சாதி'யைப் பொறுத்தருள வேண்டும்.

                    கட்சி அரசியலில் ஆரம்பித்து சாதி அரசியலிலும் சமூக நீதியிலும் இக்கட்டுரையை முடிப்பது தடம் புரள்வதல்ல. காலத்தின் கட்டாயம். இன்றைய நிதர்சனங்களின் பட்டவர்த்தனம் (தமிழ் ? சரி, விடுங்கள் தோழர் !)


                    தமிழ்ச் சமூகத்தில் எல்லாக் காலங்களிலும் அரசியல் இருந்தது. நட்பு வட்டத்திலும் உறவுக் குழுமங்களிலும் கொள்கை அரசியல் மற்றும் கட்சி அரசியல் சார்புகள் இருந்தன. ஆனால் அவை நட்புக்கும் உறவுக்கும் இடையூறாய் நின்றதில்லை. குறிப்பாக உறவுமுறைகளில் யார் எந்தக் கொள்கை மற்றும் கட்சி சார்பு உடையவர் என்பதை முன்பெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. இதில் பெரும்பான்மையோர் எந்தச் சார்பும் இல்லாமல் அரசியல், சமூக வாழ்வில் பெரும் நாட்டம் கொள்ளாமல் இருந்தமை காரணமாக இருக்கலாம். திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற பெருங்கட்சிகளும் வேறு சிறு கட்சிகளும் இந்திய சமூகத்தை, குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தை, சொல்லிக்கொள்ளும் அளவிற்குப் பிரித்ததில்லை. சில சிறு கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் சாதி மத அடையாளங்களுடன் வந்ததில்லை. வேட்பாளர் தேர்வு முதலிய நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளிலும் சாதி மதங்களின் பங்களிப்பு இருந்தபோதும், ஒட்டுமொத்தமாக அவை தம் மீது சாதி, மதச் சாயம் பூசி கொண்டதில்லை. இவையனைத்திற்கும் மாறாக தற்காலத்தில் இரண்டே இரண்டு எதிரெதிரான அரசியல் சமூகத்தில் அரங்கேறக் காணலாம். அவற்றில் ஒன்று வெறித்தனமாக வினையாற்றுவதும் மற்றொன்று சளைக்காமல் எதிர்வினையாற்றுவதும் வாடிக்கையாகிப் போனது. இந்த மாற்றத்திற்கான காரணம் சமூகப்பார்வை உள்ள அனைவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி.


                      இந்திய ஒன்றியத்தில் பெரும்பான்மைவாதமான இந்து மதவாதம் இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே அவ்வப்போது தலை தூக்க முயன்றதை வரலாறு ஓரளவு அறிந்தவர் அறிவர். மதக்கலவரங்கள் பெரிய அளவிலோ சிறிய அளவிலோ ஆங்காங்கே நிகழ்ந்த போதும் மதச்சார்பற்ற தலைவர்களின் ஆளுமையினால் இந்நாடு உலகமே வியக்கும் மதச்சார்பற்ற ஒரு பெரிய ஜனநாயகமாக முகிழ்த்தது. அத்தகைய தன்னேரில்லாத் தலைவர்கள் வாய்த்தது நாட்டிற்கான பெரும்பேறு. ஏனைய மதவாதங்களையும் புறந்தள்ளுவதற்கில்லை. அவற்றையும் கட்டுக்குள் வைத்தது தன்னலமற்ற ஆன்றோர், சான்றோர்தம் தலைமை பண்பு. இத்தலைமைப் பண்பின் குறியீடான காந்தியார் சுடப்பட்டது மதவாதத்தில் அன்று தோற்றுப்போனவர்களின் விரக்தி நிலை வெளிப்பாடு. அக்கூட்டத்தினர் வட இந்தியாவில் தலையெடுக்க ஆரம்பித்த அதே காலகட்டத்தில் தமிழகத்தில் சமூகநீதிக்கு அடித்தளமிட்ட நீதிக்கட்சி தோன்றியது தமிழருக்கான பெரும்பேறு. பின்னர் திராவிடக் கட்சிகளாக நம் நீதிக்கட்சி ஒன்று பல ஆயிடினும் சமூகநீதி, மொழி உணர்வு போன்ற அடிப்படைக் கொள்கைகள் என்றும் சீரிளமைத் திறத்துடன் துலங்கியதும், இந்து மத வாதம் ஆரிய இனவாதம் போன்ற அழிவுக் கோட்பாடுகள் இங்கு கருவிலேயே கலைந்ததும் தமிழினத்தில் பாமரர்களைப் பொருத்தமட்டில் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்த வரம். அவ்வரம் தந்த சாமிகள் பெரியார், அண்ணா எனப் பல ஆன்றோர் பெருமக்கள். எத்துணை உயரிய கொள்கைகள் முன்னிருந்தாலும் பாமரன் பாமரன்தானே ! இலவசமாய்ப் பெற்றதன் அருமை தெரியாமல் வஞ்சனை செய்வாரிடம் விற்று விடுவானோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இக்கட்டுரை எனலாம். அவ்வஞ்சகர், முன் எப்போதுமில்லாத அளவில் சூதுவாதுகளை ஆங்காங்கே விதைக்க முனைவதே இந்த அச்சத்திற்கும் ஆதங்கத்திற்கும் காரணமாய் இருக்கலாம்.


                           சரி, தற்காலத்தில் அரங்கேறி வரும் வலதுசாரி மதவெறி, இனவெறி அரசியலுக்கு வருவோம். தொலைக்காட்சி விவாதங்களிலும், புலனப் (Whatsapp) பதிவு, முகநூல் பதிவு போன்ற சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கை ஊடகங்களிலும், நண்பர்களும் உறவினர்களும் கூடும் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் எண்ணிக்கையில் மிகச் சிலரே ஆயினும் அவர்களின் சங்கநாதம் நம் காதுகளுக்கு நாராசமாய் ஒலிப்பது தவிர்க்க இயலாத ஒன்று. சிரங்குக் கையனுக்கு சொரியாமல் இருக்க முடியாது என்பதை போல் அவர்கள் மீண்டும் மீண்டும் மாற்று மதத்தினரையும் பகுத்தறிவுவாதிகளையும் வன்மத்துடன் விமர்சிப்பதைப் பார்க்கையில் 24 மணி நேரமும் வெறுப்பு அரசியலிலேயே அவர்கள் வாழ்வது புலனாகிறது. சங் பரிவாரங்களின் ஷாகாக்களில் மூளைச்சலவை செய்யப்பட்டோர் படித்தவர் படிக்காதவர் என்ற பேத மின்றி அப்படித்தான் இருக்கமுடியும். தமிழராயிருப்பினும் தமிழின் சிறப்பைப் பேசினாலே கோபம் வருகிற அளவிற்கான மூளைச்சலவை அது. மாற்று அரசியல் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அதுவும் ஒரு கருத்து என்ற முறையில் வரவேற்கலாம். ஆனால் பாசிசம் ஒரு அரசியல் கருத்தாகவே கொள்ளத்தக்கதல்ல. மேலும் கட்சி அரசியல் பேசுவதாக நினைத்துக் கொண்டு அவர்கள் பேசுவது அறிந்தோ அறியாமலோ அவர்களின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட மதம் என்னும் விஷ வித்து. அதிலும் இவர்களைக் கவர்வதற்காக மதச் சாயம் பூசப்பட்ட உயர்சாதி அரசியல் எனும் விதையே அது. முளைக்கவிட்டால் வருணாசிரமம், மனுநீதி என்று மீண்டும் வெளிவரும் என்பது தமிழ் மாநில அளவில் அவர்களுக்குத் தலைமை ஏற்றுள்ள சில முட்டாள்களின் பிதற்றலில் தெற்றென விளங்கி நிற்பது. இந்துத்துவா என்ற பெயரைத் தாங்கியது பிராமணியமும் அரைப்பிராமணியமும் (Neo-Brahminism) என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கை மீறிப் போயிருக்கும். இவையெல்லாம் பெரியார் மண்ணில் நிகழ வாய்ப்பில்லை என்ற நமது அசட்டுத் தைரியம் வஞ்சனை செய்வாரின் பலமாக வாய்ப்பு உண்டு. இது ஹிட்லர் உலகுக்கு சொல்லித்தந்த பாடம். சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டில் அமைந்த அடிமை அரசினைக் கொண்டு அதிகாரப் பொறுப்புகளில் தங்களின் கோட்பாட்டினைத் (!) தழுவியவர்களை ஆங்காங்கே விதைத்ததும் தூவியதும் அவர்கள் நாஜிக்களிடம் கற்ற பாலபாடம். இச்சூழலில் பெரியாரையும் அண்ணாவையும் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் கொண்டு செல்வதே தமிழின உய்விற்கான வழியாக இருக்க முடியும். வலதுசாரிகளின் இன, மத, உயர்சாதி அரசியலைத் தமிழ் மண்ணில் எதிர்கொள்ள இடதுசாரிகளே இன்று கையில் எடுக்க வேண்டிய ஆயுதங்கள் பெரியார், அண்ணா போன்றோரே. இவ்விருவரும் வாழ்ந்து காட்டாத மண்ணுக்கான மார்க்சியம் உலகில் உண்டா என்ன ? இந்திய ஒன்றியத்தை காக்க நம்மால் முடியுமோ என்னவோ, தமிழ் மண்ணைக் காக்கும் கடமை தமிழராய் பிறந்த அனைவருக்கும் உண்டு.


                         உயர்சாதியினரின் வீட்டு இழவில்கூட சிதைக்குத் தீ மூட்டிய கையோடு மரத்தடியில் அமர்ந்து அந்தக் கருமாந்திர அரசியலை அவர்கள் ஆரம்பிப்பது வெறியின் உச்சம். நட்பையும் உறவையும் அவர்கள் பகைக்கவும் தயங்குவதில்லை. இத்தகையோரின் நட்பும் உறவும் நமக்கு மட்டும் இனிக்குமா என்ன ? எதிர்வினையாடலைத் தவிர வேறு வழியை அவர்கள் நமக்கு விடுவதேயில்லை. நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை எதிரிதானே தீர்மானிக்க முடியும் ? உயர்சாதி என்று வகைப்படுத்தியிருக்கும் அரைப் பார்ப்பனிய சமூகமொன்றில் பிறந்த எனக்கு இவர்களை அருகிலேயே பார்க்கக் கிடைத்ததும், சுயசாதி விமர்சனம் செய்யும் நிலை ஏற்பட்டதும் எனது துர்ப்பாக்கியம். வலதுசாரி தீவிரவாதத்துடன் இயங்குவோர் ஏனைய சாதிகளில் இல்லாமல் இல்லை. ஆனால் அத்தகையோர் ஆங்காங்கே சிதறிக் கிடக்க, உயர் சாதியினர் மட்டும் அனேகமாக ஒட்டுமொத்தமாய் அங்கே நிற்பதைக் காண்கையில் அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும். "அப்படி உங்களுக்கு என்னதான் பிரச்சினை ?" என்று அவர்களைப் பேட்டி (!) எடுத்தால், உயரிய காரணம் எதுவுமில்லை என்பது புலப்படுகிறது. உயர்சாதியினர் அறிவு நிலையிலும் உயர்ந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவாகிறது. பரவலாக அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவையே. அவை முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தினாலும் நம்மிடம் தேர்ந்த பதில்கள் இருப்பது கட்டாயமாகிறது இதோ நம் பட்டியல் :


(1) மாற்று மதத்தினர் - குறிப்பாகக் கிறித்தவர், இஸ்லாமியர் - மதம் மாறியோர், மதம் மாற்றுவோர் என்பதாலும், அரசாங்கத்தில் சிறுபான்மையினர் உரிமை என்ற ஒன்றைப் பெறுவோர் என்பதாலும், மதச்சார்பின்மை பேசுவோர் இவர்களை விமர்சிப்பதில்லை என்பதாலும் இம் மதத்தினர் மீது வெறுப்பு.

 
                        மதம் மாறியவர்கள் பெரும்பாலும் ஒரு காலத்தில் வருணாசிரமத்தினால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதும், அப்போது அவர்கள் மாறினார்கள் என்பதை விட தங்களால் விரட்டப்பட்டவர்கள் என்பதும் இந்த உயர் சாதியினர் அறிவார்களா ? எனக்குத்தெரிந்து அன்றைய நெல்லை, குமரி மாவட்டங்களில் என் சாதியினரின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டு சிஎஸ்ஐ கிறித்துவத்தை நோக்கிப் பெரிய அளவில் மதமாற்றம் நடைபெற்றது. எந்தக் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்களோ அங்கே சென்றார்கள். எங்கே கல்வியும் மருத்துவமும் கிடைத்ததோ அங்கே சென்றார்கள். விரட்டியடித்த இவர்கள் புகலிடம் தந்து அவர்களுக்கான சமூக நீதியும் வழங்கியவர்களை வெட்கமில்லாமல் விமர்சிப்பார்களா ? மேலும் 300-400 வருடங்களாய் மதம் மாற்றப்பட்டவர்கள் அவர்கள் என்றால், சுமார் 1500 வருடங்களுக்கு முன் ஆரிய வந்தேறிகளால் மதம் மாற்றப்பட்டவர்கள்தானே நாமும் ?


                         எந்த ஒரு மக்கள் திரளிலும் சிறுபான்மையினர் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்கள் தங்கள் அடையாளத்துடனும் தங்களுக்குரிய மரியாதையோடும் வாழ வழி செய்வது ஒரு ஜனநாயக அரசின் கடமை. மதச் சிறுபான்மையினர் மட்டுமின்றி மொழிச் சிறுபான்மையினருக்கும் தனிச் சலுகைகள் உள்ளது நியாயமானதே. பன்மைத்துவம் என்பது இந்திய ஒன்றிய அளவில் மட்டுமல்லாது மாநில அளவிலும் பேணப்பட வேண்டிய ஒன்றே.

                         இனவாதமானாலும் மதவாதமானாலும் நடுநிலையோர் சிறுபான்மையை விடப் பெரும்பான்மையை அதிகம் பேசுவதற்கும் சாடுவதற்கும் காரணம் உண்டு. முன்னதை விடப் பின்னது ஆபத்தானது என்பதற்கு நாஜி ஜெர்மனி, சிங்களப் பேரினவாத இலங்கை, இஸ்ரேலை ஆக்கிரமித்துப் பின் பாலஸ்தீனத்தை விழுங்க முனையும் யூத மத, இனவாதம் என்று எடுத்துக்காட்டுகளை அடுக்கலாம்.

(2) சமூக நிலையில் தாழ்த்தப்பட்டோரின் ஆதிக்கம் அலுவலகம் முதலிய இடங்களில் அளவுகடந்து போவதாகவும் இதற்குக் காரணம் இட ஒதுக்கீடு என்பதுமான இவர்களின் மனக்குறை.


                         தமிழ் நிலத்தில் சுமார் 60 வருடங்களே முழுமையாக அமலுக்கு வந்துள்ள இட ஒதுக்கீட்டையே இவர்களால் தாங்க முடியவில்லை. குறைந்தபட்சம் 1500 வருடங்களாக அவர்கள் 100 சதவீதம் ஒதுக்கி வைக்கப்பட்டதைப் பற்றி இவர்கள் வாயே திறப்பதில்லை. விழுந்தவன் எழுந்து நிற்கும்போது கம்பீரமாகத்தான் நின்று விட்டுப் போகட்டுமே ! அவன் யாரையும் எதையும் சட்டை செய்வதில்லை என்ற இவர்கள் குற்றச்சாட்டு உண்மையாயிருந்தால் கூட, அவனது எழுச்சியைக் கொண்டாடும் வகையில் அவனுக்குக் காலமும் வாய்ப்பும் தருவது சமூகத்தின் கடமை.


(3) உயர்சாதியினரின் கட்டுப்பாட்டிலும் வழிகாட்டுதலிலும் செயல்படும் ஒன்றிய அரசு சமீபத்தில் இவர்களுக்கு அளித்த 10% இட ஒதுக்கீடு இவர்களுக்கான மகிழ்ச்சி. அதைப் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் எட்டு லட்சம் என்பது இவர்களின் பரவசநிலை.

                           முதலில் இட ஒதிக்கீடு சமூகநீதிக்கானதே தவிர வறுமை ஒழிப்புத் திட்டமன்று. வறுமை ஒழிப்புத் திட்டங்களை சாதி, மத பேதமின்றி வகுத்திடுவது ஒரு அரசின் கடமை என்பது ஒரு புறம். பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அளித்த இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் உயர்சாதியினர் பாதிக்கப் பட்டனர் என்பது அபத்தம். அதாவது உயர் சாதியினர் மற்றவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் என்று பின்னப்படும் மாயை. அது உண்மையானால் இட ஒதுக்கீட்டின் பொதுப்பிரிவில் அத்தனை இடங்களையும் உயர்சாதியினர் நிரப்பியிருக்க வேண்டும். பொதுப்பிரிவில் 10 இடங்கள் இருந்தால் இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று இடங்களில் உயர்சாதியினர் வரக் காணலாம். சமீபத்தில் ஒரு அரசு வங்கிக்கான நியமனத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தகுதி வரையறை சுமார் 60% எனும்போது உயர்சாதியினருக்கான சமீபத்திய ஒதுக்கீட்டில் 28% என்பது வெட்கக்கேடு. வாய்ப்பு அளிக்கப்பட்ட அனைத்துச் சாதியினரும் தகுதியில் மேம்படுகிறார்கள் என்பதே உண்மை. சமூகத்தில் சமநிலை ஏற்படும்போது இட ஒதுக்கீட்டு முறையில் மீண்டும் மாற்றம் கொணர்வது ஜனநாயக முறையிலேயே நிகழமுடியும். வெறுப்பு அரசியலால் அல்ல. இப்போதுள்ள சமூக நீதியை ஜனநாயக முறையிலேயே நிலைநாட்டினார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் விரல் கூட ஒடுக்கியவர்கள் மீது படவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே சமூக ஒடுக்குமுறை குறித்த குற்றவுணர்வும், சாதி பேதமற்ற சமூகத்திற்கான முனைப்பும் உயர்சாதியினரிடம் அமைதல் வேண்டும். மேன்மக்களுக்கான வரையறையும் அதுவே. அதை விடுத்துக் குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி, மதத்தின் பெயரால் உயர்சாதி அரசியல் செய்வது மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது.

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 5
Link to comment
Share on other sites

"சிதைக்குத் தீ மூட்டி, நீரினில் மூழ்கி, இறந்த உறவினரின் நினைப்பு ஒழிந்தாலும், இந்த சாதி,மத இந்துத்துவ வருணாசிரமக் கருமாந்திர வெறுப்பு அரசியலின் நினைப்பு ஒழியா மன நோயாளிகளாக அலையும் கூட்டத்தை அப்பட்டமாகத் தோலுரித்து தொங்கவிட்டுவிட்டீர்கள். இந்தக் கூட்டம் உறவாக இருக்கும் பாவப் பிறவிகளுள் நானும் ஒருவன். இத்தகைய நிகழ்வுகளை நானும் கண்ணுற்று இருக்கிறேன்.

நான் ரசித்த வரிகள்: //சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டில் அமைந்த அடிமை அரசினைக் கொண்டு அதிகாரப் பொறுப்புகளில் தங்களின் கோட்பாட்டினைத் (!) தழுவியவர்களை ஆங்காங்கே விதைத்ததும் தூவியதும் அவர்கள் நாஜிக்களிடம் கற்ற பாலபாடம். இச்சூழலில் பெரியாரையும் அண்ணாவையும் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் கொண்டு செல்வதே தமிழின உய்விற்கான வழியாக இருக்க முடியும். வலதுசாரிகளின் இன, மத, உயர்சாதி அரசியலைத் தமிழ் மண்ணில் எதிர்கொள்ள இடதுசாரிகளே இன்று கையில் எடுக்க வேண்டிய ஆயுதங்கள் பெரியார், அண்ணா போன்றோரே. இவ்விருவரும் வாழ்ந்து காட்டாத மண்ணுக்கான மார்க்சியம் உலகில் உண்டா என்ன ?// Writing on the wall.

Link to comment
Share on other sites

//"சமூக ஒடுக்குமுறை குறித்த குற்றவுணர்வும், சாதி பேதமற்ற சமூகத்திற்கான முனைப்பும் உயர்சாதியினரிடம் அமைதல் வேண்டும்.//

ஒருக்காலும் நடக்காத விடயம்.  "தலையில் பிறந்தவன்; ஆக உயர்ந்தவன்" என்று குழந்தைப் பருவத்திலேயே மூளை ச் கலவையான ஆரிய பார்ப்பனக் கூட்டமும், அவர்தம் அடிவருடி சற்சூத்திர உயர்சாதி சங்கிகளும் ( நம் உறவுகள்) நாய்-வால்கள். நிமிர்த்த விழைகிறீர்கள். உங்கள் முயற்சி நடந்தால் மகிழ்ச்சிதான்.

இவர்கள் மேன்மக்கள் இல்லை. குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி, மதத்தின் பெயரால், மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட  உயர்சாதி அரசியல் செய்வது இவர்கள் பிறவிக் குணம்; அது மாறாதையா மாறாது.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரம் உண்டு. ஆக சிறந்த போர் வீரன் அவன். ஆனால் அவன் மனதில் கொண்ட அடிமை எண்ணம், விசுவாசம் என்ற பெயரால் நிரப்ப படுகிறது. ஒருவர் "மேல் இருக்க", ஒருவர் "கீழ் இருக்க" இங்கே பல என்ன ஓட்டங்கள் விதைக்க படுகின்றன.. பார்பினியம் இதனை கட்சிதமாக செய்கிறது. இதனை உணர்ந்து கொள்வதற்கே சுயமரியாதை போராட்டங்களை பெரியார் எடுத்து சென்றார். ஆனால் இன்று பார்பினியம், இதை சரியாக புரிந்து கொண்டு  சூழ்ச்சி பாதை ஒன்றை நீங்கள் கூறுவது போல் வகுத்துள்ளது. சுய மரியாதை என்பதை, சுய மதம் என்று மடை மாற்றி பார்பிணிய பீடையில் உள்ளே தள்ளுகிறது. இன்று நடப்பது அறிவு சார் போர். ஐயா, உங்களின் எழுத்துக்கள் கூரிய வாள் போன்று பார்ப்பினிய சித்தாந்ததை மேலும் கிழித்து எறியட்டும். இது நீண்ட போர். தொடரட்டும் உங்களின் நீண்ட போர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2021 at 06:09, சுப.சோமசுந்தரம் said:

முதலில் இட ஒதிக்கீடு சமூகநீதிக்கானதே தவிர வறுமை ஒழிப்புத் திட்டமன்று. வறுமை ஒழிப்புத் திட்டங்களை சாதி, மத பேதமின்றி வகுத்திடுவது ஒரு அரசின் கடமை என்பது ஒரு புறம். பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அளித்த இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் உயர்சாதியினர் பாதிக்கப் பட்டனர் என்பது அபத்தம். அதாவது உயர் சாதியினர் மற்றவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் என்று பின்னப்படும் மாயை

சரியான கருத்து.👍🏾

ஆனால் வலதுசாரி பா.ஜ.க. மோடியை ஒரு மதத்தலைவர் போன்று காண்பித்து, இந்துத்துவத்தை நிறுவனமயப்படுத்தி, இந்தியாவில் பிளவுபட்ட சமூகங்களை மேலும் பிளவுபடுத்தும். 

இந்திய மக்கள் மதத்தலைவர், சாமியார் போன்ற தோற்றப்பாட்டைக் காட்டுபவர்கள் தவறுகள் புரிந்தாலும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்பதால், மோடியும் பரிவாரங்களும் எப்படியும் தமிழ்நாட்டிலும் காலூன்றி, வலதுசாரி சிந்தனையை ஒரு பகுதி மக்களுக்கு ஊட்டிவிடுவார்கள். இதனை சமத்துவ சமூகக்கொள்கையில் அக்கறை உள்ளோர் எதிர்கொண்டு முறியடிக்கவேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

நன்று 🤝 அச்சுறுத்தும்  சூழ்நிலை மாற்றங்கள்!!

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.