Jump to content

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்ந்த மேஜர் டேவிட்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ, தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்ந்த மேஜர் டேவிட்.

 

DC2E8D14-7681-49A3-8F80-15F66073FFF9.jpeஒரு போராளியின் புனிதப்பயணம்.

தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன்.

தென்தமிழீழ எல்லையில், சிங்களத்தின் நிலப்பறிப்பில் 1963ம் ஆண்டு காலப்பகுதியில் உருவான அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்ற பழந்தமிழ் ஊரில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் என அடையாளப் படுத்தப்பட்ட இடத்தில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்திலிருந்து எழுந்த விடுதலைப் போராளிபற்றிய நினைவுப்பதிவில் தொடக்கத்தின் முதல் அத்தியாயமாக நாம் கண்ட போராளிகளில் ஒருவராக டேவிட் அவர்களின் போராளி வாழ்க்கை அமைந்திருந்தது.

 

அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாது எல்லைத் தமிழ் ஊர்களில் எழுச்சிமிகு மக்களையும் அணைத்துக்கொண்டு, கொண்ட இலட்சியத்திற்காக குறிக்கோள் தவறாது சென்றதையும் டேவிட்டின் போராளிப்பயணம் வெளிப்படுத்தியிருந்தது.

தமிழ்ப்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகப் பகுதியான இவ்வூர்களில் தமிழர்கள் என்ற அடையாளத்தில் வாழ்ந்த மக்கள் விசாலமான நிலப்பரப்பைக்கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் பசுமை நிறைந்த, தமிழர் வரலாற்றில் நால்வகை நிலங்களை உள்ளடக்கிய இவ்வூர்களில் என்றும் தமிழர்கள், தமிழர்களாக வாழ்ந்து வந்தனர்.

சிங்கள பேரினவாத அடக்கு முறைகளில் நிலப்பறிப்பு, திட்டமிட்ட குடியேற்றத்தினால் சிங்கள மாவட்டமாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்ற அம்பாறையில் தமிழர் விடுதலைக்காக எழுந்த ஆரம்பப் போராளிகளில் மேஜர் .டேவிட் அவர்களும் ஒருவராவர். லெப்.சைமன், லெப் ஜோசெப், 2வது லெப் நிசாம் ஆகிய ஆரம்பப் போராளிகளுடன் இவருடைய விடுதலைப் பயணமும் ஆரம்பமாகியது.

1983ம் ஆண்டு யூலை தமிழின அழிப்பின் மத்தியில் உருவான விடுதலையின் வெளிச்சங்களாக களமிறங்கிய மேஜர் டேவிட் இந்தியாவின் முதல் பாசறையில் பயிற்சிபெற்று வெளியேறிய நிலையில் தாய்மண் நோக்கிய பயணத்தில் விடுதலைக்காக தலைமையின் பணிப்பில் செயல்திறன்மிக்க போராளியாக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார்.

1983ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் பல இயக்கங்களின் மத்தியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளாக அறிமுகமானவர்களில் மேஜர் டேவிட் அவர்களும் இணைந்திருந்தார்.

1983ம் ஆண்டு ஆரம்பத்தில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் முதல் போராளி யோகன் (பாதர்) அவர்கள் பொறுப்பாளராகவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமு என்கின்ற போராளியின் செயல்பாடு மாவட்டத் தொடர்புகளிலும் இயக்கத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. ராமு அவர்களின் இடமாற்றத்திற்கு பின்பு, 1983ம் ஆண்டு தமிழின அழிப்பைத் தொடர்ந்து படைத்துறைப் பயிற்சிக்காக போராளிகளின் இணைப்பும், யோகனின் பயணமும் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்கள் தொடர்பாளராக செயலாற்றினார்.
முதல் பாசறை முடிவில் இம்மாவட்டத்திற்கு வந்தவர்களில் மேஜர். டேவிட் அவர்களும் ஒருவராகவிருந்தார்.
1983ம் ஆண்டு யூலை தமிழின அழிப்பைத் தொடர்ந்து கொழும்பு வெலிக்கடை, போகம்பர சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட போராளிகளில் அழிக்கப்பட்டவர்கள்போக மீதிப் போராளிகள் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டிருந்தனர். 1983.09.23 ம் நாள் அன்று தமிழ் மக்களின் ஒத்துழைப்புடன் சிறை உடைக்கப்பட்டு போராளிகள் வெளியேறியிருந்தனர்.
இவர்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் அரசியல் கைதியான நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் தப்பிப்போக முடியாத நிலையில் தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். .
நிர்மலா நித்தியானந்தன் அவர்களை சிறையிலிருந்து மீட்கும் ஒரு நடவடிக்கையை விடுதலைப் புலிகள் திட்டமிட்டபோது மேஜர் டேவிட் அவர்களும் ஒருவராக களமிறங்கினார். இது மட்டக்களப்பில் இவருடைய முதல் நடவடிக்கையாக இருந்தது. இந்த நடவடிக்கையில் மேஜர் பிரான்சிஸ் அவர்களும் முக்கியமானவராக இருந்தார். 1984. 06.10ம் நாள் அன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்த நடவடிக்கையில் நிர்மலா நித்தியானந்தன் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டார்.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களிலிருந்து முதல் பாசறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 20 போராளிகளில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு போராளிகளும் அடங்கியிருந்தனர். இவர்களில் மேஜர். டேவிட் ஒருவராகவும், லெப். சைமன், லெப். ஜோசெப் , 2வது லெப். நிசாம் போன்றவர்களும் உட்பட்டிருந்தனர்.
போராளி ஒருவர் உருவாகும் விதம், போராளியாக மக்கள் மத்தியில் அறிமுகமாகும்போது மக்களால் மதிக்கப்படும்விதம், என்பவற்றில் மேஜர். டேவிட் பொருத்தமானவராக தென்பட்டார். இவருடைய பக்குவமான போராளி வாழ்க்கையால் தேசியத்தலைவரால் அம்பாறை மாவட்டத்தின் முதல் பொறுப்பாளராகவும், முதல் தளபதியாகவும் நியமனம் பெற்று செயல்பட்டார். கிழக்கின் மூத்த போராளிகளில் ஒருவரான இவருடைய போராளி வாழ்க்கையில் கஞ்சிக்குடியாறு ஊரை அண்டியுள்ள காட்டுப்பகுதி மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பிட்ட சில போராளிகளுடன் இக் காட்டுப்பகுதியில் முகாம் அமைத்து வாழ்ந்த இவரையும், போராளிகளையும் அவ்வூர்களிலுள்ள மக்கள் விசுவாசத்துடன் நேசித்ததையும் அவதானிக்க முடிந்தது.
1983ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியான நாவற்கேணி ஊரிலும், வந்தாறுமூலையிலும், ஆரையம்பதியிலும் போராளிகள் தங்கியிருந்தனர். இவர்களினால் இம்மாவட்டத்தில்1984. 09.22 ம் நாள் அன்று மேற்கொள்ளப்பட்ட முதல் சிங்கள காவல் நிலையத்தாக்குதலிலும் மேஜர்.டேவிட் பங்குபற்றியிருந்தார்.போராட்ட வரலாற்றில் முக்கியத்துவப் பதிவைப்பெற்ற களுவாஞ்சிக்குடி சிங்கள காவல்நிலையத் தாக்குதலில் பங்குபற்றியதன்மூலம் வரலாற்றுப் பதிவிலும் மேஜர். டேவிட் இடம்பெற்றிருந்தார்.
அளவான உயரம், நிமிர்ந்தநடை, கறுப்பு நிறத்தில் சுருளான தலை முடியைக்கொண்ட அமைதியான சுபாவம், பதட்டமில்லாமல் முடிவெடுக்கும் தன்மை என்பன அடங்கிய சிறந்த போராளியான மேஜர். டேவிட் சகபோராளிகள் உட்பட மக்கள் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார்.
ஒரு போராளியின் புனிதப் பயணம், கல்லும் ,முள்ளும் நிறைந்த கடினமானதுதான் ஆனால் உறுதி தளம்பாது, உண்மை வீரனாக மக்களுக்காக, மக்களோடு பயணிப்பது என்பதில் மேஜர். டேவிட் விதிவிலக்கானவராக இருக்கவில்லை.
இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்திற்கான வரலாற்றில் வாழ்கின்ற இனங்களில் தமிழரின் சொந்த பூமியான இத்தீவில் வந்தேறு குடிகளான சிங்களவர்களைவிட பூர்வீகக் குடிகளாக தமிழர்கள் வாழ்ந்ததாக வரலாற்றுக்குறிப்புக்கள் சொல்லுகின்ற நிலையில் தற்பொழுது வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய தாயகமாகவும் சொந்த மண்ணாகவும் பேணப்படுகின்றன.
இம் மாகாணங்கள், ஆட்சியிலுள்ள சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றபொழுது, விடுதலைக்கான போராட்டங்கள் நடப்பது இயற்கையான ஒன்றாகும்.இலங்கைத்தீவின் வரலாற்றை அறிந்துகொள்வதும், எமது தன்னாட்சி உரிமைக்கான நியாயங்களைத் தெரிந்துகொள்வதும் தமிழர்களாகிய எமக்கு அவசியமான ஒன்றாகும்.
மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட முதல் தாக்குதல் தளபதி லெப். பரமதேவாவின் வீரச்சாவைத் தொடர்ந்து, 1984ம் ஆண்டு இறுதிப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் படைத்துறைத்தளபதியாக அருணாவின் வரவு அமைந்திருந்தது. இதற்கு முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக யோகன் (பாதர்), பசிர் ஆகியோர் செயலாற்றியிருந்தனர். இக்காலகட்டங்களில் பெரும்பாலான தமிழ்மக்களின், அறிவாளர்களின் ஆதரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தது.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் தளபதி அருணா அவர்களினால் நிருவாகம் ஒழுங்குபடுத்தப்பட்டபோது. தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் அம்பாறை மாவட்ட தளபதியாக மேஜர். டேவிட் அவர்களும், மாவட்ட அரசியல் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேஜர். டயஸ் அவர்களும், தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பொறுப்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிருந்தன் மாஸ்டர் அவர்களும், 1987ம் ஆண்டு இறுதிப்பகுதியில் இவருக்கு பின் அம்பாறை மாவட்ட தளபதியாக பணியாற்றிய மேஜர். அன்ரனி தாக்குதல் தளபதியாகவும் பணியில் இருந்தனர். இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொலைத் தொடர்பு பணியும் ஆரம்பமானது. இதற்காக 48 என்ற குறியீட்டுடன் அம்பாறையிலும், 46 குறியீட்டுடன் மட்டக்களப்பிலும், 45 குறியீட்டுடன் மூதூரிலும், செயல்பட தொடங்கியது என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும்
இம் மாவட்டங்களின் முதல் பயிற்சிப் பாசறை வந்தாறுமூலை ஊரை அண்டியுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஈரளக்குளம் மதிரையடி என்ற இடத்தில் நடத்தப்பட்டது.
அருணா தளபதியாக பணியிலிருந்தவேளையில், தளபதி அருணாவின் தலைமையில் நடத்தப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல்நிலையத்தாக்குதல், அம்பாறை மாவட்ட தம்பட்டை இராணுவ வழிமறிப்புத் தாக்குதலிலும், மேஜர்.டேவிட் பங்குபற்றியிருந்தார்.
1985 ஆண்டு சிங்கள ரோந்துப் படைக்கெதிரான தாக்குதல் தளபதி அருணாவின் வழிநடத்தலில் அம்பாறை மாவட்ட தளபதி டேவிட் அவர்களின் தலைமையில் நடந்தது. அக்காலத்தில் பாரிய தாக்குதலாகவும், சிங்களப் படைகளை அச்சமூட்டும் தாக்குதலாகவும் இது அமைந்திருந்தது. தளபதி சொர்ணம் அவர்களின் ஆர்.பி. ஜி உந்துகணைத்தாக்குதலில் கவாசவாகனம் தாக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில் பல படையினரும் அழிக்கப்பட்டனர். குறிப்பிட்ட சில மணித்தியாலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப் பகுதியை மீட்பதற்கு கடல் வழியைப் பயன்படுத்துமளவுக்கு சிங்களப்படை நெருக்கடியைச் சந்தித்த தாக்குதலாகும், போராளிகளின் உறுதியான போர் நடவடிக்கையைத் தெரியப்படுத்தும் தாக்குதலாகவும் அக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டன. இத் தாக்குதலில் போராளி நசார் அவர்களும், ஒரு ஆதரவாளரும் விழுப்புண்ணடைந்திருந்தனர். தம்பட்டைத் தாக்குதல் மட்-அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எழுச்சியை சிங்கள அரசுக்கும், சிங்களப் படைகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தன.
தென் தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் மேஜர். டேவிட் ஒரு தூணாக செயல்பட்டார். அதுமட்டுமல்லாமல் இவரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட போராளிகள் ஒவ்வொருவரும் பின்னாளில் சிறந்து விளங்கினார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் இலட்சியத்திற்கான பயணம் ஓர் தேசிய இனத்தின் எழுச்சியில் எழுந்த பேரலையாக அமைந்திருந்தன. இந்த நூற்றாண்டுகளில் உலகத்தில் நடத்தப்பட்ட நீதியான தேசிய விடுதலைப்போராட்டம் எமது தாய்மண்ணின் விடுதலைக்கான போராட்டமாகும். உலகம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற நிலையில், ஒரு நாட்டில் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குகெதிராக மக்கள் கிளர்ந்தெழ துணை போகின்ற இந்நாடுகள் சிறுபான்மை இனமாக விடுதலைக்காகப் போராடுகின்ற தேசிய இனத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத்தவறுவது ஏன் ? என்ற கேள்வி எங்களுக்குள் எழுகின்றது.
எந்த அணியையும் சாரா சொந்த மக்களின் பலத்துடன் அளப்பெரிய தற்கொடைகளைப் புரிந்து விடுதலைப்போர் நடத்திய விடுதலைப் புலிகள் தமிழீழத் தாய்மண்ணை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்து அதற்குத் தளபதிகளை நியமித்திருந்தனர். யாழ்ப்பாணம், வன்னிப் பெருநிலப்பரப்பு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு – அம்பாறை என வகுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கேணல்.கிட்டு, மாத்தையா, லெப். கேணல்.விக்டர், லெப்.கேணல்.சந்தோசம், லெப்.கேணல்.புலேந்திரன், அருணா, போன்றோருடன் அம்பாறை, மூதூர் போன்ற கோட்டங்களுக்கு முறையே மேஜர். டேவிட், மேஜர்.கணேஷ் ஆகியோரும் தளபதிகளாக பணிபுரிந்தனர்.

 

உணர்வோடு, உயர்ந்த இலட்சியத்திற்காக எமது தாய்மண்ணிலிருந்து எழுந்த தமிழ்த் தேசியத்தின் தலைவர் வழியில் முன்னிலையில் பின்தொடர்ந்த மேஜர்.டேவிட் போன்றவர்களின் உணர்வு, வீரம் என்றும் அளவிட முடியாதது. எதற்கும் அஞ்சாது எண்ணிக்கையில் குறைந்தளவு போராளிகளைத் தன்னுடன் இணைத்து சிங்களத்திற்கு எதிராக தாய்மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் பாதுகாப்புக்காகவும் போரிட்ட மேஜர். டேவிட் தென் தமிழீழத்தின் எழுந்த விடுதலைக்கான போராளிகளில் ஒருவராக வரலாற்றில் பதிவுசெயயப்பட்டுள்ளார்.
போராளி என்ற உணர்வுமயமான சொல்லுக்கு இணையாக வாழ்ந்த மேஜர். டேவிட் அம்பாறை மாவட்டத்தின் தொடக்கத்தின் ஆரம்பம் என்றும் குறிப்பிடமுடியும். வாழ்ந்தால் தலைநிமிர்ந்து வாழ்வோம் இல்லையேல் தலைசாய்ந்து தாய்மண்ணில் வீழ்வோம் என்று தன்மானத்துடன் களமாடி வீழ்ந்தவர்களில் மேஜர். டேவிட் அவர்களையும் இணைத்துக்கொள்வோம்.
1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சுமார் 35 போராளிகளுடன் கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியிலிருந்து வெளியேறி வந்த மேஜர். டேவிட் குழுவினரைப் பார்த்தவுடன் மண்ணின் விடுதலைக்காக தங்களை இழந்து விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்மக்கள் தனி உரிமையுடன், தன்மான உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உறுதி ஒவ்வொரு போராளியின் முகத்திலும் தென்பட்டதைப் பார்க்கமுடிந்தது.
அன்று ஒவ்வொரு போராளியிடமிருந்த அர்ப்பணிப்பு பின்பு இல்லாமல் போனதற்கு இம் மாவட்டங்களில் சுயநலமுள்ள உறுப்பினர்களின் வளர்ச்சி போராட்டத்தை அழிப்பதற்கு காரணமாகவிருந்தன.
காலத்தால் அழியாத பதிவை மேஜர்.டேவிட் பெற்றுக்கொண்டதற்கு குறிப்பிட்ட காலப்போராளி வாழ்க்கையே காரணமாகும். ஒரு போராளிக்கு சாவில்தான் ஒய்வு என்பதற்கமைய வீரத்துடன் வாழ்ந்து போனவர்களில் ஒருவராகத்தான் மேஜர். டேவிட் அவர்களை கணிக்கமுடிகின்றது.
1990ம் ஆண்டு யூன் மாதம் 11ம் நாள் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் தாய்மண் நோக்கிய சிறிலங்கா படை நகர்வினை தடுத்து நிறுத்தும் தாக்குதல் வியூகத்தை வகுக்கும் நோக்கில், பொத்துவில் பாணமை சாலையில் அமைந்துள்ள லகுகல என்ற இடத்தில், பொத்துவில் வட்ட அரசியல் பொறுப்பாளர் லெப். பாருக் (முகமது ராபிக்) அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சிங்களப் படையினரின் பதுங்கித் தாக்குதலில் 1990. 06. 15ம் நாள் அன்று இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
தமிழீழத்தில் பல ஊர்களில் பல தாக்குதல்களில் பங்கு கொண்ட மேஜர். டேவிட் தான் பிறந்த மண்ணில் தனது விடுதலைக்கான இறுதிப்பயணத்தை முடித்துக்கொண்டார்.
லெப். பாருக் பொத்துவில் மண் ஈன்றெடுத்த இஸ்லாமியத் தமிழ் வீரன். உணர்வோடு எழுந்து , தமிழ் உறவோடு கலந்து உன்னத விடுதலைப் பயணத்தில் கால் பதித்தவன். தாய் மொழி ஒன்றாக, வெவ்வேறு மார்க்கங்களில் பயணித்தும் தாய் மொழிக்காக ஒன்றிணைந்து தாய் மொழியின் விடுதலையில் களமாடி தன்னை இழந்து தமிழ்மானம் காத்தவன். அன்பும், பண்பும் நிறைந்த அரசியல் போராளியாக பொத்துவில் மக்களுக்கு பணிபுரிந்து உறவுப் பாலமாக திகழ்ந்து உயிரிலும் மேலான விடுதலைக்காக வீழ்ந்தவன். இவன் வரலாறு என்றும் அழியாது. பொத்துவில் மண்ணின் காவிய நாயகர்களில் இவனும் ஒருவனாக உயர்ந்து நிற்கின்றான்
மேஜர். டேவிட் உடன் களமாடி வீழ்ந்தவர்கள் மண்ணின் பெருமையை காத்துநிற்கின்றனர். எந்த மூலையிலும், எவ்வளவு ஆக்கிரமிப்புக்குள்ளும் வாழ்ந்த போதும், தமிழனின் பெருமையோடு வாழ்ந்த தலை சிறந்த போராளிகளை அம்பாறை மாவட்டம் பெற்றுக்கொண்டதற்கு மேஜர். டேவிட் போன்றவர்களின் தளபதி நிலையும், தளராத மனஉறுதியும் மானங்கெட்டு மண்டியிடாத தன்மையும் அளவுகோலாக இருந்தது.
மேஜர் டேவிட் தளபதியாக இருந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் வீரச்சாவடைந்தவர்களான, பாண்டிருப்பை சேர்ந்த 2ம் லெப் கனெக்ஸ் (ஞானமுத்து பேன்ட் வேலன்), ராஜ்குமார் (நல்லதம்பி சந்திரதாஸ்).
கல்முனையை சேர்ந்த விஸ்வம் (முத்துலிங்கம் கருணாநிதி) , ராஜேஸ் (இராசையா ஜெகநாதன்) ,நெல்சன் (சின்னதுரை உதயகுமார்), பரிசுத்தம் (கணபதிப்பிள்ளை அத்மராஜா), பன்னீர் (இரத்தினம் பன்னீச்செல்வம்),லெப். கமலன் (சிவசுந்தரம் இராசநாயகம்), லெப். விக்கிரம் (சண்முகம் முத்துராமன்).
காரைதீவை சேர்ந்த நாதன் (இளையதம்பி பாக்கியராஜா), சுந்தர் (நல்லதம்பி சுந்தரலிங்கம்), அஜந்தன் (சீனித்தம்பி குணசிங்கம்), குரு (சீனித்தம்பி பத்மநாதன்), 2ம் லெப் கல்கி (சாமித்தம்பி குகநாதன்), சுமன் (துரைராஜா ஜெயக்குமார்), திருமால் (வெள்ளைக்குட்டி துரையன்), நந்தன் (செ. குலசிங்கம்).
வீரமுனையை சேர்ந்த கோபு (சண்முகம் இளங்கோ)
மத்திய முகாமைச் சேர்ந்த மணி (இளையதம்பி மாசிலாமணி)
அக்கரைப்பற்றைச் சேர்ந்த கப்டன்.பாருக் (அகமது லெவ்வை முகமது கனிபா), ரவி (தேவராசா), 2ம் லெப் ரமேஸ் (சி, லோகநாதன்), சந்திரன் (இ.சந்திரன்)
பனங்காடுவை சேர்ந்த சுதர்சன் (ஐயம்பெருமாள் கருணாகரன்),
தம்பிலுவில்லைச் ரவிக்குமார் (ம. புண்ணியமுர்த்தி), பவான் (கிருஷ்ணபிள்ளை சுவேந்திரராஜா), நிலம் (மயில்வாகனம் சிவகுமார்), லெப் வன்னி (வேலுப்பிள்ளை வன்னியசிங்கம்).
திருக்கோயிலைச் சேர்ந்த தவம் (ஜெயரத்தினம் தவராஜா), விஜயன் (தம்பிராஜா முத்துலிங்கம்), ரகு (செல்லத்தம்பி யோகராஜா), ரோனி ஐயர் (வேலுப்பிள்ளை பூபாலபிள்ளை).
தாண்டியடியைச் சேர்ந்த அசோக் (தம்பியப்பா சித்திரவேல்)
பொத்துவில்லைச்சேர்ந்த கப்டன்நகுலன் (இளையதம்பி அருளானந்தம்)
ஆகியோரையும் எமது தமிழினமும், எமது தாய்மண்ணும் வரலாற்றில் பெற்றுக்கொண்டது. இவர்களைப் போன்று எமது மண்ணில் வாழ்வது தொடர்ந்தால்தான் எமது உரிமையை நாம் பெற்றுக்கொள்ள முடியும். சுயநலம் அகன்று, தமிழ் நலன் ஒன்றே வாழ் நலமாக இருக்கின்றபோது எமது வரலாறு காட்டிய வழியில் இலட்சியத்தை வெல்லும்வரை ஓயாது தொடரமுடியும்.
காலவோட்டத்தில் தமிழ்மக்களின் பதிலில் ………………
தமிழ்காந்CDC46A1B-A67E-4138-AD23-9D9CAECA35FA.jpe

 

https://www.meenagam.com/தமிழர்கள்-தலைநிமிர்ந்து/

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.