Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

`உண்மையான போராளி அவர்!' - ஐ.ஏ.எஸ் கனவுக்காக ஆக்ஸிஜன் உதவியுடன் போராடிய லத்தீஷா மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`உண்மையான போராளி அவர்!' - ஐ.ஏ.எஸ் கனவுக்காக ஆக்ஸிஜன் உதவியுடன் போராடிய லத்தீஷா மரணம்

லத்தீஷா

லத்தீஷா

``எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். என்னால் முன்னேறிச் செல்ல முடியும் என்ற உந்துதல் தான் நம்மை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும்” - இது லத்தீஷா உதிர்த்த வார்த்தைகள்.

``ஒரு விஷயத்தைதான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். நெருக்கடி சூழ்நிலைகளை தகர்த்து வெளியில் வருவதற்கு நாம் தயாராக வேண்டும். எதற்காகவும் பின்வாங்காமல், எப்போதும் பாசிட்டிவ்வாக சிந்திக்க வேண்டும். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என முடிவெடுத்த பிறகு, எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்க வேண்டும். மனச்சோர்வுகளுக்கு அடிமையாகிவிடக்கூடாது”.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவள் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் லத்தீஷா உதிர்த்த வார்த்தைகள் இவை. அவர் இதைச் சொல்லி ஓராண்டு கூட ஆகவில்லை. அதற்குள் லத்தீஷாவின் மரணச் செய்தி வந்துள்ளது.

லத்தீஷா
 
லத்தீஷா

கேரள, கோட்டயம் மாவட்டம் எருமேலி பகுதியைச் சேர்ந்தவர் லத்தீஷா(27 வயது). பிறக்கும்போதே ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்பெக்டா (Osteogenesis Imperfecta) எனும் அரிய வகையிலான நோயினால் பாதிக்கப்பட்டார். சராசரி அசைவுகள் கூட, அவரது எலும்புகளை முறித்துவிடும். மற்றவர்களின் உதவி இல்லாமல், லத்தீஷாவால் எந்த வேலையும் செய்ய முடியாது.

2 அடி உயரம், 14 கிலோ எடை, 26 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகள், சுவாசப் பிரச்னை (ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசிப்பார்), வீல்சேர் வாழ்க்கை என்று லத்தீஷாவின் இயக்கத்தை முடக்க அடுத்தடுத்து பிரச்னைகள் வரிசைகட்டின. ஆனால் லத்தீஷா முடங்கவில்லை.

 

எம்.காம் பட்டதாரியான லத்தீஷாவுக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று ஆசை. 2019-ம் ஆண்டு ஆக்ஸிஜன் உதவியுடன் அவர், திருவனந்தபுரத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய போதுதான் லத்தீஷா வெளி உலகுக்கு அறிமுகமானார். உடல்நலக்குறைபாடு என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்று கூறிய லத்தீஷா, அந்தக் கொடிய நோய்களின் தாக்கத்தை கடந்து, தனது லட்சியத்தை நோக்கி எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்தார்.

ஆஸ்டியோஜெனெஸிஸ் இம்பெர்பெக்டா நோய்க்கு எந்த மருத்துவமும் இல்லை. இதனால், சில ஆண்டுகளாக சுவாசப் பிரச்னைக்குத்தான் லத்தீஷா சிகிச்சை பெற்று வந்தார்.

லத்தீஷா
 
லத்தீஷா

24 மணிநேரமும் ஆக்ஸிஜன் சப்போர்ட் வேண்டும், இல்லையென்றால் இதயத்துக்குப் பிரச்னையாகிவிடும் என்ற சூழ்நிலையில்தான் வாழ்ந்து வந்தார். லத்தீஷாவுக்கு இசை மற்றும் ஓவியம் மீதும் அதிக ஆர்வம். இதற்காக கடந்தாண்டு யூடியூப் சேனல் தொடங்கியிருந்தார். ``ஐ.ஏ.எஸ் ஆன பிறகு சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும். முக்கியமாக, குறைபாடுள்ள குழந்தைகளுக்குக் கற்கும் வசதிகளைச் செய்துத்தரவேண்டும்” என்பதை வாழ்நாள் லட்சியமாக வைத்திருந்தார். பல பள்ளி, கல்லூரிகளில் சென்று உரையாடியதால், பல மாணவர்களுக்கு லத்தீஷா முன் மாதிரியாகவும் இருந்தார்.

 

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியாவிடினும், தொடர்ந்து அதற்கு முயன்று வந்தார் லத்தீஷா. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கூட்டுறவு வங்கியில் வேலை கிடைத்துள்ளது. ஆனால், உடல்நலக்குறைபாடு காரணமாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.

அம்மாவுடன் லத்தீஷா
 
அம்மாவுடன் லத்தீஷா

கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டதால், லத்தீஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். `லத்தீஷா உண்மையான போராளி' என்று சொல்லிப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

``எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நாம் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். என்னால் முன்னேறிச் செல்ல முடியும் என்ற உந்துதல் தான் நம்மை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும்” - இதுவும் லத்தீஷா உதிர்த்த வார்த்தைகள் தாம். நீங்கள் கொடுத்த தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் இந்த உலகம் எப்போதும் உங்களை நினைவுகொள்ளும். ஓய்வெடுங்கள் லத்தீஷா!

 

 

https://www.vikatan.com/news/india/kerala-ias-aspirant-latheesha-who-suffered-from-a-rare-disorder-passed-away

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.