Jump to content

வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம் வாழ்வியலில் எல்லாமே செயற்கையாகப் போய்விட்டது.

உணவிலிருந்து உறவு வரை எல்லாமே செயற்கை

செயற்கையாகவே வாழப் பழகிவிட்ட நமக்கு

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கத்தமிழர் வாழ்வியல் வியப்பளிப்பதாகவுள்ளது.

கடற்கரை ஓரம்!
நாவல் மரத்திலிருந்து நாவல் கனி வீழ்ந்து கிடக்கிறது,
கரிய கனியாயினும் இனிய கனி ஆதலால் அதனை வண்டு மொய்த்திருக்கிறது.
வண்டும் கருமை நிறம் கொண்டது ஆதலால், கனியைக் உண்ண வந்த நண்டு வண்டைப் பிடித்தது.
நண்டிடமிருந்து தப்பிக்க. வண்டு ஒலி எழுப்பியது. வண்டின் ஒலி இனிய யாழோசை போல இருக்கிறது.

அவ்வேளையில் இரைதேடி வந்தது நாரை.

நாரைக்கு அஞ்சிய நண்டு வண்டை விட்டு நீங்கிச் சென்றது.

இவ்வழகிய காட்சி அகவாழ்வியலை இயம்ப துணைநிற்கும் சங்கப்பாடலாக இதோ...

“பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
5 கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
10 ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர்
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே!“


நற்றிணை 35. (நெய்தல்)
அம்மூவனார்.

கூற்று - மண மனைப் பிற்றைஞான்று புக்க “தோழி நன்கு ஆற்றுவி்த்தாய்“ என்ற தலைமகற்கு சொல்லியது.

காதலுக்குத் துணைநின்ற தோழியிடம் தலைவன் பிரிவின்போது நீ தலைவியை நன்கு ஆற்வி்த்தாய் என்றான். அதற்கு தோழி தலைவியின் பொருட்டு நான் தாய்க்கு அஞ்சினேன். அவளின் பிரிவாற்றைமை நீங்க நீயே விரைந்து வந்து காத்தாய் என்றாள். மேலும் தலைவி உன் சிறு பிரிவையும் தாங்கமாட்டாள். அதனால் அவளை நீங்காது இருத்தல் வேண்டும் என்கிறாள்.

பாடலின் விளக்கம் உரையாடலாக

தலைவி - வா தோழி! வா! உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களானது..

தோழி - ஆம் நீண்ட நாட்களானது.. எப்படியிருக்கிறாய்..?

தலைவி - எனக்கென்ன நான் நன்றாக இருக்கிறேன்.

தலைவன் - வா தோழி நன்றாக இருக்கிறாயா..?

தோழி - நன்றாக இருக்கிறேன். தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்..?

தலைவன் - நான் நன்றாக இருக்கிறேன்..

தோழி - திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது..?

தலைவன் - மிகவும் நன்றாக இருக்கிறது. மகிழ்வாக உள்ளோம். இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் நீயல்லவா..

தோழி - நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன்.

தலைவன் - நாங்கள் காதலித்த போது எனது பிரிவில் வாடியிருந்த தலைவியின் வருத்தத்தைப் போக்கி நன்கு ஆற்றுவித்தாய் இந்த உதவியை மறக்க முடியுமா..?

தோழி - நீயே விரைந்து வந்து காத்தாய் அவளின் பிரிவின் வருத்தத்தைப் போக்கினாய். இதில் எனது பங்கு என்ன இருக்கிறது..

தலைவன் - உனது பேச்சில் உனது பெருந்தன்மை வெளிப்படுகிறது.

தோழி - பொங்கி எழும் கடல் அலை மோதிய மணல் அடுத்த கடற்கறை. அங்கு நாவல் மரத்திலிருந்து கனிகள் விழுந்திருக்கும். அக்கனிகளை மொய்தவாறு கரிய வண்டினங்கள் இருக்கும். கரிய வண்டுக்கும், கரிய நாவற்கனிக்கும் எவ்வித மாறுபாடும் இல்லாது இருக்கும். நாவற்கனியைக் கொள்ள வந்த நண்டு கரிய வண்டை பழம் என்று எண்ணிக் கைக்கொள்ளும். வண்டினங்களோ நண்டிடமிருந்து தப்பிக்க யாழ்போல ஒலி எழுப்பும். அப்போது இரைதேடி அங்கு வந்த நாரையைக் கண்டு நண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கியது. இத்தகு கடல்துறை விளங்கும் மாந்தை நகரம் போன்றது இவளின் நலம்.

நீ களவுக்காலத்தில் சிறிது நீ்ங்கினாலும் இவள் தாங்காது பசலை கொள்வாள்.

மது அருந்தி பழக்கப்பட்டோர் மது கிடைக்காதபோது மனம் வருந்தி வேறுபாடு கொள்வர். அதுபோல உனது பிரிவை சற்றும் தாங்கமாட்டாள் இவள் அதனால் இவளை நீங்காது வாழவேண்டும்..

தலைவன் - நான் இவளை நீங்குவேனா…!!

தோழி - மகிழ்ச்சி!

உள்ளுறைப் பொருள் -

நாவற்கனி - தலைவி.
வண்டு - தோழி.
நண்டு - பெற்றோர்.
நாரை - தலைவன்.

கனியை வண்டு மொய்த்தது போலத் தலைவியைத் தோழி சூழ்ந்திருந்தாள்.
நண்டாகப் பெற்றோர் காதலைத் தடுக்க முயல நாரையாகத் தலைவன் வந்து தலைவியின் இற்செறிப்புத் துயர் நீக்கித் வரைவு (திருமணம்) மேற்கொண்டான்.

சங்கப் புலவர்கள் சங்ககால வாழ்வியலை எடுத்தியம்ப இயற்கையைத் துணையாகக் கொண்டார்களா..?

இயற்கையை எடுத்தியம்ப சங்ககால வாழ்வியலைத் துணையாகக் கொண்டார்களா..?

என வியக்கும் வகையில் சங்கஇலக்கியங்களில் இயற்கை வாழ்விலோடு கலந்திருக்கிறது.https://eegarai.darkbb.com/t149093-topic

 
 
 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.