Jump to content

பிறிதின் நோய் தந்நோய் - சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                             பிறிதின் நோய் தந்நோய்

                                                                                                                                 - சுப. சோமசுந்தரம்

நம் கதாநாயகன் ஓர் ஆசிரியர். எதிலும் படிம நிலை கொண்டே பழகிய உலகம் அவரைப் பேராசிரியர் என்று விளிக்கலாம். அவரோ, "ஆசிரியரில் என்ன பெரிய ஆசிரியர், சிறிய ஆசிரியர் ?" என்று கேட்கும் தன்மையர் என்பதால், ஆசிரியர் என்பதே அவருக்கு ஏற்புடைய அடையாளம். தோழர்களின் சகவாசம் மனிதனை மனிதனாக மட்டுமே அடையாளப்படுத்தும் ஆற்றல் பெற்றது என்பதற்கு அவரே தரச்சான்று. தந்தையார் அடிக்கடி இடமாற்றலாகும் பணியில் இருந்தமையால் இளம் வயதில் பாட்டன் - பாட்டியிடம் சிறிது காலம் வளர்ந்தவருக்கு, அவர்களது பரிவிற்கும் பாசத்திற்கும் சற்றும் குறைவில்லாத தாய் தந்தையின் அரவணைப்பில் பெருங்காலம் கழிந்தது. இஃது மானிடத்தை நோக்கிய அவரது மென்மையான உணர்வுகளுக்கு அடித்தளமிட்டது எனலாம். இயற்கையாகவோ அல்லது நல்லாசிரியர் சிலரின் ஆளுமையாலோ அவருக்கு இலக்கிய ஆர்வம் இளமையிலேயே அமையப்பெற்றது. ஈது அவரது ஆழ்மனதில் பதிவான மென்மையை மேலும் செம்மைப்படுத்தி இருக்கக்கூடும். ஏன் இந்தப் பீடிகை ? இவைதாம் இக்கதைக்கு அவரை நாயகர் ஆக்கியவை என்பதால். இக்கதையை மனத்திரையில் விரித்தால், காட்சிகள் இரண்டே இரண்டுதாம்.

காட்சி 1 : ஆசிரியரின் மகளுக்கு அவள் விருப்பப்படியே நல்ல வரன் அமைந்தது. "இரு மனங்கள் இணைய அந்த இரு மனங்கள் போதும். இரு குடும்பங்கள் இணைய அந்த இரு குடும்பங்கள் போதும். அப்புறம் எதற்காக மேளதாளம், பந்தல், பகட்டு எல்லாம் ?" எனக் கேட்பவள் மகள். இவர் வளர்ப்பு வேறு எப்படிச் சிந்திக்கும் ? எண்ணிய எண்ணியாங்கு ஓரளவு வாய்க்கப் பெற்றாள் அவள். கொரோனா பெருந்தொற்று இந்திய ஒன்றியத்தில் பரவத்தொடங்கிய நேரம். மணமகன் வீட்டார் கேட்டதற்கு இணங்க திருமண நாளைச் சிறிது தள்ளிப் போட்டார்கள். ஆகையால் மகள் நினைத்த அளவு மிகவும் எளிமையாக நடைபெறாவிட்டாலும் பெரும் ஆடம்பரம் இல்லாமல் திருமணம் இனிதே நடைபெற்றது.
மகளின் திருமணம் உறுதி செய்யப்பட்ட கொரோனா ஆரம்பக் கட்டத்தில் இவரது மாணவி ஒருத்தி தனது திருமண அழைப்பிதழை கொடுத்துச் சென்றிருந்தாள். அவள் படிப்பிலும் பண்பிலும் சிறந்தவள். பொருளாதார நிலையில் வசதிக் குறைவுதான் எனினும், அவளது சிறப்புகளை உணர்ந்த நல்ல வசதி படைத்த மணமகன் வீட்டார் எவ்விதப் பொருளாதார எதிர்பார்ப்புமின்றி மகிழ்ச்சியுடன் மணம் பேசினர். அவர்களே திருமணத்தை நடத்துவதால் பெரிய அளவிலான திருமண ஏற்பாட்டிற்குக் கட்டியங் கூறியது அவள் தந்த திருமண அழைப்பிதழ். திருமணம் குறிக்கப்பட்ட தேதியில் எதிர்பாராமல் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், திருமணத்தைத் தள்ளிப் போடுவதை இருவீட்டாரும் விரும்பவில்லை போலும். வீட்டில் உள்ளவர்களையும் சேர்த்து பத்துப் பேருக்கும் குறைவானவர்களை வைத்து, மணமகன் வீடு அமைந்த தெருவில் இருக்கும் பூட்டிய சிறிய கோவிலின் முன் வைத்துத் திருமணம் நடைபெற்றது. அதாவது நமது ஆசிரியரின் மகள் விரும்பிய அளவிலான திருமணம் அம்மாணவிக்கு நடந்தேறியது.
மிகப்பெரிய அளவிலான ஆடம்பரமான அந்த அழைப்பிதழைத் தந்தபோது தமது மாணவியின் முகத்தில் நிறைந்திருந்த பூரிப்பு அவரது நினைவில் நிழலாடியது. அது எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் மணமாலையின் நறுமணமாக இருக்கலாம்; அந்த வெண்புரவிக் கனவின் விளைவாக மட்டுமே இருக்கலாம். ஒரு வேளை அவரது மகளைப் போல அம்மாணவியும் ஆடம்பரத்தை விரும்பாதவளாகவும் இருக்கலாம். ஆனாலும் அவர் மனம் படபடத்தது - வாழ்வின் கசப்பான நிதர்சனத்தில் தன்னால் எண்ணிப் பார்க்க இயலாத அளவிலான திருமண விழா கைகூடவில்லையே; வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்தது போலானதே என்று அவள் ஏக்கம் கொண்டிருப்பாளோ என்று. திருமண நிகழ்வு வெகு சாதாரணமாக நடந்தேறினாலும், உலகில் யாருக்கும் அமையாத சீரும் சிறப்புமான மணவாழ்வு அவளுக்கு அமைந்திட வேண்டும் என்று அவரது மனம் வெறும் சம்பிரதாயமாக வாழ்த்தாமல் அதற்காக ஏக்கமே கொண்டது. தம் மகளின் நிறைவேறிய ஆசைக்காக மகிழ்ந்த அதே மனம், அவரது கற்பனையேயானாலும் நிறைவேறாத தம் மாணவியின் கனவிற்காக இனம் புரியாமல் அழுதது.

காட்சி 2 : மணமான அவரது மகள் ஒரு வருடத்தில் ஒரு பேத்தியை அவரது கைகளில் தவழவிட்டாள். மருத்துவமனையில் மகள் தங்கியிருந்த அறைக்கு அருகில் அவரது நண்பரின் உறவுக்காரப் பெண் மகப்பேற்றின் பொருட்டுத் தங்கினாள். அவரது பேத்தி பிறந்த ஒரு நாள் முன்னர்தான் அப்பெண்ணுக்குக் குழந்தை பிறந்திருந்தது. எட்டு மாதத்திலேயே பிறந்து விட்டதால், அப்பெண்ணின் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. ஏதோ மருத்துவக் காரணத்தால் இரண்டு நாட்களில் அக்குழந்தை இறந்து போனது. திருமணமாகி ஐந்து வருடக் காத்திருப்புக்குப் பின் எட்டு மாதம் கருவில் சுமந்த கனவு கானல் நீரானது. அறுவை சிகிச்சை மூலம் பெற்றதால் அப்பெண்ணினால் மனம்விட்டு அழவும் முடியவில்லை.
இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப விடுக்கப்பட்டனர். அப்பெண் முதலில் மருத்துவமனை வாயிலில் நின்ற அவர்களது காரை நோக்கித் தன் உறவினர்களுடன் சென்று விட்டாள். இதனை அறியாத நமது ஆசிரியர் தமது மகளையும் பேத்தியையும் உறவினர்களுடன் வெளியே அழைத்து வந்தார். அப்போது ஒரு இளம் பெண் வந்து, "தவறாக நினைக்காதீர்கள். ஒரு ஐந்து நிமிடம் நீங்கள் தாமதித்து வெளியே வரலாமா ?" என்று வேண்டினாள். நிலைமையைப் புரிந்து கொண்ட ஆசிரியரும் மகளும், "ஓ ! தாராளமாக" என்று பின்தங்கினர். கனவைத் தொலைத்த அப்பெண் கனவைச் சுமந்து வரும் இவளைக் காணும்போது தன்னிலையிரக்கம் கொள்வதைத் தவிர்க்கலாமே ! வயதில் அவளும் சின்னப் பெண்தானே ! சிறிது நேரம் கழித்து ஆசிரியரும் மகளும் வெளியே வந்தபோது லேசான மழைத் தூறல் ஆரம்பித்திருந்தது. மருத்துவமனைக்கு வந்திருந்த ஓர் இளைஞர் தமது கையில் இருந்த குடையைக் குழந்தைக்குப் பாதுகாப்பாக கார் வரை பிடித்து வந்தார். ஆசிரியர் அந்த இளைஞருக்கு வெகுவாக நன்றி சொல்லி காரைக் கிளப்பினார். சிறிது தூரம் சென்றதும் மகள் சொன்னாள், "அப்பா ! குழந்தைக்குக் குடைபிடித்து வந்தவர்தான் அந்தப் பெண்ணின் கணவர் ". ஆசிரியருக்கு அடிவயிற்றில் ஏதோ செய்தது. காரின் கண்ணாடியில் விழுந்தோடிய சாரலை வைப்பர் துடைத்துக் கொண்டிருக்க, தம் கண்ணை மறைத்த நீரைத் துடைக்கப் போராடினார். அக்கணம் அவர் அப்பெண்ணுக்குத் தாயுமானார். வீட்டிற்கு வரும் புதிய வரவை மகிழ்வாய்க் கைகளில் சுமந்து வந்த அவர், தம் கனத்த இதயத்தை இதயத்திலேயே சுமந்து வந்தார்.

மேற்சொன்ன இரு காட்சிகளும் ஆங்காங்கே நாம் கடந்து செல்பவைதாம். அவற்றின் தாக்கம் வலியதா, எளியதா என்பது அவரவர் தீர்மானிப்பது. தம் மாணாக்கர்க்கு
"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை"
என்ற குறளுக்கு உரை சொன்ன ஆசிரியர், தாமே அக்குறளின் உரையானார். முன்னர் நாம் கூறியது போல பாட்டன்-பாட்டியிடம் பாடம் பயின்றவர், இலக்கியம் உணர்ந்தவர், உரிய பருவத்தில் தோழர்களால் வளர்க்கப்பட்டவர் அப்படித்தான் இருக்கமுடியும்; அப்படித்தான் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளைகளில் வாழ்க்கை எந்தத் திசையில் பயணிக்கின்றது என்ற சந்தேகம்  எனக்கு வருவதுண்டு! இருப்பினும் அது செல்லும் திசையை மாற்றும் வல்லமை எனக்கு இல்லையே என்னும் ஆதங்கமும் வந்து போகும்!

இப்போதெல்லாம்....அந்த வல்லமை எனக்கு இருந்திருந்தால்....மனித வாழ்க்கை ஒரு கூட்டில் வாழுகின்ற கோழியின் வாழ்க்கை போலத் தான் அமைந்திருக்கும் என்று புரிந்து கொள்ளுமளவுக்குப் பக்குவம் வந்திருக்கின்றது!

உங்கள் கதையும் எனது நம்பிக்கையை உறுதிப் படுத்துகின்றது!

மிகவும் மனதைப் பாதித்த ஒரு கதை உங்களது....சுனாப்  பானா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை தொட்ட கதையை… விபரித்த விதம் அழகு.

Link to comment
Share on other sites

அருமையான நடை 

செழுமையான கருத்து 

நன்று சோமு 🤝

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படைப்பு ஐயா. 

கீழே “யாவும் கற்பனை” இல்லாததை கண்டு நாமும் ஆசிரியர் போல் தாயுமானோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அருமையான படைப்பு ஐயா. 

கீழே “யாவும் கற்பனை” இல்லாததை கண்டு நாமும் ஆசிரியர் போல் தாயுமானோம்.

சே அவர்களுக்கு,

அனைத்தும் உண்மை. நடந்த உண்மையைத் தவிர வேறில்லை. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்கத்திற்கு பேராசானுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்புக்கு நன்றி ....அருமையான படைப்பு 

Link to comment
Share on other sites

குறள் 315

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 
தந்நோய்போல் போற்றாக் கடை.
[ அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை ]
 
அறிவினான் - ஒருவருடைய கற்றறிவு, நோற்றறிவு இவற்றால்
ஆகுவ துண்டோ - ஆகக்குடிய (ஆக்குவது), பெறக்கூடிய பயனேதும் உண்டா?
பிறிதின்நோய் - மற்றவர்களின் (பிற உயிர்களை சேர்த்து) துன்பத்தினை
தந்நோய்போல் - தனக்கே உற்றார் போல எண்ணி
போற்றாக் கடை - அவர்களை அவற்றிலிருந்து காப்பாற்றாமல் இருந்தால்
 
முழுப்பொருள் (நன்றி: InterestingTamilPoems)
அறிவினான் = அறிவினால்
 
ஆகுவ துண்டோ = ஆகுவது உண்டோ ?மிக மிக கவனத்துடன் சொல்லப் பட்ட சொல். ஆகுவது என்றால் ஆக்குவது, செய்வது, செயல் படுவது. நிறைய பேர் மற்ற உயிர்களின் துன்பம் கண்டு இரங்குவார்கள். ஐயோ பாவம் என்று பரிதாபப் படுவார்கள். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய மாட்டார்கள். வெறும்  அன்பு உணர்வும், அருள் உணர்வும் மட்டும் போதாது. மற்ற உயிர்களின்  துன்பத்தை  போக்க ஏதாவது செய்ய வேண்டும். 
 
நான் மற்ற உயிர்களை  துன்பம் செய்யாமல் இருக்கிறேன், அது போதாதா என்றால் போதாது. அது பூரணமான அறிவு அல்ல.
 
மற்ற உயிர்களின் துன்பம் கண்டு பரிதாபப் படுகிறேனே அது போதாதா என்றால் ...போதாது. அது முழுமையான அறிவு அல்ல.
 
மற்ற உயிர்களின் துன்பத்தை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும். அதுதான் அறிவு. ஆக்க பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்.    
 
பிறிதின்நோய் = நோய் என்றால் துன்பம். (நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் என்பது வள்ளுவம் ). பிறரின் என்று சொல்ல வில்லை. பிறிதின் என்று சொன்னார். புல், பூடு, புழுக்கள், பூச்சிகள், பறப்பன, நீர் வாழ்வன, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எல்லாவற்றிற்கும் வரும் நோய்.  
 
தம்நோய்போல் போற்றாக் கடை.= தனக்கு வந்த துன்பம் போல் போற்றி அதை  நீக்கா விட்டால் ? போற்றி என்றால் பாதுகாத்தல், கவனமாக காப்பாற்றுதல்.
 
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் உள்ளம் அறிவின் பாற் பட்டது. வள்ளலாரை விட ஒரு படி மேலே போய் , வாடிய பியரை கண்டபோது நீயும் வாடிப் பயன் இல்லை, அதுக்கு தண்ணி ஊத்து என்கிறார் வள்ளுவர். அது அறிவு.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.