Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு

 
இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேரிழப்பாகும் – ஆர்த்தீகன்
இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு சொக்கலிங்கம் யோகநாதன்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் பணிப்பாளரும், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியவரும், சிறந்த சமூகப் பணியாளருமான நாதன் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் யோகநாதன்(73) அவர்கள், கோவிட்-19 நோய் காரணமாக கடந்த 5 ஆம் நாள் காலமாகி விட்டார்.  

அடக்குமுறைக்கு உள்ளாகும் இனத்திற்கும், போரை எதிர் கொள்ளும் மக்களுக்கும் புனர்வாழ்வு என்பது அத்தியாவசியமானது. அவர்கள் இழக்கும் வாழ்கையையும், வாழ்வாதாரத்தையும் மீண்டும் நிர்மாணம் செய்வதே புனர்வாழ்வுச் செயற்பாட்டின் பணி.

இதன் தேவையை உணர்ந்து, விடுதலைப் புலிகளால் தனியான கட்டமைப்பாக 1980 களின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டதே தமிழர் புனர்வாழ்வுக் கழகம். இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகத் தான் தனது பணியை ஆரம்பித்தது.

அன்றைய காலகட்டத்தில் அதனை வழிநடத்துவதற்கு ஏற்ற ஆளுமையுள்ளவராகத் திகழ்ந்தவர் தான் நாதன் அவர்கள். எல்லோரையும் ஒருங்கிணைக்கும் அவரின் பண்பு, மக்களுடனும், ஏனைய அமைப்புக்களுடனும், நாடுகளுடனும் தொடர்பாடல்களை ஏற்படுத்தி, அவர்களை ஒருங்கிணைத்து செயற்பட உதவியது. மக்களின் புனர்வாழ்வை மேம்படுத்தும் திறன், அதனை நிர்வகிக்கும் திறன், பணியாளர்கள் மற்றும் மக்களுடன் களத்தில் இறங்கி பணியாற்றும் தன்மை என்பன அவரைத் தனது பணியை முன்னகர்த்த உதவிய காரணிகள்.

சமூகத்தின் மீதான அக்கறை என்பது அவரிடம் சிறுவயதில் இருந்தே துளிர்விட்ட பண்பு. அரசியல் ஆதரவுள்ள குடும்பப் பின்னணியில் இருந்து உதித்த அவர், சிறுவயதிலேயே தமிழ் மக்களின் அரசியல் தொடர்பான பணியை ஆரம்பித்திருந்தார்.

மாவை. சேனாதிராஜா தலைமையிலான தமிழரசுக் கட்சியின் இளைஞர் பேரவையில் 1970 களில் செயற்பட்டிருந்தார். மாவை. சேனாதிராஜா மற்றும் காசி ஆனந்தன் ஆகியோர் சிறை சென்ற சமயத்தில்  அதன் தலைவராக சந்ததியாரும், செயலாளராக நாதனும் செயற்பட்டனர். எனினும் பின்னர் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அதில் இருந்து விலகி, இறைகுமாரன், சந்ததியார் மற்றும் வாசுதேவா ஆகியோருடன் இணைந்து ‘இளைஞர் பேரவை விடுதலை அணி’யை உருவாக்கினார்.

தனது சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு எப்போதும் இருந்ததுண்டு. 1970 களில் தெல்லிப்பளையில் உள்ள மகாதனையில் ஊர் மக்களுக்காக ஒரு வாசகசாலையை நிறுவினார். அதனை அன்றைய காங்கேசன்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு வி. செல்வநாயகம் அவர்கள் திறந்து வைத்திருந்தார்.

1971 ஆம் ஆண்டு தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, இலங்கை முழுவதற்குமாக இடம்பெற்ற உதை பந்தாட்டத்தில் வெற்றி பெற்றதைப் போற்றும் வண்ணம் மகாஜனா உதை பந்தாட்ட சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்ட பெருமையும் இவரையே சாரும்.

1970 களின் இறுதி நாட்களில் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போது, வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைக்கும் நோக்கத்துடன் படித்த இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் வன்னிக்குச் சென்று, அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

எப்போதும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் நல்வாழ்வு தொடர்பில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றிய நாதன் அவர்களுக்கு, 1983 களில் ஏற்பட்ட இன அழிப்பைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுடன் இணைந்து, மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அன்று இலங்கை அரசின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பில் செயற் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதும். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற கட்டமைப்பு 1985 களில் தான் உதயமாகியது.

கப்டன் பண்டிதர் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், 1985 ஆம் ஆண்டு பண்டிதரின் வீரமரணத்திற்கு பின்பு கேணல் கிட்டு அவர்கள் யாழ். மாவட்டத் தளபதியாக பெறுப்பேற்ற பின்னர் தமிழகத்திற்குச் சென்றிருந்தார். போர் காரணமாக இடம் பெயர்ந்து தமிழகத்தில் தங்கியிருந்த தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வுப் பணிகளை முதலில் ஆரம்பித்தார்.

மக்களுக்கான அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுப்பது, உணவு விநியோகத்தை சீர் செய்வது என அவர் தனது பணிகளை ஆரம்பித்து, பின்னர் புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்கள் மற்றும் அமைப்புக்களின் உதவியுடன் அதனைக் கட்டியமைத்திருந்தார்.

அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தேசங்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கிளைகளை கட்டியமைத்து, அவற்றுக்கிடையில் இணைப்புக்களை ஏற்படுத்தி, அதன் மூலம் நிதிகளைத் திரட்டி, மக்களுக்கான பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் திட்டத்தையும் நேர்த்தியாகச் செய்திருந்தார்.

தான் இறக்கும் போதும், “மக்களுக்குச் சேவை செய்யுங்கள்” என்ற வாசகத்தை உதிர்த்து விட்டுச் சென்ற இந்த சமூக சேவையாளருக்கு ‘இலக்கு’ ஊடகம், தமிழ் மக்களுடன் இணைந்து தனது அஞ்சலிகளைச் செலுத்துவதுடன், அவரின் பிரிவால் துயருற்று நிற்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிக்கின்றது.

முகாம்களில் இருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டதை அறிந்து, அதற்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் திட்டங்களையும் நடைமுறைப் படுத்தியிருந்தார்.

அதன் பின்னர் 1990 களில் தாயகம் திரும்பியவர், புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளைத் தாயகத்தில் விரிவு படுத்தியிருந்தார். 1990 களின் நடுப் பகுதியில் போர் ஆரம்பித்த போது அதிகளவு மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர். இடம் பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு தொடர்பில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அதிக பங்களிப்பை ஆற்றியிருந்தது.

அவர்களுக்கான உணவு, உறைவிடம் எனப் பல வழிகளில் உதவிகளை வழங்கிய இந்த நிறுவனம், ஏனைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணிகள் தொடர்பிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, அவர்களுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைவை மேற்கொண்டு, அவர்களின் பணிகள் எல்லா மக்களையும் சென்றடையக் கூடிய வழியை ஏற்படுத்தியதில் நாதன் அவர்களின் பங்கு அளப்பரியது.

எல்லைக் கிராமங்களில் பண்ணைகளை அமைத்து, அங்குள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி, தமிழ் மக்களின் நிலங்களைப் பாதுகாக்கும் பணிகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் நிதியைக் கையாழும் அவரின் வல்லமை, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை மிகவும் சிறந்த நிலைக்கு உயர்த்தியிருந்தது.

போர் நிறைவடைந்த பின்னரும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வசிக்கும், போரினால் பாதிப்படைந்த ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு உதவும், வெளிநாடுகளில் இருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டர் அமைப்புக்களின் தொடர்பாளராகவும் இயங்கி வந்திருந்தார்.

தன்னலமற்ற சமூக சிந்தனையுடன் தனது இனத்திற்காக இறுதிவரை சேவையாற்றியவர் நாதன் அவர்கள். அன்பும், அமைதியும் கொண்ட சுபாவமுடைய அவர், தான் மேற்கொள்ளும் பணிக்காக உண்மையாகவும், கடுமையாகவும் உழைக்கும் திறன் கொண்டவர்.

தான் இறக்கும் போதும், “மக்களுக்குச் சேவை செய்யுங்கள்” என்ற வாசகத்தை உதிர்த்து விட்டுச் சென்ற இந்த சமூக சேவையாளருக்கு ‘இலக்கு’ ஊடகம், தமிழ் மக்களுடன் இணைந்து தனது அஞ்சலிகளைச் செலுத்துவதுடன், அவரின் பிரிவால் துயருற்று நிற்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிக்கின்றது.

 

https://www.ilakku.org/social-worker-eventually-served-people/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பணி பலரை உருவாக்கியது. சென்று வருக ஐயா. 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.