Jump to content

புத்தரின் மௌனம்: நெற்கொழுதாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

புத்தரின் மௌனம்: நெற்கொழுதாசன்

ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

putharin_mounam1.jpg?resize=651%2C1024&s

பிற்சேர்க்கை

புளோமினில் அடுக்குமாடியொன்றில் வசித்துவந்த பங்களாதேசை சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்டமுறை  பிரான்ஸ் போலீசாரை அதிர்ச்சிக்குளாக்கி இருந்தது. அவள் தோளிலிருந்து  இடைப் பகுதிவரை கூரிய ஆயுதமொன்றால் பிளந்து குரூரமான முறையில்  கொலை செய்யப்பட்டிருந்தாள். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யபபட்டதாகவும்  அன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.

0

பல்பொருள் அங்காடியில்  அவனைக் கண்டபோது விலகிச்சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் அவன் என்னை அடையாளம் கண்டுவிட்டிருந்தான். மிக நெருக்கமாக வந்து “நீங்கள் றஞ்சித்தானே?” எனக் கேட்டான். நான் அவனை அடையாளம் கண்டுகொள்ளாதவன்  போன்ற பாவனையில், “உங்களை  தெரியவில்லையே” என்றேன்.  இரண்டடி பின்னால் நகர்ந்தவன்,  நன்றாக உற்றுப் பார்த்தான்.  “புளோமினிலில்   நான்காம் இலக்க வீட்டில் இருந்தீர்கள். இல்லையா? என்று திரும்பவும் கேட்டான். இனி மறைக்க முடியாது. ஆனாலும் மறைத்தேன். “இல்லையே. நீங்கள் யார்  என்று தெரியவில்லையே?” மறுபடி கேட்டேன். நான் செல்வது பொய் என்று உணர்ந்திருப்பான். அந்த ஏமாற்றத்தை அவன் காட்டிக்கொள்ளவில்லை. நான் விலகி நடக்கத்தொடங்கினேன். அவன்  பங்களாதேசைச் சேர்ந்தவன்.  பத்துவருடங்கள் முன்பு, நான் வாடகைக்கு வசித்த  வீட்டுக்குப் பக்கத்துவீட்டில் மனைவியுடன்  குடியிருந்தவன்.

 இன்று பாரிஸின், குறிப்பிடத்தக்க  இடங்களிலெல்லாம் பங்களா தேசத்தவர்கள்  நிறைந்திருகின்றனர். எல்லா இடங்களிலும்  வேலை செய்கின்றனர். இருபது வருடங்களுக்கு  முன்னர்,  தமிழர்கள்    எப்படியெல்லாம் குறைந்த சம்பளத்திற்கு  அதிகநேரம்   வேலை செய்தார்களோ,  அதேபோல இப்போது பங்களாதேசத்தவர்கள்  வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதாக  தமிழர்கள்  ஏசிக்கொண்டிருகிறார்கள். அதேவேளை, தங்கள் வர்த்தக நிலையங்களில் அவர்களை குறைந்த கூலியுடன்  வேலைக்கு வைத்திருக்கிறார்கள். தமிழர்கள்தான் கடைந்த மோரில் குடைந்து நெய் எடுப்பவர்களாயிற்றே.

இங்கு வாழ்கின்ற தமிழர்கள் காலநீட்சியாலும்  பட்டறிவாலும்    மொழியையும், சட்டங்களையும், நாட்டின் பாரம்பரியத்தையும்  கற்றுத் தேர்ந்துகொண்டனர். பின்னர் புதிதாக வருகின்ற தம்மைச் சார்ந்தவர்களுக்கு அவற்றை தெளிவுபடுத்தினர். எல்லா நுணுக்கங்களையும் அறிந்து கொண்டவர்கள், வேலையை  செய்வதும், அதற்கான ஊதியம் மற்றும் இதர  உரிமைகளையும்  கேட்கத்தொடங்கினர்.  மேலதிகமாக ஒரு எறும்பை ஊதிக்  கலைப்பதென்றாலும் அதற்கு ஊதியம் கேடட்னர். அல்லது அது  தன்னுடைய வேலை இல்லை என்றுவிடுவார்கள். 

தமிழர்களின் இந்த நடவெடிக்கைகளால் முதலாளிகள் கெடுபிடியற்ற, குறைந்தகூலி கேட்கின்ற  பங்களாதேசத்தவர்களை  வேலைக்கு சேர்த்துகொள்ளத் தொடங்கினர். ஒரு இடத்தில், ஒரு பங்களாதேசத்தவர் வேலைக்கு சேர்ந்தால் போதும் அந்த கடை முழுவதும் அவர்களின் ஆட்களால் நிரம்பிவிடும்.  இதுபோன்ற காரணங்களால் உணவுவிடுதிகளில் வேலைநேரத்தில், சண்டை பிடித்ததாக  நிறைய வழக்குகள் தமிழர்கள்  – பங்களாதேசத்தவர்கள் மீது உண்டு.

இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்   குடியேறிய தமிழர்கள்,  மேற்கு  ஐரோப்பியர்கள் செய்த வேலைகளை குறைந்த கூலியுடன் நேரகாலமில்லாமல் செய்தார்கள்.   வேலைத்தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் நிறைந்து போய்விட,  மாற்று வழி தேடிய மேற்கு ஐரோப்பியர்கள் சிறுவணிக நிலையங்களை ஆரம்பித்தார்கள். அந்தக் கடைகள் இரவுகளில்தான் வியாபாரம் அதிகமாக நடைபெறும். இரவுமுழுவதும் மூடப்(அடைக்கப்)படாதிருப்பதாலும், ஒருபகுதி ஐரோப்பியர்களை அடையார் என்று தமிழர்கள் அழைப்பதாலும்  அந்த சிறுவிற்பனை நிலையங்களை  அடையான் கடை என தமிழர்கள் பெயர் சூட்டியிருந்தனர். 

அதிக சம்பளம், வேலைநேர உணவு, மொழிப் பிரச்சனையின்மை போன்ற காரணங்களால்  உணவுவிடுதி வேலைகளுடன் தமிழர்கள் ஒன்றிப்போயிருந்தனர்.  அவர்களின் இடத்தை பங்களாதேசத்தவர்கள் நிரப்பத்தொடங்குகையில், வேறுவழியின்றி  தமிழர்கள் “அடையான் கடை” என்ற மேற்கு ஐரோப்பியர்களின் வணிக நிறுவனங்களை விலைக்கு  வாங்கி நடத்தத்தொடங்கினர். இப்போதெல்லாம் அடையான்கடை என்று கேலியாக சொல்வதில்லை. அழகாக தமிழ்க்கடை என்றோ, “பிற்றி  கொமெர்சில்” என பிரஞ்சுமொழியிலோ அழைக்கின்றனர். நான் இங்குவந்து சேர்ந்தகாலம் ஒரு இடைப்பட்ட காலம். குறைந்தளவு  பங்களாதேசத்தவர்கள். நிறையத்தமிழர்கள்.

அன்றையநாளில் நான் ரஞ்சித்தாக இருந்தேன்.  பாரிஸில் அகதிக் குடியுரிமை  கிடைத்து சில மாதங்களேயான காலம் அது.  புறநகரான புளோமினில் என்ற இடத்தில் அமைந்திருந்த குடியிருப்பு தொகுதியில் தனியான ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்திருந்தேன். வெறும் இருபது சதுர அடி  அளவில்,  அறையும் அதனுடன் கூடிய குளியலறையும் அதையொட்டி சிறிய சமையல் பகுதியையும் கொண்ட வசிப்பிடம் அது. தனியொருவர் எதுவித சங்கடங்களும் இல்லாமல் வாழ்ந்துவிடப்போதுமானது. 

உலகம் சுருங்கிய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத இந்தநாட்டவர்  தங்களையும் சுருக்கிக்கொண்டதன் விளைவே இந்த வீடுகள். எங்களூர் பாசையில் சொல்வதென்றால்  அது ஒரு புறாக்கூடு. வாழ்வின் அனைத்து சடங்குகளிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டவர்களுக்கு இந்தவகை வீடுகள் வரப்பிரசாதம். பரிசியன் என பெருமைக்கொள்ளும் மனிதர்கள், metro ,boulot, dodo என்றொரு  அடுக்கு மொழியை சொல்வார்கள். அதன் அர்த்தம், மெட்ராவில் பயணம், வேலை, நித்திரை. இப்படியாக தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருப்பார்கள். வாரத்தில் ஐந்துநாள்கள் வேலை. வேலையுமிடத்திலேயே உணவு. பின் வீடுவந்து உறக்கம் அடுத்தநாள் காலை, அதேபோல  வேலை. 

விடுமுறைநாள்களில் ஏதாவது கொண்டாட்டங்களுக்கு போவார்கள். ஏதாவது ஒரு உணவுவிடுதியின் நன்றாக உண்பார்கள். பல பொழுதுகளை “பக்கெற்” என்கின்ற நீளப்பாணுக்குள் ஏதாவது ஒரு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வைத்தது சான்வீச் செய்து சாப்பிட்டுக்கொள்வார்கள். உறங்குகின்ற குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் அவர்களுக்கு ஒரு இடம் இருந்தால் போதுமானது. குறிப்பிட்ட காலம் வரை பாரிஸில் இருந்து உழைத்துவிட்டு பின் எங்காவது தலைநகரிலிருந்து விலகிய இடங்களில் வீடு ஒன்றினை  வாடகைக்கு எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். அங்கேயே மிகுதி நாள்களை கழித்துக்கொள்வார்கள்.

நான் வீட்டை பார்வையிடச் சென்றபோது வாடகை எவ்வளவு இருக்கும் என்பதே மனதில் நின்றது. எங்காவது படுத்துவிட நிலமும், குளிக்க ஒரு தண்ணீர்க் குழாயும் இருந்தால் போதும் என்ற நிலையிலேயே இருந்தேன். உழைக்கின்ற பணத்தில், பெரும்பகுதி        வீட்டு வாடகையாக போய்விடுகிறது. மின்சாரம்  மற்றும்  நீர்க்  கட்டணங்களென குறிப்பிட்டதொகை செலவாகிவிடும். மிகுதி சொற்ப பணத்தினை வைத்துதான் ஏனைய செலவுகளை செய்யவேண்டும். அதனால் எவ்வளவு குறைவாக வீடு வாடகைக்கு கிடைக்கிறதோ அதனைப் பெற்றுக் கொள்வதாகவே தீர்மானித்திருந்தேன்.

முதல் பார்வையிலேயே எனது வசிப்புக்கு ஏற்றது எனப் புரிந்துகொண்டேன். வாடகைக்குள்ளேயே நீருக்கான கட்டணம் அடங்குகிறது என உரிமையாளர் கூறினார். உடனேயே சம்மதம் தெரிவித்துவிட்டேன். அவர் இங்கே எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. எல்லோரும் எனது நண்பர்கள்தான். எதுவென்றாலும் எந்த நேரமென்றாலும் நீ என்னை அழைக்கலாம். நான் வருவேன் என கூறினார்.  துருக்கி நாட்டினைச்சேர்ந்த அவர் தான் முதன்முதலில் தனியனாக வசித்தவீடு எனவும், மிக இராசியான வீடு அதனால் விற்கவில்லை என்றும் கூறினார்.  

இந்தக் குடியிருப்புத் தொகுதியில் உங்கள் நாட்டினை  சேர்ந்தவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்றும், உபரியாக கூறிவைத்தார். கருப்பும் இல்லாமல் வெள்ளையாகவும் இல்லாமல் இருப்பவார்கள் எல்லோரும் ஒரே நாட்டினை சேர்ந்தவர்கள் என்பதே அவரின் நிலைப்பாடு. அன்றிலிருந்து மூன்றாம் நாள் அந்த வீட்டுக்கு குடிபோனேன். சரியாக பத்துவருடங்கள் அந்த வீட்டில் குடியிருந்தேன். 

‘றஞ்சித்’ என்பது எனக்கு யாரும் வைத்த பெயரல்ல. நானாக வைத்துக்கொண்ட பெயர். அடையாளங்களை மறைத்துவிட்டு, விடுபட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க ஒரு பெயர் தேவைப்பட்டது. றஞ்சித் என நான் அறியப்பட முதல்  நான் யாராக இருந்தேன்  என்பது சொல்லப்பட வேண்டிய தேவை   இந்தக் கணம்வரை  இல்லை.  இனியும் வரப்போவதில்லை. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். நான் ஒரு உண்மையான அகதி. கொலைகளை செய்யப் பணிக்கப்பட்டவன். அதிலிருந்து தப்பியோடி அடையாளங்களை மறைத்துக்கொண்டவன்.

நான் மூன்று அடுக்கு கொண்ட நிறுவனமொன்றில் சுத்திகரிப்பு தொழிலாளியாக  வேலைசெய்து கொண்டிருந்தேன். இரவு முழுவதும் வேலை. பகல் முழுவதும் உறக்கம். வாரத்தில் இரண்டுநாள்கள் லீவு. தனிமனிதனின் தேவையை விட அதிக வருமானம். பாரிலிஸில்  பொதுவாக சுத்திகரிப்பு வேலைகளுக்கு சம்பளம் அதிகம்.

வேலை செய்யுமிடத்தில் எல்லோரையும்  இயன்றவரை  அனுசரித்துப் போயிருக்கிறேன்.  ஒருமுறை என்னை “இந்தியன் நாய்”  என்று கூறிவனை அடித்தும் இருக்கிறேன்.  மறுநாள் அவன்,  வா கஃபே குடிக்கலாம் என்று அழைத்துச் சென்று, தனது முகவரி அட்டையையும்  தொலைபேசி இலக்கத்தையும் தந்து “என்றாவது வேலை தேடியோ அல்லது வேறு என்ன தேவையென்றாலுமோ என்னை கூப்பிடு. நான் உனக்கு உதவி செய்வேன் என்று கட்டியணைத்து சொன்னான். கோபங்களை சுமந்து அலையும் சமூகத்திலிருந்து வந்திருந்த எனக்கு அது பெரிய அறப்பிரச்சனையாக இருந்தது. மலர்ந்த முகத்துடன் என்னை அணைத்துக்கொண்ட  அவனை முதலில் நெருங்கவே தயங்கினேன். எப்படி அவனால் நேற்று நடந்ததை உடனேயே மறந்துவிட முடிகிறது.  மறந்துவிடுதலை அவனிடம் நான் கற்றுக்கொண்டேன். அது மாபெரும் விடுதலை.

பின்னொருநாளில் அறிந்துகொண்டேன். அவன் அந்த நிறுவனத்தின் சுத்திகரிப்பு வேலைகளை ஒப்பந்த  அடிப்படையில் செய்துகொண்டிருப்பவரின் மகனென்பதனை. அவர்கள்  இருபதுக்கு மேற்படட நிறுவனங்களை  ஒப்பந்த அடிப்படையில் எடுத்துவைத்திருக்கிறார்கள். அவன் ஒரு முதலாளி. ஒரு  ஊழியன்.  இந்த இரட்டைப்  பாத்திரம் என்னை சிலநாள்கள் தூங்கவிடாமல் செய்திருந்தது. இறுதியாக அவனிடமே கேட்டேன். நீ முதலாளி அல்லவா. ஏன் இந்த வேலைகளை செய்கிறாய் என்று.  முதலாளி வேலை செய்யக்கூடாது என்று சட்டம் ஏதுமில்லையே நண்பா என்றபடி அந்த கேள்வியைக் கடந்திருந்தான். 

நான் வேலை முடிந்தால் நேரேயே  வீடு செல்வேன். எனக்கான உணவினை தயாரிப்பேன்.  இரண்டு நாள்களுக்கு தேவையான உணவினை ஒரே தடவையில் செய்து குளிரூட்டியில் வைத்துவிடுவேன். அன்றும் அப்படித்தான் உணவினை தயாரித்துக்கொண்டு இருந்தேன். கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்தேன்.  பக்கத்துவீட்டில் குடியிருந்தவர்கள் கணவனும் மனைவியுமாக நின்றிருந்தார்கள். அவைகளை சிலதடவைகள் அவதானித்து இருக்கிறேன். பங்களாதேசை சேர்ந்தவர்கள். என்னைவிட ஓரிரு வயது குறைந்தவர்களாக இருக்க வேண்டும்.

கணவன் வேலைக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் வாசலில் வந்து வழியனுப்பும்  மனைவி எக்குத்தப்பாக என்னைக் கண்டுவிட்டால் சடாரென கதவை அடித்து சாத்திக்கொண்டுவிடுவார். பின் அவதானித்ததில், என்னைக்கண்டால் மட்டுமல்ல, யாரைக் கண்டாலும் அதுதான் நிகழ்கிறது என புரிந்துகொண்டேன். ஒருமுறை  வீதியில் அவர்கள் இருவரையும் கடந்தபோது கணவன்  வணக்கத்தை சொன்னான். பதில் வணக்கத்தை சொல்லிவிட்டு இப்போது எதைக்கொண்டு முகத்தை மறைப்பாய் என்பது போல அவளை உற்றுப்பார்த்தேன். கீழே குனிந்துகொண்டு மெல்லிதாக புன்னகைத்திருந்தாள். முகத்தில் சொல்லிவிட இயலாதவொரு பாவனை  இருந்தது. அதை தவிர்த்து பெரியளவில் அறிமுகம் இல்லை. 

 அவர்களுக்கு  வணக்கத்தை சொன்னேன். பின்பு  என்ன வேண்டும் என்று கேட்டேன். அவள் தலையைக் குனிந்தபடியே நின்றிருந்தாள். கணவன்தான் ஆரம்பித்தான், இரண்டு நாள்களாக  வீட்டில் தண்ணீர் வரவில்லை. தான் ரெஸ்ரோறன்ட்களில் கஃபே குடிக்கப்போவது போலப்போய்   தன் தேவைகளை நிறைவேற்றி விடுவதாகவும், நேற்றுவரை மனைவியும் அவ்வாறே செய்துவந்ததாகவும் கூறினான். இன்று மனைவி இயலாதநிலையில் இருப்பதால், ஒரேயொரு தடவை   குளிப்பதற்கு  அனுமதிக்க முடியுமா என்று கேட்டான். அவன் முகத்தில் இருந்த தயக்கத்தைவிட அவளது முகத்திலிருந்த வலி அதிகமாக இருந்தது. சட்டென கதவை  அகலத் திறந்துவிட்டேன். அதை அவர்கள் இருவருமே  எதிர்பார்க்கவில்லை. அவன் மௌனமாக நின்றான். அவளது கண்ணில் நீர் சுரந்து கலங்கியதைக் கண்டேன். 

வாசலிலிருந்து விலகி குளியறையைக் காட்டினேன். அவனையும் உள்ளே அழைத்தேன். முதலில் மறுத்தான். அவள் நிமிர்ந்து, அவனைப் பார்த்தபின்   உள்ளே வந்தான். அவன் அமரக் கதிரையைக் காட்டிவிட்டு ஒருநிமிடம் எனச்சொல்லிவிட்டு குளியறையை சென்று பார்த்தேன். சுத்தமாக இருந்தது கொழுவி  விட்டிருந்த  துவாயை ஓரமாகத்தள்ளி விட்டுவிட்டு வந்து அவர்களிடம் கையை காட்டி செல்லுமாறு கூறினேன்.  

நின்றுகொண்டிருந்தவனை கதிரையை எடுத்துவைத்து இருக்கும்படி கூறினேன். ரிவி  ரிமோட்டை கொடுத்தபடி,  என்ன குடிக்கிறீர்கள் எனக்கேட்டு விட்டு மேசையில் இருந்த பிளேக் லேபல்  போத்தலைக் காட்டினேன். இல்லை என மறுத்தான். ஆப்பிள் யூஸ் போத்தலை எடுத்துக்கொடுத்தேன். பின் சமையலை தொடர்ந்தேன். அவன் ரீவியை நிறுத்திவிட்டு என்னருகில் வந்து நின்று கொண்டான்.

கடந்த ஐந்து மாதங்களாகளாக வாடகை  கொடுக்கவில்லை. வீட்டிலிருந்து எழுப்புவதற்காக   உரிமையாளர் தண்ணீரை நிறுத்திவிட்டார். இன்னும் சிலநாள்களில் மின்சாரத்தையும்  துண்டித்துவிடக்கூடும் என்று  இயல்பாக கூறினான்.  அடுக்குமாடி குடியிருப்புகளில் வாசிப்பவர்களுக்கு தண்ணீர் தடைப்படும் நாள்  என்பதே நரகம்தான்.  இவன் இரண்டுநாளாக  தண்ணீரில்லாமல் இருந்திருக்கிறான் அதுவும் மனைவியுடன். ஆச்சரியத்துடன் அவனைப்  பார்த்தேன்.   எப்படி உன்னால் தண்ணீரில்லாமல் இயல்பாக இருக்கமுடிகிறது என வினவினேன். நிமிர்ந்து பார்த்தவன், உனக்குத் தெரியுமா. ஊரில் என் வீடு  ஆற்றங்கரையோரமாக தான் இருந்தது. அந்த ஆறு  ஒரு அண்ணனைப்போல எல்லாமுமாக இருந்தது. இன்னும் என் மண்டைக்குள் அந்த  ஆறு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது என்றான். சிறிது மௌனத்தின் பின்,  இன்னும் எத்தனை நாள்களுக்கு இருப்பேனோ தெரியாது என்றான். அவன் கண்களைப் பார்த்தேன். கருநீலப்பாவை மெல்லியதாக நடுங்கியது.  மண்டைக்குள்  ஊரின்  ஆறு   ஓடிக் கொண்டிருக்கக்கூடும்.  

ஊரை இழந்து இங்கு வந்த பின் ஒவ்வொன்றாக திருப்ப திருப்ப நினைவு படுத்திக்கொள்வது எனக்கு மட்டுமல்ல அவனுக்கும்தான் என்றபோது என்னையறியாமல் உதடுகளில் ஒரு சினேகம் எழுந்தது. அவன் கவனித்திருப்பான். 

குளியறைக்குள் எந்த சத்தமும் இல்லை. திரும்பிப் பார்த்தேன். கட்டிலுக்கு அருகில் அவள் நின்றிருந்தாள். தலையைப் பார்த்து தோய்ந்திருக்கிறாள் என உறுதிப்படுத்திக் கொண்டேன். அவள் முகத்தில்  மகிழ்வு தெரிந்தது. நெற்றியோரமாக  பூனைமுடிகள் நீரில் நனைந்து ஒட்டியிருந்தன. துவாயை தொளில் போட்டிருந்தாள். அழகி தான் என எண்ணிக்கொண்டேன். அவனிடம் தங்கள் பாஷையில் கதைத்தாள். அவன் என்னிடம் திரும்பி உங்களுக்கு நன்றி சொல்லுறாள். குளியலறை மிக சுத்தமாகவும் வசதியாகவும் இருந்தது என்றும் சொல்கிறாள் என்றான். அவளைப் பார்த்து சிரித்தேன். அவள் கண்கள் பூரித்து மலர்ந்திருந்தன.  சிறிய மேசையில்  இருந்த புத்தர் சிலையைப் பார்த்துவிட்டு அவனிடம் எதோ கேட்டாள்.  அவனும் அப்போதுதான் புத்தர் சிலையைக் கண்டவன் போல் பார்த்துவிட்டு என்னிடம் திரும்பி நீங்கள்  புத்த மதத்தவரா என்று கேட்டான். நான் இல்லையென்று தலையாட்டினேன். அவள் நின்று சிலகணம் புத்தரை தியானித்தாள். அப்போது அவன் சொன்னான். அவள் புத்த மதத்தை சேர்ந்தவள். 

அவள் தன் ஆடைகளை இழுத்து  தயார்ப்படுத்திக்கொண்டாள். சங்கடமில்லாமல் என்னைக் கடந்து செல்ல விரும்புகிறாள் எனப்  புரிந்துகொண்டேன். சமையல் பகுதியின் ஒரு மூளைக்கு விலகிச்சென்றேன்.  போதிய இடமிருந்தது. அவர்கள் புறப்படத் தயரானார்கள். அவன் எதாவது உதவி கேட்பான் என நினைத்துக் கொண்டேன். கதவு வரை சென்றவன் என் கைகளைப் பிடித்துக்கொண்டான். பின் உடலைத்த தழுவி அணைத்தான்.  கன்னங்களிலும் மாறி மாறி தன் கன்னங்களை வைத்து  நன்றியை சொன்னான். அவன் எந்த ஒரு உதவியையும் கேட்காதது எனக்கு வித்தியாசமாக இருந்தது. நானே சொன்னேன் ஏதாவது தேவையென்றால் அழையுங்கள் என. அவன் அதை அவளிடம் சொன்னான். அவள் கையெடுத்து என்னை வணங்கினாள். நானும் பதிலுக்கு வணங்கினேன்.

அவர்கள் வெளியேறியதும் கதவினை பூட்டிக்கொண்டேன். அடுப்பினை நிறுத்தினேன். மெதுவாக நடந்து சென்று குளியலறைக் கதவை  திறந்தேன். சவர்க்காரம் கலந்த குளிர்வாசனை முகத்தில் அடித்தது. அந்த வாசனை எல்லா இடங்களும் பரவட்டுமென கதவை அகலத்திறந்துவிட்டேன். மெதுவாக குளியலறைக்குள் நுழைந்து ஒவ்வொன்றாக பார்த்தேன். கண்ணாடியில் நீராவி படிந்திருந்தது. அவள் முகம் பார்த்திருப்பாள். அவளது முகம் அழிந்துவிடாமல் நீராவியை மெதுவாக துடைத்தேன். தேகம் சில்லிட்டது. கை மயிர்கள் குத்திட்டு நின்றன. அவள் நடந்த தடம் ஈரமாக நிலத்தில் கிடந்தது. அந்த தடத்தின் மீது  கால்களை வைத்து நின்றுகொண்டேன். என் வீட்டுக்குள்  ஒருபெண் வந்து சென்றிருக்கிறாள் என்பதே பெரிய ஆசுவாசமாக இருந்தது. மீண்டும் அவள் வீட்டுக்குள் வர வேண்டுமென்ற ஆசை உள்ளத்தின் ஒரு  மூலையில்  அசுரத்தனமாக வளர்ந்துகொண்டிருந்து.நின்ற இடத்திலிருந்தே புத்தர் சிலையை பார்த்தேன். மறுநாள்  மயிலிறகு கொத்து ஒன்றினை வாங்கி புத்தருக்கு  அருகில் நிறுத்தினேன்.  

கதவினை பூட்டும்போதும் திறக்கும்போதும் நின்று நிதானித்து, மெல்லிய ஓலியெழுப்பி கவனத்தை கவரும்விதமாக திறக்கத்தொடங்கினேன். சாவித்துவாரத்தினூடாக ஒரு கண்  என்னை அவதானிக்க வேண்டும் என  விரும்பினேன்.  குறைந்தது அவனாவது கதவினை திறந்து உரையாடவேண்டும் என்று விரும்பினேன். எதுவுமே நிகழவில்லை. நிசப்தம். மரங்களடர்ந்த நிலத்தில் யாருமற்ற நேரங்களில் நேரங்களில் நிலவும் அமைதியுடன், காற்றின் ஊளை மட்டும் கலந்து கேட்கும். அதுபோன்ற ஒரு ஊளை கலந்த நிசப்தம். 

இரண்டு நாள்களாக  அவர்களை காணவில்லை. கதவினைத் தட்டிப் பார்ப்போம் என எண்ணினேன். அவர்கள் கூட்டாக தற்கொலை செய்திருக்க கூடுமோ. மனம் பதட்டப்பட்டது.  பூரித்து விரிந்த,  மஞ்சள் ஓரங்கள் கொண்ட அவளது கண்கள் மனதில் மின்னியது.   கதவின் அடிப்புறத்தை உற்று நோக்கினேன். எதுவும் தெரியவில்லை. சலிப்புடன்  வீட்டுக்குள் நுழைந்தேன். ஆடைகளைந்து  குளியலறைக்குள் புகுந்தேன். நாள்கள் கடந்தும் அவள் வாசனை அந்த இடமெங்கும் நிறைந்திருப்பதாகவே மனது உணர்ந்தது.  என் நிர்வாணத்தை அந்தக் கணத்தில் நேசித்தேன். நிர்வாணமாகவே குளிக்கும் தொட்டியின் விளிம்பில் உட்கார்ந்தேன்.  மாடிப்படியில் யாரோ நடந்துவரும் ஓசை கேட்டது. அவர்களாக இருக்கக்கூடும் என்ற நினைப்பில், குளியறையிலிருந்து வெளியேறி பிரதான கதவின் கண்காணிப்புத் துளையூடாகப்  பார்த்தேன். எவருமில்லை. பிரமையாக இருக்கும் என்று எண்ணியபடி, திரும்பி கட்டிலில் விழுந்து படுத்தேன். புத்தர்  நிர்வாணத்தை கண்டு மயிலிறகால் முகத்தை மூடிக்கொண்டார்.

அன்றிலிருந்து இரண்டாம் நாள் அவர்களைக் கண்டேன். முதலில் அவளைத்தான் பார்த்தேன். முகத்தில் எதுவித கவலைகளும் தென்படவில்லை. மாறாக, சந்தோசமான பாவனை தெரிந்தது. சட்டென என் முகம் இருண்டது. அதை அவர்கள் கண்டுவிடக்கூடாது என்று உள்ளார  குரல் எச்சரிக்கை செய்தது. அவர்களைப் பார்த்து சிரித்தேன். அவள் கரங்களால் வணக்கம் சொன்னாள். அவன் அருகில் வந்து கரங்களைப் பற்றி குலுக்கியபின், வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்திவிட்டதாக கூறினான். என் முகம் மலர்ந்ததை அவள் அவதானிப்பதை கண்டுகொண்டேன்.  அவனை நோக்கி மிக சந்தோசம். ஏதும் தேவையென்றால் அழையுங்கள் என்று சொல்லிவிட்டு சம்மந்தமில்லாதவன்போல விலகிச் சென்றேன். உற்சாகமாக பாடலொன்றை முணுமுத்துக்கொண்டேன். 

மறுநாள் காலை கதவு தட்டும் ஒலி கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து கதவைத் திறந்தேன். அவள் கையில் வாயகன்ற சிறிய பாத்திரமொன்றில் தண்ணீரை ஏந்தியபடி நின்றிருந்தாள். நுனியில் முடிந்திருந்த கூந்தலில் இருந்து நீர் துளித்துளியாக  ஒழுகிக்கொண்டிருந்தது. அந்த நீர் ஊறி ஆடை உடலில் ஒட்டியிருந்தது. உள்ளாடைகள் அணிந்திருக்காத அவள் தேகத்தின் அங்கங்கள் நெருப்பின் நீலச்சுடரென மிளிர்ந்தது. அந்த நெருப்பின் கரங்கள் தீண்டி என் உடல் சில்லிட்டு அடங்கியது. அவள் எதுவிதமான சலனமுமில்லாமல் உள்ளே வரலாமா என  சைகையால் கேட்டாள்.  விலகிவழி விட்டேன். புத்தர் சிலையை நோக்கி சென்றவள் ஏந்தியிருந்த நீர்ப்பாத்திரத்தை புத்தர் முன்பாக வைத்துவிட்டு நிதானமாக வணங்கினாள். பின்  நிமிர்ந்து பார்த்து சினேகமாக புன்னகைத்தாள்.  அதுவரை அவளைக் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த நான் மெதுவாக தலையை திருப்பினேன்.

 மடிக்கப்படாமல் இருந்த படுக்கையைப் பார்த்துவிட்டு, அப்போதுதான் நித்திரையிலிருந்து எழுந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டவள்போல,  தன் மார்பில் கைவைத்து மன்னிக்கும்படி கேட்டாள். இயல்பாக புன்னகைத்தேன். பின் ஒருநிமிடம் நிற்கும்படி ஆங்கிலத்தில் கூறிவிட்டு, புத்தர் சிலையை மயிலிறகோடு சேர்த்து தூக்கி அவளிடம் நீட்டினேன். கொண்டுசெல்லும்படி தலையை அசைத்து காட்டினேன்.

வேண்டாம் என மிக வேகமாக உடல் முழுவதையும் அசைத்தாள். கையில் இருந்த புத்தரை பார்த்தாள். எதுவித தயக்கமுமில்லாமல்  வாங்கி மெதுவாக இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு, தான் வணங்குவதற்காக மட்டும் வந்தேன் என சைகை செய்தாள்.  பின் மலர்ந்த முகத்துடன் வெளியேறிச்சென்றாள். நான் அவளின் பின்னால் வாசல்வரை நடந்து சென்று கதவை இறுக்க மூடினேன். 

புத்தரின் சிலையை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரு சில நிமிடங்களில் நிகழ்ந்துமுடிந்த அவளின் வருகையும் திரும்புதலும் கலவையான சிந்தனையை எனக்குள் உருவாக்கியது.  நான் அவளை நெருங்கவேண்டும் அல்லது அவளை என்னை நெருங்கப் பண்ணவேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது. அவளின் கரங்களைப்பற்றிக்  கொண்டு இருக்கவேண்டும் போல இருந்தது.  

அன்றுமாலையே அவர்களின் வீட்டுக் கதவை தட்டினேன். அவளது கணவன்தான் கதவைத் திறந்தான். மசாலா வாசம் முகத்தில் அடித்தது. சமைத்துக் கொண்டிருந்திருப்பான்போல. கண்களில் வியப்புடன் உள்ளே வாருங்கள் என அழைத்தான்.  நான் மறுத்துவிட்டு, நாளை மின்சாரபில்  போடுவதற்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். நான் பகல் நிற்கமாட்டேன். அவர்கள் வரும்போது,  நீங்கள் இந்தக் கதவை திறந்து  விடமுடியுமா என்று கேட்டேன். தனக்கு மறுநாள் லீவு என்றும் தான் அதனை செய்வதாகவும் உறுதியளித்தான். திறப்புக் கோர்வையிலிருந்து ஒன்றை கழற்றிக் கொடுத்தேன்.  எனது ஆட்டத்தில் ராணியை வெட்டுவதற்கான நகர்வு ஒன்றை செய்துவிட்ட   மகிழ்வுடன் படிகளில் பாய்ந்து இறங்கினேன். 

மறுநாள் காலை வீட்டிலிருந்து வெளியேறினேன். மாலை வரை வீடு திரும்பவில்லை. வேளையோடு திரும்பினால் திறப்பினை தந்துவிடக்கூடும்    என்பதால் லாசெப்பலில் அலைந்து திரிந்துவிட்டு  இரவு வீடு திருப்பினேன். பூனைபோல சத்தம் எதுவும் கேட்காமல் கதவினை திறந்தேன். நேரே புத்தர் சிலை இருந்த இடத்திற்கு சென்றேன். நீர் புதிதாக இருந்தது. புதிய மலர்கள் அந்த நீரில் மிதந்தன.  ஏரி நிறைந்தால் கரை கசியத்தான் செய்யும். நான் ஏரியை நிறைக்கத்தொடங்கினேன்.

ஒருநாளில், அவளது முழுமையான சம்மதத்துடன்,  அவளை நிர்வாணமாக்கினேன். அந்த நேரத்தில் தன்  நிர்வாணத்தையே புதிதாக பார்த்து இரசிப்பவள் போல மறியிருந்தாள்.   ஒரு மாபெரும் அழகுக்குவியலை, இல்லை நீரில் மிதக்கும் ஒற்றை அல்லியை நீர் மோதுவது போல அளைந்துகொண்டிருந்தேன். தோள் மூட்டிலிருந்து இடைவரை ஒரு நீண்ட தழும்பு. என்றோ ஒருநாள்எதற்காகவோ  அவளது உடலை பிளந்திருந்திருந்த ஒரு அடையாளம். அதனை மெதுவாக வருடினேன். திடீரென எதோ நினைத்தவள் எழுந்து புத்தர் சிலையை  துணியால் மூடிவிட்டாள்.   பின் வந்து என் நிர்வாணத்தின் மீது போர்வையை எடுத்து போர்த்திவிட்டு அருகில் இருந்த ஆடையை அணியாமல் தன் உடலின் மேலாகப் போட்டுக்கொண்டு அருகில் நெருக்கமாக படுத்துக்கொண்டாள்.  நான் அவளின் தலையை தடவினேன். கரங்களுக்குள் அவள் ஒளிந்துகொள்பவள் போல சுருண்டு கிடந்தாள்.  அந்த நேரத்திலும் தன் அங்கங்கள் தெரியாமல் ஆடையை கவனமாக உடலின் மேலால் மூடியிருந்தாள்.

நீண்ட நேரம் அப்படியே இருந்தோம்.  அது ஒரு கெடுவாய்ப்பு. எதுவுமே நிகழக்கூடாது என்ற  நினைவு மனதில் எழுந்தது. எதோ ஒரு தயக்கம் அவளுக்கும் எனக்கும். இருவேறு பண்பாடுகள். பழக்கவழக்கங்கள். மனநிலைகள். இவற்றைக் கடந்து அவளை தூண்டியது எது. அவளது இயலாமையை அல்லது பலவீனத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேனோ என்ற கீழ்மை. சினேகத்தின் ஒரு இழையைப் பற்றி ஏறி செல்லும் இந்தப் பயணத்தின் முடிவிடம் எது. இருவருக்கும் இடையே பரவுகின்ற உணர்ச்சி எது. நான் புத்தரை  நேசிக்கிறேன். அவள் கடவுளாக வணங்குகிறாள். இதை தவிர அவளுக்கும் எனக்கும் என்ன உறவு. என்னைப்போல அவளும் எண்ணக்கூடும். யோசித்தபடி என்னையறியாமல், அவளது உடலிலிருந்த தழும்பை தடவிக்கொண்டிருந்தேன். அவள் பூரணை நிலவாகி ஒளிர்ந்துகொண்டிருந்தாள். எனக்குள்,  தன்னை இழந்துவிடக்கூடிய தருணமொன்று உருவாகுமென்ற  எண்ணம் இடையிடையே உருவாகி அழிந்துகொண்டிருந்தது.

மெதுவாக அவளை விலக்கி எழுந்தேன். நிமிர்ந்து பார்த்தாள். சாரத்தை அணிந்துகொண்டு சமையலறை பக்கமாக நடந்தேன். அவள் அப்படியே படுத்திருந்தாள். நான் அங்கு கிடந்த கதிரையொன்றில் அமர்ந்தேன். தேநீர் குடிக்கத்தோன்றியது. அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு இரண்டு தேநீர் போடலாம் என்ற நினைப்பில் தண்ணீரை சூடேற்றினேன். சத்தம் கேட்டு அவள் எழுந்து குளியறைக்குள் சென்றாள்.  தண்ணீரை சூடேற்றுவதை நிறுத்திவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்துகொண்டேன்.   குளித்துமுடித்து புது மலர்ச்சியுடன் வந்தவள் தேநீர் போடப்படாமல் இருப்பதைப் பார்த்ததும், தேநீர் தயாரிக்கத்தொடங்கினாள்.  இருவருக்குமிடையில் முன்னெப்போதுமில்லாத ஒரு நேசம் மலர்ந்திருப்பதை  அவளது செய்கைகள் வெளிப்படுத்தின. எழுந்து சென்று அவளது நெற்றியில் முத்தமிட்டேன். தேநீரை எடுத்துக்கொண்டு அவளின் கரங்களைப் பற்றிக் கொண்டேன். மெதுவாக கையை விலக்கி தேநீரை கொடுத்தாள். நன்றி சொன்னேன். தேநீரை அருந்தியதும்  விடைபெற்றாள். 

மறுநாளும் வந்தாள். புத்தரை வணங்கினாள். திடகாத்திரமான  உருவமாக  எழுந்து நிற்பதுபோல அவளது நிலை தோன்றியது. சலனமற்ற புன்னகை. தடுமாற்றமற்ற  உரையாடல். அவளை வியந்து பார்த்தேன். நேற்றைய நினைவின் சாயல்கள் எதுவுமே இல்லாதவள் போல மாறியிருந்தாள். தெளிவான, நிலையான முடிவொன்றை அவள் எட்டிவிட்டதை   அவள் செய்கைகள் உணர்த்தியது. அவளை இதுவரையில்லாத மதிப்புடன் பார்த்தேன். நேசமும் மரியாதையும் கலந்த ஒரு பாசம் அவளின் மேல் உருவாகியது. ஓம் அவளை நான் நேசித்தேன். இப்போதும் நேசிக்கிறேன். அவள் பெயர் சபிதா நிஷிபாலா. அவளுக்கு நான் வைத்த பெயர் பொன்னி.

அவள் என்னிடமிருந்து விலகவுமில்லை. நெருங்கவுமில்லை. பெயர் வைக்கமுடியாத உறவு ஒன்றாகிப்போனாள். அந்தநாள்களில் உலகத்தில் நிகரற்ற அன்பு ஒன்றை அவள் என்னிடத்தில் வைத்திருப்பதை உணர்ந்தேன். யாருடமுமில்லாத மலர்ச்சியுடன் என்னுடன் உரையாடுவாள்.  அப்போதெல்லாம் அவள் ஒரு பேரழிகியாக எனக்கு தோன்றுவாள். சிறுகுழந்தையாகி  குதிப்பாள்.  

அவள் எனக்கொரு தேவதை. தேவதைகள் அன்பை மட்டும் தானே  கொடுப்பார்கள் இல்லையா. அவளிடமிருந்து அன்பு அளவில்லாமல் கிடைத்துக்கொண்டே இருந்தது. என் நினைவுகளில் எந்த ஒரு கணத்திலும் அவளின் நிர்வாண தோற்றம் மீள வரவில்லை. ஒரு குழந்தையாக மாறி கைகளில் சிக்குண்டு விலகிச்செல்வாள். அவளின் அன்புக்காக எதையும் செய்துவிடலாம். அவளும் எனக்காக எதையும் செய்துவிடக் கூடியவளாகவே இருந்தாள். ஆம் இருந்தாள். எனக்குள் ஒரு மகா பூரணை நிலவாக  இருந்தாள்.

 சிலகாலத்தில் தன் நாட்டுக்கு திரும்பிச்சென்று விட்டாள். போகவேண்டியதற்காக ஏதேதோ காரணங்களையெல்லாம் சொன்னாள். அதன் பின் எதுவித தொடர்புகளுமில்லை. ஒரு ஊருக்கே ஒன்பது வழிகளாய்ப்போன இந்த நாளில், தொடர்புகொள்ள ஆயிரம் வழிகள் இருந்தும்,நான் அவளைத்தொடர்புகொள்ள விரும்பவில்லை. அவளும் விரும்பவில்லைப்போலும். ஆனாலும் அவள் கீறிய தடம் என் மனதில் நிறைந்திருந்தது. எங்காவது பங்களாதேசப் பெண்களைக் காணும்போது அவளும் இருக்கக் கூடும்  என்பதுபோல கண்கள் தேடும். மற்றபடி   ஏறக்குறைய அவளை மறந்தேவிடுவேன்.  சிலநேரங்களில் நினைவுகளில் பூதாகரமாக வளர்ந்து நிற்பாள். 

***

தன்னை தெரியாது என்ற என்னுடன், அவன் கதைக்க விரும்பியிருக்க கூடும். கதைத்திருந்தால் அவளைப் பற்றி நான் அறிந்திருக்கவும் முடிந்திருக்கும். இருந்தும், ஏனோ விலகி வந்தேன். அது  கனநேரத்தில்  எடுத்த முடிவு. புதிர்தான்.   

வீட்டுக்கு சென்றதும் வைத்து நீர் ஊற்றி மலர்களைத்  தூவி விடலாமென்று   புத்தர் சிலையை பார்த்தேன். சிலையின் தோளிலிருந்து இடைவரை சிறுகோடுபோல வெடிப்பு நீண்டிருந்தது.அச்சு அசலாக அவளது உடலில் நீண்டிருந்த தளம்பைப் போலவே..

 

நெற்கொழுதாசன் 

பிரான்சில் புலம்பெயர்ந்து வசித்து வரும் நெற்கொழுதாசன் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரகசியத்தின் நாக்குகள் என்ற கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கின்றது.

https://akazhonline.com/?p=3443

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் பரிநிர்வாணம் அடைந்திருந்தார்.......பாவம் இவரால் பாதி நிர்வாணம் வரைதான் போக முடிந்திருக்கின்றது.......நெற்கொழுவின் கதைகள் எனக்கு மிகவும்பிடிக்கும்......!  👍

நல்ல கதை நன்றி கிருபன்.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

புத்தர் பரிநிர்வாணம் அடைந்திருந்தார்.......பாவம் இவரால் பாதி நிர்வாணம் வரைதான் போக முடிந்திருக்கின்றது.......நெற்கொழுவின் கதைகள் எனக்கு மிகவும்பிடிக்கும்......!  👍

அந்த கொலையைச் செய்தவர் யாரென்றும் சொல்லிவிடுங்கள்!

கதையைப் படித்தவர்களும் இந்த சஸ்பென்ஸை அவிழ்க்க முயன்றால் நல்லது.

Link to comment
Share on other sites

நெற்கொழுதாசனின் சிறந்த எழுத்தாற்றல்.
 

57 minutes ago, கிருபன் said:

அந்த கொலையைச் செய்தவர் யாரென்றும் சொல்லிவிடுங்கள்!

கதையைப் படித்தவர்களும் இந்த சஸ்பென்ஸை அவிழ்க்க முயன்றால் நல்லது.

நான் விளங்கிக் கொண்டபடி 🙂

Quote

 ... ஏரி நிறைந்தால் கரை கசியத்தான் செய்யும். நான் ஏரியை நிறைக்கத்தொடங்கினேன்.

இந்த இடத்திலிருந்து உன்னிப்பாக வாசித்தால் புரியும். இதன்பின் காட்சிகள் றஞ்சித்துக்குச் சார்பாக வேகமாக நகர்கின்றன. ஒரு இடத்திலும் பொன்னியின் கணவன் வரவில்லை. ரஞ்சித் கற்பனையையும் நிஜ வாழ்க்கையையும் கலந்து குழம்பியிருக்க வேண்டும். மன நோயாளிகள் தாம் அதீதமாக விரும்பும் பெண்ணை அடைவதற்கு கொலை வரை செல்வார்கள் என்று திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.

10 வருடங்களின் பின் பொன்னியின் கணவனைப் பார்த்தவுடன் றஞ்சித் விலகிச் செல்வதாக கதையின் ஆரம்பத்தில் சொல்லப்படுலிறது. 

Quote

‘றஞ்சித்’ என்பது எனக்கு யாரும் வைத்த பெயரல்ல. நானாக வைத்துக்கொண்ட பெயர். அடையாளங்களை மறைத்துவிட்டு, விடுபட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க ஒரு பெயர் தேவைப்பட்டது. றஞ்சித் என நான் அறியப்பட முதல்  நான் யாராக இருந்தேன்  என்பது சொல்லப்பட வேண்டிய தேவை   இந்தக் கணம்வரை  இல்லை.  இனியும் வரப்போவதில்லை. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். நான் ஒரு உண்மையான அகதி. கொலைகளை செய்யப் பணிக்கப்பட்டவன். அதிலிருந்து தப்பியோடி அடையாளங்களை மறைத்துக்கொண்டவன்.

பிற்சேர்க்கைப் பத்திரிகைச் செய்திதான் முழப்பமாக உள்ளது. ஒருவேளை ரஞ்சித்தே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருக்கலாம்.  அல்லது தப்பியோடி வாழ்ந்திருக்கலாம் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளருக்கு நல்ல எழுத்தாற்றல் ..உண்மையாய் அவருக்கு நடந்த அனுபவத்தை அடிப்படையாய் வைத்து முடிவை மட்டும் மாத்தி எழுதியிருக்கிறார் 

Link to comment
Share on other sites

கதை எழுதப்பட்ட விதமும், எழுத்து நடையும் நன்றாக இருக்கின்றது. ஆனாலும் கதையின் முதல் பகுதியில் சொல்லப்பட்ட செய்தியும், இறுதியில் ரஞ்சித் 'அவளைப் பற்றி கேட்டு இருக்கலாம்' என நினைப்பதும் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றது. ஏனெனில் கதை சொல்லியான ரஞ்சித் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையே விவரிக்கின்றார். அவள் கொலை செய்ப்பட்டதையும் அறிந்து செய்தியாக பிற்சேர்க்கை என்று முதல் பந்தியிலேயே அவரே தான் சொல்கின்றார். ஆனால் அவளைப் பற்றி கேட்டு இருக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றார்.

எனக்கென்றால் இக் கதையை எழுதியவர் தேவையே இல்லாமல் கதையை ஒரு கொலையுடன் முடிச்சுப் போட்டு வாசகர்களை குழப்பித் தள்ளி பின் அந்த குழப்பத்தையே கதையை பிரபலமாக்கும் ஒரு உத்தியாக மலினமாக கையாண்டு உள்ளாரோ என சந்தேகம் வருகின்றது. ஏனெனில் இப்படியான மலினமான உத்திகளை கையாளும் கதைகளைத் தான் இலக்கிய தரம் என இன்று தூக்கிப் பிடிக்கின்றனர்.

வாசகர்களுக்கு தெளிவாக புரியக் கூடாது; அப்படி புரிந்தால் அது முதலாம் தரமான இலக்கியம் அல்ல என்ற உத்தி இது என சந்தேகின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.