Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் வில்கள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன்.

 


  • வில்லம்பு - வில்லையும் அம்பையும் சேர்த்து வழங்கும் போது வில்லம்பு என்படும்

வில்வித்தை பயிற்றுவிக்குமிடம்: கொட்டில்

 


  • வில்- அம்பு எய்யும் அனைத்தையும் குறிக்கும் பொதுச் சொல்
  • குணி(Skt) - நல்ல தரமான வில்
  • வில்லை விளைவிப்பவர்- வில்செய்வோன்
    • வில்வட்டம் - archery
    • வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் - குலைவில்
    • வில்லின் நாணோசை - இடங்காரம்
    • வில்லின் குதை (notch at the end of a bow to secure the loop of a bow strong.) - குலை
    • வில்லில் நாண் பூட்டல் - குதைத்தல்

→ நாண் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - பூரி , தொடை, ஆவம், பூட்டு, நரம்பு, நாரி, வடம், குணம், கப்பம்.

இந்நாண்கள் மருள், எருக்கு, கஞ்சா செடி, சணல், சணப்பை, புளிச்சை, மூங்கில் ஆகியவற்றினால் ஆனவை என்று கௌடில்யம்(அர்த்தசாஸ்திரம்) குறிக்கிறது. (கிட்டிப்பு(credit): போரியல்: அன்றும் இன்றும் - 4.1.5)

வில்லின் வகைகள் :-

  • சிலை, தனு, வேணு, கார்முகம், சாபம், சிந்துவாரம், முனி, சார்ங்கம்(skt), சராசனம் (skt), பினாகம்(skt), கோதண்டம் , தவர், கொடுமரம், துரோணம்(skt)
    • → பிங்கல நிகண்டு
  • சானகம், காண்டீவம்/காண்டீபம், குடுமி, தடி, தண்டாரம், கேகயம், வாங்குவில், வல்வில்,
    • → இவையெல்லாம் இலக்கியங்களில் இருந்து பொறுக்கப்பட்டவை!

 

இனி, இவை ஒவ்வொன்றினது விளக்கங்களைக் காண்போம்:-

1) சிலை = சில்+ ஐ

  1. சில் - உருளை

சில்லென்றால் தமிழில் சக்கரம் என்று பொருள். எனவே இவை சக்கர வடிவில் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். மேலும் சிலை என்னும் பெயரிற்கு வானவில்(அரை நிலவு வடிவம், இவ்வில்லும் அதே வடிவுடையதே), முழங்கு என்னும் பொருள்களும் உள்ளதால் அம்புவிடும் போது இச்சிலையானது முழங்கும் என்பதையும் ஊகிக்கலாம். இது பலதடிகளாலோ இல்லை மூங்கிலாலோ இல்லை தண்டாலோ ஆனது ஆகும்

main-qimg-06fa3463d7198296e6826c5497c056ba.png

'சங்ககாலச் சேரர்/ கி.மு.2-ஆம் நூற்றாண்டு/ கிடைத்த இடம்: கரூர் / காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

* தண்டாரம் சொல் விளக்கம் எண் 19 இல் காண்க.

 


2) சாபம் = சா+ அம்

இங்கு சா என்றால் வட்டக்கோட்டின் ஒரு பகுதியின் இரு முனைகளையும் சேர்க்கும் கோடு ; அம் என்றால் அழகு எனப் பொருள்படும். இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால்

"ஆவம் → சாவம் = வில்; சாவம் → சாபம்" என்கிறது என்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (பாகம்: ச - சா)

இங்கு ஆவம் = மூங்கில். எனவே, இவ்வில்லானது மூங்கிலால் செய்யப்பட்ட அழகிய வளைந்த வில் என கொள்ளலாம். அத்துடன் சமற்கிருதத்தில் சாபா என்றாலும் மூங்கில் என்றே பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • என் அனுமானம்: மேலும் சாபம் என்னும் சொல்லிற்கு வானவில் என்னும் பொருளும் இருப்பதால் இது அரைவட்ட வடிவ வில் என்பது மேலும் உறுதியாகிறது.

மொத்தத்தில் சாபம் என்றால் வட்டத்தை துண்டாக வெட்டிய வடிவிலான அழகிய வில் என அறிய முடிகிறது. இதன் இலக்கிய பயன்பாடுகள் பற்றி அறிய போரியல்: அன்றும் இன்றும் என்னும் நூலின் புத்தகத்தின் பக்கம் 151 ஐக் காணவும்.

இதன் மறுபெயர் சாகம் ஆகும்.

  • சாபம் → சாவம் → சாகம் என்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி.

இது சிலையிடம் இருந்து வடிவத்தில் ஓரளவிற்கு வேறுபட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அதாவது விரி கோண மட்டளவில் வேறுபட்டிருக்கலாம். எப்படியென்றால் அது நன்கு சுருங்கியதாகவும், இது விரிந்ததாகவும்(இரு படிமத்தையும் நோக்குக) இருக்கும். ஏனெனில் அது உருளை வடிவானது என்றும் இது பொத்தாம் பொதுவாக வட்டத்தின் துண்டு எனவும் வருவதால் , இவ்வாறு நான் துணிகிறேன்.

main-qimg-6b6422b45e5d9ce761d1e88b1f74b805.png

"நடுகல் வீரன் | மைய-அருங்காட்சியகம் சென்னை | கிடைத்த இடம்: விருத்தாசலம் | காலம் அறியில்லை | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை '"

 


3)தனு (தனுசு(Dhanus) வேறு; இது வேறு)

"தண்டு தனுவாள் பணிலநேமி" (கலிங். 226);

  • தன் + உ => உடல்

தனு என்றால் உடல், சிறுமை, நான்கு சாண் கொண்ட நீட்டலளவை என்கிறது செ.சொ.பே.மு.. எனவே தனு என்பது உடல்கூறுகள்(எலும்பு) ஆல் ஆனவை என்று கொள்ளலாம். இது போன்ற உடல் கூற்களால் ஆன வில்கள் 'இனுவிட்டு '(Inuit) இன மக்களாலும் தற்போதுவரை பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

main-qimg-9f49f2f93b1ac4eff7847011d64d2e0c.jpg

'இனுவிட்டு இனத்தவரின் துருவ மான் அ கரடி எலும்பால் ஆன வில் | இது பல வடிவங்களில் உள்ளது | படிமப்புரவு:: Inuit Bows '

இது போன்ற ஒரு வில்லைத்தான் பண்டு மக்களும் பயன்படுத்தியிருப்பர். எப்பொழுதும் தனு ஆல் ஆன வில் கிடைக்காது என்பதால் இது மிகக் குறைந்த அளவே மக்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதிலும் குறிப்பாக இது வேடர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு. இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை.

 


4)வேணு

  • வேணு = உட்டுளையுள்ள குழல், மூங்கில் என்கிறது பிங்கலம்

எனவே வேணு என்பது மூங்கில் தடியால் நேரடியாக ஆக்கப்பட்ட வில் எனக் கொள்ளலாம். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை.


5)கார்முகம்

  • கார்முகம் = வில், மூங்கில் என பொருள் உரைக்கிறது செ.சொ.பே.மு.

அதுவே கௌடில்யியத்தில் கார்முகம் என்பது பனை மரத்தால் ஆன வில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (கிட்டிப்பு(credit): போரியல்: அன்றும் இன்றும் - 4.1.5.1) (கார் என்றால் தமிழில் கருமை ; பனை மரமும் ஒருவகை சாம்பல் கலந்த கறுப்புத் தானே? எனவே பனை மரத்தால் ஆன கருமை நிறங் கொண்ட வில்லாக இது இருந்திருக்கலாம் என்று நான் துணிகிறேன்) இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை.


6)சிந்துவாரம்

  • சிந்துவாரம் - கருநொச்சி, நொச்சி

எனவே சிந்துவாரம் என்பது கருநொச்சி மரக் கிளையால் ஆனது எனலாம். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. (கிட்டிப்பு(credit): போரியல்: அன்றும் இன்றும் - 4.1.5.1)


இது கொஞ்சம் முக்கியம்... கவனமாக வாசிக்கவும்:-

………….

முனியே சார்ங்கம், சராசனம், பினாகம்,

கோதண்டம், தவர், கொடுமரம், துரோணம்

……….

→ பிங்கலம்

மேற்கண்டதில் இருந்து நாம் அறிவது யாதெனில் 'சார்ங்கம், சராசனம், பினாகம், கோதண்டம், தவர், கொடுமரம், துரோணம்' ஆகிய ஏழும் முனியாகுமாம். நிற்க, முனியென்றால் என்ன? முனி யாதெனில்

7)முனி

  • முனி - தெய்வம் , அகத்தி

எனவே அகத்தி மரத்தால் ஆன வில் முனி ஆகும் எனக் கொள்ளலாம். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. மேலும், இங்கு தெய்வம் என்னும் பொருளும் உள்ளதால் முனியானது தெய்வங்களால் பயன்படுத்தப்படும் வில் என்று பொருள்படும். ஆக சார்ங்கம், சராசனம், பினாகம், கோதண்டம், தவர், கொடுமரம், துரோணம் ஆகியவை தெய்வங்களால் பயன்படுத்தப்படுபவை என்றும், இவையனைத்தும் ஒருசேர/பொதுச்சொல்லால் முனி என அழைக்கப்பட்டன என்பதும் அறிய முடிகிறது.

ஆனால் இவற்றில் கோதண்டம் என்னும் வில்லின் வடிவம் சேரர்களின் காசிலும், கொடுமரம் என்னுஞ் சொல் இலக்கியங்களில் வீரர்களின் கைகளில் சுழன்றதாக உள்ளதால், இவையிரண்டும் மாந்தர்களாலும் பயன்படுத்தப் பட்டது என்ற முடிவிற்கு வருகிறேன்.

இனி, இவ்வொவ்வொரு வில்லைப் பற்றியும், அதன் வடிவம் பற்றியும் விரிவாகக் காண்போம்.

 

8)பினாகம்(Skt) - சிவனின் வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை.

9)சார்ங்கம்(Skt) - திருமாலின் வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை.

10)சராசனம்(Skt) - இராமனின் வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை.

11)கோதண்டம் = கோ+தண்டம் - இராமனின் வில்

அதாவது மேலோட்டமாகப் பார்த்தால் இது அரசருக்கு உரியவில் என்னும் வகையில் பொருள் உள்ளது.

இவ்வகை வில்லினை இராமர் கொண்டதால் அவரிற்கு கோதண்ட இராமன் என்னும் பெயரும் ஏற்பட்டதாக பழங்கதைகளில் உள்ளது.

இதை மற்றொரு கோணத்தில் இருந்து பார்த்தால் கோதண்டம் என்னும் முழுச் சொல்லிற்கும் 'புருவ நடுவம்' என்னும் பொருள் உண்டு. அதாவது இப்படி:-

main-qimg-80b515126e4488b3296c323c6b7e44a0.png

மேலும் இதே வடிவ வில்களானவை சேரர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் காசுகளில் இவ்வகை வில்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

main-qimg-29c6dac38ff5847f874e05196932a08f.png

'சங்ககாலச்-சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு| கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

இந்த வில்லின் வடிவத்தினை வைத்து நோக்கும் போது இவ்வகை வில்கள் விளைவிப்பது மிகக் கடினமாக இருந்திருக்கும் என்று கருத இடமுண்டு. ஆகையால் மாந்தர்களில், இவ்வகை வில்களெல்லாம் அரசர்களாலும் அவர்தம் சேனைமுதலிகளால் மட்டுமே பயன்பட்டிருக்கலாம் என்று துணிகிறேன்.

 


12)கொடுமரம் - கொடு+மரம்

  • கொள் → (கொண்) → கொடு = வளைந்த
  • ஒ.நோ:
    • கொடுக்கறுவாள் (முனை வளைந்த அறுவாள்)
    • கொடுங்கை (வளைந்த கை)
  • மரம் - தண்டு

எனவே இவ்வில்லானது முனைப் பகுதிகள் வளைந்த வில்லாக இருந்திருக்க வேண்டும். மேலும் இவ்வாறு முனை வளைந்த வில்களின் சிலைகள் தமிழகத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. முடிவாக வில்லின் இருமுனைகளும் வளைந்திருக்குமாயின் அது கொடுமரம் எனப்படும். இந்தக் கொடுமரமானது மிகவும் நீளமானது என்பது குறிப்பிடத் தக்கது. தன் உயரம் ஒரு சராசரி மாந்தனின் கமக்கட்டில் இருந்து கணுக்கால் வரையிலான உயரமாகும்.

இதன் மறுபெயர் குடுமி ஆகும்.

  • கொடு → குடு → குடுமி என்கிறது செ.சொ.பே.மு.

இவ்வித வில்லனது கண்ணப்பரின் கையிலும் உண்டு. இவர்தவிர வேறு எந்த தெய்வத்தின் கையிலும் இது காணப்படவில்லை. இ

main-qimg-6df75f9acd16969cb5bce8806d05f2f9.png

'கண்ணப்பர், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/ இரண்டாம் இராஜராஜன் | சிற்ப படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

இது கொடுமர வகையைச் சேர்ந்த ஒரு நெடுவில்லாகும். கொடுமரமே நெடியது. அந்த வகையின் மிகவும் உயரமான வில் இதுவாகும். மேற்கண்ட கொடுமரத்தின் நடுப்பகுதியானது வளையாமல் நேராக உள்ளது. ஆனால் கீழுள்ள கொடுமரத்தின் நடுப்பகுதி வளைந்திருப்பதோடு இது மிகவும் உயரமாக உள்ளது.

main-qimg-26aa1b00abf24a3c558f03aede358a7b.png

'ஜவ்வாதுமலை சோழா் காலத்து அரியவகை நாய் நடுகல் | படிமப்புரவு: தினமணி'


13)தவர் -

  • தவர் = துளை, வில்

எனவே தவர் என்பது துளை உள்ள தண்டால் ஆன வில் எனக் கொள்ளலாம். (கிட்டிப்பு(credit): போரியல்: அன்றும் இன்றும் - 4.1.5.1)

 


14)துரோணம்(Skt) - குருகுல ஆசிரியரின்(?) கையில் உள்ள வில்/ துரோணாச்சாரியாரின் கையில் உள்ள வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை.


 

15)சானகம் - என்னவென்று அறியமுடியவில்லை. ஆனல் சிந்தாமணி நிகண்டில் இக்குறிப்பு உள்ளது.

"சானகமே துரோணஞ் " சிந்தாமணி 364 (சிந்தாமணி நிகண்டு, செய்யுள் - 364)

எனவே துரோணம் என்னுஞ் சொல்லிற்கு சானகம் மறுபெயர் என்பது புலப்படுகிறது. இச்சொல்லின் வேர்ச்சொல் என்னால் அறியமுடியவில்லை. இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை.

  • குறிப்பு: சன்னகம்(Blowgun) என்னுஞ் சொல்லை இதனோடு போட்டுக் குழப்பியடிக்க வேண்டாம். அது வேறுவாய்; இது வேறுவாய்😜

 


16)காண்டீபம்/ காண்டீவம்/ காண்டிபம்/ காண்டிவம்/ காண்டியம்- அருச்சுனனின் வில். இதன் வடிவம் பற்றி அறிய முடியவில்லை.


 

17)கேகயம்

இதன் சொற்பிறப்பாவது,

  • கவை - கேவு - கேகம் - கேகயம்
    • என்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (பாகம்: கெ- ஙௌ) .

கேகயம் என்றால் வளைவு என்றும் பொருளுள்ளது என்கிறது செ.சொ.பே.மு.. எனவே நாம் கேகயம் என்பதும் வளைந்த வில் என்றே கொள்ள முடிகிறது. இதுவும் சாபத்தின் வடிவினை ஒத்ததே.


 

18)தடி -

தடி என்பது தடியால் ஆன வில்லாகும். அதாவது சாதாரண ஏதாவது ஒரு மரத்தில்/செடியில் இருந்து கிடைத்த தடியால் ஆன வில். இது வளைந்த வடிவினதாய் இருக்கும்.

main-qimg-52b7470fda7ebb8e946798a2767e7466.png

'கருவேலந் தடியில் இருந்து ஆன வில் | படிமப்புரவு: யூடியூப்'

 


19)தண்டாரம்

  • தண்டு → தண்டம்+ஆயம் → ஆரம் → தண்டாரம்
    • என்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி
    • தண்டு - திரண்ட தடி
    • ஆரம் - வட்ட வடிவம்

தண்டால் ஆன வில் தண்டாரம் ஆகு. இது தடியினை விடக் கொஞ்சம் தடிமனானது ஆகும். அதாவது ஒரு மரத்தின் தண்டில் இருந்து நேரத்தியாகச் செய்யப்பட்ட வட்டவடிவ வில். அதாவது சிலை போன்றது; இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்போனல் சிலையின் ஒத்தசொல்லே தண்டாரம் ஆகும்.

 


20)வாங்குவில் -

இது வாங்கிய வில் எனப்பொருள்படும். வாங்குதல் என்றால் உள்நோக்கி வளைதல் என்று பொருள் (அவனுக்கு கை ஒருபக்கம் அப்பிடியே வாங்கிற்று - பேச்சு வழக்கு) . எனவே நடுவில் நன்கு வளைந்திருக்கும் வில் எனப் பொருள்படும். இவ்வகை வில்லை சேரர்கள் வாங்குவில் என்றே அழைத்தனர்.

"வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த" (சிறுபாணாற்றுப்படை, 48)

.

"வாங்குவில் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்" (முத்தொள்ளாயிரம்)

.

"மராமரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை, வல்வில் இராமனை வெல்ல வல்லவன் என்ப திசையலால் கண்டதில்லை " (திருத்தக்கதேவர், சீவக. 1643)

எம்மிடம் மொத்தம் 6 வகையான வாங்கு வில்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. அவையாவன:-

main-qimg-0cbee8ee91141f3be309ccf56c755ca4.png

'சங்ககாலச் சேரர் | கி.மு.2-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

main-qimg-09893cc6aa46f03360f49f33d8348035.png

'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

main-qimg-a1be832d0b655899eccae62334cee0e6.png

'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

main-qimg-7d0a85032324d8f0c94f936cbf412a60.png

'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு:தமிழிணையம் - தகவலாற்றுப்படை '

main-qimg-9302a916eec7838027d3f5d53d27479e.png

'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

மேற்கண்ட வடிவ வாங்குவில்லானது உலகிலேயே சேரர்களிடம் மட்டுமே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது!

main-qimg-60df81891252e2abf2f30d9297ad795d.png

'சங்ககாலச் சேரர் | கி.மு.1-ஆம் நூற்றாண்டு | கண்டெடுத்த இடம் - கரூர் | காசுப் படிமப்புரவு: தமிழிணையம் - தகவலாற்றுப்படை'

 


→ கீழ்க்கண்ட தகவலானது போரியல்: அன்றும் இன்றும் என்னும் நூலின் 4.1.4 இல் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்:

21)வல்வில்

'கைபுனை வல்வில்' 'வரிபுனை வல்வில்' 'அம்சிலை வல்வில்' 'கோட்டு அமை வல்வில்' 'பொன் அணி வல்வில்' 'உருவ வல்வில்' 'வாள்போழ் வல்வில்' 'விசைப்புறு வல்வில்'

என வல்வில் பல்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடப்படுகிறது. அம்மொழிகளின் விளக்கங்கள் முறையே,

' வேலைப்பாடு நிறைந்தது(கை புனை, வரி புனை), அழகு மிக்கது, வளைந்து அமைந்திருந்த வில், பொன்னினை அணிந்த வில், நல் உரு உடையது, வாளைக்கூட பிளக்கும் தன்மையுடையது, அம்புகளை உறுதியான மிகுந்த விசையோடு செலுத்தும் இயல்பினது'

என விளங்க முடிகிறது. மேலும், இவ்வில்லில் இருந்து செல்லும் கணையானது,

'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்

புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்

கேழற் பன்றி வீழ, அயலது

ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்'

→ புறனானூறு - பெயர் கேட்க நாணினன்(152)

'வேழம் வீழ்த்தி, புலி பிளந்து, கலைமான் உருட்டி, ஆண் பன்றி வீழ்த்தி, புற்றின் கண் உள்ள உடும்பினைச் சென்று தைத்தது' என வல்வில் வேட்டத்தைப் வன்பரணர் குறித்துள்ளதால், ஒரே எய்வில் பன்னிலக்குகளை துளைக்கும் ஆற்றல் பெற்ற ஒருவனின் வில், வல்வில் எனப்பட்டது என்பது புலனாகிறது.

இவற்றுடன் இதற்கொரு கூடுதல் ஆதாரம் சேர்க்கும் பொருட்டு மற்றொரு மேற்கோளையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

வற்பார் திரடோளைந் நான்குந் துணித்த வல் விலிராமன்

(திவ். பெரியதி. 5, 1, 4); (புறநா. 152, 6 அடிக்குறிப்பு).

சாதாரண வில் கொண்டிருந்த இறை சத்து மிக்க இராமனும் பல பொருண்மைகளை ஊடுருவிச் செல்லும் வகையில் அம்புவிடும் வல்வில்லினை உடையவனாம் !

 


இவையே பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வில்களாகும்!

  • கூடுதல் தகவல்கள்:-

செலுத்துவதை மட்டும் பார்த்தால் எப்படி.. செலுத்தப்படுவதையும் பார்க்க வேண்டாமா?

 


 

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • போரியல்: அன்றும் இன்றும் - 4.0.

கறுப்பு நிற வில்களிற்கான படிமப்புரவு

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.