Jump to content

தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் நீர் மேலாண்மை...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் நீர் மேலாண்மை...

 

 

 
வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். 

அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28)


இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

"நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'' (புறம்-18,28-30)


என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

"அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ'' (புறம்.118)


எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

"வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
நல்குரவு சேரப்பட்டார்'' (83)

என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, "யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்' என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

"பெருங்குளக் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே'' (25)


என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள். சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை' என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்'' (1384-87)


என்கிறார். "சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு' என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு' அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை' எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது' (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது.!!!
http://sathyasenthil77.blogspot.com/2012/11/blog-post_29.html
 
 
 
 
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                       விழுப்புரம் மாவட்டம்.
                      
தமிழ்நாடு - இந்தியா.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப் பெருக்கும் தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்

தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்

ருக்கும் தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்
தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்நாள், வார, திங்கள்(மாதம்) எனும் கால நிலைகளின் அடையாளத்தில் பன்னிரு திங்கள் பகுப்பு என்பது இயற்கைச் சூழலறிவின் பயன்பாட்டைப் புலப் படுத்துகிறது. சித்திரைத் திங்களுக்குப் பிறகான நான்காவது திங்களாக அமைந்தது ‘ஆடித் திங்கள்’. கோடை வெப்பம் அமைதி அடைவதற்கான மடைத்  தொடக்கம் ஆனி தொடங்கி ஆடி முற்பகுதி வரை பரவலாக அமைகிறது. இந்த நாள்களின் மழைப் பயன்பாடு உழவு நிலங்களைப் பயிர் செய்யத் தயார்ப் படுத்தும் முறையில் அமைகிறது.
தமிழர்களின் நீர் முகாமைத்துவமும் ஆடிப் பெருக்கு

விதைப் பயிர்கள் ஆடி பதினெட்டு சார்ந்து விதைக்கப் படுகின்றன. நாற்றுப் பண்ணையில் விதைக்கப் படுகின்ற இந்தக் காலத்தின்  அடையாளத்தில் ஆடித் திங்களின் பதினெட்டாம் நாள் சிறப்பிடம் பெறுகிறது.

ஆடிப்பெருக்கு என்றால் என்ன?
தமிழர்களின் நீர் முகாமைத்துவமும் முளைப்பாரி

விதை விதைத்து நாற்றுப் பயிர்களை வளர்த்தெடுக்கிற நாள்களின் அடிப்படையில் அமைந்த விழா ஆடிப் பெருக்கு. நாற்று வளர்த்து நடப்படுவதற்கு முன்னர் கொண்டாடப் படுகின்ற விழாவாக ஆடிப்பெருக்கு அமைகிறது. நிலத்தில் நாற்று பயிரிடப் படுவதற்கு முன்னர் நீரோட்டம் அல்லது ஆற்றுப் பெருக்கு கணக்கிடப் படுகிறது. நீர்ப் பெருக்கம், பெருகி வரும் நீரைப் பயன் படுத்துவதற்கான செயல் முறைகளை உணர்த்துகிறது ஆடிப் பெருக்கு.

நிலம் நனைந்து பெருகி வரும் நீரைப் பயன்படுத்துதலும், நீரைத் தொடர்ந்து பயன்படுத்திப் பயிரை வளர்த்தெடுப் பதற்கான வழிமுறைகளோடும், இயற்கையின் ஆற்றலான மழையையும் அதனைப் பயன்படுத்துவதற்கு அமைந்த நீரோட்டத்தையும் நினைவுகூரும் நாளாக ஆடிப்பெருக்கினை உணர வேண்டும். இப்படி உணரத் தலைப்பட்டதில் மக்கள் செலுத்திய வணக்கத்திற்கான அடையாள நாளாக ஆடிப்பெருக்கு அமைகிறது. வயல் சார்ந்து அமைக்கப் பெற்ற நீர்நிலைகள் குளங்களாக உள்ளன. ஆற்றுப் பெருக்கு வயல் பாசனமாக வந்து சேருகிற வரையில் நீரைப் பயன்படுத்துதலும் நிலைப்படுத்துதலும் ஆகிய பணிகள் கவனமாகக் கையாளப் பட்டுள்ளன.

காலத்தைக் கணித்தல்

காலத்தைக் கணித்தல் முறையிலான அறிவில், கோயிலின் உள்ளே கதிரவன் ஒளி விழும் அமைப்பில் கோயில் கட்டப்பட்டுள்ள முறைகள் உள்ளன. நீரைப் பயன் படுத்துதலில் உள்ள கவனத்தை கோயிலின் உள்ளே உள்ள கருவறையில் நீர் வரும் அமைப்பில்(திருஊறல்/திரு அணைக்கா) கட்டப்பட்டுள்ள கோயில்களின் மூலமாக அறியலாம்.

கால இயக்கம் இட(நில) நிலை இவைகளை அறிந்து நீரைப் பயன்படுத்தி பயிர்களை வளர்க்கிற வரலாற்றில் விதைக்கிற கால அடையாளமாக ஆடித்திங்கள் மிக முக்கிய இடம் பெறுகிறது. அதிலும் நாற்றுத் தயாரிப்பு முறையில் நடவுக்கு முன்னான ஆடித்திங்களின் பதினெட்டாம் நாள் கொண்டாட்டத்திற்கு உரியதாக அமைந்தது. பயிர்கள் வளர்வதில் நீர்வளம் நிறைகிற வகையில் அமைந்த இயற்கையை ஐப்பசி-கார்த்திகையில் காண்கிறோம். ஐப்பசி அடை மழைக் காலங்களில் நீரைப் பயன்கொள்ளும் அறிவாற்றலின் அறிவுறுத்தும் ஐப்பசித் திங்கள் முழுவதற்குமான கொண்டாட்டம் ஐப்பசி முழுக்கு. இதன் இறுதி கார்த்திகைத் திங்களின் தொடக்க நாளன்று ‘முடமுழுக்கு’ என்று கொண்டாடப் பெறுகிறது. நீரோட்டத்தை முடக்குப்படுத்தி அல்லது நிலை நிறுத்திடும் பணியை கார்த்திகைத் திங்களின் தொடக்கத்திலேயே செய்ய வேண்டும் என்பது இதன் அடையாளம். இதனை உணர்த்தும் கதை மரபுகள் முற்றிலும் இருட்டடிப்பு முறையிலான சடங்குகளாக வழிவழி எடுத்துரைக்கப் பட்டு கட்டமைக்கப் படுகின்றன.

முளைப்பாரி இட்டு வழிபடுவதுமயிலாடுதுறை எனும் ஊரின் சார்பில் காவிரி ஆற்றில் நடை பெறும் ஐப்பசி முழுக்கு வரலாற்றில் சிவபெரு மானிடம் ஒரு பெண் கலந்தாள் (நாதசர்மா என்பார் மனைவி அனவித் யாம்பாள்) என்றும் அந்த லிங்கதிற்கு சேலை அணிவிக்கப் படுகிறது என்பதும் மரபு. இதன் வரலாற்றுக்கு உரிய மூலமானது தாய்வழிச் சமூக வரலாற்றை உணர்த்துவதாகும். பெண்கள் உற்பத்தி வரலாற்றின் செய்தியை அடையாளப் படுத்துவது இந்த வழிபாட்டு முறை. இந்த வரலாற்றின் உள்ளடக்கங்களோடு ஆடிப்பெருக்கு சார்ந்த பெண்டிர் செயல்பாடுகள் தற்சார்பு முறையில் பின்பற்றப் படுகின்றன. உழவு – உற்பத்தி வரலாற்றில் நாற்று விடுதல் தொடங்கி காலக் கணக்கீடு நூல்முடிச்சு போடப்பட்டு கணக்கிடப்படும். பிள்ளைப்பேறுக்கு உரிய பெண் உற்பத்தித் தொழிலுக்கு உரியவளாக இருந்து விதை விதைத்தலைச் செய்தாள். தொடர்ந்து நெல் முதலான உற்பத்தியை முழுவதுமாகப் பெண்கள் செய்ய, சேகரித்தல் தொழிலில் ஆடவர் ஈடுபட்டனர். உற்பத்திக்கு உரிய மழை பெண் சார்ந்து அடையாளப்பட்டு ‘மாரி’ வழிபாடு வந்தது. நீர்த்திவலையில் தூய்மை, பசுமை வகையில் முத்துமாரி, பச்சை வாழி போன்ற அடையாளங்கள் அமைந்தன.

போர் வகையிலும் ‘கொற்றவை’ அடையாள வரலாறுகள்  உள்ளன. இயற்கையோடு உற்பத்தி முறையிலும் குழந்தையை ஈனும் ‘கரு’ வகையிலும் கடவுளான பெண்ணின் வரலாற்றினை உணர்த்தும் நூல் முடிப்பு, முளைப்பாரி செயல்பாடுகள் வரலாற்றை மறைத்து மகிமை நோக்கில் தற்போது கொண்டாடப் படுகின்றன. கன்னிப் பெண்ணின் கையில் கட்டப்பட்ட முடிச்சுக் கயிறு காப்புக் கயிறாக உள்ளது. பின் கழுத்தில் மங்கல நாணாக அமைந்தது. பயிர் உற்பத்தி செய்த பெண் வரலாறு, சடங்கில் முளைப்பாரி சுமக்கும் வரலாறாக உள்ளது.

உற்பத்தி முறை விரிந்த காலத்தில் நீர்ப்பாசன முறைக்கு உரிய செயல்பாடுகளின் அறிவுத்திறனும், உற்பத்திக்கு மூலமான வரலாற்று அம்சங்களும் ஆடிப்பெருக்கில் பிணைந்துள்ளன. இதன் வளர்ச்சிப் போக்கு ஐப்பசித் திங்கள் காவிரிப் போக்கிலான முழுக்கிலும் அறிய வருகின்றன.

கன்னிப் பெண்கள் திருமணம், வளைகாப்பு, மஞ்சல் சரடு கட்டிக் கொள்வது, காவிரிக்கு செய்யப்படும் வழிபாட்டு முறைகள், செல்வம் பெருக வேண்டுதல் எனத் தற்போது கொண்டாடப்படும் செயல்பாடுகள் பெண்டிர் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த வரலாற்றை உடன்கொண்டவை. மரபு பேணலாக இவை அமைந்தாலும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான போக்கினைக் கொண்ட சடங்குகளாகப் பட்டிருக்கின்றன. உற்பத்திக்கான நீர்வளத்தைக் காப்பாற்றும் முறைகளைச் சிந்திப்பதற்கான வாய்ப்பையும் மறக்கடித்துள்ளன.

ஆடிப்பட்டம் தேடி விதை

மழை பொழியத் தொடங்குகிற ஆனித் திங்களை யொட்டி, ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது அறிவுறுத்தப்படுகிறது. அறுவடைக் காலத்தின் இயற்கைச் சூழலைக் கணித்து அப்படிக் கூறப்பட்டது. சித்திரை தொடங்கி ஆறு திங்களின் முன்பின்னாக விதைத்தலும் அறுவடை செய்தலும் கணிக்கப்படுகின்றன. விதைத்தலுக்கு முன்னான மழை, பயிர் செழித்தலுக்கானதும்  பயிர் மழையைத் தாங்கி வீழாமல் நிற்றலுக்கான முறையில் ஐப்பசி மழை, குளிரும் வெப்பமுமான சூழலில் பயிர் வளர்ச்சி பின் அறுவடை என வானத்து மழையை ஒட்டியே பயிர் வளர்ப்பு கணிக்கப்பட்டது. ஆயினும், நீர்ப் பெருக்கினைப் பயன்படுத்துதல் என்பது கவனமாகக் கையாளப் பட்டது. மழை சார்ந்த கொள்ளளவில் ‘ஏரி’, வயல் சார்ந்த பயன்பாட்டில் குளம் என நீர்நிலைகள் விண்ணுக்கும் மண்ணுக்குமான தொடர்பில் கட்டியமைக்கப்பட்டன.

இந்த நில நீர் நிர்வாகம் கதிரவன் இயக்கத்தை ஒட்டி சீரமைக்கப்பட்டது. மழைநீர் பெருகி ஓடும் நிலையில் ஆற்றுப்பெருக்கின் பயன்பாடு அறிவுறுத்தப்பட்டு, ஆடிப்பெருக்கு நீர் நிர்வாகத்தை உற்பத்தி நோக்கி அறிவுறுத்துகிறது. காவிரி, வைகை, தாமிரபரணி, கெடிலம், பெண்ணை என அனைத்து நீர் போக்கு – வரத்து படுகைகளும் கவனம் பெறுகின்றன. இவை சார்ந்த ஏரி, குளம் நிறைத்தலில் தொடக்க நிகழ்ச்சியை ஆடிப்பெருக்கு அறிவுறுத்துகிறது. இதன் நிறைவை ‘ஐப்பசி திங்கள்’ நீர்ப் பயன்பாட்டைக் கணித்தல் கடவுளை இணைத்த வகையில் கட்டாயமாக்கப் படுகிறது. இப்படி கடவுளையும் இயற்கை வழிபாட்டையும் இணைத்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் செயல்முறைகள் கட்டாய கட்டமைப்பு நிர்வாகத்தைக் கவனப்படுத்துபவை. இயற்கை தற்சார்பு நலமாக மாற்றி புராணங்கள் செய்த புனைவுகளின் மூலமாக தற்கால கொண்டாட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

நீர்பாசனத்தை உற்பத்திக் காலம் தொடங்கி கையாளுவதை அரசு உணர வேண்டும். அதை மக்கள் விழிப்புணர்வு மூலமே நடைமுறையாக்க முடியும். வெறும் வழிபாட்டல அது. மக்கள் வாழ்தலுக்கான உற்பத்திச் செயல் முறைகளுக்கான திட்டமிடல். இயற்கையான மழையே ஆடிப்பட்டம் தொடங்கி விதையை அறுவடைக்கு ஆக்குகிறது. ஆனாலும் நீரைத் தொடர்ந்து முறையாகப் பயன்படுத்துவதற்கு திட்டமிடலை ஆற்றுப் பாசனத்தை நோக்கி மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆடிப்பெருக்கு அறிவுறுத்துகிறது. அதை முற்றிலுமாக முறைப்படுத்திக் கொள்ள வேண்டியதை ‘ ஐப்பசி முழுக்கு’ அறிவுறுத்துகிறது

 

https://www.ilakku.org/water-management-of-audi-perukku-tamils/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.