Jump to content

மாலிக் - சினிமா விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாலிக் - சினிமா விமர்சனம்

 

 

மாலிக் படம்.

பட மூலாதாரம், Malik - official teaser

 
படக்குறிப்பு,

மாலிக் படம்.

நடிகர்கள்: ஃபஹத்ஃபாசில், நிமிஷா சஜயன், வினய் ஃபோர்ட், சலஜா, சலீம் குமார், ஜோஜு ஜார்ஜ், பார்வதி கிருஷ்ணா; ஒளிப்பதிவு: சானு வர்கீஸ்; இசை: சுஷின் ஷ்யாம்; கதை, இயக்கம்: மகேஷ் நாராயணன். வெளியீடு: அமேசான் ப்ரைம்.

மலையாளத் திரையுலகில் சமீப காலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் இது. ஃடேக் ஆஃப் படத்திற்குப் பிறகு இயக்குனர் மகேஷ் நாராயணனும் ஃபஹத் ஃபாசிலும் மீண்டும் இணைந்திருந்தது மட்டுமே இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் அல்ல. 2009ல் கேரளாவின் பீமாபள்ளியில் நடந்த கலவரத்தையும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டையும் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்ற செய்திகள் பரவியதும் இந்த எதிர்பார்ப்பிற்கு ஒரு முக்கியக் காரணம்.

திருவனந்தபுரத்தில் பீமாபள்ளி, செரியத்துரா என்ற இரு மீன்பிடி கிராமங்கள் அருகருகே இருக்கின்றன. பீமாபள்ளியில் இஸ்லாமியர்களும் சேரத்துராவில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் வாழ்ந்துவந்த நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி ஒரு கலவரம் மூண்டது. அப்போது நடத்தப்பட்ட காவல்துறை துப்பாக்கிச் சூட்டில், 6 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயமடைந்தனர்.

மதக் கலவரம் ஏற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை சொன்னது. அந்தத் துப்பாக்கிச் சூட்டில் முதன்முதலில் 16 வயதுச் சிறுவன் கொல்லப்பட்டு, காவல்துறையால் தூக்கிச்செல்லப்படும் காட்சிகள் அந்தத் தருணத்தில் ஊடகங்களில் வெளியாகி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்தப் பின்னணியில்தான் மாலிக்கின் கதை உருவாகியிருக்கிறது.

ரமடாபள்ளியைச் சேர்ந்த சுலைமான் ஹஜ் பயணத்திற்காக விமான நிலையத்திற்குச் செல்லும்போது, கைதுசெய்யப்படுகிறார். அவரை சிறையிலேயே கொல்ல முயற்சிகள் நடக்கின்றன. யார் இந்த சுலைமான், அவரைப் பலரும் கொல்ல முயல்வது ஏன் என்பதே இந்தப் படத்தின் கதை.

1960களில் இருந்து 2018வரை நடக்கிறது கதை. படத்தின் பெரும்பகுதி ஃப்ளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது. பீமாபள்ளி ரமடாபள்ளியாகவும் சேரத்துரா எடவத்துராவாகவும் காட்டப்படுகின்றன. நாயகன் திரைப்படத்தின் பாணியில், ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக தனிமனித சாகசங்களின் மூலம் உருவெடுக்கும் ஒரு தலைவனின் கதையாகவும் இந்தப் படத்தைப் பார்க்க முடியும்.

இஸ்லாமிய - கிறிஸ்தவ மக்களுக்கு இடையில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு மோதலை பின்னணியாக வைத்து ஒரு படத்தை எடுப்பது கத்தி மேல் நடப்பதைப் போன்றது. பீமாபள்ளி கலவரம் நடந்தது சிபிஎம்மின் ஆட்சிக்காலத்தில். அதே சி.பி.எம்மின் ஆட்சி நடக்கும்போது, இம்மாதிரி ஒரு கதையைத் தேர்வுசெய்யவே மிகுந்த துணிச்சல் தேவை.

இம்மாதிரி கதைகளை உள்ளது உள்ளபடி எடுத்தாலே, பல சிக்கல்கள் வரும். ஆகையால், தனிமனிதர்களின் அரசியல், பொறாமை, சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றை காரணங்களாக முன்வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

விறுவிறுப்பாகத் துவங்குகிறது படம். கதாநாயகன் கைது செய்யப்பட்டதும் விறுவிறுப்பு உச்சகட்டத்தை எட்டுகிறது. ஆனால், அந்த விறுவிறுப்பு விரைவிலேயே காணாமல் போய்விடுகிறது. இதற்கு முக்கியமான காரணம், ஃப்ளாஷ்பேக். இம்மாதிரி தாதா கதைகளில் ஃப்ளாஷ்பேக் பெரும்பாலும் வேகத்தைக் குறைக்கும். இந்தப் படத்தில் இன்னும் மோசமாக இருக்கிறது. ஒன்றிரண்டு அல்ல, ஏகப்பட்ட ஃப்ளாஷ்பேக் இருப்பதால், ஒரு கட்டத்தில் துவக்கத்தில் இருந்த சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் மறைந்தே போய்விடுகிறது. பிறகு, மீண்டும் இறுதிக் காட்சிகளில்தான் சற்று சூடுபிடிக்கிறது படம்.

மாலிக் படம்.

பட மூலாதாரம், Malik official teaser

ஃபஹத் ஃபாசிலுக்கு மற்றும் ஒரு சிறந்த படம். ஆனால், படத்தில் ஸ்கோர் செய்வது நாயகியாக வரும் நிமிஷா சஜயன்தான். தொண்டிமுத்தலும் த்ரிக்ஷாஷியும் துவங்கி, ஒன், தி கிரேட் இந்தியன் கிச்சன், நாயாட்டு, மாலிக் என வரிசையாக அடுத்தடுத்த உயரங்களுக்குச் சென்றிருக்கிறார் நிமிஷா. நண்பனாக நடித்திருக்கும் வினய் ஃபோர்ட்டுக்கும் நல்ல வாய்ப்பு.

சானு வர்கீஸின் ஒளிப்பதிவில் சில பிரமாதமான காட்சிகள் இருக்கின்றன.

மாலிக் ஒரு வழக்கமான 'காட் ஃபாதர்' பாணி திரைப்படத்தைப் போல முதல் பார்வைக்குத் தென்பட்டாலும், ஒரு சிக்கலான சம்பவத்தை முடிந்த அளவுக்கு நெருக்கமாகக் காட்டுகிறது. அந்த விதத்தில் மிக முக்கியமான திரைப்படம்.https://www.bbc.com/tamil/arts-and-culture-57855860

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.