Jump to content

பார்ப்பனர், பார்ப்பனியம் பற்றி பெரியார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனர், பார்ப்பனியம் பற்றி பெரியார்

spacer.png

எஸ்.வி.ராஜதுரை 

ஹிட்லரின் நாஜி கட்சியினரிடமும் ஐரோப்பிய-அமெரிக்க வெள்ளை இனத்தவரிடையேயும் உள்ள இனவாதக் கண்ணோட்டம் (Racism), பெரியாரிடமும் அவரது இயக்கத்தினரிடமும் இருந்ததாகவும், இருந்துவருவதாகவும் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு பார்ப்பன அறிவாளிகள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சாதி-எதிர்ப்பு, மதச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றை உயர்த்துப் பிடிக்கும் The Wire என்ற புகழ்பெற்ற இணையதள நாளேட்டிலும்கூட இரண்டாண்டுகளுக்கு முன் இரு பார்ப்பன அறிவாளிகள் (இவர்கள் தங்களை முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொள்பவர்கள்) பெரியார் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் எழுதிவந்தனர். இந்தக் கட்டுரைகளில் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, பெரியார் ஓர் இனவாதி (Racist) என்பதாகும். இவர்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே காலஞ்சென்ற எழுத்தாளர் அசோகமித்திரன், நாஜி ஜெர்மனியில் யூதர்களுக்கு இருந்தது போன்ற நிலையில்தான் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்று கூறும் அளவுக்குச் சென்றார். The Wire ஏட்டில் பெரியாரைத் தாக்கி அடுத்தடுத்து எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு பெரியார் பற்றாளர்கள் சிலர் - குறிப்பாக ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் - தக்க பதிலடி கொடுத்த பிறகு அந்த ஏட்டில் பெரியார் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் கட்டுரைகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது.

பெரியாரைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பவர்களும், என்னதான் ‘முற்போக்கு’ வேடம் பூண்டிருந்தாலும், ‘பார்ப்பனர்’ என்ற சொல்லால் துன்புறும் அளவுக்கு பார்ப்பனிய மனப்பான்மை கொண்டிருப்பவர்களுமான மேற்சொன்ன அறிவாளிகள், ஒருபோதும் சுய பரிசோதனை செய்து கொள்வதில்லை. அப்படிச் செய்து கொள்வார்களேயானால், தங்களை ‘பிராமணர்கள்’ என்று விளிப்பதைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் ‘பிராமணர்களோ’, ‘பார்ப்பனர்களோ’ அல்லர், மாறாக மற்ற எல்லோரையும் போலவே மனிதப் பிறவிகள்தான் என்று ஒப்புக்கொள்வார்கள்.

இத்தாலியில் பாசிசமும், ஜெர்மனியில் நாஜிசமும் தோன்றியபோது, அவற்றைக் கண்டனம் செய்து எழுதியவை சுயமரியாதை ஏடுகளான ‘குடி அரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’ ஆகியவை என்பதை இவர்கள் இனியேனும் அறிந்துகொள்ள வேண்டும்.

spacer.png

இந்தத் தாக்குதல் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. அதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கின் கீழ் இயங்கும் தனியார் பள்ளியொன்றில் வணிகவியல் ஆசிரியராக இருந்த ஒரு பார்ப்பனர், பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டதுதான். அந்தப் பள்ளி நிர்வாகத்தோடு தொடர்புடைய மதுவந்தி என்னும் பார்ப்பனப் பெண் முதல் சுப்பிரமணியம் சுவாமி வரை, தமிழகத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே குறிவைத்துத் தாக்கப்படுவதற்கும் அவர்கள் யூதர்களைப் போல நடத்தப்படுவதற்கும் திராவிட இயக்கமே காரணம் என்று ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டிகளிலும் அறிக்கைகளிலும் கூறி வந்தனர். பார்ப்பனர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் (கைது நடவடிக்கைகள்) நிறுத்தப்படாவிட்டால் புதிதாக அமைந்துள்ள திமுக அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் தயங்க மாட்டேன் என்று மிரட்டல் விடுக்கும் அளவுக்கு சுப்பிரமணியம் சுவாமி சென்றார். அதன் பிறகு பார்ப்பனரல்லாத ஓர் ஆசிரியரும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டதாலும், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் நடப்பதாகச் சொல்லப்படும் பாலியல் குற்றங்களைப் பற்றிய புலனாய்வில் தமிழக காவல்துறை மும்முரமாக ஈடுபட்டதாலும், பார்ப்பனர்கள் மட்டுமே குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஓரளவு ஓய்ந்துள்ளது.

அண்ணல் அம்பேத்கரைப் போலவே பெரியாரும் பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் வேறுபடுத்திப் பார்த்தார் என்றாலும், இருவருமே பார்ப்பனியத்தின் முதன்மையான முகவர்களாக இன்றுவரை பார்ப்பனர்களே இருந்து வருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதன் காரணமாகத்தான் 1947இல் ‘குடி அரசு’ ஏட்டில் ‘தோழர்களே’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தலையங்கம் ஒன்று கூறியது...

‘ஜாதி, மதம், கடவுள், சமுதாயம், அரசியல் துறைகளில் புரட்சி மாறுபாடுகள் ஏற்பட வேண்டும் என்று கருதி, அதாவது இவற்றில் உள்ள நடப்புகள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று இல்லாமல் அடியோடு அழித்து ஒரே தன்மையானதாக ஆக்கப்பட வேண்டும் என்று போராடத் தொடங்கிய ஓர் இயக்கம் சுய மரியாதை இயக்கமாகும். இந்த நாட்டில் தீண்டாமை ஒழிப்பு சங்கம் இருக்கலாம். ஆனால், அது ஜாதியை ஒழிக்க சம்மதிக்காது. ஜாதி ஒழிப்பு சங்கம் இருக்கலாம். ஆனால், அது மதத்தை ஒழிக்க சம்மதிக்காது. அது போலவே இந்த நாட்டில் மத ஒழிப்பு சங்கம் இருக்கலாம். ஆனால், அது மதத்துக்கு ஆதாரமான கடவுள்களையும், கடவுள் சம்பந்தமான முரண்பட்ட உணர்ச்சிகளையும் மூட நம்பிக்கையையும் ஒழிக்க சம்மதிக்காது. கடவுள் சம்பந்தமான முரண்பட்ட தன்மை, மூட நம்பிக்கை ஆகியவற்றை ஒழிக்கும் சங்கம் இருக்கலாம். ஆனால், அதுசம்பந்தமான சாஸ்திர ஆதாரங்களை ஒழிக்கச் சம்மதிக்காது. அந்நிய ஆட்சியை ஒழிக்கும் சங்கமாக இருக்கலாம். ஆனால், அது அந்நிய பேதங்களை ஒழிக்கும் சங்கமாக இருக்காது. ஆனால், சுயமரியாதை இயக்கமானது எது சரியோ, அதாவது பகுத்தறிவுக்கு எது சரி என்று பட்டதோ அதைத் தவிர மற்றவை எவை ஆனாலும் அவற்றை அழிப்பதில் துணிவுடன் கவலையுடன் உண்மையுடன் பணியாற்றி வருகிறது…

பார்ப்பானை வேறுபடுத்திக் காட்டுவதன் மூலமே ஜாதி, மத, கடவுள், சாஸ்திர, புராணத் தொல்லையிலிருந்தும், கொடுமையிலிருந்தும் மக்களை மீள வைக்க சுலபமாக முடிகிறது.’ (குடி அரசு, 4.1.1947)

‘பார்ப்பானை வேறுபடுத்திக் காட்டுதல்’ என்பதன் பொருள் பார்ப்பன சமுதாயத்தை ஒழித்துக்கட்டுவது என்பதல்ல. அரசியல், பண்பாடு, பொருளாதாரம், சமூக நடைமுறைகள் அனைத்திலும் பார்ப்பனர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தையும் முற்றுரிமையையும் கேள்விக்குட்படுத்தி வந்த சுய மரியாதை இயக்கம் அரசியலிலோ, நிர்வாக இயந்திரத்திலோ பார்ப்பனர்களுக்கு எந்தப் பங்கும் தரப்படக் கூடாது என்று கூறியதில்லை. இதை 1929ஆம் ஆண்டிலேயே பெரியார் உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்த ஆண்டில் நெல்லூரில் நடந்த நீதிக் கட்சி மாநாட்டில், அக்கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் நடந்தன. அப்போது பெரியார் தனது நிலைபாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் (நீதிக் கட்சியில் ) சேர்த்தால், அன்றே - தேன்கூட்டில் நெருப்பு வைக்கப்பட்டதுபோல் இயக்கம் செத்து, பார்ப்பன ஆதிக்கத்துக்கு மற்றொரு சாதனமாய் மாறிவிடும் என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக உறுதியாகச் சொல்லுவோம். பார்ப்பனரல்லாத தலைவர்களில் சிலர் இவ்வியக்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியதற்குப் பலவித அரசியல் காரணங்களைச் சொல்லி நம்மை வசப்படுத்த முயற்சிக்கக்கூடும். அரசியல் காரணங்களே முக்கியமல்ல. அன்றியும் பார்ப்பனர்களுக்குள்ள அரசியல் பங்கை மோசம் செய்ய வேண்டும் என்று நாம் சொல்வதில்லை. நமது கொள்கைக்கும் நன்மைக்கும் விரோதமில்லாத பார்ப்பனர்களுக்கு அவர்களது பங்கைக் கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம். அரசியலில் நன்மையான காரியங்களுக்கு அவர்களுடன் ஒத்துழைக்கவும் அவர்களது ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். எந்த காரணத்தைக் கொண்டும் நமது இயக்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளாததாலேயே அரசியல் தத்துவம் கெட்டுப் போவதாக இருந்தால் நமக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையில்லை.’ (குடி அரசு தலையங்கம், 22.9.1929; அழுத்தம்: எஸ்.வி.ஆர்)

இந்தித் திணிப்புக்கு எதிரான கிளர்ச்சி தமிழகமெங்கும் பரவி, அது பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பான போராட்டமாக மாறிய சூழலில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சிலர் ‘பூணூல் ஒழிக’ என்று முழக்கமிடுவதாகக் குற்றம் சாட்டிய பத்திரிகைகளுக்குப் பதில் கூறிய பெரியார், அப்படிச் சொல்வதில் தவறில்லை என்றும், ‘பூணூல்’ என்பது பார்ப்பனியத்தைக் குறிக்கிறது என்றும் கூறினார். அதேசமயம், சிலர் ராஜகோபாலச்சாரியாரின் வீட்டுப் பெண்களையும் பார்ப்பனப் பெண்களையும் இழிவாகப் பேசுவதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்குக் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்...

‘… பெண்டு பிள்ளைகளைப் பற்றிப் பேசுவது என்பது குற்றம்தான்… அவர்கள் பெண்டு பிள்ளை வேறு, அவர்களுக்கு வரும் இழிவு வேறு, அவர்களுக்கு வரும் அவமானம் வேறு, நமது பிள்ளைகளுக்கு வரும் அவமானம், இழிவு வேறு என்று நாம் கருதவில்லை. கருதுவதுமில்லை என உறுதிபடக் கூறுகிறோம். அப்படிப்பட்ட பேச்சு பேசியவனையும் கூப்பாடு போட்டவனையும் அப்படி தண்டிப்பதிலும் எவ்வித அடக்குமுறை கையாளுவதிலும் எனக்கு சிறிதும் ஆட்சேபனையில்லை.ஆனால், அப்படி இதுவரை யார் சொன்னார்கள்? அது எங்கே பதிவு செய்யப்பட்டது? அது உண்மையானால் ஏன் அதற்குத் தனிப்பட்ட நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை?’ (குடி அரசு, 28.8.1938; அழுத்தம்: எஸ்.வி.ஆர்)

1939இல் பொதுக்கூட்டமொன்றில் பேசிய பெரியார், அங்கு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குக் கூறிய பதிலில் பார்ப்பனர்களை ஒழித்துக்கட்டுதல் என்பது தனது இயக்கத்தின் நோக்கமோ, விருப்பமோ அல்ல என்று கூறினார்...

எந்தப் பார்ப்பனரிடமும் எனக்குத் தனிப்பட்ட விரோதமோ, பகைமையோ கிடையாது... சாதாரண வாழ்க்கைத்துறையில் ஒருவருக்கொருவர் மனிதத்தன்மையுடன்தான் எல்லாப் பார்ப்பனரிடமும் பழகி வருகிறேன் என்பதுடன் சகல பார்ப்பனரும் என்னிடம் அப்படித்தான் பழகி வருகிறார்கள் என்றே சொல்லுவேன். ஏதோ சில பார்ப்பனர்களும் பார்ப்பன வாலிபர்களும் தங்கள் நன்மையும் ஆதிக்கமும் பாதிக்கப்பட்டுவிடும் என பயந்து சில்லறை விஷமங்கள் செய்து வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்…

‘பார்ப்பனப் பூண்டை ஒழிக்கவே நான் உயிருடன் இருக்கிறேன்’ என்று எங்கோ சொன்னதாகக் கேள்வியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் காரியம் என்னால் முடியாது என்றும், யாராலும் முடியாது என்றும், முடியுமானால் அது அல்ல என்னுடைய அபிப்பிராயம் என்றும் பல தடவை சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால், நான் கூறிவந்ததும் இப்போது உண்மையாகக் கூறுவதும், பார்ப்பனியத்தை அடியோடு ஒழிப்பது என்பதுதான் எனது முக்கியமானதும் முதன்மையானதுமான காரியம் என்று கூறுகிறேன்…

எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்த கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக் கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் இஷ்டம் போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல. காலப் போக்கையும் நிலைமை இயற்கையிலேயே கைகூடி வருவதையும் பொறுத்தே நான் பேசுகிறேன். (குடி அரசு, 17.9.1939; அழுத்தம்: எஸ்.வி.ஆர்)

இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டதையொட்டி, ‘இந்து’ ஆங்கில நாளேடு குடியரசு நாள் சிறப்பிதழைக் கொண்டு வந்தது. அந்த சிறப்பிதழில், ‘கருஞ்சட்டை இயக்கம்’ பற்றி எழுதுமாறு பெரியார் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஓர் இயக்கத்தை, அதிலுள்ள தொண்டர்கள் அணியும் உடையைக் கொண்டு மதிப்பிடக் கூடாது என்றும் அப்படிச் செய்தால் காங்கிரஸ் கட்சியை காந்திக் குல்லாக் கட்சி என்று அழைக்க வேண்டிவரும் என்று ‘இந்து’ நாளேட்டுக்கு அனுப்பிய கட்டுரையில் கூறினார். அக்கட்டுரையில் ஆரியம், திராவிடம் என்பது வரலாற்று ரீதியாகப் பலராலும் கையாளப்பட்ட கருத்தாக்கங்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் பெரியார், பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் என்ற பிரிவினை என்றென்றும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது தமது இயக்கத்தின் நோக்கம் அல்ல என்றும், இரண்டு எதிரெதிர் கூறுகளை இணைப்பதுதான் நோக்கம் என்றும் கூறினார். ரத்தப் பரிசோதனை மூலம் இனங்களை வரையறுக்கும் நாஜி கொள்கைக்கு தான் எதிரி என்பதையும், அப்படிப் பிரிப்பது தற்கொலைக்குச் சமமானது மட்டுமல்ல, பிற்போக்குத்தனமானது என்றும் கூறுகிறார். ஆரியர் – திராவிடர் என்னும் பாகுபாடு கலாச்சார அடிப்படையில் ஏற்பட்டதேயன்றி வேறல்ல என்றும் கூறுகிறார்...

The Dravidians have a distinct origin in society, their languages are independent and belong to a separate class. The terms ‘Aryan’ and ‘Dravidian’ are not my inventions. They are historical realities. They can be found in any school boy’s textbook. That the Ramayana is an allegoric representation of the invading Aryans and the domiciled Dravidians has been accepted by all historians including Pandit Nehru and all reformers including Swami Vivekananda. My desire is not to perpetuate this difference, but to unify the two opposing elements in society. I am not a believer in the race theory as propounded by the late Nazi leader of Germany. None can divide the South Indian people into two races by means of any blood test. It is not only suicidal but most reactionary. But the fundamental difference between two different cultures, Aryan and Dravidian cannot be refuted by anyone who has closely studied the daily life habits and customs and literature of these two distinct elements in South India (The Hindu, Republic Day Number 26.1.1950; Emphasis: SVR)

1962ஆம் ஆண்டு புத்தாண்டு நாளன்று விடுத்த அறிக்கையில் பெரியார் கூறுகிறார்...

பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத்தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல. தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் – பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும், நண்பராகவும்கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் – ஆகியவற்றில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரம் அல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்தும் நான் வெறுப்பு கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்கு காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கை குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப் போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையைவிட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும் உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்த நாட்டிலே சமுதாயப் போராட்டமும் சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது. (`விடுதலை’ அறிக்கை, 1.1.1962; அழுத்தம்: எஸ்.வி.ஆர்)

இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் பெரியார், பார்ப்பனியம், பார்ப்பனர் பற்றிய தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தபோதிலும், உண்மையான முற்போக்குச் சிந்தனையுள்ள பார்ப்பன நண்பர்களும்கூட பெரியாரை இனவாதியாகப் பார்க்கும் தவற்றுக்கு இரையாகிறார்கள். ‘பார்ப்பனர்’ என்பது இழிவுக்குறிப்புச் சொல் என்றும், அது பார்ப்பனர்களின் மனதைப் புண்படுத்துகிறது என்றும், தங்கள் மீது செய்யப்படும் விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால், தங்களை ‘பிராமணர்கள்’ என்றே அழைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். சாதி ஒழிப்பு இயக்கமான பெரியார் இயக்கம் ஏன் ’பிராமணர்’ சொல்லை ஏற்றுக் கொள்ளாது, ‘பார்ப்பனர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ‘பிராமணர்’ என்ற சொல், ‘பிரமத்தை அறிந்தவன்’, பிரமனிடமிருந்து உதித்தவன் என்ற பொருட்களைத் தருவதால், அதைப் பார்ப்பனரல்லாதவர்கள் பயன்படுத்தும்போது அவர்கள் தங்களை அறியாமலேயே ‘சூத்திர’ தகுதியை ஏற்றுக்கொள்கிறார்கள். ‘சூத்திரன்’ என்பது நூற்றுக்குத் தொண்ணூற்றேழு விழுக்காடாக உள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்கான இழிவுக் குறிப்புச் சொல் என்பதை ‘பிராமணர்கள்’ உணர்ந்து கொள்வார்களேயானால், ‘பார்ப்பனர்கள்’ என்ற தூய தமிழ்ச் சொல்லால் அவர்கள் விளிக்கப்படுவதற்கு வருந்த மாட்டார்கள்.

கட்டுரையாளர் குறிப்பு

spacer.png

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்

  •  

https://minnambalam.com/politics/2021/07/22/10/Periyar-about-Brahmin-and-Brahminism

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.