Jump to content

ஹிஷாலினியின் மரணம் கொலையா? தற்கொலையா?: பலகோணங்களில் விசாரணைகள் தீவிரம் - ரிஷாத்தும் விரைவில் கைதாவார்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

ஹிஷாலினியின் மரணம் கொலையா? தற்கொலையா?: பலகோணங்களில் விசாரணைகள் தீவிரம் - ரிஷாத்தும் விரைவில் கைதாவார்..!

 (செய்திப்பிரிவு)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட  16 வயதான  ஹிஷாலினி, உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட  நால்வரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில், தற்போது சி.ஐ.டி.யின் தடுப்புக் காவலின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் சந்தேக நபராக பெயரிட்டு விரைவில் மன்றில் ஆஜர் செய்ய உத்தேசித்துள்ளதாக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தார். ஹிஷாலினியின் மரணம் தற்கொலையா?, மனிதப் படுகொலையா என்பது தொடர்பில் பாரிய சந்தேகங்கள் நிலவும் நிலையில் விரிவான பல்கோண விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  திலீப பீரிஸ் மன்றில் நேற்றைய தினம் குறிப்பிட்டார்.

நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட, தரகரான பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர், மாமனாரான அலி இப்ராஹீம் சாஹிபு கிதர் மொஹம்மட்  சிஹாப்தீன், ரிஷாத் பதியுதீனின் மனைவி கிதர் மொஹம்மட் சிஹாப்தீன் ஆய்ஷா, மைத்துனர் மொஹம்மட்  சிஹாப்தீன் இஸ்மத் ஆகிய ஒன்று முதல் 4 வரையிலான சந்தேக நபர்களும் அவ்விசாரணைகளின் பின்னர் நேற்று பொலிஸாரால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். 

IMG_3274.jpg

முதல் சந்தேக நபரான தரகர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சய கமகேவும், ரிஷாத்தின் மாமனார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும், 3 ஆம் சந்தேக நபரான ரிஷாத்தின் மனைவிக்காக  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா, ருஷ்தி ஹபீப் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும்,  ரிஷாத்தின் மைத்துனருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைனும் ஆஜராகினர்.

'கடந்த 3 ஆம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 வயதான ஹிஷாலினி எனும் சிறுமி,  கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார். தீயால் ஏற்பட்ட வெளிப்புற காயங்களால் உருவான அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக பிரேத பரிசோதனைகள் ஊடாக தெரியவந்தது. அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், மரணமடைந்த சிறுமி நாட்பட்ட பாலியல் ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ளமையும்  வெளிப்படுத்தப்பட்டது.  

இதனையடுத்தே, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணைகளின் பிரகாரம், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதைப் போன்று ஹிஷாலினி தற்கொலை செய்துகொண்டாரா என்ற விடயத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுவொரு மனித படுகொலையாக இருக்கலாம் எனும் சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பில் மிக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகள் பிரகாரம் தீ பரவல் சம்பவம் கடந்த 3 ஆம் திகதி காலை 6.45 மணியளவில் பதிவாகியுள்ளது. எனினும் ஹிஷாலினி காலை 8.20 மணியளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அனுமதிஅட்டை தகவல்கள் கூறுகின்றன.  கொழும்பு 7 இலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்ல இவ்வளவு நேரம் எதற்கு என்ற சந்தேகம் எழுகிறது.

அதுவும் ஒன்றுக்கு இரு சாரதிகள், வாகனம் உள்ள வீட்டில், 1990 அம்பியூலன்ஸ் வண்டியை அழைத்தே  வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். ரிஷாத் பதியுதீனுக்கும் 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். தனது குடும்பத்தில் ஒருவருக்கு இவ்வாறு திடீரென தீ பரவி இருப்பின் அம்பியூலன்ஸ் வண்டி வரும் வரையில் பார்த்துக்கொண்டிருந்திருப்பார்களா?

IMG_3268.jpg

இந்த சம்பவம் தொடர்பிலான  விசாரணைகளின்போது  2020 ஜூலை  உற்பத்தி திகதியையும் 2021 ஜூலை காலாவதி திகதியையும் கொண்ட ஒரு போத்தலில் மண்ணெண்ணெய் இருந்த நிலையில் மீட்கப்பட்டது. இரு தலையணைகளுக்கு நடுவே இருந்து மஞ்சள் நிற லைட்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதற்கு முன்னர் ரிஷாத் பதியுதீனின் குறித்த வீட்டில் வேலை செய்த வள்ளியம்மா எனும் பெண்ணின் வாக்குமூலத்துக்கு  அமைய அங்கு எந்த சந்தர்ப்பத்திலும் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதில்லை என  தெரியவந்தது.

ரிஷாத்தின் மாமியாரின் வாக்குமூலம் பிரகாரம் அம்மண்ணெண்ணெய் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சாரதி ஒருவர் ஊடாக தருவிக்கப்பட்டது என தெரியவந்தது. எனினும் குறித்த சாரதியோ அவ்வாறு எந்த மண்ணெண்ணெயும் தான் கொள்வனவு செய்து வந்து கொடுக்கவில்லை என வாக்கு மூலம் அளித்துள்ளார்.

தீ பரவல் சம்பவத்தையடுத்து, பொரளை பொலிஸார், ஸ்தல பரிசோதகர்கள் உள்ளிட்டோர் அங்கு செல்லும் போது, குறித்த மண்ணெண்ணை போத்தல் ஒவ்வொரு இடத்தில் இருந்ததாக பதிவிடப்பட்டுள்ளது. இது சந்தேகங்களை மேலும் அதிகரிக்கிறது. தீ பரவலின் பின்னர் ஹிஷாலினி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, 2 ஆம் சந்தேக நபரே அவரை அனுமதித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இதன்போது அவர் ஹிஷாலினி எனும் பெயரை இஷானி என சிங்களபெயராக தெரியும் படியாகவும் அவருக்கு 18 வயது என்றும் தகவல் கொடுத்துள்ளார். இதன்போது வேண்டுமென்றே, தவறான தகவல்கள் வழங்கப்பட்டனவா எனும் சந்தேகம் விசாரணையாளர்களுக்கு உள்ளது. அது தொடர்பில் விசாரிக்கின்றோம்.

வைத்தியர்கள், குறித்த சிறுமி தனக்குத் தானே தீ வைத்திருக்கலாம் எனும் இடங்களில் எல்லாம் கேள்விக்குறிகளை இட்டுள்ள நிலையில், அதற்கான சாத்தியங்கள் தொடர்பில் சந்தேகம் எழுகிறது. எனவே தான் இந்த விடயம் கொலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. ஹிஷாலினியின் பெற்றோரின் வாக்குமூலம் பிரகாரம்,  நான்கு தடவைகள் அவர்கள் கொழும்புக்கு மகளை பார்க்க வந்த போதும் அதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை எனவும்,  அம்மாவின் வாக்கு மூலத்தில்,  தன்னை குறித்த வீட்டார் சித்திரவதை செய்வதாக தொலைபேசியில் ஹிஷாலினி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்  பிரேத  பரிசோதனை அறிக்கையில், தாக்குதல், சித்திரவதை தொடர்பில் சாட்சியங்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது. எனவே ஹிஷாலினியின் சடலத்தை மீள தோண்டி எடுத்து,  மீள பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கவும், அதற்காக சிரேஷ்டத்துவத்தில் முன்னிலையில் உள்ள சட்ட வைத்திய நிபுணர்கள் கொண்ட  குழுவினை அமைக்கவும் நீதிமன்றின் அனுமதியைக் கோருகின்றேன். 

அத்துடன் முதலாவது சந்தேக நபர், 2 ஆவது சந்தேக நபருடன் இணைந்து மனிதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை விசாரணை தகவல்கள் ஊடாக வெளிப்பட்டுள்ளது. எனவே தான் சந்தேக நபர்களுக்கு எதிராக தண்டனை  சட்டக் கோவையின் 360, 308, 358 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சம்பவம் பதிவான வீட்டில் குறித்த சிறுமிக்கு வழ்ஙகப்பட்டிருந்த அறையானது அவர் எவ்வாறு அங்கு நடாத்தப்பட்டார் என்பதற்கு உதாரணமாகும். அதனை அறை என்பதைவிட ஒரு ' மடுவம்' என அழைப்பதே உகந்தது.

 இந்த விவகார விசாரணைகளுக்காக  மிக விரைவில், இந்த குடும்பத்தின் தலைவராக செயற்பட்ட ரிஷாத் பதியுதீன் சந்தேக நபராக பெயரிடப்பட்டு மன்றில் ஆஜர்  செய்யப்படுவார் என்பதையும் மன்றில் தெரிவிக்கின்றேன். குறித்த வீட்டின் சி.சி.ரி.வி. காட்சிகளை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பவும், 6 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் தொலைபேசி கோபுரப் பதிவுகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளவும் அனுமதி கோருகின்றேன்.        

இந்தவிடயம் நாட்டில் பொதுமக்களிடையே வெகுவான அவதானத்தை கொண்டுள்ளது.  அத்துடன் பொதுமக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அதனால் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன. இவர்களுக்கு பிணையளித்தால் நீதிமன்றை புறக்கணிக்கலாம். ஏற்கனவே, பொது சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழான கோட்டை நீதிமன்ற வழக்கில் இக்குடும்பத்தின் தலைவர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய 6 நாட்கள் பொலிஸார் அலைய வேண்டி ஏற்பட்டது. அவ்வழக்கில் நான் ரிஷாத்தின் நடவடிக்கையை ' போக்கிரி' என வர்ணித்திருந்தேன். அதனை இங்கும் பதிவு செய்கிறேன்.

இந்த விவகார விசாரணைகளில்,  ரிஷாத்தின் வீட்டுக்கு வேலைக்கு வந்த இருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.  அதில் ஒருவர் 15 வயது சிறுமி. 2015 ஆம் ஆண்டு முதல் சேவையாற்றியுள்ள அவரை வினோத சுற்றுலா பயணத்தின் போதும், அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த பின்னரும் இவ்வழக்கின் நான்காவது சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகம்  செய்ததாக தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

 எனவே தீ பற்றி மரணமடைந்த ஹிஷாலினி விவகாரத்திலும் இந்த சந்தேகநபரால் ஏதும் குற்றங்கள் புரியப்பட்டுள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகின்றன.' இவ்வாறான நிலையில் சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க முறைப்பாட்டாளர் தரப்பு தனது கடும் ஆட்சேபனைகளை முன் வைக்கிறது  என  விடயங்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் முன்வைத்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் சட்டத்தரணி தம்பையா வாதங்களை முன் வைத்தார். அவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் முன் வைத்த விடயங்களுடன் ஒத்து போவதாகவும், சந்தேக நபர்களுக்கு பிணையளிக்கக் கூடாது எனவும் கோரினார். இந்த சம்பவத்தில் ஆரம்பத்தில் பொரளை பொலிஸார் நடந்துகொண்ட விதத்தையும் விமர்சித்த அவர், இவ்வாறான பல சம்பவங்கள் உரிய விசாரணை இன்றி மூடி மறைக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன், இந்த சம்பவத்தில் அவ்வாறு நடக்க இடமளிக்கக்கூடாது என நீதிமன்றைக் கோரினார்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் சார்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. முதலில் முதல் சந்தேக நபரான தரகர் சார்பில் சட்டத்தரனி சஞ்ஜய கமகே வாதங்களை முன் வைத்தார். தனது சேவை பெறுநர் மனிதக் கடத்தலில் ஈடுபடவில்லை எனவும், ஹிஷாலினியின் பெற்றோர் கோரியமைக்கு அமையவே அவர்களுக்கான உதவியாகவே அவரை ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிக்கு அமர்த்தியதாகவும் சஞ்சய கமகே குறிப்பிட்டார்.

பணிக்கமர்த்தப்பட்ட எந்த சந்தர்ப்பத்திலும் அவ்வீட்டில் கொடுமை செய்யப்பட்டதாக ஹிஷாலினி கூறவில்லை எனவும்,  ஹிஷாலினியின் தாயின் கையடக்கத் தொலைபேசி கடன்காரர்களின் தொல்லையால் எப்போதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையால், தனது  சேவை பெறுநரின் தொலைபேசிக்கு  அழைத்தே ஹிஷாலினி வீட்டாருடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன

இதனையடுத்து 2 ஆம் சந்தேக நபரான ரிஷாத்தின் மாமனார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன வாதங்களை முன் வைத்தார். ஹிஷாலினியின் பெற்றோர் அவரை பார்க்க கொழும்புக்கு நான்கு தடவைகள் வந்ததாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என தெரிவித்த அவர்,  நாட்டில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்,  தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் இருந்த போது அவர்கள் எப்படி நுவரெலியாவிலிருந்து கொழும்புக்கு வந்தனர் என கேள்வி எழுப்பினார்.

தனது சேவை பெறுநர், முதல் சந்தேகநபருக்கு கொடுத்த 10ஆயிரம் ரூபா தரகுப் பணமும், ஹிஷாலினியை 1990 அம்பியூலன்ஸ் ஊடாக வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கு அனுமதித்தமையுமே தற்போது தனது சேவை பெறுநருக்கு எதிரான பாரிய குற்றமாக கூறப்படுவதாகவும், மனிதக் கடத்தல்,   வேலைக்கு அமர்த்தியவரை  கொடுமைப்படுத்தியமை உள்ளிட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் எந்த சாட்சியங்களும் இல்லை என அவர் வாதிட்டார்.

இந்நிலையில் சாட்சிகள் எதுவும் இன்றி, ஒரு சம்பவத்தை மையப்படுத்தி கைது செய்யப்படும் எந்தவொரு நபரையும் பொது மக்கள் கொந்தளிப்பு எனும் விடயத்தை காரணம் காட்டி, அவர்கள்து சுதந்திரத்தை மட்டுப்படுத்துவது எந்த வகையில் நியாயமாக அமையும் என ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கேள்வி எழுப்பினார்.

 1973 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பிலான சட்டத்தின் பிரகாரமும் 2021 ஜனவரியில் அதற்கு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் பிரகாரமும்,  வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினியின் வயது எந்தவகையிலும் பிரச்சினைக்குரியது அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.

முறைப்பாட்டாளரினதோ வேறு  தரப்பினரினதோ அற்ப  திருப்திக்காக ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்படக் கூடாது எனவும், நாட்டின் பிணை சட்டமானது பிணையளிப்பதையே  வலியுறுத்துவதாகவும்  சுட்டிக்காட்டினார். எனவே எந்த நிபந்தனையின்  அடிப்படையிலேனும்  தனது சேவை பெறுநருக்கு பிணையளிக்குமாறு அவர் கோரினார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா:

இந்நிலையில் ரிஷாத் பதியுதீனின் மனைவி சார்பில் மன்றில்  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா, ருஷ்தி ஹபீப் உள்ளிட்டோருடன் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, கிருளப்பனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட போது ரிஷாத் பதியுதீனின் மனைவி அசெளகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்ட சனிக்கிழமை ஏனைய 3 பேரும் பொரளை பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டதுடன்  தனது சேவை பெறுநர் கிருளப்பனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதற்கு  உரிய வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்பது காரணமாக கூறப்பட்டது. எனினும் கிருலளப்பனை பொலிஸ் நிலையத்தில், ஆண்கள் சிறைக்கூடத்துக்கு முன்பாக அவர்களின் ' ட்ரொலியொன்றிலேயே ரிஷாத்தின் மனைவி இரவு நித்திரை கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் என அனில் சில்வா குறிப்பிட்டார்.  

 ' அவர் முஸ்லிம் என்பதை மறந்துவிடுங்கள்.  எமது சிங்கள இன பெண்ணாக இருப்பினும் இரவு வேலையில் ஆண்கள் முன்னிலையில் எப்படி நித்திரை கொள்வார்?' என கேள்வி எழுப்பிய அனில் சில்வா, தனது சேவைபெறுநர் சத்திர சிகிச்சைகளக்கும்  உட்பட்டுள்ள நிலையில், நித்திரை இன்மையால் மிக மோசமாக அசெகரியங்களை  எதிர் நோக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

இது குறித்து இறுதியில் கருத்து வெளியிட்ட அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், அவ்வாறு இடம்பெற்றதை தான் அறியவில்லை எனவும், முறைப்பாடளித்தால் அவ்வாறு நடந்துகொண்ட பொலிசாரையும் கூண்டில் ஏற்ற தயங்கப் போவதில்லை என கூறினார்.

இந்நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, பொதுநலவாய நீதிமன்ற தீர்ப்புக்களையும், உயர் நீதிமன்றின் பல தீர்ப்புக்களையும்,  அண்மையில் மேன்முறையீட்டு  நீதிமன்றம் ஷானி அபேசேகர பிணை வழக்கில் அளித்த தீர்ப்பினையும் கோடிட்டு காட்டி பிணையளிக்க முடியுமான குற்றச்சாட்டுக்களுக்கு பிணையளிப்பதே இலங்கையின் சட்டம் என குறிப்பிட்டார்.

 ரிஷாத் பதியுதீனின் மனைவி என்பதற்காக தனது சேவை பெறுநர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கொந்தலிப்பை  காரணம் காட்டி விளக்கமறியலில் வைக்க கோருவதாகவும் சுட்டிக்காட்டிய அனில் சில்வா, ரிஷாத் பதியுதீனை கைது செய்தால் அந்த கொந்தளிப்பு அடங்கிவிடும் என தெரிவித்தார். அதனூடாக குறித்த கொந்தளிப்பு அரசியல் நோக்கத்தில் உருவாக்கப்படுகின்ற விடயம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், சாட்சிகளில் தலையீடு செய்ய தம்மால் முடியாது என குறிப்பிட்டார்.

ஹிஷாலினியை வேலைக்கு அமர்த்தும் போது, நாட்டின் சட்ட திட்டங்கள் பிரகாரம் வேலைக்கு அமர்த்த முடியுமான வயதெல்லை அல்லது அது தொடர்பிலான விடயத்தில் சிறுவர் எனும் சொல்லுக்கான வரை விளக்கத்தில் 14 வயது என்றே இருந்ததாகவும், பின்னர் 2021 ஆம் ஆண்டு அது 16 ஆக திருத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, எப்படி பார்த்தாலும் ஹிஷாலினி  பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்த முடியுமான வயதெல்லையை கடந்திருந்ததாகவும், அவர் அப்போது சிறுமியாக இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். 

சட்டத்தின் பிரகாரம் 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இளம் பராயத்தவர்கள் என வரை விலக்கணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வயதுப் பிரிவினர் அமர்த்தப்படக் கூடாத வேலைகள், தொழில்களை தொழில் அமைச்சு வர்த்தமானிப்படுத்தியுள்ள நிலையில், அதில் வீட்டுப் பணிப்பெண் வேலை உள்ளடங்கவில்லை என  நில் சில்வா சுட்டிக்காட்டினார்.

எனவே ஹிஷாலினி வேலைக்கு அமர்த்தப்பட்டமையில் எந்த சட்ட விரோத தன்மையும் இல்லை எனவும், அவர் வேலைக்கு அமர்த்தப்பட்ட வீட்டில் நடந்த சம்பவம் ஒன்றுக்காக அவ்வீட்டில் வசிக்கும் அனைவரையும் குறிவைப்பது நியயமற்றது எனவும் அவர் வாதிட்டு, எந்த ஒரு நிபந்தனையின் அடிப்படையிலும் பிணை கோரினார்.

 சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன்:

இதனையடுத்து சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி  ஹுசைன், 4 ஆம் சந்தேக நபரான ரிஷாத்தின் மைத்துனருக்கு பிணை கோரினார். இந்த விவகார வழக்கில் அவருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும், வேறு ஒரு யுவதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் விடயத்தை வைத்து, இவருக்கும் அவர் ஏதும் செய்தாரா எனும் யூகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  அத்துடன் தனது சேவை பெறுநரை பொலிசார்  விசாரணையின் போது தாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 எனினும் சட்ட வைத்திய அறிக்கையை மையப்படுத்தி அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப  அதனை மறுத்தார். இந்த விடயத்தில், சம்பவத்தின் பின்னர் ஹிஷாலினியின் பெற்றோர் ரிஷாத்தின் வீட்டுக்கு சென்றபோது, பொலிஸ் சீருடையை ஒத்த சீருடையில் அங்கிருந்த ஒருவர் விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தரை கண்டறியவும் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கூறினார்.

 இவ்வாறான நிலையில் முன் வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் சந்தேக நபர்களுக்கு உள்ள தொடர்புகள் காரணமாக விசாரணைகளில் தலையீடு செய்யவோ, சாட்சிகளை காணாமல் ஆக்கவோ முடியும் என தெரிவித்தும்,பொது மக்கள் கொந்தளிப்பை காரணம் காட்டியும் நால்வரின் பிணைக் கோரிக்கையினையும் நிராகரித்தார். விசாரணைகள் ஆரம்ப நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிவான் அவர்களை  எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.   

 

 

https://www.virakesari.lk/article/110162

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா: டயகம சிறுமி வழக்கின் சாரம்சம்

டயகம சிறுமி மரணம்: வழக்கின் சாரம்சம்

மண்ணெண்ணெய் போத்தல் நடந்து சென்றது எப்படி?

11 நிமிடங்களில் சென்றிருக்கலாம் 2 மணிநேரம் தாமதித்து ஏன்?

சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா

மண்ணெண்ணெய்யில் மாமி- சாரதியின் வாக்குமூலங்கள் முரணானது

சிறுமியின் சகோதரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தவர் யார்?

வீட்டுப் பணிப்பெண்ணாக சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில், எரிகாயங்களுடன் மரணமடைந்த தலவாக்கலை- டகயமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி தொடர்பிலான வழக்கு, நேற்று (26) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, இந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டார்.

வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது பிரதி சொலிஸிட்ட ஜெனரலினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தையும் மேலதிக நீதவானின் கட்டளைகள் மற்றும் உத்தரவுகளை, சுருக்கி சராம்சத்தை மட்டுமே இங்கு தருகின்றோம்.

 

  1. பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு அச்சிறுமி, ரிஷாட்டின் அறிவுறுத்தலுக்கு அமையவே சேர்த்துகொள்ளப்பட்டுள்ளார். ஆகையால், அவரையும் (ரிஷாட்டை) சந்தேக நபராக பெயர் குறிப்பிட்டுள்ளேன்.
  2. மற்றுமொரு சம்பவம் தொடர்பில் ரிஷாட், தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். ஆகையால், அந்த விசாரணையின் நிறைவில், இந்த வழக்குக்காக, நீதிமன்றத்தில் ரிஷாட்டை ஆஜர்படுத்துவோம்.
  3. சிறுமியின் சடலத்தை மீளவும் தோண்டியெடுத்து, சிரேஷ்ட நீதிமன்ற வைத்திய அதிகாரி தலைமையிலான குழு முன்னிலையில், மீண்டும் மரண பரிசோதனை செய்ய, சுகாதார பணிப்பாளர் நாயகத்துக்கு மேலதிக நீதவான் கட்டளை.
  4. ஜூலை 3ஆம் திகதி மாலை 6.45க்கு தீப்பற்றிக்கொண்டது எனினும், இரவு 8.30க்கே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
  5. இரண்டு மணிநேரம் சிகிச்சையளிக்காமை சந்தேகம்.
  6. அமைச்சரின் வீட்டில் பொலிஸ் சீருடையில் இருந்தவர், சிறுமியின் சகோதரருக்கு அழைப்பை எடுத்து, “ இந்த விவகாரத்தை இலகுவில் முடித்துகொள்வோம்” எனக் கூறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
  7. ரிஷாட்டின் மாமாவே அச்சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். பெயர், வயது உள்ளிட்ட சகல விபரங்களையும் போலியாக கொடுத்துள்ளமை பெரும் சந்தேகம்.
  8. மண்ணெண்ணெய் போன்ற திரவியம் அடங்கிய ப்ளாஸ்டிக் போத்தல் ஒன்றும். தலையணைக்கு கீழிருந்து மஞ்சள் நிற லைட்டரும் கைப்பற்றப்பட்டுள்ளன.
  9. இதற்கு முன்னர் பணியாற்றியவர்களின் வாக்குமூலங்களில் பிரகாரம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மண்ணெண்ணை, லைட்டர் அந்த வீட்டில் பயன்படுத்தவில்லை, தீ அவசியமாயின் சமையலறைக்குச் சென்று கேஸ் அடுப்பிலேயே பற்றவைப்பதாக தெரிவித்துள்ளனர்.
  10. வீட்டில் பணியாற்றிய சாரதியே இன்றைக்கு ஒன்றைரை வருடங்களுக்கு முன்னர், மண்ணெண்ணெய் கொண்டுவந்தார் என அமைச்சரின் மாமி கூறியுள்ளார்.
  11. ஆனால், தான் அப்படி எதனையும் வாங்கி வரவில்லையென சாரதி வாக்குமூலமளித்துள்ளார்.
  12. அம்புலன்ஸ் வரும் வரையிலும் வீட்டின் முன்பாக உள்ள நீர்த்தொட்டியில்   இரண்டு மணிநேரம் சிறுமியை அமிழ்த்தி வைத்திருந்துள்ளனர். அமைச்சரின் வீட்டில் வாகனம் இல்லையா?
  13. வீட்டிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 11 நிமிடங்களில் பயணிக்கலாம். 2 மணிநேரம் தாமதித்தது ஏன்?
  14. பௌத்தலோக்க மாவத்தையில் ரிஷாட் பதியுதீனுக்கு இரண்டு வீடுகள் உள்ளன, சாரதிகள் இருவரும் அந்நேரத்தில் இருந்துள்ளனர். வாகனங்கள் இரண்டும் வீட்டில் இருந்துள்ளன. அப்படியாயின் 2 மணிநேரம் தாமதித்த ஏன்?
  15. சிறுமியின் பெயரை இஷனி என்ற சிங்கள பெயராகவும் வயதை 18 ஆகவும் மாற்றி கொடுத்துள்ளமை ஏன்?
  16. வீட்டாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தும் சிறுமியை பார்க்கமுடியவில்லை, ரிஷாட்டின் வீட்டுக்குச் செல்கின்றனர். அங்கு, பொலிஸ் சீருடையில் இருந்த ஒருவர், “பொலிஸூக்கு போகவேண்டியதில்லை, இவ்விடத்திலேயே முடித்துகொள்வோம்” சிறுமியின் சகோதரனிடம் தெரிவித்துள்ளார்.
  17. ரிஷாட்டின் செயலாளர் எனக் கூறப்படுபவர், மலர்சாலையில் வேலைச் செய்பவர் என தன்னை அறிமுகப்படுத்தி, சிறுமியின் சகோதரனிடம் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.
  18. தன்னுடைய தங்கை எரியுண்டதாகக் கூறப்படும் அந்த அறையை சகோதரன் பார்த்தபோது, மண்ணெண்ணெய் போத்தல் கதவுக்கு அருகில் இருந்துள்ளது.  பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போகும் போது, கட்டிலின் மேல் அந்தப் போத்தல் இருந்துள்ளது. “சொக்கோ” அதிகாரிகள் (பொலிஸ் தடயவியல் அதிகாரிகள்) செல்கையில், அதே போத்தல் நாற்காலியின் மேல் இருந்துள்ளது.
  19. நான்காவது சந்தேகநபரான ரிஷாட்டின் மாமனார், அவ்வீட்டில் பணியாற்றிய இரண்டு பணிப்பெண்களை வன்புணர்ந்துள்ளார்.
  20. சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், சாட்சிகளை அச்சுறுத்த கூடும் என்ற காரணத்தினால், அவர்களுக்கு பிணை வழங்கவேண்டாமென பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
  21. அந்த வீட்டிலுள்ள 8 சி.சி.ரி.வி கமெராக்களில் ஏப்ரல் மாதம் முதல் பதிவுகளை பெறுவதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tamilmirror Online || சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா: டயகம சிறுமி வழக்கின் சாரம்சம்

Link to comment
Share on other sites

சி.சி.ரி.வி கமராக்கள் வேலை செய்யவில்லையாம் என்றும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.எத்தனை காரணங்கள் குற்றவாளிக்குச் சாதகமாக இருப்பினும் அரசியல் என்ற துரும்புச்சீட்டு அமைச்சர் நானாவிடம் இருக்கு.அத்துடன் 2 கைகளும் இருக்கு,எல்லாத்துக்கும் கை உயர்த்துவன் என வாக்குக்கொடுத்தால் நானாவும் குடும்பமும் சுத்தவாளி,பிள்ளைதான் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டது என்ற தீர்ப்பு வரும்.கவுண்டமணி சொன்னாரே அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று அதுதான் நினைவு வருகிறது.பாவம் அப்பாவிமக்கள்.

“பேய்கள் ஆட்சி செய்தால், பிணம்தின்னும் சாத்திரங்கள்” மகாகவி பாரதியார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.