Jump to content

‘கூடைக்காரி கொழுந்தோ ஒலக சந்தையில’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

‘கூடைக்காரி கொழுந்தோ ஒலக சந்தையில’

‘கூடைக்காரி கொழுந்தோ ஒலக சந்தையில’

— மல்லியப்புசந்தி திலகர் —  

“ஐயாவு மாமன் 

என்னை 

கொழும்புக்குக் 

கூட்டிபோச்சு. 

அங்க 

நோனாவும் 

மாத்தையாவும் 

நூறு, அம்பது 

கொடுப்பாக 

எனக்கில்ல 

மாமனுக்கு .. 

மாத்தையாவின் மகனுக்கு 

காலுசட்ட கழுவுறதும் 

காலு கழுவுறதும் என 

காத்தால ஆரம்பிச்சா 

அந்தி மசங்கும்வரை என்ன 

அரைச்சு எடுத்துருவாங்க… 

…… 

நோனா இல்லாதநேரம் 

மாத்தையா என்ன 

நோட்டம்விட்டு பார்த்தாரு 

வெளக்குமாத்த 

கையில எடுத்து நான் 

வெளக்கம் சொல்ல 

வேண்டியதாச்சு…” 

…… 

( கூடைபுராணம், மல்லியப்புசந்தி, 2007) 

வீட்டுவேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட எம் சகோதரிகள் எசமானர்களால் நோட்டம் விடப்படும்போது ‘வெளக்குமாத்தோடு’ அவர்கள் நின்றாகவேண்டும் என்பது எதிர்பார்ப்பாகி நின்றபோதும் நடைமுறை யதார்த்தங்கள் அவர்களது உடலையும், உயிரையும் கூட விட்டுவைக்கவில்லை என்ற கசப்பான உண்மைகளை கனத்த மனத்துடன் சுமந்தவாறே கட்டுரைக்குள் நுழைய நேர்கிறது. 

2003ல் ‘சூரியன்’ வானொலியில் யு.எல்.மப்ருக் தொகுத்தளித்த ‘கவிராத்திரி’ நேரலை நிகழ்ச்சியில் இந்த வரிகளை நான் பாடியபோது கேட்டுக் கொண்டிருந்தவர்கள் கண்ணீர்விட்டதாகப் பதிற்குறிப் பதிவுகளில் சொல்லியிருந்தார்கள். இன்று ஏறக்குறைய 18 வருடங்கள் கழிந்தும் அந்த கண்ணீர் ஓயவில்லை. 

தலைநகரில் தமது சகோதரி ஒருவர் வீட்டு வேலைப் பணியாளராக வேலை செய்த நிலையில் மர்மமான முறையில் மரணமுற்ற நிலைகண்டு மலையகம் முழுவதும் உணர்ச்சி மேலிட்ட ஓர் களத்தில் நிற்கும் இந்த நாழிகைகள் இந்த வரிகளை மீளவும் நினைவில் நிறுத்துகிறது. 

மலையகத்தில் மாத்திரம் அல்லாது ஏறக்குறைய நாடு தழுவிய ரீதியில் ‘இலங்கைச் சிறுமியாக’மலையகச் சிறுமியை அடையாளம் கண்டுகொள்ள வைத்திருப்பதற்கு மலையகத்தின் உணர்ச்சி மேலிட்ட போராட்ட நிலை மாத்திரம் காரணமல்ல, இதற்குள் இருக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது யாவரும் அறிந்ததே. குறித்த அரசியல்வாதி வீட்டில் அல்லாது வேறு வீட்டில் நடந்திருந்தால் ஏனைய தரப்பு இப்படி துள்ளிக் குதிக்குமா என்பது சந்தேகமே? 

முன்னாள் அமைச்சராக, இப்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் எப்படி சிறுமி ஒருவரை வீட்டுப் பணிக்கு அமர்த்தலாம்? எனும் கேள்வி அவரது அறிவு சார்ந்து எழுப்பப்படும் போது, அறம் சார்ந்தும் நோக்கப்படவேண்டி இருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சிறுமியொருவரை தமது வீட்டு வேலைக்கு அமர்த்தி இருக்கக்கூடாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அறம் சார்ந்து நோக்கினால் சட்டவாக்குனரான இந்த அரசியல்வாதி மட்டுமல்ல, சட்டம் தெரிந்த மனித நேயம் கொண்ட யாரும் குழந்தைகளைத் தொழிலாளிகளாக வைத்துக்கொள்ள மனங்கொள்ளக் கூடாது. அரசியல்வாதிகளிடம் மாத்திரம் அறத்தை எதிர்பார்க்கும் இந்த சமூகத்தின் பார்வையிலே 225 பேர் மாத்திரத்திரந்தான் இலங்கையில் சிறுவர் தொழிலாளிகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சுமார் ஒருலட்சம் அளவில் இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. கடந்த எட்டு வருடத்தில் 48000 முறைப்பாடுகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் புள்ளிவிபரங்கள் யாருடைய அறத்தை யாரிடம் கோரி நிற்கின்றன? 

சராசரியாக ஆண்டுக்கு 6000 முறைப்பாடுகள் என்றால் முறைப்பாடு செய்யாத சிறுவர்களையும் சேர்த்து இலங்கையில் எத்தனை சிறுவர் தொழிலாளர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும். நிச்சயமாக அத்தனை சிறுவர்களுமே வருமான மட்டத்தில் சராசரிக்கும் மேல் உழைக்கும் குடும்பத்தினர்களாலேயே அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கே வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்படும்.  தமது குழந்தைகளை அனுப்பும் குடும்பங்களின் நிலை எத்தகையதாக இருக்கும் என நோக்கினால் அவர்கள் அடிமட்ட வறுமை நிலையில் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அந்த மனது அவர்களுக்கும் வராது. 

வர்க்கப் பிரச்சினை

ஆக இந்த முரண் நிலை வர்க்கம் சார்ந்தது. இனம், மதம், மொழி என்பவற்றைக் கடந்து முதலாளி வர்க்கம் உழைப்பாளர் வர்க்கத்தின் குழந்தைகளின் ஆன்மாவை விலைபேசும் அதர்மம் இது.  இந்த சிறுவர் கூட்டத்தில் மலையகத்தவர்கள் மாத்திரம் வேலைக்கு அமர்த்தப்படவுமில்லை, வேலைக்கு அமர்த்தியவர்கள் அனைவரும்  முஸ்லிம்களோ அரசியல்வாதிகளோ மட்முமில்லை என்கின்ற உண்மையையும் மறந்துவிடக் கூடாது. 

மலையக சமூகத்தில் பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தினர் ஆகையால், அதுவும் பொதுவாக வறுமை நிலையில் வாழவைக்கப்பட்டவர்கள் ஆகையால் இந்த அதர்மத்துக்கு அதிகமாகவே இரையாகி வருகிறார்கள். இத்தகைய அவலம் நிறைந்த செய்திகள் பொதுவாக ஏனைய சமூகத்தில் வெளிப்படுவதிலும் பார்க்க, மலையகத்தவர்களாக இருக்கும் போது வெளிப்படுவது, பரவலடைவது மலையகத்தில் மேலோங்கி இருக்கும் வர்க்க உணர்வு நிலை காரணமாக எனலாம். மலையகம் தவிரந்த ஏனைய சமூகங்களில் இவ்வாறு ஓரணியில் திரளும்நிலை ஒப்பீட்டளவில் குறைவு எனலாம். இதுபோன்றதொரு சிறுமி பொதுவெளியில் மரணதண்டனை விதித்ததன் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் சவூதி அரேபியாவுக்கு எதிராக பாரிய அளவில் அணி திரண்டு போராடி இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அதற்கு பிறகு சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக அனுப்பமாட்டோம் எனும் இறுக்கமான தீர்மானத்தையாவது எடுத்து நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். அப்படி ஒன்று நடந்திருப்பதாக தெரியவில்லை. அதே நேரம் முஸ்லிம் அல்லாத பெண்களையும் கூட முஸ்லிம் வேடமிட்டு (ஹெல்மட்) பணிப்பெண்களாக ஏற்றுமதி செய்யும் ‘வியாபாரமும்’ நடந்து கொண்டுதான் இருக்கிறது. அங்கே சென்று உடல், உள ரீதியாக அல்லல்பட்டு திரும்பி வரும் இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்களின் நிலை கண்டு இலங்கையில் யாரும் இன்னும் பெரிதாக கொதித்து எழுந்து விடவும் இல்லை. மாறாக இன்றைய நிலையில் இலங்கையின் முதன்மை ஏற்றுமதி வருமானம் ‘பணிப்பெண்கள் அனுப்பும் பணம்’ என்பது இலங்கையின் அரசியல் சாபக்கேடு. 

இப்படியான அவல சூழ்நிலைகளில் உணர்ச்சி மேலிட்ட போராட்டங்களை முன்கொண்டு செல்வதில் மலையகத்துக்கு நிகராக இலங்கையில் வேறு சமூகத்தை அடையாளம் காட்டுவது சிரமம். இதுவே மலையகத்தின் பலமும், பலவீனமும் ஆகிறது. இத்தகைய உணர்ச்சி மேலிட்ட போராட்ட களங்கள் இதுபோன்ற பிரச்சினைகள் மலையக சமூகத்துக்கு மாத்திரமே நடைபெறுவதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறது. தவிரவும் இந்த உணர்ச்சி மேலிட்ட நிலைகள் இவர்களை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவோருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமைந்துவிடுகிறது. 

மலையகம் பொதுவாக வறுமை நிலையில் இருப்பது, சமூகப் பொருளாதார காரணமாக காட்டப்படுகின்றன போதும், இதன் பின்னால் இருக்கும் ‘அரசியல்’ பற்றி பேசப்படுவது குறைவு. இத்தகைய சந்தர்ப்பங்களில் இந்த மக்கள் மீது அனுதாபம் காட்ட முன்வரும் பலர் அதுவே அவர்களுக்கான உரிமைக் கோரிக்கையாக முன்வைக்கும் போது அதனை நிறைவேற்றுவதற்கு எந்தளவுக்கு ஒத்துழைப்பார்கள் என்பது சந்தேகமே. உதாரணமாக, மலையகப் பெருந்தோட்டக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஏக்கர் காணி வழங்க வேண்டும் என ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்கு ஆதரவு கோரினால் உண்மை முகங்கள் தெரியவரும். 

மலையகத்தில் சமூக நீதி? 

சுதந்திர இலங்கையில் இவர்களின் குடியுரிமையைப் பறித்து அரசியல் அநாதைகளாக்கியவர்கள், அவர்களை இன்றுவரை அர்த்தமுள்ள குடியுரிமையுரிமைளர்களாக்க மறுத்துக்கொண்டு அந்தச் சமூகத்தை வறுமைப்பட்டச் சமூகமாக, வழிதெரியாத சமூகமாக காட்ட முயலும் அனைத்து ஆதிக்க சக்திகளும் இந்த இளம் சிறுமியின் அவல மரணத்தின் சூத்திரதாரிகளே. இன்று அவர் இறந்தபிறகு அவரது மரணத்துக்கு ‘நீதி’ கோரும் பலரிடம் இத்தகைய இளையவர்கள் வாழ்வதற்கான ‘நீதி’யைப் பெற்றுக் கொடுக்க என்ன திட்டத்தை வைத்துள்ளனர் எனும் கேள்வியை எழுப்ப வேண்டிய தருணம் இது. தத்தமது அரசியலை முன்னெடுக்க எந்த ஆன்மாவையும் விலைபேசும் கூட்டமும் இதற்குள்தான் இருக்கிறது. 

இந்த நிலையிலேயே உணர்ச்சி பொங்கும் போராட்டங்களைச் சதா நடாத்திக்கொண்டு இருக்கும் மலையகம் உணர்வுகொண்ட சமூகமாக சிந்திக்கும், செயற்படும் காலத்தை தனதாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. மலையகம்,  போராட்டங்களை மட்டுமல்ல அரசியலையும் கூட உணர்ச்சி கொண்டே அணுகிக் கொண்டு இருக்கிறது எனலாம். இது போன்ற சிறுமிகளின் மரணத்திற்கு நீதி கோரும் போராட்டம் நியாயமானது. அது உணர்ச்சியால் எழுகிறது. இனி ஒரு சிறுமிக்கு இப்படி நடக்கக் கூடாது என்பது உணர்வால் கட்டி எழுப்பப்பட வேண்டியுள்ளது. இப்போது கேட்கும் நீதி என்பது, சந்தேகநபராகக் கருதப்படுபவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்ற நடவடிக்கையோடு தொடர்பு உடையது. அது ஆன்மாவுக்கான நீதி. ஆனால் இந்த பிர்ச்சினையை எதிர்நோக்கும் மலையகத்துக்கு ‘சமூக நீதி’  கிடைத்தாக வேண்டும். அதற்கான அரசியல் குறித்த சிந்தனைகளை மலையகம் தன்னகத்தே வளர்த்தெடுக்க வேண்டும். 

வறுமை, மலையகத்துக்கு மட்டும் உரியது அல்ல. இலங்கையில் எல்லா சமூகங்களிலும் கூட வறுமை நிலவுகிறது. அதேநேரம் மலையகத்தின் வறுமை தனித்துவமானது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக அந்த வறுமை நிலை சமூகத்திற்கான தராதரமாக மாற்றப்படவும் கூடாது. 

மலையகத்தில் வறுமை ஒழிப்பு? 

ஒட்டுமொத்தமாக இலங்கையின் சராசரி வறுமை சுட்டி 4.1 புள்ளி என்றால் மலையகத்தில் அது 8.8 ஆக உள்ளது. மாத வருமான மட்டத்தின் இலங்கை சராசரி 65000 என்றால் மலையகத்தில் அது 30000 ஆக உள்ளது. ஆனால் வறுமை ஒழிப்புக்கான சமுர்த்தித் திட்டம் இலங்கையில் ஏனையோருக்கு 90 சதவீதமும் மலையகத்திற்கு 10 சதவீதமுமே நடைமுறையில் உள்ளது. எனவேதான் மலையகப் பெருந்தோட்டப் பகுதி திட்டமிடப்பட்ட வறுமை நிலையில் வைக்கப்படுகிறது எனும் வாதம் மேல் ஓங்குகிறது. சமுர்த்தி என்பது வறுமை ஒழிப்பு திட்டம் என்றால் இலங்கையில் வறுமை அதிகம் நிலவுதாக அரச புள்ளிவிபரங்கள் கூறும் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில்தானே அதன் செயற்பாடு அதிகமாக இருத்தல் வேண்டும்? இன்றைய நாட்களில் சுமார் 17 லட்சத்தைத் தாண்டி இருக்கும் சமுர்த்திப் பயனாளிகளில் எத்தனைப் பேர் மலையகப் பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கணக்கிட்டால் இந்த உண்மைத் தெரியவரும். எனவே மலையகத்தில் வறுமை திட்டமிட்ட அடிப்படையில் பேணப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

ஒட்டுமொத்த “இல்லை”கள் 

தவிரவும் மலையகப் பெருந்தோட்ட வறுமை தனியே வருமான குறைவினால் மாத்திரம் வருவதல்ல. 

மலையகத்தின் வறுமையின் குறிகாட்டிகளாக நிலம் இல்லை, வீடு இல்லை, வீதி இல்லை, அரச நிர்வாகம் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை பல ‘இல்லைகளை’ அடையாளம் காணலாம். ஏனெனில் அவர்கள் இலங்கையின் அர்த்தமுள்ள குடிமக்களாக (Meaningful Citizenship) வாழவைக்கப்படவில்லை. 

பறிக்கப்பட்ட குடியுரிமையில் (Citizenship rights) வாக்குப் போடும் உரிமையை (Voting rights ) மட்டுமே மீள வாங்கிக் கொண்டு ‘குடியுரிமை பெற்றுவிட்டோம்’ என குதூகளிக்கும் அரசியல் தீர்மானத்தை எடுத்துக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளால் அர்த்தமுள்ள குடியுரிமை என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. “நிலமே எங்கள் அடிப்படை உரிமை அதனைக் கொடு” என முன்செல்லவேண்டிய அரசியல், ‘ஆயிரம் ரூபா நாட்கூலியை வாங்கிவிட்டோம்’ என பட்டாசு கொளுத்திக் கொண்டாடிக் கொண்டிருக்கும்வரை இத்தகைய அவலங்களும் மரணங்களும் மலையக சமூகத்தின் அரசியல் சாபக்கேடாகவே அமையும். 

‘தொடர்ந்து துயருறும்’ ஒரு நிலைகுறித்த தொனிப்பொருளில் கவிதைகளைப் பாடுமாறு அன்று (2003) ஒலிபரப்பு நண்பர் மப்ருக் கேட்டபோது, தொடர்ந்து துயர் உறுபவர்களாக மலையகப் பெண்கள் முன்னே வேறு யாரும், எதுவும் தெரியவில்லை என்ற அறிவித்தலோடு பாடிய வரிகளுக்கு ‘கூடைபுராணம்’ என தலைப்பிட்டு இருந்தேன். ‘மல்லியப்புசந்தி’ (2007) தொகுப்பில் உள்ளடங்கியுள்ள இந்த வரிகளின் இறுதிப்பகுதி இவ்வாறு அமையும்: 

……. 

“இந்தக் கொடுமை கேட்க 

யாருமில்ல – என்னை 

கொண்டு சேர்க்க 

நாதியில்ல 

இந்தக் கூடைக்காரி 

கொழுந்தோ 

ஒலக சந்தையில” 

இப்படிக் காலங்காலமாக தலைமைக்கு நாதியற்ற சமூகமாக தொடர்ந்தும் முன்செல்வதா? நமக்கான தலைமை நாமே முன்வந்து ஏற்பதா? என இளைய மலையகத்தவர்கள் இப்போது உணர்ச்சிநிலை கடந்து உணர்வு நிலையில் சிந்திக்க வேண்டும். ‘மலையகம்’ என்ற அந்த உணர்வுடன் அரசியல் தலைமை ஏற்க முன்வரவேண்டும். 

இறந்த மகளுக்கு ‘நீதி’ கிடைக்க வேண்டும். இந்த மக்களுக்கு ‘சமூகநீதி’ கிடைக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பையே ஏனைய சமூகங்கள் வழங்க முன்வருதல் வேண்டும். குறைந்த பட்சமாக வீட்டு வேலைக்கான தொழிலாளர்களை மலையகத் தோட்டங்களில் இருந்து கோருவதை நிறுத்துவதில் இருந்து அது ஆரம்பிக்கப்படலாம்.   

பாடசாலை இடைவிலகளில் இருந்தும், பரீட்சைகளை நிறைவு செய்த பின்னரும் ஒவ்வொரு மலையகச் சிறுவருக்கும் என்ன நடக்கிறது என அவதானித்து சமூகத்தை வழிப்படுத்த ஊருக்கு ஒரு தலைவரை  மலையகம் வேண்டி நிற்கிறது. அவர்களின் ஒன்றிணைவினால் அடுத்த தலைமுறையினருக்கான அரசியலை மலையகத்தில் முன்னெடுக்கப்படவும் வேண்டும். அங்கே ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த ‘தொழிற்சங்க அரசியல்’ முடிவை நோக்கி நகரும் இந்த காலத்தில்  தொலைநோக்கு அரசியல் ஒன்றுக்கான தேவை அதிகமாகவே உள்ளது.

 

https://arangamnews.com/?p=5761

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.