Jump to content

டோக்யோ ஒலிம்பிக் 2020: கஞ்சா பயன்படுத்தும் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டோக்யோ ஒலிம்பிக் 2020: கஞ்சா பயன்படுத்தும் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன்?

  • ராபின் லெவின்சன்-கிங்
  • பிபிசி நியூஸ்
29 ஜூலை 2021
அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கஞ்சா பயன்படுத்தியதால் அமெரிக்க வீராங்கனா ஷாகாரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார்

கஞ்சா உற்பத்தி செய்வதும், அதைப் பயன்படுத்துவது, பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. வேறு பல நாடுகள் அதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கின்றன. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு அனுமதியுள்ளது.

ஆயினும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கஞ்சா பயன்படுத்துவற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துப் பட்டியலில் கஞ்சாவும் இடம் பெற்றிருக்கிறது.

இதைப் பயன்படுத்தியதால் அண்மையில் தகுதியிழந்தவர் அமெரிக்க ஓட்டப் பந்தய வீராங்கனை ஷாகாரி ரிச்சர்ட்சன். அமெரிக்காவில் நடந்த தகுதிப் போட்டிகளின்போது கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்ததால் அவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

ஆரஞ்சு முடி, ஈர்க்கும் புன்னகை மற்றும் மின்னல் வேகம் ஆகியவற்றைக் கொண்ட ஷாகேரி ரிச்சர்ட்சன், ஒலிம்பிக் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீராங்கனை.

 

வரலாற்றிலே ஆறாவது வேகமான பெண்ணாகக் கருதப்படும் அவர், 100 மீட்டர் தொலைவை 10.72க்குள் ஓடி முடித்தவர். டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனையான இவர் டோக்யோவில் அமெரிக்காவுக்காக தங்கப் பதக்கத்தை வென்று தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நாளை காலை தொடங்கும் பெண்கள் 100 மீட்டர் தகுதிச் சுற்று ஓட்டப் பாதையில் அவரது அணி வீரர்கள் ஓடிக் கொண்டிருக்கும்போது, ரிச்சர்ட்சன் அங்கு இருக்க மாட்டார்.

ஜூலை தொடக்கத்திலேயே அவர் ஓலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அவர் தகுதிப் போட்டிகளின்போது போது கஞ்சா பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது.

இதற்குத் தண்டனையாக, அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அவர் ஒரு மாதம் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்தது. போட்டிகளின் மூலம் அவர் பெற்றிருந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதியையும் ரத்து செய்தது.

வீராங்கனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஷாகாரி ரிச்சர்ட்சன்

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே இந்தத் தடை முடிவடைந்துவிட்டது. ஆயினும், கஞ்சா பயன்படுத்திய காரணத்துக்காக அவரை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டாம் என அமெரிக்க தடகள அமைப்பு கூறிவிட்டது.

முக்கிய தடகள வீராங்கனையான அவர், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது, கஞ்சா பயன்பாடு தொடர்பான புதிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

பல அமெரிக்க மாநிலங்களில் கஞ்சா பயன்படுத்துவது சட்டபூர்வமானது. கஞ்சாவுக்கு உடல் செயல்திறனை அதிகரிக்கும் பண்பு உண்மையிலேயே இருக்கிறதா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. அதனால் கஞ்சாவை ஏன் இன்னும் தடை செய்ய வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

கஞ்சா பயன்படுத்தினால் செயல்திறன் அதிகரிக்குமா?

2004 ஆம் ஆண்டில் வாடா எனப்படும் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டபோதே அதன் தடைப் பட்டியலில் கஞ்சா இடம்பெற்றிருக்கிறது. மூன்று அம்சங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலில் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.:

அம்சம் 1: அவை விளையாட்டு வீரரின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்

அம்சம் 2: அவை விளையாட்டு வீரரின் செயல்திறனை அதிகரிக்கும்

அம்சம் 3: அவை விளையாட்டின் வேட்கைக்கு எதிரானவை

இவற்றில் இரண்டாவது அம்சம்தான் அதிகமாக விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

"ஓட்டத்தின் முடிவில் ஒரு பெரிய சாக்லேட் இருந்தால் மட்டுமே இது செயல்திறனை அதிகரிக்கும் ஊக்க மருந்தாகும்" என்று மறைந்த நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் கேலி செய்தார்.

2011 ஆம் ஆண்டில், Sports Medicine இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் கஞ்சா மீதான தடையை வாடா அமைப்பு ஆதரித்தது. மனப் பதற்றத்தைக் குறைக்கும் கஞ்சாவின் திறனைப் பற்றிய ஒரு ஆய்வை இதற்கு மேற்கோளாகக் காட்டியது.

போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஷாகாரி ரிச்சர்ட்சனுக்கு ஆதரவாக கொலராடோவில் போராட்டம்

"நெருக்கடியின்போது சிறப்பாக செயல்படவும், போட்டிக்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கவும்" கஞ்சா உதவி செய்யும் என்று வாடா கூறியது.

ஆனால் அந்த ஆய்வுகள் கஞ்சா ஒரு செயல்திறனை அதிகரிக்கும் ஊக்க மருந்து என்ற முடிவுக்கு வரப் போதுமானதாக இல்லை என்று மாண்ட்ரீலில் உள்ள கியூபெக் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அறிவியல் துறையின் இயக்குநர் அலைன் ஸ்டீவ் காம்டோயிஸ் கூறுகிறார்..

"நீங்கள் கழுகுப் பார்வையில் இதைப் பார்க்க வேண்டும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"பதற்றம் குறைகிறது என்பது உண்மைதான், ஆனால் உண்மையான உடலியல் தரவுகளின் அடிப்படையில், கஞ்சா பயன்படுத்திய பிறகு செயல்திறன் குறைந்துவிட்டது என்பதை அறிய முடிகிறது"

ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் மற்றும் கஞ்சாவை பயன்படுத்துவதால் உடல் திறன் மேம்படுகிறதா என்பது தொடர்பான ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவராக காம்டோயிஸ் இருந்தார்.

ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலமும், வலிமையையும் சமநிலையையும் குறைப்பதன் மூலமும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உடல் இயக்கத்தை கஞ்சா தடுக்கிறது என்று இந்த ஆய்வு சுட்டிக் காட்டியது.

மனப் பதற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த ஆய்வு எதுவும் கூறவில்லை. ஆனால் கஞ்சாவால் கிடைப்பதாகக் கருதப்படும் நன்மைகளை, அதன் எதிர்மறை விளைவுகள் தடுத்துவிடும் என்று காம்டோயிஸ் கூறுகிறார்.

ஊக்க மருந்துகளும் விளையாட்டு வேட்கையும்

ஆனால் செயல்திறனை அதிகரிக்கும் பண்பைத் தவிர மருந்துகளை தடை செய்யும் வாடாவின் நடவடிக்கைக்கும் வேறு காரணங்களும் இருக்கின்றன.

ஒலிம்பிக்கில் பல ஊக்கமருந்து சர்ச்சைகளுக்குப் பிறகு 1999 இல் வாடா நிறுவப்பட்டது. உலகெங்கிலும் உள்ள விளையாட்டுகளில் ஊக்கமருந்து பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் இதன் நோக்கம். 2004 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட பட்டியலை வாடா வெளியிட்டது. அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான நாடுகளில் கஞ்சா தடை செய்யப்பட்ட பொருளாக இருந்தது.

"அவர்கள் சமூக மரியாதைச் சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை" என்கிறார் டெக்சாஸ்-ஆஸ்டின் பல்கலைக்கழகத்தில் ஊக்கமருந்து எதிர்ப்பு வரலாற்றை ஆய்வு செய்யும் ஜான் ஹோபர்மேன்

2011-ஆம் ஆண்டு வாடா வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் கஞ்சா தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு மூன்றாவது அம்சமே காரணமாகக் கூறப்பட்டது. அதாவது விளையாடடின் வேட்கையை கஞ்சா பாதிக்கிறது என்று வாடா கூறியது. அத்துடன் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு வீரர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தையும் வாடா சுட்டிக் காட்டியது.

இந்த விதி தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் அமெரிக்க வீராங்கனைக்கு மட்டுமல்ல, இன்ன பல விளையாட்டு வீரர்களைத் தடுப்பதற்கும் வழி வகுத்தது.

2009 ஆம் ஆண்டில், புகழ் பெற்ற நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் கஞ்சா புகைப்பது போனற புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்தன. இதைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும் கெல்லாக் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பும் பறிக்கப்பட்டது.

பெல்ப்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மைக்கேல் ஃபெல்ப்ஸ்

2006 ஆம் ஆண்டில் கஞ்சா பயன்டுத்தியது சோதனையில் தெரியவந்த பிறகு அமெரிக்க ஓட்டப் பந்தய வீரர் ஜான் கேபலுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

வாடா தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பே கஞ்சா பயன்படுத்தியதாக கனடாவைச் சேரந்த பனிச்சறுக்கு வீரர் ரோஸ் ரெபக்லியாட்டியின் தங்கப் பதக்கத்தை பறிக்க உத்தரவிட்டது.

ஆனால் அவர் கஞ்சா பயன்படுத்திய கால கட்டத்தில் விதி அமலுக்கு வரவில்லை என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த 10 ஆண்டுகளில் கஞ்சா குறித்த சட்ட விதிமுறைகள் மற்றும் சமூகத்தின் பார்வை மாறத் தொடங்கியுள்ளன.

2013 ஆம் ஆண்டில் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சாவை வாங்கவும் விற்கவும் சட்ட அனுமதியை வழங்கியது தென் அமெரிக்க நாடான உருகுவே, 2018- ஆம் ஆண்டில் கனடாவும் இதைப் பின்பற்றியது.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து உட்பட இன்னும் பல நாடுகள் கஞ்சா பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளன.

அமெரிக்காவின் மத்திய அரசைப் பொருத்தவரை இது சட்ட விரோதமானது. ஆனால் மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களில் கஞ்சா பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் வீராங்கனை ஷாகாரே ரிச்சர்ட்சன் சார்ந்திருக்கும் ஓரேகான் மாநிலுமும் அவற்றில் ஒன்று.

ஓட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சான்பிரான்சிஸ்கோவில் கஞ்சாவுக்கு ஆதரவானோர் பங்கேற்ற ஓட்டம்

மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா பயன்பாட்டை அனுமதிப்பது உலகின் பலபகுதிகளில் அதிகரித்துள்ளது, பிரிட்டன் உட்பட பல நாடுகள் மருத்துவக் காரணங்களுக்காக கஞ்சாவை அனுமதிக்கின்றன.

கேன்னபிடியோல் எனப்படும் கஞ்சாவின் ஒரு ரசாயன உள்பொருளை தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து வாடா 2019-ஆம் ஆண்டு நீக்கிவிட்டது.ஆயினும் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த ரசாயனத்துக்கும் தடை நீடிக்கிறது.

இத்தகைய காரணங்களால், ரிச்சர்ட்சனின் தடை மீதான விமர்சனங்கள் தீவிரமாகியிருக்கின்றன.

தனது தாயின் மரணத்தில் இருந்து மீண்டு வருவதற்காக தகுதிப் போட்டிகள் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கஞ்சாவை பயன்படுத்தியதாக என்பிசி நியூஸிடம் ரிச்சர்ட்சன் கூறினார்.

"நான் உங்களை ஏமாற்றியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்காவுக்கு 100 மீட்டரில் தங்கம் கிடைக்காமல் போகும் கடைசி தருணம் இதுவாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

ஆயினும் கஞ்சா மீதான தடை சட்டப்புத்தகத்தில் இருப்பதால், அதில் இருந்து எளிதில் விலக்குப் பெற முடியாது.

கஞ்சா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கஞ்சா பொருள்கள் விற்கும் கடை

அடுத்து என்ன?

கஞ்சா மீதான தடையை வாடா மறுபரிசீலனை செய்யுமா, அப்படிச் செய்தால் அது எப்போது நடக்கும் என்பது தெளிவாகத் திரெயவில்லை. அல்லது எப்போது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் தடையை விலக்குவதற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, அமெரிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறிவிடவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் வெள்ளை மாளிகை தலையிடக்கூடும் என்ற கருத்து பரவிவிட்டது.

"விதிகள் என்றால் விதிகள்தான். விதிகளில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்" என்று மிச்சிகனில் பேசும்போது பைடன் கூறினார். "அவை அப்படியே தொடர வேண்டுமா என்பது வேறு பிரச்சினை." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வாடாவின் விதிகளை அமல்படுத்தும் அமெரிக்க அமைப்பான அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு கூட "கஞ்சா பயன்பாட்டுக்கு தடை விதித்திருப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது" என்று கூறியுள்ளது..

இப்படிப்பட்ட மாற்றம் ஏதேனும் நடக்கும்வரை ஷாகாரி ரிச்சர்ட்சன் மற்றும் அவரைப் போன்ற பிற விளையாட்டு வீரர்கள் கஞ்சாவிலிருந்து விலகி இருக்க வேண்டும், அல்லது விளையாட்டில் இருந்து ஒதுங்கிவிட வேண்டும்.

https://www.bbc.com/tamil/sport-58011113

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.