Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி: ஒரு துல்லியமான வாசிப்புக்கான சில குறிப்புக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி: ஒரு துல்லியமான வாசிப்புக்கான சில குறிப்புக்கள்!

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி: ஒரு துல்லியமான வாசிப்புக்கான சில குறிப்புக்கள்!

— எம்.எல்.எம். மன்சூர்  

ஒரு நெருக்கடிக்கு வழிகோலிய மூல காரணங்களை அந்நெருக்கடியை சந்தித்திருப்பவர்கள் பிழையாக விளங்கிக் கொண்டால், அதற்குண்டான தீர்வையும் (இயல்பாகவே) அவர்கள் பிழையாக விளங்கிக் கொள்வார்கள். இலங்கை முஸ்லிம்களின் விஷயத்தில் இப்பொழுது இது தான் நடந்திருக்கின்றது.

‘இன்று தாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கான ஒரேயொரு தீர்வு ‘ராஜபக்ச அரசாங்கத்தை தொலைத்துக் கட்டுவதுதான்’ எனப் பெரும்பாலான முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். மேலோட்டமாக பார்க்கும் பொழுது ‘அது சரி’ என்றே தோன்றுகின்றது. ஜனாஸா எரிப்பு விவகாரத்தின் பின்னர் ராஜபக்சகள் மீதான முஸ்லிம் சமூகத்தின் வெறுப்பு உச்சக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சமூக வெளியில் மாற்றுக் கருத்துக் களம் அருகி வருவது மட்டுமன்றி, அப்படி மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்களை துரோகிகளாக நோக்குவதும், அவர்கள் தொடர்பாக உடனடி பத்வாக்களை  வெளியிடுவதும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் பிரச்சினையில் ‘எல்லோரும் ஒரே அணியில் இருக்க வேண்டும்; ஒரே கருத்தைக் கொண்டிருக்க வேண்டும்’ என்ற விதத்திலான ஒரு சிந்தனையே முஸ்லிம்களின் பொதுப் புத்தியை இப்பொழுது ஆக்கிரமித்திருக்கின்றது. சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்களில் / பின்னூட்டங்களில் அந்த நிலைப்பாடே அதிகமும் பிரதிபலித்து வருவதனை பார்க்க முடிகின்றது.

அமைச்சர் அலி சப்ரி மீதான விமர்சனங்கள் மற்றும் கடும் வசைச் சொற்கள் என்பவற்றுக்கூடாக தெளிவான ஒரு செய்தி முன்வைக்கப்படுகின்றது. அதாவது, ‘SJB அல்லாத வேறு எந்த ஓர் அணியிலும் முஸ்லிம் தலைவர்கள் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது’ என்பதே அந்தச் செய்தி. சஜித் / சம்பிக்க ஆட்சி வந்தால் எல்லா பிரச்சினைகளும் தானாகவே தீர்ந்து விடும் என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான முஸ்லிம்கள் இருந்து வருகின்றார்கள்.

அப்படியொரு அரசாங்க மாற்றம் ஏற்பட்டால், சிங்கள இனவாதத்தை பரப்பி வரும் விமல் வீரவன்ச / உதய கம்மன்பில போன்றவர்களின் குரல்களும், கடும் மதவாத நிலைப்பாட்டில் நின்று, முஸ்லிம்களுக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல்களை விடுத்து வரும் ஞானசார தேரர் / ரத்ன தேரர் போன்ற பிக்குகளின் குரல்களும் மங்கி மறைந்து விடும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால், ‘வெறுமனே ஒரு ஆட்சி மாற்றத்தினால் மட்டுமே தீர்த்து வைக்கக் கூடிய அளவுக்கு எளிமையானதாக இருந்து வரவில்லை’ என்று சொன்னால் பலரும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்தக் கசப்பான உண்மையை யாராவது சொல்லித் தான் ஆக வேண்டும். முஸ்லிம்களின் பொதுவான அரசியல் கண்ணோட்டம் மாற்றம் எதுவுமில்லாமல் இப்படியே இருந்து வந்தால் அது இறுதியில் சமூகத்தை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை விவரமாக சொல்ல வேண்டியதில்லை.

இதில் இரண்டு விஷயங்களை வலியுறுத்த வேண்டும். ஓன்று, ஆட்சி மாற்றம் வந்தாலும் பிரச்சினை தீரப் போவதில்லை என்பது. இரண்டு, 2024- 2025 தேர்தல்களில் ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பது என்பது நினைக்கும் அளவுக்கு ஒரு சுலபமான காரியமாக இருக்கப் போவதில்லை என்பது.

கிழக்கு மைய நோக்கு 

இலங்கை முஸ்லிம் அரசியல் தொடர்பான உரையாடல்களில் இன்று ஆதிக்கம் செலுத்தி வரும் கிழக்கு மைய நோக்கின் – அதாவது, சமூக ஊடகங்களில் முஸ்லிம் அரசியல் தொடர்பாக அதிகம் எழுதி வருபவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து வரும் பின்னணியில், தவிர்க்க முடியாத விதத்தில் மேலோங்கியிருக்கும் கிழக்கு மைய நோக்கின் – முக்கிய பிரச்சினை, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்கொண்டு வரும் நெருக்கடியின் முழுமையான ஒரு சித்திரம் தீட்டிக் காட்டப்படாமையாகும்.

வடக்கு கிழக்குக்கு வெளியில் சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் சுமார் 12 இலட்சம் முஸ்லிம்கள் சார்பான குரல்கள் இந்த விவாதங்களில் அபூர்வமாகவே ஒலித்து வருவது பெரும் துரதிர்ஷ்டம். பல நூற்றாண்டு காலம் தமது சகோதர சிங்கள மக்களுடன் ஒற்றுமையுடன் சகவாழ்வு வாழ்ந்து வந்திருக்கும் தென்னிலங்கை முஸ்லிம்கள், குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னரான இலங்கையில் “இனியும் அத்தகைய சகவாழ்வு சாத்தியமாகுமா” என்ற சங்கடமான கேள்வியை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

‘எமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இந்த மண்ணில் தொடர்ந்து சந்தோசமாக, நிம்மதியாக வாழ வேண்டுமானால் அந்த முன்னுதாரணமற்ற சகவாழ்வு அவ்விதமே தொடர வேண்டும்’ என்பதே அவர்களுடைய அபிலாஷை. அதற்கு வேறு மாற்று வழிகள் இல்லை. விரும்பியோ விரும்பாமலோ அந்த சகவாழ்வை முன்னெடுப்பதில் தான் தென்னிலங்கை முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்பு பெருமளவுக்கு தங்கியிருக்கின்றது.

உயிர்த்த ஞாயிறு அனர்த்தத்தின் பின்னர் நாட்டில் ஒரு பேரலையாக எழுந்த அதீத இஸ்லாமிய வெறுப்பின் பின்னணியிலும் கூட, சகோதர சிங்கள மக்கள் இன்னமும் அந்த சகவாழ்வுக்கு தயாராக இருந்து வருகின்றார்கள் என்பது ஒரு நல்ல செய்தி. ஆகவே, தென்னிலங்கை முஸ்லிம்களின் அரசியல், சமூக மற்றும் சமய நகர்வுகளை அந்தத் திசையை நோக்கியே நெறிப்படுத்த வேண்டியிருக்கின்றது.

இதே விதத்தில் வன்னியிலும், கிழக்கிலும் தமிழர் – முஸ்லிம் சகவாழ்வு வலுவூட்டப்பட வேண்டும். குறிப்பாக,கிழக்கில் தமிழர்கள், முஸ்லிம்கள் தொடர்பான மனக்குறைகளையும், கசப்புணர்வுகளையும் கொண்டுள்ளார்கள் என்பது (வெளியில் அதிகம் பேசப்படாவிட்டாலும்) பலரும் அறிந்திருக்கும் ஒரு விடயம். ராஜபக்சகளால் களமிறக்கப்பட்ட வியாழேந்திரன் போன்ற ஒருவர் மட்டக்களப்பில் ஈட்டிய தேர்தல் வெற்றி ஒரு விதத்தில் அந்தக் கசப்புணர்வின் மறைமுகமான வெளிப்பாடாகவே இருந்து வந்தது.

‘சகவாழ்வை பலப்படுத்தப் போய் மறுமை வாழ்வை பழுதாக்கிக் கொள்ள வேண்டாம்’ என்று பின்னூட்டமிடும் நோய்க் கூறு மனநிலையுடன் கூடிய ஆட்கள் நிறையவே இருந்து வருகின்றார்கள். அப்படியானவர்களை மூளைச் சலவை செய்யும் இயக்கங்களுக்கும் குறைவில்லை. 

அரசியல் கள நிலவரங்களை விளங்கிக்கொள்ளல்

அரசியல் கள நிலவரங்களை விளங்கிக் கொள்ளும் விதமும், தர்க்கத்திற்கு முரணான விதத்தில் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளும் இலங்கை முஸ்லிம் அரசியலில் நிலவி வரும் ஒரு சிக்கலாகும். அதற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம்.

ராஜபக்ச அணியில் இருந்த போது முஸ்லிம்களின் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட சம்பிக்க ரணவக்க, மேர்வின் சில்வா போன்றவர்கள் இப்போது ராஜபக்சகளை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முஸ்லிம் சமூகம் அவர்கள் குறித்த பார்வையை சாதகமான விதத்தில் மாற்றிக் கொண்டிருப்பது அத்தகைய முரண்பாடுகளில் ஒன்று. அளுத்கம வன்செயல்களின் போது கடுமையான சிங்கள பௌத்த நிலைப்பாட்டை எடுத்திருந்த சம்பிக்க ரணவக்க போன்றவர்களையும், மதத் தீவிரவாதிகளான ஒரு சில பிக்குகளையும் அவர்கள் ராஜபக்சகளை எதிர்க்கும் ஒரே காரணத்திற்காக முஸ்லிம்கள் தமது சக பயணிகளாக நோக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

(ஒரு பல்லின, பல்சமய ஜனநாயக நாட்டுக்கு எவ்விதத்திலும் பொருந்தாத) தமது தீவிர இனவாத/மதவாத அஜென்டாவை கோத்தாபய ராஜபக்ச அமுல் செய்யாமல்  இருக்கின்றாரே என்ற ஆதங்கத்தில் தான் ஒரு சில பிக்குகள் கடுமையாக ஜனாதிபதியை எதிர்த்துக் குரலெழுப்பி வருகின்றார்கள்.  அதாவது,இலங்கை சிறுபான்மை சமூகங்கள் எதற்காக SLPP அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனவோ, அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டிலேயே இந்த அரசு எதிர்ப்பாளர்கள் இருந்து வருகின்றார்கள் என்பதனை பலரும் பார்க்கத் தவறுகின்றார்கள். ராஜபக்ச வெறுப்பு அந்த அளவுக்கு அவர்களுடைய கண்களை மறைத்திருக்கின்றது.

சம்பிக்க ரணவக்கவின் நிலைப்பாடு தொடர்பாக பலரும் பார்க்கத் தவறும் ஒரு விடயம் அவர் JHUவிலிருந்து கருத்து முரண்பாடுகள் காரணமாகவோ அல்லது மனக் கசப்புக்கள் காரணமாகவோ வெளியேறவில்லை என்பது. சுமுகமாக பேசி, முடிவாக்கப்பட்ட ஓர் ‘ஏற்பாடாகவே’ அவர் SJBயில் இணைந்திருக்கின்றார். சிறுபான்மையினர் தொடர்பாக தனது பழைய கொள்கை நிலைப்பாடுகளை கைவிட்டிருப்பதாக அல்லது மாற்றிக் கொண்டிருப்பதாக அவர் இதுவரையில் எங்கும் பகிரங்கமாக தெரிவித்திருக்கவில்லை.

அண்மைக் காலமாக JHU தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் அமைச்சர் அலி சப்ரியை இலக்கு வைத்து ‘அவரை ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியாக, பயங்கரவாதத்திற்கு துணை நிற்பவராக’ சித்தரித்துக் காட்டும் விதத்தில் கடும் இனவாத தொனியில் முன்வைத்து வரும் கருத்துக்கள் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை, தர்க்க ரீதியான வலுவற்றவை. ஆனால், அப்பிரதியை யார் தயாரித்திருக்க முடியும் என்பதனை ஊகிப்பது சிரமமானதல்ல. 

ராஜபக்சக்களின் ஆட்சி தொடர்ந்தால்…

இன்றைய நிலையில் நின்று பார்க்கும் பொழுது 2024/ 2025 தேர்தல்களிலும் இலங்கையின் தேர்தல் களம் (Electorate) பெருமளவுக்கு துருவ நிலைப்படுத்தப்பட்டிருக்கும் (Polarised) என்றே தெரிகிறது. கிட்டத்தட்ட 80 சதவீத சிறுபான்மை வாக்குகள் எந்த அணிக்குச் செல்லும் என்பதனை எளிதில் ஊகிக்க முடியும்.

அபரிமிதமான சிறுபான்மை ஆதரவு என்ற விடயம் (முன்னைய தேர்தல்களில் நிகழ்ந்த விதத்திலேயே) SJBயின் சிங்கள வாக்கு வங்கியை மேலும் பலவீனப்படுத்த முடியும். அந்த அணியில் சம்பிக்க ரணவக்கவின் பிரசன்னம் பெரிய மாற்றம் எதனையும் எடுத்து வர முடியாது. ராஜபக்ச – ரணவக்க என்று வரும் பொழுது, சிங்கள பௌத்த உணர்வாளர்களின் தெரிவு ராஜபக்சவாகவே இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை. அந்த நிலையில், அநேகமாக 2029 – 2030 வரையில் இலங்கை யாரோ ஒரு ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் இருந்து வருவதற்கான வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன.

குறிப்பாக, தென்னிலங்கை முஸ்லிம் சமூகம் அரசியல் முடிவுகளை எடுக்கும் விடயத்தில் மிகவும் நிதானமாகவும், தூர நோக்குடனும் செயற்பட வேண்டியிருப்பதுடன், உணர்ச்சிக் கொந்தளிப்புக்களிலும் பார்க்க, கள யதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணமாக இது இருந்து வருகின்றது. ஏனெனில், இனி வரும் எதிர்காலத்தில் (தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஏற்கனவே செய்து வருவதைப் போல) பிரதான கட்சிகளான SLPPயும், அதே போல SJBயும் ஓரளவு இனவாத நிலைப்பாடுகளை எடுப்பது தவிர்க்க முடியாததாகும். அந்த நிலையில், பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்பவர்கள் ஒரு சில விட்டுக் கொடுப்புக்களுக்கும், சமரசங்களுக்கும் தயாராக இருந்து வர வேண்டும்.

ஞானசார, ரத்ன தேரர்கள் 

‘ராஜபக்சகள் தொலைந்தால் ஞானசார தேரரினதும், ரத்ன தேரரினதும் குரல்கள் தானாகவே வலுவிழந்துவிடும்’ என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் எதிர்ப்பார்பாக உள்ளது. இருவரும் முஸ்லிம்கள் மட்டுமே பிரத்தியேகமாக கையாள வேண்டிய / தீர்த்து வைக்க வேண்டிய ஒரு சில பிரச்சினைகளில் இவர்கள் அழையா விருந்தாளிகளாக மூக்கை நுழைத்திருக்கின்றார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், கடந்த 20 வருட காலமாக முஸ்லிம்கள் செய்யத் தவறிய காரியங்களை இப்பொழுது இவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள்.

ஒரு சில அரசியல்வாதிகளின் வெளிப்படைத் தன்மையற்ற, அடாவடிச் செயற்பாடுகள் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எந்த அளவுக்கு சங்கடத்தையும், அவமானத்தையும் எடுத்து வர முடியும் என்பதற்கு பட்டிக்களோ கெம்பஸ் வளாகத்திற்கு ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட பலவந்தமான பரிசோதனை விஜயம் ஓர் உதாரணம்.

இன்றைய இலங்கையின் சிக்கலான இனத்துவ அரசியல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பான அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பவற்றின் பின்ணணியில் நோக்கும் பொழுது, ஒரு அரசாங்க மாற்றத்தால் மட்டும் இந்தத் தீவிரவாத பிக்குகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது போகும் என்பது தெளிவாக தெரிகிறது.

அந்தப் பரீட்சார்த்தம் 2015 – 2019 காலப் பிரிவின் போது தோல்வி கண்டிருந்தது என்பது எல்லோரும்  அறிந்த விடயம்.

‘2015இல் அதே காரியத்தை செய்தீர்கள் தானே. பிரச்சினை தீர்ந்ததா?’ என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் அவர்கள். ‘நீங்கள்2018  திகன, 2019 வயம்ப மற்றும் மினுவாங்கொடை வன்முறைச் சம்பவங்களை தானே சொல்கிறீர்கள்…. அது மொட்டுக் கட்சிக்காரர்களின் வேலை. உங்களுக்குத் தெரியாதா’ என எதிர்க் கேள்வி கேட்பார்கள்.

‘நீங்கள் மனமுருக பிரார்த்தனைகள் செய்து, நோன்பு நோற்று கொண்டு வந்த ஒரு அரசாங்கம் ஆட்சியிலிருக்கும் பொழுது ‘எதிர்க்கட்சிக்காரன் அடிக்கிறானே’ என்று அழுது புலம்புவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா’ என்று யாரும் கேட்டு விட முடியாது. 

இதே ஆட்கள் தான் 2020 பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு விசித்திரமான வாதத்தை முன்வைத்திருந்தார்கள்.

‘வலுவான ஒரு எதிர்க்கட்சி வேண்டும். அதற்காக இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம்” என்று சொல்லி, SJBயின் தோல்வி நிச்சயம் என்பதை நன்கு தெரிந்து கொண்டு,அக்கட்சிக்கு வாக்களித்ததுடன், மற்றவர்களையும் அவ்வாறு செய்யுமாறு தூண்டினார்கள்.

அரசியலில் ஏகபத்தினி விரதம் 

‘நீங்கள் சொல்லும் கட்சி அரசாங்க கட்சியாக இருந்த போதே நோஞ்சானாக தானே இருந்தது. அதனால் தானே மொட்டு கட்சிக்காரன் உங்களை அடித்துத் துவைத்திருக்கின்றான். அதே கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது எப்படி ஒரு வலுவான கட்சியாக இருக்க முடியும்’ என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்பது தெரியாது. 

‘யாருமே மாற்றுக் கருத்துக்களை சொல்ல முடியாது. எல்லோருக்குமான ‘பொதுத் தெரிவை’ எவரும் மீறக் கூடாது. எல்லோரும் ஒரே கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.’

இந்தச் சாபம் தான் 1947 தொடக்கம் முஸ்லிம் சமூகத்தை பீடித்திருக்கின்றது. யுஎன்பி என்ற கட்சியின் மீது கொண்ட அதீத விசுவாசம் அநேகமாக அதை தமது இரண்டாவது மார்க்கமாக கருதி, வழிபட்டு வந்த படு முட்டாள்தனம். இப்பொழுது மூன்று தலைமுறைகளாக நீடித்துக் கொண்டிருக்கின்றது இந்த குருட்டு பக்தி (யுஎன்பி க்கு பதில் இப்போது SJB).

ஒரு வகையில் இந்த ‘ஏகபத்தினி விரதமே’ முஸ்லிம்கள் இப்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடிக்கான மூல காரணம் என்று கூறலாம். அதன் பின்விளைவுகளாகவே ஏனைய பல பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன.

இத்தனைக்கும் (1956 – 1960, 1960 – 1965, 1970 – 1977) மூன்று SLFP அரசாங்கங்களின் காலப் பிரிவுகளின் போது SSC அல்லது GCE (சாதாரண தரப்) பரீட்சைகளில் மட்டுமே சித்தியடைந்திருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு அள்ளி அள்ளி வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களே இன்றைய முஸ்லிம் மத்திய தர வர்க்கத்தின் எழுச்சிக்கு வழிகோலியிருந்தன என்பதை பலரும் பார்க்கத் தவறுகின்றார்கள்.

இன்றைய முஸ்லிம் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்வாண்மையாளர்களில் பெரும்பாலானவர்கள் அந்த ஆசிரியர்களின் பிள்ளைகள் என்பது ஒரு கூடுதல் தகவல்.

அவ்விதம் புதிதாக எழுச்சியடைந்திருக்கும் அந்த மத்திய தர வகுப்பினரில் பெரும்பாலானவர்கள் தான் இப்பொழுது கடும் இனவாத / மதவாத நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றார்கள். இன உறவுகளை பொறுத்தவரையில் சிக்கலான பல பரிமாணங்களைக் கொண்டிருக்கும் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டில் ஒரு சிறுபான்மை சமூகம் எவ்வாறு சிந்திக்க வேண்டும், எவ்வாறு செயற்பட வேண்டும் என்பவற்றுக்கு நேர்மாறான விதத்தில் சிந்திப்பவர்களாகவும் செயற்படுபவர்களாகவும் இருந்து வருகின்றார்கள்.

சமூக ஊடகங்களை உன்னிப்பாக அவதானித்தால், அத்தகைய ஆட்களை இயக்கும் உளவியல் எத்தகையது என்பதை கண்டு கொள்ள முடியும். பிற மதத்தவர்கள் / பிற மதத் தலைவர்கள் இஸ்லாத்தின் சிறப்புக்களையும்,முஸ்லிம்களின் நற்பண்புகளையும் பாராட்டி ஒரு வார்த்தை சொன்னால் போதும், வட்ஸ்அப் குழுமங்களிலும், முகநூலிலும் பெரும் பரவச உணர்வுடன் அவற்றை நூற்றுக்கணக்கில் பகிர்ந்து கொள்வார்கள். அத்தகைய ஆட்களை / பிக்குகளை கொண்டாடுவார்கள்.

ஆனால், அதே நேரத்தில் மௌலவி ஒருவர் ஏனைய சமயத்தவர்களின் சிறப்புக்களை எடுத்துக் கூறி,அவர்களுடன் நாங்கள் நல்லுறவுகளைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வர வேண்டிய தேவையினை வலியுறுத்தினால், இதே ஆட்கள் ‘ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு’ அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பார்கள்.

2015 தேர்தலில் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ராஜபக்ச அரசாங்கத்தை (SLFP ஐ) நிராகரித்தது நியாயம். 2010 – 2015 கால கட்ட அனுபவங்கள் அவர்களை அவ்வாறு செய்வதற்கு தூண்டியிருந்தன. ஆனால், 2010 வரையில் சுமார் 60 ஆண்டு காலம் அவர்கள் SLFPஐ நிராகரித்து வந்திருந்தமையை எப்படி நியாயப்படுத்துவது? 1994 – 2005 காலத்தில் சந்திரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் வந்த அரச தலைவர்களில் துளியும் இனக் குரோத உணர்வுகள் இல்லாதவர். தீவிர இடதுசாரி நிலைப்பாட்டில் இருந்தவர். (அவருடைய அரசாங்கத்தில் வேறு குறைபாடுகள் இருந்து வந்த போதிலும்) அவரை யாரும் ஒரு இனவாதி எனக் கூற முடியாது. ஆனால், அவரையும் முஸ்லிம்கள் பெரிதாக ஆதரிக்கவில்லை. 

பதியுதீன் மஹ்மூத் மகத்துவம் 
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி அபிவிருத்திக்கு ஒரு கல்வியாளர் என்ற முறையிலும், அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பலம் மிக்க அமைச்சர் ஒருவர் என்ற முறையிலும் முக்கியமான பங்களிப்புக்களை வழங்கிய பதியுதீன் மஹ்மூத் (1904 – 1997) என்ற தலைவரை அநேகமாக இன்றைய புதிய தலைமுறையினர் அறியாமலிருக்கலாம். அவர் வாழ்ந்த காலத்திலேயே இலங்கையின் மைய நீரோட்ட முஸ்லிம் சமூகம் அவரை உதாசீனம் செய்தது. ஒரு விரோதியாக பார்த்தது. தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் அளவுக்கு முஸ்லிம் சமூகத்திற்கு சேவையாற்றிய ஒரு தலைவர் இருந்து வரவில்லை என்றே கூற வேண்டும். ஆனால், அவர் 1977 தேர்தலில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட பொழுது அவரை தோற்கடித்து மகிழ்ச்சியடைந்தது  நமது சமூகம்.

அதே காலகட்டத்தில் ஹலீம் இஷாக், ஐ.ஏ. காதர், டாக்டர் மஹ்ரூப், எம்.ஏ.சி.ஏ. ரகுமான், தொப்பி மொஹிதீன், அலி பாரூக் போன்ற பல தலைவர்கள் யுஎன்பி க்கு மாற்று அணியிலிருந்து தேர்தல் அரசியலில் பங்கேற்றார்கள். ஆனால், அவர்களில் எந்தவொரு முஸ்லிம் தலைவரையும் சமூகம் பொருட்படுத்தவில்லை. 1947இல் ஆரம்பித்த ஒற்றைக் கட்சி அபிமானம் என்ற குழந்தைப் பருவ வலிப்பிலிருந்து (Infantile Disorder) சமூகம் இதுவரையில் மீளவேயில்லை.

(1994இன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் SLFPயுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட பின்னர் அங்கு இந்நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது விதிவிலக்கான ஒரு நிகழ்வு மட்டும் தான்). 

இடதுசாரிகள் மீதான உதாசீனம்
சமூகத்தின் மற்றொரு பிரச்சினை தொடர்ந்து சமூக நீதிக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் குரல் கொடுத்து வந்த இடதுசாரி தலைவர்கள் தொடர்பாக அது காட்டி வந்த உதாசீனம். வாழ்நாள் முழுவதும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பிய (அதன் காரணமாக சிங்கள பெரும்பான்மை சமூகத்தினால் ஒரு ‘துரோகியாக’ முத்திரை குத்தப்பட்டு, முழுமையாக பகிஷ்கரிக்கப்பட்ட) விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட போது முஸ்லிம்களோ அல்லது தமிழர்களோ அவரை கண்டுகொள்ளவே இல்லை.

பல்வேறு கால கட்டங்களில் இலங்கை முஸ்லிம்கள் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடுகள் தர்க்கத்திற்கும், யதார்த்தத்திற்கும் முரணானவையாகவே இருந்து வந்துள்ளன. அவற்றை நியாயப்படுத்துவதற்கான வலுவான காரணங்களும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

ஒரு விதத்தில் அந்த விரக்திதான் வாசுதேவ நாணாயக்கார போன்ற ஒரு தீவிர இடதுசாரி களப் போராளியை இப்பொழுது உதய கம்மன்பில போன்ற இனவாதிகளுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வதற்கு தூண்டியிருக்கின்றது. வாக்கு வங்கி அரசியலில் ஒரு வகையில் அது தவிர்க்க முடியாதது.

அத்தகைய ஒரு மனப்பாங்கின் தொடர்ச்சியாகவே  SLPP அரசாங்கத்தின் சிறுபான்மை எதிர்ப்பு அணுகுமுறையை நோக்க முடிகின்றது. ‘என்ன செய்தாலும் இவர்கள் எங்களுக்கு வாக்களிக்கப் போதில்லை. அதனால் எமக்கென தயார் நிலையில் இருந்து வரும் சிங்கள வாக்கு வங்கியை ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற சிந்தனையே அவர்களை நெறிப்படுத்துகின்றது.

இது ஒரு விஷச் சுழல்.

ஒரு கட்சியை நீங்கள் தேர்தலில் முற்றும் நிராகரிக்கின்றீர்கள். அந்தக் கட்சி ஆட்சிக்கு வருகின்றது. (ஒரு அரசாங்கம் தனக்கு வாக்களித்தவர்களையும், வாக்களிக்காதவர்களையும் ஒரே விதத்தில் நடத்த வேண்டுமென்பது இலட்சிய ஜனநாயகம். அது எங்கு தான் இருக்கின்றது?)

முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் பொழுது, அந்த அரசாங்கத்திலிருக்கும் (முஸ்லிம்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிராத) முஸ்லிம் அமைச்சரைப் பார்த்து, ஆவேசத்துடன் கேட்கிறார்கள்:
“ஏன்டா…… தாயோளி…. இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாயே!”

இந்தக் கபட நாடகம் தான் இப்பொழுது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

ஆரோக்கியமான விவாதங்கள், கறாரான சுய விமர்சனங்கள் என்பவற்றுக்கு பழக்கப்பட்டிராத ஒரு சமூகத்தில் வேறு எதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்? ‘முஸ்லிம் சமூகம் தன்னைப் பற்றிய ஆழமான ஒரு விமர்சனத்தை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்’ என்று விக்கிரபாகு கருணாரத்ன ஒரு சந்தர்ப்பத்தில் எழுதினார். விக்டர் ஐவன் மற்றும் ஜயதிலக டி சில்வா போன்ற இடதுசாரி எழுத்தாளர்களும் பல தடவைகள் அதனை சுட்டிக் காட்டியிருந்தார்கள்.

(தனது வாழ்நாள் முழவதும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்து வந்த) ஆங்கில பத்திரிகையாளரான ஜயதிலக டி சில்வா 2016இல் ‘லங்காதீப’ நாளிதழில் எழுதிய கட்டுரையொன்றில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:

“இப்பொழுது எங்கு போனாலும், எந்தவொரு சபையிலிருந்தாலும் பேச்சு குறிப்பிட்ட ஒரு தலைப்பையே சுற்றிச் சுற்றி வருகின்றது. கல்யாண வீட்டிலும், இழவு வீட்டிலும் ஆட்கள் சேர்ந்து கதைக்கும் பொழுது முஸ்லிம்களைப் பற்றியே பேசுகிறார்கள். முஸ்லிம் சமூகத்தில் வேகமாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து மக்கள் பதற்றத்துடனும், அச்சத்துடனும் கதைக்கிறார்கள்…. இது ஒரு ஆரோக்கியமான ஒரு நிலையல்ல…..”

குறிப்பாக, 1990 களின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்களில் சாதகமானவையும், பாதகமானவையும் சேர்ந்திருந்த நிலையில், சமூகம் பாதகமான மாற்றங்கள் குறித்த ஒரு கறாரான விமர்சனப் பார்வையை முன்வைக்கத் தவறியது. அதுமட்டுமன்றி, அவ்வாறு விமர்சித்து, கேள்வி எழுப்பியவர்களை ‘இனத் துரோகிகளாக’ முத்திரை குத்தியது.

இந்தப் பின்புலம்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பங்கேற்ற தீவிர மனநோயாளிகளை உருவாக்கியிருந்தது. அத்தகைய ஒரு குழுவினருக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் எவ்விதத்திலும் ஆதரவோ அனுசரணையோ வழங்கியிருக்கவில்லை என்பது உண்மை. ஆனால், சமூகத்தில் பரவலாக நிலவி வந்த ‘எல்லாம் நல்லபடியாகவே நடக்கின்றது’ என்ற எண்ணம்  (Complacency), எதனையும் யாரையும் கேள்வி கேட்க முடியாத நிலை, சமயத் தலைவர்களும், சிவில் சமூகத் தலைவர்களும் தத்தமது வகி பங்குகள் குறித்து  தெளிவற்றிருந்த நிலை, சமூகம் சார்ந்த  லௌகீக பிரச்சினைகள் தொடர்பான சிக்கலான பேச்சுவார்த்தை சபைகளில் (அந்தத் துறையில் எத்தகைய பயிற்சிகளையும் பெற்றிராத) மௌலவிமார் போன்றவர்கள் பங்கேற்றமை என  எல்லாமாக சேர்ந்து ஒரு பெரும் குழுப்ப நிலை உருவாகியிருந்தது.

பொருத்தமற்ற மத, சமூகத்தலைமைகள் 

சமூகத்தில் பரவலாக ஊடுருவியிருக்கும் தப்லீக் போன்ற இயக்கங்கள் தமது பிரச்சாரங்களுக்கூடாக இளைஞர்களுக்கு மத்தியில் உருவாக்கிய ஒரு வித கற்பனாவாத உலகம் (Utopia), குறிப்பாக, தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்கள் ஒருவித போலி சமயப் பெருமித உணர்வால் தூண்டப்பட்டு, தம்மைச் சூழ வாழும் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் (ஜயதிலக சில்வா போன்ற இடதுசாரிகள் துல்லியமாக அவதானித்திருந்ததைப் போல) முஸ்லிம்கள் குறித்த ஒரு வித இனம் புரியாத அச்சத்தையும், சந்தேக உணர்வையும் தோற்றுவித்தமை, தௌஹீத் போன்ற அமைப்புக்கள் தமது தீவிர நிலைப்பாடுகள் காரணமாக ஊர் ஜமாஅத்துகளில் ஏற்படுத்திய பிளவுகள்,அவற்றுடன் சம்பந்தப்பட்ட கடுமையான மனக் கசப்புக்கள், எத்தகைய (விஞ்ஞானபூர்வமான) தேவை மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் வகைதொகையற்ற விதத்தில் (குறிப்பாக சிங்கள பிரதேசங்களில்) பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸாக்கள் நிர்மாணிக்கப்பட்டமை, சமூகத்தைச் சேர்ந்த செல்வந்தர்களின் உபரி நிதிகள் / நன்கொடைகள் முழுக்க முழுக்க பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் என்பவற்றுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டமை, (முஸ்லிம் கிராமங்களில் நூல்நிலையங்களை அமைப்பதற்கென பள்ளிவாசல்களில் திரண்டிருந்த கோடிக்கணக்கான நிதியங்களிலிருந்து  ஒரு சதவீதத்தைக் கூட ஒதுக்கவில்லை என்ற விடயத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்), O/L மற்றும் A/L படிப்பின் பின்னர் உயர் கல்விக்குச் செல்லாத முஸ்லிம் இளைஞர்களுக்கு உரிய விதத்திலான தொழில் வழிகாட்டுதல் திட்டங்கள் இல்லாதிருந்தமை, அதனால் முச்சக்கர வண்டி ஓட்டுவது மட்டுமே வேலையற்றவர்களுக்கான ஒரேயொரு சுயதொழிலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டமை மற்றும் பள்ளிவாசல்களில் பொருத்தமற்ற நபர்கள் தலைமைப் பொறுப்புக்களை வகித்து வந்தமை என்று இன்று முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளையும், அவற்றுக்கான காரணங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆக, தொகுத்து நோக்கும் பொழுது, முடிவாக ஒன்றைச் சொல்லலாம். முஸ்லிம்கள் இன்று எதிர்கொண்டு வரும் நெருக்கடியை சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தினால் தீர்த்து வைக்க முடியாது; தீவிரவாத நிலைப்பாட்டிலிருக்கும் தேரர்களை வாயடைக்கச் செய்வதன் மூலமும் தீர்த்து வைக்க முடியாது; தெரண, ஹிரு போன்ற டிவி களை வாய் மூடச் செய்வதன் மூலமும் தீர்த்து வைக்க முடியாது. அலி சப்ரியும், பளீல் மர்ஜானும் மற்றும் ராஜபக்சகளிடம் தஞ்சம் புகுந்திருக்கும் SLMC / ACMC எம்பிக்களும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் அதனை தீர்த்து வைக்க முடியாது. ஏனென்றால், இது அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கடியல்ல.

மாறாக, அந்த நெருக்கடியை – கடந்த 30 வருடங்களாக தாம் செய்த காரியங்களாலும், செய்யத் தவறிய காரியங்களாலும் – யார் தோற்றுவித்தார்களோ அவர்களே முன்வந்து தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கென சமூகத்திற்கு உடனடியாக தேவைப்படும் தீவிரமான சுய விமர்சனச் செயற்பாட்டை இனியும் தாமதிக்க முடியாது. ‘என்ன நடந்தாலும் எனது மனைவியின் கன்னித் தன்மையில் கைவைக்கவே மாட்டேன்’ என்று சூளுரைத்த முட்டாள் கணவனைப் போல ஒரு சமூகம் நடந்து கொள்ள முடியாது. எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்தே ஆக வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அவற்றைச் செய்வதற்கு வெளியிலிருந்து ஆட்கள் வருவதனை தடுக்க முடியாது போய்விடும்! 

 

https://arangamnews.com/?p=5851

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.