Jump to content

வறுமையும் அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வறுமையும் அரசியலும்

என்.கே. அஷோக்பரன்

ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. 

இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்கிரையாகி மரணித்த கொடூரம், இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்கள் இடையே, இனரீதியான வாக்குவாதங்கள் சமூக ஊடகப்பரப்பில் இடம்பெறும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. 

எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது. ஒரு 16 வயது சிறுமியின் கொடூர மரணத்தை, நியாயமாக விசாரித்து, அதற்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கருத்தை அல்லவா, மதியுள்ள மக்கள் வலியுறுத்த வேண்டும். மாறாக, குற்றம்சாட்டப்பட்டவன், தான் சார்ந்த இனத்தவன் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவனுக்கான அபத்த நியாயங்களை வாதமாக முன்வைப்பதெல்லாம், இனவாதத்தால் மழுங்கிய மூளையின் சிந்தனையல்லாது வேறென்ன? 

மறுபுறத்தில், ஓரினத்தைச் சேர்ந்த ஒருவனும் அவன் சார்ந்தவர்களும், ஒரு பெருங்குற்றத்தை இழைத்தார்கள் என்பதற்காக, அந்த இனத்தையே பொதுமைப்படுத்திச் சாடுவதும், அறிவு சார்ந்த காரியமல்ல. 

இந்தக் குறுகிய இனவாத சிந்தனைகளைத் தாண்டி, நாம் என்றுதான் சிந்திக்கத் தொடங்கப் போகிறோம்? இந்த இனவாத ‘குழாயடிச் சண்டை’யில், அந்தச் சிறுமியையும் அவளுக்கான நீதியையும் அவளது உற்றோருக்கான நியாயத்தையும் மறந்துவிட்டார்கள். எத்தனை துர்பாக்கியம்மிக்க சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அந்தச் சிறுமியின் கொடூர மரணத்துக்கும் அவள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கும், நியாயம் கிடைக்க வேண்டும். மனிதம் நிறைந்த மனங்கள் அதையே வேண்டிநிற்கும். சட்டம் தன் கடமையைச் செய்வதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதுதான், இங்கு சிறந்த குடிமக்கள் செய்யக் கூடிய அரும்பணியாக அமையும். 

நிற்க! ஆனால், இது இந்தச் சிறுமியின் மரணத்துக்கான நீதி நியாயத்துடன் நின்று விடக்கூடாது. ஹிஷாலினி என்ற இந்தச் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம், இனி இந்த நாட்டில் வேறெந்தச் சிறுமிக்கும் குழந்தைக்கும் நிகழக்கூடாது. அதுபற்றிச் சிந்திக்க வேண்டியது அத்தியாவசியம். 

இலவசக் கல்வி வழங்கப்படும் இந்நாட்டில், 14 வயதில் ஒரு சிறுமி, இன்னொருவர் வீட்டுக்கு வேலைக்கு அமர்த்தப்பட என்ன காரணம்? எத்தனை காரணங்கள் இருப்பினும், அடிப்படைக் காரணம் வறுமை.

‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்றார் ஒளவைப் பாட்டி. 30,000 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தவே, தனது மகளை வீட்டு வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலை வந்ததாக, அவரின் தாய் கூறியதாக செய்தி பதிவு செய்திருந்தது. 

image_642eb576b9.jpgஅப்படி, வீட்டு வேலைக்குச் சென்ற அந்தச் சிறுமியை, வேலைக்கமர்த்திய அந்த அரசியல்வாதியின் வீட்டாரால் உடல், உள ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக, தனது தாயிடம் கூறியிருப்பதாகத் தாய் தெரிவிக்கிறார். என்ன மாதிரியான சமூகத்தில், நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற சினமும் இயலாமையும் எண்ணமும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

மறுபுறத்தில், தன் வீட்டில் ஒரு சிறுமி இவ்வாறு நடத்தப்படுவதைத் தடுக்க முடியாத ஒருவன், தன்னை எப்படி மக்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்ள முடியும்? முதலில், உன் வீட்டில் ஒரு குழந்தை துன்புறுத்தப்படுவதைத் தடுக்க முடியாத நீ, மனிதனே அல்ல!

மறுபுறத்தில், இன்று ஹிஷாலினிக்கு நியாயம் பெற்றுத் தருவோம் என்று கிளம்பியுள்ள மலையகத் தலைவர்களின் நிலை அபத்தமானது; அசிங்கமானது. பல கோடி ரூபாய்கள் பெறுமதியான வாகனங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இவர்கள்தான், 30,000 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, 16 வயதுச் சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலையிலுள்ள மக்களின் தலைவர்களாம்! எவ்வளவு பெரிய வெட்கக்கேடு.

தமது மக்களின் நலனில், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு, இந்தத் தலைவர்கள் எனத் தம்மைத் தாமே சொல்லிக் கொள்பவர்கள் செயற்பட்டிருந்தால், இந்த 16 வயதுச் சிறுமிக்கு இந்தக் கொடூரம் நேர்ந்திருக்காது. 

“தோட்டத் தொழிலாளருக்கு 1,000 ரூபாய் சம்பளம்” என்பது, இந்தத் தலைவர்கள் எனப்படுவோரின் தாரக மந்திரம். இவர்கள், இந்தக் கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிய போது, ஒரு டொலர் 150 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இன்று ஒரு டொலர் உத்தியோகபூர்வ சந்தையில் 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. ரூபாயின் பெறுமதி கணிசமாக விழுந்திருந்தாலும் விலைவாசி கண்டபடி ஏறியிருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலமாக 1,000 ரூபாய் சம்பளம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், இந்த தலைவர்கள் எனப்படுவோர். 

போதாக்குறைக்கு, இந்தத் தலைவர்கள் எனப்படுவோரே தொழிற்சங்கங்களையும் நடத்துகிறார்கள். அதற்காக, அந்த அப்பாவித் தொழிலாளர்கள் பெறும் ஆகக் குறைந்த சம்பளத்திலும், ‘தொழிற்சங்க சந்தா’ என ஒரு தொகையைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். எத்தனை சிறந்த தலைவர்கள் இவர்கள்! 

மறுபுறத்தில், “மலையகத்துக்கு என்று ஒரு பல்கலைக்கழகம்” என்று, வாய்கிழிய பல வருடங்களாகக் கூவினார்களேயன்றி, அதைச் சாத்தியப்படுத்தினார்களா?மலையகத் தலைவர் ஒருவரேனும் அங்கத்துவம் வகிக்காத அரசாங்கம், கடந்த மூன்று தசாப்தங்களில் அமைந்திருக்கிறதா? அப்படியானால், அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாததன் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் யார்? 

மலையக மக்களுக்கு உரிய கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி, தோட்டத்தொழிலுக்கு மாற்றான வேலைவாய்ப்புகள், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்தால், ஹிஷாலினியைப் போன்ற சிறுமிகள், வீட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. 

ஆகவே, இன்று தங்களுடைய அரசியலுக்காக, “ஹிஷாலினிக்கு நீதி வேண்டும்” என்று, களத்தில் குதித்துள்ள இந்த மலையகத்தின் தலைவர்கள் எனப்படுவோரும், ஒருவகையில் ஹிஷாலினியின் கொடூரத்துக்குப் பொறுப்பாளிகள். 

“உலகை மாற்றப் பயன்படுத்தக் கூடிய மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி” என்பார் நெல்சன் மண்டேலா. கல்வியும் உயர் கல்வியும் அதன்பாலான வேலைவாய்ப்புகளும் இந்த நாட்டில் எத்தனையோ மக்களின் வாழ்க்கைத் தரத்தை, ஒரே தலைமுறையுடன் மாற்றியமைத்து இருக்கிறது. அதைப் பலரும் கண்கூடாகக் கண்டிருக்கிறார்கள். 

இனவாதம், இனவெறி, வறுமை எனச் சாபங்கள், அசிங்கங்கள் நிறைந்த இந்த நாட்டின் மிகச் சொற்ப வரங்களில் ஒன்று இலசக் கல்வி. ஆனால், அதன் பயன் மலையகத்தை முழுமையாகச் சென்றடையவில்லை என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த மக்கள், தலைமுறை தலைமுறையாகத் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கவும், வறுமையின் காரணமாக தங்கள் பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பவும் சபிக்கப்பட்டவர்களா என்ன? 

கல்வியும் உயர்கல்வியும் இந்த நிலையை மாற்ற வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பளமும் மருத்துவக் காப்புறுதி உட்பட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இதெல்லாம் சட்டவாக்கம், சட்ட நிர்வாகத்தால் செய்யக் கூடிய காரியங்களேதான்.

மலையகத் தலைமைகள் எனப்படுவோர், இந்நாட்டின் சட்டவாக்கம், சட்ட நிர்வாகத்தில் பங்காளிகளாக இருக்கிறார்கள். இனியேனும் தாமதிக்காமல், இதைச் செய்ய வேண்டும். ஹிஷாலினிக்கு நிகழ்ந்த கொடூரம் இனி வேறொரு சிறுமிக்கும் நிகழக்கூடாது.

வறுமை என்பது மாற்றப்படக் கூடியதொன்று. கடந்த ஒரு நூற்றாண்டில் உலக வறுமை கணிசமாகக் குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இலங்கை போன்ற மக்கள் நலன்புரி அரசில், இதற்கான முறையான திட்டங்களை வினைத்திறனாக அமல்ப்படுத்துவதன் மூலம், இதனை இலகுவாகச் சாதித்துக்கொள்ள முடியும். 

வறுமையை ஒழிப்பதற்கான பலம், வினைத்திறனான அரசியலிடம் இருக்கிறது. ஆனால், சாதிப்பதற்கு உண்மையான, நேர்மையான, மக்களை விசுவாசமாக நேசிக்கும் தலைமைகள் தேவை. மலையகத்தில் அத்தகைய தலைமைகள் இருப்பதாகத் தெரியவில்லை. தமது வயிற்றுப் பிழைப்புக்காக மலையக மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தும் தலைமைகள்தான் மலையக மக்களின் பெரும் சாபக்கேடு. 

மக்களை விவரம் தெரியாதவர்களாக, வறுமை நிலையிலேயே வைத்துக்கொண்டு, பொய்யான வாக்குறுதிகளையும் நிறைவேறாத நம்பிக்கைகளையும் மீண்டும் மீண்டும் வழங்கி, அவர்களின் வாக்குகளை அறுவடை செய்துகொண்டு, அந்த மக்களுக்கு எந்த நன்மையும் விளையாத கேவலாமான அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள். அடுத்து வரும் இளந்தலைமுறையாவது, இந்த நிலைமையை மாற்றும் என்று எண்ணுவோமாக!

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வறுமையும்-அரசியலும்/91-277931

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.