Jump to content

ஆமைகள் ஏன் நீண்டகாலம் வாழ்கின்றன?


Recommended Posts

ஆமைகள் ஏன் நீண்டகாலம் வாழ்கின்றன?

அகத்தியன்

 

ஆமைகளுக்கும் தமிழருக்கும் பல்லாயிரமாண்டுகள் தொடர்புண்டு. கடலோடும் தமிழர் உருவத்தில் பெரிய ஆமைகளையே வழிகாட்டிகளாகப் பாவித்தார்களென சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. ஆமைகளின் நீண்ட கால வாழும் தன்மை அவர்களுக்கு உதவியது.

 

ஆமைகளால் எப்படி நீண்டகாலம் உயிர்வாழ முடிகிறது எனத் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

ஆமைகளில் இரண்டு வகையுண்டு. ஒன்று கடலாமை ( sea turtle) மற்றது நில ஆமை (box turtle). கடலாமைகள் 50-100 வருடங்கள் வாழ்கின்றன. நில ஆமைகள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றனவென ஆமைகளைப் பற்றி ஆராயும், ஃபுளோறிடா தென் மேற்கு ஸ்டேட் கல்லூரி பேராசிரியரான ஜோர்டன் டொனினி கூறுகிறார்.

 

தென் அத்லாந்திக் தீவுகளில் ஒன்றான செயிண்ட் ஹெலேனாவில் வாழும் ஆமைகளில் ஒன்றான ‘ஜொனதன்’ தான் தற்போது உலகில் வாழும் வயது கூடிய நில ஆமை. 1832 இல் பிறந்த இந்த ஆமைக்கு இப்போது 189 வயது.

 

ஆமைகளின் நீண்ட ஆயுளுக்கான காரணம் என்ன? காரணங்கள் இரண்டு என ஆர்க்கன்சா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நியூமன் லீ கூறுகிறார். முதலாவது காரணம் கூர்ப்பு வாழியல் சம்பந்தப்பட்டது.

 

சார்ள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கைகளில் ஒன்று ‘தக்கன பிழைக்கும்’ என்பது. ஆமைகளின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் வாழ்ந்தேயாகவேண்டும் என்ற தேவை. எல்ல உயிர்களுக்குமே இந்தத் தேவை உண்டுதானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆமைகளின் நிலைமை வேறு.

 

ஆமைகளின் முட்டைகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி. பாம்புகள், ரக்கூன்கள் போன்ர விலங்குகளுக்கு ஆமை முட்டைகளில் அதிக பிரியம். கடலாமைகள் கடற்கரைக்கு வந்து ஆழமாகக் குழி தோண்டி அதில் பெருந்தொகையான முட்டைகளை இட்டு மூடிவிட்டுத் திரும்பிவிடுவது வழக்கம். உரிய காலத்தில் அவை பொரித்து அவற்றிலிருந்து வெளிவரும் ஆமைக்குட்டிகள் மீண்டும் கடலுக்குள் இறங்கிச் சென்றுவிடுகின்றன. இக் காலங்களில் பல பறவைகள் கடற்கரையில் காத்திருந்து இக்குட்டிகளைத் தூக்கிச் சென்றுவிடும். நிலத்திலும் இதே நிலைமைதான். ரக்கூன்களும், பாம்புகளும் முட்டைகளையே தேடிக் கண்டுபிடித்து உண்டுவிடுகின்றன.

 

இதனால் ஆமை சில வழிமுறைகளை வகுத்திருக்கிறது. ஒன்று கூர்ப்பு வழிமுறை. அதாவது வேகமாகவும், பெருந்தொகையாகவும் தன் இனத்தைப் பரப்புவது. எதிரிகளுக்கு இரையாகியவை போக மிஞ்சியவை தமது இனத்தின் தொடர்ச்சியைப் பேணும் என்ற நம்பிக்கை. வருடத்துக்குப் பல தடவைகள் பெருந்தொகையான முட்டைகளை இடுவது மட்டுமால்லாது அவற்றை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற, இட்ட முட்டைகளை நிலத்தில் மிக ஆழமாகப் புதைத்தும் வைக்கிறது. தப்பிப் பிழைப்பன குறைவான எண்ணிக்கையானாலும் கொஞ்சமாவது மிஞ்சும் என்ற நம்பிக்கை.

 

இரண்டாவது வழிமுறை உயிரியல் சம்பந்தப்பட்டது. இதை விளக்க கொஞ்சம் உயிரியல் (கலவியல்) பாடம் எடுக்கவேண்டியுள்ளது.

 

உயிரினங்களின் உடல் வளர்ச்சியின்போதும், உடலில் உறுப்புகள், இழையங்கள் ஆகியவற்றின் புனரமைப்பின்போதும் நடைபெறும் முக்கிய நிகழ்வு கலப் பிரிவு. அதாவது தேவையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட தொழிற்பாட்டைச் செய்யும் கலம் இறந்துபோக நேரிட்டால் அதை மாற்றீடு செய்ய அதே மாதிரியான இன்னுமொரு கலம் தேவைப்படுகிறது. இப் புதிய கலம் ஆரம்பத்திலிருந்து கூறு கூறாக உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கெனவே இத் தொழிற்பாட்டைச் செய்துகொண்டிருந்த ஒரு கலம் இரண்டாகப் பிரிவதன் மூலம் தனது ‘பிரதி’ ஒன்றை உருவாக்குகிறது இதையே நாம் கலப் பிரிவு என்கிறோம்.

 

இக் கலப்பிரிவின்போது மரபணுக்களில் (DNA) ஏதாவது பிசகேற்பட்டால் புற்றுநோய் அல்லது வேறு ஏதாவது தொழிற்பாட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் ஒரு உயிரினத்தின் ஆயுள் எதிர்பார்த்ததைவிடக் குறுகியதாக அமைந்துவிடும்.

 

ஆமைகளைப் பொறுத்தவரை எதிரிகளால் அவற்றின் இறப்புவீதம் அதிகரித்துள்ளமையால் எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாக்கும் வழிமுறைகளில் கூர்ப்படைய முயற்சிக்காமல் தமது ஆயுளை அதிகரிப்பதன் மூலம் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை அவை மேற்கொண்டன.

 

அதிலொன்றுதான் மேற்கூறிய கலப்பிரிவின்போது உருவாக்கபடும் பிரதிகளில் பிசகு ஏதாவது ஏற்பட்டால் அப்படியான கலங்கள் மேலும் பிரிவடைந்து உறுப்புக்களையும், இழையங்களையும், அவற்றின் தொழிற்பாடுகளையும் நாசமாக்காமல் செய்வதற்காக அப் பிசகுபட்ட கலங்களை உடனடியாகக் ‘கொன்று விடுவது’. இக் கலத் ‘தற்கொலை அல்லது ‘சிசுக்கொலை’ apoptosis என அழைக்கப்படுகிறது. திட்டமிடப்பட்ட இக் ‘கலக் கொலை’ மூலம் நோய்கள் ஏற்படுவதைத் தடுத்து ஆயுளையும் அதிகரித்துள்ளன என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

 

இதை நிரூபிப்பதற்கு விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனையைச் செய்தார்கள். அதாவது ஆமைகளின் கலங்களில் செயற்கையாகப் பிசகுகளைத் தோற்றுவித்தார்கள். அதன் விளைவு? அக் கலங்கள் உடனடியாகவே கொல்லப்பட்டுவிட்டன.

 

இவ்வாராய்ச்சியின் பெறுபேறாக விஞ்ஞானிகள் கண்டறிந்தது என்னவென்றால், கலங்களில் கலப்பிரிவுக்குப் பொறுப்பான நொதியமான ligase இன் தொழிற்பாடு குழப்பமடையும்போது கலப்பிரிவு பிசகடைகின்றது. இந்த நொதியம் குழப்பமடைவதற்குக் காரணம் கலங்களில் சமிபாட்டின்போது விளைபொருளாக உருவாகும் free radicals. கலங்களில் free radicals அதிகமாக இருக்கும்போது கலங்கள் அழுத்தத்துக்கு (stress) உள்ளாகின்றன. அவை அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும்போது இந்த ligase என்ற நொதியம் தனது கட்டுப்பாட்டை இழக்கிறது. அதனால் கலப்பிரிவின்போது பிசகான கலங்கள் தோற்றம் பெறுகின்றன.

 

ஆமைகளில் கலங்கள் ‘அழுத்தத்துக்கு’ உட்பட்டபோதிலும் ligase தனது தொழிற்பாட்டைச் சீராக நடத்துகிறது. தூய கலங்கள் இதனால் உற்பத்தியாகின்றன. ஆரோக்கியமான வாழ்வு ஆமைகளுக்குக் கிடைக்கிறது.

 

கலப்பிரிவின்போது தூய கலங்களை மட்டுமே அனுமதிக்கும் இக் குணாம்சம் ஆமைகளுக்கு கூர்ப்பின் வழியாகவே (தேவை கருதிய உடலமைப்பு மாற்றம்) வந்திருக்கவேண்டுமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ‘கலக் கொலை’ தொடர்பான ஆராய்ச்சிகள் பற்றிய முடிவுகள் வல்லுனர்களின் கருத்துக்களுக்காக bioRxiv தரவுக் களஞ்சியத்தில் பிரசுரமாகியிருக்கிறது. இவ்வாராய்ச்சி பற்றிய peer review இன்னும் முற்றுப்பெறவில்லை.

https://www.marumoli.com/விஞ்ஞானம்-ஆமைகள்-ஏன்-நீண/?fbclid=IwAR0HDI4ie-WgTxhB-grNxr_Z5uvMFWeI_U1Mf81lJ0OCXeLIF4gM2-dvoRU

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.