Jump to content

தமிழீழ கடற்படையான கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் அட்மிரல் சூசையுடனான நேர்காணல்| 22 October 2006


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பேரரையர்(Col./கேணல்) சூசை அவர்களின் இந்த நேர்காணலிலிருந்து தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் பற்றிய அறியாத, அறிந்து மறந்துபோன விடையங்களை அறியலாம். இதை தமிழீழ வரலாறு அறிய விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

 

EN0B65rWsAUOzUB.jpg

 

-------------------------------------------------------------------------------------

 

1. உலக விடுதலை போராட்டங்களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப்பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இந்த சிந்தனை மற்றும் பலம் எங்கிருந்து பிறந்தன?

உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது(பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்த போது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே) எனவே எம் நாட்டின் நிலையினைச் சிந்தித்த பொழுது ஒரு புறம் வலிமைபெற்றல் தான் எமது விடுதலை பூரணமாகும் என்ற உண்மையை உணர்கிறார் தலைவர். எனவே தமிழீழம் என்பது தனியே தரையை மாத்திரம் மீட்டெடுப்பதால் சூழவுள்ள கடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதானால் எம்மிடம் பலம் வாய்ந்த ஒரு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் எழுகிறது. அத்துடன் போராட்ட ஆரம்ப கட்டத்தில் போராட்ட தளம் தமிழகமாகவும் போராட்டக் களம் தமிழீழம் என்றும் இருக்கும்போது எமக்கு இரு நாடுகளுக்குமிடையே கடற்போக்குவரத்து அவசியம் என்ற தேவையும் எழுகிறது. எனவே, 1984 இல் கடற்புறா என்ற அமைப்பை உருவாக்குகிறார். மேலும் பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்புதான் எமக்கு வலுச் சேர்க்கும் என்பதை உணர்ந்து கப்பலை வாங்கி பன்னாட்டு வாணிபத்தில் ஈடுபட வைக்கிறார். இந்த வகையில் தூரநோக்குடனான தலைவரின் சிந்தனையும் போராட்டத்தின் தேவையும் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்கும் பலத்தை அவருக்குக் கொடுக்கிறது.

 

2. நிலத்தில் நின்று போராடும் தரைப்படைக்கும் கடலில் நின்று போராடும் கடற்புலிகளுக்குமான வேறுபாட்டை குறிப்பிடுவீர்களா?

தரைப்படை, கடற்படைக்குமான வேறுபாடு எனும் போது இது கையிற்கும், காலுக்குமுள்ள வேறுபாடு என்ன என்பது போலத்தான் அன்மையும். ஏனெனில் இரண்டும் வெவ்வேறானவை இரண்டிலும் சண்டைகள் என்ற பொது அம்சத்தை, அதாவது கடற்சண்டைக்கும் தரைச்சண்டையொன்றிற்குமான வேறுபாடு என்று பார்ப்போமானால், தரைச்சண்டையானது நீண்டகாலத்தைக் கொண்ட அதில் ஈடுபடுபவர்கள் தத்தமது தன் கடமைகளைச் செய்வதற்குக் கூட பிறிதொரு அணியால் மாற்றீடு செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும். எதிரியின் காப்பரண் அருகே நகரும் போது கனவகை ஆயுதங்களைக் கூட காவிச் சென்றே சண்டையிட வேண்டிய நிலை. அதே வேளை வானூர்தி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க காப்பு எடுக்க முடியும்.

கடற்சண்டை குறுகிய நேரச் சண்டையாகும். ஒரு சில சண்டைகள் தவிர ஏனையவை மணித்தியாலத்திற்கு உட்பட்ட சண்டைகளே. ஆனால் அந்த நேரம் அதிலுள்ள ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்யவேண்டியது அவசியமாகும். தாக்குதலுக்கான 'காப்பு' என்ற சொல்லிற்கே இடமிருக்காது.

தரைச்சண்டையில் முன்நகரும் போது காறமுற்றவர், ஆயுதம் என்பவற்றை நகர்த்துவது சண்டையிடும் போராளிகளே. அவர்களை பின்னணியில் நிற்கும் ஊர்தியில் ஏற்றும் வரை காவிச் செல்ல வேண்டும். கடற் சண்டையில் படகு கரைதிரும்பும் போது காயமுற்றவர் ஆயுதம் என்பன படகுடன் வரும். மற்றும் எமது தரைத்தாக்குதலணியினரின் பணிகள் எதிரியுடன் சண்டையிடல், பிடித்த பிரதேசத்தைப் பாதுகாத்தல், பின் தளத்திலிருந்து அவர்களுக்கான விநியோகம் என்றவாறு அமையும்.

கடற்புலிகளைப் பொறுத்தவரை கடற்கரையோரத்தைப் பாதுகாத்தல், கிழக்கிற்கும் வடக்கிற்கும் போராளிகளை இடம் நகர்த்தல், அதன்போது எதிரியுடன் சண்டையிட்டு வெற்றிகரமாக அப்போராளிகளை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தல், இவையெல்லாவற்றிற்கும் மேலாக போராட்டத்திற்குத் தேவையான ஆயுத வெடிபொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைக் (தொ.தொடர்பு கருவிகள், இயந்திரங்கள், படகுகள்) கொண்டுவந்து சேர்த்தல் என்பனவாகும். மேலும் எமது படகுகளைக் கடலில் தரித்து வைத்திருக்க முடியாது, தேவையின் போது கடலில் இறக்கத்தக்கதாகவும் எதிரியின் வான்கலங்களின் கண்காணிப்பிலிருந்து பாதுகாத்து வைத்திருப்பதாகவும் எனப் பரந்து செல்கிறது.

 

3. தமிழீழக் கடற்பரப்பில் நடந்த சண்டைகளை நீங்கள் நேரில் நின்று வழி நடத்திருக்கிறீர்கள் கடற்போர் அனுபவங்களை பெற்ற மிகப்பெரிய தளபதி நீங்கள் உலக வரலாற்றில் கடற் சண்டை பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் வியந்து நிற்கின்றன அந்த சண்டைகளை பற்றிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?

கடற்புலிகள் பிரிவை ஆரம்பித்த பொழுது எமது பணி புதிய போராளிகளை பயிற்சிக்குக் கொண்டு செல்லும் பயிற்சி பெற்றவர்களை தமிழீழம் கொண்டு வருதலும் மற்றும் தேவையான வெடிபொருட்களையும் கொண்டு வருதலும் காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கென இந்தியா கொண்டு செல்லும் என்றே இருந்தது இக்காலகட்டத்தில் தான் நாம் ஓட்டிகளையும் பின் எமது போராளிகளை ஓட்டிகளாகவும் பயன்படுத்தினோம். இக்காலப்பகுதியில் எம்மிடம் ஆள், படகு, ஆயுதம், வெடிபொருள் வளங்கள் மட்டுப்படுப்படுத்தப் பட்டதாகவே இருந்தது. எதிரியின் பாரிய கலங்களுடன் எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே எதிரியின் கண்ணில் படாதவாறு எம் பயணம் தொடர்ந்தது. எதிரியின் பார்வையில் சிக்கினால் அங்கு உயிரிழப்புத்தான். எனவே எதிரியைக் கண்டு ஓடுபவர்களாகவே இருந்தோம். எனவே எதிரியன் கலங்களுக்கு போக்குக் காட்டிவிட்டு ஓடித்தப்பிய சம்பவமாக 19.6.1983 சம்பவத்தைக் கொள்ளலாம். கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா உட்பட 6 போராளிகள் எஸ்.எல்.ஆர் உட்பட சிறுவகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொண்டு தமிழீழம் திரும்பிக் கொண்டிருக்கையில் வானத்தில் வட்டமிட்ட உலங்கு வானூர்தியின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென எண்ணுகையில் உலங்கு வானூர்தி தாக்கத் தொடங்குகிறது.

ஓடித்தப்பக் கூட வழியற்ற நிலையில் தம்மிடமிருந்த எஸ்.எல்.ஆர் ரைபிள்கள் மூலம் உலங்கு வானூர்தியை நோக்கிச் சுடுகின்றனர். குறி தவறவில்லை. உலங்கு வானூர்தி புகைத்த வண்ணம் திரும்பிச் செல்கிறது. அதேவேளை எதிரியின் கடற்கலங்கள் தாக்கத் தொடங்கவே படகு திரும்பிச் செல்கிறது.

இக்காலப்பகுதியில் சிறிலங்கா கடற்கலங்கள் வடக்குப்பிராந்திய கடலெங்கும் சுற்றுக்காவல் செல்வதுடன் கரையோரமெங்கும் தாக்குதல் நடத்துவதும் மீனவர்கள் மீது தாக்குதல் என அட்டூழியங்கள் புரிந்து வந்த காலம்.

தமிழரின் கடலில் சிங்களக் கடற்கலங்கள் எக்காளமிடுவதைத் தடுக்கவென தலைவர் திட்டம் தீட்டுகிறார். மில்லர் நெல்லியடியில் கொடுத்த அடியிலும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு வல்வைக் கடலிலும் பாடம் புகட்ட எண்ணினார் தலைவர் அவர்கள். 07.10.1990 அன்று வல்வைக் கடலிலே ஆதிக்கம் செய்து வந்த கட்டளைக் கப்பல்களில் ஒன்றான 'எடித்தாரா' மீது இலக்கு வைக்கப்பட்டது. மேஐர் காந்தரூபன், கப்டன் கொலினஸ், கப்டன் வினோத் என்ற 3 கடற்கரும்புலிகள் புதிய சகாப்தத்தைக் கடலில் தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 5.4.1991 அன்று 'அபிதா' மீது தாக்குதலைக் கடற்கரும்புலிகளான கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் செய்து நின்றனர்.

இந்நிலையில் தீவகம் முற்றுமுழுதாக சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தமையனால் தீவகக் கடலில் அவர்கள் அட்டகாசம் புரிந்தனர்.

இதேவேளை கடற்புலிகள், கடற்புறாவாகிப் பின் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் எனும் புதிய பெயர் சூட்டபட்டது. அதே போல் புதிய போராளிகளும் கடற்புலிகள் அணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டு புதிய உத்வேகம் கொண்டது. கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன. 22.09.1991 இல் தீவகக் கடலில் சீகாட் படகு சிதைக்கப்பட்டது. பின்னர் முதன் முதல் நேரடிக் கடல் தாக்குதலாக 02.10.1991 வள்ளத் தாக்குதல் இடம்பெற்றது. இதிலேயே முதன் முதல் ஏகே எல்.எம்.ஜி என்ற ஆயுதம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

பூநகரியை அரச படையினர் கைப்பற்றி முகாம் அமைத்துக் கொள்கின்றனர். யாழ் நகரிலுள்ளோருக்கான ஆனையிறவக் பாதையும் தடை. மக்கள் பூநகரி-சங்குப்பிட்டி பாதையூடாக பயணத்தை மேற்கொள்கின்றனர். தாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை, இடர் மிகுந்த பாதையிலும் மக்கள் தம் பயணத்தை தொடர்ந்ததை பொறுத்துக் கொள்ளாத அரசபடைகள் ஆனையிறவிலிருந்தும் பூநகரிக்கு சுற்றுக்காவல் என்ற பெயரில் சென்று பூநகரி-சங்குப்பிட்டி ஊடாகப் பயணம் செய்த மக்களை வெட்டியும், சுட்டும் கொலை செய்தனர்.

மக்களின் பயணத்திற்கு பாதுகாப்பளிக்கும் பணியும் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடற்புலிகளின் முதற் தாக்குதற் தளபதி லெப்.கேணல் சாள்சின் தலைமையில் பாதுகாப்புப் பணி தொடர்கிறது. பயணம் செய்யும் மக்களைத் தாக்க வந்த கடற்படையினரும் கடற்புலிகளும் சமர் புரிய மக்கள் தம் பயணம் தொடர்கிறது.

இவ்வேளையிலே எமது தரப்பிலும் லெப்.கேணல் சாள்ஸ், லெப். மகான், கப்டன் வேந்தன், கப்டன் சாஜகான், லெப். மணியரசன், லெப். சேகர், மேஐர் அழகன் என போராளிகள் வீரச்சாவடைய - எங்கெல்லாம் எமக்குத் தடை வருகிறதோ அவற்றைத்தம் உயிராயுதத்தால் தவிடுபொடியாக்கும் எம் இனிய கரும்புலிகளின் சேவை இடம் பெறுகின்றது.

அந்த வகையில் 26.08.1993 அன்று கப்டன் மதன் எ பற்றிக், மேஐர் நிலவன் எ வரதன் ஆகிய கடற்கரும்புலிகள் இரு நீரூந்த விசைப்படகை அழித்துக் காவியமாகின்றனர்.

மேலும், கப்டன் சிவா, லெப். பூபாலன், 2ம் லெப். சுரந்திரன் என இவ்வாறாக மக்கள் காப்புப்பணியிலே கிளாலியில் நாம் இழந்த மாவீரர் தொகை கரும்புலித் தாக்குதலில் பின் நிறுத்தப்படுகிறது.

வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்கலங்கள் சுதந்திரமாக நடமாடுவதை தடுக்கவெண்ணி 29.08.1993 அன்று கப்டன் மணியரசன், மேஐர் புகழரசன் ஆகியோர் சுப்பர் டோறாவைத் தகர்த்து வீரகாவியமாகின்றனர்.

தொடர்ந்து 11.11.1993 தவளைத் தாக்குதலிலும் கடற்புலிகள் பங்காற்றினர். இத் தாக்குதலிலும் 28 கடற்புலிகள் காவியமாகினர். கண்ணிவெடி, கரும்புலி இடித்தல் என செயலாற்றி வந்த நாம் 16.08.1994 மேலும் வளர்ச்சியடைந்து நீரடி நீச்சல் அணியினரின் உதவியுடன் A 516 கட்டளை கண்காணிப்புக் கப்பல் மற்றும் இழுவைப்படகு என்பவற்றைக் காங்கேசன் துறைமுகத்தில் மூழ்கடித்தோம்.

இதில் முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி காவியமானாள்.

தீவகக் கடல், மாதகற்கடல், வடமறாட்சிப் பகுதிக்கடல், கிளாலி நீரேரி என விரிவடைந்த எமது களம் மேற்குப் பகுதிக்கும் விரிக்கப்படுகிறது. கடலரக்கன் என்று வருணிக்கப்படும் 'சாகரவத்தனா' என்ற கப்பல் எமக்கு இலக்காகிறது. து.சு.ஜெயவர்த்தனா காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டு பெயரிடப்பட்ட ஆழ்கடல் சுற்றுக்காவல் கலங்கள் இரண்டில் ஒன்று சாகரவர்த்தனா(மற்றையது ஜெயசாகர. இக்கப்பல் தான் 26.3.2006 அன்று வெடித்துச் சிதறிய டோறாவுடன் கொழும்பிலிருந்து வந்து சுற்றுக்காவலில் ஈடுபட்ட கலம்)

தனியே இடிப்பதன் மூலம் மாத்திரம் அவ்வகையான பெரிய கடற்கலங்களைத் தகர்ப்பது கடினம் என்பது எமக்கு எடித்தாரா, அபிதா முன்னைய (1990,1991) தாக்குதல்கள் கற்றுத் தந்த அனுபவம் எனவே நீரடிநீச்சல் அணியினரதும், இடியன் படகுகளினதும் துணைகொண்டு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

1996 காலப் பகுதி 25.01.1995 எமது படகு ஒன்று 7 பேருடன் கிழக்கு மாகாண விநியோகம் செய்து விட்டு திரும்புகையில் இயந்திரக் கோளாறு காரணமாக கற்குடாவில் கரையொதுங்குகிறது. அவ்வாறு வந்த காலம் தம்மைத் தாக்க வந்ததென்று அரசபடைகள் கூறி படகையும், அதிலுள்ளவர்களையும் கைது செய்கின்றனர். தொடர்பு கிடைக்காமையால் கிழக்கு மாகாண தளபதியுடன் தொடர்பு கொள்ள அவர் படகையும் பொருட்களையும் ஒப்படைத்து சரணடையுமாறு கூற எம்மவர் அதன்படி ஒழுகினன். எவ்வளவு முயன்றும் படகையோ, பொருட்களையோ மீளத் தரவில்லை. கடற்புலிகளின் மரபில் இப்படியொரு செயல் இதுவரை நடைபெறவில்லை. ஏன் அப்படிச் செய்தீர்கள் எனக் கூறி எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வா செய்ய வேண்டாமெனக் கூறிப்பட்டது. இது நிகழ்ந்த சில வாரங்களில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. (1987 யுத்தநிறுத்த காலத்திலும் எங்கள் தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட கடலில் கைது செய்யப்பட்டனர். 1995 இலும் எமது படகுகள் பொருட்கள் போர்நிறுத்த உடன்பாட்டை லெப்.கேணல் திருவடி 30 புதிய போராளிகளை ஏற்றிக் கொண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து வரும்போது திருமலைக்கு நேரே கடற்படை வழிமறித்து படகைத் திருப்பி துறைமுகப் பகுதிக்குள் வருமாறு கட்டளையிட்டது. சென்ற வாரம் படகையும் பொருட்களையும் எம்மவர் கொடுத்து விட்டு வந்ததை அறிந்தவன் படகையும் போராளிகளையும் ஒப்படைக்க விரும்புவானா? படகுகளை அழித்துக் கொள்ளவும் விரும்பவில்லை, ஏனெனில் 30 புதிய போராளிகள். எனவே அவர்களுக்குப் பணிந்தது போல் போக்குக்காட்டிவிட்டு படகையும் போராளிகளையும் பக்குவமாக கரைசேர்கிறான், அந்த தளபதி. இவ்வாறாக நிலைமையை உணர்ந்து துணிவுடன் செயலாற்றிய மாவீரர்களே இன்றைய எம் வளர்ச்சியின் அடிக்கற்கள்.

சந்திரிக்காவுடனான பேச்சுக்கள் பயனற்றவை என்பது உறுதிப்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோக பூர்வமாக அறிவித்த பின் திருமலைத் துறைமுகத்திலேயே நீரடி நீச்சல் அணியைச் சேர்ந்த 4 கடற்புலிகள் ரணசுறு, சூரயா கப்பலைத் தகர்த்துக் கடலோடு கரைந்தார்கள்.

மேலும், எம் போராட்டத்திற்கு வளம் சேர்த்தல் பணியின் போது சிறிலங்காக் கடற்படையினர் வழிமறித்த வேளைகளில் அவற்றைத் தாக்கியழித்து, சண்டையிட்டு எமது விநியோகப் படகுகளை பாதுகாத்த சமர்கள் ஏராளம்.

எங்கும் எம்மால் தாக்கிட முடியும் என்ற கருத்தை எதிரிக்குக் கூறிய கொழும்புத் துறைமுக தாக்குதல், எந்த அரணுக்குள் நுழைந்தும் எம்மால் தாக்க முடியுமென்பதை உணர்த்திய தாக்குதல் ஆகும். யாழ்ப்பாணத்தை விட்டுவந்தும் புலிகள் பலம் குறைந்து விட்டார்கள் என்று கூறிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இதுவாகும்.

எமது கடற் போக்குவரத்திற்குத் தடையாகவும் மக்களின் தொழில் செய்வாற்கு குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாகவும் இருந்த முல்லைப் படைத்தளம் விடுதலைப் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது. ஓயாத அலை-1 எனப் பெயரிடப்பட்ட இத் தாக்குதலில் கடற்புலிகளின் படகுகள் கடலில் அணிவகுத்து நின்று கடலில் வரும் உதவிகளைத் தடுத்து நிறுத்தினர். ரணவிரு என்ற கப்பலைத் தகர்த்ததுடன் சிறிலங்கா வான்படை மற்றும் கடற்படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்தவாறு பாதுகாப்பு வழங்கி நின்றனர்.

ஓயாத அலைகள் ஒன்று, பின் மூன்றாகி ஒட்டிசுட்டான் இராணுவத்தை ஓமந்தை வரை ஓடஓட விரட்டியாயிற்று. அடுத்து தலைவர் அவர்களின் இலக்கு ஆனையிறவு என்றாயிற்று. தோல்வியில் இருந்து கற்று அதனையே வெற்றியாக மாற்றிடும் எம் தலைவர் திட்டமிடுகிறார். ஆம் 1991 இல் ஆனையிறவை வெற்றி கொள்ள முடியமைக்கான காரணம் வெற்றிலைக்கேணியில் எதிரி தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு எமது முற்றுகை உடைத்தெறியப்பட்டமையே. எனவே இம்முறை அவ்வாறே நாமும் தரையிறக்கம் செய்து சுற்றிவளைத்துத் தாக்குவது என முடிவாகிறது. 13 கிமீ கரைத் தொடர்பின்றி குடாரப்பைத் தாண்டி மாமுனையில் தரையிறக்க முடிவெடுக்கப்படுகிறது. எதிரியின் டோறாக்களுடன் எமது சண்டைப்படகுகள் மோத, தாளையடி வெற்றிலைக்கேணியில் இருந்த கடற்படையினரின் தாக்குதலைச் சமாளித்தவண்ணம் தரையிறக்கம் 26.03.2000, இரவு 8:45இற்கு இடம் பெறுகிறது. அதனைத் தொடர்ந்து தரையிலும் எமது அணியினர் தாக்குதல் தொடுத்து கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி முகாம்களைத் தகர்த்த வண்ணம் முன்னேறுகின்றனர்.

வெற்றிபெற முடியாதது என வெளிநாட்டு வல்லுநர்களாலும் பரிந்துரைக்கப்பட ஆனையிறவுப் படைத்தளத்தில் புலிக்கொடி ஏற்றப்படுகிறது.

இவ்வாறாக முதலாம் கட்ட ஈழப்போரில் எமது பணி விநியோகம், போராளிகள் இடமாற்றம் என அமைந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர்க் காலத்தில் எதிரிக்கு கடலிலும் கரும்புலித் தாக்குதல் நடைபெறும் என்பதை உணர்த்தியதோடு கடற்கண்ணித் தாக்குதல்களும் என கடற்புலிகள் தாக்குதலிலும் ஈடுபடத் தொடங்கினார். மூன்றாம் கட்ட ஈழப்போரில் மேற்கூறப்பட்டவற்றுடன் முகாம் தகர்ப்புத் தாக்குதலுக்கு தாக்குதலணியினரை குறித்த இடங்களில் தரையிறக்கம் செய்தல் எனப் பரந்து நின்றது.

மேற்கூறப்பட்ட காலங்களிலெல்லாம் கடற்தொழிலாளர்கள் எமக்குப் பக்கபலமாக பின்தள உதவிகளைச் செய்து நின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி மக்களே கடலிலும் எம்முடன் ஆயுத மேந்திப் போராடும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டிருக்கிறது எனலாம். கடற்புகளின் துணைப்படை அணியும் கடற்புலிகளுடன் கைகோர்த்து தலைவரின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.

 

4. கடல் பற்றிய அறிவு கடற்புலிகளிடம் நிறைந்துபோய்க் காணப்படுகிறது. சிறிலங்காக் கடற்படைக்கு எதிராக நிறைய பாதுகாப்புச் செயற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள். 1983 இலிருந்து மிக வேகமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அதி நவீன ஆயுதங்களையும், படகுகளையும் வைத்திருக்கிறீர்கள். இந்திய கடற்படைக்கு நிகரான சிறிலங்காவின் கடற்படையை எதிர்கொள்ளும் பலத்தை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?

எதிரியின் சூடுகள் நிறுத்தப்பட்டாலே எமது கலம் பாதுகாக்கப்படும். எனவே எதிரி எம்மை வீழ்த்துவதன்முன் நாம் எதிரியை நிலைகுலையச் செய்வதென்பதே சண்டையில் வெற்றியின் தாற்பரியம். அந்த வகையில் காப்பெதுவும் எடுக்க முடியாத வெட்டவெளிக் கடலில் எதிரி வீழ்த்தப் படாவிட்டால் அவனது சன்னம் எம்மைத் துளைக்கலாம். எனவே குறிதவராக சூடு, சந்தர்ப்பத்திற்கேற்ப படகை உரிய முறையல் ஓடிக்கொடுத்தல், எதிரியின் இலக்குகள் பற்றிய தெளிவான அறிவு, எல்லாவற்றையும் விட வேகமான நகர்வும், முடிவெடுத்தல் திறனும் மற்றும் இயங்குநிலைத் தடைகளை இலகுவில் இனங்கண்டு விரைவில் திருத்தம் திறன் எனப் பல இதில் அடங்குகின்றன.

இந்த வகையில் இவற்றில் திறம்படப் போராளிகள் இயங்க வேண்டுமென்பதற்காக அவற்றிற்கான பயிற்சிகள், ஊக்குவிப்புகள், தவறுகளை இனங்கண்டு அவை திரும்பச் செய்யப்படாதவாறான அறிவுறுத்தல்கள் எனக் கூறிக் கொள்ளலாம். மேற்கூறப்படும் இந்த செயற்பாடுகள் அநேகம் உறுதிப்படுத்தல்கள் அண்ணையின் நேரடிக் கண்காணிப்பில் இடம் பெறுவதுண்டு. இதுவே எங்கள் மிகப் பெரிய பலம். மேலம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனான சரியான வழிநடத்தல் என்று கூறிக் கொள்ளலாம். இவற்றுடன் அண்ணை சொன்னதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற பற்றுறுதியுடன் களமாடும் எம் கடற்புலி வீரரின் அசையாத உறுதி. மற்றும் ஒரு கலத்தைத் தாக்கி வந்து கூறும்போது அது செய்தால் வீரமல்ல. அதைவிட அழிக்கப்பட வேண்டிய இலக்கு இருக்கிறது அதை அழித்தாலே வெற்றி என இலக்கைப் படிப்படியாக உயர்த்திச் செல்லும் தலைவரின் அணுகுமுறை. இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் 26.08.1993 கிளாலிக் கடல் நீரேரியில் கடற்கரும்புலித் தாக்குதலின் மூலம் 'வோட்டர் ஜெற்' இரண்டைத் தாக்கியழித்த பின் அண்ணையைச் சந்திக்கிறேன். அப்பொழுது அண்ணை சொல்கிறார், வோட்டர் ஜெற் அடித்தால் காணாது டோறா மூழ்கடிக்க வேண்டும் என்று. 29.08.1993 இல் சுப்பர் டோறா அடித்தபோது டோறா அடித்தது சரி, வீரயாவை அடியுங்கள் பார்ப்பம் என. மெல்ல மெல்ல இலக்கை உயர்த்திச் செல்வதன்மூலம் பலம் வாய்ந்த எதிரியுடன் எதிர்த்துத் தாக்கும் எமது திறனை வளர்த்த பெருமை அண்ணனையே சாரும் என்றால் மிகையன்று.

 

5. கடலில் பல நீச்சல் பிரிவுகளைத் தாங்கள் உருவாக்கி வைத்திருப்பதாகத் தகவல்கள் பல தெரிவிக்கின்றன. நீச்சல் பிரிவின் மிக நீளமான கடலில் நீந்திச் சென்று தாக்குதல்களை நிகழ்த்த வல்லவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

உண்மை.

அதிசயிக்கத் தக்க வகையில் பல சந்தர்ப்பங்களில் எம் போராளிகள் நீந்திக் கரைசேர்ந்த சம்பவங்கள் உண்டு. 1986 இல் படகு விபத்தொன்றில் கடலில் மண்டைதீவிலிருந்து அடித்த தேடொளி வெளிச்சத்தில் பிரிந்து சென்று போராளி மறு நாள் நீந்திக் கரைசேர்ந்தமை கடற்புலிகளுக்கும், தலைவருக்கும் வெளிச்சம். 28.08.1992 கடற்புலிகள் எதிரியின் கலமான வோட்டர் ஜெற்றைச் சேதமெதுவுமின்றி கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பது யாவரும் அறிய முடிந்தது.

கரும்புலித் தாக்குதல்களில் பல நீச்சல் திறமையினாலே சாதிக்கப்பட்டவையாகும். அந்த வகையில் 15.8.1994 இரவுப் பொழுது. ஊர் உறங்கிவிட்டது. இலட்சிய உறுதியில் இரும்பாகி எதிரிக் கப்பலின் முடிவே தம் வெற்றியாகக் கொண்ட மீன் குஞ்சுகள் வைக்கப்பட வேண்டிய வெடிகுண்டுடன் நீந்துகின்றன. ஆம் பெரிய வெடியோசை உலகமே அதிசயித்து நிற்கிறது. முதற் பெண் கடற்கரும்புலி காவியமாக மற்றைய மீன் நீந்திச் சென்றதை மற்றவர்கள் அறிந்திடவில்லை. இவ்வாறாக 19.09.1994 கற்பிட்டிக் கடற்பரப்பிலும் எமது மீன்களின் செயற்பாடு பற்றி தலைவருக்கும் எங்களுக்கும் மட்டும் தெரிகிறது. ஆனால் சாகரவர்த்தனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டு அதன் கப்டன் பொயகொட கைது செய்தமையும், கடற்கரும்புலிகள் நால்வரும் காவியமான கதை உலகறிந்தது.

இவ்வாறாக அநேகமான கரும்புலித் தாக்குதல்களிலும் எமது போராளிகளின் நீச்சல் திறமையே எம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்கிறது.

இங்கு மேலுமொரு சம்பவத்தைக் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன். 16.07.1995 புலிபாய்ச்சல் நடவடிக்கையின் ஓரம்சமாக காங்கேசன் துறைமுகத்தில் தாக்குதல் இடம்பெறுகிறது. கரும்புலிப்படகு இடிக்கமுன் வெடிபிடித்தமையால் அதனைக் கைவிட்டு நீந்தும்படி கடற்கரும்புலிகள் இருவருக்கும் கட்டளை இடுகின்றேன். உடன் தனக்குக் கரும்புலிக்கான சந்தர்ப்பம் தரவேண்டுமென்ற வேண்டுகோளுடன் கடலில் குதிக்கிறாள் செவ்வானம். இரவு விடிந்து விட்டது. எதிரி இருவரை உயிருடன் பிடித்துவிட்டேன் என எக்காளமிடுகிறான்.

திசைபார்த்து நீந்தி வருவாள் என எதிர்பார்த்த செவ்வானம் வரவில்லை. விதையாகிப் போனவர்கள் பட்டியலில் சேர்க்க மனமின்றி சேர்க்கப்படுகிறது. மறுநாள் வீரச்சாவு நிகழ்வுகள் இடம்பெற ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. அதிகாலை மயிலியதனை முகாமினருக்கு ஓர் ஆச்சரியம். வீரச்சாவடைந்து விட்டான் என இருந்த செவ்வானம் தள்ளாடியபடி கடற்கரையில்... நிஜமா? நினைவா? சந்தேகத்துடன் கடற்கரை நோக்கி ஓடுகிறார்கள் போராளிகள். ஆம். நிழலல்ல. நிஜம்தான். செய்தி எங்கும் அறிவிக்கப்படுகிறது. தனது மகளின் வித்துடல் வரக்கூடுமோ கரையொதுங்குமோ? தருவார்களோ? என எதிர்பார்த்த பெற்றோர் முன் செவ்வானம்!

ஆம், 24 மணி நேரம் கடலில் நீந்தி இலங்கை வான்படை, கடற்படையினருக்குப் போக்குக் காட்டி காட்டி சரியான திசையில் நீந்திக் கரைசேருகிறாள் செவ்வானம். இதே போல் சுண்டிக்குளத்தில் எமது நிலையத் தாக்குதலுக்கான பழிவாங்கல் தாக்குதல். 07.10.1999 இல் எதிரியின் டோறா படகைத் தாக்கி, அதிலேறி, அதிலிருந்த 20 மிமீ குழல் கழற்ற, பாதுகாப்பிற்கு வந்த டோறா தாக்கத் தொடங்க, அந்த இரும்புக் குழலுடன் நீந்தி எம் படகேறி அதைக் கொண்டு வந்து சேர்க்கிறான் எம் துணைத் தளபதியான லெப்.கேணல் நிரோயன்.

'உப்பில் உறைந்த உதிரங்கள்' படம் எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கும்.

ஆம், உண்மைச் சம்பத்தையே படமாக்கப்பட்டுள்ளது. காயமுற்ற நிலையில் கிளாலியில் எதிரியின் முகாமருகே காயமுற்ற விழுந்த போராளி மறுநாள் நீந்தி எம் கரையேறி இன்று வரை போராளியாகக் கடமையாற்றுகிறான். இவ்வாறு நீச்சல் திறமையின்றேல் நாம் இன்று முன்னேறியிருக்கவே முடியாது. இந்த நீச்சல் திறமையினை வளர்க்கவே வருடாவருடம் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டிகளும் உள்ளடக்கப்பட்டு, வெற்றி பெற்றோருக்குப் பரிசளித்து ஊக்குவிக்கிறார் தலைவர் அவர்கள்.

 

6. 1983ம் ஆண்டு காலப்பகுதியில் 'ஓட்டிகள்" என அழைக்கப்படுபவர்கள் கடற் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் அவர்களுடைய கடற் பயணங்கள் பற்றியும் எங்களுக்குக் கூறுவீர்களா?

வடமராட்சியின் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த மீனவர்கள். இவர்கள் இந்திய இலங்கை வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள். இவர்கள் தமது படகுகளிலேயே தம்பயணங்களை மேற்கொண்டனர். நாமும் தமிழகம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டபொழுது நாம் அவர்களை நாடி எம்மை கூட்டிச் செல்லுமாறு கேட்டு அவர்களின் உதவியுடன் சென்று வந்தோம். எமக்குத் தேவையான பொருட்களை மற்றும் போராளிகளை இடம் மாற்றுவதில் எமக்குக் கைகொடுத்தவர்கள் இவர்கள். அவர்கள் பயன்படுத்திய சிறிய படகுகளே அப்பொழுது எம் பயணத்திற்கான படகுகள். வேகமும் குறைவு. எனவே தான் எதிரி கண்ணில் பட்டால் திரும்பி வருவது மிகக்குறைவு. எமது பொருட்களைக் கொண்டு வரும் வழியில் எதிரியினால் அவர்கள் மடிவதைப் பொறுக்காது எமது பயணத்தைப் போராளிகளைக் கொண்டே நடத்த முடிவெடுத்த தலைவர் அவர்கள் 1985 இன் பின் கடற்புலிகளின் படகுகளே இப் பணியில் ஈடுபட்டன.

 

7. ஆசியாவினுடைய மிகப்பெரிய பலமாகத் திகழும் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைப் புலிகள் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என சில சக்திகள் அச்சம் கொண்டிருக்கின்றன. கடற்புலிகளுக்குத் தங்களுடைய பலம் பற்றித் தெரியும். அவர்களுக்கு மக்கள் பலம் இருக்கிறது. இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இந்தத் திருகோணமலைத் துறைமுகம் பற்றி நெப்பொலியன் கூட அறிந்திருக்கிறார். அவர் கூட இத் துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசியிருக்கிறார். நீங்கள் இத்துறைமுகம் பற்றிய வரலாறுகளையும், முக்கியத்துவங்களையும் எமக்கு விரிவாகக் கூறுவீர்களா?

கடற்கலங்கள் நிறுத்தப்படும்போது காற்றினாலும், கடலலைகளாலும் பாதிக்கப்படாமலிருக்கவே துறைமுகங்களில் கட்டப்படுகின்றன. சிறிய படகுகளாயின் கட்டுப்படுத்த கடலிலே நீர்த்தடைகள் எனப்படும் (water break) கட்டப்படுகின்றது.

அந்த வகையில் கொழும்பு, காங்கேசன் துறை என்பவற்றில் இவ்வாறான நீர்த்தடைகளைக் காணலாம். ஆனால் திருக்கோணமலைத் துறைமுகமானது இயற்கையாகவே இந்த பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. இதுவே இதன் சிறப்பம்சமாகும்.

இந்த வகையில் திருமலைத் துறைமுகம் உட்துறைமுகப்பகுதி, வெளித் துறைமுகப்பகுதி என வகைப்படுத்தப்படக் கூடியதாயும் வருடம் முழுவதும் கடற்கலங்களைப் பாதுகாப்பாக விடக்கூடியதான இயற்கை அமைப்பை கொண்டிருப்பதையும் காணலாம். இந்த அம்சம் காரணமாகவே ஐரோப்பியர் இதனைத் தமது படையக் கேந்திர மையமாக வைத்திருந்துள்ளனர். அத்துடன் தென்னாசியப் பிராந்தியங்களிலுள்ள துறைமுகங்களில் சிறந்த இயற்கைத் துறைமுகமான இதன் அமைவிடமும் இதற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

இந்து சமுத்திரத்தினூடாகப் பயணம் செய்யும் கப்பல்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்லக் கூடியதான ஒரு துறைமுகமாக இது விளங்குகிறது.

வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும், பெரிய கலங்களை உட்கொண்டு செல்லக்கூடியதான ஆழத்தையும் கொண்டிருப்பதன் காரணமாகவே இது பாதுகாப்புப் படையின் கலங்கள் பாதுகாப்பாக விடப்படும் இடமாக உள்ளது.

இதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் இந்து சமுத்திரத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமென்பதன் காரணமாகவே 1948.02.04 இல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்த போதும் பிரித்தானிய கடற்படை அதிகாரிகள் (எச்.எம்.எஸ் கை பிளையர் - HMS Highflyer) என்ற இந்தத் துறைமுகத்தை 15.10.1957 இல் தான் இலங்கையிடம் ஒப்படைத்தனர்.

சிறிலங்காக் கடற்படையின் நடவடிக்கைத் தலைமையகமும் இங்குதான் உள்ளது. கப்பல்கட்டும் நிறுவனமும், கடற்படைப் பயிற்சிக் கல்லூரியும் இங்குண்டு. அத்துடன் கடற்படையின் அதிவேகப் பீரங்கிப் படகு அணியும், அதிவேகத் தாக்குதல் அணியின் கலங்களும் இங்குதான் நிறுத்தப்படுகின்றன.

 

8. கடல்பற்றிய ஒரு கல்விக்கான பாடசாலையொன்றை நீங்கள் எதிர்காலத்தில் நிறுவுவீர்களா?

நிச்சயமாக ஏன் தற்பொழுதுகூட அடிப்படை படைத்துறைப் பயிற்சியை முடித்து வரும் போராளிகளுக்கு எமது பிரிவில் சோக்கப்பட்டவுடன் லெப்.கேணல் நிரோஜன் ஆரம்பக் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் கடல்சார் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே வேலைகளுக்கெனப் பிரித்து விடப்படுகின்றனர். 1992 இல் ஆசிர் கடற்படைப் பயிற்சிக் கல்லூரி,பின் லெப் கேணல் நரேஸ் தொழில் நுட்பக் கல்லூரி, லெப்.கேணல் பெத்தா அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, ஏன் இன்று கட்டளை அதிகாரிகளாகக் கடமையாற்றும் பலர் கடற்புலிகளின் கடற்படைப் படைத்துறைப் பள்ளியில் பயின்று வந்தவர்களே.

இந்த வகையில் ஆயுதம், இயந்திரம், படகோட்டம், வழிகாட்டலும் தொலைத் தொடர்பும் எனக் காலத்திற்குக் காலம் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு பயிற்றப்படுகின்றன. இவற்றின் பரிணாம வளர்ச்சியாக நிச்சயமாக 'கடற்படை கல்லூரி' வரும் என்பதை இங்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

 

9. ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகளை முன்கூட்டியே அறியும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் வண்ணமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறீர்களா?

ஆம். தலைவர் அவர்கள் இதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருகிறார்.(கிளிநொச்சியில் அறிவியல் நகரில் 'வானிலை ஆராய்ச்சி மையம்')

 

10. எமது கடல் மாசடைந்து வருகிறதாக ஒரு செய்திக்குறிப்பின் மூலம் அறிந்தேன், கடல் மாசடைவதற்கான காரணங்கள் எவை? கடல் மாசடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்து வருகிறீர்கள்?

  1. வைத்தியசாலைக் கழிவுகள் சந்தைக் கழிவுகள் போன்றன கடலில் கொட்டப்படுதல்.
  2. கடற்கலங்கள் அழிக்கப்படுதலின் போது அவையும் கடலிலேயே விடப்படுகின்றன.
  3. அல்சீனியா என்ற தாவரம் வளர்ந்து சிறு மீன்கள், இறால் உற்பத்தியைத் தடை செய்தல்.

ஆழிப்பேரலை மூலம் இந்தோனேசியா போன்ற இடங்களிலிருந்து வந்த பெருமரங்கள், கழிவுப்பொருட்கள் என்பன அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அல்சீனியா என்ற தாவரத்தை ஓய்வு நேரங்களில் சமாசம் மூலம் மக்கள் பிடுங்கி அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளர்.

 

11. உலக விடுதலைப் போராட்டங்களை வழிநடத்திய தலைவர்களுடன் ஒப்பீட்டுப் பேசுவதற்கு உரியவரான எமது தேசியத் தலைவரோடு அருகில் நின்று பல போர்க் களங்களைக் கண்ட நீங்கள் எமது தேசியத் தலைவருடைய ஆளுமைகள் பற்றிப் பேசமுடியுமா?

வாசிப்பதில் முக்கிய கவனம் செலுத்துபவரான தலைவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாறுகள், கடற்புறா போன்ற வரலாற்று நாவல்களை வாசித்த பொழுது கடாரம் வென்ற சோழனின் கடற்போர் பற்றிய பகுதி அவரை மிகவும் ஈர்த்துள்ளது.

எமது தமிழீழம் ஒரு புறம் சிறிலங்காவினாலும் ஏனைய பகுதிகள் கடலாலும் சூழப்பட்டே காணப்படுகின்றது. தரையில் எவ்வளவு வலிமை இருந்தாலும் கடலில் நின்று தாக்கும் எதிரிக்கு முகம் கொடுக்க மற்றும் பிற நாட்டுத் தொடர்புகளுக்கு கடலில் நாம் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்கிறார். மேலும் ஆரம்பத்தில் எமது போராட்டத் தளம் தமிழகத்திலும், போராட்டக்களம் தமிழீழத்திலும் என இருக்கும் போதும் கடற் பயணம், எதிரியைத் தாக்குதல் என்பன பறறிய தேவையை நன்குணர்ந்து 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகின்றார். இங்கு நாம் தலைவரின் தூரநோக்குடைய சிந்தனையைச் செயற்பாட்டை நோக்கக்கூடியதாக உள்ளது. அதாவது 1984 இல் கடற்புலிகள் என ஆரம்பிக்கும் பொழுதே கடலில் எதிரியை வெல்ல நீரடி நீச்சல் அணியின் தேவையை உணர்ந்து அக்காலப்பகுதியிலேயே நீரடி நீச்சல் அணிக்கான ஒரு பயிற்சியை ஆரம்பித்து அவர்கள் அதில் திறமை பெற வேண்டும் என வலியுறுத்தி விடுகின்றார். எமது வெற்றிகளுக்கு பல இடங்களில் கை கொடுத்து நிற்கும் இப்பிரிவின் தேவையை அக்காலத்தில் உருவாக்க நினைத்தார் தலைவரவர்கள். மற்றும் எமது கடற்கலங்களின் தேவையை நிறைவு செய்ய நாமே எமது படகுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்குடன் படகுக் கட்டுமானப் பிரிவு உருவாக்கப்பட்டு படகுகள் உருவாக்கப்பட்டன.

இவற்றை விட பிரதேச வாணிபத் தொடர்புகள் எமக்கு பல வழிகளில் கை கொடுக்கும் என நினைத்து 1985ல் கப்பல் வாங்கி பன்னாட்டு தொடர்பை உருவாக்கினார். கரந்தடிப் போராளிகளாக மிகக் குறைந்த தொகையினராக இந்த போதும் எதிர்காலத் தேவைகள் கருதி உபபிரிவுகளை உருவாக்கி நின்ற தலைவரின் சிந்தனைத்தினை செயற்படுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டவையாகும் போதே வெற்றியெமக்கு என்பதில் அசையாத உறுதிகொண்ட தலைவர் அவர்கள், கடற்புலிகள் பிரிவு உருவாக்கப்பட்டபின் கடற்புலிகளுக்கும், மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற வேண்டுமென்பதை உணர்ந்து கடற்புலிகளுக்கெனத் தனியாக அரசியற் பிரிவொன்றை 1991 இல் உருவாக்கி நின்றார். 

1992.08.26 அன்று அண்ணையைச் சந்தித்து 28.08.1992 மண்டைதீவுக்கடலில் கட்டிநிற்கும் ஒரு வோட்டர் ஜெற்றைத் தகர்க்க முடிவெடுத்ததைக் கூறினேன். அப்பொழுது 'ஏன்ரப்பா கிட்டப்போய் தகர்க்கிறதை விட இழுத்து வரலாமே' என்று அண்ணா கேட்டார்.

அதன்பின் தான் நாம் அதனை இழுத்து வந்து குருநகர் மக்களின் உதவியுடன் கரையேற்றினோம். கடற்புலிகள் மக்களுடன் நன்கு பழகி இருக்கவேண்டுமென்றும் என்ற அண்ணனின் சிந்தனையின் பலனை நன்று உணர்ந்த சந்தர்ப்பம் இதுவாகும்.

1992 காலப்பகுதி கடற்புலிகள் மகளீரணி உருவாக்கல் பற்றி அண்ணை கூறி, லெப்.கேணல் நளாயினி தலைமையில் 30 பேர் கொண்ட அணி தரப்பட்டது. இவர்களால் முடியுமா? என்ற எனது வியப்பு அண்ணனின் கூற்றிற்கு மறு கதை கதைக்காமல் மனதிற்குள் சங்கமமாகின்றது. நீச்சல் பயிற்சி தொடங்குகிறது. ஒரு கடல்மைல் நீந்தி முடித்தால் ஜிப்சி வாகனத்தை தருகிறேன் எனக் கூறினேன். 10 நாட்களில் அவர்கள் நீந்தி முடித்து ஜிப்சியைத் தமதாக்கிக் கொள்ள அண்ணனின் நம்பிக்கையையும், இவர்களின் செயற்றிறனையும் கண்டு எம் கை வலுப்பெற்றதை உணர்ந்தேன்.

எதிரியின் கலத்தை அழிப்பதைவிட அதைக் கைப்பற்றுவதே மேல் என்ற அண்ணனின் முன்னைய கருத்தே பூநகரிச் சமரில் ஐந்து நீருந்து விசைப்படகுகளை நாம் கைப்பற்றிக் கொண்டு வர வழிவகுத்தது.

1996 ஆண்டு மாசி நடுப்பகுதி எமது கப்பல் 70 கடல் மைலில் வந்து கொண்டிருந்தது. இந்திய இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் எமது கப்பலை மறித்து நிற்கின்றன. அண்ணை சொல்கிறார், படகில எங்கடை ஆக்களை அனுப்பி மாலுமிகளை மீட்டெடு எனக் கூறுகிறார். எனக்கு சந்தேகம். சிறிய படகில் இரு நாட்டுக் கடற்படைக்கிடையில் சென்று ஆக்களை மாற்றி வருவது சாத்தியமா? அண்ணை சொல்கிறார். அனுப்பினேன். மாலுமிகள் பக்குவமாகக் கரை வந்து சேர்ந்தனர்.

எம் போராளிகள் கப்பலைக் கொண்டு வந்து சேர்க்கக் கடுமையாக முயற்சித்தும், இறுதியில் கிபிர் தாக்குதலில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. முடியும் என்ற நம்பிக்கையுடனான செயற்பாடே வெற்றிக்கு வழி என்ற அண்ணனின் கொள்கையை அனுபவத்தில் உணர்ந்து அடுத்த நோக்கினைப் பற்றிப் பார்ப்போம்.

1991 ம் ஆண்டு ஆனையிறவுத்தளம் முற்றுகையிடப்பட்டு எம்வசம் வீழ இருந்த நிலையில் வெற்றிலைக்கேணியில் தரையிறக்கம் செய்யப்பட்டு எமது முற்றுகை முறியடிக்கப்பட்டது. எனவே அதே பாணியில் ஆனையிறவைக் கைப்பற்ற வேண்டுமென முடிவெடுத்த தலைவர் குடாரப்புவில் தரையிறக்கிக் கண்டிவீதியை ஊடறுத்து இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு எதிரியைத் தாக்குவதென முடிவெடுக்கிறார். திட்டத்தை அண்ணை என்னிடம் சொல்ல, என்னிடமிருந்த எரிபொருள் கொண்டுபோய் இறக்க மட்டும் தான் போதுமானது என்பதை அண்ணையிடம் கூறினேன்.

தரையிறக்கப்பட இருந்த அணியினருடன் அண்ணை கதைக்கும்போது இரண்டாம் உலகப்போரில் நடந்த தரையிறக்கத்தின்போது அவர்களின் தளபதி தரையிறக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை எரித்தமை பற்றிக் குறிப்பிட்டு, நான் எமது படகுகளை எரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டு, மீளப் படகுகளில் ஏற்றி எடுக்க மாட்டேன் வெற்றி பெறுவதே முடிவு என்பதை அவர்களுக்கு உணர்த்தினார்.

அதை விளங்கிக் கொண்ட தாக்குதல் அணியினரும் ஆனையிறவைக் கைப்பற்றி கண்டிவீதியால் தான் வருவம் என உறுதியளித்தது அதை நிறைவேற்றினர். போராளிகளின் மன உறுதியை வளர்த்து அவர்களது ஆற்றலை வெளிக் கொணர்ந்த விதம் எம்மை வியக்க வைத்தது.

இழப்புக்களையும் துன்பங்களையும் கண்டு துவண்டு விடும் மனம் தலைவரிடம் இல்லை, மாறாக துன்பத்தைத் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தை கொண்ட மனமே உள்ளது.

ஒரு முறை மூன்று படகுகளையும் 30 போராளிகளையும் நாம் இழக்கிறோம். அந்த இழப்பு எம்மை நிலை குலையச்செய்கிறது. அந்த மனச் சோர்புடன் தலைவரிடம் நடந்ததைப் போய்க் கூறிய போது தலைவர் சொல்கிறார் "இஞ்சை வா, முதல் அவன்ர மூன்று டோறாவையும் அதில இருக்கிற கடற்படைகளையும் அழி. அதுக்கு என்ன வேணுமோ கேள் நான் உடனே தாறன்" என்று இழப்புக்குள்ள இருந்து எங்கள தட்டிக் கொடுத்து, தானும் அந்த அந்த இழப்புக்குள்ளையே ஆட்கொண்டு விடாத மன உறுதியையும் காணக் கூடியதாய் இருந்தது.

ஒவ்வொரு ஆயுதங்களிலும் அவரவருக்குச் சிறப்புத்தேர்ச்சி வேண்டும் என்பதில் தலைவர் அக்கறை கொண்டிருந்தவர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறன். ஒரு முறை தலைவர் ஆர்.பி.ஜி. அனுப்பியிருந்தவர். அதை புலேந்தி அம்மான் ஆட்கள் புல்மோட்டையில வைச்சு ராங் ஒன்றை அடிக்க, அதுல ராங் வெடிக்கேல்லை, அது முளைச்சிற்று எங்கோ போயிற்று. அப்ப எல்லோரும் முடிவெடுத்தனர், அந்த ஆயுதம் பயனளிக்காது எண்டு. அப்படியே வைச்சிற்றினம். தலைவர் சொல்லி அனுப்புறார், "மண்ணை நிறைச்சுப்போட்டு பூச்சாடியா கவுட்டு வைக்கட்டாம்" என்று பேசிப் போட்டு ஆயுதத்தைக் கொண்டு வருமாறு சொல்லிவிட அதைக் கொண்டு போய்க் கொடுக்கிறம். அப்ப அண்ணை சொல்லுறார் "ஆயுதங்களைக் கொடுத்தா ஸ்ராண்ட் போட்டு அடுக்கி வைக்கிறது. ஏதும் எண்டால் அதத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் அடிச்சுப்போட்டுத் திரும்பவும் ஸ்ராண்டில வைக்கிறது. அந்த ஆயுதத்தால 100 மீற்றரிலோ 200 மீற்றரிலோ சுட்டுப் பாக்கிறது இல்லை".

நான் வடமராட்சியில இருக்கேக்க எனக்குக் கீழ இருந்த ஓராள் தலைவருக்குப் போய்ச் சொல்கிறார் "ஆமி சுடச்சுட வாறான்" என்று. அப்ப தலைவர் கேட்கிறார் "சுடச்சுட வாறான் என்றால் அவன் என்ன பிளட் புறூவா போட்டிருக்கிறான்" என்று அந்தப் போராளியைக் கேட்கிறார். உண்மையிலேயே அதற்குச் சரியான காரணம் வந்து சரியான முறையில் சூட்டுத் தேர்வு செய்து இவன்தான் இந்த ஆயுதத்திற்கு கைதேர்ந்தவர் என்று நாங்க விடேல்ல என்பதாகும். அண்ணை நாட்டுக்கு வந்து பிறகுதான் அவரவருக்கென்று பயிற்சிகள் வழங்கப்பட்டு அவரவருக்கென்று தேர்ந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டது. தலைவர் இதைச் செய்த பின் எல்லா ஆயுதங்களுமே நல்ல வெற்றிய எங்களுக்கு தந்தன.

தவறு விடும் போராளிகளைத் தண்டிப்பதிலும் தலைவர் கையாளும் விதம் ஒரு தனித்துவமானது. ஒரு முறை தவறு செய்தவர் மீண்டும் அப்பிழையை விட வைக்காது. வடமராட்சியில ஒபறேசன் லிபரேசன் நடவடிக்கையில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் எஞ்சிய போராளிகளைக் கூட்டிக்கொண்டு தென்மராட்சிக்குப் போய் தலைவரைச் சந்திக்கிரன். அப்பொழுது தலைவர் சொல்கிறார் "வடமராட்சிய விட்டிட்டு வந்து தென்மராட்சியில நிர்வாகம் நடத்தலாம் எண்டு நினைக்காதை, அது அழகில்லை. ஒன்றில வடமராட்சிய பிடி, இல்லையெண்டால் அந்த முயற்சியில வீரச்சாவடை. அப்பதான் புதிய பரம்பரை ஒன்று எங்கட போராட்டத் முன்னெடுக்கும்" என்ற தலைவரின் அந்தக் கட்டளை பின்னாளில் பல வெற்றிகளுக்கு காரணமாயிருந்தது.

1998 காலப்பகுதி எமது அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா கடும் சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகியிருந்தார். சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்ப சிறிலங்கா அரசு அனுமதிக்கவில்லை எனவே கடலால் அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. பயணம் ஆரம்பமாகும் நேரமும் வந்தது, நானும் கூடச்சென்று அனுப்பிவிட்டு வருவதாக இருந்தது. அப்பொழுது தலைவர் தனது கட்டளைமையத்திற்கு தளபதியை அனுப்பி நிலைமையை உடனுக்குடன் தனக்கு அறிவிக்கும் படி கூறிவிட்டு வழமையாக நடவடிக்கை நேரங்களில் நான் நிற்கும் இடத்தில் தான் வந்து நின்று எங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டு நான் திரும்பி வரும்வரை அவ்விடத்திலேயே நின்றார். தலைவரின் இந்தச் செயற்பாட்டில் அவரது கடமையுணர்வு, பற்றுணர்வு என்பதை அறியக் கூடியதாய் இருந்தது

ஒரு வட்டத்திற்குள் இருந்த பெண்களை ஆண்களுக்கு நிகராக களத்தில் இறக்கி மாபெரும் சமூகப் புரசிலை நடத்திக் காட்டியமைக்கு இன்றுமொரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம். 5 பிள்ளைகளின் தாயொருவர் சிறப்பாக ஒரே சண்டைக்கான பயிற்சியில், மகனும் தாயும் பயிற்சி எடுத்தும் பின் கடற் சண்டையொன்றில் அத்தாய் 50 கலிபருடன் வீரகாவியமானதையும் எடுத்துக் கொள்ளலாம்.

வளர்த்து வரக் கூடியவர்களை அவ்வத்துறைகளில் வளர்க்க வேண்டும் என்ற பண்பை தலைவரின் செயற்பாட்டில் காணலாம். 1990ம் ஆண்டு நான் வடமராட்சிக்குப் பொறுப்பாக இருந்த போது தலைவர் என்னை அழைத்து மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு போராளியை என்னிடம் தந்து, அவரை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவை என்றார். அன்று தூரநோக்கோடு அவரை அனுப்பி கல்விகற்க வைத்தமையால் இன்று அந்தப் போராளி வைத்தியத்துறையில் வல்லுனராக போராளிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சேவை செய்யும் வைத்திய கலாநிதியாக மாறி நிற்கின்றார்.

 

நேர்கண்டவர்கள்: எரிமலை மாதயிதழ் குழுமம்

- ஓகத்து 2006 எரிமலை மாதயிதழிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை

 

--------------------------------------------------------------------------------------------------------

 

  • எழுத்தாக்கம்:

                     (https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm)

  • எழுத்துப்பிழை திருத்தம் & வடிவமைத்தல்:

                     நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மேற்குறிப்பிடப்பட்டுள்ள 'வோட்டர் ஜெற்' என்ற படகு இதுதான். 

இச்சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவம்தான் 'நீருந்து விசைப்படகு' என்பதாகும். இப்படகு இங்கிலாந்தின் உள்நாட்டுத் தயாரிப்பாகும். இதற்கு அவர்கள் இட்ட பட்டப்பெயரே 'வோட்டர் ஜெற்' என்பதாகும். சிங்களத்திலும் அஃதே பெயராகும்.

கடற்புலிகளிடம் இதுபோன்று நான்கு (பூநகரியிலிருந்து 3, மண்டைதீவில் இருந்து ஒன்று) இருந்தது. புலிகளிடம் சேர்ந்த இவ்வகுப்பின் முதலாவது படகிற்கு சூட்டிய பெயர் 'பாமா' என்பதாகும். அதைக் கைப்பற்றிக் கொணர்ந்த இள பேரரையர்(Lt. Col) பாமா அவர்களின் நினைவாய்.

 

 

67279506_835850550141956_8595709407457705984_n.jpg

''ஓயாத அலைகள் - 1 இல் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கரைசேர்க்கப் படுகின்றன''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இப்படகினில்(வோட்டர் ஜெற்) கடற்புலிகள் ZPU-4 14.5 மிமீ  சுடுகலனை பூட்டியபடிதான் ஆனையிறவுச் சமரில் பங்கேற்றனர் என்பது உச்சபல தகவல்! 

💪

 

இந்தப் படத்தை வெளியிட பொறுத்த தருணத்திற்காக காத்திருந்தேன்!

இதுவே சரியான தருணம்...

 

கீழ்வரும் வோட்டர் ஜெற்றின் முதன்மைச் சுடுகலனாய் இருப்பதுவே ZPU-4 ஆகும்

Sea Tigers 'Water Jet' class boat with ZPU-4 AAA as its main armament. During the Kudarappu landing.jpg

 

 

திரைப்பிடிப்பு 'ஆனையிறவு மீட்புச் சமர்' என்ற 49 நிமிடங்கள் ஓடக்கூடிய புலிகளின் வரலாற்று நிகழ்படத்தில் இருந்து பிடிக்கப்பட்டதாகும். 21:20 நிமிடத்தில் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இதுதான் ஆனந்தபுரத்தில் புலிகளிடமிருந்து சிங்களம் கைப்பற்றிய சி.பி.யு.-4 வானூர்தி எதிர்ப்புச் சுடுகலன் (ZPU-4 AAA)

 

சுடுகலன் மேலே மந்திகள்:

இச்சுடுகலனில் சுடுகுழல்கள் பொருத்தப்படவில்லை. இதே நிலையிலான தோற்றத்தினைத்தான் மேலுள்ள மூன்றாவது படத்திலும் நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் அது மோசமான நிகழ்படத்தில் இருந்து எடுத்தமையினால் அவ்வாறு தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அதில் சுடுகுழல் பூட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளியின் எதிரொளிப்பில் அது மறைந்துவிட்டது(மெல்லியது என்பதால்).

IMG_0065 copy.jpg

 

சுடுகுழல் பொருத்தப்பட்டு முழுமையடைந்த நிலையில்:

LTTE ZPU- 4 that was captured in the battle of Aananthapuram.png

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ கடற்படையான கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் அட்மிரல் சூசையுடனான செவ்வி | 22 October 2006
  • கருத்துக்கள உறவுகள்+

கடைசியாக நிகழ்படத்தோடு கூடிய ஓர் தாயகப் பாடல்:

 

'தாயகப் பாடகர்' எஸ் ஜி சாந்தன் அவர்களின் குரலில்

 

ஆனையிறவில் மேனி தடவி: https://eelam.tv/watch/ஆன-ய-றவ-ல-ம-ன-தடவ-aanaiyiravil-meeni-thadavi-original-version-elephantpass-victory-song_9A1oTREri6Mn2NC.html

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ கடற்படையான கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் அட்மிரல் சூசையுடனான நேர்காணல்| 22 October 2006

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.