Jump to content

கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கும்கி' திரைப்படம் வந்தபோது எழுதிய கட்டுரை இது. உண்மையில் ஒரு கும்கி யானையை எப்படி பயிற்று விக்கிறார்கள் என்பதன் தேடல். அப்போது கும்கி யானைகளைப் பற்றி புகைப்பட ஆவணம் மேற்கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். அவரிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அதை வைத்து ஒரு கட்டுரை எழுதினேன். இனி அந்தக் கட்டுரை... 
* * * * *
 
வருக்கு போட்டோ எடுக்க யாரும் கற்றுத் தரவில்லை. கல்லூரி ஓவியப்போட்டியில் முதல் பரிசாகக் கிடைத்த ரூ.1,500-ல் தான் முதன் முதலாக ஒரு ஸ்டில் கேமராவை விலைக்கு வாங்கினார். ஐந்து வருடங்கள் முடிவதற்குள் கைதேர்ந்த புரொஃபஷனல் போட்டோகிராபராக மாறினார். 
 
MAMP17R__SENTHILKU_1459111g.jpg
ஆர். செந்தில்குமரன்
இது நடந்தது 2003-ல். அதற்குப் பின் 10 வருடங்களில் 11 சர்வதேச விருதுகளை அள்ளிக்கொண்டு வந்துவிட்டார். இன்றைக்கு டிராவல், வைல்ட் லைஃப், கமர்ஷியல் என்று பல தளங்களில் அசத்தும் போட்டோகிராஃபர். தற்போது 'கும்கி' என்ற ப்ராஜெக்ட் செய்து வருகிறார். அவரின் பெயர் ஆர். செந்தில்குமரன்.
 
அவரை சந்தித்து அவரது தொழில் பற்றியும் 'கும்கி' ப்ராஜெக்ட் பற்றியும் பேசினேன், "போட்டோகிராஃபி எனக்கு விருப்பமான ஒன்று. ஒளி பற்றிய புரிதல் எனக்கு இயல்பாகவே இருந்தது. ஒளியைக் கையாள தெரிந்தாலே நல்ல போட்டோக்களை எடுக்க முடியும். ஆரம்பத்தில் விளம்பரத்திற்கான கமர்ஷியல் போட்டோக்களை மட்டுமே எடுத்து வந்தேன். நண்பர் டி.எஸ்.மணி வைல்ட் லைஃப் பற்றிச் சொல்லச் சொல்ல அதன்மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டது. 
 
முதன் முதலாக தேக்கடி சென்று அங்குள்ள பறவைகள், பட்டாம்பூச்சிகளை மட்டும் படமெடுத்தேன். அதன்பின் ஏற்பட்ட ஆர்வத்தால் உலகின் பல காடுகளுக்கு சென்று விலங்குகளைப் படம் எடுத்து வருகிறேன். 
 
கடந்த 3 வருடங்களாக யானைகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். ஒரு வருடமாக 'கும்கி' யானைகள் பற்றிய டாக்குமென்ட்ரி எடுத்து வருகிறேன். இது முடிய இன்னும் மூன்று வருடங்கள் ஆகும். 
 
காடுகளுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு காட்டு யானைகள் எப்போதும் ஒரு தொந்தரவாகவே இருக்கும். வயல்கள் அழிப்பதும், குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் அவைகளின் வாடிக்கையாக இருக்கிறது. இவற்றை விரட்ட மனிதன் பலவகை முயற்சிகளை செய்து வருகிறான். அந்த முயற்சிகள் பலவற்றில் யானைகள் காயம் அடைந்தன. மனிதர்கள் இறந்தனர். யானைக்கும் மனிதனுக்குமான இந்த போராட்டத்தை சுமுகமாக மாற்றுவதற்கு வனத்துறை ஒரு வழியைக் கண்டுபிடித்தது. அதுதான் யானையை வைத்தே யானையை விரட்டுவது. 
 
சரி, நாம் வளர்க்கும் கோயில் யானைகளை வைத்து விரட்டலாமே என்றால், அது முடியாது. கோயில்களில் இருக்கும் யானைகள் எல்லாமே பெண் யானைகள்தான். அது மட்டுமல்ல, பிறந்ததில் இருந்து மனிதர்களை பார்த்தே வளர்வதாலும், ஒரே இடத்தில் கட்டிப்போட்டு இருப்பதாலும் அவைகள் பலம் குறைந்து மென்மையாகி விடுகின்றன. காட்டு யானைகளை நேரில் பார்த்த மாத்திரத்திலேயே இவைகள் கதி கலங்கி போய்விடும்.
 
7151.jpg
அந்த நிலையில் உருவானதுதான் காட்டு யானைகளை வைத்தே காட்டு யானைகளை விரட்டுவது என்ற திட்டம். இதற்காக காடுகளில் அடிபட்டு கிடக்கும் யானைகளைக் கொண்டு வந்தார்கள். அவற்றிற்கு மருத்துவம் செய்து பழக்கப்படுத்தி, அதிலிருந்து பலசாலி யானைகளை தேர்ந்தெடுத்தார்கள். அவற்றை 'கும்கி' என்று அழைத்தார்கள். 
 
கும்கிக்கு ஆண் யானைகளை மட்டுமே பயன்படுத்துவார்கள். நல்ல வாட்டசாட்டமான ஆண் யானைகளைத் தேர்வு செய்வார்கள். அவற்றுக்கு நீளமான தந்தம் இருக்கும். தந்தம் என்பது யானைக்கு தனி கம்பீரத்தை கொடுப்பது. நீண்ட பெரிய தந்தம் கொண்ட யானையைப் பார்த்து மற்ற யானைகள் பயம் கொள்ளும். 
 
இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கும்கி யானைகள் முழுவதுமாக குணமடைந்தபின், அவற்றுடன் பாகன்கள் நெருங்கிப் பழகத் தொடங்குவார்கள். ஆரம்பத்தில் அவர்களை பக்கத்தில் வரவிடாமல் யானை விரட்டியடிக்கும். அதையும் மீறி மெல்ல மெல்ல அருகே செல்வார்கள். முதலில் இனிப்பான கரும்புத் துண்டுகளை கொடுத்து பழக்கப்படுத்துவார்கள். காட்டில் கரும்பு கிடைக்காது. முதன்முதலில் இனிப்பை சுவைக்கும் யானை அந்த சுவைக்கு மயங்கும். அடிமையாகும். தொடர்ந்து வெல்லம் கொடுப்பார்கள். இப்போது இன்னும் கொஞ்சம் மயக்கம் கொள்ளும். ஆனாலும் காட்டு யானைகள் சாமானியப் பட்டவைகள் அல்ல. அவ்வளவு எளிதில் மனிதனுக்கு வசப்படாது.

பின் எப்படி வசப்படுத்துகிறார்கள்?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2

 

காட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம் கொடுத்து பழக்கம்படுத்தும் அதே காலக்கட்டத்தில் யானைக்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வலுவான கூண்டை தயார்ப்படுத்துவார்கள். அதற்குள் யானையை அடைத்து வைத்து வழிக்கு கொண்டுவர பயிற்சி கொடுப்பார்கள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிடும். அதற்குள் யானை கொஞ்சம் கொஞ்சமாக பாகனோடு சிநேகம் கொள்ளத் தொடங்கும்.
 
20161114_100739%2B%25281%2529.jpg
 
ஒரு யானை பாகனின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்பதற்கான அடையாளம், அந்த யானையின் மீது பாகன் ஏறி அமர்வதுதான். முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகள் சாமான்யத்தில் பாகன்களை மேலே அமரவிடாது. அதையும் மீறி அமர முயன்றால் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எரித்துவிடும். அல்லது தரையில் போட்டு மிதித்துவிடும். அதன்பின் பாகன் உயிரோடு இருப்பது முடியாத ஒன்றாகிவிடும். அதற்காகவே துதிக்கையை மேலே தூக்க முடியாதபடி கூண்டை அமைத்திருப்பார்கள்.
 
தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து யானையை வழிக்கு கொண்டு வருவார்கள். அதன்பின் மேலே அமர்வார்கள். யானை ஒருவரை தன் மீது அமர அனுமதித்துவிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கத் தொடங்கிவிடும். சரியான பயிற்சியால் அத்தனை பெரிய பலம் பொருந்திய யானை ஓரு சாதாரண மனிதனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தொடங்கும்.
 
யானைகளைப் பழக்கப்படுத்தி வழிக்குக் கொண்டு வருவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாருமில்லை. அதிலும் குரும்பர்கள் எனப்படும் பழங்குடியினர், யானைகளின் மொழி தெரிந்தவர்கள். அவற்றின் மனநிலையைப் புரிந்தவர்கள். அதனால் முரட்டுத்தனமான இந்த கும்கி யானைகளை குறும்பர்கள் மட்டுமே அடங்குவார்கள். 
 
ஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் இருப்பார்கள். ஒருவர் குரு பாகன். மற்றவர் சிஷ்யப் பாகன். பாகன்களின் குரு சிஷ்ய உறவு பெரும்பாலும் தந்தை - மகன் அல்லது அண்ணன் - தம்பி உறவாகவே வரும். குரு பாகன் இல்லாத போது யானையை கவனித்துக் கொள்வது சிஷ்யப் பாகன்தான். 
 
ஒரு யானை 50-60 ஆண்டுகள் வரை உயிரோடு வாழும். ஒரு பாகனின் வாழ்க்கை அந்த யானையோடு முடிந்து போகும். யானைக்கும் பாகனுக்குமான உறவு விவரிக்க முடியாத ஒரு பாசப்பிணைப்பு. பாகனுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் யானை காப்பாற்றும்.
 
20161114_100901.jpg
ஒருமுறை யானையைக் குளிப்பாட்டக் கூட்டி சென்ற பாகன் நன்றாக குடித்துவிட்டு போதையில் காட்டுக்குள்ளே விழுந்துவிட்டான். நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு நகராமல் அவனையே சுற்றி சுற்றி வந்தது யானை. மாலை நேரம் முடிந்து, இருள் கவ்வத் தொடங்கியது. பாகன் எழுந்திருப்பதாக இல்லை. 
 
இருட்டிய பிறகு காட்டுக்குள் இருப்பது ஆபத்து. எந்த விலங்கும் பாகனைக் கொன்று விடலாம் என்பதை உணர்ந்த யானை, மண்டியிட்டு குனிந்து தனது நீண்ட இரண்டு தந்தங்களையும் பாகனின் உடலுக்கு கீழே கொடுத்து அவனை அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு பத்திரமாக அவனது வீட்டில் கொண்டு போய் சேர்ந்தது. 
 
தன் கண்முன் பாகனை யாராவது துன்புறுத்தினால் யானையால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒருமுறை பாகன் ஒருவன், ஒரு தாதாவிடம் கடன் வாங்கியிருந்தான். அதைக் கேட்க வந்த தாதா பாகனை அடிக்கத் தொடங்கினான். தாதா அடித்ததுமே அவனுடன் சேர்ந்து வந்திருந்த அடியாட்களும் சேர்ந்து பாகனை அடிக்கத் தொடங்கினார்கள். இதை தூரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த கும்கி யானை பார்த்துக்கொண்டே இருந்தது. அதனால் பாகன் அடிபடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 
 
இங்கும் அங்குமாக திமிறியது. சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவர முயன்றது. பிளிறியது. ஆற்றாமையால் அழுதது. இறுதியாக பின்னங்காலில் கட்டியிருந்த சங்கிலி அறுந்தது. வேகமாக ஓடிவந்த யானை, மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது.
 
பாகனை அடித்து முடித்துவிட்டு சற்று தொலைவில் நடந்து போய் கொண்டிருந்தவர்களை நோக்கி வேகமாக ஓடியது. துதிக்கையால் அவர்களை தூக்கி வீசியது. வீடுகளை அடித்து நொறுக்கியது. ஆத்திரம் தீர்ந்ததும், மீண்டும் தனது இருப்பிடம் திரும்பியது. வேதனையோடு சோகமாக அமர்ந்திருந்த பாகனிடம் வந்து படுத்துக் கொண்டது. இப்படி நூற்றுக்கணக்கான கதைகள் முதுமலையில் இருக்கிறது.
 
20161114_100832.jpg
பாகன்களும் பாசத்தில் சளைத்தவர்கள் அல்ல. அந்த யானைக்கு எல்லாமே அவர்கள்தான். ஒரு யானையை நீரோடையில் படுக்க வைத்து குளிப்பாட்ட கிட்டத்தட்ட 3 மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு கனமான இரும்பு கம்பிகள் கொண்ட பிரஷ்ஷால் யானையின் உடல் முழுவதும் அழுத்தித் தேய்ப்பார்கள். ஒரு அழுக்கு இல்லாமல் எடுத்துவிடுவார்கள். கை வலி பின்னி எடுக்கும். மணிக்கட்டும் தோள்பட்டையும் கழன்று போவதுபோல் வலிக்கும். ஆனாலும் தேய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது யானைக்கு மசாஜ் செய்வது போல் சுகமாக இருக்கும். 
 
கும்கி யானையை பகலில் கட்டிப்போட்டு வைத்திருப்பாரக்ள். இரவில் கட்டவிழ்த்து விட்டு விடுவார்கள். அந்த யானை காட்டுக்குள் சென்று வரும். காட்டு யானைகளுடன் சேர்ந்து திரியும். சில சமயம் பெண் யானைகளுடன் உறவும் கொள்ளும். ஆனால், காலை விடியும் முன்னே மணியடித்தாற் போல் பாகன் வீட்டின் முன்னே வந்து நின்றுவிடும். 
 
இப்படி பாகனை தேடி வருவதற்கு காரணம், பாகனின் அன்பு மட்டுமல்ல. தினமும் கிடைக்கும் கரும்பு, வெல்லம். பின்னர் மசாஜ் போல் சுகமான குளியல். இதில்தான் யானைகள் மயங்கி விடுகின்றன. காட்டில் இந்த சுகமும் ருசியும் கிடைப்பதில்லை. அதனால்தான் கும்கிகள் பகலில் நாட்டு யானைகளாகவும், இரவில் காட்டு யானைகளாகவும் வாழ்கின்றன. விளைச்சல் நேரத்தில் காட்டு யானைகள் உணவுக்காக ஊருக்குள் வரத் தொடங்கும். அப்போது அவைகளை கும்கி யானை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடிக்கும். நன்றாக பயிற்சி பெற்ற கும்கி யானை எப்படிப்பட்ட காட்டு யானையையும் அடித்து துரத்திவிடும். கும்கி யானைகள் தங்களின் பாகன்களைத் தவிர வேறு யாரையும் அருகே நெருங்க விடாது." என்று கூறி முடித்தார் ஆர்.செந்தில்குமரன்.
 
படங்கள்: ஆர்.செந்தில்குமரன் 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.