Jump to content

போரும் வைரசும் ஒன்றல்ல! - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போரும் வைரசும் ஒன்றல்ல! நிலாந்தன்!

August 29, 2021

ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு உண்டு.வீடுவீடாக வந்து நுளம்புப் பெருக்கத்திற்கான வாய்ப்புக்கள் உண்டா இல்லையா என்பதனை நுணுக்கமாக ஆராய்கிறார்கள்.இது ஒரு முன்னேற்றகரமான சுகாதாரச் செய்முறை என்று.

உண்மைதான் இலங்கைத்தீவின் சுகாதார வைத்திய அதிகாரி (MOH)கட்டமைப்பு என்பது தனித்தன்மை மிக்கதாக வர்ணிக்கப்படுகிறது.மிகக் குறைந்த செலவில் மிகக் கூடுதலான வினைத்திறனோடு செயற்படும் ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பாக அது போற்றப்படுகிறது.பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறையில் பரவிய கொழுக்கிப் புழு தொற்றுநோய் காரணமாக அதிகரித்து உயிர்ச்சேதம் ஏற்பட்டபோது அதை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒருகட்ட விளைவே அதுவெனலாம். அமெரிக்க மருத்துவத் தொண்டு நிறுவனமான ரொக்கெபெலர் நிதியத்தால்(Rockefeller Foundation) பெருந்தோட்டத்துறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் திருப்தியான விளைவுகளைத் தரத்தவறிய ஒரு பின்னணியில் பெருந்தோட்டத்துறைக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட பகுதியை-மேல் மாகாணத்தில் களுத்துறை பிரதேசத்தை-பரிசோதனைக்களமாக தெரிந்தெடுத்து இலங்கைத் தீவின் முதலாவது மருத்துவ சுகாதார அலுவலர் கட்டமைப்பு 1926ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அக்கட்டமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான டொக்டர்.எஸ்.எப்.செல்லப்பா என்ற ஒரு தமிழரே இலங்கைத்தீவின் முதலாவது மருத்துவ சுகாதார அதிகாரியாவார்.

இவ்வளவு பெருமைமிக்க ஒரு கட்டமைப்பை கொண்டிருக்கும் இலங்கை தீவு ஒரு பெருந் தொற்று நோய்க்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக என்ன செய்துகொண்டிருக்கிறது?அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரு படம் வெளியாகி இருந்தது.அதில் களைத்து துவண்டு போன ஒரு பொதுச் சுகாதார பரிசோதகர் சிறிய பிளாஸ்டிக் கதிரை ஒன்றில் உடலை நீட்டி அயர்ந்து தூங்கும் காட்சி காணப்பட்டது. அது ஒரு குறியீடு.உலகில் மிகவும் போற்றப்படும் ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பு களைத்துப் போயிருப்பதை அது காட்டுகிறதா? பெருமைக்குரிய அடிமட்ட சுகாதார கட்டமைப்பை கொண்டிருக்கும் ஒரு நாடு பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் தடுமாறுகிறதா?கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கம் அதைத்தான் காட்டுகிறதா?அது மேலும் நீடிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருப்பதும் அதைத்தான் காட்டுகிறதா?

சமூக முடக்கத்தை அறிவிக்குமாறு சுகாதாரத் துறைசார் நிபுணர்களும் மருத்துவர்களும் சமூக அக்கறை கொண்ட சக்திகளும் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக கேட்டுவந்தனர்.ஆனால் அக்கோரிக்கைகளை பொருட்படுத்தாத அரசாங்கம் இரண்டு மகாநாயக்க தேரர்கள் கேட்டதும் சமூக முடக்கத்தை அறிவித்தது. தனித்துவம் மிக்க ஒரு பொதுச் சுகாதார கட்டமைப்பின் எச்சரிக்கைகளை விடவும் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளைத்தான் இந்த அரசாங்கம் செவிமடுக்குமா? மேலும் அறிவிக்கப்பட்ட சமூகமுடக்கமும் முழுமையானது அல்ல.முன்னைய சமூகமுடக்கங்களைப் போலவே அது அரைகுறையானது. ஒவ்வொரு முறையும் அது வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இம்முறை அது தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைவிட முக்கியமாக அந்த சமூகம் முடக்கம் அறிவிக்கப்பட்ட விதம் ஒரு சிவில் நடவடிக்கை போன்றதல்ல.அது ஒரு ராணுவ நடவடிக்கை போலவே திடீர் என்று அறிவிக்கப்பட்டது. அரசாங்கம் ஒரு சமூக முடக்கத்தை அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ச்சியாக பத்திரிகை வாசிப்பவர்கள்மத்தியில் இருந்தது.ஆனால் அரசாங்கம் அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. திடீரென்று ஒருநாள் முன்னதாக அதனை அறிவித்தது.அப்படி அறிவிக்கப்பட்டால் சாதாரண குடிமக்கள் என்ன செய்வார்கள் ?கிடைக்கும் கால அவகாசத்தில் சேமிக்கக் கூடிய பொருட்களை சேமிப்பார்கள். அதுதான் வெள்ளி பின்னேரம் நடந்தது. எல்லா தெருக்களிலும் சனத்திரள் திருவிழாக் காலம் போல பண்டிகைக் காலம் போல பிதுங்கி வழிந்தது.சந்தைகளின் முன்னும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்:பல்பொருள் அங்காடிகள்; மருந்தகங்களின் முன்னும் மக்கள் நிரம்பி வழிந்தார்கள். தெருக்களில் வாகனங்கள் நெரிசலாக காணப்பட்டன.எதற்காக சமூகம் முடக்கப்படுகிறது? வைரஸ் தொற்றும் வேகத்தை குறைப்பதற்காகத்தானே? ஆனால் பத்து நாட்களுக்குள் ஏற்படக்கூடிய தொற்றை சில மணித்தியாலங்களுக்குள் ஏற்படுத்தியமைதான் திடீர் அறிவிப்புகளின் விளைவு எனலாமா?

கொரோனா தொற்று பரவி மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக்கு ஜோசப் ஸ்டாலின்கொத்தணி, சஜித் கொத்தணி மற்றும் அனுர கொத்தணி போன்றவையே காரணம் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஆனால் திடீர் சமூக முடக்க அறிவிப்பால் நாட்டில் பெட்ரோல் செட் கொத்தணி ; ஃபூட் சிற்றி கொத்தணி ; பார்மசி கொத்தணி போன்ற கொத்தணிகள் உருவாகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அரசாங்கம் ஏன் இப்படித் திடீர் என்று அறிவிக்கிறது? சமூக முடக்கத்தை அறிவிப்பது என்று தீர்மானித்தால் அதை ஏற்கனவே மக்களுக்கு வெளிப்படையாகக்கூறி மக்களை சில நாட்களுக்குள் அதற்கு தயாராகும்படி கேட்கலாம்தானே? வெள்ளியன்று ஜனாதிபதி ஆற்றிய உரையை சில நாட்களுக்கு முன்பே செய்திருக்கலாம்தானே? முன்கூட்டியே அறிவித்தால் வைரஸ் ஓடி ஒளித்துவிடும் என்ற பயமா? இவ்வாறு திடீரென்று அறிவித்தமை என்பது ஒருவித ராணுவத்தனமான அறிவிப்புதான்.அது சிவில்த்தனமானது அல்ல.

வைத்திய நிபுணர்கள்,துறைசார் அதிகாரிகள்,அக்கறை கொண்ட தரப்புக்கள்,ஊடகங்கள் போன்றன சில மாதங்களாக கேட்டுக்கொண்ட போதிலும் சமூகத்தை முடக்கத் தயாரற்றிருந்த அரசாங்கம் இரண்டு மகாநாயக்கர் கேட்டதும் அதை முடிவெடுத்ததா? அல்லது அரசாங்கம் முடிவெடுக்கும் சக்தியின்றி தடுமாறுகிறதா ? ஒரு தென்னிலங்கை நண்பர் கேட்டார் “இறுதிக்கட்டப் போரில் நாட்டை ஆட்சி செய்தவர்கள்தான் இப்பொழுது அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான முடிவுகளை அப்போது எடுத்த இவர்களால் இப்பொழுது வைரசுக்கு எதிராக முடிவுகளை ஏன் எடுக்க முடியாதுள்ளது? என்று.

ஆனால் இறுதிக்கட்டப் போரில் அவர்கள் என்ன முடிவை எடுத்தார்கள்?.யுத்தத்தின் வெற்றிக்காக தமது குடிமக்களில் ஒரு பகுதியினரின் உயிர்களை பொருட்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தார்கள்.அப்படி ஒரு முடிவை எடுத்து யுத்தத்தை வெல்வது ஒரு பெரிய காரியமும் அல்ல.அதாவது ஒரு இனப்படுகொலை மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பெரிய வீரம் தேவையில்லை.அதுமட்டுமல்ல போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களின் இழப்புக்களை தடுப்பதற்கு இந்தியாவோ அல்லது ஐநாவோ பொருத்தமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு அதுவும் ஒரு காரணம்.அதாவது போரில் அரசாங்கம் வென்றதற்கு அதுவுமொரு காரணம்தான்.

ஆனால் வைரசும் போரும் ஒன்றல்ல என்பதனை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலான காலம் நிரூபித்துவிட்டது. எனினும் அரசாங்கம் ஒரு யுத்த களத்தில் முடிவெடுப்பது போலவே இப்பொழுதும் முடிவெடுக்கிறது.கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சமூக முடக்கத்தை ஏன் அரசாங்கம் ஒத்திவைத்தது என்பதற்கு விளக்கங்களை வழங்கினார்.அதாவது வைரசை முடக்குவது என்றால் சமூகத்தை முடக்க வேண்டும்.சமூகத்தை முடக்கினால் பொருளாதாரம் முடங்கிவிடும். ஏற்கனவே முடங்கிப் போயிருக்கும் பொருளாதாரத்தை மேலும் முடக்குவதற்கு அரசாங்கம் தயங்குகிறது. அதனால்தான் சமூகத்தை முழுமையாக முடக்க அரசாங்கம் தயங்குகிறது.பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக உயிரிழப்புக்களை தாங்கிக் கொள்ளலாம் என்பதும் ஒருவித யுத்தகளச் சிந்தனைதான்.

இப்பொழுது அறிவிக்கப்பட்டிருப்பதும் ஓர் அரைச்சமூக முடக்கம்தான். பிரதான சாலைகளில்தான் நடமாட்டங்கள் பெருமளவிற்கு குறைந்திருக்கின்றன.ஆனால் நாட்டின் உட்தெருக்களிலும் குக்கிராமங்களிலும் வாழ்க்கை வழமை போல இயங்குகிறது.கொரோனாச் சந்தைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டுவிட்டன. வணிகர்கள் கடைகளின் முன்கதவை மூடி பின்கதவால் வியாபாரம் செய்கிறார்கள். அப்படியென்றால் வைரஸ் பெருஞ்சசாலைகளின் வழியாகத்தான் வருமா?அல்லது பின்கதவின் வழியாகத்தான் வருமா? இவ்வாறான ஒரு அரைச்சமூக முடக்கத்தைக்கூட அரசாங்கம் சிவில்த்தனமாக அறிவிக்காமல் ராணுவத் தனமாகவே அறிவித்திருக்கிறது.

இந்த அரசாங்கம் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு போரை போலவே முன்னெடுக்கிறது.ஒரு பெருந்தொற்றுநோய் காலத்தில் நாட்டை அதிகம் ராணுவ மயப்படுத்திய ஓர் அரசாங்கம் இது.சுகாதார அமைச்சின் செயலாளராகவும் ஒரு முன்னாள் படைப்பிரதானியே காணப்படுகிறார்.புதிய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு வைத்திய ஆய்வக விஞ்ஞானிகளின்,நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் பின்வருமாறு அறிவுறுத்தியுள்ளார்……“நீங்கள முதுகெலும்புள்ள சுகாதார அமைச்சராக செயல்பட விரும்பினால் உங்களை தாண்டிவரும் உத்தரவுகளை அமல்படுத்துவதிலிருந்து சுகாதார செயலாளருக்கு உடனடியாகத் தடைவிதியுங்கள்.இல்லையெனில் சுகாதார சேவையில் சரியான தீர்மானங்களை எடுப்பதில் சீரான தன்மையைப் பேணுவது கடினம்”

அரசாங்கம் ஏன் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகம் ராணுவ மயப்படுத்துகிறது?அதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.முதலாவது காரணம் இந்த அரசாங்கத்துக்கும் படைத்தரப்புக்கும் இடையிலான உறவு ரத்தமும் சதையும் போன்றது.இந்த அரசாங்கத்தின் அடிப்படைப் பலமே யுத்த வெற்றிதான். எனவே போர்வெற்றியின் பங்காளியான படைத்தரப்பில்தான் இந்த அரசாங்கம் அதிகம் தங்கியிருக்கும்.அதிலும் குறிப்பாக தமிழ் மக்களால் போர்க்குற்றம் சாட்டப்படும் ஒரு படைத்தரப்பை பாதுகாத்தால்தான் இந்த அரசாங்கம் தன்னையும் பாதுகாக்கலாம்.எனவே படைத்தரப்பை தண்டிக்கப்பட முடியாத ஒரு தரப்பாக மகிமைப்படுத்த வேண்டிய தேவை இந்த அரசாங்கத்திற்கு உண்டு.யுத்தத்தை வென்ற ஒரு படையை வைரசுக்கு எதிரான போரிலும் நிறுத்தி அதில் வெற்றி கொள்ள வைப்பதன் மூலம் படைத்தரப்பின் அந்தஸ்தை உயர்த்தலாம் என்று இந்த அரசாங்கம் சிந்தித்தது.இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம்,அனர்த்த காலங்களில் படைத்தரப்பை உதவிக்கு அழைப்பது ஒரு உலகப்பொது இயல்பு.இலங்கைத்தீவில் அதிக ஆளணியும் அதிக வளங்களும் கொண்ட வினைத்திறன் மிக்க ஒரு அரசஉபகரணம் படைத்தரப்பே.குறிப்பாக அரசாங்கத்துக்கு அதிகம் விசுவாசமான ஒரு உபகரணமும் அதுதான்.எனவே அந்த உபகரணத்தை வைத்து அரசாங்கம் வைரசை எதிர்கொண்டது.அதனால் தொடக்கத்தில் வெற்றிகளையும் பெற்றது. அண்மை மாதங்களாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை ஒரு படைநடவடிக்கை போல வேகமாக முன்னெடுத்து வரும் அரசாங்கம் அதில் ஒரு முன்னுதாரணத்தை காட்டியும் இருக்கிறது. இது இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் படைத்தரப்பை முன்னிலைப்படுத்தும்பொழுது அதுதொடர்பில் விமர்சனங்களை முன் வைப்பதற்கு எதிர்கட்சிகளும் ஊடகங்களும் சிங்களப் பொது உளவியலும் தயங்கும்.போரில் ரிஸ்க் எடுத்து உயிரைக்கொடுத்து வெற்றி கொண்டது போலவே இப்பொழுது வைரசுக்கு எதிராகவும் படைத்தரப்பு ரிஸ்க் எடுக்கிறது என்ற ஒரு படிமத்தை அரசாங்கம் கட்டியெழுப்ப முயன்றது. வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சிப்பது என்பது அதில் முன்னணி செயற்பாட்டாளர்களாகக் காணப்படும் படைத்தரப்பையும் விமர்சிப்பதுதான்.தமது யுத்தவெற்றி நாயகர்களை விமர்சிக்க தயங்கிய சிங்களக் கூட்டு உளவியலை அரசாங்கம் நன்கு பயன்படுத்தியது.

இதனால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட உலகின் மிக நூதனமான ஒரு பொதுச் சுகாதாரக் கட்டமைப்பும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணத்துவமும் பெருமளவுக்கு படைத்தரப்பின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டபொழுது அதற்கு பெருமளவிற்கு எதிர்ப்பு முதலில் தோன்றவில்லை.வெல்ல முடியாத ஒரு போரில் வெற்றிபெற்ற ஒரே தகுதி காரணமாக உலகின் மிக வினைத்திறன் மிக்க முன்னுதாரணமான ஒரு பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை படைத்தரப்பு மேலாண்மை செய்யும் ஒரு நிலை தோன்றியது.நாட்டுமக்கள் மூன்றாவது தடுப்பூசியை அதாவது பூஸ்டர் டோஸை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனையும் சில நாட்களுக்கு முன் படைத்தளபதியே அறிவித்திருந்தார்.

ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான தொகுக்கப்பட்ட அனுபவமானது வைரஸும் யுத்தமும் ஒன்று அல்ல என்பதை நிரூபித்து விட்டது. ஹெகலிய ரம்புக்வெல கூறியதுபோல விடுதலைப் புலிகளை தோற்கடித்த அதே படைத்தரப்பால் வைரஸை எதிர்பார்த்த வேகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகொள்ள முடியவில்லை.அரசாங்கத்தால் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.தலைநகரத்தில் அரிதாக கிடைப்பது அமெரிக்க டொலர்.எங்கும் கிடைப்பது வைரஸ் என்றாகிவிட்டது. போரில் வெற்றி பெற்ற ஒரு படைத்தரப்பு வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு கலையத் தொடங்கிவிட்டது.இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் யுத்தவெற்றிகளின் பளபளப்பின்மீது வைரஸ் பரவத் தொடங்கிவிட்டதா ?

 

https://globaltamilnews.net/2021/165174

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.