Jump to content

ஐ.நா வரை எதிரொலிக்கும் தமிழர் தரப்புக் குழுப்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா வரை எதிரொலிக்கும் தமிழர் தரப்புக் குழுப்பம்

லக்ஸ்மன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்மாதத்தில் நடைபெறவுள்ள  ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடர் காலத்தோடு உடைந்து சிதறிவிடும் என்ற எண்ணப்பாடு தமிழ்த் தேசிய எதிர்ப்புவாதங்கொண்டவர்களிடம் காணப்படுகிறது. இவ்வாறான சிந்தனை அக் கூட்டமைப்பு உருவானது முதலே இருக்கின்றதொன்றாகும். .  

இதற்குத் தூபமிடுமாப்போல் தொடர்ந்தும் அது தொடர்பான விமர்சனங்களும் கருத்துகளும் ஊடகங்களில்  வெளிவந்தவண்ணமே இருக்கின்றன. தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது, ஒருபோதும் தமிழர்களின் இரத்தத்தில் இருந்து இல்லாமல் போகிறதொன்றல்ல என்பது, தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடு.

மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் 46/1 பிரேரணை பற்றிய மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இதில் முக்கியமாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான அதிகாரத்தை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு கடந்த கூட்டத்தொடரில் மனித உரிமை பேரவை வழங்கியிருந்தது.   அதன் அடிப்படையில் முக்கியமாக கருதப்படுகின்ற மனித உரிமை பேரவையின் அமர்வில் நீதி பொறிமுறைக்கான நடவடிக்கைகள் காத்திரமான முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து, உண்மையான மனித உரிமை முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்தும் குரல்கொடுத்த வண்ணமுள்ளன. இருந்தாலும் 2009களுக்குப் பின்னரிருந்து தமிழ் மக்கள் உரிமைக்காக ஐக்கிய நாடுகள் சபையை நம்பிய எதிர்பார்ப்புக்கு இன்னமும் முடிவு கிடைக்கவில்லை.

இதில் விசேசம் என்னவென்றால், பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற சில நாடுகள் மனித உரிமை நிலைப்பாட்டில் காட்டும் அக்கறையை ஏனைய நாடுகள் காட்டுவதில்லை என்பதுதான்.  வெறுமனே ஒரு சில நாடுகள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஏன் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களது கொள்கை சார்ந்ததே.  இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச மனித உரிமை கடமைகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்க தங்கள் விருப்பத்தை மற்ற நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் அதன் மறுதலை.

பல தசாப்தங்களாகத் தொடரும் இலங்கையின் இனமுறுகலுக்கு போர் ஓய்வு முடிவாக இருக்குமென்றே இலங்கையின் ஆளும் தரப்பு நம்பிக்கை கொண்டிருந்தது. இருந்தாலும் போர் மௌனிக்கப்பட்டு 12 வருடங்களாகியும் தமிழ் மக்களுக்காக ஒரு தீர்வு கூட உருவாக்கப்படவில்லை. நடைபெறும் கண்துடைப்புகள் பயனற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டாலும் ஆளும் தரப்பினரின் நிலைப்பாட்டிலோ செயற்பாட்டிலோ மாற்றம் எதுவுமில்லை.

சர்வதேச   சமூகத்திற்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய உறுதி மொழிகளை தொடர்ந்தும் மதிப்பதாக குறிப்பிடும் இலங்கை,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்காக தம் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றங்களை தெளிவுப்படுத்தி, 13 பக்கத்திலான அறிக்கையை  கொழும்பில் உள்ள அனைத்து இராஜதந்திர மையங்களுக்கும் கடந்த வாரத்தில் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில்தான், இன அழிப்பு, மனிதாபிமான குற்றம், உரிமை மீறல், போர்க்குற்றங்கள் போன்ற முக்கிய விடயங்கள் குறித்தான முடிவுக்காக தமிழ்த்தரப்பு ஏங்கிக் கொண்டிருக்கிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஸ்ரீ லங்காவை பாரப்படுத்துவதே ஒரே வழி என்கிறது தமிழர் தரப்பின் ஒரு பகுதி.

அதே போன்று காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டாலும் அதன் செயற்பாடின்மை, இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் கவனிக்கப்படவேண்டும். இவ்வாறான விடயங்களைக் கண்காணிக்க மனித உரிமை ஆணைக்குழு ஒரு விசேட தூதுவரை நியமிக்க வேண்டும். அத்தோடு , வடக்கு கிழக்கில் மனித உரிமை ஆணையக்கத்தின் ஒரு கள அலுவலகம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள்; ஐ.நாவின் அமர்வுக்காக முன்வைக்கப்படுகின்றன.  

அதே போன்று வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல்  பல்வேறு பரிணாமங்களில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குதல் குறித்து ஐ.நா கவனத்திலெடுக்க வேண்டும்.  தமிழர்களின் தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கும் அரசியலமைப்பு மூலமே தமிழர்களின் பிரச்சினைக்கான் தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான்,  தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கையை அனுப்பியது என்ற கருத்து வெளிக்கிளம்பியது. இதன் வெளிப்பாடோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்குள் குழப்பம். அதிலும் இலங்கை தமிழரசு கட்சிக்குள்ளும் பூகம்பம் வெடித்தது.   தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளாக ஆரம்பத்திலிருந்த டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகள் இந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானவர்களாக இருக்கின்றனர். ஓட்டு மொத்த தமிழ் மக்களும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைவதன் முக்கியம் குறித்து முயன்றுவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினர் எல்லோரையும் இணைத்து ஓர் அறிக்கையை ஐ.நாவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட வேளை, ஏற்பட்ட குழப்பம், தாமதம் காரணமாக இலங்கைத் தமிழரசு கட்சியின் கையொப்பம் இல்லாமல் ஒரு கடிதம் அனுப்பப்பட்டதானது, இந்தக் குழப்பத்தை மேலும் துண்டிவிட்டது.   அக்கடிதத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், பாராளுமன்ற மன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர்.

இவ்வறிக்கையில், 46/1 பிரேரணைக்கு பின்னராக தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தமிழினத்துக்கு எதிரான விடயங்களான காணி அபகரிப்பு, தொல்லியல் சார்ந்த நடவடிக்கைகள், நினைவேந்தல்களுக்கான தடைகள், பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையிலான கைதுகள், சட்ட நடவடிக்கைகள், தடுத்து வைத்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தல், காணாமல் ஆக்கப்பட்டோரை தேட வேண்டிய அவசியம் இல்லை என்ற அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு, பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி பயணத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள், கைதுகள், அண்மையில் அரசினால் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தாலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அபாய நிலைகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது  என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தாலும் எல்லோரையும் அனுசரிக்கும் நிலைப்பாடு தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் தேவையில்லை என்பது ஏனையவர்களின் பிடியாக இருக்கின்றது.

  இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையோ, பிளவோ, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒற்றுமையோ சர்வதேச அளவில் எதனையும் செய்துவிடாது என்பதுதான் கரிசனை கொண்டோரின் கருத்தாகிறது.

இலங்கையின் பொறுப்புக்கூறலை சர்வதேசம் உறுதிப்படுத்துகின்றதற்கான முக்கிய முனைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் இம்மாத அமர்வுக்கு தமிழர் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டதான விடயங்கள் ஒவ்வொரு வருடமும் நிகழ்வதைப்போலல்லாமால் காத்திரமானதாக இருக்க வேண்டும்.  

அந்தவகையில், இம்முறை ஜெனீவாவில் இலங்கையைப் பற்றி விவாதத்தில், பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தல்கள்,  பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை தளர்த்துதல் அல்லது மாற்றுதல், தடுத்துவைப்புக்கள், இந்த ஆண்டு நிகழ்ந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம், அதன் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற சம்பவங்கள் என பலவும் கலக்கப்போகின்றன. அதன் பிரதிபலிப்பு எப்படி என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-நா-வரை-எதிரொலிக்கும்-தமிழர்-தரப்புக்-குழுப்பம்/91-280782

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.