Jump to content

சரண்ஜித் சன்னி: பஞ்சாப் முதல்வராகப் போகும் இவரது பின்னணி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரண்ஜித் சன்னி: பஞ்சாப் முதல்வராகப் போகும் இவரது பின்னணி என்ன?

19 செப்டெம்பர் 2021
சரண்ஜித் சிங் சன்னி

பட மூலாதாரம்,TS_SINGH DEO

 
படக்குறிப்பு,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வாகியிருக்கும் சரண்ஜித் சன்னி (49) திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அம்மாநில முதல்வராக பதவியேற்கவிருக்கிறார்.

அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்த அவர், இதற்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ஓராண்டுக்கு இருந்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் ராம்தஸியா சீக்கியர் (பட்டியலினத்தில் உள்ளது) சமூகத்தைச் சேர்ந்தவர் சரண்ஜித் சிங். அங்குள்ள சம்கூர் சாஹிப் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு இவர் தேர்வானார். கேப்டன் அமரிந்தர் சிங் அமைச்சரவையில் 2017ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சேர்க்கப்பட்ட இவருக்கு தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய பிறகு அந்த பதவிக்கு ரந்தாவா அல்லது சரண்ஜித் சிங் தேர்வாகலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், சரண்ஜித் சிங்கே அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்ற அறிவிப்பை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெளியிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

காங்கிரஸ் தலைமையின் முடிவைத் தொடர்ந்து இனி பஞ்சாப் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூடி சரண்ஜித் சிங் சன்னியை முறைப்படி தங்களுடைய குழு தலைவராக தேர்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க சரண்ஜித் உரிமை கோரினார். இதையடுத்து, திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்க வருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்துள்ளதாக இன்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.

கட்சி மேலிடத்தின் இந்த முடிவை வரவேற்பதாக மற்றொரு போட்டியாளராக ஊகிக்கப்பட்ட சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்தார்.

"முதல்வர் பதவிக்கு என்னை தேர்வு செய்ய ஆதரவாக இருந்த எல்லா எம்எல்ஏக்களுக்கும் நன்றி. கட்சி மேலிடம் சரண்ஜித் சிங்கை தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எனக்கு சகோதரர் போன்றவர்," என்று ரந்தாவா கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

பஞ்சாப் மாநில மொத்த மக்கள் தொகையில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களின் வாக்கு வங்கி 33 சதவீதம் உள்ளது. அந்த சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் முதல்வராக தேர்வாவதன் மூலம் பட்டியலின வாக்குகளை பெறலாம் என்ற திட்டத்துடன் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான அம்பிகா சோனி, பஞ்சாப் முதல்வராக தேர்வு செய்யப்படுபவர் சீக்கியராக இருந்தால் நல்லது என்று கூறினார். மாநில முதல்வராக அவருக்கு கட்சி மேலிடம் வாய்ப்பளித்ததாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் ஒரு தகவல் பரவியது.

அம்பிகா சோனி மட்டுமின்றி காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து (சீக்கியர்), சுனில் ஜாக்கர் (இந்து ஜாட் சமூகம்), சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா (ஜாட் சீக்கியர்) ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

யார் இந்த சரண்ஜித் சிங்?

சரண்ஜித் சிங் சன்னி

பட மூலாதாரம்,CHARANJIT SINGH CHANNI

பஞ்சாப் மாநிலத்தின் மக்ரோனா காலன் என்ற கிராமத்தில் 1972ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி பிறந்தவர் சரண்ஜித் சிங். வறியநிலை குடும்பத்தில் எஸ். ஹர்சா சிங், தாய் அஜ்மீர் கவுருக்கு மகனாக பிறந்தார் சரண்ஜித் சிங்.

சரண்ஜித் சிங்கின் தந்தை ஹர்சா சிங், ஊராட்சித் தலைவராகவும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். இதனால், சிறு வயதிலேயே சரண்ஜித் சிங்குக்கு அரசியல் ஆர்வம் துளிர் விட்டிருந்தது. இதனால் பள்ளியில் அவர் மாணவர் தலைவரானார். பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சண்டீகரில் உள்ள ஸ்ரீ குரு கோவிந்த் சிங் கல்லூரியில் அவர் இளங்கலையும் பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்தார். பிறகு பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-ஜலந்தரில் எம்பிஏ படிப்பு முடித்தார்.

கல்லூரி காலத்தில் இவர் சிறந்த கைப்பந்து வீரராகவும் பரிணமித்தார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் தங்கம் வென்றார். தேசிய சாரணர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவற்றிலும் அவர் பள்ளி, கல்லூரி காலங்களில் பங்கெடுத்திருக்கிறார்.

இதற்கிடையே, பொருளாதார சூழ்நிலை குடும்பத்தின் செலவினத்தை சமாளிக்க ஒத்துழைக்காததால் ஹர்சா சிங் மலேசியாவுக்கு குடியேறினார். அங்கிருந்தபடி தமது குடும்பத்துக்கு வருவாய் ஈட்டினார். பின்னர் தாயகம் திரும்பி ஒரு டென்ட் ஹவுஸ் தொழிலை தொடங்கினார். அந்த தொழிலில் தந்தைக்கு உதவியாக இருந்தார் சரண்ஜித் சிங். அவரை அங்கிருந்தவர்கள் டென்ட் பாய் என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர். அந்த அடையாளத்துடன் அரசியலுக்குள் நுழைந்த அவர் கவுன்சிலர் ஆக மக்கள் மன்றத்தில் பணியைத் தொடங்கினார்.

சரண்ஜித் சிங் கவுன்சிலர் பதவியில் மூன்று முறை இருந்திருக்கிறார். அவர் காரர் முனிசிபல் கவுன்சில் தலைவராகவும் இருந்திருக்கிறார். 2007இல் அவர் முதல் முறையாக மாநில சட்டப்பேரவைக்கு தேர்வானார். அப்போது முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார்.

தொடக்கத்தில் அமரிந்தர் சிங் ஆரவாளராக இருந்த இவர், சில ஆண்டுகளுக்குப் பிறகு அமரிந்தர் சிங்குக்கு எதிராக திரும்பிய அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேர்ந்து கொண்டார். காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் ஆதரவாளராகவும் இவர் பஞ்சாப் காங்கிரஸ் அரசியலில் அறியப்படுகிறார்.

சர்ச்சை புகாரில் சரண்ஜித் சிங்

2018இல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், அமைச்சர் சரண்ஜித் சிங் தனக்கு விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக குற்றம்சாட்டினார். அந்த நேரத்தில் #metoo இயக்கம் இந்தியாவில் தீவிரமாக இருந்தது. ஆனால், அந்த ஐஏஎஸ் அதிகாரி சரண்ஜித் சிங்குக்கு எதிராக எழுத்துபூர்வ புகாரை தெரிவிக்கவில்லை. அத்துடன் அந்த பிரச்னை முடிவுக்கு வந்ததாக அப்போதைய முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்தார். ஆனால், இந்த ஆண்டு மே மாதம், அதே பெண் அதிகாரியின் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பஞ்சாப் மகளிர் ஆணையம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, பழைய விவகாரம் சூடுபிடித்து பின்பு பரபரப்பு குறைந்து போனது.

https://www.bbc.com/tamil/india-58616800

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.