Jump to content

தேசியவாதத்தின் பிரச்சினைகள் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசியவாதத்தின் பிரச்சினைகள் என்ன?

spacer.png

ராஜன் குறை 

திராவிட இயக்கம் (திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்), அதிலும் குறிப்பாக பெரியாரும் அண்ணாவும் தமிழ் தேசியத்தை வளர விடாமல் செய்து விட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு மீண்டும், மீண்டும் எழுகிறது. திராவிட இயக்கம் ஜாதீய பண்பாட்டை ஆரிய பார்ப்பனீய பண்பாடாக வரையறுத்து, அதற்கு மாற்றாக திராவிட பண்பாட்டு அடையாளத்தை வலியுறுத்தியது. அது தமிழ்மொழி அடையாளத்தை மறுக்கவில்லை. திராவிட பண்பாட்டு அடையாளம், தமிழ் அடையாளம் இரண்டையும் இணைத்தது.

வெறும் மொழி அடையாளம், அதன் அடிப்படையிலான தேசியத்தை அது கட்டமைக்க நினைக்கவில்லை. அது இந்திய தேசியத்தின் ஆரிய பண்பாட்டு, ஜாதீய அடிப்படையை எதிர்த்தது; ஆனால், ஒரு தேசியத்திற்கு மாற்றாக மற்றொரு தேசியத்தை உருவாக்காமல் சமூக நீதியை, மக்கள் தொகுதிகளின் உரிமைகளை. சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தியது. மக்கள் நலனை, சமத்துவத்தை, சமூக நீதியை முதன்மைப்படுத்திய திராவிட இயக்கம் வெறும் மொழி அடையாள தேசிய சொல்லாடலாக சுருங்க விரும்பவில்லை. காரணம் தமிழ் மொழியிலும் ஆரியம் கலந்துவிட்டதுதான். தமிழ் தேசியத்தில் பிரச்சினை தமிழ் அடையாளமல்ல; பிரச்சினை தேசியம் என்ற சொல்லாடல்தான்.

தேசியத்தின் பிரச்சினை என்னவென்று புரிய ஒன்றைக் கவனித்தால் போதும். திராவிட இயக்க கருத்தியலாளர்கள் “திராவிடரா? தமிழரா?” என்று கருத்தரங்கம் நடத்தி ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க சொல்வதில்லை. அவர்கள் இரண்டு அடையாளங்களையும் சேர்த்தே பேசுகிறார்கள். ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாளங்கள் இருப்பதை ஏற்கிறார்கள். ஆனால், தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள் தமிழ் அடையாளம் மட்டுமே ஒற்றை அடையாளமாக இருக்க வேண்டும், திராவிட அடையாளம் கூடவே கூடாது என்று வலியுறுத்துகிறார்கள். இதன் மூலம் பிற திராவிட மொழி பேசியவர்களின் தமிழ் பேசும் வம்சாவழியினர் தமிழர்கள் இல்லை என்ற பிறப்படையாள அரசியல் விஷ விதையை, பாசிச விஷச் செடியை நடுகிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் பேசும் பெண்ணுக்கும், ஜமைக்காவில் பிறந்த கறுப்பின ஆணுக்கும் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக விளங்கும் நாளில் இவர்களுடைய குறுகிய அடையாளவாதம் அதிர்ச்சியளிக்கிறது. அதுதான் உலகம் முழுவதும் தேசியம் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் சிக்கல். அமெரிக்க தேசியத்தையும் டொனால்டு டிரம்ப் நிறவெறி ஆதரவாளர்கள் கைப்பற்ற துடிக்கிறார்கள்.

இப்படி கூறும்போது இளைஞர்கள் மனதில் திகைப்பு ஏற்படுகிறது. தேசியம் பேசி, சுதந்திரமான தேசிய அரசை, இறையாண்மையை வென்றால்தானே மக்கள் அவர்களுடைய வரலாற்றை அவர்களே தீர்மானிக்க முடியும், இதில் என்ன தவறு என்று நினைக்கிறார்கள். தேசிய விடுதலைக் கதைகளையெல்லாம் வீர விடுதலைக் கதைகளாகவே அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். பிரபுகளிடமிருந்தும், மன்னர்களிடமிருந்தும், மதகுருமார்களிடமிருந்தும் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பிய புதிய முதலீட்டிய சக்திகள் நிகழ்த்திய உலகளாவிய பொம்மலாட்டம்தான் தேசிய அரசுகளின் உருவாக்கம் என்றால் அதை புரிந்துகொள்ள கடினமாகத்தான் இருக்கும்.

ஆனால், அந்தப் பொம்மலாட்டத்துக்கு மற்றொரு எதிர்பாராத பக்க விளைவு ஏற்பட்டது. அது என்னவென்றால் மக்கள் தொகுதிகள் அவர்கள் அரசியல் ஆற்றலை உணர்ந்ததும், அவர்களிடையே நிலவிய முரண்கள் குறித்து தன்னுணர்வு பெற்றதும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களை கனவாக சூல்கொண்டதும், பொதுவுடைமை, சோஷலிஸம் ஆகிய நடைமுறைகளை முயற்சி செய்ததும்தான் நல்விளைவுகள். பொதுவுடமை இயக்கம் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்றுதான் கூறியது. ஆனால் ரஷ்யாவிலும், சீனாவிலும் தேசிய அரசியலில் சிக்கிக்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றிலிருந்து பாடம் கற்காமல் நாம் எதிர்கால அரசியலைச் சிந்திக்க முடியாது. முற்போக்கு அரசியலின் முக்கிய கேள்வி மக்களிடம் எப்படி அதிகாரத்தைக் கொண்டு சேர்ப்பது என்பதாகத்தானே இருக்க முடியும். அதற்கான வழி நிச்சயம் தேசியம் அல்ல. அது மக்களை பிரித்தாளும் ஆதிக்க சக்திகளுக்கே துணைபுரியும்.

தேசியத்தால் தேசங்களை கட்டமைக்க இயல்கிறதா? 

தேசம் (Nation) என்ற ஒன்றை கட்டமைக்கும் சொல்லாடலை தேசியம் என்றோ தேசியவாதம் (Nationalism) என்றோ குறிப்பிடுகிறோம். அடிப்படையில் தேசியத்தின் பணி ஒரு மக்கள் தொகுதியை வரையறை செய்து இவர்கள் எல்லாம் ஒரு தேசம் என்பதற்கான பொதுப் பண்புகள் கொண்டவர்கள் என்று கூற வேண்டும் என்பதுதான். அதனுடன் ஒரு நிலப்பரப்பையும் அறுதியிட்டு அதன் எல்லைகளை உருவாக்கி அந்த நிலப்பகுதி தேசத்தின் பரப்பு (Territory) என்று கூற வேண்டும். இந்த தேசம் என்ற கருத்தாக்கமும், அதைக் கட்டமைக்கும் தேசியம் என்ற சொல்லாடலும் நவீன காலத்தில், அதாவது பதினேழாம் நூற்றாண்டு, பதினெட்டாம் நூற்றாண்டில் மெள்ள, மெள்ள உருவாகி பத்தொன்பதாம் நூற்றாண்டில், இருபதாம் நூற்றாண்டில் முழுமையடைந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி நவீன காலத்தில் உருவான எல்லா தேசங்களும் தங்களுக்கு பண்டைய வரலாறு உண்டு என்றும், நாங்கள் தொன்மையான தேசம் என்றும் கூறிக்கொள்வதுதான். அதாவது தேசங்கள் என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டு சொல்லாடலில் உருவானாலும் அதற்கு முந்தைய அதன் எல்லைகளுக்கு உட்பட்ட எல்லா வரலாறும் தன்னுடைய வரலாறு என்று கூறிக்கொள்ளும்.

இப்படி உருவான தேசிய சொல்லாடல்களும், தேசங்களும் தொடர்ந்து பலவிதமான சிக்கல்களுக்கும் உள்முரண்களுக்கும் ஆட்பட்டே வருகின்றன. அதற்கு ஒரு முக்கிய காரணம் இந்த தேசிய சொல்லாடல் சமூகத்தின் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்படுவதுதான். அது உழைக்கும் மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு சமத்துவத்தை வழங்காததால், அவர்களின் அதிருப்தி தொடர்ந்து தேசிய சொல்லாடலை கேள்விக்கு உள்ளாக்கியே வருகிறது.

spacer.png

இதற்கு நல்ல உதாரணம் இத்தாலி. இத்தாலியின் இன்றைய மக்கள் தொகை தமிழகத்தைவிட குறைவானது; ஆறேகால் கோடி. இத்தாலியில் பண்டைய காலத்தில் ரோமப்பேரரசு உருவானது; உலக வரலாற்றில் அது முக்கிய பங்காற்றியது. ரோமப் பேரரசு வீழ்ந்த பிறகு, அதனருகே உருவான கிறிஸ்துவ மதத்தின் தலைமைப் பீடமான வாடிகன் ஐரோப்பிய அரசியலில் முக்கிய பங்காற்றி வந்தது. வாடிகனுக்கு வெளியே இத்தாலியில் நகர அரசுகளே வெகுகாலமாக கோலோச்சிவந்தன. இந்த நகர அரசுகளுக்குள் ஓயாத போர்கள் நிகழ்ந்து வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான், 1861ஆம் ஆண்டு, இத்தாலியின் அனைத்து பகுதிகளும் இணைக்கப்பட்டு இத்தாலி ஒரே தேசமென கட்டமைக்கப்பட்டது. இதை புத்தெழுச்சி (Risorgimento) என்று உணர்ச்சிகரமாக குறிப்பிடுவார்கள். மாஜினி, கரிபால்டி போன்றவர்கள் இதன் முக்கிய உந்துவிசையாக இருந்தவர்கள். அதனால் வரலாற்று நாயகர்களாக சித்திரிக்கப்படுபவர்கள். அப்படி இத்தாலி ஒன்றுபட்ட ஒரு நாடாக மாறினாலும் தொழிலும் வர்த்தகமும் செழித்த நகரங்களைக் கொண்ட வடக்கு இத்தாலியும், பண்டைய பெருமையும் விவசாய சமூகங்களும் கொண்ட தெற்கு இத்தாலியும் பல விதங்களிலும் வேறுபட்டு நின்றன. வர்க்க முரண்கள் கூர்மையாக இருந்தன.

அப்படி பல உள் முரண்பாடுகளைக் கொண்ட தேசம் தவிர்க்கவியலாமல் முசோலினி தலைமையில் பாசிச அரசை உருவாக்கியது. பாசிசம் என்றால் கட்டுவது; Fasciare என்ற வினைச்சொல்லுக்கு “சேர்த்துக் கட்டு” என்று பொருள். உதிரியான பொருட்களை கயிற்றால் கட்டுவது போல எல்லா மக்களையும் சேர்த்துக் கட்டும் கண்கட்டு வித்தை. முசோலினியால் தொழிலாளர்களை அமைப்பாக்கும், வர்க்க முரண் பேசும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப் பட்டார்கள். அந்தோனியோ கிராம்சி சிறையிலடைக்கப்பட்டு அதில் நோயுற்று இறந்ததும், அவர் சிறையில் ரகசியமாக எழுதிய குறிப்புகள் இன்று நவமார்க்சீய மூலாதாரங்களாக விளங்குவதும் வரலாறு.

இரண்டாம் உலகப் போரில் பாசிசம் வீழ்ந்த பிறகு இத்தாலியில் ஜனநாயகக் குடியரசு அமைந்தாலும், தொடர்ந்து அதன் பல்வேறு பிரதேச அடையாளங்கள் உயிர்பெற்ற வண்ணம்தான் இருந்தன. வடக்கு இத்தாலி தனி நாடாக வேண்டும், தெற்கு இத்தாலியின் சுமை அதற்கு தேவையில்லை என்று கூறும் Lega Nord என்ற வலதுசாரி அமைப்பு 1991ஆம் தோன்றியது. அது பல வடிவமெடுத்து இன்றும் கூட்டாட்சி அமைப்பை வலியுறுத்தும் பிரதேச அமைப்பு கட்சிகளுடன் சேர்ந்து இயங்கி வருகிறது. மற்றொருபுறம் இத்தாலி இப்போது, ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டாட்சி வடிவத்தின் பகுதியாகவும் இருக்கிறது. சுயாட்சி கோரும் பிரதேசங்கள், ஐரோப்பிய கூட்டாட்சி ஆகிய இரண்டுக்கு நடுவே இத்தாலிய தேசிய அரசு பெருமுதலீட்டிய கைப்பாவையாக இயங்கி வருகிறது.

இத்தாலியின் இருநூறு ஆண்டு தேச உருவாக்க வரலாற்றை ஆழ்ந்து படித்தால், நாம் ஒன்றை புரிந்துகொள்ளலாம். தேசியம் பாசிசத்தை உருவாக்கும் என்பது மட்டும் பிரச்சினையல்ல. பாசிசத்தாலும் தேசியத்தை நிலைநிறுத்த முடியாது என்பதுதான் பிரச்சினை. இதற்கு காரணம் தேசியம் என்ற சொல்லாடலே உள்ளீடற்ற போலித்தனமான சொல்லாடல் என்பதுதான். சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி ஆகிய லட்சியங்கள் போல அல்லாமல் செயற்கையான, பகுத்தறிவற்ற ஓர் உணர்ச்சியை தேசப்பற்று என்ற பெயரில் தோற்றுவிப்பதால் அதனால் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க முடிவதில்லை. தேசிய சொல்லாடலின் சில முக்கிய பிரச்சினைகளைப் பார்ப்போம்.

யாரை சேர்ப்பது, யாரை விலக்குவது? 

தேசிய சொல்லாடலின் முக்கிய பணியே இவர் நம்மவர், இவர் நம்ம ஆளில்லை என்று விலக்குவதுதான். கிட்டத்தட்ட ஜாதீயம் போன்றதுதான் இது. பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. அப்படி செய்த பிறகு ஒரு லட்சிய தேசிய மாதிரியும் உருவாகும். அதற்கு யார் அதிகம் பொருந்திப் போகிறார்கள், யார் குறைவாகப் பொருந்திப் போகிறார்கள் என்பதன் அடிப்படையில் தர வேறுபாடு செய்யப்படும். இந்த தர வேறுபாட்டின் அடிப்படையில் ஆதிக்க சக்திகள் உருவாகும். ஜெர்மானீய புரொடெஸ்டண்ட் கிறிஸ்துவ தேசியம் ஹிட்லர் கையில் போன பிறகு அது ஆரிய இன தேசியமானது. மக்கள் உடற்கூற்றின் அடிப்படையில் அதிக ஆரிய அம்சம் கொண்டவர்களாக, குறைந்த ஆரிய அம்சம் கொண்டவர்களாகப் பிரிக்கப்பட்டார்கள். யூதர்கள் அந்நியர்களாக, எதிரிகளாக கட்டமைக்கப்பட்டு கும்பல், கும்பலாக கொன்றொழிக்கப்பட்டார்கள்.

பெரும்பாலான தேசியங்கள் ஒற்றை அடையாள அடிப்படையிலேயே கட்டமைக்கப்படும். பிற அடையாளம் கொண்டவர்கள் ஒருவிதமான இரண்டாம் நிலையை ஏற்க வேண்டி வலியுறுத்தும்; அல்லது அவர்களை வெளியேற்றும். சிங்கள பேரினவாத தேசியம் ஈழத் தமிழர்களை இரண்டாம் நிலை குடிமக்கள் ஆக்கியது என்றால், ஈழத்தமிழ் தேசியம் இஸ்லாமியர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது. ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்படும் தேசியம் என எல்லா தேசியங்களுமே அடையாள விலக்கங்களைச் செய்வது உலகெங்கும் நிகழ்கிறது. பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகள் கண்ணில் ரத்தக் கண்ணீரை வரவழைக்கும். எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.

spacer.png

இந்திய தேசியத்தின் கதை 

இந்திய தேசியம் சற்றே வித்தியாசமானது. காலனீய ஆட்சியில் 1858ஆம் ஆண்டு முதன்முறையாக இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி ஒற்றை ஆட்சியின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் அரசி விக்டோரியா மகாராணியே அந்த புதிய ஒருங்கிணைந்த ஆட்சிப் பிரதேசத்தின் முதல் அரசியாவார். அப்போது உருவான இந்திய குடிமக்கள் என்ற புதிய கருத்தாக்கத்தின் அடிப்படையில், பல்வேறு பிரதேசங்களில் வாழும், பல மொழிகள் பேசும், பல பண்பாடுகளையும், வழிபாட்டு முறைகளையும் கொண்ட மக்கள் எல்லோரையும் உள்ளடக்கிய இந்திய தேசம் என்ற சொல்லாடல் உருவாகத் தொடங்கியது. இந்திய தேசியம் உலகின் பல தேசியங்களைப் போல மேட்டுக்குடியினரின், ஆதிக்க சக்திகளின் வன்முறை ஆற்றல், பேரம் செய்யும் ஆற்றல் ஆகியவற்றின் மூலமே இயங்கியிருந்தால் பெரிய வித்தியாசம் நிகழ்ந்திருக்காது. ஆனால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற ஓர் அதிசய மனிதர் இந்திய விடுதலை இயக்கத்தை வெகுமக்கள் இயக்கமாக மாற்றிக்காட்டினார். தேச விடுதலைப் போரில் மக்களின் பங்கேற்பு என்பது, சுதந்திரக் குடியரசின் மக்களாட்சியில் வெகுமக்கள் பங்கேற்புக்கு வழி வகுத்தது. சோஷலிசம், மதச்சார்பின்மை, பகுத்தறிவு ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றது மக்களாட்சி கால்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதை உறுதிப்படுத்தும் அரசியல் நிர்ணய சட்டத்தை அனைத்து முரண்பாடுகளையும் சமாளித்து பெருமளவு முற்போக்குத் தன்மை கொண்டதாக பாபா சாகேப் அம்பேத்கர் வடிவமைத்ததும் மிக முக்கியமான அடித்தளமாக மாறியது.

ஆனாலும் மக்கள் நலனுக்கும், முதலீட்டிய நலனுக்குமான முரணை காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து சமன்செய்ய முடியவில்லை. சோவியத் யூனியன் 1991ஆம் ஆண்டு சிதறுண்டதும், ராஜீவ் காந்தி கொலையுண்டதும் சேர்ந்து, நரசிம்ம ராவின் ஆட்சியில் இந்தியா உலக முதலீட்டிய கட்டமைப்புக்கு ஆட்பட்டது. இதனால் காங்கிரஸ் பலவீனமடைந்தது. ஒருபுறம் சமூக நீதி அரசியலும், கூட்டாட்சி அரசியலும் வலுவடைந்தன. இதற்கு முரணாக இஸ்லாமியர்களை அந்நியர்களாக, எதிரிகளாகக் கட்டமைக்கும் இந்துத்துவ பாசிசம் வலுவடைந்தது. தங்களுக்கு சாதகமான முதலீட்டிய ஆதரவு தேசியம் வலுவிழக்கும்போது முதலீட்டிய சக்திகள் பாசிசத்தை ஆதரிப்பது என்பது பழைய சூத்திரம்தான். இதற்கு உலக அளவில் உருவான இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாதப் போக்குகளும் துணைபுரிந்தன. இந்துத்துவ பாசிசத்தின் பிடியிலிருந்து தப்பித்து உண்மையான கூட்டாட்சியை, மக்களாட்சியை, அதிகாரப் பரவலை இந்தியா கண்டடையுமா என்பதே இன்றைய நிலையில் முக்கிய கேள்வி.

அரசியல் தீர்வு என்பது என்ன? 

அனைவருக்குமான விடுதலை அரசியல்; சுதந்திரம், சமத்துவம், சகோரித்துவம் ஆகிய லட்சியங்கள் போன்றவற்றுக்கு மக்களைப் பயிற்றுவிப்பதுதான் தீர்வு. ஓர் அடையாளத்தை கட்டமைத்து அனைவரையும் திரட்டி, மாற்று அடையாளத்தை எதிரியாக்கி அதிகாரத்தைக் குவிப்பது என்பது விடுதலை அரசியல் அல்ல. திராவிட இயக்கம் பார்ப்பனீயத்தை எதிர்த்ததே தவிர, பார்ப்பன சமூகத்தின் ஏகபோக அதிகாரத்தை எதிர்த்ததே தவிர, பார்ப்பன அடையாளத்தை எதிர்க்கவில்லை. அதனால்தான் திராவிட இயக்கம் முற்போக்கான சமூக நீதி இயக்கமாக விளங்குகிறது. இரண்டு அற்புதமான தமிழ் வாக்கியங்களை அரசியலின் அடிப்படையாக திராவிட இயக்க சிந்தனை உலகுக்கு வழங்குகிறது. அது “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்புநெறியும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்புநெறியும் ஆகும்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
 

https://minnambalam.com/politics/2021/09/20/9/problems-in-nationalism

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.