Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தலைமைகளும் தாழ்வுச்சிக்கலும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

தலைமைகளும் தாழ்வுச்சிக்கலும்

என்.கே.அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

உத்தியோகபூர்வமான நிலைமையைப் பொறுத்தவரையில் நாடானது முழு முடக்கத்தில் இருக்கிறது. இதற்கு அத்தியாவசிய சேவைகள் மட்டும் விதிவிலக்கு. ஆனால் வீதிகளில் வாகனங்கள் அதிகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. சில முக்கிய வீதிச் சந்திகளில் வாகன நெரிசலையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இவையெல்லாம் அத்தியாவசிய சேவைக்கானவையா என்ற கேள்வி வீட்டுக்குள் ஒரு மாதகாலத்தைக் கடந்தும் முடங்கியிருக்கும் சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு எழும் கேள்விகள்.

மறுபுறத்தில், இராஜங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தே, சிறைக்கு சென்று கைதிகளை மிரட்டியதாக செய்திகள் தெரிவித்தன, அதன்பின்னர் அவர் பதவியும் விலகினார்.

இன்னொரு புறத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, அறுகம்பே கடலில் விளையாடும் புகைப்படங்களை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிந்துள்ளார். ஜனாதிபதி ஜ.நா. பொதுச்சபைக் கூட்டத்தைச் சாட்டி அமெரிக்கா சென்றுவிட்டார், பிரதமர் ராஜபக்‌ஷ யாருமறியா ஒரு கூட்டத்தில் கலந்து பேசுவதைச் சாட்டி தனது பாரியார், இரண்டாவது மகன், மருமகள், வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூடன் இத்தாலி சென்று வந்துவிட்டார்.

இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ரஷ்யாவில் அங்கு நடக்கும் தேர்தல்களைக் கண்காணிக்கும் சாட்டில் ரஷ்யா சென்று வந்துவிட்டார். இதையெல்லாம் பார்க்கும் சாதாரண இலங்கைக் குடிமகன், தான் மட்டும் முடக்கப்பட்டிருப்பதை எண்ணிக் கவலை கொள்கிறான்.

அந்நியச் செலாவணி தட்டுப்பாடு என்கிறார்கள். உண்மை. அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க, இறக்குமதியைக் கட்டுப்படுத்துகிறார்கள். ஓரளவு நியாயமுண்டு. இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, மக்கள் ஒருவேளை உணவைத் தியாகம் செய்ய வேண்டுமென்று ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர் கருத்து வெளியிடுகிறார்.

அது சரி. ஆனால் என்னத்தை வெட்டி விழுத்துவதற்கான அந்நியச் செலாவணியைச் செலவு செய்து பிரதமர் இத்தாலி சென்றார்? ஜனாதிபதி அமெரிக்கா சென்றார்? என்று ஒருவேளை உணவைத் தியாகம் செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்ட பொதுமகன் ஏக்கத்தோடு கேள்வி கேட்கிறான்.

பிரதமர் இத்தாலி போனதால், இலங்கைக்கு ஏதேனும் நன்மை விளைந்ததா? எதுவுமில்லை. ஆகவே பொதுமகனைப் பொறுத்தவரையில் இது பொதுப்பணத்தில் சென்ற உல்லாசப் பயணமே!

மறுபுறத்தில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய, ஜ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். கொவிட்-19 ஒருபுறம், பொருளாதார நெருக்கடி மறுபுறம், நாடோ முடக்கத்தில், அத்தியாவசியப் பொருட்கள் பல சந்தையில் கிடைப்பதில் சிக்கல் நிலை என்று நாடு அல்லோலகல்லோலப்படுகையில் இந்த அமெரிக்கப் பயணம் தேவைதானா? இங்கிருந்து சாதிக்க முடியாதது எதை அங்கே போய் சாதித்தார்?

இவையும் பால்மா கிடைக்காமல், நல்ல அரிசி கிடைக்காமல், மற்றைய பொருட்களும் விலைகூடியுள்ள நிலையில், செய்வதறியாது நாட்டின் முடக்கத்தினுள் முடக்கப்பட்டுள்ள சாதாரண பொதுமகனுக்கு எழும் கேள்விகள்.

இந்த நிலைமையில், அமெரிக்கா போன ஜனாதிபதி, அங்கே போய் என்ன பேசினார்? இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகள், பெருந்தொற்றிலிருந்து விடுபட உதவும் வகையிலான சர்வதேசப் பொறிமுறைகள் அவசியம் என்று கேட்டுக்கொண்டார்.

பொருளாதார உதவிக்கு ‘சர்வதேசப் பொறிமுறை’ தேவையாம். மனித உரிமைகள், நிலைமாறுகால நீதி ஆகியவற்றிற்கு கசப்பான ‘சர்வதேசப் பொறிமுறை’, பொருளாதார உதவிக்கு மட்டும் தேவையாம். சுருக்கமாகச் சொன்னால், எங்களுக்கு காசு தாறதுக்கு சர்வதேசப் பொறிமுறை தேவை; ஆனால், எங்களைக் கேள்வி கேட்பதற்கு, எங்களைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சர்வதேசப் பொறிமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆங்கிலத்தில் இதனை hypocrisy என்று சொல்வார்கள். தமிழில் இதற்கு நிகரான நல்ல சொல் உருவாக்கப்பட வேண்டும்.

பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையை சந்திக்கும் நாடுகளுக்கு உதவவே, ஏலவே சர்வதேச நாணய நிதியம் என்ற அமைப்பு உண்டு. இலங்கையும் அவர்களின் உதவியை நாடலாம். ஆனால், அவர்கள் சும்மா காசைத் தூக்கித் தர மாட்டார்கள்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு திட்டத்தை முன்வைப்பார்கள், அதனை நடைமுறைப்படுத்த சில நிபந்தனைகளை முன்வைப்பார்கள். காசு வேண்டும்; நிபந்தனைகள் வேண்டாம் என்ற அணுகுமுறையின் விளைவாகத்தான், இந்த அரசாங்கம் விடாப்பிடியாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர்த்துக்கொண்டு, மத்திய வங்கியை பண நோட்டு அச்சிடும் அச்சகமாக மாற்றிக்கொண்டு வருகிறது. 

மறுபறத்தில், அமெரிக்க விஜயத்தின்போது, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் இனப்பிரச்சினையை உள்ளப்பொறிமுறை மூலம் தீர்ப்பது தொடர்பில் ‘தமிழ் டயஸ்போறா’வுடன் (புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன்) பேசத்தயார் என்று ஜனாதிபதி கூறியிருப்பதாக சில செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. நல்ல மாற்றம்!

ஆனால், முதலில் இந்நாட்டு தமிழ் மக்கள், தமது பிரதிநிதிகளாத் தேர்ந்தெடுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திக்க வேண்டும். ஏற்கெனவே நடக்கவிருந்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்த சந்திப்பை, ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது. அது இன்னும் நடந்தபாடில்லை. முதலில் ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கட்டும். பிறகு, புலம்பெயர்ந்தவர்களைச் சந்திக்கலாம்.

மேலும், ஐ.நா செயலாளர் நாயகத்திடம், “விடுதலைப் புலிகளோடு தொடர்பு பட்டவர்கள் என்று, சிறையில்  நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போருக்கு பொதுமன்னிப்பு வழங்க நான் தயங்கமாட்டேன்” என்று ஜனாதிபதி கூறியிருப்பதாக சில செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், பொதுமன்னிப்பு என்பதெல்லாம் தேவையற்ற கருத்து. நீதிமன்றம் குற்றவாளிகளாகத் தீர்மானித்து தண்டனை வழங்கப்பட்டவர்களுக்குத் தான் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

என்ன குற்றம் செய்தார்கள் என்று குற்றப்பத்திரமே சமர்ப்பிக்கப்படாத, நீதி விசாரணை நடக்காத, நீதிமன்றம் குற்றவாளிகளாகக் காணாதவர்களுக்கு அவர்கள் என்ன குற்றமிழைத்தார்கள் என்பதற்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்? 

அரசினால், பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் என்ற கொடுஞ்சட்டத்தைப் பயன்படுத்தி அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். ஒன்றில் அவர்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிப் பொறிமுறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட வேண்டும், அல்லது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். இங்கு பொதுமன்னிப்பு என்று விடயம் எங்கே வருகிறது?

image_4ab5b002a1.jpg

இத்தனையையும் சொல்லிக்கொண்டு, நாடு முடக்கத்தில் இருக்கையில்,  யாழ்ப்பாணம் நல்லூரில் நினைவேந்தலைச் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை பொலிஸாரைக் கொண்டு கைது செய்து, வலுக்கட்டாயமாக இழுத்து வாகத்தில் ஏற்றி, பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்திருக்கிறது இந்த அரசாங்கம். கேட்டால், தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறினார் என்கிறார்கள்.

அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், புடைசூழ எங்கும் பயணிக்கலாம்; விரும்பினால் கடலில் இறங்கி, நீர் விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்; வௌிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம். ஆனால், அந்த நடவடிக்கைகளின் போதெல்லாம் மீறப்படாத தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள், ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் நினைவேந்தல் செய்தால் மட்டும் மீறப்படுகிறது என்ற அபத்தம், இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. 

முதலாவது, இந்த அரசாங்கமும் அதன் தலைமைகளும் மிகுந்த தாழ்வுச்சிக்கல் மனநிலையைக் கொண்டுள்ளார்கள்.

இரண்டாவது, அந்தச் தாழ்வுச்சிக்கலால், மிகுந்த பாதுகாப்பின்மை உணர்வைக் கொண்டுள்ளார்கள். இதன் விளைவாக, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கும் செயல்களை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.

image_3dfb811195.jpg

 

உண்மையில், இவர்கள் செய்யும் காரியங்கள், இவர்கள் விரும்பும் விளைவுகளுக்கு முற்றிலும் மாறான விளைவுகளையே எற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவுகூட இவர்களுக்குக் கிடையாது.

இவர்கள் எதுவும் செய்யாமல் விட்டிருந்தால், கஜேந்திரன் நினைவேந்தல் செய்தது யாருக்குமே தெரியாது போயிருக்கும். அந்த நிலையில், அப்படி ஒரு நினைவேந்தலை தொடர்ந்து செய்வதற்கான அரசியல் தேவை கூட கஜேந்திரனுக்கு ஏற்பட்டிராது.

ஆனால், இவர்களது இந்த நடவடிக்கை, தமிழ் மக்களிடம் இந்த நினைவேந்தலின் முக்கியத்துவத்தை பசுமரத்தாணிபோல அறுதியாகப் பதியவைக்கிறது. இது இவர்களுக்குப் புரியாது. ஏனென்றால், மூளையை ஆண்டவன் எல்லாருக்கும் கொடுத்திருக்கிறான், ஆனால் அதனுள் உள்ள அறிவை அப்படிக் கொடுப்பதில்லை.

ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள், இதுபோன்ற நினைவஞ்சலிகளைத் தடுக்காததன் காரணம் இதுதான். அதைத் தடுக்காதுவிட்டால், அதன் அரசியல் முக்கியத்துவம் குறைந்துவிடும். காலவோட்டத்தில் அது குறைந்த, மறக்கப்பட்டுவிடும்.

தாழ்வுச் சிக்கல் என்பது, தலைமைத்துவத்துக்கு முற்றிலும் முரணான குணம். தாழ்வவுச்சிக்கலில் உழலும் தலைமைகளைக் கொண்ட மக்கள் கூட்டம், என்றுமே உய்வடையப் போவதில்லை.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தலைமைகளும்-தாழ்வுச்சிக்கலும்/91-281801

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By கிருபன்
   வடக்கின் அபிவிருத்தி
   என். கே. அஷோக்பரன்
   Twitter: @nkashokbharan
    
   அரச பாதீடு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். “முப்பத்தைந்து வருடகாலப் போரால் அழிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களை, நாட்டின் ஏனைய பகுதி மக்களுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுவதும் எதுவித உத்தரவாதமோ விசேட கவனிப்போ இன்றி, நாட்டின் ஏனைய பகுதியினருடன் அவர்களை போட்டியிட நிர்ப்பந்திப்பதும்  அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொடர்ச்சியாகவே கருதப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
   அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. மிக நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமொன்றை, எதுவிதமாக விசேட நிவாரண அல்லது உதவி ஏற்பாடுகளுமின்றி, மற்றையவர்களோடு போட்டியிடச் சொல்வது நியாயமாகாது.
   மறுபுறத்தில், 2009இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து நாம் அவதானித்தால், கணிசமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் வடக்கில் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், வடக்கின் எதிர்காலத்தை வளமாக்கும் விதைகள் எதுவும் இதுவரை விதைக்கப்படவில்லை.
   அபிவிருத்தியின் அடிப்படை, பொருளாதார வளர்ச்சி. குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் எதுவும் வடக்கில் முன்னெடுக்கப்படவில்லை.
   உட்கட்டமைப்பு வசதிகள் என்பவை, வடக்கை நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைக்கும் வீதிகள், ரயில்ப் பாதையமைப்பு என்பதைத்தாண்டி, பெரும் முன்னேற்றம் காணவில்லை. வீடமைப்பு என்பது ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டாலும், அதனைத்தாண்டிய வாழ்வாதார வளர்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை முன்னெடுக்கப்படாமையால், மக்கள் வறுமையில் உழலவேண்டிய சூழலே காணப்படுகிறது.
   இவையெல்லாம், வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுபவை, வெறும் கண்துடைப்புக்கள்தான் என்பதை கோடிகாட்டி நிற்பதோடு, நீடித்து நிலைக்கத்தக்க அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான எந்த முன்னெடுப்புகளும், திட்டங்களும், ஏன் சிந்தனைகள் கூட இருப்பதாகத் தெரியவில்லை.
    விதையை விதைக்கிறவன், பலவேளைகளில் விருட்சத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவதில்லை. ஆனால், அதற்காக அவன் விதைக்காமலே இருந்துவிட்டால், விருட்சங்களை எந்தத் தலைமுறையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். அபிவிருத்திக்கான விதைகளை நாம் இன்று விதைப்பதைப் பற்றிச் சிந்தித்தால்தான், நாளைய தலைமுறைக்கு அவர்கள் மகிழ்ச்சியோடு வளமாக வாழத்தக்கதொரு மண் கிடைக்கும்.
   பொருளாதாரத்தின் ஆணிவேர் உற்பத்தி. பொருட்களை உற்பத்தி செய்வதும், சேவைகளை வழங்குவதும் பொருளாதாரத்தின் அடிப்படை. உற்பத்திகள் உள்ளூர் சந்தைகளைத் தாண்டி வௌியூர் சந்தைகளைச் சென்றடைய வேண்டும். சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு, வௌிநாட்டவர்கள் வரவேண்டும். அப்போதுதான் அந்த மண்ணின் பொருளாதாரம் பெருகும்; மக்களின் வாழ்வு வளமாகும்.
   உலகத்தோடு இணையும் நவீன புள்ளி இணையம். பலமான இணைய வசதி இருக்கும் போது, நவீன கணினித் தொழில்நுட்ப சேவைகளை முழு உலகுக்கும் வழங்குவது சாத்தியமாகும். ஆனால், பொருட்களும் சேவைகளும் வழங்கப்பட, பாரம்பரிய இணைப்பு வசதிகளான துறைமுகமும் விமான நிலையமும் அவசியமாகிறது. 
   வரலாற்றை எடுத்துப் பார்த்தால், நாடோடிகளாகத் திரிந்த மனிதர்கள், ஒரேயிடத்தில் வாழத்தொடங்கியபோது, அவர்கள் நதிக்கரையோரங்களில் குடியேறினார்கள். நதிக்கரை நாகரிகங்கள் உருவாயின. நதிக்கரைகளையொட்டியே நகரங்கள் உருவாயின. சர்வதேச வணிகம் வளர்ந்தபோது, துறைமுகங்களையொட்டி  பெருநகரங்கள் உருவாகத் தொடங்கின.
   அந்நியர் வரும்வரை, இலங்கைத்  தீவில் எந்தவோர் இராச்சியத்தின் தலைநகரும் துறைமுக நகரில் அமையவில்லை. அந்நியர் வந்து, சர்வதேச வணிகம் வளர்ந்தபோது, அவர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் துறைமுக நகரங்கள் வளரத்தொடங்கின. கொழும்பு எனும் வணிகத் தலைநகரின் வரலாறும் இதைத்தான் சுட்டிக்காட்டும்.
   ஆகவே, சர்வதேச வணிக உலகின் உயிர்நாடி, துறைமுகமும் விமானநிலையமும் ஆகும். அவை உருவாகும் போது, நீண்டகாலத்தில் அந்த நகரமும் வேறு காரணங்கள் இடையீடு செய்யாத நிலையில், அந்தப் பிராந்தியமும் வளர்வதற்கான சாத்தியம் அதிகம்.
   மஹிந்த ராஜபக்‌ஷ, தனது பிறந்த மண்ணான ஹம்பாந்தோட்டையில் துறைமுகம், சர்வதேச விமானநிலையம் ஆகியவற்றை அமைத்தபோது, பலரும் ‘அங்கு எதற்கு இவை?’ என்று நகைப்பாகவே விமர்சித்தார்கள். அந்த விமர்சனத்தில், காலத்தின் தேவை சார்ந்த நியாயங்களும் இருந்தன.
   விமானங்கள் வராததால், அந்த விமான நிலையத்தை நெற்களஞ்சியமாகவும் பயன்படுத்தினார்கள் என செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஹம்பாந்தோட்டை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. கொழும்பு நிறைந்து வழியும் நிலையில், எதிர்கால முதலீடுகளுக்கான வாய்ப்பான இடமாக ஹம்பாந்தோட்டை உருவாக்கப்பட்டிருக்கிறது.
   சீனாவின் கனவுத் திட்டமான “ஒற்றைப்பட்டை ஒற்றைப்பாதை” திட்டத்தின் ஒரு புள்ளியாக ஹம்பாந்தோட்டை இருக்கிறது. அடுத்த 50 வருடங்களில் இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றாக அது மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிற்க!

   வடக்கின் அபிவிருத்தி பற்றி நீண்டகால அடிப்படையில் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றே விதைத்தால்தான் அது நாளை முளைக்கும். வடக்கின் அபிவிருத்திக்கான மூலவேர் ஏற்கெனவே அங்கு இருக்கிறது. பலாலி சர்வதேச விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டால், அது வடக்கின் அபிவிருத்திக்கு அஸ்திவாரமாக அமையும்.
   சர்வதேசத்துடன் வடக்கை இணைக்கும் புள்ளிகளாக இவை வரும்போது, வடக்கின் உற்பத்தி, சேவைத்துறைகளுக்கான முதலீகள் வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும். வடக்கின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியைப் பெருமளவுக்கு உயர்த்துகிற ஒரு முக்கிய அம்சமாக இவை அமையும்.
   பலாலி விமானநிலையம், யாழ் சர்வதேச விமான நிலையமாக பெயரளவில் அறிவிக்கப்பட்டு, ஓடுபாதையும் இந்திய உதவியுடன் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், நவீன சர்வதேச விமான நிலையமாக அது மாற, இன்னும் பலமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி அவசியமாகிறது.

   ஹம்பாந்தோட்டையைப் பொறுத்தவரையில் சீனா, அதற்கான கடனுதவியை வழங்கியிருந்தது. ஹம்பாந்தோட்டையில் சர்வதேச விமானநிலையத்தை அமைப்பதற்கு ராஜபக்‌ஷர்கள் காட்டிய அக்கறையை, யாழ்ப்பாண விமாநிலையத்தை கட்டியெழுப்புவதில் காட்டுவார்களா என்பது சந்தேகமே.
   யாழ்ப்பாண விமானநிலைய அபிவிருத்திக்கு இந்தியா கடன்கொடுக்க முன்வந்தாலும், “உதவியாகத் தருவதென்றால் பரவாயில்லை; கடனாகத் தருவதென்றால் வேண்டாம்” என்று ராஜபக்‌ஷர்கள் சொன்னால், அது அவர்கள் தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்கள் என்பதைத்தான் கோடிகாட்டிநிற்கும். 
   மறுபுறத்தில், யாழ்ப்பாண விமான நிலைய அபிவிருத்தியை இந்தியா கையேற்பது இந்திய-சீன போட்டியில் இந்தியாவுக்குச் சாதகமானதொன்றாக அமையும். நிச்சயமாக, இன்னொரு விமான நிலையத்தை இலங்கையின் வடக்கில் இந்தியாவிற்கு மிக நெருக்கமாக கைப்பற்றிக்கொள்ள சீனா ஆர்வம் காட்டும். ஆனால், அதனை அனுமதித்து, இந்தியாவை நேரடியாகப் பகைத்துக்கொள்வது இலங்கைக்கு உவப்பானதொரு முடிவாக இருக்காது.
   ஆகவே, இலங்கையும் இந்தியாவும் ‘வெற்றி-வெற்றி’ என்பதை அடைய, இந்தியா யாழ்ப்பாண விமானநிலைய அபிவிருத்திக்கான நிதியை, உதவியாக அல்லது மிக நீண்டகால வட்டியற்ற சகாயக் கடனாக, இலங்கைக்கு வழங்குவது மிகச்சிறந்த உபாயமாக அமையும்.
   காங்கேசன்துறை துறைமுகத்தின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான். சிலமாதங்கள் முன்பு இந்திய கடனுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் என்று, செய்திக் குறிப்புக்கள் தெரிவித்ததோடு, அந்தச் செய்தி அடங்கிவிட்டது.
   வடக்கில் சர்வதேச விமான நிலையமும் வணிகத் துறைமுகமும் அமைவது, வடக்கினதும் வடக்கு, கிழக்கினதும் முழு இலங்கையினதும் நீண்டகால அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதாகும். அது இந்தியாவின் போட்டி நாடுகளின் அரவணைப்பிற்குச் செல்லாமலிருப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும்  இந்திய நலன்களுக்கும் சாதாகமானதாக அமையும்.
   ஆகவே, வடக்கின் அபிவிருத்தி பற்றிப் பேசுபவர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தையும் காங்கேசன்துறை வணிகத் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வதை முன்னுரிமை அடிப்படையில் கொண்டுநகர்த்த வேண்டும். மறுபுறத்தில், அதற்கான உதவியை வழங்க இந்தியா முன்வர வேண்டும்.
   அவ்வாறு, இந்தியா அதற்கான உதவியைச் செய்யாவிட்டால், சீன உதவியுடனாவது இதனை நடத்துவது அவசியமாகிறது. இந்தத் திட்டங்கள் தொடர்பில் இந்தியாவுக்கு  நிச்சயமாக முன்னுரிமை அளிக்கலாம். அது வரலாற்று ரீதியிலான, இந்திய-இலங்கை உறவுக்கு ஏற்புடையதொன்றுதான்.
   ஆனால், தகுந்தநேரத்தில், தேவையான உதவியை இந்தியா செய்யாவிட்டால், இந்தியாவைத் தாண்டி மாற்று உதவிகளைப் பெற்றுக்கொள்ள, இலங்கை தயக்கம் காட்டக் கூடாது. 
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கின்-அபிவிருத்தி/91-285720
    
  • By கிருபன்
   மீண்டும் மீண்டும் சூடு காணும் பூனைகள்
   என்.கே. அஷோக்பரன்
   Twitter: @nkashokbharan
   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவ்வப்போது பேசுகிற விடயங்கள் சிலவேளைகளில் அர்த்தமற்றதாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் தோன்றலாம். அரசியல், சிவில் நிர்வாக அனுபவம் இன்மையின் விளைவுகளாக இவற்றைக் கொள்ளலாம். 
   அதனால்தான், விடயங்கள் சாதகமாக நடக்கும் போது, அதற்கான பெருமையை சுவீகரித்துக்கொள்வதில் அவர் காட்டும் அவசர ஆர்வம், விடயங்கள் பிழைக்கும் போது அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் இருக்கவில்லை. 
   மாறாக, விடயங்கள் பிழைக்கும் போது, அதற்கான பொறுப்பை மற்றவர்கள் மீதும், மக்கள் மீதும் சாட்டுகின்ற சிறுபிள்ளைத்தனமான அரசியல் அணுகுமுறை, அவரை அறியாமலேயே வௌிவந்திருந்தமையை அவரது பேச்சுகளிலும் நடவடிக்கைகளிலும் காணக்கூடியதாக இருக்கிறது. 
   ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அண்மையில் தன்னுடைய உரையொன்றில் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம், மிக யதார்த்தமானதாகவும் உண்மையானதாகவும் இருந்தது. கிட்டத்தட்ட தனக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு, ‘கன்னத்தைப்பொத்தி அறைந்தாற் போல’, அவர் கேட்ட கேள்வியொன்று அமைந்திருந்தது.
   அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, “ஒரு காலத்தில் விரட்டியடித்த அரசியல்வாதிகளை ஏன் தெரிவு செய்கின்றீர்கள்” என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியதோடு, “அதே நபர்களை தெரிவு செய்யாமல் புதிய நபர்களைத் தேடுமாறு” வலியுறுத்தினார். 
   ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், எதிர்க்கட்சிகள் தங்கள் செயற்பாட்டில் தோல்வியடைந்ததால்த்தான், தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஆனால், இப்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் தாம் நாட்டை ஒருபோதும் ஆளாதது போல் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார். “நானோ அல்லது எனது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களோ, உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டாலும், ஒரே நபர்களை மீண்டும் தெரிவு செய்யாதீர்கள்; புதிய நபர்களை தேடுங்கள். இந்தக் கட்டமைப்பு முறை மாற வேண்டும்” என்று கூறிய ஜனாதிபதி கோட்டாபய, “மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிய ஒரே குழுவை, மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதில் எந்தப் பயனும் இல்லை. அதை எப்படிச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், அதுதான் யதார்த்தத்தில் நடக்கிறது” என்று அங்கலாய்த்திருந்தார். 
   முத்தாய்ப்பாக, “ஒருமுறை எங்களை விரட்டியடித்தபின், மீண்டும் எங்களை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? இதன் பொருள் என்ன?” என்று கேட்டது, 2019 மற்றும் 2020இல் ராஜபக்‌ஷர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரில் பலருக்கும், 2015இல் தாம் விரட்டியடித்த ராஜபக்‌ஷர்களை ஏன் 2019-2020இல் மீண்டும் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற செருப்படிக் கேள்வியாகவே கேட்டிருக்கலாம்.
   உண்மையில், ஜனாதிபதி கோட்டாபய கேட்ட கேள்வியின் தாற்பரியம், அர்த்தம் மிக்கதே. மக்கள் ஏன் ஒரே  நபர்களுக்கு மீண்டும், மீண்டும் வாக்களிக்கிறார்கள். 2015இல் பெரும் அராஜகவாதியாக, ஊழல்வாதியாக பொதுமேடைகளில் எதிர்க்கட்சிகளினாலும் சிவில் அமைப்புகளாலும் தொழிற்சங்கங்களாலும் குற்றம்சாட்டப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 
   ஆனால், 2019இல், மஹிந்தவின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக நின்ற அவருடைய தம்பி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அமோகமாக வாக்களித்து, அவரை ஜனாதிபதியாக்கியதுடன், மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கட்சிக்கு 2020 பொதுத் தேர்தலில் அமோகமாக வாக்களித்து, பெரும் வெற்றியை மக்கள் வழங்கியிருந்தார்கள். ஒருமுறை விரட்டிவிட்ட ராஜபக்‌ஷர்களை மீண்டும் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
   முதலாவதாக, இதிலுள்ள சொல்லாடற் சிக்கலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். “மக்கள் விரட்டியடித்தார்கள்” என்று சொல்லும் போது, அது அனைத்து மக்களும் என்ற பொருளில் அணுகப்படக்கூடாது. அதன் அர்த்தம், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை; அல்லது, பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆசனங்களைப் பெறவில்லை என்பதாகும். 
   மஹிந்த ராஜபக்‌ஷ தோல்விகண்ட 2015ஆம் ஜனாதிபதி தேர்தலில் கூட, அவருக்கு 5,768,090 வாக்குகள் கிடைத்திருந்தன. இது 2005இல் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி தேர்தலில் பெற்ற 4,887,152 வாக்குளை விட, கிட்டத்தட்ட ஒன்பது  இலட்சம் வாக்குகள் அதிகமாகும். 2010இல் பெற்ற 6,015,934 வாக்குகளை விட, கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் வாக்குகள் தான் குறைவாகும். 

   2019இல் கோட்டாபய ராஜபக்‌ஷ, 6,924,255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றபோதிலும், சஜித் பிரேமதாஸ 5,564,239 வாக்குகளைப் பெற்றிருந்தார். 1994இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க 62.28% பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றமையே, இலங்கையின் ஏறத்தாழ 40 வருட நிறைவேற்று ஜனாபதி தேர்தல் வரலாற்றில் பெற்ற அதிகப் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்திலான வெற்றி ஆகும். மற்ற அனைவரது பெரும்பான்மையும் 60 சதவீதத்தை எட்டிப்பிடிக்கவில்லை. 
   யுத்த வெற்றி நாயகனாக 2010இல் களமிறங்கிய மஹிந்த ராஜபக்‌ஷகூட, 57.88 சதவீதத்தைத் தான் பெற்றுக்கொண்டிருந்தார். மேலும், அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்றவர்கள், போட்டியிட்ட கட்சிகள், அல்லது கூட்டணிகளுள்ள, அன்றைய அரசியலில் இரண்டு பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகளைச் சார்ந்தவர்களேயாவர்.
   ஆகவே, இதிலிருந்து நாம் ஊகிக்ககூடிய ஒரு விடயம் யாதெனில், இங்கு பிரதான இரண்டு கட்சிகளுக்கென அல்லது அவற்றை மையமாகக் கொண்ட கூட்டணிகளுக்கென ஒரு நிரந்தர வாக்குவங்கி இருக்கிறது. அதோடு இந்தக் கட்சிகளிலுள்ள முக்கிய தலைவர்களுக்கென ஒரு வாக்குவங்கி இருக்கிறது. இதுதான், ‘வெட்டினாலும் பச்சை; கொன்றாலும் பச்சை’; அல்லது, “நாங்கள் மஹிந்தவுக்குத்தான்” என்ற வகையறா வாக்குவங்கிகள். 
   ஒரு கட்சியைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் பலர், ஒரேயடியாக வேறொரு கட்சிக்கு மாறும் போது, அந்தப் புதிய கட்சி, பிரதான கட்சியின் இடத்தைப் பிடிப்பதோடு, அந்த வாக்கு வங்கியும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாகவே அந்த முக்கியஸ்தர்களோடு மாறியிருக்கிறதே அன்றி, இந்த இரண்டு பிரதான கட்சிகளின் வாக்குவங்கிகளும் அந்தக் கட்சியைச் சார்ந்தும், அதன் முக்கியஸ்தர்களைச் சார்ந்துமே சுழல்கிறது. 
   இந்த நிரந்தர வாக்குவங்கிகள், தாம் ஆதரிக்கும் கட்சியின் மீது அதிருப்தி அடையும் போது, அதற்கு வாக்களிக்காமல் இருக்குமேயன்றி, மற்றைய கட்சிக்கு வாக்களிக்காது. 
   இந்த நிரந்தர கட்சிசார் அல்லது தனிநபர் சார் வாக்குவங்கிகளைத் தவிர, ஊசலாடும் ஒரு தொகை வாக்குகள் இருக்கின்றன. இவைதான், 2015இல் ராஜபக்‌ஷர்கள் தோல்வியடையவும் அவர்களே மீண்டும் 2019-2020இல் ஆட்சிபீடமேறவும் காரணமானார்கள். 
   கட்சிப்பற்றோ, தனிநபர் மீதான பற்றோ அற்ற இளைய சமுதாயத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இந்த ஊசலாடும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஊசலாடும் வாக்குகளுக்குள் பெரும்பான்மை அளவுக்கு அரசியல் பிரக்ஞையும் புரிதலும் ஆழமானதாக இல்லை. 
   ஆகவே, உணர்வு, அன்றைய சந்தர்ப்ப சூழலை மட்டும் கருத்தில் கொண்டு வாக்களிக்கும் பாங்கும் தென்படுகிறது. கண்மூடித்தனமாகத் தான் ஆதரிக்கும் கட்சிக்கே வாக்களிப்பது எவ்வளவு அபத்தமோ, அதைப்போலத்தான் அரசியல் புரிதலேயின்றி, தொலைநோக்குப் பார்வையின்றி, உணர்ச்சி வசப்பட்டு வாக்களிப்பதும் ஆகும். 
   இதனால்தான், ‘இவன் சரியில்லை என்று அவனுக்கும்’, பிறகு ‘அவன் சரியில்லை என்று இவனுக்கும்’ வாக்களிக்கும் போக்கும் காணப்படுகின்றது. இந்த ஊசலாடும் வாக்குகளுள், அரசியல் புரிதலுள்ள, சிந்திக்கத் தெரிந்தவர்கள், ‘அவன்’ மற்றும் ‘இவனை’த் தாண்டி, மூன்றாவது நபர்களுக்கு வாக்களித்தாலும், அந்த மூன்றாவது நபர்களிடம் பலமான நிரந்தர வாக்கு வங்கி இல்லாமையால், அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடிவதில்லை. 
   வெற்றிபெற முடியாதவர்களுக்கு வாக்களித்து என்ன பயன் என்ற நோக்கில் கூட, அவன் மற்றும் இவனைத் தாண்டிய மூன்றாவது தெரிவை மேற்கொள்ளப் பல ஊசலாடும் வாக்காளர்களும் தயங்குகிறார்கள். அதனால் பயனில்லை என்ற எண்ணமும், பயனற்ற விடயத்துக்குத் தமது வாக்குகளை வீணடிப்பதா என்ற சிந்தனையும்தான் இதற்குக் காரணம். 
   இதனால்தான், ‘அவனும் இவனும்’ மாறி மாறி, ஆட்சியைப் பிடிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, மக்கள் மட்டும் ஒவ்வொரு தடவையும் சூடு கண்டு கொண்டே இருக்கிறார்கள். 
   இந்தச் சக்கரம் உடைக்கப்பட வேண்டுமானால், வெறுமனே ஊசலாடும் வாக்குகளின் ஆதரவை மட்டுமல்ல, பிரதான கட்சிகளின் நிரந்தர  வாக்காளர்களின் வாக்குகளையும் கவர்ந்திழுக்கக் கூடியதோர் அரசியல் இயக்கம், வலுவான தலைமையைக் கொண்டு அமையவேண்டும். இது நடக்காதவரை, ‘அவனும் இவனும்’ தான், மாறி மாறி ஆண்டு கொண்டிருப்பார்கள். அதுதான் கசப்பான யதார்த்தம்!
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மீண்டும்-மீண்டும்-சூடு-காணும்-பூனைகள்/91-285295
    
  • By கிருபன்
   ஏறும் விலை; சரியும் பொருளாதாரம்; திணறும் மக்கள்: அமைதி காக்கும் எதிர்க்கட்சி
   என்.கே.அஷோக்பரன்
   Twitter: @nkashokbharan
    
   “தன் மே தவஸ்வல காஸ் அதி நே காம உயன்னத்த காஸ் வளின் ஹொந்தட்ட தியனவனே காஸ் காஸ் நா மேக தமய் மே ஆண்டுவே பரிகம” (இப்ப இந்த நாள்களில காஸ் கிடைக்குது என்ன காஸில் தானே சமையல் நல்லா இருக்குது தானே காஸ் காஸ் இல்லை இதுதான் இந்த அரசாங்கத்தின் இயலாத்தன்மை). 
   “ஹபய் இதின் றட இல்லுவா, வெனஸ துன்னா, வெனஸ தமய் மே பேன்னே அத காஸ் டிகத் நதிவெலா தியனவா காஸ் டிக சபயன்ன பரி ஆண்டுவக் மே தென பொறொந்துவ சபயய்த நா” (ஆனால், நாட்டைக் கேட்டார்கள்; மாற்றத்தைக் கொடுத்தோம்; மாற்றம் தான் இப்ப நல்லாத் தெரியுது இன்று காஸ் கூட இல்லாமல் இருக்குது காஸ் வழங்க இயலாத அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளையா நிறைவேற்றப்போகுது). 
   “தன் கொஹொமத சபத ஆண்டுவ றது லூணு கொஹொமத பொம்பய் லூணு லங்கதி காவத அள ஏம கொஹொமத ஜீவன வியதம பொஹொம அடுத” (இப்ப எப்படி சுகமா அரசாங்கம் சின்ன வெங்காயம் எப்பிடி கிட்டடியில பொம்பே வெங்காயம் சாப்பிட்டீங்களா கிழங்கு எல்லாம் எப்பிடி வாழ்க்கைச் செலவு நல்ல குறைவா). 
   இவையெல்லாம் இன்றைய எதிர்க்கட்சியும் அதன் தலைவர்களும் இன்றைய அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. இந்த வார்த்தைகள் 2015 தோல்விக்குப் பின்னர், மீண்டும் 2019இல் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெறும் வரையான காலப்பகுதியில், வெவ்வேறு கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ உதிர்த்த வார்த்தைகளாகும். 
   அன்று சில நூறு ரூபாய்கள் காஸ் விலை கூடியதற்கே, எதிர்கட்சியில் இருந்த ராஜபக்‌ஷ்ர்களும் அவர்களது அடிப்பொடிகளும் அன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை, மேடை மேடையாக வறுத்தெடுத்தது மட்டுமல்லாமல், ஆர்ப்பாட்டங்கள், பரப்புரைகள் என அரசாங்கத்துக்குக் கடுமையான அழுத்தத்தையும் எதிர்ப்பையும் வழங்கினார்கள்.
   இன்று சாதாரணமாக வீடுகளில் பாவிக்கும் 12.5 கிலோகிராம் லிட்ரோ காஸின் விலை 1,257 ரூபாயால் அதிகரித்து, சிலிண்டர் 2,750 ரூபாயாகவும், லாஃப்ஸ் காஸின் விலை 984 ரூபாயால் அதிகரித்து, சிலிண்டர் 2,840 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. சும்மா அறிக்கை விட்டதோடு எதிர்க்கட்சி மௌனமாக இருக்கிறது. 
   இங்கு எரிவாயு மட்டும் விலையேறவில்லை. கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டமையால், அரிசி, பால்மா, கோதுமை மா, சீமெந்து ஆகியவை அதிரடியான வகையில் விலையேறியுள்ளன. இதன் விளைவாக, பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளன. 
   கட்டுப்பாட்டு விலை நீக்கம் பற்றி இங்கு இன்னொரு விடயத்தைக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. கட்டுப்பாட்டு விலையை, அரசாங்கம் நீக்கயது வரவேற்கத்தக்க முடிவு. ஏனெனில் கட்டுப்பாட்டு விலையின் காரணமாக, சந்தையில் பொருட்களின் தட்டுப்பாடு நிலவியது. குறிப்பாக பால்மா, அரிசி, எரிவாயு என்பனவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவியதும், மக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள அல்லோலகல்லோலப்பட்டமையும் நாம் கண்ணால் கண்ட விடயங்கள். 
   அரசாங்கம் விதித்த கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாதெனவும், இறக்குமதிக்கான டொலர் கிடைக்காததால் லாஃப் காஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியையே நிறுத்தியிருந்தது. இதனால் எரிவாயு கிடைக்காமல், பலர்  மண்ணெண்ணெய், விறகு அடுப்புகளுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
   ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்கியது சரியானதே! ஆனால், இந்த விலைவாசி அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் முறைகேடான பொருளாதாரத் திட்டமிடலும் பொருளாதாரச் செயற்பாடுகளுமே காரணம். அடிப்படைப் பொருளாதார அறிவு கூட இல்லாதவர்களின் கையில், நாட்டின் பொருளாதாரத்தைக் கையளித்தால் இதுதான் நிலை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
   இந்த விலைவாசி ஏற்றம் மாதச்சம்பளத்தில் வாழ்க்கை நடத்தும் பெரும்பான்மை இலங்கையர்களின் அடிமடியில் தீவைத்ததைப் போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. விலைவாசி ஏற்றத்துக்கு நிகராகச் சம்பளம் அதிகரிக்காத நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், இலங்கை குடிமக்கள் திணறிப் போய் இருக்கிறார்கள். 
   அன்றாட உழைப்பை நம்பிய மக்களின் நிலை, இன்னும் மோசமானது. கொவிட்-19 முடக்கம், பிரயாணக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் அன்றாட உழைப்புக்கான வாய்ப்புகள் சுருங்கிய நிலையில், அவர்களது வாழ்வாதாரம் சாவலுக்கு உள்ளாகியிருக்கிறது. 
   திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு பற்றி பல செய்தி அறிக்கைகளையும் அண்மைக்காலத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. சமகால பொருளாதார நிலையின் கீழ், திருட்டுச் சம்பவங்களின் அதிகரிப்பு ஆச்சரியப்படுவதற்கான ஒன்றல்ல. இந்தப் பொருளாதார வீழ்ச்சி தொடருமானால், இத்தகைய சம்பவங்கள் இன்னும் அதிகரிக்கலாம். 
   அரசாங்கம் முழுமையாகவும் மோசமாகவும் ‘ஃபெயில்’ அடைந்துகொண்டிருக்கும் நிலையில், ஆகுமான எதிர்க்கட்சியொன்று என்ன செய்யும்? மிகக் கடுமையாக எதிர்ப்பை வௌிப்படுத்தி, அரசாங்கத்துக்கு கடும் அழுத்தத்தைக் கொடுக்கும். 
   இந்நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சி, என்ன செய்துகொண்டிருக்கிறது? பேருக்கு அறிக்கை விட்டுவிட்டு, அமைதியாக இருக்கிறது. யோசித்துப் பாருங்கள், இத்தகைய சந்தர்ப்பம் ஒன்றில், ராஜபக்‌ஷர்கள் எதிர்க்கட்சியாக இருந்தால், என்ன செய்திருப்பார்கள் என்று!
   நிச்சயமாக இவ்வளவு அமைதியாக இருக்கமாட்டார்கள். எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா என்று தெரியாத நிலையில்தான் இன்றைய எதிர்க்கட்சியும் அதன் தலைவர்கள் எனப்படுவோரும் செயற்படுகிறார்கள்.
   இதற்கும் சிலர் நியாயம் சொல்கிறார்கள். எதிர்க்கட்சியின் இயலாமைக்கு சாட்டுச் சொல்லும் இவர்கள், கோவிட்-19 நிலைவரத்தின் கீழ், எதிர்க்கட்சியால் பெரிதாக என்ன செய்துவிட முடியும். மேலும், கோவிட்-19 ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவது அவசியம். அதற்கு ஆதர்ஷமாக எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சித் தலைமைகளும் செயற்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சியினரின் மௌனத்துக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். என்னே, எங்கள் எதிர்க்கட்சியனரின் கடமையுணர்வு?
    ‘கொவிட்-19 ஒழுங்குவிதிகளால்த்தான், அவர்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டவில்லையாம்; இல்லையென்றால் வெட்டிவீழ்த்தி இருப்பார்களாம்’. இந்த வெட்டி நியாயங்களைத் தன் குழந்தைக்குப் பால்மா வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பெற்றோர்களிடம், எப்படிச் சொல்வீர்கள்?
   உங்கள் விதண்டாவாத நியாயங்களை, எரிவாயு விலையேற்றத்தால் விறகடுப்புக்கு மாறி, விறகடுப்பை ஊதிக்கொண்டிருக்கும் குடிமகனிடம் எப்படிச் சொல்வீர்கள்? உங்கள் சப்பைக்கட்டுச் சாட்டுகளைப் பொருள் விலையேற்றத்தால் மூன்று வேளை உணவை இருவேளையாகச் சுருக்கியுள்ள குடும்பங்களிடம் எப்படி எடுத்துரைப்பீர்கள்? 
   உண்மையில், இப்படி விலையேற்றங்களைச் செய்ய, அரசாங்கங்கள் பெருமளவுக்குத் தயக்கம் கொள்ளும். ஏனெனில், அவை அரசாங்கங்கள் தமது செல்வாக்கை இழப்பதற்கான பெருங்காரணமாக அமையும். 
   எதிர்க்கட்சிகள், தமது ஆதரவை அதிகரித்துக்கொள்ள வழிவகுக்கும். ஆனால், இந்த அரசாங்கம் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவது போல தென்படவில்லை. அது, அவர்கள் தமது 69 இலட்சம் வாக்காளர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்பதைவிட, எதற்கும் வக்கற்ற எதிர்க்கட்சியின் இயலாமையின் மீது கொண்ட நம்பிக்கை என்பதுதான் மெத்தப் பொருத்தமான காரணமாக இருக்கும். 
   சிறைக்குள் சென்று கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் பெயரைக் கூடச் சொல்ல நடுநடுங்கும் எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் பெரிய புள்ளிகளின் பெயர்களையா சொல்லிக் குற்றம்சாட்டப்போகிறார். 
   அந்த இயலாமையின் வடிவமான எதிர்க்கட்சித் தலைவரும், அவரது அடிப்பொடிகளும் உள்ளவரை, தமது ஆட்சிக்கு எந்தப் பங்கமும் வராது என்ற நம்பிக்கையில்தான் இந்த அரசாங்கம், இந்த விலை அதிகரிப்புகளைப் பற்றி அக்கறை கொள்ளாது இருக்கிறதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. 
   வழமையாக, வல்லாட்சி அரசாங்கங்கள் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உலகளவில் அவதானிக்கலாம். ஆனால், இலங்கையில் அதுகூடச் செய்யத் தேவையில்லாத நிலை இருக்கிறது. 
   ஏனெனில், இலங்கையின் எதிர்க்கட்சி கண்மூடி, வாய்பொத்தி அமைதியாகவே இருக்கிறது. ஒருவேளை, இந்த அரசாங்கம் செல்வாக்கை இழக்கட்டும்; இந்த அரசாங்கம், தனது பெயரைக் கெடுத்துக்கொண்டதும், அதை வைத்து அடுத்த தேர்தலில் வென்று விடலாம்; அதுவரை நமக்கேன் வம்பு என்ற அற்ப நம்பிக்கையில், இவர்கள் அமைதியாக இருக்கிறார்களோ என்னவோ?
   ஆக மொத்தத்தில், தேர்தலும் வெற்றியும் அதிகாரமும் மட்டும்தான் இங்கு இவர்களுக்கு முக்கியம். மக்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. பாவம் மக்கள், அவர்களுக்காகக் குரல் கொடுக்கத்தான், இங்கு யாருமில்லை.
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஏறும்-விலை-சரியும்-பொருளாதாரம்-திணறும்-மக்கள்-அமைதி-காக்கும்-எதிர்க்கட்சி/91-283478
  • By கிருபன்
   ராஜபக்‌ஷர்கள் முன்னுள்ள வாய்ப்பு
   என்.கே. அஷோக்பரன்
   twitter: @nkashokbharan
   சுதந்திரகாலம் முதல் இனமுறுகல், இனவாதம், இனத்தேசியம் ஆகியவற்றால் விளைந்த இனத்துவேசம், இனப்பிரச்சினை ஆகியவற்றுக்குள் சிக்குண்டு, இலங்கை தீவின் அரசியல் சின்னாபின்னமாகி நிற்கிறது.
   சுதந்திரகாலம் மற்றும் அதற்கு முற்பட்ட தலைவர்கள் கனவு கண்டது போல, இனத்தேசியவாதம், இனவாதம், இனப்பிரிவினை ஆகியவையற்ற சிவில் தேசமாக, இலங்கை ஒருவேளை கட்டியெழுப்பப்பட்டு இருந்தால், இலங்கையின் நிலை இன்று வேறாக இருந்திருக்கலாம். ஏனெனில், சுதந்திர காலத்திலேயே பொருளாதார ரீதியில் பலமான நாடாகவும் வளமான எதிர்காலத்தை நோக்கிய நாடாகவும் இலங்கை இருந்தது. ஆனால், இனவாத அரசியல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. 
   இனவாதத்துடன் இணைந்த பெருந்திரள்வாத அரசியல், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலகுவான வழியாகக் காணப்பட்டமை, அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணமும் சுயநலமும் மிக்க அரசியல்வாதிகளுக்கு இனவாத, பெருந்திரள்வாத அரசியல் மீதான ஈர்ப்புக்குக் காரணமாயிற்று. 
   இலங்கையின் பேரினவாத, பெருந்தேசிய அரசியலுக்கு எதிராக, தமிழ்த் தேசிய அரசியல் தற்காப்புத் தேசியமாகப் பிறந்து, வளர்ந்து நிற்கிறது. உண்மையில், இலங்கையில் இனவாத, பெருந்திரள்வாத அரசியலுக்கு மாற்றானதும் வலுவானதுமான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய உண்மை. மிகச் சிறிய, சில கட்சிகள், இதனை முயற்சித்திருக்கலாம், ஆனால், அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வலுவோ, செல்வாக்கோ அவர்களிடம் இருக்கவில்லை. 
   இதேவேளை, மக்கள் செல்வாக்கும் கட்சிப்பலமும் பிரபல்யமும் மிக்க அரசியல்வாதிகள், தமக்கு அதிகார பலத்தைப் பெற்றுத்தரவல்ல இனமைய அரசியலைத் தாண்டி, சிந்திக்கத் தயங்கினார்கள். இதன் விளைவு இனவாதம், இனத்தேசியம், இனவெறி எனும் விஷச்சில்லுக்குள், இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. 
   இலங்கை அரசியலில், குறிப்பிடத்தக்க இடதுசாரிக்கட்சிகள் கூட, இனவாதத்தைக் கக்கியவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை அமைதியாக ஆதரித்தவையாகவுமே இருந்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்க வரலாறு. 
   முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்றவர்கள் கூட, பெரும்பான்மைத் தேசம், சிறுபான்மைத் தேசங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது பற்றி அக்கறை கொள்ளவில்லை. 
   30 வருட யுத்தம், இலங்கையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் பெருமளவு பாதித்தது. இலங்கையிலிருந்து பல்லாயிரம் மூளைசாலிகள் வௌியேறினார்கள். இதன் தாக்கத்தை, இன்று மட்டுமல்ல, அடுத்த தலைமுறை கடந்தும் இலங்கை சந்தித்துக் கொண்டேயிருக்கும். இத்தனைக்கும் காரணம், அரசியல்வாதிகளின் சுயநலம். 
   எல்லா நாடுகளிலும் தீவிரவாத எண்ணம் கொண்ட, துவேசம் மிக்க வெறுப்பை விதைக்கும் மிகச் சொற்ப மக்கள் கூட்டமொன்று இருந்துகொண்டேயிருக்கும். ஆனால், அவற்றுக்கு அரசியல் முன்னரங்கில் இடங்கொடுக்காமல் இருப்பதில்தான், அந்நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. உதாரணத்துக்கு நோர்வே, பின்லாந்து, கனடா போன்ற நாடுகளில், இனத்துவேச எண்ணம் மிக்கவர்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அந்த நாடுகளின் அரசியல் முன்னரங்கில், இனவாதத்துக்கு இடமளிக்கப்படுவதில்லை.
   இலங்கை அரசியலிலும் அது முடியாத காரியமல்ல. ஆனால், அந்த மாற்றத்தைச் செய்வதற்கு, பலமும் தன்னம்பிக்கையும்  முதுகெலும்பும் உள்ள அரசியல் தலைவர்கள் அவசியம் தேவை.
   இன்று, ஆளுங்கட்சியினரை இனவாதிகள் என்று சொல்லிக்கொண்டு, அதே இனவாதத்தைப் பயன்படுத்தி, தாமும் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியாதா என்று அவாக்கொள்ளும் எதிர்க்கட்சிகளைத்தான் நாம், பார்த்துக் கொண்டிருக்கிறோம். எம்மில் யார் பெரிய இனவாதி என்ற போட்டிதான், இலங்கையின் தேசிய அரசியலுக்கு உரமாக அமைகிறது. 
   இதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைவது, அரசியல் தலைவர்கள் என்று தம்மை முன்னிறுத்துவோரின் ஆளுமைக்குறைவும் தன்னம்பிக்கை இன்மையும் நேர்மையின்மையும் குறுகிய சிந்தனையும் சுயநலமும்தான்!
   ‘சிறிய அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரைக் கொண்ட குழுவொன்றின் முயற்சிகள் புறநிலையாகவும், எந்தவொரு சுயநலமும் இல்லாமல் செயற்படும்போது, பெரும்பாலும் தீர்க்க முடியாத சிக்கல்களை அதனால் தீர்க்க முடியும்’ என்று  நெல்சன் மண்டேலா குறிப்பிடுவதை, இங்கு கவனிக்க வேண்டும். அத்தகைய தலைவர்கள், இன்றுவரை இலங்கைக்கு கிடைக்கவில்லை. 

   ஆங்காங்கே சில ஒளிக்கீற்றுகள் தோன்றியிருப்பினும், அவை மின்மினிகளைப் போல விரைவில் மறைந்துவிட்டன. ஓர் உதாரணத்துக்கு சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் பிரவேசத்தைக் குறிப்பிடலாம். சந்திரிகாவின் அரசியல் எழுச்சி, சமாதானத்துக்கான நம்பிக்கையை விதைத்திருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதில், சந்திரிகா தவறியது மட்டுமல்லாது, தான் கொடுத்த நம்பிக்கைக்கு நேரெதிராகவும் செயற்பட்டார். 
   தமிழ்த் தலைமைகளும் ஒன்றும் சிறப்பானவர்கள் அல்ல; பேரினவாதத்துக்கு எதிரான, தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் உணர்ச்சிவயப்பட்ட, வாய்ச்சொல் பகட்டாரவார அரசியலாக முன்னெடுத்தார்கள். அது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். காலங்காலமாக அதையே செய்து, தமது பதவிகளைக் காப்பாற்றிக்கொண்டு, வயிறுவளர்த்து வரும் கூட்டமாக அவர்கள் இருக்கிறார்கள். 
   பெரும்பாலும் வயிற்றுப்பிழைப்புக்கு அரசியலில் தங்கியவர்களாக அவர்கள் இருப்பதால், அரசியல் பிழைப்புவாதத்தை உறுதிப்படுத்தும் வாய்ச்சொல் பகட்டாரவார அரசியலைத் தாண்டிச் சிந்திக்க அவர்கள் தயாராக இல்லை. அப்படிச் சிந்திக்கும், செயற்படும் புதியவர்கள் யாராவது வந்தாலும், அவர்களைத் ‘துரோகி’கள் என்று முத்திரை குத்தி, ஓரங்கட்டி விடுகிறார்கள். 
   அழிவுப்பாதை அரசியலிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து, வழிகாட்டும் அளவுக்கான அறிவோ, அனுபவமோ, ஆற்றலோ, தன்னம்பிக்கையோ, இயலுமையோ இல்லாதவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.  
   இதுதான் இலங்கை அரசியலின் நிலை. இந்த அரசியல் தலைமைகளின் இயலாமையால்தான், இன்று இனவாத, இனவெறி அரசியலுக்குள் இலங்கை உழன்று கொண்டும், எதிர்காலத் தலைமுறையின் சிந்தனையைப்  பாழாக்கிக்கொண்டும் இருக்கிறது. அப்படியானால் இதற்கு மாற்றே இல்லையா?
   இலங்கையின் இந்த இனவாத, அரசியலை மாற்றும் பலம், ஒருமுறை ஒருவரின் கையில் இருந்தது. 2009இல், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம், இலங்கை வரலாற்றில் அதுவரை காலமும் எந்தத் தலைவரிடமும் இல்லாத ஒரு பலம் இருந்தது. 
   ‘இத்தோடு இனவாத, இனவெறி அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவோம்’ என்று மஹிந்த தீர்மானித்திருந்தால், அதன் பின்னர் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்பவும் ஓர் அரசுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கி, அனைத்து மக்களும் சுயமரியாதை, சுயகௌரவம், சுயநிர்ணயத்துடன் வாழ வழிசமைத்திருந்தால், அது இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கும்.
   ‘யுத்தத்தை வெற்றிகொண்ட’ மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்திருந்தால், அதைத் தட்டிக்கேட்கவும் எதிர்க்கவும் எந்தவொரு பேரினவாதியாலும் முடியாதிருந்திருக்கும். ஆனால், அதைச் செய்யும் பலமும் தன்னம்பிக்கையும் அன்று மஹிந்தவிடம் இருக்கவில்லை என்பது வரலாற்றுச் சோகம். மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடித்து, 2015இல் வந்த அரசாங்கம் செய்தது வரலாற்றுத் துரோகம். அதைப் பற்றிப் பேசுவது கூடப் பயனற்றது. 
   மீண்டும் பெருவெற்றி பெற்று, ராஜபக்‌ஷர்கள் ஆட்சிப்பீடமேறி, இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வாய்ப்பு இன்னும் ராஜபக்‌ஷர்களிடம் இருக்கிறது. 
   2009இல் இருந்ததைப் போன்ற தார்மீக பலம் இல்லாவிட்டாலும், பெரும்பான்மையினரை நம்பிக்கை கொள்ளச்செய்யத்தக்க இயலுமை அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை, எல்லா ராஜபக்‌ஷர்களும் ஒன்றிணைந்து, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கப் பயன்படுத்த வேண்டும். 
   எந்த அரசாங்கத்தாலும், மிக இலகுவாக அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது. ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதைக்கூடச் செய்தார்கள். அது காலத்தின் அத்தியாவசியத் தேவையாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யும் பலம், அவர்களிடம் இருக்கிறது. 
   இன்று, கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம், இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தனியார் மயமாக்கல்களை ஐ.தே.க, தொழிற்சங்கங்களின் செல்வாக்கைக் கடந்து செய்ய முடியவில்லை. ஆனால்,ராஜபக்‌ஷர்களால் அந்த எதிர்ப்புகளை இலகுவாகக் கடந்து, அதைச் செய்ய முடிந்திருக்கிறது.
   இன்றைய சூழலில், இலங்கையின் இனவாத அரசியல் பாதையை மாற்றி அமைக்கக் கூடிய வலு, ராஜபக்‌ஷர்களிடம்தான் இருக்கிறது; அதற்கான அருமையான சந்தர்ப்பமும் இருக்கிறது. 
   அவர்கள் இனவாத அரசியலைக் கைவிட்டு, இலங்கையை வளமான பாதைக்கு அழைத்துச் செல்வார்களா? அல்லது, 2009ஐப் போலவே, குறுகிய சுயநல அரசியலை முன்னெடுத்துவிட்டுப் போய்விடுவார்களா என்பதுதான், இங்கு கேள்வி. இலங்கையின் எதிர்காலம், இன்று அவர்களின் கையில் இருக்கிறது.
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்கள்-முன்னுள்ள-வாய்ப்பு/91-282859
    
    
  • By கிருபன்
   தமிழர்களின் பொருளாதார மீட்சி
   என்.கே. அஷோக்பரன்
   twitter:@nkashokbharan
   தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக, வடக்கு-கிழக்கு அரசியல், வெறுமனே தமிழ்த் தேசியத்தைப் பகட்டாரவாரப் பேச்சாக முன்வைக்கின்றதே அன்றி, தேசக்கட்டுமானம் தொடர்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை.
    குறிப்பாக, பொருளாதார ரீதியில் தமிழ் மக்களை வலுப்படுத்தக்கூடிய எந்தத் திட்டங்களோ தூரநோக்கோ கூட, தமிழ் அரசியல்வாதிகளிடம் கிடையாது என்ற குற்றச்சாட்டை, என்னுடைய பத்தியிலும் மற்றைய தளங்களிலும் முன்வைத்திருக்கிறேன். 
   அண்மையில், இதைப் பற்றிய கேள்வியொன்றை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனிடம் முன்வைத்த போது, “இந்தக் குறையொன்று, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ளது” என்பதை, அவர் நேர்மையாக ஏற்றுக்கொண்டார். ‘சப்பைக் கட்டு கட்டும்’ அரசியல்வாதிகளிடையே, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் இந்தப் பண்பு பாராட்டுக்குரியது. 
   இதேவேளை, வயதானவர்களின் கூடாரமாகிப்போய் உள்ள தமிழ்த் தேசிய அரசியல், பெருமளவுக்கு எந்தவித தூரநோக்கும் இல்லாமல், ‘அரைத்த மாவை அரைத்துக் கொண்டு’, வெற்று ‘விடுதலை’ பேசிக்கொண்டு, உள்ளுக்குள் ‘குழாயடிச் சண்டை’களாகவே கடந்துகொண்டிருக்கிறது. 
   யாராவது இதைச் சுட்டிக்காட்டினால், அவர்களுக்குத் ‘துரோகி’ப் பட்டம் கட்டிவிட்டு, மண்ணுக்குள் தலையைக் கொடுத்துவிட்டிருக்கும் தீக்கோழி போல, தமிழ்த் தேசிய அரசியல் கடந்துகொண்டிருக்கிறது.
   மறைந்தவர்களுக்கான அஞ்சலி என்பது முக்கியமானதுதான். ஆனால், அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பாதியை என்றாலும், தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனைக்குக் கொடுக்க வேண்டாமா? 
   வெறும் உணர்ச்சிப்பிழம்பினையும் வாய்ச்சொல் பகட்டாரவாரத்தையும் வைத்துக்கொண்டு, அரசியல் நடத்துவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா என்றெல்லாம், நாம் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
   இலங்கையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய கடையிரு மாகாணங்கள் கிழக்கும் வடக்கும். எந்த நிலத்தைத் தமிழர்கள் ‘தாயகம்’ என்கிறார்களோ, அந்த நிலமும் அதன் மக்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள். 30 வருட கால யுத்தத்தின் நிலை இது. 
   இதையேதான், அரசியல்வாதிகளும் சொல்வார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 12 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த 12 வருடத்தில், 30 வருடகால யுத்தத்தில் உழன்று கொண்டிருந்த மக்களை மீட்டெடுக்க, என்ன செய்தீர்கள் என்ற கேள்விதான் முக்கியமானது. 
   இந்த மக்களின் உணர்வுகளை விற்றுப்பிழைத்ததைத் தவிர, தமிழர் அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும், தமிழ் மக்களின் வாழ்வாதாரம் தொடர்பிலும் தமிழ் மக்களின் பொருளாதாரம் தொடர்பிலும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பிலும், அக்கறை காட்டவில்லை.
   இந்த இடத்தில்தான், தமிழ் மக்களின் பொருளாதார மீட்சி பற்றிப் பேசுதல் அவசியமாகிறது. ‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ என்கிறான் வள்ளுவன். 
   தமிழ் அரசியல்வாதிகள், பகட்டாரவாரப் பேச்சில் வல்லவர்கள். மற்றவர்களை எதிரிகளாகவும் துரோகிகளாகவும் முத்திரை குத்தி, வாய்ச்சொல் அரசியல் செய்வதில் சமர்த்தர்கள். 
   ஆனால், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. பொருளின் பெருமை சொல்லும் வள்ளுவன், ‘செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்’ என்கிறான். அதாவது, ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள், அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை என்பதாகும். 
   அதற்காக, எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளும் பொருளீட்டுவது பற்றிச் சிந்திப்பதில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. சிலர் தமக்கும் தம்மக்களுக்கும் (அதாவது, அவர்களது பிள்ளைகளுக்கு) என, நிறையவே பொருளீட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
   எத்தனை ஏக்கர் நிலங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று, அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் நன்கறிவார்கள். ஆனால், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள்.
    பொருளாதாரம் பற்றிச் சிந்திக்கவும் தம்மக்களை நேசிக்கவும், கொஞ்சம் அறிவும் நிறைய நல்லெண்ணமும் மிகுந்த தீர்க்கதரிசனமும் முழுமையான நேர்மையும், கொண்ட அரசியல்வாதிகள் தேவை. அது இன்று அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. 
   இங்கு அரசியலில் உள்ள பலருக்கு, அரசியலை விட்டால் வேறு வயிற்றுப்பிழைப்பு இல்லை என்ற நிலையிலேயே, தமிழர் அரசியல் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆகவேதான், தம்பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவதற்கான அரசியலை, அவர்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 
   உண்மையில் இரா. சம்பந்தன், ம.ஆ. சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றையவர்களுக்குத் தாம் என்ன பேசுகிறோம் என்று கூடத் தெரியுமா என்ற ஐயம், அவர்களது பேச்சைக் கேட்கும் போது எழுகிறது. 
   மக்களது உணர்வுகளைத் தட்டியெழுப்ப எதையாவது பேசிவிட வேண்டியது.
   தமிழ்த் தேசியத்துக்கு, இப்போது அவசர அவசியமாகியுள்ள ‘விடுதலை’ இத்தகைய கேவலமான அரசியல்வாதிகளிடம் இருந்தான விடுதலையே ஆகும். நிற்க!
   பொருளாதார மீட்சிக்கான வழி என்ன? இது மிகமுக்கியமான கேள்வி ஆகும். இதற்குப் பதில் உற்பத்தி. 
   வடக்கு-கிழக்கின் உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். பொருட்கள், சேவைகள் என, அங்கு உற்பத்தியைப் பெருக்குவதும் வணிகத்தை மேம்படுத்துவதும் மட்டுமே, எதிர்கால வளர்ச்சிக்கான ஒரே வழியாகக் காணப்படுகின்றது. 
   தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களிடம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்ல வேண்டிய கருத்து, உற்பத்தியைப் பெருக்குவதும் வணிகத்தை மேம்படுத்துவதும் ஆகவே இருக்க வேண்டும். 
   மற்றவர்களின் உதவிகளிலும், கருணைப்பார்வையிலும் தங்கியிருக்கும் மக்கள் கூட்டமொன்று, அந்தத் தங்கியிருப்பிலிருந்து வௌியேவரும் வரை தப்பிப்பிழைக்கலாமேயொழிய வளர முடியாது. 
   ‘வீழ்வது வெட்கமல்ல; வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்’. வீழ்ந்த தமிழினம், எழுச்சி காண்பதற்கான ஒரே வழி, பொருளாதார மேம்பாடு மட்டும்தான். 
   அதனால்தான், ஒரு தேசத்தைக் கட்டி எழுப்புவதிலும் பொருளாதாரம் என்பது முக்கியம் பெறுகிறது. ‘பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்’ என்ற வள்ளுவன் வாக்கு ஞாபகமிருக்கட்டும். 
   உற்பத்தியை எப்படிப் பெருக்குவது? குறித்த நிலப்பரப்பிலுள்ள வளங்கள் என்ன என்ற புரிதல் முதலில் ஏற்பட வேண்டும். 
   வளம் என்பது, இயற்கை வளம் மட்டுமல்ல; மனித வளமும் செயற்கை வளங்களும் உள்ளடங்கும். அடுத்து, அந்த வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தி, சந்தையில் கேள்வியுள்ள, கேள்வியை உருவாக்கக்கூடய உற்பத்தியை எப்படி மேற்கொள்வது என்று சிந்திக்க வேண்டும். மிக முக்கியமாக மூலதனத்தைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டும். 
   மூலதனத்தைக் கவர்ந்திழுக்க, முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கு உட்கட்டமைப்பு வசதிகள், முதலீட்டு ஊக்குவிப்பு வசதி வாய்ப்புகள் எல்லாம் அவசியம். 
   இந்த இடத்தில்தான், உலகெங்கும் பரவி வாழும் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவி, இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் அவசியமாகிறது. வடக்கு-கிழக்கில் முதலிடுவதும் அங்கு உற்பத்தியைப் பெருக்குவதும் அங்கு பொருளாதார மீட்சிக்கு உதவுவதும்தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்த் தேசத்துக்குச் செய்யக் கூடிய பேருதவி. 
   உங்கள் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும், கடந்தகாலத்துக்கான நியாயம் தொடர்பானதே ஆகும்.
    ஆனால், எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு, கடந்த காலத்துக்கான நியாயத்தைத் தேடுவது என்ன பயனைத் தந்துவிடும்? 
   உண்மையாகத் தன் தாயகத்தையும் தன் தேசத்தையும் நேசிப்பவன், அதன் எதிர்காலத்தையும் நிரந்தர இருப்பையும் நீண்ட நிலைப்பையும்  பற்றியே அதிகம் அக்கறை கொள்வான். 
   உற்பத்தியைப் பெருக்குவதில், முதலீட்டைப் போலவே உழைப்பின் பங்கும் முக்கியமானது. வௌிநாடு போய், அங்கேயே குடியேறிவிட வேண்டும் என்பதையே, வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டுள்ள இளையோர் கூட்டம் உள்ள நாடும் தேசமும் ஒரு போதும் முன்னேறப்போவதில்லை. 
   தமிழ்த் தேசத்தின் பெரும் பின்னடைவுக்கு முக்கிய காரணம், உழைக்கும் படையின் வெளியேற்றம் ஆகும். எவ்வளவு அரிய மூளைவளம், இங்கிருந்து வௌியேறிவிட்டது; வௌியேறிக்கொண்டிருக்கிறது. 
   உடலிலிருந்து புது இரத்தம் வௌியேறுவதைப் போன்ற நிலை இது. நோய்கள் பீடித்த உடலாகத்தான் அந்த உடல் காணப்படும். அந்த உடல் எப்படி வாழும்? 
   ஆனால், நாட்டிலிருந்து வௌியேற விரும்பும் இளைஞர்களை மட்டும் பிழை சொல்லிவிட முடியுமா? அவர்களது எதிர்காலம் பற்றி, எந்த நம்பிக்கையும் கொடுக்க முடியாத அரசியல்வாதிகள் நிறைந்த இடத்தில், எந்த நம்பிக்கையில் அவர்கள் இங்கே வாழ்வது? 
   ஆகவேதான், இங்குள்ள உழைக்கும் படையை, மூளைவளத்தைத் தக்கவைப்பதற்கு மட்டுமல்லாது, மூலதனத்தை ஈர்த்தெடுக்கவும் வடக்கு-கிழக்கை பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீட்கவும், தீர்க்கதரிசனம் மிக்க புதிய அரசியல்பாதை, தமிழ்த் தேசிய அரசியலில் வகுக்கப்படவேண்டும். 
   அதுவே, தமிழ் மக்களின் பொருளாதார மீட்சிக்கான பிள்ளையார் சுழியாக அமையும்.
    
   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்களின்-பொருளாதார-மீட்சி/91-282434
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.