Jump to content

மா(ன்)மியம் - Dr.T. கோபிசங்கர்


Recommended Posts

மா(ன்)மியம்

யாழ்ப்பாணத்திற்கும் மாம்பபழத்திற்கும் அப்படி ஒரு உறவு. மாம்பழத்துக்கு ரெண்டு season. ஒண்டு சித்திரையில் பூத்து கச்சான்காத்தில் கருத்தரித்து ஆடியில் பழம் வரும். இது நல்ல இனிப்பான பழங்கள். மற்றது மாரிப் பழம் புரட்டாதீல பூத்து மார்கழீல பழம் வரும் . இது பாக்க பாசி பிடிச்ச சுவர் மாரி இருக்கும், பச்சைத் தோலில கறுப்பு நிறப் படைஒண்டு ,அப்ப பாவிச்ச பிசின் போத்தலில வெளீல வழிஞ்சு காஞ்சு போன பிசின் ஒட்டின மாதிரி இருக்கும் . பெரிய இனிப்பாயும் இருக்காது.

வைகாசியில மரமெல்லாம் பூவா இருக்கும் .கொட்டிண்ட பூ போக, காய் வந்ததும் ஆடிக்காத்தில் தப்பின காய் மட்டும் பழுக்கும். இந்த season பழம் தான் யாழ்பாண ஸ்பெஷல்.

ஆடிக்காத்தைப்பற்றி எல்லாருக்கும் தெரியும், நம்மடை பெட்டைகள் ஒரு கையால சட்டையைப்பொத்தி மற்றதால சைக்கிளையும் பனையோலை தொப்பியையும் பிடிச்சுக்கொண்டு முக்கித்தக்கி உழக்கிக்கொண்டு போகேக்க ,எப்ப காத்தடிக்கும் எண்டு வாய் பாத்த காலம் அது.

“கச்சான் அடித்த பின்பு காட்டில் மரம் நின்றது போல் உச்சியில நாலு மயிர் ஓரமெல்லாம் தான் வழுக்கை.” இப்படி ஒரு நாட்டார் பாடல் படிச்சதா ஞாபகம்.

மாங்காயில கனக்க வகை இருந்தது. பாண்டி, புளி மாங்காய், பச்சைத்தண்ணி மாங்காய்,சேலம், கிளிச்சொண்டு, அலரி மாங்காய், ஒட்டுமாங்காய், செம்பாட்டு, விளாட்டு, அம்பலவி, காட்டு மாங்காய், வெள்ளைக்கொழும்பான் எண்டு இருந்தாலும் Signature variety கறுத்தக்கொழும்பான் தான்.

ஒவ்வொரு மாங்காய்க்கும் ஒரு speciality இருக்கு.கறிக்கும் சொதிக்கும் எண்டா பாண்டி மாங்காயும் , புளி மாங்காயும் தான். தனிய மாங்காயை போட்டு மட்டும் சொதி வைக்கலாம் . திரளி மீன் தலைக்கு மாங்காய் துண்டு போட்டு வைக்கிறது , நல்லூர் வெளி வீதிமுருகன் உலாவும் பத்மநாதன்டை நாதஸ்வரமும் மாதிரி . தனித்தனியவும் இரசிக்கலாம் சேர்த்து ருசிக்கலாம்.

கிளிப்பச்சை நிறத்தில நல்ல குண்டா இருக்கும் பாண்டி மாங்காய் , காய்க்குத்தான் சரி. புளிப்பு கூடினது , உப்பு தூளோட சேத்து சாப்பிடேக்க அந்த மாதிரி இருக்கும்.

காய் மாங்காய்க்கு பாண்டி, சேலம், கிளிச்சொண்டு ,பச்சைத்தண்ணி மாங்காய் எல்லாம் நல்ல brands.

மாங்காயை புடுங்கேக்க, காம்பு கொஞ்சம் காய்ஞ்சு கறுத்து இருக்க வேணும் அப்ப தான் காய்க்கு பதம் சரி. பாண்டி எண்டால் தோல் பச்சை குறைஞ்சு வெள்ளை பிடிக்க வேணும், சேலம் மாங்காய் காம்படியில் மஞ்சள் குறைஞ்சு சிவப்பாக வேணும். விளாட்டு ஒரு maroon shade ஐ தரேக்க பதம் காய்க்கு சரியா இருக்கும்.

மாங்காய் புடுங்கேக்க பால் முகத்தில படாமல் புடுங்க வேணும் , பால் பட்டால் அவியும். மரம் ஏறி மாங்காய் புடுங்கிறது ஒரு thrill எண்டால் , கல்லால இல்லை தடியால எறிஞ்சு மாங்காயோட சில பல ஓடுகளையும் கண்ணாடிகளையும் உடைச்சிட்டு புடுங்கின மாங்காயை மடிச்சுக் கட்டின சாரத்துக்குள்ள தூக்கிக் போட்டுக் கொண்டு தப்பி ஓடுறது இன்னொரு thrill ஆன கலை .கள்ளம் காதலில் மட்டும் அல்ல கள்ள மாங்காயிலும் தான், அது ஒரு தனி சுகம்.

புடுங்கின மாங்காயின் காம்பு பக்கத்தை பூசாத சீமெந்துச்சுவரில இல்லாட்டி தீட்டின மரத்தில கூர் பாக்கிற மாதிரி புடுங்கின மரத்திலேயே , பால் போக தேச்சிட்டு ,பொத்திப்பிடிச்சபடி குத்த வேணும் , அப்பதான் மாங்காய் சிதறி வெடிக்கும் ஆனால் நிலத்தில விழாது. வெடிச்ச கீலத்தில ஒண்டை அப்பிடியே இழுத்துப்பிச்சு உப்புத்தூளோட சேர்ததுச் சாப்பிட ஒரு சுவையரங்கமே நாக்கில் அரங்கேறும்.

கட்டி உப்பில தனி மிளகாய்ததூள் கலக்கவேணும் எங்கடை கறித்தூள் சரிவராது. மாங்காயால உப்பை குத்தினால் அதோட மிளகாய் தூளும் சேர்நது வரும் . வாய்க்குள்ள வைச்சா கடைவாயில புளிப்பும், நடுநாக்கில உப்பும், நாசிக்ககுள்ளால மூளைக்கு உறைப்பும் ஏறும் அது தான் அந்த சுவையரங்கம்.

மாங்காயை கழுவி கத்தியால வெட்டி உப்பையும் தூளையும் அரைச்சப் போட்டாலும் இந்த taste வராது.

love பண்ணிற மாதிரித்தான் மாங்காய் புடுங்கி சாப்பிடிறதும். பூத்தது காய்க்க தொடங்க கண்வைச்சு , கனியத்தொடங்க தான் , மாங்காய்க்கும் அது நல்ல பதம்.

பச்சைத்தண்ணி மாங்காய் ,பேர் மாதிரித்தான் சாப்பிட்டா வெத்திலை மாதிரி சாறு மட்டும் வரும். இப்ப அது பெரிசா ஒரு இடமும் இல்லை.

கிளிச்சொண்டன் , பேருக்கு ஏத்த மாதிரி, நுனி வளைஞ்சு பச்சையா இருக்கும். இதுவும் காய்க்கு தான் taste.

அப்ப Cricket match பாக்கேக்க கச்சான் , மாங்காய் , கரம்சுண்டல் , ஐஸ் பழம், ஜூஸ் பக்கற் எல்லாம் side dishes மாதிரி.

ஊரில கிரிக்கட் Match நடக்கேக்க co sponsors ஆன ஐஸ் பழ சைக்கிள், மாங்காய் வண்டில் , கச்சான் ஆச்சி எல்லலாரும் கட்டாயம் வருவினம் . அந்த மாங்காய் வண்டில் காரர் , நீங்கள் காட்டிற மாங்காயை அப்படியே கழுவாம சத்தகக்கத்தியால நுனியை வெட்டி பிறகு நீட்டு நீட்டா வெட்டி , அதுக்குள்ள கொஞ்சம் உப்பு தூள் போட்டு தருவார் . அதை ஒவ்வொரு துண்டா பிச்சு சாப்பிட தொடங்க , அது வரை serious ஆக match பார்த்த எல்லாரும் கை வைக்க , கடைசியில் மிஞ்சிற கொட்டை சூப்பிறதும் சந்தோசம்.

மாங்காயிலும் ஒரு அடி நுனி தத்துவம் இருக்கு. அது தான் ஒரு நாளும் நாங்கள் குறுக்கால வெட்டிறதில்லை. கரும்பு மாதிரி நுனியில இருந்து கடிச்சுக்கொண்டு போக கொஞ்சம் கொஞ்சமா புளிப்பு குறைஞ்சு இனிமை கூடும்.

காய் பழமாக கொஞ்சம் காலம் பொறுக்க வேணும் . மாம்பழம், அணில் கொந்தி ஒண்டு இரண்டு பழம் விழும் . உடனே முத்தீட்டு எண்டு எல்லாத்தையும் புடுங்கக் கூடாது. ஆனால் கொந்தின பழம் சாப்பிட்டு பாக்க இந்த முறை பழம் எப்பிடி இருக்கும் எண்டதுக்கு sample ஆ இருக்கும். அநேமா அணில் கொந்த தொடங்க இரண்டு மூண்டு கிழமையால கொஞ்சம் கொஞ்சமா புடுங்கத் தொடங்கலாம் . நல்லா சாம்பல் பத்தி நுனி கரும் பச்சை குறையேக்க பருவம் சரி . முத்தலை சரியா பார்த்து , பட்டை கட்டி சாக்குப் பிடிச்சு புடுங்கிறதில இருந்து , வைக்கல் போட்டு பழுக்க வைச்சு சாப்பிடுறது வரை ஒரு பக்குவம் வேணும். மொட்டைக்கறுப்பன் அரிசிமா புட்டுக்கு , நல்ல செத்தல் தேங்காய்பூ கலந்து , பொரிச்ச சம்பலோட வெட்டின மாம்பழத்தையும் சேர்த்து சாப்பிடுறது ஒரு தனி சுகம் .

யாழ்ப்பாணம் என்றால் கறுத்தக்கொழும்பான் எண்டு சொன்னாலும் , அது கொஞ்சம் தும்புத்தன்மை கூட . ஆனால் புழு இருக்காது, பழுத்தால் எல்லாம் ஒரே சீரா இனிக்கும். சாப்பிடேக்க இருக்கிற taste ம் மணமும் சாப்பிட்டாப் பிறகு கையை கழுவினா இருக்காது. சாப்பிட்டிட்டு தண்ணி குடிக்கேக்க ஒரு கயர்ப்பு தன்மை தொண்டைக்குள் தெரியும்.

விளாட்டு எண்டால் காய், முத்தல் ,பழம் எண்டு எல்லாப்பதத்திலும் சாப்பிடலாம் .பழம் பிழைக்காது ,காசுக்கு நம்பி வாங்கலாம் .

அம்பலவி செம்மஞ்சள் நிறம் அது ஒரு தனித்துவமான கலர், கன பேர் சீலை வாங்கேக்க தேடித் திரியிற கலர். பழம் முழுக்க ஓரே நிறமா இருக்கும் . நல்ல இனிப்பு ஆனால் நெத்தலி மாரி ஒல்லியா நீட்டா இருக்கும் சதை குறைவு ஆனாலும் நார் இல்லை கையில் சாறு வடிஞ்சாலும் ஒழுகி ஓடாது . சூப்பி முடிச்ச மாங்கொட்டையில் ஒரு தும்பு கூட இருக்காது . ஒரு மாம்பழம் வெட்டி பங்கு பிரிச்சு சாப்பிடேக்க கறுத்தக் கொழும்பான் எண்டா கரைத்துண்டும் அம்பலவி எண்டால் நடுக் கொட்டை பகுதியும் எடுக்க வேண்டும். இந்த பங்கு பிரிக்கும் பிரச்சினையால தான் நாரதர் மாம்பழத்தை முழுசா சாப்பிட சொன்னவர் .

செம்பாட்டு மாம்பழம். தனி ரகம், பழம் எண்டா பின்னேரச் சூரியன் பட்ட நல்லூர் தங்க ரதம் மாதிரி , மஞ்சளில Orange கொஞ்சம் கலந்த மாதிரி இருக்கும் . நிறம் , மணம், சுவை எல்லாம் அளவா சேர்நதது, நல்ல சதைப்பிடிப்பு. குட்டி குஸ்பு மாதிரி கட்டையா குண்டா இருக்கும் . நம்பி வெட்ட ஏலாது ஏனெண்டால் உள்ளுக்க புழுப்பிடிச்சிருக்கும். சாப்பிட்டிட்டு கை கழுவினாலும் மணம் அப்படியே இருக்கும்.

வெள்ளைக்கொழும்பான் பழுத்தாலும் வெளிறின மஞ்சளாத்தான் இருக்கும் உள்ள கொஞ்சம் தண்ணித்தனமை இருக்கும் சாப்பிடேக்க கை எல்லாம் ஒழுகும்.

புடுங்கின மாங்காயை வைக்கலைப் போட்டு அடுக்கி வைச்சு ,அடைக்கு வைச்ச முட்டை குஞ்சாகீட்டுதோ எண்டு கூடையை துறந்து பாக்கிற மாதிரி மூடின சாக்கை அடிக்கடி தூக்கி பாத்து , பழுத்ததை தேடி எடுத்துக் கொண்டு போய் வெட்டி அப்ப தான் இறக்கின புட்டோட சாப்பிட்டவன் மட்டும் தான் பிறவிப் பெருங்கடல் நீந்துவான் .

மாம்பழத்துக்கு ஏன் அந்தப் பேர் வந்தது எண்டு தெரியாது ஆனால் “மா” எண்டால் பெரியது எண்டு சொன்னாலும் ,அது எங்களுக்கு எப்பவுமே வரலாறு ,ஏன் எண்டால் குடும்பச்சண்டைக்கு சிவனுக்கு ஒரு மாம்பழம் எங்களுக்கு ஒரு “மா”விலாறு. மாங்காயோ ,மாம்பழமோ சாப்பிடிறது ஒரு கலை ஆனால் கட்டாயம் தெரிய வேண்டிய கலை.

Dr.T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தாளோ எழுதியது இதை வாட்ஸ் அப் குழுமங்களுங்குள் ஒரு பத்து ரவுண்டு பேரில்லாமல் ஓடுது இரண்டு சிம் போன் உதவாக்கரை குழுமங்களுக்கு ஒரு வசதி இரண்டாவது நம்பரை கொடுத்துவிடுவது உத்தமம் சனி ஞாயிறுகளில்  ஆறுதலா பார்க்கலாம் .

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.