Jump to content

பூமியின் அதிசய வரலாறு: 100 கோடி ஆண்டுகளை காணவில்லை - விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் அதிசய வரலாறு: 100 கோடி ஆண்டுகளை காணவில்லை - விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்ன?

  • ஜாரியா கோர்வெட்
  • பிபிசி பியூச்சர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கேன்யான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புவியியல் வரலாற்றுப் பதிவேட்டில் இருந்து நூறு கோடி ஆண்டுகள் காணாமல் போய்விட்டன. இப்படிக் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் இது எப்படி நடந்தது என்பதில் விஞ்ஞானிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

"சிகாகோ ட்ரிப்யூன்" என்ற பாரம்பரியம் மிக்க பத்திரிகையின் முதல் பக்கத்தில் 1869-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ஆம் தேதி "நடுங்கவைக்கும் விபரீதம்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்தது.

ஒரேயொரு கையைக் கொண்ட புவியியலாளர் ஜான் வெஸ்லி பவெல் தலைமையிலான ஆய்வாளர்கள் அடங்கிய ஒரு குழு தொடர்புடைய சம்பவத்தை அந்தச் செய்தி குறிப்பிட்டது. அந்தக் குழுவின் பணி ஒன்றே ஒன்றுதான். ஆனால் எளிதானது அல்லது. வயோமிங்கில் உள்ள கிரீன் ஆற்றங்கரையில் இருந்து சுமார் ஆயிரம் மைல்கள் கீழ்நோக்கி நீர்ப் போக்கில் பயணிப்பது. செல்லும் வழியில் தங்களது கண்டுபிடிப்புகளைப் பட்டியிலிடுவது அவர்களது வேலை.

அவர்கள் பயணத்தைத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களிடம் இருந்த எந்தத் தகவலும் இல்லை. பொதுவெளியில் கவலை அதிகரித்திருந்தது. அவர்கள் சென்ற படகு மூழ்கி விட்டதாகவும் அனைவரும் இறந்து போயிருக்கலாம் என்றும், தப்பிப் பிழைத்து வந்ததாக ஒருவர் கூறியது செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது.

ஆனால் இந்தச் செய்தியை பவலின் மனைவி நம்பவில்லை. இறுதியில் அவர் நம்பாததுதான் சரி என்றாகிப் போனது. ஆம், தப்பிப் பிழைத்து வந்தவர் என்று கூறியவர், உண்மையில் பவலை சந்தித்ததே இல்லை என்பது அதன் பிறகுதான் தெரியவந்தது. பவெலும் அவரது குழுவினரும் மூழ்கிப் போனதாக வெளியான செய்தி கட்டுக்கதை - ஜோடிக்கப்பட்டது என்பது தெளிவானது.

இந்தக் கட்டுக்கதை வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், அதுபற்றி எதுவும் தெரியாத ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பயணத்தின் போதுதான் நம்ப முடியாத, அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயத்தை பவலும் அவரது குழுவினரும் கண்டுபிடித்தார்கள். அவரது கண்டுபிடிப்பு அடுத்த நூற்று ஐம்பது ஆண்டுகளாக புவியியில் ஆராய்ச்சியாளர்களைத் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

காணாமல் போன ஆண்டுகள்

பவெலின் அந்த ஆய்வுப் பயணம் சாதாரணமானது அல்ல. அது சாகசங்கள் நிறைந்த பயணம். ஆயிரம் மைல்கள், அதாவது 1,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீறிப் பாயும் ஆற்றில் பயணிப்பதற்காக அவர்கள் பல முன்னேற்பாடுகளைச் செய்திருந்தார்கள். வேலைக்கும் பாதுகாப்புக்கும் சந்தேக நபர்கள், பூர்வகுடியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் குற்றவாளிகள் போன்றோரையும் கூட்டிச் சென்றனர்.

பவல்

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

ஜான் வெஸ்லி பவெலின் பயணத்தை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட தபால்தலை

மொத்தம் நான்கு படகுகளுடன் அவர்களது ஆய்வுப் பயணம் தொடங்கியது. சுழலும் நீர், பாயும் நீர்வீழ்ச்சிகள், அச்சுறுத்தும் பாறைகள் என நாள்தோறும் எதையாவது சந்திக்கும் துணிச்சலும் அவர்களிடத்தில் இருந்தது.

பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே அவர்கள் சென்ற ஒரு படகு அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. பயணம் செய்த 10 பேரில் ஆறு பேர்தான் வீடு திரும்புவார்கள் என்பது அப்போதே முடிவாகிவிட்டது.

1869-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று கிராண்ட் கேன்யான் எனப்படும் பெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கை அடைந்தது பவெலின் குழு. அப்போது, அவர்களிடத்தில் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மட்டுமே இருந்தன. நாளான ஆப்பிள்கள், அழுகிய பன்றி இறைச்சி, பூச்சிகள் இருக்கும் மாவு, ஒரு சாக்குப்பையில் காஃபி போன்றவை மட்டும்தான்.

ஆனால் அது மட்டுமே அல்லாமல், அவர்களுக்குத் தெரியாத பல ஆபத்துகளும் இருந்தன.

இந்த இக்கட்டான காலத்தில் கூட கண்ணில் தென்பட்டவற்றைத் பவெலும் அவரது குழுவினரும் ரசித்தார்கள். துல்லியமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். சுற்றிலும் இருந்த பாறை அடுக்குகள், கூர்மையான வளைவுகள், பிரமாண்டமான இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை அவர்கள் கண்டார்கள். வண்ணமயமான புத்தகங்களை அடுக்கி வைத்ததைப் போன்ற பாறை அடுக்குகளைக் கொண்டிருந்த ஒரு குன்று மீது பவெலின் படகு மோதியது. அதை அவர் "கடவுளின் நூலகம்" என்று குறிப்பிட்டார்.

அந்தப் பாறை அடுக்குகள் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை வரிவரியாகப் படிப்பதற்கான இடம் என்று அவர் கூறினார். ஆனால், பின்னர் பள்ளத்தாக்கு சுவர்களின் அடுக்கில் திகைப்பூட்டும் வித்தியாசமான ஒன்றைக் கண்டுபிடித்தார்.

பாறைகளின் அடிவாரத்தில் நின்று மேல்நோக்கிப் பார்த்தால், கடினமான, படிகப் பாறைகளின் அடர்த்தியான பகுதியை அவரால் காண முடிந்தது. அவை வழக்கத்துக்கு மாறாக செங்குத்தாக அடுக்கப்பட்டிருந்தன. அதற்கு மேல் நேர்த்தியான கிடைமட்ட கோடுகளில் சுமார் ஆயிரம் அடிக்கு சிவப்பு நிற மணற்கல் தொகுப்பு இருந்தது.

செங்குத்து படிக பாறை இருந்த பகுதி புவியியில் விதிகளின்படி 10,000 அடி தடிமனாக இருக்க வேண்டும் என்று பவெல் மதிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில், இது 500 அடிதான் இருந்தது. ஆயிரக்கணக்கான அடி பாறையைக் காணவில்லை. அது மறைந்து போயிருந்தது.

அவர் "மகா முரண்" என்று அதற்குப் பெயரிட்டார். "அது எப்படி சாத்தியம்?" என்று தனக்குள்ளே அவர் கேட்டுக் கொண்டார்.

பெரும் பள்ளத்தாக்கு

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

பாறைகள் பொதுவாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் "மகா முரண்" இந்த வழக்கத்தை உடைத்தது

இன்று புவியியலாளர்கள் கடினமான, படிக பாறைகளில் இளமையானது 1.7 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டது என்பதை அறிந்திருக்கிறார்கள். அதேபோல் மணற்கல் அடுக்குகளில் மிகப் பழமையானது 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்பது தெரியும்.

இதன் பொருள் என்னவென்றால், பூமியின் வரலாற்றுப் பதிவில் ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி ஆண்டு இடைவெளி உள்ளது. இன்றுவரை, இடையில் உள்ள பாறைகளுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.

உலகளாவிய ஒழுங்கின்மை

கிராண்ட் கேன்யனில் காணாமல் போன பாறை தெளிவாக இருந்தாலும், உண்மையில் இது பூமி முழுவதுமே காணப்படுகிறது.

"எந்தக் கண்டத்தின் மையத்திலும் - அமெரிக்கா, சைபீரியா அல்லது ஐரோப்பாவில் போதுமான அளவு கீழே துளையிட்டால், இந்த மர்மமான புவியியல் ஒழுங்கின்மையைக் காண முடியும்" என்று கூறுகிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் ஸ்டீபன் மார்ஷக்.

"இதன் பொருள் என்னவென்றால், உங்களுக்கு கீழே எல்லா இடங்களிலும், அந்த முரண்பாட்டின எல்லை உள்ளது. சில நேரங்களில் அது மேற்பரப்புக்கு அருகில் இருக்கலாம். சில நேரங்களில் அது சில கிலோ மீட்டர் தொலைவுக்குக் கீழே இருக்கலாம். ஆனால் எங்கும் இருக்கிறது. இது பூமியின் வரலாற்றைப் பற்றிய மிக மிக முக்கியமான கதையைச் சொல்கிறது."

பில்லியன் ஆண்டுகள் காணாமல் போனது என்ற கண்டுபிடிப்பு அற்பமான விஷயம் அல்ல. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இது இன்னுமொரு விவரிக்க முடியாத நிகழ்வுக்கு முன் நிகழ்ந்திருக்கிறது.

அதன் பெயர் கேம்ப்ரியன் வெடிப்பு. கடல்கள் திடீரென விசித்திரமான மற்றும் அறிமுகமில்லாத உயிரினங்களிடம் இருந்து விலகி தற்போதிருக்கும் பல உயிரினங்களின் வாழ்விடமான சம்பவம். இது 13-25 மில்லியன் ஆண்டு இடைவெளியில் நடந்திருக்கிறது. 1840 களில் இந்தச் சிக்கல் அடையாளம் காணப்பட்டது. சார்லஸ் டார்வினுக்கு இது சவாலாக இருந்தது. அவர் அதை "விவரிக்க முடியாதது" என்று அழைத்தார்.

இரண்டாவதாக, காணாமல் போனதாககக் கருதப்படும் ஆண்டுகளில் பூமி தீவிரமான பருவநிலை மாற்றத்திற்கு உட்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் முற்றிலும் உறைந்த மேற்பரப்பைக் கொண்ட பெரிய பனிப் பந்து போல பூமி மாறியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆயினும் அந்தக் காலகட்டத்தையும் தாண்டி உயிரினங்கள் எப்படி வாழ்ந்தன என்பது குறித்து போதுமான தெளிவு இல்லை.

பனிப்பந்து

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேற்பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது

இந்த இருண்ட யுகத்தில் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்திருந்தால், புதிர்களுக்கு சில பதில்களைக் கண்டுபிடித்திருப்போம்.

"இது பூமியின் வரலாற்றில் நிறைய சம்வங்கள் நடக்கும் போது ஏற்பட்டிருக்கும் ஒரு இடைவெளி" என்கிறார் கொலராடோ பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் துறையின் இணை பேராசிரியர் ரெபெக்கா ஃப்ளவர்ஸ். " இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில் தெளிவாக தொடர்புடையவை." என்று அவர் கூறுகிறார்.

இந்த அடிப்படையில் காணாமல் போன அந்த நூறுகோடி ஆண்டுகளில் என்ன நடந்திருக்கலாம் என்பது பற்றிய பல கோட்பாடுகள் வெளிவந்திருக்கின்றன.

கோட்பாடு 1: பனிப்பந்து

இன்று பூமியின் பனிப்பாறைகளில் என்ன நடக்கிறது என்பதை வைத்து காணாமல் போன காலகட்டத்தில் என்ன நடந்திருக்கலாம் என்று கணிப்பது. பூமியின் இரண்டாவது பெரிய பனிப்பகுதியான கிரீன்லாந்து பனி அடுக்குப் பாறைகளை, இது அந்தத் தீவின் மேற்பரப்பில் 80%, அதாவது சுமார் 1.7 மில்லியன் சதுர கிமீ அளவுக்குப் படர்ந்திருக்கிறது.

ஆறுகளைப் போலவே, பனிப்பாறைகளும் நகரலாம். ஆனால் மிக மெதுவாக நகரும். அவை படிந்திருக்கும் பூமயின் மேலடுக்கை விட்டு படிப்படியாக நகர்ந்து செல்கின்றன. இது பல்லாயிரக்கணக்கான அல்லது மில்லியன் ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், இறுதியில் இந்த அரிப்பு குறிப்பிடத்தக்க அளவு பாறைகளை அழித்துவிடும். இது கிரீன்லாந்திலும் நடந்திருக்கிறது.

பூமி ஒரு பெரிய பனிப்பந்தாக இருந்தபோது, இதே செயல்முறைகள் பூமியின் முழு மேற்பரப்பிலும் நடந்திருக்கிறது. ஒரே கேள்வி என்னவென்றால், எந்த அளவு பனியும் ஒரு பில்லியன் ஆண்டு பாறையை அழித்துவிடுமா என்பதுதான்.

2018 இல், பல பல்கலைக்கழக சகாக்களுடன் சேர்ந்து, பேராசிரியர் பிரஹின் கெல்லர் என்பவர் இந்த கேள்விக்கு பதிலளிக்க முயன்றார். பல ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு குழு உருவாக்கிய மாதிரியின் அடிப்படையில், பனிப்பந்து பூமியின் மேற்பரப்பில் "ஈரமான" பனிப்பாறை இருந்திருக்கும் என்று அவர்கள் கருதினர். அது நகரக்கூடியதாகவும் இருந்திருக்கும்.

பனிப்பந்து

பட மூலாதாரம்,ALAMY

இந்தப் பனி அடுக்கு நகர்வு, ஒட்டுமொத்தமாக, சுமார் 717 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி சுமார் 580 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 3-5 செங்குத்து கிமீ அளவுக்கு பாறையை அகற்றியிருக்கும் என்று கணித்தனர். இது பவல் கூறிய "மகா முரணுக்கு" போதுமானது.

கோட்பாடு 2: ஒரு சூப்பர் கண்டத்தின் மரணம்

ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குரிய பாறைகள் காணாமல் போனதற்கான மற்றொரு சாத்தியம் என்னவென்றால், ரோடினியா என்கிற சூப்பர் கண்டத்தின் மறைவு. கிழக்கு அண்டார்டிகா, இந்தியா, சைபீரியா, சீனா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் ஒரே இடத்தில் குவிந்துள்ள ஒரு மறக்கப்பட்ட நிலப்பரப்பு இது. இது முதன்முதலில் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்திருந்தது. பின்னர் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை படிப்படியாக உடைந்தது.

"இது அடிப்படையில் உலகின் அனைத்து மேற்பரப்பையும் ஒரே மாபெரும் கண்டமாக இணைத்தது" என்கிறார் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முனைவர் பட்ட மாணவர் மைக்கேல் டெலூசியா.

பூமியின் மையத்தில் இருந்து வெளியிடப்பட்ட வெப்பத்தால் அந்தக் கண்டம் உடையத் தொடங்கியது.

"நிச்சயமாக, பொருள்கள் சூடாகும்போது, அவை விரிவடைகின்றன," என்கிறார் டெலூசியா. அடிப்பகுதி சூடானதால், பூமியின் மேற்பரப்பு சில கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்ந்திருக்கலாம்.

இது ரோடினியாவின் முறிவை துரிதப்படுத்தியது மட்டுமல்லாமல், முந்தைய ஒரு பில்லியன் ஆண்டுகளில் நடந்த எல்லாவற்றையும் பற்றிய பதிவையும் அழித்திருக்கலாம்.

இந்த கோட்பாட்டின் படி, ரோடினியா சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக ஒரு பெரிய, மலைப்பாங்கான பீடபூமியைப் போல தோற்றமளித்திருக்கும். எல்லா உயிர்களும் அதைச் சுற்றியுள்ள பரந்த கடலில் இருந்திருக்கலாம். இது இறுதியில் மேற்பரப்பு மட்டும் எதுவும் இல்லாமல் அழிக்கப்பட்டிருக்கலாம். அதுவே பாறைகள் காணாமல் போனதற்கும் காரணமாக அமைந்திருக்கும்.

கோட்பாடு 3: இடைவெளிகளின் குழப்பம்

இது மிக சமீபத்திய கோட்பாடு.

ஒரு பில்லியன் ஆண்டுகள் காணாமல் போக இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று பாறை உருவாகவில்லை. அல்லது அனைத்தும் அகற்றப்பட்டது.

கிராண்ட் கேன்யன் எனப்படும் செங்குத்துப் பெரும் பள்ளத்தாக்கில் "மகா முரண்" மிகத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பல இடங்களிலும் இதுபோன்ற தோற்றங்களைப் பார்க்க முடியும். அவற்றில் ஒன்று அமெரிக்காவின் வடகிழக்கில் ஹட்சன் விரிகுடாவைச் சுற்றியுள்ள பண்டைய பாறையின் பரந்த பகுதியான கனடியன் கேடயம் (Canadian Shield). இங்கே நடந்த சமீபத்திய ஆராய்ச்சி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

பவெல்

பட மூலாதாரம்,ALAMY

 
படக்குறிப்பு,

பவெல் மற்றும் அவரது குழு

"பூமி பனிப்பந்தாக மாறுவதற்கு முன்னர் கிராண்ட் கேன்யனில் பெரும் அரிப்பு ஏற்பட்டதாகத் தோன்றுகிறது" என ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஃப்ளவர்ஸ் கூறுகிறார், "அதே நிகழ்வு கனேடிய கேடயத்தில் பூமி பனிப்பந்தாக மாறியபோதோ அல்லது அதற்குப் பிறகோ நிகழ்ந்திருக்கிறது."

இதன்படி பார்த்தால், காணாமல் போன பாறைகள் ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் இரண்டு வெவ்வேறு இடைவெளிகள் நடந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அழிக்கப்பட்ட பாறையின் இரண்டு அடுக்குகள் உண்மையில் தனித்தனியானதாக இருந்தால், அவை பூமி பனிப்பந்து ஆனது போன்ற ஒரே அசாதாரண நிகழ்வால் ஏற்படவில்லை என்று தெரிகிறது. அதனால் பூமி மேலடுக்கு உயர்ந்தது போன்ற பல்வேறு நிகழ்வுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் ஃப்ளவர்ஸ்.

விலகாத மர்மம்

ஆயினும் புதிர் விலகிவிடவில்லை. . விவாதம் இன்னும் தொடர்கிறது. அனைத்து நிபுணர்களும் அதிக தரவின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். அதிர்ஷ்டவசமாக இது கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

இதில் முக்கியமானது "தெர்மோக்ரோனாலஜி" என்று அழைக்கப்படும் ஒரு நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். இது பாறைகள் உருவானதிலிருந்து அவற்றின் வெப்பநிலை எவ்வாறு மாறியது என்பதை அளவிடுவதன் மூலம் அதன் வரலாற்றை விவரிக்கும்.

"இந்த நுட்பத்தின் அடிப்படையில் பூமியின் வரலாற்றில் காணாமல் போன பக்கங்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்கிறார் பேராசிரியர் மெக்டொனால்ட்.

அவை என்ன ரகசியங்களை கொண்டிருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்?

https://www.bbc.com/tamil/science-58765562

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.