Jump to content

காமராஜர் என்ற தமிழ்நாடு கண்டடைந்த கிங் மேக்கரின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காமராஜர் என்ற தமிழ்நாடு கண்டடைந்த கிங் மேக்கரின் கதை

  • எம்.ஏ.பரணிதரன்
  • பிபிசி தமிழ்
9 மார்ச் 2021
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

இன்று காமராஜர் நினைவு நாள். மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜரை குறிப்பிடலாம்.

இவரது படிப்பு வெறும் ஆறாம் வகுப்பு மட்டுமே. 16ஆம் வயதில் காங்கிரஸ் கட்சியின் கடைக்கோடி தொண்டனாக அரசியல் பாதையை தேர்வு செய்த காமராஜ், 36 வயதை நிறைவு செய்யும் முன்பே காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவரானவர்.

ஒன்பது வருட சிறை வாழ்க்கை, ஒன்பது வருட முதல்வர் என மாறுபட்ட அரசியல் அனுபவங்களை வாழ்வில் கண்ட அவர், தனது வாழ்காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் காமராஜ் அணி, ராஜாஜி அணி என இரு அணிகள் இயங்கும் அளவுக்கு தனக்கென தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட தலைவராக விளங்கினார்.

மெட்ராஸ் மாகாணத்தின் மூன்றாவது முதல்வராக 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டுவரை என ஒன்பது ஆண்டுகளுக்கு பதவி வகித்த காமராஜ் அரசியலில் விட்டுச் சென்ற நினைவலைகள் இன்றைய அரசியல் உலகில் பல தலைவர்களுக்கும் படிப்பினையாக கருதப்படுகிறது. காமராஜ் முதல்வர் பதவியில் இருந்தபோது அவர் நிறைவேற்றிய திட்டங்கள், எளிமையான அவரது வாழ்க்கை பல தளங்களில் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் அதிகம் காணப்படாத சில அரிய தகவல்களை இந்த கட்டுரையில் வழங்க முற்பட்டிருக்கிறோம்.

அந்தக்கால மெட்ராஸ் மாகாணத்தின் மதுரைக்கு தெற்கே 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விருதுபட்டியில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, ஒரு நாடார் சமூக குடும்பத்தில் குமாரசுவாமிக்கும் சிவகாமியம்மாளுக்கும் மகனாக பிறந்தார் காமராஜ். அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது இந்த விருதுப்பட்டி.

பிறந்தவுடன் காமாட்சி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட காமராஜின் பெயர் பின்னர் காமராஜ் என மாற்றப்பட்டது. குமாரசுவாமி, சிவகாமியம்மாள் தம்பதிக்கு காமராஜுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தையின் பெயர் நாகம்மாள்.

பிரம்படியால் கல்வியில் குறைந்த ஆர்வம்

காமராஜின் பள்ளிப்பருவம் வரவேற்புக்குரியதாக இருக்கவில்லை. தனது ஐந்து வயதில் அவர் படித்த ஆரம்பப்பள்ளி வாத்தியாரிடம் பிரம்படி வாங்கிய அனுபவங்கள் கடுமையானதாக இருந்தது. இதனால், அந்த பள்ளியில் இருந்து முருகய்யா என்பவர் நடத்தி வந்த இடைநிலைப்பள்ளியில் காமராஜை அவரது பெற்றோர் சேர்த்தனர்.

அங்குதான் தமிழ் மொழியில் எழுதவும் தெளிவாக பேசவும் காமராஜுக்கு வாய்ப்பு அமைந்தது. அந்த காலத்தில் விருதுப்பட்டியில் இருந்த ஒரே உயர் பள்ளி க்ஷத்ரிய வித்யாலயா. நாடார் சமூகத்துக்கு பிள்ளைகளுக்கு இலவச கல்வி, பிடி அரசி வழங்கும் வழக்கத்தை அந்த பள்ளி நிர்வாகம் கொண்டிருந்தது. அந்த பள்ளியில் 1910-11 கல்வியாண்டில் சேர்ந்தார் காமராஜ்.

வ.உ. சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வந்தே மாதரம் முழக்கத்தால் கவரப்பட்ட காமராஜ், 1915ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியாவுக்கு திரும்பியபோது காமராஜின் சுதந்திரப்பற்றும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வும் தீவிரமாகியது.

அரசியல் பிரவேசத்தை தூண்டிய சம்பவம்

ஜாலியன்வாலா பாக்

பட மூலாதாரம்,BERNARD GAGNON

1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் ரெளலட் சட்டத்துக்கு எதிராக திரண்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்த சம்பவம், தனது தீவிர அரசியல் பிரவேசம் குறித்து காமராஜை சிந்திக்கத் தூண்டியது.

அந்த சம்பவம், தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக்க, காந்தி வகுத்த அகிம்சை போராட்ட உத்தியால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள். அதில் ஒருவராக இருந்த காமராஜ், 1919ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். காந்தியின் ஒத்துழமையாமை இயக்கத்தில் பங்கெடுத்தபோது, காமராஜுக்கு வயது, வெறும் 18 மட்டுமே.

இந்த காலகட்டத்தில்தான் காமராஜின் தீவிர அரசியல் கவனத்தை திசை திருப்ப அவரை தனது மகள் வழி மூத்த பேத்தி மங்கலத்துக்கு திருமணம் செய்து வைக்க சிவகாமியம்மாள் முடிவெடுத்தார். ஆனால், வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாதவராகவே தனது ஆயுளை நிறைவு செய்தார் காமராஜ்.

காந்தியுடன் முதல் சந்திப்பு

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

காங்கிரஸ் கட்சியில் காமராஜ் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திர இந்தியா இயக்கத்தை முன்னெடுக்கும் நோக்குடன் மதுரை வந்த காந்தியை அவர் சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சியில் ஆரம்பப்பொறுப்பு

அது 1922ஆம் ஆண்டு. சாத்தூர் தாலுகாவில் ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக காமராஜ் தேர்வானார். அந்த மாநாட்டின் துவக்க விழா செயலாளராகவும் காமராஜ் இருந்தார். அடுத்த ஆண்டு கள்ளுக்கடை முற்றுகை போராட்டத்தில் காமராஜ் கலந்து கொண்டார்.

1927ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 43ஆவது வருடாந்திர மாநாடு நடந்தது. அங்குதான் முதல் முறையாக ஜவாஹர்லால் நேரு, சத்தியமூர்த்தி ஆகியோரை சந்தித்தார் காமராஜ். முதல் சந்திப்பிலேயே நேருவை தனது சொந்த ஊரான விருதுநகரில் ஒரு கட்சி மாநாட்டில் பங்கேற்க சம்மதிக்க வைத்தார் காமராஜ்.

1929ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சைமன் ஆணையத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களை திரட்டிப் போராடியது, காமராஜின் ஆளுமை திறனை நேரு அங்கீகரிக்க காரணமாக இருந்தது.

உப்பு சத்தியாகிரகமும் முதல் சிறைவாசமும்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

1930ஆம் ஆண்டில் காந்தி, பிரிட்டிஷ் அரசு நிர்வாகம் கொண்டு வந்த உப்பு சட்டத்தை எதிர்த்து உப்புச்சத்தியாகிரகத்தை தொடங்கினார். தமிழ்நாட்டில் அந்த போராட்டத்தை வழிநடத்திய ராஜாஜியுடன், திருச்சி முதல் வேதாரண்யம் வரை தொண்டர்கள் சென்றனர். அந்த போராட்டத்தில் தமது ஆதரவாளர்களுடன் பங்கெடுத்த காமராஜ் கைதானார். 1930ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கைதான காமராஜுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், 1931ஆம் ஆண்டில் நடந்த காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி அவர் 1931ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இதுவே, காமராஜ் தனது அரசியல் பொதுவாழ்வில் எதிர்கொண்ட முதலாவது சிறைவாசம்.

கட்சியில் தொடங்கிய செல்வாக்கு

அது 1931ஆம் ஆண்டு. சத்தியமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாகாண கூட்டம் நடந்தபோது, ராமநாதபுரத்தின் சார்பில் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக காமராஜ் தேர்வானார். இதுவே காங்கிரஸ் கட்சியில் காமராஜுக்கு கிடைக்க முக்கியமான முதலாவது அரசியல் பதவியானது.

இந்த காலகட்டத்தில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் வெற்றிகரமாக அமையாததால் லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் அதிருப்தியுடன் காந்தி வெளியேறினார். அப்போது தடை உத்தரவுக்கு எதிராக காமராஜ் செயல்படாதபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை பிரிட்டிஷ் அரசு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது. பிறகு அவர் 1933ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி விடுதலையானார். இது காமராஜின் இரண்டாவது சிறைவாசமானது.

1933ஆம் ஆண்டில் கவர்னர் சர் ஜான் ஆண்டர்சனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் அவரை கொல்ல துப்பாக்கிக்கு ஏற்பாடு செய்ததாகவும் காமராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அந்த சம்பவத்தில் அப்ரூவர் ஆனவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நேரத்தில் காமராஜ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்க ஆதாரமில்லாததால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதேபோல, விருதுநகர் காவல் நிலையத்தை வெடிவைத்து தகர்க்க தனது நண்பர்கள் முத்துசாமி, மாரியப்பாவுடன் சேர்ந்து முயன்றதாக காமராஜ் மீது மற்றொரு வழக்கை காவல்துறையினர் தொடர்ந்தனர். அந்த வழக்கும் அடிப்படையற்றது என காமராஜின் வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசஃப் நிரூபித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பொதுச்செயலாளர்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

1936ஆம் ஆண்டில் சத்யமூர்த்திக்கும் சி.என். முத்துரங்க முதலியாருக்கும் இடையே கட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய வேளையில், ராஜாஜி ஆதரவு பெற்ற சத்தியமூர்த்திக்கு வெற்றி கிட்டியது. அப்போது கட்சியின் பொதுச்செயலாளராக காமராஜை நியமித்தார் சத்தியமூர்த்தி. அந்த பதவியைத் தொடர்ந்து 1936இல் மாநிலத்தில் நேரு சுற்றுப்பயணம் செய்தபோது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு காமராஜுக்கு கிடைத்தது.

காமராஜின் களப்பணியை நேரடியாகவே நேரு அப்போது அறிந்தார். 1937ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு காமராஜ் தேர்வானார்.

14 ஆண்டுகளாக தொடர் கட்சித் தலைவர்

1940இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தபோது, பிராமணர் அல்லாத ஒருவர் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்பதில் ராஜாஜி மற்றும் சத்யமூர்த்தி அணியினர் உறுதியாக இருந்தனர். இதனால் ராஜாஜி பரிந்துரைப்படி சுப்பையாவை தலைவர் பதவிக்கு முன்னிறுத்த சத்தியமூர்த்தியை இணங்க வைக்க ராஜாஜி முற்பட்டார். ஆனால், முனிசாமி பிள்ளை, ருக்மணி லக்ஷ்மிபதி குமாரசாமி ராஜா போன்றோர் தலைவராக வேண்டும் என காமராஜ் விரும்பினார். கடைசியில் ராஜாஜியும் முத்துரங்கா முதலியாரும் சுப்பையாவை பரிந்துரைக்க, சத்யமூர்த்தி காமராஜை தலைவர் பதவிக்கு முன்னிறுத்தினார். அப்போது முதல் 1954ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜ் 14 ஆண்டுகளுக்கு நீடித்தார்.

வழிகாட்டியை இழந்த காமராஜ்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

காமராஜ் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் குருநாதரும் வழிகாட்டியுமான சத்தியமூர்த்தி 1943ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காலமானார்.

1942ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி பாகிஸ்தான் பிரிவினை தேசத்தை உருவாக்க பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் ஜின்னா கேட்டுக் கொண்டார். அந்த திட்டத்தை எதிர்த்த ராஜாஜி, 1944ஆம் ஆண்டு தனது திட்டத்தை முன்வைத்தார். அது காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையிலான உடன்பாடு தொடர்பானது. போருக்குப் பிறகு எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனரோ, அவர்களின் சம்மதப்படி தேசப்பிரிவினைக் கோரிக்கை முடிவு செய்யப்படும். இதுபோன்ற அம்சங்கள் நிறைந்த திட்டம் "ராஜாஜி ஃபார்முலா" என அழைக்கப்பட்டது.

ஆனால், காமராஜ் உள்பட காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் ராஜாஜி திட்டத்தை ஏற்கவில்லை. இதனால், 1943ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி ராஜாஜி, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினார்.

1945இல் காமராஜ் சிறையில் இருந்து வெளி வரவும், காங்கிரஸ் கட்சிக்குள் ராஜாஜி மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்த நிகழ்வும் ஒரு சேர நடந்தது. ஆனால், ராஜாஜியின் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வை காமராஜ் தள்ளி வைத்துக் கொண்டே வந்தார். இதனால் இரு தலைவர்களுக்கும் இடையிலான பனிப்போர் அதிகமாகியது. கடைசியில் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மவுலானா ஆசாத், அருணா ஆசிஃப் அலி, சர்தார் படேல் ஆகியோர் காமராஜிடமும் ராஜாஜியுடனும் சமாதனம் பேச தொடர்பு கொண்டனர். இதையடுத்தே இரு தரப்பும் சமரசமாகினர்.

கிங் மேக்கர் ஆன வரலாறு

அது 1946ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல். சாத்தூர் தொகுதியில் 30,998 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற காமராஜ், தமிழ்நாடு முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். தொடக்கத்தில் ராஜாஜி அல்லது பட்டாபி சீதாராமையாவின் பெயரை நினைவில் வைத்திருந்த காந்தி, டி. பிரகாசத்தின் முன்மொழிவை விரும்பவில்லை.

விரிவான விவாதத்துக்குப் பிறகு பட்டாபி சீதாரமையாவை ஆதரிக்க ஒப்புக் கொண்ட காமராஜ், ராஜாஜியும் அவரை ஆதரிக்க கேட்டுக் கொள்ளுமாறு காந்தியிடம் வற்புறுத்தினார். ஆனால், டி. பிரகாசம், முதல்வர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்ததால் அவரே மெட்ராஸ் மாகாண முதல்வராக 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி ஆனார். இருப்பினும் ஓராண்டுக்கு உள்ளாகவே நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பிரகாசம் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து காமராஜ் ஆதரவுடன் ஓ.பி. ராமசாமி ரெட்டியார் 1947ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி மாகாண முதல்வரானார்.

காந்தியின் படுகொலையும் இந்திய சுதந்திரமும்

காந்தி

பட மூலாதாரம்,TWITTER

இந்த காலகட்டத்தில் இந்தியாவின் விடுதலைக்குப் பிந்தைய அதிகார மாற்றலை மேற்கொள்ளும் அதிகாரியாக மவுன்ட் பேட்டனை பிரிட்டன் பிரதமர் அட்லீ நியமித்தார். அதன்படியே 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய விடுதலை அறிவிக்கப்பட்டு அதிகார மாற்றல் நடவடிக்கையை மவுன்ட் பேட்டன் நடைமுறைப்படுத்தினார். ஒரு புறம் இந்திய சுதந்திரம், மறுபுறம் பாகிஸ்தான் பிரிவினை மற்றும் அதையொட்டி நடந்த வன்முறை, வகுப்புவாத கலவரங்களை தடுக்கும் முயற்சியில் காந்தி ஈடுபட்டிருந்தார். ஆனால், 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி காமராஜுக்கு பேரிடியாக இருந்தது.

1949ஆம் ஆண்டு ஓ.பி. ராமசாமி ரெட்டியாருக்கு அடுத்தபடியாக குமாரசாமி ராஜா, மெட்ராஸ் பிரசிடென்சி முதல்வரானார். அதில் காமராஜின் பங்கு மிகப்பெரியதாக இருந்தது. அவரது பதவிக்காலத்தில்தான் இந்தியாவுக்கு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு ஆனது.

இதன் பிறகு 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக நான்காவது முறையாக காமராஜ் பதவியேற்றார்.

இந்திய அரசியலமைப்பின்படி, சுதந்திர இந்தியாவின் முதலாவது தேர்தல் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபோதும், தேர்தலில் அதனால் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியவில்லை. மொத்தம் உள்ள 375 இடங்களில் 152இல் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. காமராஜின் கருத்துகளை ஏற்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முயற்சியால் உருவான ஆறுக்கும் மேற்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, அரசின் தலைமை பதவியை ராஜாஜி வகிக்க வேண்டும் என குரல் கொடுத்தார்.

இதனால் காமராஜ், 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகினார். பிறகு பி. சுப்பராயன் மாநில தலைவரானபோதும் எட்டு மாதங்கள் மட்டுமே அவரால் அப்பதவியில் நீடிக்க முடிந்தது. அதன் பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவராக காமராஜும், இந்திய காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ராஜாஜியும் நியமிக்கப்பட்டனர். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

ராஜாஜியின் வீழ்ச்சி

சிறந்த உணவு திட்டமிடல் நிர்வாகியாகவும் கம்யூனிஸ்டுகளை சமாளிக்கக் கூடியவராகவும் ராஜாஜி அறியப்பட்டபோதும், அவரது சில முடிவுகள் சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே எதிர்க்கப்பட்டது.

இந்திய விடுதலைதான் காங்கிரஸின் நோக்கம். அது நிறைவேறி விட்டதால், காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என ராஜாஜி முழக்கமிட்டார். பிறகு சிக்கன நடவடிக்கையாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் நிலம் ஒதுக்கீடு, காந்தியின் கொள்கைக்கு எதிரானது என்பதால், அதை வழங்கக்கூடாது என்று அவர் உத்தரவிட்டார்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக, கல்வித்துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்காமலேயே புதிய குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அப்போது அவருக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு, ஒன்று குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கைவிட வேண்டும் அல்லது முதல்வர் பதவியை துறக்க வேண்டும் என்ற இரு வாய்ப்புகளை அவருக்குத் தந்தது. கடைசியில், தனது திட்டத்தை எதிர்ப்பது, தன்னையே எதிர்ப்பது போல எனக்கூறி தனது பதவியை 1954ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி ராஜிநாமா செய்தார் ராஜாஜி.

சென்னையை தக்க வைத்த காமராஜ், ராஜாஜி

முன்னதாக, ராஜாஜி ராஜிநாமா செய்த காலத்தில், மெட்ராஸ் மாகாணம், மொழி அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. இதனால், மெட்ராஸ் நகரை ஆந்திர பிரதேசத்துடன் இணைக்கும் தனி திட்டத்துக்கு எதிராக நேருவின் ஆதரவை காமராஜும் ராஜாஜியும் பெற்றனர்.

இதன் பிறகு 1952ஆம் ஆண்டில் ராஜாஜி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த முதல் மக்களவை பொதுத்தேர்தலில் காமராஜுக்கு 46.77 வாக்குகளும் ஜி.டி. நாயுடுவுக்கு 34.73 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.

அப்போது ராஜாஜி ஏற்படுத்திய வெற்றிடத்தை உணர்ந்த காங்கிரஸ் மேலிடம், மாநிலத்தின் முதல்வராக காமராஜ் இருந்தால் அது கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என நம்பியது. இதைத்தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் சி. சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக 41 வாக்குகளும் காமராஜுக்கு ஆதரவாக 93 வாக்குகளும் கிடைத்தன.

1954 - முதல் அமைச்சரவை

மாநில முதல்வராக பதவி ஏற்கும் முன்பு ஒரு உறுதிமொழியை கட்சித் தொண்டர்களிடம் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் பெற்றுக் கொண்டார் காமராஜ். 1957ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதிவரை அவரது அமைச்சரவை இருந்தது. உள்கட்சி அளவில் நடந்த முதல்வருக்கான தேர்வில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி. சுப்பிரமணியம் ராஜாஜியின் ஆதரவாளர் என்றபோதும், அவரை அழைத்து அவருக்கு நிதியமைச்சர் பதவியைக் கொடுத்தார் காமராஜ்.

காமராஜ் முதல்வராக இருந்தபோது அவர் எம்எல்ஏ ஆக பதவி வகிக்கவில்லை. அவர் எம்எல்சி ஆக இருந்தார். இதனால் பின்வாசல் வழியாக முதல்வர் பதவிக்கு வந்தவர் காமராஜ் என்ற விமர்சனம் வலுத்தது. அப்போது காலியாக இருந்த வட ஆற்காட்டில் உள்ள குடியாத்தம் தொகுதியில் போட்டியிட விரும்பினார் காமராஜ். இடதுசாரி கட்சிகளைத் தவிர வேறு யாரும் காமராஜை எதிர்க்கவில்லை. திராவிடர் கழகம், திமுக ஆகியவை காமராஜை ஆதரித்தன. அவருக்கு ஆதரவாக அந்த கட்சிகளின் நாளேடுகளில் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

1957இல் மெட்ராஸ் மாகாணத்துக்கு நடந்த பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் இருந்து தேர்வான காமராஜுக்கு 36,400 வாக்குகள் கிடைத்தன. அப்போது 205 சட்டமன்ற தொகுதிகளில் 151 இடங்களில் காங்கிரஸ் வென்றது.

1957ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் தேதி இரண்டாவது முறையாக தொடர்ந்து முதல்வரானார் காமராஜ். இரண்டாவது அமைச்சரவையிலும் காமராஜ் நீங்கலாக ஏழு பேர் இடம்பிடித்தனர்.

1962ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் சாத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்ட காமராஜுக்கு, மொத்தம் பதிவான 1,01,991 வாக்குகளில் 49,950 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்வதந்திரா கட்சி வேட்பாளர் பி. ராமமூர்த்திக்கு 33,506 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் ராமசாமி ரெட்டியாருக்கு 2,811 வாக்குகளும் செல்லாத வாக்குகள் 3,044 என்றும் பதிவானது.

அந்த தேர்தலில் மொத்தம் இருந்த 206 தொகுதிகளில் 136 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. அதுவரை ஏழு பேரை மட்டுமே தனது அமைச்சரவையில் சேர்த்து வந்த காமராஜ், மூன்றாவது அமைச்சரவையில் எட்டு பேரை தனது அமைச்சரவையில் கொண்டிருந்தார்.அந்த அமைச்சரவையில் கே. காமராஜ் நீங்கலாக, ஆர். வெங்கட்ராமன், எம். பக்தவத்சலம், ஜி. பூவராகவன், என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றடியார், பி. கக்கன், வி. ராமையா, ஜோதி வெங்கடாச்சலம், எஸ்.எம். அப்துல் மஜித் ஆகியோர் இருந்தனர்.

தோல்வி முகத்தில் காங்கிரஸ்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

தமிழ்நாட்டில் 1957ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது இரண்டு சதவீத வாக்குகளை காங்கிரஸ் கட்சி கூடுதலாகப் பெற்றபோதும், அதில் அக்கட்சி 13 இடங்களை பறிகொடுத்திருந்தது. சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம், முந்தைய தேர்தலில் பெற்ற 15 இடங்கள் என்ற நிலையைக் கடந்து இம்முறை 50 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.

முந்தைய தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் தோற்றதோ அங்கெல்லாம் 1962ஆம் ஆண்டு தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்தார் காமராஜ். அதில் திமுக வென்ற 15 தொகுதிகளில் 14 இடங்களை மீட்டது காங்கிரஸ். ஒரு இடத்தில் மட்டும் திமுக பொருளாளர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இருந்தபோதும், அந்த தேர்தலில்தான் 50 இடங்களில் திமுக வென்று தனது வாக்கு சதவீதத்தை பெருக்கிக் கொண்டது.

என்னதான் தமது அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், பெருவாரியான மக்களின் கவனம் திமுகவை நோக்கி திரும்புவதை கவனித்தார் காமராஜ். ஆட்சி, அதிகாரத்தில் தங்களின் கவனத்தை காங்கிரஸார் செலுத்துவதாகக் கூறிய அவர், அதே ஈடுபாட்டை மக்கள் சேவை மற்றும் வீழ்ச்சியை சந்திக்கும் கட்சியை மீட்பதிலும் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் காமராஜ்.

அந்த முடிவுக்கு அச்சாரமாக தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் நேரடியாகவே களமிறங்கினார் காமராஜ். அவரது இந்த திடீர் நடவடிக்கை, காங்கிரஸ் கட்சியில் ஆட்சியிலும் பதவியிலும் உள்ள தலைவர்களும் அரசுப் பொறுப்பை உதறி விட்டு கட்சியை வலுப்படுத்தும் முயற்சிக்கு வித்திட்டது. இதுவே, பிரபலமாக காமராஜ் திட்டம் அல்லது கே திட்டம் என்று அழைக்கப்பட்டது.

கே-திட்டமும் காமராஜின் விளக்கமும்

1963ஆம் ஆண்டில் ஹைதராபாதில் நடந்த கட்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், கே-திட்டத்துக்கு நேருவின் ஒப்புதலை பெற்றதாக தெரிவித்தார். அப்போது அவர், ஆட்சியும் அதிகாரமும் கட்சியில் உள்ள எந்தவொரு தனி நபரின் சொத்தாக இருக்கக் கூடாது. அந்த வகையில், எந்தவொரு தனி நபரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பதவியிலும் தொடருவது கட்சிக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை என்று கூறினார்.

தனது ராஜிநாமா முடிவைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடன் முழு நேரத்தை செலவிட்டு கட்சியை ஆணி வேர் அளவில் வலுப்படுத்தப்போவதாக காமராஜ் தெரிவித்தார்.

1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி, டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பேசிய நேரு, காமராஜ் வகுத்த திட்டம் இதுவரை எந்தவொரு கட்சியும் சிந்திக்காத, ஈடு இணையற்ற திட்டம் என்று புகழாரம் சூட்டினார். கே-திட்டம், தமிழ்நாடுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரிவடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்த இரு வாரங்களில் காங்கிரஸ் ஆளும் மத்திய, மாநில அரசுகளில் யாரெல்லாம் பதவி விலகுவார்கள், கட்சியை வலுப்படுத்துவார்கள் என்ற பட்டியலை வெளியிட்டார் நேரு.

அதன் விளைவாக, அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி (உள்துறை), மொரார்ஜி தேசாய் (நிதித்துறை), ஜெகஜீவன் ராம் (அஞ்சல் துறை), எஸ்.கே. பாட்டீல் (உணவுத்துறை), கோபால் ரெட்டி (வானொலி ஒலிபரப்பு), ஸ்ரீ மாலி (கல்வி) மற்றும் மாநிலத்தில் முதல்வர்களாக இருந்த காமராஜ் (தமிழ்நாடு), பட்நாயக் (ஒரிசா), சி.பி. குப்தா (உத்தர பிரதேசம்), பினோதானந்த்ஜா (பிஹார்), மந்த்லாய் (மத்திய பிரதேசம்) ஆகியோர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு முழு நேர கட்சிப்பணிக்கு திரும்பினார்கள்.

தற்கொலைக்கு சமம்: பெரியார் விமர்சனம்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜ் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார்.

காமராஜின் ராஜிநாமாவுக்குப் பிறகு தமிழக முதல்வராக பக்தவத்சலம் பதவியேற்றார். அவரது அமைச்சரவை 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பதவியேற்றது.

காமராஜின் அதிரடி அறிவிப்பாலும் செயல்பாடுகளாலும் நெகிழ்ச்சி அடைந்த நேரு, அவர்தான் அகில் இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், தொடக்கத்தில் அதை ஏற்க மறுத்த காமராஜ், நேருவின் மூன்று மாத அழுத்தத்துக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 1964ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பதவியேற்றார்.

அதே மாதம் 5ஆம் தேதி ஒரிசாவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் திடீரென நேரு உடல் நலம் குன்றிப்போனார். உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், அதே ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி நேரு காலமானார்.

நேரு காலமானதையடுத்து அவர் வகித்து வந்த இந்திய பிரதமர் பதவிக்கு மூத்த அமைச்சரவை உறுப்பினரான குல்ஸாரிலால் நந்தாவை தற்காலிக பிரதமராக அப்போதைய குடியரசு தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் நியமித்தார். ஆனால், லால் பகதூர் சாஸ்திரியை அப்பதவிக்கு நியமிக்கும் எண்ணத்தில் கட்சித் தலைவரான காமராஜ் இருந்தார். ஆனால், அப்போது மொரார்ஜி தேசாய்க்கும் பிரதமராகும் எண்ணம் இருந்தது. இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமை அடிப்படையில் பிரதமர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை காமராஜுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி வழங்கியது.

இதையடுத்து மொரார்ஜி தேசாயிடம் பேசி, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்க ஆதரவு தருமாறு காமராஜ் கேட்டார். ஆனால், தனக்கு அதில் விருப்பம் இல்லாதபோதும் கட்சியின் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு அந்த முடிவை ஆதரித்தார் மொரார்ஜி.

இந்த காலகட்டத்தில் 1965ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன் காமராஜ் போர் முனைக்குச் சென்று களத்தில் உள்ள வீரர்களுக்கு உற்சாகமூட்டினர். அந்த போர் தாஷ்கென்ட் உடன்பாட்டில் இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் கையெழுத்திட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது.

அந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மாதங்களிலேயே நெஞ்சு வலி காரணமாக லால் பகதூர் சாஸ்திரி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களாக மொரார்ஜி தேசாய், நந்தா, சவான், ஜெகஜீவன் ராம், எஸ்.கே. பாட்டீல் ஆகியோர் தங்களைத் தாங்களே நியமிக்கும் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். இதில் மொரார்ஜி, ஜெகஜீவன் ராம், எஸ்.கே. பாட்டீல் ஆகியோர் காமராஜின் கே-திட்டத்தின்கீழ் தங்களுடைய அமைச்சரவை பதவியை துறந்தவர்கள்.

ஆனால், காமராஜின் எண்ணம் வேறு விதமாக இருந்தது. அவர் தனது மனதில் அடுத்த பிரதமராக நேருவின் மகளான இந்திரா காந்தியை தேர்வு செய்யலாம் என முன்மொழிந்தார். காமராஜின் முடிவைத் தொடர்ந்து, மொரார்ஜி நீங்கலாக மற்றவர்கள் தங்களுடைய நிலையில் இருந்து பின்வாங்கினர்.

இதையடுத்து கட்சிக்குள்ளாக மொரார்ஜிக்கும் இந்திரா காந்திக்கும் இடையே நிலவிய போட்டியில், இந்திரா காந்திக்கு ஆதரவாக 355 வாக்குகளும், மொரார்ஜிக்கு ஆதரவாக 169 வாக்குகளும் கிடைத்தன.

அந்த வகையில், நேருவுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டு பிரதமர்களை தேர்வு செய்யக்கூடிய நிலையில், முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தவராக காமராஜ் இந்திய அரசியல் உலகில் அறியப்பட்டார்.

காமராஜின் முதல் தேர்தல் தோல்வி

1967ஆம் ஆண்டு மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் காமராஜ். விருதுநகர் தொகுதியில் அந்த ஆண்டு நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 82,606 வாக்குகள் பதிவாகின. அதில் காங்கிரஸ் வேட்பாளர் காமராஜுக்கு 32,136 வாக்குகள் கிடைத்தன. ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி. சீனிவாசனுக்கு 33,506 வாக்குகள் கிடைத்தன.

அந்த காலகட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜ் இருந்தார். ஒரு கட்சிக்கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி, பொதுத்தேர்தலில் தோல்வியுற்ற ஒருவர், கட்சி தேர்தல்களில் போட்டியிடும் தார்மிக உரிமைகளையும் இழக்கிறார். காரணம், அவர் ஏற்கெனவே மக்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்தவராகி விடுகிறார் என்றார்.

இந்திரா காந்தியின் இந்த விமர்சனம் தன்னை மனதில் வைத்தே இருப்பதாக உணர்ந்த காரமாஜ், 1967ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கினார். அதன் பிறகு ஓராண்டு கழித்து 1969இல் நடந்த மக்களவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜ் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் மொத்தம் 5,05,976 வாக்குகள் பதிவாகின. இதில் காமராஜ் பெற்ற வாக்குகள் 2,49,437. அதே ஆண்டு காமராஜின் தாயார் காலமானார்.

மக்களவை உறுப்பினரான காமராஜை மத்திய அமைச்சராக்க இந்திரா காந்தி விரும்பியபோதும், அதை ஏற்க மறுத்த அவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக நிஜலிங்கப்பா பதவியேற்க ஆதரவாக இருந்தார். மேலும், இந்திரா காந்தியின் பல முடிவுகளுக்கு எதிரான நிலையை காமராஜ் கொண்டிருந்தார்.

1969ஆம் ஆண்டில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி இந்திரா காந்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் ஒருவரை நியமிக்க காரிய கமிட்டி கேட்டுக் கொண்டது.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றிய இந்திரா காந்தி, கட்சியின் தலைவராக தானே இருப்பதாகவும் நிஜலிங்கப்பாவை நீக்குவதாகவும் அறிவித்தார். இதனால், ஆரம்பகால காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் காமராஜ் தலைமையிலும் இந்திரா காந்தி தலைமையிலான கட்சி காங்கிரஸ் ஆர் என்ற பெயரிலும் இயங்கின. இரு தரப்பும் ஒருவரையொருவர் பரஸ்பரம் பதவி நீக்கம் செய்து கொண்டன.

1969ஆம் ஆண்டில் உச்சத்துக்கு சென்ற இந்த மோதல் அந்த ஆண்டு டிசம்பர் வரை நீடித்தது. கடைசியில் 705 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கமிட்டியில் 446 பேர் இந்திரா காந்தி பக்கம் சேர்ந்தனர். இதையடுத்து அவரது தலைமையிலான காங்கிரஸ் ஆர் என்ற அணியை இந்திய தேசிய காங்கிரஸ் என்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

இதைத்தொடர்ந்து காமராஜ், தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் 1971ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் மீண்டும் நாகர்கோவிலில் போட்டியிட்ட காமராஜ், 2,15,324 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.சி. பாலன் 1,14,771 வாக்குகள் பெற்றார்.

காமராஜ் உயிரிழக்கும் வரை இந்த தொகுதியின் எம்.பி ஆக அவர் இருந்தார்.

இந்திராவின் அவசரநிலை ஏற்படுத்திய தாக்கம்

காமராஜ்

பட மூலாதாரம்,TWITTER

1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, ரே பரேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்தி, அரசு இயந்திரங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என மொரார்ஜி தேசாய், ஜெய பிரகாஷ் நாராயண் குரல் கொடுத்தனர். இதனால், சிவில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அந்த தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக 1975ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி நள்ளிரவில், இந்திரா காந்தியின் பரிந்துரையின்பேரில் தேசிய அளவிலான அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதின் அலி அகமது. உள்நாட்டு இடையூறுகளால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்த காலகட்டத்தில் ஜெய பிரகாஷ் நாராயண், மொரார்ஜி, சரண் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், காமராஜ் கைதாகவில்லை. அனைத்து ஊடகங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. சரியாக ஓராண்டுக்கு முன்பு தன்னால் நாட்டின் பிரதமராக அடையாளம் காட்டப்பட்ட இந்திரா காந்தியின் இந்த செயல்பாடுகள், காமராஜுக்கு கடுமையான வலியை தந்தது. ஒரு சில நாட்களில் அவசரநிலை தளர்த்தப்படலாம் என நம்பிய காமராஜுக்கு அடுத்தடுத்து நடந்த அரசியல் கைதுப்படலம் அவரது உடல்நிலையை மோசமாக்கியது. கடுமையான காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்ச்கரை அளவு அதிகரிப்பு போன்றவற்றால் காமராஜின் உடல்நிலை பலவீனம் அடைந்தது. 1975ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி தனது 73ஆம் பிறந்த நாளை மிக, மிக எளிய முறையில் கொண்டாடினார் காமராஜ். அவசரநிலை காரணமாக தன்னைத்தானே வீ்ட்டுக்குள்ளேயே அடைத்துக் கொண்ட காமராஜ், 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு நெஞ்சு வலியால் காலமானார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, காமராஜுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வை நடத்த உத்தரவிட்டார்.

1976ஆம் ஆண்டு, அவருக்கு குடிமக்களுக்கான உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியல், பொது அங்கீகாரம் ஆகிய துறைகளில் தனித்து விளங்கியதற்காக இறப்புக்கு பிந்தைய அங்கீகாரமாக பாரத ரத்னா விருதை காமராஜுக்கு தருமாறு அப்போதைய குடியரசு தலைவருக்கு பிரதமராக இருந்த இந்திரா காந்தி பரிந்துரை செய்தார்.

https://www.bbc.com/tamil/india-56315052

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.