Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

டி23 புலி வேட்டை: "காட்டுக்குள் ஜீவகாருண்யம் பார்க்கலாமா?" - வலுக்கும் கேள்விகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டி23 புலி வேட்டை: "காட்டுக்குள் ஜீவகாருண்யம் பார்க்கலாமா?" - வலுக்கும் கேள்விகள்

  • ஆ விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
33 நிமிடங்களுக்கு முன்னர்
புலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப்படம்

கும்கி யானைகள், மோப்ப நாய்கள், 150 வனத்துறை ஊழியர்கள் எனக் களமிறங்கியும் பத்து நாள்களாக புலியைப் பிடிக்க முடியாமல் நீலகிரி வனத்துறை திணறி வருகிறது. `புலியை சுடக் கூடாது என்ற எண்ணம் சரியானது. ஆனால், நகரத்தில் இருந்து பேசுகின்ற காட்டுயிர் பாதுகாப்புக்கும் காட்டையொட்டி வாழும் மக்களின் மனநிலைக்கும் இடையே ஏராளமான இடைவெளிகள் உள்ளன' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடக்கிறது கூடலூரில்?

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று, கடந்த சில வாரங்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்தது. தொடர்ந்து நான்கு பேரை தாக்கிக் கொன்றது. அதிலும், சிங்காரா வனப்பகுதியில் உள்ள குறும்பர்பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்ற நபரை தாக்கிக் கொன்ற புலி, அவரது உடல் பாகங்களையும் தின்றுவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, `புலியை வேட்டையாடி பிடிக்க வேண்டும்' என கூடலூர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். வனத்துறை அதிகாரிகளும், புலியை சுட்டுப் பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். `புலியை காப்பாற்ற வேண்டும்' என்பதை வலியுறுத்தி #savet23 என்ற ஹேஸ்டாகும் டிரெண்ட் ஆனது. இதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர், புலியை சுட்டுக் கொல்லக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இருப்பினும், தமிழ்நாடு, கேரள ஆகிய மாநிலங்களின் வனத்துறை, தமிழ்நாடு அதிரடிப்படையினர், பல்வேறு குழுக்களாகப் பிரிந்து புலியை தேடி வருகின்றனர். தேசிய புலிகள் ஆணைய காப்பகத்தின் வழிகாட்டலின்படி ஒவ்வொரு நாளும் இரவு 6 மணி வரையில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனாலும், டி23 புலியைக் கண்டறிய முடியவில்லை.

புலியின் கால் தடங்களை வைத்து சிப்பிப்பாறை நாய்கள் மூலமும் தேடுதல் பணி நடந்து வருகிறது. வனத்துறையின் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்ததில் புலியின் மூக்கு மற்றும் கண்ணில் காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு புலியின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

கமல் வைத்த வேண்டுகோள்

புலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தப் புலி, ஆட்கொல்லி புலியா இல்லையா என்பது வேறு. ஆட்கொல்லி என்பதிலேயே நிறைய விவாதங்கள் உள்ளன.

அதேநேரம், புலியை சுட்டுப் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்,' என கூறியுள்ளார்.

இந்நிலையில், மசினகுடி பகுதியில் இருந்து சிங்காரா வனப்பகுதிக்கு புலி இடம்பெயர்ந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, அந்தப் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சிங்காரா மின்நிலையம் அருகே புலி சுற்றித் திரிந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். `அதீத சோர்வுடன் அந்தப் புலி சுற்றி வருவதால் விரைவில் வனத்துறையிடம் சிக்கலாம்' எனவும் கூறப்படுகிறது.

ஜீவகாருண்யம் பார்க்கலாமா?

காளிதாஸ்
 
படக்குறிப்பு,

காளிதாஸ், `ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர்

``மேன் ஈட்டர் எனப்படும் ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்காமல் உயிரோடு பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறதே?" என `ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாசிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``புலியை சுடக் கூடாது என சிலர் பேசி வருகின்றனர். `உயிருடன் பிடிக்க வேண்டும்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகிறார். நாங்கள் சொல்ல வருவது ஒன்றுதான், வன மேலாண்மை என்பது வேறு, ஜீவகாருண்யம் என்பது வேறு. ஜீவகாருண்யத்தை வன மேலாண்மையில் திணிக்கக் கூடாது.

காட்டுயிர்கள் மீது மக்களுக்கு அக்கறை இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம். ஒரு புலியை சுடக் கூடாது என்ற எண்ணம் சரியானது. ஆனால், நகரத்தில் இருந்து பேசுகின்ற காட்டுயிர் பாதுகாப்பு என்பது வேறு. காட்டையொட்டி விளிம்புகளில் வாழும் மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது என்பது வேறு" என்கிறார்.

தொடர்ந்து பேசிய காளிதாசன், `` காட்டையொட்டி வாழும் மக்களின் ஆதரவில்தான் புலி வாழ வேண்டும். அவர்களின் உடைமைக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் வருகின்றபோது, `புலிகள்தான் வாழ வேண்டும்' என்றால் அங்கே காடு வாழ்வதற்கு சாத்தியமில்லை.

அவர்களின் கரிசனத்தோடுதான் அனைத்தும் நடக்கிறது. இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் காட்டுயிர் பாதுகாப்பு என்பது மக்களின் பங்களிப்பு இல்லாமல் நடத்துவதற்கு முன்வந்தால் தோற்றுத்தான் போக வேண்டும்.

அந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் இருக்கின்றன. இந்த ஒரு புலியை பிடிப்பதற்கு வனத்துறை முயற்சி செய்கிறது. ஆனால், புலியை பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பது களத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.

மனஅழுத்தத்தில் புலி?

அங்கு வாழும் மக்கள் மத்தியில் காட்டுக்கு எதிரான மனநிலை அதிகரிக்கும்போது காட்டுயிர் பாதுகாப்பு என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். காட்டுயிர் மேலாண்மையை விரும்பும் அனைவரின் கருத்தும் இதுதான். இந்தப் புலி, ஆட்கொல்லி புலியா இல்லையா என்பது வேறு. ஆட்கொல்லி என்பதிலேயே நிறைய விவாதங்கள் உள்ளன. அதை மனஅழுத்தத்தில் உள்ள ஒரு விலங்காகத்தான் பார்க்க வேண்டும் என்கின்றனர்.

புலிகளின் இரைப் பட்டியலில் மனிதர்கள் எப்போதும் இருந்தது இல்லை. எப்போதாவது அரிதாக அவ்வாறாக அது மாறினால், ஒன்று அதனைப் பிடிக்க வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும். எப்போதும் உயிரோடு புலியை பிடிக்கும் முயற்சிகள்தான் நடக்கும். மேடு, பள்ளம், அடர்காடுகள் நிறைந்த பகுதியில் யானையை கண்டறிவதைவிட புலியைப் பிடிப்பது என்பது இன்னமும் அரிது. மேலும், கூண்டு வைத்தால் அந்தப் புலி பிடிபடுமா என்பதும் தெரியாது.

அதற்குள் அந்தப் புலி வேறு யாரையும் கொன்றுவிடக் கூடாது. அதனை சுட வேண்டும் என்பது யாருடைய விருப்பமும் கிடையாது. புலி பிடிபட்டுவிட்டால் அது காட்டுயிர் கிடையாது. அதனை வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். இந்தப் புலியை வெளியேற்றுவதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதும் காட்டு மேலாண்மையை அதிகப்படுத்துவதும்தான் முக்கியமானது" என்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதிவான புலி!

தமிழ்நாடு வனத்துறை

பட மூலாதாரம்,TN FOREST

``புலிக்கு டி23 என்ற பெயர் எவ்வாறு வைக்கப்பட்டது?" என்றோம். ``அது டி 23 கிடையாது. அந்தப் புலிக்கு MD-T23 என்று பெயர். எம்.டி என்றால் முதுமலை. தற்போது கேமரா கண்காணிப்பு முறையில் புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. புலிகள் நடமாட்டம் உள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கு கேமராக்களை பொறுத்துவார்கள். அந்தக் கேமரா, புலி ஒன்று தென்பட்டால் இரண்டு பக்கமும் படம் பிடிக்கும். அந்தப் படங்களை அதற்கென பிரத்யேகமாக உள்ள மென்பொருளில் பதிவேற்றம் செய்வார்கள். ஒருமுறை பதிவு செய்யப்பட்டால், வேறு எங்காவது அந்தப் புலி நடமாட்டம் பதிவானாலும் அதோடு இதனைப் பொருத்திப் பார்த்துப் பெயர் கொடுப்பார்கள். புலிகளின் கணக்கெடுப்புக்காக வைத்த பெயர்தான் இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதுமலையில் இந்தப் புலி பதிவாகியுள்ளது" என்கிறார்.

`புலியை உயிரோடு பிடிக்க வேண்டும்' என்ற குரல்கள் வெளிப்பட்டாலும் பத்தாவது நாளாக உறக்கம் இல்லாமல் வனத்துறை அதிகாரிகளும் பல்வேறு குழுக்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். `அடுத்து வேறு யாரையும் அது கொல்வதற்குள் பிடிபட்டாக வேண்டும்' என கூடலூர் பகுதி மக்கள் அச்சத்தோடு பேசி வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-58788672

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

டி23 புலி : வனத் துறையை பாராட்டிய நீதிபதிகள்!

spacer.png

நீலகிரியில் சுற்றி திரிந்த டி23 புலியை உயிருடன் பிடித்ததற்காக வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் டி23 என்ற புலி இதுவரை நான்கு மனிதர்களையும், 40க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்று, அங்குள்ள மனிதர்களை அச்சுறுத்தி வந்தது. மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய இந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வந்தனர். ஆனால், புலி சிக்காமல் காட்டிற்குள் பதுங்கி வந்ததால், ஒருகட்டத்தில் புலியை சுட்டுக் கொல்ல முதன்மை வனத் துறை அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதுபோன்று கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அந்தப் புலியை கொல்லக்கூடாது, நம் நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான புலிகள் மட்டுமே உள்ளன. புலியை உயிருடன் பிடித்த பின்பு அதன் குணாதிசயங்களை ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, ட்ரோன் கேமராக்கள், கும்கி யானைகள், மோப்ப நாய்கள், ஆகியவற்றைக் கொண்டு டி23 புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத் துறையினர் ஈடுபட்டிருந்தனர். ஆனால், வனத் துறையினர் கண்ணில் படாமல் கிட்டதட்ட 22 நாட்களாக புலி போக்கு காட்டி வந்தது. ஒருவழியாக கடந்த அக்டோபர் 15ஆம் தேதி டி23 புலியை மயக்க ஊசி செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று(அக்டோபர் 21) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, டி23 புலி உயிரோடு பிடிக்கப்பட்டு, மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

புலியை உயிருடன் பிடித்த வனத் துறையினருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசயங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 

https://minnambalam.com/public/2021/10/21/32/high-court-appreciates-forest-department-for-capturing-t23-tiger-alive

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.