Jump to content

பண்டோரா பேப்பர்ஸில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் - அடுத்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்டோரா பேப்பர்ஸில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் - அடுத்தது என்ன?

  • ஜுபைர் அஹமது
  • பிபிசி செய்தியாளர்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
டெண்டுல்கர்

பட மூலாதாரம்,STU FORSTER-ICC/GETTYIMAGES

கசிந்துள்ள பண்டோரா பேப்பர்ஸ் குறித்து இந்திய அரசு பல-அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பண்டோரா பேப்பர்களில் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட 300 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் (சிபிடிடி) தலைவர் ஜேபி மொஹபத்ரா விசாரணைக் குழுவை வழிநடத்துவார். CBDT தவிர, அமலாக்க இயக்குநரகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நுண்ணறிவு பிரிவு ஆகிய அமைப்புகள் இந்த விசாரணையை மேற்கொள்ளும்.

ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத் தலைவர் அனில் அம்பானியும் அவரது பிரதிநிதிகளும் குறைந்தது 18 வெளிநாட்டு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருப்பதாக, கசிந்த இந்தப் பதிவுகள் கூறுகின்றன.

2007 - 2010 க்கு இடையில் நிறுவப்பட்ட இவற்றில் ஏழு நிறுவனங்கள் கடன் வாங்கியுள்ளன. குறைந்தது 1.3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.

இது குறித்து அனில் அம்பானியிடமிருந்து உடனடி பதில் இல்லை, ஆனால் அவர் சார்பாக ஒரு வழக்கறிஞர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம், "எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் வரி செலுத்தும் குடிமக்கள். சட்டப்படி தேவையான அனைத்தையும் இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறியுள்ளனர்." என்று தெரிவித்தார்.

அம்பானி

பட மூலாதாரம்,PUNIT PARANJPE/GETTYIMAGES

"லண்டன் நீதிமன்றத்தில் பேசும் போது அனைத்து முக்கியமான விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. ரிலையன்ஸ் குழுமம் உலகம் முழுவதும் வியாபாரம் செய்கிறது. முறையான வணிகம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக, நிறுவனங்கள் வெவ்வேறு அதிகார வரம்புகளில் வைக்கப்பட வேண்டியிருக்கிறது." என்றார் அந்த வழக்கறிஞர்.

இந்தியாவில் நேர்மையானவராகக் கருதப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரும் பண்டோரா பேப்பர்களில் வெளிவந்துள்ளது. அவர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 2016-ல் துவங்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் என்று குறிப்பிடுகிறது இந்த பண்டோரா பேப்பர்ஸ். சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் அவரது மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் பயன் பெறும் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என்று கூறப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் சிஐஓ இந்த முதலீடுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என்றும் சட்டப்படி சரியானவை என்று ஊடகங்களில் ஒரு அறிக்கையை அளித்துள்ளார்.

பண்டோரா பேப்பர்ஸ்

இந்த ஆவணங்கள் 117 நாடுகளைச் சேர்ந்த 600 புலனாய்வு ஊடகவியலாளர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளன. 14 ஆதாரங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆவணங்கள் பல மாதங்களாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை இந்த வாரம் வெளியிடப்படுகின்றன.

பண்டோரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தத் தரவை வாஷிங்டன் டிசி-இல் உள்ள புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பு (ஐசிஐஜே) வாங்கியது. உலகெங்கிலும் உள்ள 140 ஊடக நிறுவனங்கள் மிகப்பெரிய இந்த உலகளாவிய விசாரணையில் பங்கேற்றன.

பிபிசி பனோரமா மற்றும் கார்டியன் ஆகிய ஊடகங்கள், கூட்டாக இங்கிலாந்தில் இந்த விசாரணைக்குத் தலைமை தாங்கின.

90 நாடுகளைச் சேர்ந்த 330 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் உட்பட உலகின் மிக சக்திவாய்ந்த நபர்கள் எவ்வாறு தங்கள் செல்வத்தை மறைக்க இரகசியமாகக் கடல் கடந்த நிறுவனங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்தக் கோப்புகள் காட்டுகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இந்த வழக்குகளின் முறையான விசாரணையை உறுதி செய்ய இந்த வரி செலுத்துவோர்/நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற அரசாங்கம் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்." என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருப்பு பணம் குறித்து அரசின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த இரண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்தத் தகவல் வெளிவந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

டெண்டுல்கர்

பட மூலாதாரம்,AFP

கருப்புப் பண விவகாரத்தை வெளியில் கொண்டுவர, 2014 ஆம் ஆண்டில் மோடி அரசால் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, இதுவரை ஏழு அறிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டும் உள்ளன.

பண்டோரா பேப்பர்களில் பல முக்கிய இந்தியர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. இதில் சில உயர்மட்ட வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் உள்ளனர்.

இதைத் தவிர, இந்திய வங்கிகளிடமிருந்து பெரிய அளவில் கடன்களை வாங்கி, பறிமுதல் நடவடிக்கைகளையும் மீறி, கடல் கடந்த நிறுவனங்களில் முதலீடு செய்து அவற்றின் கணக்குகளையும் வெளிப்பாடுத்தாத பல வெளிநாட்டு இந்தியர்களின் பெயர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடல் கடந்த நிறுவனங்களில் முதலீடு என்பது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் சில நேரங்களில் அவை, சொத்துக்களை மறைக்கப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பையும் மறுக்க முடியாது.

கடல் கடந்த முதலீடுகள் என்றால் என்ன?

பண்டோரா பேப்பர்ஸ் நாட்டின் எல்லைகளுக்கு வெளியே இயங்கும் நிறுவனங்களின் சிக்கலான நெட்வொர்க் பற்றி விவரிக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களின் தகவல்கள் ரகசியமானவை. அவற்றை யார் வைத்திருக்கிறார்கள், யாருடைய பணம் செலவிடப்படுகிறது, என்பவை அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள ஒருவரின் சொத்துக்கான உரிமை, அயல் நாட்டு நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டால் அது 'ஆஃப்ஷோர்' என்று அழைக்கப்படுகின்றது.

இந்தக் கடல் கடந்த பகுதிகள் எவை?

  • எங்கே நிறுவனங்களைத் தொடங்குவது எளிதோ
  • எங்கே நிறுவனத்தின் உரிமையாளரின் அடையாளத்தைக் கண்டறிவது கடினமோ
  • எங்கே மாநகராட்சி வரி மிகக் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருக்கிறதோ

அத்தகைய இடங்கள் 'டேக்ஸ் ஹேவன்' - வரி ஏய்ப்புக்கான பாதுகாப்பான இடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இப்படி எத்தனை இடங்கள் உள்ளன என்பதற்கான சரியான பட்டியல் இல்லை என்றாலும், சில இடங்கள், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. கேமன் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவற்றில் அடங்கும்.

வரி ஏய்ப்புப் புகலிடங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமா?

வரி ஏய்ப்புப் புகலிடங்களில் உள்ள சட்டத்தின் ஓட்டைகள் காரணமாக, அங்குள்ள நிறுவனங்கள் பல நாடுகளில் வரி செலுத்துவதை எளிதில் தவிர்க்க உதவுகின்றன. ஆனால் இது நெறிமுறையற்றதாகக் கருதப்படுகிறது.

இந்த வகையான சொத்துக்களுக்குப் பல நியாயமான காரணங்களும் உள்ளன. அவற்றின் காரணமாக மக்கள் பல்வேறு நாடுகளில் பணம் மற்றும் சொத்து வைத்திருக்க விரும்புகிறார்கள். உதாரணமாக, குற்றவியல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அல்லது நிலையற்ற அரசாங்கங்களிடமிருந்து பாதுகாப்பு இதற்குப் பின்னால் ஒரு முக்கிய மற்றும் சரியான காரணியாக இருக்கலாம்.

பிரிட்டன் கட்டடம்

இங்கிலாந்தில் இரகசிய கடல் கடந்த நிறுவனங்களை உருவாக்குவது சட்டவிரோதமானது அல்ல. கருப்புப் பணத்தை மறைக்க மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று பணம் மற்றும் சொத்துக்களை மாற்ற இரகசிய நிறுவனங்களின் சிக்கலான நெட்வொர்க்கைப் பயன்படுத்துவது.

பனாமா பேப்பர்ஸ் கசிவுக்குப் பிறகு, அரசியல்வாதிகளுக்கு வரி ஏய்ப்பது அல்லது சொத்துக்களை மறைப்பது கடினமாக்கப்பட வேண்டும் என்ற குரல் பிரிட்டனில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

அந்நிய நாடுகளில் பதுக்குவது அவ்வளவு எளிதானதா?

இதற்காக, வரி ஏய்ப்புப் புகலிட நாடுகளில் உரிமையாளர் யார் நிறுவனர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படும் ஒரு ஷெல் நிறுவனம் உருவாக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. அவற்றுக்கு அலுவலகம் இல்லை, ஊழியர்கள் இல்லை.

ஆனால் அத்தகைய நிறுவனங்களை உருவாக்க பணம் தேவைப்படுகிறது. இந்த வேலையில் நிபுணத்துவம் பெற்ற சில நிறுவனங்கள், உங்கள் பெயரில் உங்கள் ஷெல் நிறுவனங்களை நடத்துகின்றன. இந்த நிறுவனங்கள் பணத்திற்குப் பதிலாக ஷெல் நிறுவனங்களுக்கு பெயர், முகவரி, ஊதியம் பெற்ற இயக்குநர்கள் குழுவை அறிவித்து உண்மையான உரிமையாளர் பெயர் ஒருபோதும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.

எவ்வளவு பதுக்கப்பட்டுள்ளது?

உலகெங்கிலும் உள்ள பணக்காரர்கள் கடல் கடந்த நிறுவனங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளனர் என்று சரியாகக் கூறுவது கடினம். ஆனால் ICIJ மதிப்பீடுகளின்படி, இது $ 5.6 டிரில்லியன் முதல் $ 32 டிரில்லியன் வரை இருக்கும்.

வரி ஏய்ப்புப் புகலிடங்களின் பயன்பாடு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 600 பில்லியன் டாலர் வரி இழப்பை ஏற்படுத்துகிறது என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

https://www.bbc.com/tamil/india-58815475

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.