Jump to content

ஆப்கானிஸ்தான்: ‘பயங்கரவாதத்திற்கெதிரான’ அமெரிக்கப் போரின் முதற் பலிக்களமும் இறுதிச் சாட்சியமும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

ஆப்கானிஸ்தான்: ‘பயங்கரவாதத்திற்கெதிரான’ அமெரிக்கப் போரின் முதற் பலிக்களமும் இறுதிச் சாட்சியமும்!

ரூபன் சிவராஜா
அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற அறைகூவலின் முதலாவது ஆக்கிரமிப்புக் களமாக்கப்பட்ட தேசம் ஆப்கானிஸ்தான். செப்ரெம்பர் 11 தாக்குதல்களை நடாத்திய (அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள், மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல்கள்) பின்லாடன் தலைமையிலான அல்ஹைடா பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கியது என்பதே ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்கா கூறிய முதற்காரணம். அல்ஹைடா பயங்கரவாதிகள் தங்குவதற்கும் பயிற்சி எடுப்பதற்;குமான தளமாக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவதற்கு தலிபான் ஆட்சிபீடம்  அனுமதியை வழங்கியிருக்கின்றது என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் படைகளை இறக்கியது அமெரிக்கா. நேட்டோ (NATO>The North Atlantic Treaty Organization) அமைப்பின் ஊடாக மேற்கு நாடுகளைக் கூட்டிணைத்து அங்கு இறங்கியது.
sep-11-attack-300x168.jpg
‘ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு பிராந்தியமும் இப்பொழுது ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. ‘ஒன்றில் நீங்கள் எம்முடன் அல்லது பயங்கரவாதிகளுடன்’ என்ற சூளுரையுடன் George W. Bush நிர்வாகம் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தது. அந்த அழுத்தம் மூலம் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போருக்கு’ மேற்கின் பலம்பொருந்திய பெரும்பாலான நாடுகளை அணிதிரட்டியது. அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் போர், கடந்த 20 ஆண்டுகளில் 175 000 வரையான உயிர்களைப் பலியெடுத்துள்ளது என்பது ஐ.நாவின் தரவு. ‘செப்.11’ தாக்குதலை அடுத்த 26 நாட்களில், அதாவது ஒக்ரோபர் 7 ஆம் திகதி ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இறங்கின. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தலிபான் ஆட்சி வீழ்த்தப்பட்டது.
us-forces-in-afghan.jpg
 
sep11-bush1-1.jpg
ஆப்கானிஸ்தான் முதற்பலிக்களம்
முதலில் ஆப்கானிஸ்தான். தொடர்ச்சியாக 2003இல் ஈராக், 2011இல் லிபியா, 2014இல் சிரியா என்று நீண்டது பயங்கரவாதத்திற்கெதிரான அமெரிக்காவின் போர். செப். 11 இற்குப் பின்னரான கடந்த 20 ஆண்டுகளில் பயங்கரவாத்திற்கெதிரான அமெரிக்காவின் போர்களில் 800 000 வரையான உயிர்கள் பலியாக்கப்பட்டுள்ளன. 37 மில்லியன் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்ற தரவு டீசழறn பல்கலைக்கழக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. 2,8 மில்லியன் ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாகியுள்ளனர். 3,5 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். 2012 காலப்பகுதியில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்தோர் தொகை 34 வீதமாக இருந்தது. இன்றைய நாட்களில் அது 72 வீதமாகியுள்ளது என்கிறது ஐ.நாவின் தரவு. தற்போது அமெரிக்க வெளியேற்றம், தலிபானின் கட்டுப்பாட்டுக்குள் நாடு வந்த பிறகான நெருக்கடி காரணமாக அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்ற நிலைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளாதாகவும் ஐ.நா கூறுகின்றது.
2004இல் தலிபான் முற்றுமுழுதாகத் தோற்கடிக்கப்பட்டதான தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டது. 2004 நடைபெற்ற Berlin மாநாட்டில், தேச, உட்கட்டுமான, நிறுவன உருவாக்கங்களுக்கான வெளிநாட்டு உதவிகள் உறுதியளிக்கப்பட்டன. தலிபான்களை ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றமுடிந்தபோதும், அவர்களை முற்றுமுழுதாகத் தோற்கடிக்க முடியவில்லை. 2006இல் தலிபான் தாக்குதல் வலுவை மீளக்கட்டமைத்து தாக்குதல்களை நடாத்தத்தொடங்கியது. அமெரிக்கப் படைகளிடம் உள்ளூர் படைவலுச்சமநிலை, புவியியல் பற்றிய அறிதற்குறைபாடு, உரிய ஒருங்கிணைப்பு மூலோபாயமின்மை, கட்டளைக் கட்டமைப்பின் குறைபாடுகள் என்பனவும் தலிபான்களைக் கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.
 
அந்நியப்படைகள் எதிர் உள்ளூர் ஆயுதக்குழுக்கள்
கெரில்லா யுத்தத்தில் ஈடுபடும் எந்தவொரு ஆயுதக்குழுக்களையும் அந்நிய நாட்டுப்படைகளால் முற்றுமுழுதாக அழிக்க முடிவதில்லை என்பது யதார்த்தம். அவை எத்தகு நவீன இராணுவத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பினும் உள்ளூர் புவியியல் அமைப்பினை நன்கறிந்த ஆயுதக்குழுக்களை துடைத்தழிக்க முடிவதில்லை. 2005 காலப்பகுதியிலிருந்து தலிபான் மீளொருங்கிணைவு நிகழத்தொடங்கியது. பாகிஸ்தான் எல்லைகளிலிருந்தவாறு அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட ஆப்கானிய அரசாங்கப் படைகள் மற்றும் சர்வதேசப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை நடாத்தத் தொடங்கியது தலிபான்.
இந்தக்காலப்பகுதியில் ISAF (International Security Assistance Force) படைத்துறை ஆளணிகளை அதிகரித்தது. இந்த அதிகரிப்பும் முரண்பாட்டுச் சூழலை மேலும் அதிகரித்தது. சர்வதேசப் படைகள் ஆக்கிரமிப்புப் படைகளாகப் பார்க்கப்பட்டன. தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு இருந்துவந்துள்ளது. 2014 வாக்கில் தலிபான் தரைவழித்தாக்குதல்களை நடாத்திப் பிரதேசங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கியிருந்தது. 2016 காலப்பகுதியிலேயே 30 வீதமான பிரதேசங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. 38 வரையான நாடுகளின் கூட்டுடன் நேட்டோ தலைமையில் ஆப்கானிஸ்தானுக்குள் இறங்கிய அமெரிக்கா, 20 ஆண்டுகளின் பின்னர் தனது படைகளை அங்கிருந்து வெளியேற்றி – மீண்டும் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளிடம் (தலிபான்) அந்நாட்டினைக் கையளித்துள்ளது.
Insurgents_attack_the_International_Secu
தலிபான்: இஸ்லாமிய அடிப்படைவாதம்
தலிபான் என்பது ஒரு அடிப்படைவாத அமைப்பு. ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் ஒன்றியம் வெளியேறிய பின்னர் அங்கு தோன்றிய உள்நாட்டுப் போரின் விளைவு இந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு. பனிப்போர் காலகட்டத்தில் 1979 – 1989 வரையான பத்தாண்டுகள் ஆப்கானிஸ்தான் சோவியத் ஆட்சியின் கீழ் இருந்தது. 1996 இலிருந்து 2001 வரை, அதாவது அமெரிக்க ஆக்கிரமிப்பு நிகழும் வரையான ஐந்தாண்டுகள் தலிபான்களின் ஆட்சிக் காலமாக விளங்கியது. இஸ்லாமியச் ‘சரியா’ சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கடும்போக்குவாத ஆட்சியை அவர்கள் நடாத்தினர். பெண்களின் உரிமைகள் மோசமான முiயியில் மீறப்பட்டன. அவர்கள் கல்கலைக்கழகம் சென்று கல்வி கற்பதற்கும், வேலைக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. ஆணின் துணையின்றி பெண்கள் வெளியில் செல்லக்கூடாது போன்ற கடுமையான தடைகளை அமுல்ப்படுத்தினர். பொதுவெளியில் வைத்து கல்லெறிந்து மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
Taliban_us.jpasasas20210902065956-300x22ஆப்கானிஸ்தான்: ‘ஏகாதிபத்தியங்களின் மயானம்’
ஆப்கானிஸ்தான் போரும் முரண்பாடுகளும் நீண்டகால வரலாற்றையுடையவை. அதனை ‘ஏகாதிபத்தியங்களின் மயானம்’ என பிரான்சின் புகழ்பெற்ற ‘Le Monde Diplomatique’ (20 மொழிகளில் வெளிவருகின்ற இடதுசாரி சர்வதேச அரசியல் மாத இதழ்) பத்திரிகையின் செப்ரெம்பர் மாத இதழின் கட்டுரை ஒன்றில் வர்ணிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, சோவியத், அமெரிக்கா என உலக ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பிற்குள் தொடர்ச்சியாக இருந்துவந்துள்ளது என்பதே இந்தச் சித்தரிப்பின் அடிப்படை. 1978இல் ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, கொம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தனர். கொம்யூனிஸ்ட் கட்சி மறுசீரமைப்புத் திட்டங்களில் முனைப்புக் கொண்டிருந்தபோது, நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுடன் முரண்பாடுகள் தோன்றின. முரண்பாடுகள் உள்நாட்டுப் போருக்குள் நாட்டினை இட்டுச்சென்றது. கொம்யூனிச ஆட்சியைக் காப்பாற்றுவது சோவியத் ஆக்கிரமிப்பின் நோக்கம். மட்டுமல்லாது சோவியத் ஒன்றியத்தின் உஸ்பெஸ்கித்தான், துர்க்மேனிஸ்தான் ஆகியவற்றில் பெரும்பான்மை மக்களான முஸ்லீம்கள் இருந்தனர். அந்த முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த சிறுபான்மை மக்கள் ஆப்கானிஸ்தானிலும் வசித்தனர். அவர்களின் நலனைப் பேணுவது சோவியத் ஒன்றியத்தின் இன்னொரு நோக்கம்.
உள்நாட்டுப் போரில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரிட்ட முகாஜிதீன்களுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஆதரவு அளித்தது. சோவியத்திற்கு எதிரான சக்திகளை உருவாக்குவதும் அவற்றுக்கு ஆதரவளிப்பதும் பனிப்போரின் முக்கிய அங்கமான அமெரிக்க அணுகுமுறை என்பது பலரும் அறிந்ததே. ஆயுதம், நிதி உட்பட்ட பல்வேறு உதவிகளை பாகிஸ்தான் ஊடாக அமெரிக்கா வழங்கியது. அமெரிக்க – சோவியத் அதிகாரப் போட்டியின் ஒரு முக்கிய அரங்காக ஆப்கானிஸ்தான் விளங்கியது. முந்நாள் முகஜிதீன் உறுப்பினர்கள் பின்நாட்களில் தலிபான், அல்-ஹைடா அமைப்புகளில் இணைந்ததான தகவல்களும் உள்ளன. 1989இல் சோவியத் வெளியேற்றத்திற்குப் பின்னரான 4 ஆண்டுகளில் (1992) கொம்யூனிச ஆட்சியும் வீழ்ச்சியடைய, மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. படிப்படியாகத் தலிபான் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி, 1996இல் நாட்டின் முற்றுமுழுதான ஆட்சியதிகாரத்தை அடைந்தது. தலிபான் ஆட்சியின் முக்கிய ஆதரவு சக்தியாக அல்-ஹைடா விளங்கியது. தலிபானின் உயரடுக்காக (Elite) அல்-ஹைடாவும் அதன் கோட்பாட்டுத் தலைமையாக பின்லாடனும் சுட்டப்படுகின்றது.
 
அமெரிக்கா உருவாக்கிய பொம்மை அரசாங்கம்
ஆப்கானிய வட கூட்டணி (Afghan Northern Alliance) அல்லது ஆப்கானிஸ்தானின் மீட்புக்கான ஐக்கிய இசுலாமிய முன்னணி (United Islamic Front for the Salvation of Afghanistan), 1996ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் உருவான கிளர்ச்சிக் கூட்டணி. வெவ்வேறு ஆயுதக் குழுக்களின் கூட்டணி இதுவாகும். தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதைப் பொது இலக்காகக் கொண்டிருந்தது. 2001இல் தலிபான் படைகளினதும் படை உட்கட்டுமானங்கள் மீதும் அமெரிக்க விமானப்படைகளின், பெருமெடுப்பிலான குண்டுவீச்சுத் தாக்குதல் ஆதரவுடன் தலிபான்களிடமிருந்து பெருமளவு பிரதேசங்களை Northern Alliance கைப்பற்றியது. 2001 இல் தலிபான்களை ஆட்சிபீடத்திலிருந்து அகற்றிய அமெரிக்கா, Hamid Harzai தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்தினை அமைத்தது. புதிய ஜனநாயக அரச கட்டமைப்பு மற்றும் அரசாங்க நிறுவன உருவாக்கங்களுக்கு அடிப்படையாக ஐ.நா தலைமையில் 2001 டிசம்பர் ஜேர்மன் நாட்டின் டீழnn நகரில் சர்வதேச மாநாடு நடாத்தப்பட்டது.
hamid-harzay.jpg
2004இல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி ஜனாதிபதி ஆட்சி முறைமை, 2 பிரிவான தேசிய பாராளுமன்றம் (மேலவை, கீழவை) உருவாக்கப்பட்டு அவற்றுக்கான தேர்தல்கள் முதற்தடவையாக முறையே 2004, 2005 இல் நடாத்தப்பட்டன. 2004 இல் ஜனாதிபதித் தேர்தலிலும் Hamid Harzai தெரிவுசெய்யப்பட்டார். 2005இல் நடைபெற்ற நாடாளுமன்றத்  தேர்தலில் முந்நாள் கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த தளபதிகள், முகாஜிதீன் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்திலும் செயற்குழுக்களிலும் முக்கிய பதவிகளைத் தம்வசப்படுத்திக் கொண்டனர். 25 வீதமான பாராளுமன்ற இடங்கள் பெண்களுக்கான பிரதிநிதித்துவமாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. அதற்கமைய கீழவையின் 249 பிரதிநிதிகளில் 69 பெண் உறுப்பினர்களும், மேலவையில் 102 மொத்தப் பிரதிநிதிகளில் 23 பெண்களும் தெரிவாகினர். ஆனால் பெண்கள் ஒருங்கிணைந்த கட்சியாகவோ, சக்தியாகவோ அரசியலில் இயங்கவில்லை. மதவாத, அடிப்படைவாத சக்திகளே அரசாங்கத்தில் மேலாதிக்கம் செலுத்தின. பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய காத்திரமான நடைமுறைத்திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. ஜனநாயகம் என்ற பேரில் அங்கு உருவாக்கப்பட்டிருந்த அரசாங்கம் என்பது அடிப்படையில் அமெரிக்காவின் பொம்மை அரசாங்கமே.
 
சிதறியோடிய படைகளும் அரசாங்கமும்
ஆப்கானிஸ்தானில் இவர்கள் அழிக்கப் போவதாகச் சூளுரைத்த பயங்கரவாதத்தை 20 ஆண்டுகளில் அழிக்க முடியவில்லை. இவர்கள் கட்டியெழுப்பப் போவதாகச் சொன்ன ஜனநாயகத்தையும் உருவாக்கவில்லை. இவர்கள் உருவாக்கிய அரசாங்கமும் அரச படைகளும் காவல்துறையும் தலிபான்களின் மீளெழுச்சிக்குத் துளியும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒரு கடதாசிக் கட்டடம் சரிவதைப் போல சரிந்து சிதறியுள்ளன. நாட்டின் ஜனாதிபதி நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளார். இவர்கள் உருவாக்கிய அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை என்பன ஊழல்நிறைந்தவையாகவே இயங்கின. உலகின் முதலாவது பெரிய அபின் போதைப்பொருள் உற்பத்தி நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளது. உலகின் மொத்த அபின் உற்பத்தியில் 90 வீதம் அங்குதான் நிகழ்கின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில், 15 வீதம் இதிலிருந்தே ஈட்டப்படுகின்றது.
உலகப்பந்து முழுவதற்குமான ஜனநாயக, மனித உரிமைகளின் ஒட்டுமொத்தப் பாதுகாவலர் தான் என்ற பாவனை எப்பொழுதும் அமெரிக்காவிற்கு உண்டு. ஆனால் அவையெல்லாம் தனது ஏகாதிபத்திய நலன்களை அடைவதற்கான வெற்றுச் சொற்கள் என்பதற்கு கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும், குறிப்பாகக் கடந்த 20 ஆண்டுகளுக்குள் அமெரிக்கா நிகழ்த்திய ஆக்கிரமிப்புப் போர்கள் சான்று பகர்கின்றன.
 
2011 இல் பின்லாடன் கொலை
osama.jpg
செப்ரெம்பர் 11இற்குப் பின்னரான 10 ஆண்டுகளின் பின் பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லாடன், அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. மே 1, 2011ம் ஆண்டு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாகிஸ்த்தானின் அப்போடாபாத்தில் பின்லாடன்; அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்தார். மரபணு சோதனைக்குப் பின் அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் காண்பிக்கப்பட்டது. ‘இன்றைய சாதனை எமது நாட்டின் மகத்துவத்திற்குச் சான்று’ என பின்லாடன் கொலையை ஒபாமா விதந்துரைத்தார்.
2020 டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கட்டார் நாட்டின் தலைநகர் டோகாவில் தலிபானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. ஆயினும் அமெரிக்கப் படைகள் வெளியேறுவது தொடர்பான, இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டபோது ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தரப்பு உள்ளடக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் மக்களின் மனநிலை, கருத்துகள் அறியப்படவில்லை. அமெரிக்கா நடாத்திய போருக்கு ஆதரவாக தமது நாட்டுப்படைகளை அனுப்பிய நேட்டோ நாடுகளும் பேச்சுவார்த்தையில் உள்ளடக்கப்படவில்லை.
 
அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னரை விட மோசமான சூழல்
உயிரழிவுகள், மனிதாபிமான, பொருளாதார நெருக்கடிகள் உட்பட்ட நிலைமைகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முன்னர் இருந்ததைவிட நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஈராக்கிலும் இதே நிலைதான்.  எனவே இவர்கள் பறைசாற்றிய மனித மேம்பாடோ, ஜனநாயகமோ, பயங்கரவாத அழிப்போ நிகழவில்லை. பெண்களின் நிலைமைகள் ஓரளவிற்கு நேர்மறையாக மாறயிருந்தன.  அதுவும் நகர மட்டத்தில் மட்டும்தான். தற்போது தலிபான் ஆட்சியில் மீண்டும் பெண்களின் உரிமை, கல்வி, வேலை, சமூக வகிபாகம் மிக மோசமாக ஒடுக்கப்படுகின்ற அபாயம் தோன்றியுள்ளது. பெண் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள், கல்வியாளர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தலிபான்கள் கைது நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளதான செய்திகளும் அறியவந்துள்ளன. ஆப்கானிஸ்தானின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நல்லாட்சி அரசாங்கத்தைத் தாம் அமைப்பதில் தாம் முனைப்புக் கொண்டுள்ளதாக தலிபான் கூறிவருகின்றது. இது சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாகக் கூறப்படுகின்ற வார்த்தைகளாகவே பார்க்கப்படுகின்றது.
 
ஜோ பைடனின் பொறுப்புத்துறப்பு
biden11-300x200.jpeg
வெளியேற்றம் தொடர்பாக ஓகஸ்ட் நடுப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிகழ்த்திய உத்தியோகபூர்வ உரை முற்றிலும் பொறுப்புத்துறப்பாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்கான் அராசாங்கத்தின் மீதும் சிதறிப்போன அதன் படைகள் மீதும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமது எதிர்காலத்திற்காகத் தலிபான்களை எதிர்த்துப் போரிட அதன் சொந்தநாட்டுப் படைகள் தயாரில்லாதபோது, போர்க்குணமற்றவர்களாக இருக்கும் போது, அமெரிக்கப் படையினர் எதற்காகத் தமது உயிர்களைக் கொடுக்கவேண்டும் என்றார். பெருமளவு நிதிச் செலவில் 300 000 அரச படைகளும் அவற்றுக்குரிய நவீன தொழில்நுட்பங்களையுடைய படைத்துறை, விமானப்படையைத் தாம் கட்டமைத்துக் கொடுத்ததாகவும்; குறிப்பிட்டார். அல்ஹைடாவையும் அதன் தலைவரையும் அழிக்கும் தமது இலக்கு நிறைவேறியுள்ளது. அதற்குமேல் தேச உருவாக்கம், ஜனநாயக உருவாக்கம் என்பதெல்லாம் தமது இலக்குகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தைப் பயங்கரவாதத்தால் அழிக்க முடியாது. ஜனநாயகத்தை ஆயுதங்களும் டொலர்களும் கொண்டு ஏற்படுத்த முடியாது என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக செப்ரெம்பர் 11 இன் பின்னான அமெரிக்கப் போர்களும் அவற்றின் விளைவுகளும் சொல்லிநிற்கின்றன.
 
பயங்கரவாதத்திற்கெதிரான போரின்’ விளைவுகள்
அமெரிக்கா தலைமையிலான செப்ரெம்பர் 11 இற்குப் பின்னான அனைத்து ஆக்கிரமிப்புப் போர்களும் (அவர்களின் மொழியில் பயங்கவாதத்திற்கு எதிரான போர்):
1) அந்தந்த அந்நாடுகளின் உள்ளகச் சூழலை, பிராந்திய அமைதியையும் மிக மோசமாகச் சிதைத்துள்ளது.
2) ஐ.எஸ் போன்ற புதிய இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி வளர வழிகோலியுள்ளன. தலிபான் போன்ற அடிப்படைவாத அமைப்புகள் மீளெழுச்சி கொண்டு, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.
3) உள்நாட்டில் இன முரண்பாடுகள், பிளவுகளை; கூர்மையாக்கியுள்ளது
4) உள்நாட்டுப் போருக்கான அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.
5) ஜனநாயகம், மனிதவுரிமை, கருத்துச்தந்திரம், நல்லாட்சி போன்றவற்றின் உண்மையான கோட்பாடுகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி தோல்விகாணச் செய்துள்ளது.
 
மேற்கின் தோல்வி
மேற்கின் பல தோல்விகளுக்கான நிறைவுப்புள்ளியாக ஆப்கானிஸ்தானைக் கொள்ள முடியும். வியட்னாம் போரிலிருந்து எந்தப்போரையும் அமெரிக்கா இராணுவ ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ வெல்லவில்லை. ஆப்கானிஸ்தான் போரின் விளைவுகள் என்பன அமெரிக்காவின் கடந்த 20 ஆண்டுகால வெளியுறவு அரசியலின் மூலோபாயத் தோல்வி(இருபது ஆண்டுகளுக்கு முன்னரைவிடப் பயங்கரவாத்தை வளர்த்துவிட்டுள்ளது), தார்மீத்தோல்வி, ஜனநாயகத் தோல்வி, (ஈராக், ஆப்கானிஸ்தானில் நிலைகொள் ஜனநாயக அரசாங்கங்களையோ, சமூக, வாழ்வாதார மேம்பாட்டை உருவாக்காவில்லை, அந்நாடுகளில் பல எல்லாவகைகளிலும் சிதைக்கப்பட்டுள்ளன), அரசியல் தோல்வி எனச் சுட்டிக்காட்டுகின்றார் பிரான்சிலிருந்து வெளிவரும் Le Monde diplomatique இதழின் செப்ரெம்பர் மாத பதிப்பில், அதன் ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்த Martine Bulard
us-forces-iraq-300x162.jpg
அமெரிக்க வெளியேற்றம் என்பது காலநீட்சியுடைய போர்கள், எல்லைதாண்டிய நேரடி இராணுவத் தலையீடுகள், ஆக்கிரமிப்புச் சகாப்தங்களின் முடிவினை அடையாளப்படுத்துகிறது. ஆனால் ஏகாதித்திய முகம் தேல்விகளைப் பொருட்படுத்துவதில்லை. தோல்விகளின் பாடங்களை எடுத்துக்கொள்வதுமில்லை. அப்படிக் கருத்திலெடுத்திருப்பின் வியட்னாம் போரின் பாடங்கள் செப்ரெம்பர் 11 இன் பின்னான இராணுவ ஆக்கிரமிப்புகளைத் தடுத்திருக்கும். ஆப்கானிஸ்தான், ஈராக் விளைவுகள் லிபியா, சிரியா மீதான இராணுவத் தலையீடுகளைத் தடுத்திருக்கும். அவ்வாறு நிகழவில்லை என்பது பாடங்கள் கருத்திலெடுக்கப்படுவதில்லை என்பதன் எடுத்துக்காட்டு. பிராந்தியங்களும் களங்களும் மாறினவே தவிர போர்கள் மாறவில்லை. எதிர்காலம் இன்னும் பல போர்க்களங்களைத் திறக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

https://thinakkural.lk/article/142860

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.