Jump to content

“ போதி மரம்” -Dr.T. கோபிசங்கர்


Recommended Posts

“ போதி மரம்” 

காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா ,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை மினுக்கின படி “ கொஞ்சம் தண்ணி அள்ளித்தாவான்” எண்டு அம்மம்மா கேட்டா . மனிசிக்கு விடியல் கிணத்தடீல தான். அள்ளிக்குடுத்திட்டு் நானும் ,கடனை வைக்காமல் முடிக்க வேண்டும் இல்லாட்டி துன்பம் தான் எண்ட படியாத்தான் காலைக கடன் எண்டு சொல்லிறவங்களோ ? எண்டு யோச்சபடி வாளியோட நடந்தன் ,கடனை அடைக்க.

ஒவ்வொருத்தனுக்கும் கிணத்தடியும் கக்கூசும் கூட போதி மரங்கள் தான் ஏனெண்டால் இங்க தான் கன பேருக்கு தத்துவம் பிறக்கிறது. ஓட்டைக்கிணத்து வாளீல தண்ணி அள்ளி ஒழுகிற கக்கூஸ் வாளீக்குள்ள விட்டிட்டு போய் குந்தி இருந்து போட்டு ,எட்டிப்பாக்க தண்ணி இல்லை எண்டேக்க தான் எனக்கு விளங்கிச்சு காதறுந்த ஊசியும் ஓட்டை கக்கூஸ் வாளியும் கடைசிவரை உதவாது எண்டு. வாளீன்டை ஓட்டையை அடைக்க பிலாக்காய்பால்ல இருந்து தார் வரை try பண்ணி கடைசீல புது வாளி வாங்கிக் கொண்டு வர கக்குசுக்கா? எண்ட கேள்வி வந்திச்சுது. ஓட்டைக் கிணத்து வாளி இடம் மாறி கழுவிறதுக்குப் போக புதிசு கப்பீல தொங்கிச்சுது. இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே எண்ட கிணத்தடி ஞானம் அப்ப பிறந்திச்சு.

“என்ன கிணத்துக்கட்டில பிள்ளைய வளத்தின மாதிரி பறக்கிறாய் “ எண்டு அம்மா நான் அந்தரப்பட்டா பேசவா . அப்ப ஒருக்கா படுத்தால் என்ன எண்டு யோசிச்சன். படுத்தும் பாத்தன் ஆனாலும் பயமாய் இருந்திச்சு. பரிணாம வளர்ச்சியில் கிணறும் விடுபடேல்லை . வட்டக்கிணறு அதன் விட்டத்தில இருவது வீதம் இழந்து முக்கால் வட்டம் ஆனது. கல்லு மட்டும் அடுக்கின கிணத்துச்சுவர் , சீமெந்து பூசிக்கல்லு வைச்சு ஒரடி அகலமான கிணத்துக்கட்டானது அதோட நிலமட்டத்திலிருந்து உயரவும் தொடங்கியது . கைவாளி மறைஞ்சு துலா, கப்பி ஆனது. சீவின பூவரசந்தடீல கட்டின வாளி கையை நோகப்பண்ண கயிறு, chain எண்டு வந்தது. 

கிணத்தடி எண்டது வெறும் தண்ணி இருக்கிற இடம் மட்டுமில்லை அதையும் தாண்டி விசேசமானது . தண்ணி இருக்கிற கிணத்துக்கு, தண்ணி அள்ள கப்பி இல்லாட்டி துலா கட்டி, கைப்பற்றப்பட்ட இருவது வீதத்தில அள்ளிற பக்கம் குளிக்கிறதுக்கு தோய்க்கிறதுக்கு சீமெந்து நிலம் வைச்சு, மழைகாலம் நிலம் வழுக்காம இருக்க சிப்பியை கவிட்டு ஒட்டி வைச்சு, அதோட சேந்த உடுப்புத்தோய்க்கிற கல்லும் பக்கத்தில ஒரு தொட்டியும் கட்டி, குளிக்கிற தண்ணி ஒடிற வாய்க்காலோட வாழை வைச்சு, கிணத்துக்கு கிட்ட ஒரு இளநி மரம் நட்டு , கிணத்துக்க இலையக்கொட்டிறத்துக்கு வேலியோட ஒரு வாதநாராயணி இல்லாட்டி பூவரசு இருக்க, அதில உடுப்பு போடுற கொடி கட்டி, இருந்தாத் தான் கிணத்தடி இல்லாட்டி அது வெறும் கிணறு. 

தேவைக்கு வாழையிலை வெட்டப் போறதும் கிணத்தடி தான். இருட்டுப் பயத்தில மூத்தா போறதும் கிணத்தடி தான் . வீட்டை சண்டை பிடிச்சிட்டு அம்மாவை வெருட்ட இயக்கத்துக்குப் போயிடுவன் எண்டு சொல்லிற காலத்திக்கு முதல் கிணத்தடீல போய் தான் இருக்கிறது. கிணத்தடி பூதத்தை நம்பி இடம் பெயர்வுகளில பயத்தில நகை தாலி புதைச்சு வைச்சதும் கிணத்தடி தான். 

ஒவ்வொரு ஒழுங்கையிலும் எந்தக் கோடைக்கும் வத்தாத ஒரு வீட்டுக் கிணறு இருக்கும் .அதே போல் நல்ல தண்ணிக் கிணறும் ஒண்டும் இருக்கும். இந்தக்கிணறுகளும் ஒரு பொதுச் சொத்துதான் . பலர் குடிக்கவும் சிலர் குளிக்கவும் போறவை . இப்பிடி தண்ணி அள்ள ஆற்றேம் வீட்டை போகேக்க கிணத்தடீல சண்டையிருக்காது ஆனால் அரட்டை அரங்கம் இருக்கும் . 

வேலைக்குப் போட்டு வந்த அப்பாட்டை இல்லாட்டி செத்த வீட்டுக்கு போய் வந்த அம்மாட்டை கிணத்தடீல இருந்து அவை தோஞ்சு கொண்டிருக்கேக்க விடுப்புக் கேக்கிறதும் நடக்கிறது . கிணத்தையும் ஒரு சாமி அறை மாதிரித்தான் சுத்தம் பத்தமா பாவிக்கிறது. செத்தவீட்டுக்கு போய் வந்தா , தலைமயிர் வெட்டீட்டு வந்தா இல்லாட்டி பொம்பிளைகளை அந்த மூண்டு நாளும் அள்ள விட மாட்டினம். விளக்கீட்டில ஒரு பந்தம் வைக்கிறதில இருந்து ஐயர் தாற தீத்தம் கொண்டே ஊத்திற வரை அதுக்கு ஒரு மரியாதை இருந்தது. 

தண்ணி அள்ள கிராமப் பக்கம் தான் கைப்பட்டை இல்லாட்டி துலா இருந்தது . நாலு மரம் நட்டு குறுக்கு மரம் போட்டு சரி பண்ணி துலா கட்டிறது . நட்ட பூவரசங்குத்தி முளைச்சு சிலவேளை மரமாயும் வளந்திடும். வைரமான பனை மரத்தை சீவி ரெண்டாப்பிளந்து நடுவில இருக்கிற சோத்தியை கோதி எடுத்து , ரெண்டையும் சேத்து கட்டை இறுக்கி ,அடிபருத்தும் நுனி சிறுத்தும் இருக்க செய்யிற துலாவில சரியான இடம் பாத்து , வீட்டில வைக்கிற ஓட்டைக்கல்லு மாதிரி செவ்வக ஓட்டை வைச்சு குறுக்கு மரம் போட்டு துலாவை ஏத்தி விட அது காலத்துக்கும் இருக்கும். தென்னை எண்டால் அப்பிடியே சீவி வைக்ககலாம் , பத்து வருசத்திக்கு அசையாம இருக்கும். துலாவின்டை அடியில கட்டிற கல்லு டங்கு டங்கு எண்ட அடிக்க சத்தம் வரும் எண்டதால ரயரையும் சேத்துக்கட்டிறதும் வழக்கம் . 

ஆனால் town பக்கம் கப்பி தான் கூட. கப்பிக்கு electricity board ல ஆரும் தெரிஞ்சவை இருந்தா high voltage வயர் இழுக்கிற மாபிள் கப்பி கள்ளமா எடுத்துப் பூட்டிறது இல்லாட்டி இரும்புக் கப்பிதான். கப்பிக்கயித்துக்கு மொத்தமான இளைக்கயிறு தான் நல்லம். நைலோன் கட்டினால் வாளி முடிச்சு நிக்காது அடிக்கடி வாளி கழண்டு கிணத்துக்க விழுந்திடும் ,ஆனாலும் அள்ளேக்க வாளிய உள்ள விட ஈசியா வழுக்கிக்ககொண்டு போகும் . தண்ணி அள்ளிறதுக்கு வாளியை தூக்கி கிணத்துக்க போடேக்க கப்பியின்டை தவாளிப்பிக்கால சிலவேளை கயிறு வெளீல பாஞ்சிடும் . கயித்தை எத்தி எத்தி அதை திருப்பி உள்ள போடுறதுகஸ்டம் . அதுகும் அள்ளிற சுகத்துக்கு முடிச்சுப் போட்ட நைலோன் கயிறெண்டால் சரி அவ்வளவு தான் . உயரம் காணாத வயசில அதை திருப்பிப்போட கிணத்துக் கட்டில ஏறித் துள்ள அப்பிடியே கயித்தோட கிணத்துக்க விழுந்து அம்மாவுக்கு தெரியாம ஏறி வந்ததும் நடந்தது. 

பள்ளிக்குடத்தில வயல் கிணதுக்க குதிச்சு தான் நீந்தப் பழகினது எண்டு ஆரும் சொன்னதை கேட்டு உசுப்பாகி நானும் நீந்தப் போறன் எண்டு நல்லவேளை ஒரு நாளும் குதிக்கேல்லை. ஆனாலும் கள்ளமா கிணத்துக்க இறங்கினது நடந்தது. மழை காலத்தில நிரம்பிறதை எட்டிப் பாக்கிறது சந்தோசம் , தண்ணியும் நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். கையால அள்ளிக் குளிக்கலாம் எண்டு பாத்துக்கொண்டிருக்க தண்ணி வத்தத்தொடங்கீடும். 

வீட்டுக்ககிணறு தான் இப்பிடி இறைக்கிறது ஆனால் தோட்டத்திக்கு் தண்ணி ஊர்வழிய சூத்திரத்தில மாடுகள் கட்டி , பட்டையில தான் இறைக்கிறது. வைரமாளிகை நாகலிங்கம் போடிற பனைமட்டை தொப்பியக் கவிட்டு விட்ட மாதிரித்தான் பட்டை இருக்கும். பனையோலையில கட்டிற பட்டை ஒழுகாம காலத்துக்கும் இருக்கும். பட்டையின்டை மூலைக்கு சாக்கு இல்லாட்டி பழைய ரயர் கட்டினால் அடி பட்டாலும் பிய்யாது. தோட்டத்திக்கு தண்ணி இறைக்க துலா மிதிக்கிறதும் இருந்தது , என்ன ரெண்டு பேர் தேவை . ஆனால் சூத்திர மாடு பழக்கி விட்டா ஆள் இல்லாமலே சுத்தும் தண்ணியும் இறைபடும் . தகரம் வைச்சு செய்யிற இரும்புப்பட்டையும் இருந்தது. அடீல ரெண்டு தட்டு வாளி போய் மடார் எண்டு தண்ணீல முட்ட திறக்கும். உள்ள தண்ணீர் நிரம்பினாப்பிறகு மேல வர தண்ணிப்பாரத்திக்கு தட்டு மூடும். சரியா ஒண்டு தண்ணியை கவிட்டுக் கொட்ட மற்றது கோலும்.

ஏன் இதுக்கு சூத்திரம் எண்டு பேர் வந்தது எண்டு அறிய வெளிக்கிட்டு; மாட்டை கட்டிற கயித்தின்டைநீளம் , அது சுத்திற வட்டத்தின்டை ஆரை , மாடு சுத்திற speed துலாவின்டை நீளம் , அதில் தொங்கிற கயித்திண்டை நீளம் , பட்டையின்டை அகலம் , தட்டின்டை ஓட்டை அளவு மாட்டு வாலின்டை நீளம், எண்டு எல்லா Data வும் computer ல feed பண்ண அது Google application form ஒண்டைத்தருது NASA க்கு வரச்சொல்லி அந்த சூத்திரம் (equation )என்ன எண்டு என்னைக்கேட்டு 🤔

இறைக்க இறைக்க வத்தாத அறிவு மாதிரி NASA காரனுக்கே விளங்காத அறிவைத் தந்த அந்த கிணத்தடி போதிமரம் இப்ப புத்தர் எல்லாம் Bathroom வழிய குளிக்கிற படியால் வெறுமையானது . ஆனாலும் அழிந்த அந்த அவதாரம் மீண்டும் திருப்பி வரும் எண்ட நம்பிக்கையில் காத்திருக்கத் தொடங்கியது .

 

Dr.T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இணைப்புக்கு நன்றி. அது ஒரு பொற்காலம். தற்போது கனாக்காலம். (கனவு மட்டுமே) மருத்துவர் அனுபவித்துப் படைத்திருக்கின்றார். எங்கள் கிணற்றடியை கண்முன்னே கொண்டுவந்தது இப்பதிவு. தலைப்பைப் பார்த்து ஏதோ அரசியலாக்குமென்றால், இங்கும் மனிதர்கள் பல்வேறு ஞானநிலைகளைக் கடக்கும் இடம்தானே..... நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராமத்து வாழ்வை அழகாக வர்ணித்து இருக்கிறார். பகிர்வுக்கு நன்றி l

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரம் போனால் எல்லோரும் இதுக்குத் தான் திரும்பவேணும், அது கரண்டு பேய் அவ்வளவு லேசில போகாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.