Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியரிடம் விடுத்துள்ள வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியரிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

(எம்.நியூட்டன்)

மாணவரின் கல்விக்காக ஒத்துழைக்க வேண்டும் என  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரிய சங்கம் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. ஒரு சில அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் உள்ளன. மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. 

குறிப்பாக  அதிபர்களும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கொடிய யுத்தம் நடந்த காலத்தில்கூட இத்தகைய வீழச்சி வந்ததில்லை. இது திட்டமிட்டு செய்யப்படுகின்ற சூழ்ச்சி. உதாரணமாக தமிழ் மாணவர்களின் சித்திப்புள்ளி வேறு சிங்கள மாணவர்களின் சித்திப்புள்ளி வேறு. இதுபற்றிக் கதைப்பதாக இருந்தால் ஆழமாக பேசவேண்டும்.

முதலில் போராட்டம் தொடங்கியது சம்பள உயர்ச்சிக்காக அல்ல. கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு எதிராக தனி ஒரு மனிதனாக ஒரு ஆசிரிய தொழிற் சங்கத்தின் செயலாளர் தொடக்கிய போராட்டம். இவ்விடயம் தொடர்பில் அவரது சங்கத்தினருக்கே அது தெரியாது. அவரை தனிமைப் படுத்தலுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்ட பின்னரே சம்பள முரண்பாடு தொடர்பான விடயம் பேசப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பாக எவரும் எம்முடன் பேசவும் இல்லை. கலந்துரையாடவும் இல்லை. 

இலங்கையில் அதிபர், ஆசிரியரின் சம்பள உயர்வுக்காக முதலில் குரல் உயர்த்தியவர்கள் நாமே. நாம் பல்வேறு வழிகளிலும் பல ஆண்டுகள் பாதிக்கப்பட்டவர்கள். பலவற்றை இழந்தவர்கள். முன்னாள் பொதுச் செயலாளர் த.மகாசிவம் அவர்களின் காலத்தில் 1994ஆம் ஆண்டு முன்வைத்த சம்பள உயர்வு. அதன் பின்னர் 1998ஆம் ஆண்டு முன்வைத்த சம்பள உயர்வு 2011ஆம் ஆண்டு, 2018ஆம் ஆண்டு முன்வைத்த சம்பள உயர்வு தீர்மானங்கள் அனைத்தும் எமது மகாநாடுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். அவை உரிய தரப்பினரிடம் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது.

IMG-20211018-WA0022.jpg

மட்டுமன்றி அதற்கான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆணைக்குழுவிடமும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆகவே அதிபர், ஆசிரியர்களின் வேதனப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அது எமக்கு அவசியமானது. 

நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது இலங்கையில் உள்ள அனைத்துச் சங்கங்களுடனும் பேச வேண்டும். இரண்டு அரசியல் கட்சி சார்ந்த சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை இப்போது வெளிப்படுகின்றது.  இதைவிட இந்தப் போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது.

உலகில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டு மரணங்கள் தொடராக நடைபெறும் நேரத்தில் இதனை முன்னெடுக்க முடியாது. சம்பள அதிகரிப்பு அல்லது முரண்பாடு தீர்த்தல் தொடர்பாக முன்னைய ஆட்சிக்காலத்தில் ஏன் வாய்திறக்கவில்லை. ஏன் இதுபோன்ற போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

இப்போராட்டம் தொடர்பில் கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், என பலரும் அதிருப்தி வெளியிட்டனர். இப்போது ஊடகங்களே வெளிப்படையாக மாணவர் நலன்சார்ந்து அதிபர்கள், ஆசிரியர்களை தொழிற்சங்கங்களை விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. 

நாற்பது ஆண்டுகால யுத்தத் சூழ்நிலையில் நாம் ஒருபோதும் கற்பித்தல் செயற்பாடுகளை இடைநிறுத்தியது கிடையாது. போரட்டம் நடைபெற்றபோது பதுங்குகுழிகளுக்குள்ளே எமது ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டனர். பிள்ளைகளின் கல்வியை பணயம் வைப்பது தெய்வகுற்றமாகும். இப்போதும் கற்பித்தல் பணியை இடைநிறுத்தியது தவறானது என்றுதான் நாம் சொல்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது.

தற்போது சமூக மட்டத்திலும் பலவிதமான கருத்துக்கள் உருவாகியுள்ளன.  ஒரு தனி மனிதனின் அரசியல் சூழ்ச்சியால் பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாக பேசுகின்றனர். இதை விட ஒன்றரை ஆண்டுகள் கற்பித்தல் பணியில்லாமல் 70 வீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்திபெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

பெருமளவான மாணவர்கள் பிரத்தியேக கல்வியை நாடினர் என்பதும், அதிபர், ஆசிரியர்களின் பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளை எவ்வாறு பெற்றனர் என்ற கேள்விகளும் சமூக மட்டத்தில் எழுந்துள்ளன. இலவசமாக சேவை செய்த ஆசிரியர்கள் இன்று பணம் வாங்கி கல்வி வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

போராட்டங்களைப்பற்றி எமக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை. தமிழ் மாணவர்களை பல்கலைக்கழகம் செல்லவிடாது தரப்படுத்தல் சட்டம் கொண்டுவந்தபோது எவர் அதற்காக குரல் கொடுத்தார்கள். எமது பிள்ளைகளின் இலவச கல்விக்கு சாவுமணி அடித்தார்கள்.ஆயிரக்கணக்காக அதிபர், ஆசிரியர். மாணவர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது எவர் வாய்திறந்தார்கள்.

ஏன் 55 பள்ளிச் சிறார்கள் சீருடையுடன் வள்ளிபுனத்தில் பதை பதைத்து இறந்தபோது தெற்கில் உள்ள அனைவருமே குதூகலித்தவர்கள்தான். இது இங்குள்ள சிலருக்கு தெரியாமல் இல்லை. இவ்வாறு நாம் பட்ட வேதனைகளும் போராட்டங்களும் இன்னும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இதைவிட வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிக்கவேண்டும் என ஆக்ரோசமாக வழக்குத் தொடுத்தவர்கள் இதே ஆசிரிய சேவைச் சங்கத்தின் ஜே.வி.பி கட்சியினரே. இவர்கள் எம்மீது கை நீட்ட எந்த உரிமையும் இல்லை. 

எமது இனம் சார்ந்த குழந்தைகள் ஏற்கனவே பலவற்றை இழந்துள்ளனர். அவர்கள் இன்னும் பின்னிலைக்குச் செல்ல நாம் காரணமாக இருக்க மாட்டோம். ஆகையால் பாடசாலைகள் ஆரம்பமானதும் எமது அதிபர், ஆசிரியர்கள் முழுமையாக பணி செய்வார்கள்.

”எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” என்பது தமிழில் உள்ள இறை வாசகம்.  சம்பள உயர்ச்சி தொடர்பாக அனைத்துத் தொழிற்சங்கங்களும் (அரசுடன் இணைந்துள்ள அரசு சார்பான தொழிற்சங்கங்களையும்) ஒன்று சேர்த்து தீர்க்கமான ஒரு தீர்மானத்தை அரசிற்கு அறிவிக்க வேண்டும். அது அரசாங்கம் நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

இதில் எந்த அரசியல் பின்னணியும் இருக்கக்கூடாது. அரசியல்வாதிகள் தொழிற் சங்கங்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. ஆனால் அரசியல் கட்சிகள் தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். சம்பள போராட்டம் என்பது இருபத்தெட்டு ஆண்டுகளாக நடைபெறுவது. இதில் வெற்றி பெறவே நீண்டகாலமாக நாமும் இயங்குகிறோம். இந்த நாட்டில் மட்டுமே அதிபர், ஆசிரியர்களுக்கு குறைந்த வேதனம் வழங்கப்படுகின்றது. 

இந்த அரசாங்க ஆட்சியில் அது சாத்தியப்படுமா என்ற கேள்வி எமக்கு உள்ளது. காரணம் நாளுக்கு நாள் ஒவ்வொரு பொருளின் விலையும் இரு மடங்காக அதிகரிக்கின்றன. ஆயிரத்து எழுநூற்றைம்பது ரூபாவைக் கூட்டி வெறும் எழுபத்தைந்து ரூபாவை குறைத்துள்ள அரசிடம் பேசமுடியுமா? அரசிற்கு வாக்களித்த மக்களே இன்று அவதூறாகப் பேசுகின்றனர். 

நாம் ஜனநாயக ரீதியில் அரசியல் பின்னணயின்றி போராடினால் எம்மை யாரும் தடுக்க முடியாது. அண்மையில் நாம் முன்னெடுத்த மிகப்பெரும் ஜனநாயக போராட்டம் எமது மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிரான போராட்டம். அதில் அரசியல் பேதமின்றி பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அது இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பேசப்பட்ட விடயமாகும்.

எமது அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21ஆந் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல. எமது பிள்ளைகளுக்காக நாம் செய்கின்ற தெய்வீகப்பணி என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/115601

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.