Jump to content

ஏறும் விலை; சரியும் பொருளாதாரம்; திணறும் மக்கள்: அமைதி காக்கும் எதிர்க்கட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏறும் விலை; சரியும் பொருளாதாரம்; திணறும் மக்கள்: அமைதி காக்கும் எதிர்க்கட்சி

என்.கே.அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

“தன் மே தவஸ்வல காஸ் அதி நே காம உயன்னத்த காஸ் வளின் ஹொந்தட்ட தியனவனே காஸ் காஸ் நா மேக தமய் மே ஆண்டுவே பரிகம” (இப்ப இந்த நாள்களில காஸ் கிடைக்குது என்ன காஸில் தானே சமையல் நல்லா இருக்குது தானே காஸ் காஸ் இல்லை இதுதான் இந்த அரசாங்கத்தின் இயலாத்தன்மை). 

“ஹபய் இதின் றட இல்லுவா, வெனஸ துன்னா, வெனஸ தமய் மே பேன்னே அத காஸ் டிகத் நதிவெலா தியனவா காஸ் டிக சபயன்ன பரி ஆண்டுவக் மே தென பொறொந்துவ சபயய்த நா” (ஆனால், நாட்டைக் கேட்டார்கள்; மாற்றத்தைக் கொடுத்தோம்; மாற்றம் தான் இப்ப நல்லாத் தெரியுது இன்று காஸ் கூட இல்லாமல் இருக்குது காஸ் வழங்க இயலாத அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளையா நிறைவேற்றப்போகுது). 

“தன் கொஹொமத சபத ஆண்டுவ றது லூணு கொஹொமத பொம்பய் லூணு லங்கதி காவத அள ஏம கொஹொமத ஜீவன வியதம பொஹொம அடுத” (இப்ப எப்படி சுகமா அரசாங்கம் சின்ன வெங்காயம் எப்பிடி கிட்டடியில பொம்பே வெங்காயம் சாப்பிட்டீங்களா கிழங்கு எல்லாம் எப்பிடி வாழ்க்கைச் செலவு நல்ல குறைவா). 

இவையெல்லாம் இன்றைய எதிர்க்கட்சியும் அதன் தலைவர்களும் இன்றைய அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. இந்த வார்த்தைகள் 2015 தோல்விக்குப் பின்னர், மீண்டும் 2019இல் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெறும் வரையான காலப்பகுதியில், வெவ்வேறு கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷ உதிர்த்த வார்த்தைகளாகும். 

அன்று சில நூறு ரூபாய்கள் காஸ் விலை கூடியதற்கே, எதிர்கட்சியில் இருந்த ராஜபக்‌ஷ்ர்களும் அவர்களது அடிப்பொடிகளும் அன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை, மேடை மேடையாக வறுத்தெடுத்தது மட்டுமல்லாமல், ஆர்ப்பாட்டங்கள், பரப்புரைகள் என அரசாங்கத்துக்குக் கடுமையான அழுத்தத்தையும் எதிர்ப்பையும் வழங்கினார்கள்.

இன்று சாதாரணமாக வீடுகளில் பாவிக்கும் 12.5 கிலோகிராம் லிட்ரோ காஸின் விலை 1,257 ரூபாயால் அதிகரித்து, சிலிண்டர் 2,750 ரூபாயாகவும், லாஃப்ஸ் காஸின் விலை 984 ரூபாயால் அதிகரித்து, சிலிண்டர் 2,840 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. சும்மா அறிக்கை விட்டதோடு எதிர்க்கட்சி மௌனமாக இருக்கிறது. 

இங்கு எரிவாயு மட்டும் விலையேறவில்லை. கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டமையால், அரிசி, பால்மா, கோதுமை மா, சீமெந்து ஆகியவை அதிரடியான வகையில் விலையேறியுள்ளன. இதன் விளைவாக, பாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளன. 

கட்டுப்பாட்டு விலை நீக்கம் பற்றி இங்கு இன்னொரு விடயத்தைக் குறிப்பிடுதல் அவசியமாகிறது. கட்டுப்பாட்டு விலையை, அரசாங்கம் நீக்கயது வரவேற்கத்தக்க முடிவு. ஏனெனில் கட்டுப்பாட்டு விலையின் காரணமாக, சந்தையில் பொருட்களின் தட்டுப்பாடு நிலவியது. குறிப்பாக பால்மா, அரிசி, எரிவாயு என்பனவற்றுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவியதும், மக்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள அல்லோலகல்லோலப்பட்டமையும் நாம் கண்ணால் கண்ட விடயங்கள். 

அரசாங்கம் விதித்த கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியாதெனவும், இறக்குமதிக்கான டொலர் கிடைக்காததால் லாஃப் காஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியையே நிறுத்தியிருந்தது. இதனால் எரிவாயு கிடைக்காமல், பலர்  மண்ணெண்ணெய், விறகு அடுப்புகளுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்கியது சரியானதே! ஆனால், இந்த விலைவாசி அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் முறைகேடான பொருளாதாரத் திட்டமிடலும் பொருளாதாரச் செயற்பாடுகளுமே காரணம். அடிப்படைப் பொருளாதார அறிவு கூட இல்லாதவர்களின் கையில், நாட்டின் பொருளாதாரத்தைக் கையளித்தால் இதுதான் நிலை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விலைவாசி ஏற்றம் மாதச்சம்பளத்தில் வாழ்க்கை நடத்தும் பெரும்பான்மை இலங்கையர்களின் அடிமடியில் தீவைத்ததைப் போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. விலைவாசி ஏற்றத்துக்கு நிகராகச் சம்பளம் அதிகரிக்காத நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில், இலங்கை குடிமக்கள் திணறிப் போய் இருக்கிறார்கள். 

அன்றாட உழைப்பை நம்பிய மக்களின் நிலை, இன்னும் மோசமானது. கொவிட்-19 முடக்கம், பிரயாணக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் அன்றாட உழைப்புக்கான வாய்ப்புகள் சுருங்கிய நிலையில், அவர்களது வாழ்வாதாரம் சாவலுக்கு உள்ளாகியிருக்கிறது. 

திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு பற்றி பல செய்தி அறிக்கைகளையும் அண்மைக்காலத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. சமகால பொருளாதார நிலையின் கீழ், திருட்டுச் சம்பவங்களின் அதிகரிப்பு ஆச்சரியப்படுவதற்கான ஒன்றல்ல. இந்தப் பொருளாதார வீழ்ச்சி தொடருமானால், இத்தகைய சம்பவங்கள் இன்னும் அதிகரிக்கலாம். 

அரசாங்கம் முழுமையாகவும் மோசமாகவும் ‘ஃபெயில்’ அடைந்துகொண்டிருக்கும் நிலையில், ஆகுமான எதிர்க்கட்சியொன்று என்ன செய்யும்? மிகக் கடுமையாக எதிர்ப்பை வௌிப்படுத்தி, அரசாங்கத்துக்கு கடும் அழுத்தத்தைக் கொடுக்கும். 

இந்நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சி, என்ன செய்துகொண்டிருக்கிறது? பேருக்கு அறிக்கை விட்டுவிட்டு, அமைதியாக இருக்கிறது. யோசித்துப் பாருங்கள், இத்தகைய சந்தர்ப்பம் ஒன்றில், ராஜபக்‌ஷர்கள் எதிர்க்கட்சியாக இருந்தால், என்ன செய்திருப்பார்கள் என்று!

நிச்சயமாக இவ்வளவு அமைதியாக இருக்கமாட்டார்கள். எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா என்று தெரியாத நிலையில்தான் இன்றைய எதிர்க்கட்சியும் அதன் தலைவர்கள் எனப்படுவோரும் செயற்படுகிறார்கள்.

இதற்கும் சிலர் நியாயம் சொல்கிறார்கள். எதிர்க்கட்சியின் இயலாமைக்கு சாட்டுச் சொல்லும் இவர்கள், கோவிட்-19 நிலைவரத்தின் கீழ், எதிர்க்கட்சியால் பெரிதாக என்ன செய்துவிட முடியும். மேலும், கோவிட்-19 ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவது அவசியம். அதற்கு ஆதர்ஷமாக எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சித் தலைமைகளும் செயற்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சியினரின் மௌனத்துக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். என்னே, எங்கள் எதிர்க்கட்சியனரின் கடமையுணர்வு?

 ‘கொவிட்-19 ஒழுங்குவிதிகளால்த்தான், அவர்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டவில்லையாம்; இல்லையென்றால் வெட்டிவீழ்த்தி இருப்பார்களாம்’. இந்த வெட்டி நியாயங்களைத் தன் குழந்தைக்குப் பால்மா வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பெற்றோர்களிடம், எப்படிச் சொல்வீர்கள்?

உங்கள் விதண்டாவாத நியாயங்களை, எரிவாயு விலையேற்றத்தால் விறகடுப்புக்கு மாறி, விறகடுப்பை ஊதிக்கொண்டிருக்கும் குடிமகனிடம் எப்படிச் சொல்வீர்கள்? உங்கள் சப்பைக்கட்டுச் சாட்டுகளைப் பொருள் விலையேற்றத்தால் மூன்று வேளை உணவை இருவேளையாகச் சுருக்கியுள்ள குடும்பங்களிடம் எப்படி எடுத்துரைப்பீர்கள்? 

உண்மையில், இப்படி விலையேற்றங்களைச் செய்ய, அரசாங்கங்கள் பெருமளவுக்குத் தயக்கம் கொள்ளும். ஏனெனில், அவை அரசாங்கங்கள் தமது செல்வாக்கை இழப்பதற்கான பெருங்காரணமாக அமையும். 

எதிர்க்கட்சிகள், தமது ஆதரவை அதிகரித்துக்கொள்ள வழிவகுக்கும். ஆனால், இந்த அரசாங்கம் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவது போல தென்படவில்லை. அது, அவர்கள் தமது 69 இலட்சம் வாக்காளர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்பதைவிட, எதற்கும் வக்கற்ற எதிர்க்கட்சியின் இயலாமையின் மீது கொண்ட நம்பிக்கை என்பதுதான் மெத்தப் பொருத்தமான காரணமாக இருக்கும். 

சிறைக்குள் சென்று கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் பெயரைக் கூடச் சொல்ல நடுநடுங்கும் எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் பெரிய புள்ளிகளின் பெயர்களையா சொல்லிக் குற்றம்சாட்டப்போகிறார். 

அந்த இயலாமையின் வடிவமான எதிர்க்கட்சித் தலைவரும், அவரது அடிப்பொடிகளும் உள்ளவரை, தமது ஆட்சிக்கு எந்தப் பங்கமும் வராது என்ற நம்பிக்கையில்தான் இந்த அரசாங்கம், இந்த விலை அதிகரிப்புகளைப் பற்றி அக்கறை கொள்ளாது இருக்கிறதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. 

வழமையாக, வல்லாட்சி அரசாங்கங்கள் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உலகளவில் அவதானிக்கலாம். ஆனால், இலங்கையில் அதுகூடச் செய்யத் தேவையில்லாத நிலை இருக்கிறது. 

ஏனெனில், இலங்கையின் எதிர்க்கட்சி கண்மூடி, வாய்பொத்தி அமைதியாகவே இருக்கிறது. ஒருவேளை, இந்த அரசாங்கம் செல்வாக்கை இழக்கட்டும்; இந்த அரசாங்கம், தனது பெயரைக் கெடுத்துக்கொண்டதும், அதை வைத்து அடுத்த தேர்தலில் வென்று விடலாம்; அதுவரை நமக்கேன் வம்பு என்ற அற்ப நம்பிக்கையில், இவர்கள் அமைதியாக இருக்கிறார்களோ என்னவோ?

ஆக மொத்தத்தில், தேர்தலும் வெற்றியும் அதிகாரமும் மட்டும்தான் இங்கு இவர்களுக்கு முக்கியம். மக்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. பாவம் மக்கள், அவர்களுக்காகக் குரல் கொடுக்கத்தான், இங்கு யாருமில்லை.
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஏறும்-விலை-சரியும்-பொருளாதாரம்-திணறும்-மக்கள்-அமைதி-காக்கும்-எதிர்க்கட்சி/91-283478

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.