Jump to content

நரகாசுர தேசம்: நெற்றித் திலகம் இட்டு ஆராத்தியெடுத்த ஈழத் தமிழர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு!! இரத்தக்களரியான நாட்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியர்கள் தமது பண்பாட்டை பரப்பும் நோக்குடன் இந்தியப் பெருந்தேசத்தின் குறுநில அரசுகளை அழித்து வருகையில், பலமிக்க சுதேசிய மன்னர் கடுமையான எதிர்ப்பைக் காட்டினர். தம் மொத்த பலத்தையும் திரட்டிப் போரிட்டனர். இவ்வாறு எதிர்த்துப் போரிட்டவர்களும் ஆரியப் பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைப்பட்டே போனார்கள். ஆனால் அந்தப் பகை உணர்வை ஆரியர்கள் வரலாறு முழுவதும் கடத்தினார்கள்.

தீபாவளிக்கு இப்படியொரு பின்னணிக் கதையே சொல்லப்படுகிறது. நரகாசுரன் (பெயர்கூட மாற்றப்பட்டிருக்கலாம்) என்ற மன்னனை குரூரமானவனாக வரலாற்றில் சித்திரித்து, அவனது மக்களையே, அவன் படுகொலைசெய்யப்பட்ட தினத்தைக் கொண்ட வைத்திருக்கிறது ஆரியது. இந்தச் சம்பவம் இனங்களின் வரலாறு, ஐதீகங்கள் கட்டமைப்பட்ட காலத்திலேயே உருவாகிவிட்டது. அதன் நீட்சியை இந்தியா கைவிடாது, தன்னை எதிர்க்கும் அனைவரையும் நராசுரன்களின் பிள்ளைகளாக்கிப் படுகொலைசெய்து அழிக்கும் வேலையை தற்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு உதாரணமாகக் கதைகள் பல நம்மிடமும் உண்டு.

கொன்றொழிக்கப்படும் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள், பிணியாளர்கள் பயங்கரவாதிகளாகவும், அதனை மேற்கொள்ளும் படையினர் தேசபக்தர்களாகவும் புனையப்படும் கதைகள் ஏராளம். அப்படியான கதைகளைக் கொண்ட நாட்கள்தான் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி வரையான காலப்பகுதியை ஆக்கிரமித்திருந்தன.

1983 ஆம் ஆண்டு தெற்கிலிருந்து வடக்காக ஏவப்பட்ட இன வன்முறைகள் தமிழர்களின் வாழ்வை அச்சம்கொள்ளச் செய்தன. இதனால் இந்திய தேசம் தம்மைக் காப்பாற்றும் என ஈழத்தமிழர்கள் நம்பினர். இந்திய அமைதிப் படையின் வருகையைப் பெரிதும் எதிர்பார்த்தனர். இதனை அக்கினிக் கரங்கள் என்ற நூலில் கவிஞர் நாவண்ணன் பின்வருமாறு விபரித்திருப்பார்.

'நாளுக்கு நாள் சிறீலங்காப் படைகளின் கொடுமைகள் அதிகரித்து வரும்போதெல்லாம், காங்கேசன்துறையில் எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் கடற்கரையில் நின்று கொண்டு, இந்தியா இருக்கும் திசையை நோக்கி கூவி அழைக்க வேண்டும் போலிருக்கும். அதிலும் எங்கள் வைத்தியசாலையின் வைத்தியரான விஸ்வரஞ்சன் ஒருநாள் கடமை முடித்து காங்கேசன்துறையில் இருக்கும் தனது வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும்போது, அவரை வழிமறித்து, விசாரித்து, அவரது மருத்துவ அடையாள அட்டையைப் பார்த்து அவர் வைத்தியர்தான் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவரை முன்னே செல்லச்சொல்லி பின்பக்கமாக முதுகில் சுட்டுக்கொன்றனர். அவர் பல உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியர் என்றும் பாராமல் நடுவீதியில் வைத்து சுட்டுக்கொன்றபின்னர்.

'இந்தியாவே..! எங்கள் மண்ணில் எப்போது காலெடுத்து வைக்கப்போகின்றாய்' எனக் கதறியழுதேன். ' இப்படியான நம்பிக்கைக்குப் பாத்திரமாவே இந்தியா தன் படைகளைக் களமிறக்கியது. தேவ தூதர்கள் வானிலிருந்து இறங்கியதைப் போல நெற்றித் திலகமிட்டும், ஆராத்தியெடுத்தும் ஆயுதமேந்திய அமைதிப் படையை யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வரவேற்றனர். இந்த வரவேற்புக்கெல்லாம் ரத்தக்களறியே பரிசாக வழங்கப்படும் என அப்போது யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

1987 ஆம் ஆண்டின் ஒக்ரோபர் 21, 22 ஆம் திகதிகள். அந்நாட்களில்தான் தம் வதைப் படலத்தின் உச்சக் கட்டத்தை ஆரம்பித்தன இந்திய அமைதிப் படைகள். 'என்பத்தேழாம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பத்தாம் திகதியளவில் யாழ்ப்பாண நகருக்குள்ள இந்தியன் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில கடும் சண்டைகள் தொடங்கி நடந்துகொண்டிருந்தது.

அந்த யுத்தத்தில இந்திய ராணுவம் யாழ்ப்பாண கோட்டை வரை நகர்ந்து வந்திருந்தது. கோட்டைக்குள்ள நுழைஞ்ச ராணுவத்தை வெளியில் வரவிடாமல் 21 ஆம் திகதி வரை மறிச்சு வச்சிருந்தவை. 21 ஆம் திகதி அன்றைக்கொரு தீபாவளி தினம். முற்பகல் 3 மணியளவில் கோட்டையிலிருந்து வெளிக்கிட்ட இந்தியன் ராணுவம் மணிக்கோட்டுக் கோபுர வீதி வழியாக வந்து இப்ப காந்தி சிலை இருக்கிற இடத்திற்கு பக்கத்தில இருந்த ஆஸ்பத்திரியின் மெயின் கேற்றால் உள்ள நுழைஞ்சது.

நாங்கள் அப்ப யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின் சத்திரசிகிச்சைக் கூடத்துக்குள்ள வேலை செய்துகொண்டிருக்கிறம். அங்கயும் ஷெல்கள் விழுந்து சேதம். எனவே அங்க நின்று வேலை செய்ய முடியேல்ல. அந்நேரம் அதுக்குப் பொறுப்பா இருந்த பொன்னம்பலம் டொக்டர் சொன்னார், நாங்கள் இங்கயிருந்து வெளிக்கிட்டு எக்ஸ்ரே கூடத்துக்குள்ள எல்லாரும் போவம் என்றார். நாங்களும் அதுக்குள்ள போனம்.' என அந்நாட்களில் மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியரான கந்தராஜா (பெயர்மாற்றம்) தன் அனுபவத்தைப் பகிர்ந்தார்.

'நான் அப்ப 20 ஆம் வார்ட்டில் வேலை செய்துகொண்டிருந்தன். நோயாளர்களுக்கு சாப்பாடு குடுக்கத் தயாராகிக்கொண்டிருந்தன். சாப்பாட்டை எடுத்துக்கொண்டு 16 வார்ட்டுக்குக் கிட்ட போகும்போது, அங்க வேலைசெய்து கொண்டிருந்த தாதிய உத்தியோகத்தர் ஒராள், மேற்னன் ஒவ்வீஸ்ல ஒரு விண்ணப்பம் வாங்கிவரச் சொல்லிக் கேட்டா. நான் அதை வாங்க நான் அங்க போனபோது, மேற்னன் ஒவ்வீஸ் பக்கம் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. நான் வேகமாக ஒடிவந்து அடுத்த கட்டடத்துக்கு மாற முயற்சிக்க எங்கட பக்கம் துப்பாக்கிச் சன்னங்கள் வந்தது. திரும்ப நானும், சிஸ்டர் வடிவேலும் அந்த வழியால திரும்பி, நான் மேற்னன் ஒவ்வீஸ் பக்கம் போனன், அவா டிரக்டர் ஒவ்வீஸ் பக்கம் போனா. நான் அதில ஒரு அறைக்குள்ள போய் கதவை மூடிக்கொண்டன். அண்டைக்கு நாலு மணி அணியிலிருந்து அடுத்த நாள் விடியுமட்டும் துவக்குச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது' என்றார் இன்னொரு சாட்சியமான தனபாலசிங்கம்.

தொடர்ந்தும் தன் அவல நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், '...எக்ஸ்ரே எடுக்கிற தளத்துக்கு எங்களாலேயே போக முடியேல்ல. அதற்கு அடுத்து இருந்த பெண் நோயியல் விடுதியில் இருந்திட்டம். ஆனால் எங்களுக்குப் பின்னால வந்த மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்திட்டினம். அவையள தூக்கவும் முடியேல்ல. காப்பாற்றவும் முடியேல்ல..' '...டிரக்டர் ஒவ்வீஸ் போன பக்கம் போன சிஸ்டர் வடிவேலுவைக் கண்ட ஆர்மி அவரை சுட்டுக்கொன்று விட்டது. நான் அறைக்குள்ள இருந்த படியால் தப்பிவிட்டன். அதேபோல எக்ஸ்ரே ஒவ்வீஸ் பக்கம் வந்த இராணுவம் அங்க எங்களையும், நோயாளிகளையும் காப்பாற்ற நின்ற வைத்திய உத்தியோகத்தர்கள், தாதியர்கள், நோயாளிகள் என எல்லாரையும் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். எனக்கு பக்கத்து ரூமில் இருந்து காயப்பட்டவர்கள் தண்ணீ...தண்ணீ என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். எங்களால் அவர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாமல், அவர்கள் உயிர் பிரிந்திருந்தது. எவ்வளவோ நோயாளிகளைக் காப்பாற்றிய நாங்கள், எதையும் செய்யமுடியாதிருந்தம் என்ற குற்றவுணர்வு இப்பவும் இருக்கு...'

'..மறுநாள் விடிந்ததும் காலை விடிஞ்சதும்இ ஆஸ்பத்திரியின் பின் வாசலால்இ குழந்தை வைத்திய நிபுணரும்இ பேராசிரியருமான சிவபாதசுந்தரம் அவர்கள் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். இதனை நாங்கள் 17 ஆம் வார்ட்டின் பின் பகுதி ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் இங்க இருந்து கையைக் காட்டினம், உள்ள வாராதையுங்கோ ஐயா..திரும்ப போங்கோ என்று. அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இராணுவம் உள்ளே நிற்பது கூடத் தெரியவில்லை. அவர் அப்படியே பிரசவ விடுதிக்கு சென்றுவிட்டார். அங்கு, நடந்த சம்பவங்களைத் தெரிந்துகொண்டு, மருத்துவர் பொன்னம்பலம் உள்ளிட்ட பணியாளர்களையும், நோயாளிகளையும் இராணுவத்தோடு கதைத்து தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார். அப்படி செல்ல வேண்டாம் என அவர்கள் தடுத்தும், மனிதாபிமான நோக்கோடு சிவபாதசுந்தரம் ஐயா மூன்று தாதிய உத்தியோகத்தர்களையும் அழைத்துக்கொண்டு எம்மை நோக்கி வந்தார்.

வெள்ளைக் கோரட் அணிந்திருக்கிறார், அதற்கு மேலால் தெதஸ்கோப் அணிந்திருக்கிறார், தாதியர் பணியுடையில் வருகின்றனர். நால்வருமே கையை உயர்த்திக்கொண்டு, வைத்தியசாலை 'கொருடோர்' ஊடாக நாங்கள் இருந்த பகுதியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். நாங்கள் எங்களோடு இருந்த மருத்துவரிடம், நாங்களும் அவரோட போவமோ என்று கேட்க, அவர் எங்களை தடுத்துவிட்டார். அதற்குள் சிவபாதசுந்தரம் ஐயா அடுத்த கட்டிடத்திற்குள் நுழைய சடசடவென துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டன. பின்பு மறுநாள் காலை எங்கள் அறைகளுக்குள் நுழைந்த இராணுவம், எங்களை அழைத்துக்கொண்டு போனது.

முதற்கட்டமாக வெளியில் கொல்லப்பட்டுக் கிடந்தவர்களை இந்திய இராணுவம் காட்டியது. அவ்வாற கொல்லப்பட்டுக் கிடப்பவர்களில், எங்கள் சிவபாதசுந்தரம் ஐயாதான் முதலாவது ஆளாக விழுந்து கிடக்கிறார். மருத்துவர் கணேசரட்னம், மருத்துவர் பரிமேலளகர், சிஸ்டர் வடிவேலு, மேற்பார்வையாளர்களான செல்வராஜா, கிருஸ்ணராசா, ஊழியர்களான மார்க்கண்டு, பவிதாஸ் எனப் பலபேர் வரிசையாக சுடப்பட்டுக் கிடக்கினம்...' '...இந்திய ராணுவம் இப்படி செய்யுமென்று கனவிலும் நினைக்கவில்லை. இந்திய ராணுவத்தை நம்பியே நாங்கள் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தோம்...' எனத் தன் நீண்ட நினைவை முடித்தார் தனபாலசிங்கம். அவரிடம் நினைவிருக்கும் அவல நினைவுகள் மிகச் சொற்பமானவை. பலவற்றை அவரே மறந்துவிட்டார் என்றும் கூறினார்.

இப்படியாக கொல்லப்பட்டவர்களின் உறவுகள் அந்தத் துயரச் செய்தியை அறியவே பலவாரங்கள் எடுத்தன. தம் பிள்ளைகள் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனக் கருதிக்கொண்டிருக்கையில், யாழ். போதனா வைத்தியசாலையின் பிணவறையின் பின்பக்கமாக பிணக்கும்பலாக்கப்பட்ட, எரிபொருள் ஊற்றி அவர்கள் எரிக்கப்பட்டிருந்தார்கள். அப்படி தன் மகன் இறந்ததைக் கூட அறிந்திராத மூதாட்டியான நாகபூசணி,

'..மகன் அங்கேயே பாதுகாப்பாக இருந்து வேலைசெய்யலாம் என்றார். 17 ஆம் திகதி பிரச்சினை பெரிசாகினதென்றவுடன அங்கேயே நிற்கிதுதான் நல்லமென்ற நாங்களும் நினைச்சம். 21 ஆம் திகதி இப்பிடி பிரச்சினையாம் என்ற அயல் சனங்கள் சொன்னது. மகன் மூன்று நாளும் வரவுமில்ல. தொடர்புமில்ல. அது கந்தசஸ்டி விரதகாலம். நான் கோயிலுக்குப் போய் புத்தகம் படிக்க எழுத்தெல்லாம் மாறுபடுது. எனக்கொரு சந்தேகம் வந்திட்டும். எட்டு நாள் வரைக்கும் ஒரு சேதியுமில்ல. 9 ஆம் நாள் தான் நாவற்குழியில இருந்த எனக்கு யாழ்ப்பாண நகரத்தில நடந்த சம்பவம் தெரிஞ்சது. 17 ஆம் நாள் படாதபாடு பட்டு ஆஸ்பத்திரிக்கு போனன். மகனின் உடுப்பையும், ஐசியையும் தந்துச்சினம். 21 பேரோட சேர்த்து அவருக்கும் சடங்கு செய்திட்டம் என்றார்கள்..' – எனத் தன் கதையை அந்த மூதாட்டி முடிக்கையில் கண்ணோரம் காய்ந்து படிடிந்த கண்ணீர் இறுக்கமாகத் தெரிகிறது.

இந்தியா இந்த மண்ணில் புரிந்த அத்தனை கொடுமைகளினதும் ஒரு துளியளவு கதைதான் இவ்வளவும். மிலேச்சத்தனமிக்க நரகாசுர வதங்களை ஒரு வடுவாகவே இந்தியா அளித்திருப்பதை இன்றும் நினைவேந்துகிறது இந்நாடு.

ஜெரா 

https://tamilwin.com/article/india-army-special-article-1635073148

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய ஆக்கிரமிப்புப் படையால் படுகொலைசெய்யப்பட்ட அப்hவிப்பொதுமக்களுக்கும் யாழ். மருத்துவமனையின் செயற்றினளார்களனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அழித்தவர்களுக்கான தண்டனை கிடைக்கவில்லைஇ கிந்தியா ஒரு மன்னிப்பாவது கேட்டதா என்றால் இல்லை. ஏன் புலத்திலே இருககும் அவர்களது உறவுகள் அல்லது அமைப்புகள் மனித உரிமை மையங்களில் மனு ஒன்றை சமர்பித்தால் என்ன? 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டான் கருணைக்கு(வேணுமெண்டு பிழையாக ) நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் இந்தப்பக்கம் வந்தால் வாலை சுருட்டி கொண்டு போவார்கள் .

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.