Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கொழும்பின் கதை - என்.சரவணன்


Recommended Posts

AVvXsEgD_o0HpiOASXhqIL2jVBkjX0z8i5KDZ_Rx

 

கொழும்பைப் பற்றிய வரலாற்று வழித்தடத்தை தேடும் ஆய்வு இது. சற்று விரிவாக கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றியும், அதன் மானுடப் பண்பாட்டைப் பற்றியும் பல சுவாரசியமான கதைகளுடனும், ஆதாரங்களுடன் தொடராக இத்தொடரில் நீங்கள் சுவைக்கலாம்.

 

கோல் பேஸ் (Galle face) என்று நாம் அழைக்கும் காலிமுகத்திடலை அனுபவித்திராத இலங்கையர் அபூர்வம் எனலாம். இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் கொழும்பில் காலிமுகத்திடலுக்கு ஒரு தடவையாவது சென்று வரவேண்டும் என்று நினைப்பார்கள். கொழும்பில் பிரதான மையப் பகுதியில் மிகப்பெரிய விஸ்தீரணம் கொண்ட கடற்கரைப் பகுதியாக அது இருப்பதாலும், பழைய பாராளுமன்றக் கட்டிடம், கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய கேந்திர மையங்களை ஒருங்கே அருகாமையில் உள்ள பகுதியாக இருப்பதாலும் அது மேலும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இந்திய சமுத்திரத்தின் பக்கமாக மாலை சூரிய அஸ்தமனத்தை கண்கொள்ளாமல் பார்ப்பதற்காக பின்னேரம் பலர் நிறைந்திருப்பார்கள். அதிகாலையில் உடல் அப்பியாசத்துக்காக ஓடுவது, உடற் பயிற்சி செய்வது, கடும் வெய்யிலிலும் காதலர்கள் ஒன்று கூடுவது, மாலையில் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ ஒன்றுகூடுவது, பட்டம் பறக்கவிட்டு, பற்பல விளையாட்டுக்களை விளையாடி, உண்டு, களித்துச் செல்லும் இடம் அது.

AVvXsEiJasr4QOyKkwBsM5mfuVokB5THyppobEvh

கொழும்பில் பெரிய விஸ்தீரணத்தைக் கொண்ட வேற்று நிலமாக பேணப்படுகின்ற ஒரே இடமாக இதைச் சொல்லலாம். சுதந்திர தினம், இராணுவ அணிவகுப்புகள், இராணுவக் கண்காட்சி உள்ளிட்ட பல முக்கிய அரச நிகழ்வுகள் அங்கே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. மாபெரும் மே தின நிகழ்வு, மாபெரும் அரசியல் பொதுக் கூட்டங்களும், மட்டுமன்றி ஒரு காலத்தில் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் செய்யும் இடமாகவும் இது இருந்தது. ஒரு காலத்தில் தமிழரசுக் கட்சியின் பிரபல சத்தியாக்கிரக போராட்டங்களும் அங்கே தான் நடந்தன.

இன்றைய காலிமுகத்திடல் ஐந்து ஹெக்ராயர் பரப்பைக்கொண்டது. ஆனால் இன்று காண்பதை விட மிகப் பெரிதாக ஒரு காலத்தில் அது இருந்தது. அப்போது கிரிக்கெட், ரக்பி, கொல்ப், உதைப்பந்தாட்டம் மட்டுமன்றி, குதிரையோட்டம், காரோட்டப் பந்தயப் போட்டிகளும் நிகழ்த்தப்பட்ட இடம் அது.

காலிமுகத்திடல் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பு கோட்டையைப் பாதுகாப்பதற்கான இராணுவ தந்திரோபாய இடமாக பேணப்பட்டு வந்தது. போர்த்துக்கேயர்கள் கடல்வழி ஆக்கிரமிப்பை நடத்தினால் அதை எதிர்கொள்வதற்காக பீரங்கிகளை கொண்டு வந்து வரிசையாக இங்கே நிறுத்தினார்கள். இன்றும் காலிமுகத்திடலின் கரைகளில் கடலை நோக்கியபடி காணப்படும் பீரங்கிகள் ஒரு காலனித்துவ காலத்தில் எப்பேர்பட்ட போர்களையும், போர் தயார் நிலையிலும் இது இருந்திருக்கிறது என்பதை நமக்கு விளக்கும்.

முன்னர் கொழும்பு கோட்டையின் வாயிற் பகுதியாக காலிமுகத்திடல் இருந்தது. டச்சு மொழியில் Gal என்றால் Gate அல்லது வாயில் என்று பொருள். அதுபோல faas என்றால் முகப்பு என்று பொருள். இரண்டும் சேர்ந்து Galle face காலிமுகத் திடல் என்று தமிழில் பின்னர் அழைக்கப்பட்டது. சிங்களத்திலும் கூட தமிழில் உள்ள அதே அர்த்தத்துடன் ගාලු මුවදොර පිටිය என்றே அழைக்கப்படுகிறது. இன்னொரு பெயர்க் காரணமும் கூறப்படுகிறது. அதாவது “கல் பொக்க” (கல் வாயில்) என்கிற சிங்களச் சொல் தான் ஆங்கிலத்துக்கு Galle face என்று ஆனது என்கிற கதையும் உண்டு.

காலிமுகத்திடல் பற்றிய பல உண்மைகள் புதைந்தே போய்விட்டன. இல்லை... இல்லை... அது சடலங்களின் புதைகுழியாகவே ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. காலிமுகத்திடல் ஒரு காலத்தில்; மரணித்தவர்களை புதைக்கின்ற மயானமாக இருந்தது என்றால் நம்ப சிரமப்படுவீர்கள். ஆனால் அது தான் உண்மை.

AVvXsEjg3MoZxdnQskWqJ1pa5rYH5kAa40VyFxp6
பேறை வாவியோடு ஒட்டியிருக்கும் பகுதியே மயானம் (Galle Face Burial Ground) இருந்த சரியான இடம். 1865-75 அளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எந்தக் கட்டிடங்களும் இல்லாத காலம்.

சடலங்களை புதைக்கின்ற மயானமாக

ஆங்கிலேயர்கள் இலங்கையின் கரையோரங்களை ஒல்லாந்தர்களிடம் இருந்து 1796 இல் கைப்பற்றியபோதும் கண்டியை 1815 இல் கைப்பற்றியபின் தான் முழு இலங்கையையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த இடைக்காலப் பகுதியில் கண்டியுடன் கடும் போர் நடத்தியிருந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் இரு தசாப்தங்கள் தான் அதிக பிரிட்டிஷார் கொல்லப்பட்ட காலம். இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் தான்  கண்டியுடனான முதல் போர் 1803 இல் ஆரம்பமானது. அந்தப் போர்களில் எல்லாம் கடும் தோல்வியை சந்தித்தது பிரிட்டிஷ் படைகள். அதில் கொல்லப்பட்ட உயர் இராணுவ அதிகாரிகள் பலரது சடலங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றன. காலிமுகத்திடலை 1803 ஆம் ஆண்டிலிருந்து மயானமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஆங்கிலேய அரசு. 1805 ஆம் ஆண்டு தான் அதற்கான எல்லை மதில்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. முதல் கல்வெட்டு 1809 இல் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை ஜெபித்து புனிதப்படுத்த 1821 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து பேராயர் (Middleton) வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

1809 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இராணுவத்தைச் சேர்ந்த டேவிட் டேன் (David Dunn) என்கிற 24 வயது இளைஞன் கொழும்பு பேறை (Beira Lake) வாவியில் தற்செயலாக மூழ்கி இறந்துள்ளார் அவ்விளைஞனின் பிரேதம் தான் முதலாவது தடவையாக காலி முகத்திடலில் புதைக்கப்பட்டிருகிறது. 

AVvXsEhaNf7Crtfln5qR6US0LslN8S4ozCDS7n4q

இதே 1821 ஆம் ஆண்டு தான் அன்றைய தேசாதிபதி எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barnes) காலி முகத்திடலை பரந்துபட்ட நில அமைப்புடன்  “Galle Face Green” திட்டம் என்கிற பெயரில் அமைத்தார். ஒரு குதிரைப் பந்தயத் திடலை அந்த இடத்தில் அமைப்பதை இலக்காகக் கொண்டே இந்தத் திடலை அவர் அமைத்தார். குதிரைப்பந்தயப் போட்டி விளையாட்டு இலங்கையில் இங்கிருந்து தான் அறிமுகமானது. எட்வர்ட் பார்ன்ஸ் இலங்கையில் பிரதான பெருந்தெருக்களை அமைத்ததில் முன்னோடியானவர். “இலங்கைக்கு முதலாவது தேவையானது தெருக்கள் தான். இரண்டாவது தேவையானதும் தெருக்கள் தான். மூன்றாவது தேவையானதும் தெருக்கள் தான்” என்று 1819 அவர் இலங்கை வந்த வேளை கூறியவர். அவர் இலங்கையின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் தெருக்களால் ஒன்றினைத்தார். கொழும்பில் அவர் பெயரிலும் ஒரு வீதி (Barnes place) இன்றும் உள்ளது. கொழும்பு – கண்டி வீதி அமைக்கப்பட்டதன் பின் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இலங்கையில் 1823இல் கோப்பித்தோட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் பெருந்தோட்டத்துறையை அறிமுகப்படுத்தியவர் எட்வர்ட் பார்ன்ஸ். இந்தியத் தொழிலாளர்களை தோட்டத்தொழிலுக்காக இலங்கையில் முதலில் இறக்கியவரும் அவர் தான்.

 

AVvXsEi6bcJwBKlldW6gAMbPzsaWNwftgkxTGUET


அதற்கு முன்னரே காலிமுகத் திடலோடு இருக்கிற வீதி 1814 இல் அமைக்கப்பட்டது. இன்றும் அது அமைக்கப்பட்டதற்கான கல்வெட்டு இன்றைய தாஜ் சமுத்திரா ஹோட்டலின் பாதையோர மதிலோடு அது பற்றிய ஒரு கல்வெட்டு இருப்பதைக் காணலாம்.. பிற்காலத்தில் தென்னிலங்கையில் காலி வரை நீள்கிற A2 பாதையின் ஆரம்பம் காலிமுகத்திடலில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.

 

AVvXsEg7l71YfN97qqsKlduZm-KNcfnGlLK6rZad

1830 களில் ஒன்றரை மைல் தூரத்துக்கு இது குதிரையோட்டப் போட்டி நடத்தும் இடமாகவும் காலிமுகத்திடல் பயன்படுத்தப்பட்டது. அப்போது இதனை கொள்ளுப்பிட்டி குதிரைப் பந்தயத் திடல் Colpetty Race Course என பெயர் பெற்றிருந்தது. 22.09.1835 ஆம் ஆண்டு தான் முதல் குதிரைப் பந்தயம் அங்கு நிகழ்ந்திருக்கிறது.  1893 ஆம் ஆண்டு கொழும்பு கறுவாத்தோட்டப் பகுதிக்கு (Cinnamon Garden) பகுதிக்கு அது மாற்றப்படும் வரை இங்கே தான் அந்தப் பந்தயங்கள் நிகழ்ந்தன. பிற்காலத்தில் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க இறப்பதற்கு காரணமான குதிரை சவாரி விபத்து இங்கு தான் நிகழ்ந்தது என்பதையும் இங்கே கொசுறாக நினைவுக்கு கொண்டு வரலாம்.

AVvXsEiY9hxGMpXSyHMI4CXFLZysWlV21AUX99ri
அந்தக் காலத்து குதிரைப்பந்தையத் திடல் (1865-75 கால படம்)

பசுமை காலிமுகத்திடல் திட்டம்

1856 ஆம் ஆண்டு அன்றைய ஆளுநர் சேர் ஹென்றி ஜோர்ஜ் வார்ட் (Sir Henry George Ward - 1797–1860) காலிமுகத்திடலின் கடற்கரையோடு அண்டிய பகுதியை ஒரு மைல் தூரம் அளவுக்கு பசுமையான திடலாக புதுப்பிக்கும் இன்னொரு Galle Face Green திட்டத்தை ஆரம்பித்தார். அவரது அத்திட்டம் 1859 இல் நிறைவடைந்தது. காலி முகத்திடல் இன்றைய தோற்றத்தை அடையப்பெற்றது இந்தத் திட்டத்தின் மூலம் தான். இன்றும் காலிமுகத்திடலில் அதன் நினைவுக் கல்லை காணலாம். முற்றிலும்  பெண்களும் குழந்தைகளும் காற்று வாங்கி கூடிக் களிக்கும் இடமாக மாற்றுவதே அவரின் திட்டமாக இருந்தது. கூடவே குதிரைச் சவாரி செய்வதற்கும், கோல்ப் விளையாடுவதற்குமான பெரிய திடலாக அமைப்பது தான் அவரின் நோக்கம்.

ஒரு புறம் பேறை வாவியை (Beira lake) எல்லையாகக் கொண்டு தான் அந்த மயானம் இருந்தது என்று லூவிஸ் பென்றி குறிப்பிடுகிறார். அதாவது சில ஆண்டுகள் வரைக்கும் இராணுவத் தலைமையகம் இருந்த இடமாகவும் இப்போது பிரபல சங்கிரில்லா ஓட்டல் கட்டப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து தொடங்குகிறது அந்த காலிமுகத்திடல் மயானம்.

சங்கிரில்லா ஓட்டல் கட்டுவதற்கான பணிகளுக்காக தோண்டும் போது அங்கிருந்து எலும்புக் கூடுகளும், சவப்பெட்டிகளின் எச்சங்களும், சவப்பெட்டிகளின் இரும்புக் கைப்பிடிகளும் கண்டெடுக்கப்பட்டது பற்றி செய்திகளில் வெளிவந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். அந்த எச்சங்களை ஆராய புறக்கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ போன்றார் அங்கே சமூகமளித்திருந்ததையும் அச்செய்திகள் குறிப்பிட்டிருந்தன.

AVvXsEivUGv31n9xe-tLpy_lOsYLWoYRcqBXVC_P

1866 ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பின்னர் வுல்பெண்டால், ஸ்லேவ் ஐலன்ட் ஆகிய இடங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயம்,  ஸ்லேவ் ஐலன்ட்டில் உள்ள மலே மயானம் என்பவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும், காலிமுகத்திடல் மயானத்தை தனித்து ஐரோப்பியர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தும்படியும் ஒரு தீர்மானம் 1866 யூன் 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அது மயானமாக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு இராணுவப் பாவனைக்காக அது பயன்படுத்தப்பட்டது.

அடுத்த இதழில்...
 

------------------------------------------------------
என்.சரவணனிடம் எழுத்து மூலம் அனுமதி பெறப்பட்டு யாழில் இத் தொடரை பகிர்கின்றேன்

- நிழலி

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிக்க நன்றி நிழலி. இலங்கையின் இவ்வாறான வரலாற்று விடயங்களை வாசிப்பது சுவார்ஸ்யமானது.  

Link to comment
Share on other sites

 • நிழலி changed the title to கொழும்பின் கதை - என்.சரவணன்
AVvXsEhfxTqVUPm0ZAlTbgQHPKTK2rswY3sicg0N

காலிமுகத்திடல் மயானமாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் மயானமாக பயன்படுத்தப்பட்டது புறக்கோட்டை மயானம் தான். ஆம் இலங்கையின் நெருக்கடியான சந்தைப் பகுதியாக இன்று இருக்கிற புறக்கோட்டையில் இன்னும் சொல்லப்போனால் கெய்சர் வீதி (Keyzer street), மெயின் வீதி (Main street) அமைந்திருக்கும் பகுதியில் தான் அன்றைய பெரிய மயானம் இருந்தது. வுல்பெண்டால் மயானம் அப்போது மிகவும் சிறியதாக இருந்ததால் அங்கே புதைப்பதற்கான கட்டணமும் அதிகமாக இருந்தது. 

 

AVvXsEiK4xExlkrx7WrTfd8TBxBn9VBFDuCFQwuB
BALDAEUS 1672இல் வரைந்த கொழும்பின் வரைபடம்
 
எனவே புறக்கோட்டை மயானம் தான் மாற்று மயானமாக அன்றைய ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அப்போது “கொழும்பு கோட்டை”யின் மதில்களுக்கு வெளிப்புறமாக இருந்த இந்தப் பகுதியில் மயானம் இருந்தது. இப்படியான மயானங்களை மேற்கத்தேய கிறிஸ்தவர்கள் தேவாலயத்தோடு தேவாலயத்தின் அங்கமாக வைத்துக்கொள்வது வழக்கம். இறந்தவரின் இறுதிக் கிரியைகள், பூசைகள் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்டு அத்தேவாலயத்துகுரிய மயானத்தில் புதைக்கப்பட்டபின் அது பற்றி தேவாலயக் குறிப்புகளில் குறித்து வைத்துக்கொள்வது நெடுங்காலமாக இருக்கும் வழக்கம். பிறப்பு, இறப்பு, திருமண, திருமுழுக்கு போன்ற குறிப்புகளைக் குறித்து வைத்துக்கொள்வதால் இன்றும் பலர் பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. மேலும் இந்த மயானங்கள் சுதேசிய சாதாரணர்களைப் புதைக்கும் மயானமாக இருக்கவில்லை. இவை காலனித்துவ நாட்டு சிவில், இராணுவ, அதிகாரிகளையும், நிர்வாகிகளையும், ஊழியர்களையும், அவர்களின் குடும்பங்களையும், கிறிஸ்தவ பாதிரிகளையும் புதைக்கும் மயானங்களாகவே இயங்கின.

 

ஒரு காலத்தில் அதிகமான இறுதிக்கிரியைகளை செய்தவராக அங்கிலிக்கன் பாதிரியாரான பெய்லி (Anglican Archdeacon Bailey) பிரபலம் பெற்றிருந்ததால் பகிடியாக ‘Padre Bailey’s Go-Down’ என்று அந்த இடத்தை அழைத்தார்களாம்.

 

AVvXsEiTrdaE0ZRc21C73GA3zNB6jC7TJ7T1gwGR

 

அன்றைய ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி லூவிஸ் பென்றி (Lewis, J. Penry) பிற்காலத்தில் காலனித்துவ காலத்தில் இருந்த மயானங்களில் புதைக்கப்பட்டவர்கள் பற்றிய தேவாலயப் பதிவுகளை தொகுத்து “List of inscriptions on tombstones and monuments in Ceylon, of historical or local interest, with an obituary of persons uncommemorated” என்கிற ஒரு பயனுள்ள நூல் ஒன்றை 1913ஆம் ஆண்டு அரசாங்க அச்சகப் பதிப்பின் மூலம் வெளியிட்டார். பல ஆய்வுகளுக்கும் பயன்பட்ட நூல் அது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

 

கண்டி ஒப்பந்தம் நிகழ்ந்து மூன்றாண்டுகளில் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்ட கெப்பட்டிபொல தலைமையில் ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து நிகழ்ந்ததை அறிவீர்கள். அதில் கொல்லப்பட்ட சில ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளின் நினைவுக் கல்லறைகளும் காலிமுகத்திடலில் இருந்ததாக லூவிஸ் பென்றி குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்களைப் புதைக்கும் மயானமாகத் தான் இது பேணப்பட்டது. 1866 ஆம் ஆண்டு பொரல்லை கனத்தை மயானம் இலங்கை வாழ் பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்படும்வரை கொழும்பில் சுதேசிகளுக்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட மயானம் இருக்கவில்லை. இந்து, முஸ்லிம்களும், ஏனைய சகல கிறிஸ்தவ பிரிவினரும் கூட எந்த வர்க்க வேறுபாடுமின்றி அடக்கம் செய்யும் இடமாக பொரல்லை கனத்தை மயானம் ஆனது.

 

AVvXsEgDfxwBk4ojdYEn2v_8UaG3qVXA7rcAtoNe
1870 இல் காலிமுகத்திடல்

 

இராணுவப் பாவனைக்கு

ஆங்கிலேயர்கள் ஒரு கட்டத்தில் காலிமுகத்திடல் பகுதியின் இராணுவ மூலோபாயப் பெறுமதியையும் முக்கியத்துவத்தையும் கருதியும், மயானத்தில்  அங்கு உடல்களைப் புதைப்பதை நிறுத்தி அங்கிருந்த கல்லறைகளை பொரல்லைக்கு இடம்மாற்றிவிட்டு அதை அப்படியே மூடிவிட்டார்கள். அந்த இடத்தை இராணுவப் பாவனைக்காக பயன்படுத்தினார்கள். முதலாம் உலக யுத்தம் முடியும் வரை அது இராணுவத் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. அதே இடத்தில் தான் பிற்கால இலங்கையின் இராணுவ தலைமையகமும் அமைக்கப்பட்டது.

அதுபோல கடற்படைத் தலைமையகமும் அங்கிருந்து அத்தனைத் தூரமில்லை. இராணி மாளிகையும் (இன்றைய ஜனாதிபதி மாளிகை) மிக அருகாமையில் தான் அமைந்திருக்கிறது. இதைச் சூழத் தான் பிற்காலத்தில் இலங்கையின் பாரளுமன்றம் (இன்றைய ஜனாதிபதிச் செயலகம்), பல ஹோட்டல்கள், மத்தியவங்கி, உள்ளிட்ட இலங்கையின் பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையப் பகுதியும் அமைந்தது.

அதுபோல கண்டி ராஜ்ஜியத்தை வீழ்த்துவதற்கு பிரதான சூத்திரதாரியாக இயங்கிய ஜோன் டொயிலி தனது நாட்குறிப்பில் பலர் பற்றிய விபரங்களையும் பதிவிட்டிருக்கிறார். அதில் மேஜர் பெய்லட் பெய்லி பெயிலி (Major Bayley Bayly) பற்றி குறிப்பிடும்போது; 1779 இல் பிறந்த அவர் பிரெஞ்சுப் போரில் ஈடுபட்டபோது கைதுக்குள்ளாகி விடுதலையானார். பின்னர் எகிப்தில் இருந்த ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்து விருதுகளைப் பெற்றார். 88 வது படைப்பிரிவில் லெப்டினன்டாக  கடமையாற்றி 1814 இல் இந்தியாவிலும் பின் இலங்கையில் 1815 கண்டிப் போரிலும், 1817இல் ஊவா கிளர்ச்சியை எதிர்த்தும் போரிட்டு தளபதி நிலைக்கு உயர்ந்தார். 1818 இல் மூன்று கோரளைகளின் அரசாங்க பிரதிநிதியாக ஆகி இறக்கும் வரையிலும் அப்பதவியில் இருந்தார் என்றும் அவர் 10.02.1827 அன்று இறந்தார் என்றும் அவர் காலிமுகத்திடல் மயானத்தில் புதைக்கப்பட்டார் என்றும் டொயிலி தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். (1)

AVvXsEgcHDNIznEqTHP-0Q_eUPEVTbac2uCoAF8J
Christ Church - Galle Face

காலிமுகத்திடல் மயானத்தின் தேவாலயமாக 1853 இல் CMS சேர்ச்சுக்கு சொந்தமான தேவாலயம் அன்றைய காலிமுகத்திடலில் இருந்தது. இன்றும் அந்த Christ Church - Galle Face தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு பின்னால் உள்ளது. ஆக அப்போது இறந்தவர்கள் பலரது இறுதிப் பூசைகள் அங்கே நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த தேவாலயம் அதிக காலம் தமது மயானமாக காலிமுகத்திடலைப் பயன்படுத்த முடியவில்லை.

1862 ஆம் ஆண்டு அரசாங்க சபையின் 9வது இலக்கத் தீர்மானத்தின்படி கொழும்பு பாதுகாப்பு அரணுக்குள் இருக்கிற காலிமுகத்திடல் மயானத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.(2) 1862 நவம்பர் 19 அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகையில் (Government Gazette) இதைப் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அன்றைய United Church க்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம் என்கிற விதிகளை நீக்கி பிரிட்டிஷ் குடிமக்களின் அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பியர்களுக்கு மட்டுமே காலி முகத்திடல் மயானத்தில் அடக்கம் செய்ய முடியும் என்று ஆளுநர் மூலம் அறிவிக்கப்பட்டது.

AVvXsEifZucaFTpGPzInYBaqkZL5cLkLyHV6w5QK

காலிமுகத்திடல் மயானம் மூடப்பட்டபோது அங்கே இருந்த பல நினைவுக் கல்லறைக் கற்கள் கனத்தை மயானத்துக்கு மாற்றப்பட்டது. இன்றும் கொழும்பு கனத்தை மயானத்தில் காலிமுகத்திடல் பிரிவு என்கிற ஒரு பிரிவு இருப்பதை அவதானிக்கலாம்.(3)

விக்ரர் ஐவன் “அர்புதயே அந்தறய” என்கிற தலைப்பில் இலங்கையின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளில் புகைப்படங்களைத் தொகுத்து ஒரு நூலை வெளியிட்டார். அதில் காலிமுகத் திடல் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

 

“ஜனவரி 1803 இல், பிரிட்டிஷார் கண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்தனர், படையெடுக்கும் படைகளை தோற்கடித்து அவர்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். போரில் ஏராளமான ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர், அதுமட்டுமன்றி பின்வாங்கிய இராணுவம் மலேரியா நோய்க்கு இலக்காகி இறந்தனர். மலேரியாவால் இறந்த வீரர்களுக்கு அடக்கம் செய்ய இடம் இல்லாததால், தற்போது காலி முகத்திடல் வளாகம் அமைந்துள்ள பகுதி மயானமாக மாற்ற வேண்டியிருந்தது...”

 

AVvXsEgkGT_GfgIb69_xnmwUgVNTAS0opD_r6al2

வுல்பெண்டால் மயானம்

டச்சு ஆட்சியில் கொழும்பு கோட்டையின் தேவாலயமாக வுல்பெண்டால் தேவாலயம் (Wolvendaal Church) இருந்தது. வுல்பெண்டால் தேவாலயம் 1749 இல் தான் டச்சு அரசின் கீழ் அமைக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து பார்த்தால் மேட்டில் அமைந்திருக்கும் இந்த தேவாலயம் தெரியும் வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது. கொழும்பு விவேகானந்தா மேட்டில் பலரும் வுல்பெண்டால் தேவாலயம் தான் அது. கோட்டையிலிருந்து ஒரு மைல் தொலைவில் அது அமைக்கப்பட்டிருந்து. இந்த தேவாலயத்தோடு ஒட்டி இறந்தவர்களுக்கான மயானமும் இருந்தது.

அடுத்த இதழில்....

உசாத்துணை
 1. Diary Of Mr. John Doyly, Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1917 Vol.25
 2. “No. 9 of 1862: As Ordinance for restricting use of the Galle Face Burial Ground to the Garrison of Colombo, and to make other provision in respect thereof” (A Revised Edition of the Legislative Enactments of Ceylon: Volume I 1656-1879, Colombo, George J.A.Skeen, Gevernment Printer, Ceylon, 1900)
 3. Napoleon Pathmanathan, The History of Christ Church, Galle Face, (Formerly called the Colombo Mission Church of C.M.S )
நன்றி - தினகரன் 07.11.2021
AVvXsEjZ-kDdD3qQfyJk4qUZiFgyrthXRRqRUuBl

 

 
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்றைய காலப் படங்களுடன்... சுவராசியமான கதை. நன்றி நிழலி. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை நினைத்து வாசிக்கக் கூடிய பதிவாக இது வருகிறது.......!  👍

பகிர்வுக்கு நன்றி நிழலி .....!  

Link to comment
Share on other sites

AVvXsEhS6S7VVYKLuX3gaWyrdb92qYjyAY-ccwTw

“கோர்டன் கார்டன்” (Gordon Gardens) பகுதிக்குள் தான் டச்சுக் காலத்தில் கொழும்பின் பிரதான தேவாலயம் இருந்தது. “கோர்டன் கார்டன்” என்பது இன்றைய ஜனாதிபதி மாளிகையாக இருக்கின்ற அன்றைய “இராணி மாளிகை” (Queens house)க்குள் தான் இருந்தது. வுல்பெண்டால் தேவாலயம் பிரதான தேவாலயமாக அமையும்வரை இது தான் அன்றைய தேவாலயமாக இருந்தது. பிற்காலத்தில்  ஆங்கிலேயர் இலங்கையை தம் வசமாக்கியதன் பின்னர் சிதைவுற்றிருந்த வுல்பெண்டால் தேவாலயத்தை திருத்தி 1813 செப்டம்பர் 4 அன்று விழாக்கோலமாக புறக்கோட்டை மயானத்தில் இருந்த முக்கிய கல்லறைக் கற்களைக் கொண்டு வந்து  சேர்த்தனர்.(1)

AVvXsEiY5HXTaFq1nfVkVBvKZWHo89ljiwbQSC9t

இன்னும் சில கல்லறைக் கற்கள்; இன்று புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள டச்சு மியூசியத்திலும் காட்சிக்காக வைக்கப்பட்டன. 1662 – 1736 க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த முக்கிய பதினான்கு கற்கள் தேவாலயத்தின் உள்ளேயும், ஐந்து கற்கள் தேவாலயத்துக்கு வெளியேயும் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் மிகப் பழைய கல்லறைக் கல் 1662 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றால் உங்களால் அதன் பழைமையை விளங்கிக்கொள்ள முடியும்.(2)

 

AVvXsEjlD28bbldYEe1Q7RqJWf9_3esJVvpIqCxS
போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றுவதற்கான போர் நிகழ்ந்தபோது பாணந்துறை, களுத்துறை போன்ற பகுதிகளில் போர் நிகழ்த்தி அவற்றைக் கைப்பற்றியவர் ஜெனரல் அல்ஃப்ட் (Gerard Pietersz. Hulft), அடுத்ததாக கொழும்புக் கோட்டையுடனான போரின் போது காயப்பட்டு  10 ஏப்ரல் 1656 அன்று மரணமானார். அவரின் உடல் பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு காலிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கொழும்பு கைப்பற்றப்பட்டு டச்சுக் கட்டுபாட்டுக்குள் வந்ததன் பின்னர் மீண்டும் கொழும்பு கோட்டையில் (அப்போது வுல்பெண்டால் தேவாலயம் அமைந்த இடத்தையும் சேர்த்து கொழும்பு கோட்டை என்று தான் கூறுவார்கள்.) வுல்பெண்டால் தேவாலயத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அந்த கல்லறைக் கல்லும் இங்கு தான் இருக்கிறது.

 

இவரின் நினைவாகத் தான் அப்போது டச்சுத் தலைமையகம் இயங்கிய பகுதிக்கு அல்ஃப்ட்'ஸ் டோர்ப்" (Hulft's Dorp, அல்ஃப்ட்டின் கிராமம்) என்று பெயரிடப்பட்டது. இன்று இலங்கையின் உயர்நீதிமன்ற வளாகம் அமைந்திருக்கும் பகுதி தான் அது.

அதுமட்டுமன்றி கத்தோலிக்க மதத்துக்கு மாறிய கோட்டை மன்னன் தொன் யுவான் தர்மபாலாவின் கல்லறையும் இங்கே தான் வைக்கப்பட்டு பின்னர் அது மாயமானதாக குறிப்புகள் கூறுகின்றன. (Lewis, J. Penry). அவர் இலங்கையின் முதலாவது கிறிஸ்தவ அரசன். 1580 ஆம் ஆண்டு போர்த்துக்கேயருக்கு கோட்டை ராஜ்யத்தை ஒப்பமிட்டு எழுதிக்கொடுத்தவர் அவர் தான்.

அதுமட்டுமன்றி நான்கு டச்சு ஆளுநர்களும் இந்த வுல்பெண்டாலில் தான் அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் பாதுகாக்கப்பட்டன. இலங்கையை இறுதியாக ஆண்ட இரு டச்சு ஆளுநர்களுமான வில்லெம் யாகோப் (Willem Jacob van de Graaf) யொஹான் வான் அங்கெல்பீக் (Johan van Angelbeek) ஆகியோரின் கல்லறைகளும் பிற்காலத்தில் வுல்பெண்டலுக்கு இடம்மாற்றப்பட்டது.

AVvXsEifK0Mn45zS_shV8Un6TOhDZ3YDy-AkJao7

புறக்கோட்டை மயானத்தை (Colombo Pettah Burial Ground) முதலில் மயானமாக பயன்படுத்தத் தொடங்கியவர்கள் ஒல்லாந்தர்கள் தான் அதன் பின் ஆங்கிலேயர்களும் அதனைப் பயன்படுத்தினர். ஒரு கட்டத்தில் இடமில்லாமல் போன போது தான் ஒல்லாந்தர்கள் இன்றைய காலிமுகத் திடலையும் ஆரம்பத்தில் மயானமாகப் பயன்படுத்தத் தொடங்கி பின்னர் காலக் கிராமத்தில் புறக்கோட்டை மயானத்தை மெதுமெதுவாகக் கைவிட்டனர். அதையே ஆங்கிலேயர்கள் இன்னும் விஸ்தீரணப்படுத்திய மயானமாகப் முழுமையாகப் பயன்படுத்தினார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்று புறக்கோட்டை பொலிஸ் நிலையம் உள்ள பகுதி அந்த புறக்கோட்டை  மயானத்தின் மீது தான் இருக்கிறது. இன்று பரபரப்பான, சனநெருக்கடிமிக்க அந்த “பஜார்” பகுதியின் நிலத்தினடியில் பலர் ஏராளமானோர் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கண்டியில், மன்னாரில், யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்ட அன்றைய காலனித்துவ இராணுவ அதிகாரிகளின் உடல்களும், அன்றைய அரச அதிகாரிகள், அவர்களின் மனைவி, பிள்ளைகள், சகோதர்கள் என பலரும் இந்த புறக்கோட்டை மயானத்தில் புதைக்கப்பட்டார்கள்.

AVvXsEhDSfualJUJ8cTmASpKHrHpz2IQJp_j9vcS

காலிமுகத்திடலில் உள்ள கோல் பேஸ் ஹோட்டல் ஒரு காலத்தில் கொழும்பின் குறியீடாக இருந்த காலமொன்று இருந்தது. காலிமுகத்திடலை எல்லைப்படுத்தும் ஒரு கட்டிடமாக அது இருந்தது. 250 அறைகளைக் கொண்ட அந்தக் காலத்து சொகுசு ஹோட்டல். அன்று இலங்கை வரும் பிரபுக்களையும், ஆங்கிலேய கனவான்களையும் வரவேற்று உபசரிக்கும் ஹோட்டலாக நெடுங்காலம் அமைந்திருந்தது. 1862 ஆம் ஆண்டளவில் காலிமுகத்திடல் மயானத்தின் பாவனையை மட்டுப்படுத்தத் தொடங்கி, அதனை பொதுப் பொழுதுபோக்குப் பாவனைக்கு பயன்படுத்தத தொடங்கியதும் அடுத்த இரண்டாவது வருடம் 1864 இல் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. அதற்கடுத்த இரண்டே ஆண்டுகளில் இலங்கையில் ரயில் போக்குவரத்தும் 1866 இல் அறிமுகப்படுத்தப்பட்டபின் இந்த ஹோட்டலின் முக்கியத்துவமும் பெருகியது. இலங்கையில் முதன்முதலில் மின்சாரத்தைப் பயன்படுத்திய முதற் கட்டிடங்களில் ஒன்று. அங்கே தான் முதற்தடவை  உயர்த்தி (Elevator / Lift) பயன்படுத்தப்பட்டது.

AVvXsEhEBYVYf-jJaSzthZja9ZQZndfUg63iGf1f

காலிமுகத்திடல் பன்முகப்படுத்தப்பட்ட தேவைகளுக்கு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக அது முக்கிய பல பெரும் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்ட இடம். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதும் முதற்தடவை அங்கு தான் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகள் சுதந்திர தின நினைவின் பிரதான நிகழ்வுகள் அங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. பெரிய இராணுவ மரியாதை , ஊர்வலங்கள், விமான வீரர்களின் சாகசங்கள் எல்லாமே இங்கு நிகழ்த்திக் காட்டப்பட்டு வந்திருக்கின்றன. ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதற்தடவையாக ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதும் இங்கு தான்.

முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஏராளமானவர்கள் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்யும் இடமாக இது இருந்து வருகிறது. 1929 ஆம் ஆண்டு ரல்ப் ஹென்றி (Ralph Henry Bassett) வெளியிட்ட Romantic Ceylon என்கிற நூலில் காலிமுகத்திடலில் ஆப்கான் முஸ்லிம்கள் பலர் ஹஜ்ஜுபெருநாள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டதைப் பற்றி குறிப்பிடுகிறார். அப்படியென்றால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்த வழக்கம் இருந்து வருவதை அறிய முடிகிறது.

AVvXsEj_3tr21qD6UG8KgO3gIX4vYtEbvqmQN5Xq

1939இல் ஜவஹர்லால் நேரு வந்திருந்தபோது காலிமுகத்திடலில் அவரின் மாபெரும் கூட்டம் நடந்தது. அன்று அதை எதிர்த்து அன்றைய சிங்கள மகா சபையின் சார்பில் பிரபல தொழிற்சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்க இலங்கை இந்தியர் காங்கிரசை நேரு உருவாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

அதுபோல பாராளுமன்றம் அருகில் இருந்ததால் பல அரசியல் வாதிகளின் ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நிகழ்ந்தபடி இருந்திருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் பல அகிம்சைவழி சத்தியாக்கிரகப் போராட்டங்கள் காலிமுகத்திடலில் தான் நிகழ்ந்திருக்கின்றன.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குள் இலங்கையைப் பற்றிய பயணக் கட்டுரை எழுதிய எவரும் காலிமுகத்திடலைப் பற்றி எழுதாமல் விட்டதில்லை என்றே கூற முடியும். Ali Foad Toulba  1926 இல் வெளியிட்ட “Ceylon : The land of eternal charm” என்கிற நூலில் காலிமுகத்திடலின் அழகிய அனுபவங்களை தனி அத்தியாயமாக தொகுத்திருக்கிறார். காளிமுகத்திடலைப் பற்றிய அனுபவங்களை விலாவாரியாக எழுதியவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

AVvXsEiHJsDkGHPU6pUx4hLfLf4Jy8xirY_FJHRH

முதலாம் உலகப் போர் முடிந்ததும் அதன் நினைவாக 120 அடிகள் உயரமுள்ள வெற்றிக் கோபுரம் ஒன்று 1923ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் நிறுவப்பட்டது. அதை ஆங்கிலத்தில் Cenotaph War Memorial என்று அழைப்பார்கள். இரண்டாம் உலகப் போரின்போது கொழும்பின் மையம்; ஜப்பானின் குண்டுத்தாக்குதலுக்கு இலகுவாக ஜப்பானியர்களால் அடையாளம் காணப்படக்கூடும் என்கிற பீதியால் அந்தக் கோபுரம் அங்கிருந்து அது கழற்றப்பட்டு விகாரமகாதேவி பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களும் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. இன்றும் அது விகாரமகாதேவிப் பூங்காவின் பின்னால் அமைந்துள்ள கொழும்பு பொதுநூலக நுழைவாயின் அருகில் காணலாம். அது அப்போது எங்கு இருந்தது என்பதை சரியாகச் சொல்வதானால்; இன்று பண்டாரநாயக்கவின் பெரிய சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் தான் அந்த நினைவுக் கோபுரம் இருந்தது.

 

AVvXsEhgxh922GrI6JoZICtIr4mxw4ee1yCnfseX
 
AVvXsEiT2tC5Y9N3qK1r8HtNSx0vf3vtIlVequeo

காலிமுகத் திடல் ஒரு மயானமாக மட்டுமல்ல அதற்கு முன் அது ஒரு கொலைக்களமாகவும் இருந்திருக்கிறது. ஒல்லாந்தர் காலத்தில் பலர் தூக்கிட்டும், சுடப்பட்டும், கழுவில் ஏற்றியும் கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டார்கள். அப்படி இலங்கையில் செய்த கொலைகளுக்காக பாதக ஆளுநர் ஒருவர் ஒல்லாந்து அரசால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவமும் நிறைவேறியது. அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

உசாத்துணை:
 1. Lewis, J. Penry, List of inscriptions on tombstones and monuments in Ceylon, of historical or local interest, with an obituary of persons uncommemorated (1854-1923), Colombo, H.C.Cottle, Government printer, Ceylon, 1913.
 2. Dr. K.D. Paranavitana, That church in the Valley of Wolves, Sundaytimes, 24.10.1999
நன்றி - தினக்குரல்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள் நிழலி .........!   👍

Link to comment
Share on other sites

காலிமுகத்திடலை கொலைக்களமாக ஆக்கிய ஆளுநர் வுய்ஸ்ட்! (கொழும்பின் கதை - 4) - என்.சரவணன்

Johannes Hertenberg இலங்கையின் 19 வது டச்சு ஆளுநர். அவர் 12.01.1725இலிருந்து  19.10.1725 வரை ஆளுநராக இருந்தார். பதவியில் இருக்கும் போதே கொழும்பில் திடீர் மரணமானார். அவரின் கல்வெட்டு இன்னமும் வுல்பெண்டால் தேவாலயத்தில் உள்ளது. அவரின் திடீர் மறைவைத் தொடர்ந்து அவசரமாக ஆளுநராக அனுப்பப்பட்டவர் தான் பேதுருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst  1691 -1732).(1) 

தனக்கு ஒரு பெரிய நாட்டை ஆளத்தரவில்லை என்கிற ஏமாற்றத்துடனும், எரிச்சலுடனும் 1726 ஆம் ஆண்டு ஆளுநராக இலங்கை வந்து சேர்ந்தார். ஒரு கையால் தன் ஒரு கண்ணை மறைத்தபடி தான் அவர் எதிரிலுள்ளவர்களை விழிப்பார். இந்த சிறிய நாட்டு முட்டாள்களைப் பார்ப்பதற்கு ஒரு கண்ணே போதும் என்பது தான் அவரின் விளக்கம். மூன்றே மூன்று ஆண்டுகள் தான் அவர் இலங்கையை ஆட்சி செலுத்தினார்.(2)

1729 வரையான அந்த மூன்றாண்டுகளுக்குள் அவர் மேற்கொண்ட அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 

ஒல்லாந்து ஆட்சியை டச்சு ஆட்சி என்றும் அழைப்போம். அன்றைய ஒல்லாந்து காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு அரச ஆக்கிரமிப்பாக நிகழவில்லை. வர்த்தக, வியாபார கம்பனியாகத் தான் நாடுகளைப் பிடிப்பதையும்,  வர்த்தகம் செய்வதையும், ஆட்சி செய்வதையும் புரிந்தனர். குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக டச்சு அரசாங்கத்தால் அனுமதிபெற்ற அன்றைய பல்தேசிய நிறுவனம் என்று கூறலாம். உலகின் முதலாவதுபல்தேசிய கம்பனியும் (Multi-national company) அதுதான். அக் கம்பனியின் மீது ஒல்லாந்து அரசின் அனுசரணையும், அதிகாரமும் இருந்தது. அரசு அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்தது. அவ்வரசு பெரும்பகுதி வரியைப் பெற்றுக்கொண்டது. 

சுமார் 450 வருடங்களாக இலங்கையை ஆக்கிரமித்து தலா சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த மூன்று நாடுகளும் கம்பனிகளின் மூலம் தான் இந்த ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தின. உதாரணத்துக்கு:

 

 1. போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி (Portuguese East India Company), போர்த்துக்கீச கம்பனியை ’Vereenigde Oost-Indische Compagnie’ (United East India Company)என்றும் கூறுவார்கள்
 2. டச்சு கிழக்கிந்தியக் கம்பனி (The Dutch East India Company (VOC)),
 3. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி  (British East India Company)

 

என்கிற நிறுவனங்களை நினைவுக்குக் கொண்டு வரலாம். இலங்கையைப் பொறுத்தளவில் முதலாவது ஆங்கிலேய ஆளுநராக பிரடறிக் நோர்த் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து முழுமையாகவும், நேரடியாகவும் பிரித்தானிய முடியின் கீழ் இலங்கையைக் கொண்டுவந்தார்.

போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் 1640–1796 வரை சுமார் 156 ஆண்டுகள் ஆண்டார்கள். இன்னமும் சொல்லப்போனால் போர்த்துகேயரை விட, ஆங்கிலேயர்களை விட அதிகமான காலம் ஆண்டவர்கள் ஒல்லாந்தர்கள் தான். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் 42 ஆளுநர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் 24 வது ஆளுநர் தான் இந்த பேத்ருஸ் வுயிஸ்ட்.

1723 இல் ஆளுநர் ரம்ப் (Isaak Augustijn Rumpf) தனது அலுவலகத்தில் திடீர் என்று இறந்து விடுகிறார். அடுத்த மூன்று ஆண்டுகள் ஒவ்வொரு வருடமும் ஆர்னோல்ட் (Arnold Moll -1723 இல்), யோஹன்னஸ் (Johannes Hertenberg -1724இல்)(3), ஜோன் போல் (Joan Paul Schaghen – 1725இல்)(4) மூன்று ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நிரந்தர ஆளுநரை நியமிப்பதில் இருந்த இழுபறியின் போது தான் அந்த இடத்துக்கு பேத்ருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst) விண்ணப்பித்திருந்தார்.

பேத்ருஸ் வுயிஸ்ட் வாழ்க்கைப் பின்னணி

வுயிஸ்ட் பத்தாவியாவில் இருந்து தான் வந்தார். அன்றைய பத்தாவியா (Bataviya என்பது இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள நகரம்) என்பது டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகமாக இருந்தது. பல முடிவுகள் அங்கிருந்து தான் எடுக்கப்பட்டன. வுயிஸ்ட்டின் தந்தை Hendrik Vuyst டச்சு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தாய் Maria de Nijs இந்தோனேசிய ஜாவா பின்னணியைச் சேர்ந்தவர். தந்தை ஹென்றிக் வுயிஸ்ட் (Hendrik Vuyst (1656–1705)) கிழக்கிந்திய கம்பனியின் நீண்ட சேவைக்காலத்தைக் கொண்ட ஒரு அதிகாரி.

AVvXsEhJ3IAg874G1pPbJSenv6St_Tt9zvkIXRaz

வுயிஸ்ட் பிறந்ததும் பத்தாவியாவில் தான். 1691 இல் பிறந்த வுயிஸ்ட் தந்தையின் ஒல்லாந்து நாட்டில் தான் கல்வி கற்று தேறினார். கல்வியின் பின் ஒரு வரி வழக்கறிஞராக தொழிலைத் தொடங்கினார். ஒல்லாந்தைச் சேர்ந்த பார்பரா என்கிற பெண்ணை 1714இல் மணம் செய்துகொண்டார்.(5) பின்னர் 1717 இல் பத்தாவியா வந்து சேர்ந்த அவர் அங்கும் ஒரு வரி வழக்கறிஞராக கடமை புரிந்தார். பார்பராவின் குடும்பத்தினர் கிழக்கிந்திய கம்பனியில் செல்வாக்குள்ள குடும்பம் என்பதால் அதன் மூலம் வுயிஸ்ட்டும் பணியில் இணைந்து கொண்டார். 1721 இல் அவர் கிழக்கிந்திய கம்பனியின் கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டார். 1722 இல் அவர் வங்காளத்துக்கு பொறுப்பான இயக்குனராக பொறுப்பேற்று இந்தியாவில் கடமையாற்றினார். இரண்டு ஆண்டுகளில் பத்தாவியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அங்கே அவருக்கு அரசாங்கத்தின் உயர் வழிகாட்டுனராக ஆனார்.(6) 1724 ஆம் ஆண்டு கவுன்சிலுக்கும் தெரிவானார். 1725 ஆம் ஆண்டு மே மாதம் அவர் நகரசபையின் தலைவராகவும் (president van Schepenen) தெரிவானார். சரியாக ஒரு வருடத்தில் அதாவது மே 1726 இல் அவர் இலங்கைக்கான ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை சென்றடைந்து செப்டம்பரில் இருந்து ஆதிகாரம் செலுத்தத் தொடங்கினார். 

அதன் பின் இலங்கையில் 1726 ஆம் ஆண்டு வுயிஸ்ட் இலங்கையின் கவர்னராக நியமிக்கப்படும்போது அவருக்கு முப்பது வயது தான் நிரம்பியிருந்தது. ஆரம்பத்தில் நல்லவராக வளர்ந்தாலும் இந்த பருவத்தின் போது அவர் மிகவும் குரூர குணம் உள்ளவராக மாறியிருந்தார். அவர் காலியை வந்தடைந்த போது ஒரு கண்ணை கறுப்புத்துண்டால் மூடியபடியே இருந்தார். அவரை வரவேற்ற ஒரு உயர் அதிகாரி அவரைப் பார்த்து உங்கள் கண்களுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரித்தபோது, இலங்கை போன்ற ஒரு சின்ன குட்டிமுட்டை நாட்டை ஆள்வதற்கு இரண்டு கண்கள் தேவையில்லை என்றும் ஒரு கண்ணே தனக்குப் போதும் என்று திமிராக கூறித்திருந்தார்.(7)

அடுத்த வாரம்...

அடிக்குறிப்புகள்

 

 1. 1727 இல் ஆளுநர் வுயிஸ்ட் வெளியிட்ட ஒரு ஆவணத்தின் அன்றைய தமிழ் கையெழுத்துப் பிரதியில்  (Plakkaat) “பெதுருஸ் பொயிஸ்த்” என்றே குறிப்பிடுவதைப் பார்க்கலாம். இந்த ஆவணத்தின் விரிவான உள்ளடக்கம்; தனிநாயகம் அடிகளார் தொகுத்து, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் 2014 இல் வெளியிடப்பட்ட “Tamil culture Vol.XI – 1964” என்கிற நூலில் எஸ்.தனஞ்சய ராஜசிங்கம் எழுதிய “A Phonological and Morphological Study of a Tamil Plakkaat” என்கிற கட்டுரையில் காணக் இருக்கிறது.
 2. Anczewska, Malgorzata , Sri Lanka, Singapore : APA Publications, 2015
 3. 19.10.1725 அன்று ஆளுநர் யோஹன்னஸ் திடீர் மரணமுற்றார். இன்றும் அவரது கல்லறை கல் வுல்பெண்டால் தேவாலயத்தில் காணலாம்.
 4. ஜோன் போல் 19.10.1725 – 16.09.1726 வரையான ஒரே ஒரு மாதம் மட்டுமே தற்காலிக ஆளுநராக பதவி வகித்தார். 
 5. A.K.A. Gijsberti Hodenpijl, De overgang van het bestuur van Ceylon van gouverneur Stephanus Versluys in handen van mr. diderik van Domburgh; 1732-1733, Nijh VI,, 1919.
 6. https://www.vocsite.nl/
 7. David Hussly, Ceylon and World history II (1505 A.D. TO 1796 A.D), W.M.A.Wahid & bros, Colombo, 1932.
நன்றி - தினகரன் 21.11.2021
 
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிழலியவர்களே இணைப்புக்கு நன்றி. படைப்பாளருக்குப் பாராட்டுகள்!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.