Jump to content

ஆயர்களின் அறிக்கை – நிலாந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர்களின் அறிக்கை – நிலாந்தன்!

November 21, 2021

spacer.png

2019 இலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் என்ற பெயரில் ஓர் அணியாக செயல்பட்டு வருகிறார்கள். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை அதிகம் பிரதிபலிக்கும் விதத்தில் இவ்வாறு தமிழ்ப்பகுதி ஆயர்கள் ஓரணியாக நிற்பது வரவேற்கத்தக்கதே. தெற்கில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஓரினச் சாய்வுடையவராக பார்க்கப்படும் ஒரு சூழலில் நான்கு வடகிழக்கு ஆயர்களும் ஒன்றிணைந்து முடிவெடுப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் உடையது. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தும் கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை. ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு உள்நாட்டில் உள்ள சில சக்திகள் ஈஸ்டர் குண்டுவெடிப்பை பயன்படுத்தியதாக அவர் நம்புவது தெரிகிறது. அதேசமயம் ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பில் நீதி கோரி குரலெழுப்பும் கர்தினால் தமிழ் பகுதிகளில் நிகழ்ந்த குறிப்பாக தமிழ் கத்தோலிக்கர்களுக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்களைக் குறித்து அந்தளவுக்கு குரல் எழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு.

கத்தோலிக்க திருச்சபை ஈழப் போராட்டத்தோடு அதிகம் நெருக்கமாக காணப்பட்டது. இலங்கைத்தீவில் இன முரண்பாட்டை அதிகம் பிரதிபலித்த ஒரு திருச்சபையும் கத்தோலிக்க திருச்சபைதான். எவ்வாறெனில் பெரும்பாலான தமிழ் கத்தோலிக்கர்கள் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். அது காரணமாகவே  சில கத்தோலிக்க மதகுருமார் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேசமயம் சிங்களப் பகுதிகளில் கத்தோலிக்கத் திருச்சபையானது பெருமளவுக்கு சிங்கள கூட்டு உளவியலையே பிரதிபலித்தது.

கத்தோலிக்க திருச்சபை எவ்வாறு இன முரண்பாட்டை பிரதிபலித்தது என்பதற்கு ஒரு கூர்மையான உதாரணம் கூறப்படுவதுண்டு. பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்டியங்கிய வெரித்தாஸ் வானொலி முன்பு யுத்த காலங்களில் ஒலிபரப்பிய அதன் செய்திகளில் தமிழ் இயக்கங்களை தமிழ் செய்திகளில் போராளிகள் என்று விழித்தது. அதே சமயம் சிங்களச் செய்திகளில் ரஸ்தவாதிகள் அதாவது பயங்கரவாதிகள் என்று விழித்தது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இவ்வாறான ஒரு பின்னணியில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நான்கு ஆயர்களும் இணைந்து ஓர் ஆயர் மன்றமாக செயற்படுவது என்பது ஒருவிதத்தில் தவிர்க்க முடியாத தர்க்ககபூர்வ வளர்ச்சிதான். குறிப்பாக 2009க்கு பின் தோல்வியினாலும் அச்சத்தினாலும் ஒடுங்கிப்போய் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் ஓங்கி ஒலித்த ஒரே குரல் முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையுடையது. குரலற்ற தமிழ் மக்களின் குரலாக அவர் ஒலித்தார். பெரும்பாலான மதத்தலைவர்கள் வாய் திறக்கப் பயப்பட்ட ஓர் அரசியல் சூழலில்  ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் துணிந்து குரல் கொடுத்தார். தமிழ் கத்தோலிக்கர்கள் தமிழ் மக்களுக்குரிய நீதியின் பக்கம்தான் நிற்பார்கள் என்ற செய்தியை ஓங்கி ஒலித்த குரல் அது. இவ்வாறான ஒரு பின்னணியில்தான் 2019இலிருந்து நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து செயற்படுவதும் முக்கியமான விடயங்களில் பொது முடிவை எடுப்பதும் வரவேற்கத்தக்கதே.

கடந்த மே 18ஐ முன்னிட்டு அவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டார்கள். அதில் நடந்தது இனப்படுகொலையே என்று துணிச்சலோடு எடுத்துரைத்தார்கள்.. அந்த அறிக்கையில் இனப்படுகொலையை கத்தோலிக்க வளாகங்களில் நினைவுகூர வேண்டும் என்று அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள். நான்கு ஆயர்கள் இணைந்து நடந்தது இனப்படுகொலை என்று சொன்னது தென்னிலங்கையில் கத்தோலிக்க வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அங்குள்ள கத்தோலிக்க ஆயர்கள் மத்தியில் இதுதொடர்பாக விமர்சனங்களும் எழுந்தன. தமிழ் ஆயர்களின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும் வடக்கு-கிழக்கு ஆயர்கள் அது இனப்படுகொலையே என்ற நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பின்றி காணப்பட்டார்கள். தமிழ்மக்கள் மத்தியிலுள்ள பெரும்பாலான மதத்தலைவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் தயங்கும் ஒரு நிலைப்பாடு அது

ஆனால்,அதே நான்கு ஆயர்களும் ஐந்து மாதங்களின் பின் அண்மையில் நினைவுகூர்தல் தொடர்பில் வெளியிட்ட ஓர் அறிக்கை சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கத்தோலிக்கர்களை பொறுத்தவரை நொவம்பர் மாதம் எனப்படுவது இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான ஒரு பொதுவான மாதமாகும். பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையால் உலகம் முழுவதிலும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழமை அது. இம்மாதம் முழுவதிலும் இறந்துபோன கத்தோலிக்கர்களை அவர்கள் நினைவு கூருகிறார்கள். அதாவது இந்துக்களின் வார்த்தைகளில் சொன்னால் ஒரு பொதுவான ஆண்டுத் திவசம். இவ்வாறு நொவம்பர் மாதத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலுள்ள உறவின் பின்னணியில் நான்கு ஆயர்களும் போரில் கொல்லப்பட்ட மக்களையும் போரில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்தவர்களையும் ஒன்றாக நினைவுகூரும் ஒரு காலகட்டத்தையும் நாளையும்  அறிவித்திருக்கிறார்கள். அது வாதப் பிரதிவாதங்களை எழுப்பியுள்ளது. 

ஒருபுறம் தமிழ்மக்கள் மத்தியில்  மத முரண்பாடுகளை ஊக்குவிக்கும் தரப்புக்கள் அதனை தங்களுக்கு சாதகமாக வியாக்கியானம் செய்கின்றன. இன்னொருபுறம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய பசுமை இயக்கம் போன்ற அரசியல் கட்சிகள் அந்த அறிவிப்புக்கு பதில்வினை ஆற்றியுள்ளன.

இது தொடர்பில் திருமலை மறைமாவட்டத்தின் ஆயர் தெரிவித்த கருத்து சர்ச்சையை தணிக்கப் போதுமானதாக இல்லை. அண்மை ஆண்டுகளில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளும் உட்பட சிவில் சமூக செயற்பாடுகளில் ஒப்பீட்டளவில் தீவிரமாக செயல்படுகிறார் திருமலை ஆயர். முன்னாள் மன்னார் ஆயரின் தொடர்ச்சியாக ஆனால் அமைதியாக செயற்படும் ஒரு மதத் தலைவரான அவர் கூறுகிறார் கத்தோலிக்க சமூகத்தை நோக்கியே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது என்று. ஆனால் அந்த அறிக்கையில் அப்படிப்பட்ட தெளிவான குறிப்புகள் எதுவும் கிடையாது என்று அதை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். 

தமிழ்த்தரப்பில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் ஒவ்வொன்றும் தமக்கென்று தனித்தனியாக தியாகிகள் நாளை அனுஷ்டித்து வருகின்றன. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு நாட்டில் சட்டரீதியாக நெருக்கடிகள் உண்டு. ஏனைய தியாகிகளின் நாட்களை அனுஷ்டிப்பதற்கு தடைகள் ஏதும் கிடையாது. அதேசமயம் போரில் உயிர்நீத்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அதாவது இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாக மே18 கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதற்கும் நெருக்கடிகள் உண்டு.

இவ்வாறானதொரு அரசியல் பின்னணியில் சட்டரீதியாக தடுக்கப்படக்கூடிய ஒரு நினைவு நாளை,போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவுகளோடு இணைத்து, உலகளாவிய கத்தோலிக்கர்களின் நினைவு கூரும் மாதத்துக்குள் பொத்தாம் பொதுவான ஒரு நினைவு கூர்தலாக வகைப்படுத்தியதுதான் சர்ச்சைகளுக்கு காரணம் என்று அந்த அறிக்கையை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆயர்களின் அறிக்கை மாவீரர் நாளை அனுஷ்டிக்க வேண்டும் என்பதனை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றது. உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்கர்கள் இறந்தவர்களை நினைவு கூரும் ஒரு காலகட்டத்தில் மாவீரர்களையும் நினைவு கூருமாறு ஆயர்கள் மறைமுகமாக அழைப்பு விடுக்கிறார்கள். அதை நேரடியாகச் சொல்ல அவர்கள் தயங்குகிறார்கள். கடந்த மாவீரர் தினத்தின்போது விளக்கேற்றியதற்காக ஒரு மதகுரு கைது செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் அவர்கள் அதிகம் முன்னெச்சரிக்கையோடு சிந்திப்பதாக தெரிகிறது. எனவே அவர்கள் நேரடியாக அரசியல் பேச விரும்பவில்லை என்று தெரிகிறது.

ஆனால் இங்கேயுள்ள விவகாரம் என்னவென்றால் நினைவுகூர்தல் என்பது ஓர் அரசியல் உரிமை ஆகும். அது ஒரு பண்பாட்டு உரிமை. அது ஒரு குணப்படுத்தல் செய்முறை. பண்பாடு சார்ந்தும் அரசியல் சார்ந்தும் அனைத்துலகச் சட்டங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு உரிமை. எனவே ஓர் அரசியல் உரிமை சார்ந்த விவகாரத்தில் அதன் அரசியல் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு பதிலாக அந்த அரசியலின் பாற்பட்ட கூட்டு உரிமைக்காக குரல் எழுப்புவதற்கு மதத்தலைவர்கள் ஏன் தயங்க வேண்டும்? அதனை ஒரு மதத்துக்கு உரியதாகவோ ஒரு இனத்துக்கு உரியதாகவோ கருதத் தேவையில்லை. மாறாக மனிதர்களாகப் பிறந்த எல்லாருக்குமான ; பொதுவான; உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு உரிமை அது. ஆயர்களின் அறிக்கையானது நினைவு கூர்வதற்கான தமிழ்மக்களின் கூட்டு உரிமையை வலியுறுத்தி வெளிவந்திருந்தால் இப்படி சர்ச்சைகள் எழுந்திருக்காது. பதிலாக அது கத்தோலிக்க நோக்கு நிலையிலிருந்து கத்தோலிக்க பாரம்பரியம் ஒன்றின் மறைப்புக்குள் நினைவு கூருமாறு கேட்கப்பட்டமைதான் ஒரு விவகாரமாக மேலெழுந்திருக்கிறது.

எனவே உலகளாவிய, அங்கீகரிக்கபட்ட ஒரு ஆன்மீக பேரரசாகிய கத்தோலிக்க திருச்சபையின் நான்கு ஆயர்களும் இந்த விடயத்தில் துணிச்சலாக முடிவெடுத்து நினைவு கூர்தலுக்கான கூட்டு உரிமையை வலியுறுத்தி அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். ஆயர்கள் யாருக்கு பயப்படவேண்டும்? கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களைக் கூறி வருகிறார். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு நீதிகேட்டு அனைத்துலக சமூகத்தை அணுகவும் அவர் தயாராக காணப்படுகிறார். நடந்தது இனப்படுகொலையே என்பதனை தமக்குரிய அறத்தோடு வெளிப்படுத்திய நான்கு ஆயர்களும் அதன் அடுத்தகட்ட தர்க்கபூர்வ வளர்ச்சியாக தமது மக்களுடைய கூட்டு உரிமையை வலியுறுத்துவதே அதிகம் பொருத்தமாயிருக்கும். 
 

 

https://globaltamilnews.net/2021/169002

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.